Mar 1, 2017

வருக! வருக!!

கருவேல மரங்களுக்கும் சீமைக்கருவேல மரங்களுக்கும் வேறுபாடு உண்டு. கருவேல மரங்கள் நம் மண்ணின் மரங்கள். கருகருவென்றிருக்கும். நீண்ட முட்கள் வெண்மையாக இருக்கும். சீமைக்கருவேல மரங்களை வேலிக்காத்தான் என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் இதற்கு. மஞ்சள் நிறக் காய் காய்க்கும். முட்கள் சிறியதாக இருக்கும். ஆனால் எப்பொழுதுமே பசுமை மாறாத மரங்கள் இவை. இருக்கிற நீரையெல்லாம் உறிஞ்சி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை. வெறும் இரண்டு இஞ்ச் உயரம் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலஞ் செடியை நம்மால் அவ்வளவு எளிதில் பிடுங்கிவிட முடியாது. வெகு ஆழத்திற்கு வேர் பரப்புகிற இந்தச் செடிகளால் அப்படியென்ன எதிர்மறை விளைவுகள் என்று கேட்கிறவர்கள் கோடை காலத்தில் அவை வளர்ந்திருக்கும் இடங்களைச் சென்று பார்க்க வேண்டும். 

அக்கம்பக்கத்தில் ஒரு மரத்தை தப்பிக்கவிடாதவை இவை. நிலத்தடியில் வெகு ஆழத்திற்குச் சென்றும் மண்பரப்பின் கடைசித்துளி ஈரப்பதத்தையும் உறிஞ்சி தம் பசுமையைக் காப்பாற்றிக் கொண்டு அடுத்த தாவரங்களை கருகச் செய்வதை நேரடியாகப் பார்க்கலாம். அப்படியே தம் பசுமை காத்தாலும் இம்மரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதே உண்மை. இலைகளை ஆடு தின்ன முடியாது. விறகுக்குத் தவிர வேறு எந்தப் பயனுமற்ற மரங்கள் இவை. நோய்க்கிருமியைப் போல வெகு தீவிரமாக பரவக் கூடிய கொடூர தாவரம் இது.

தமிழகம் முழுவதுமாக இம்மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றச் சொல்லி மதுரை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. வைகோ நடத்திய வழக்கு இது. அவரோடு இன்னமும் சிலரும் வழக்குதாரர்களாக இருக்கிறார்கள். வைகோ மீதான எவ்வளவு அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் பசுமை மற்றும் சூழலியல் சார்ந்து அவர் முன்னெடுக்கக் கூடிய இத்தகைய நடவடிக்கைகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும். வெறுமனே வாய்ச்சவடால்களால் காலத்தை ஓட்டிவிடுகிற அரசியல் தலைவர்களுக்கிடையில் யார் எப்படி விமர்சித்தாலும் இத்தகையை செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார். 

இனி அரசு விழித்துக் கொள்ளும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய சீமைக்கருவேல மரங்களை அரசாங்கமே முழுமையாக ஒழிப்பதற்கான சாத்தியம் வெகு குறைவு. 

வேமாண்டம்பாளையம் என்கிற கிராமத்தில் இம்மரங்களை அழிப்பதற்கான தொடக்கத்தை எதிர்வரும் சனிக்கிழமையன்று தொடங்குகிறோம். நம்பியூர் ஒன்றியத்தில் பெரிய கிராமம் இது. பல நூறு ஏக்கர் விவசாயம் நிலம் காய்ந்து கிடக்கிற ஊர். எங்கும் வெயிலும் வெக்கையுமே நிரம்பிக் கிடக்கும் வறண்ட பூமி. இந்த ஊரில் காமராஜர் காலத்தில் கட்டிய மிகப்பெரிய குளம் இருக்கிறது. கிட்டத்தட்ட அறுபத்தாறு ஏக்கர் பரப்புடைய குளம். ஆனால் குளம் முழுக்கவும் சீமைக்கருவேல மரங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. குளம் குட்டைகள் சாலைகள் என எங்கும் நிறைந்து கிடக்கும் இந்த மரங்களை அழிக்க கிட்டத்தட்ட முந்நூறு மணிநேரமாவது பொக்லைன் எந்திரங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறோம். இந்தக் கணக்கு பொது இடங்களில் உள்ள மரங்களை மட்டும் ஒழிப்பதற்கான கணக்கு. இவை தவிர தனியார் நிலங்களிலும் மரங்கள் மலிந்து கிடக்கின்றன. அதை அந்தந்த இட உரிமையாளர்களே அழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

பொக்லைன் எந்திரங்களுக்கு மணிக்கணக்கில் வாடகை தர வேண்டும். கணக்குப் போட்டால் இரண்டு லட்ச ரூபாயைத் தாண்டும். Y's மென் க்ளப் ஒரு லட்சம் தருகிறார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ஒதுக்கியிருக்கிறோம். பொக்லைன் எந்திரத்துக்கான டீசல் செலவை மாவட்ட நிர்வாகம் தருகிறது. வறட்சியின் காரணமாக ஊரில் விவசாய வேலை எதுவும் நடைபெறுவதில்லை. எனவே ஊர் பொதுமக்கள்தான் கூடவே இருந்து எந்திரங்களின் செயல்பாடு, மரங்களை ஒதுக்குதல், ஏலம் என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவிருக்கிறார்கள். பஞ்சாயத்து ஊழியர்கள் களத்தில் இறங்குகிறார்கள். எல்லாவற்றையும் கண்காணிக்க தனிக்குழு ஒன்றை அமைக்கவிருக்கிறோம். சீமைக்கருவேல மரங்களைப் பொறுத்தவரை இது பன்முனைத் தாக்குதல்.

ஒரேயொரு கிராமத்திற்கு மட்டுமே இவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பனிரெண்டாயிரத்து அறுநூறு கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. நகராட்சி, பேரூராட்சியெல்லாம் தனிக்கணக்கு. சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு ஒரு லட்ச ரூபாய் (இது மிகக் குறைந்தபட்சக் கணக்கு) என்றாலும் கூட மொத்தம் எவ்வளவு தேவைப்படும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ஒதுக்கப்படுகிற தொகையில் கமிஷன் அடிப்பது, நியூட்டர் விடுவதெல்லாம் தனிக்கணக்கு. அரசாங்கமே சீமைக்கருவேல மர ஒழிப்பைச் செய்துவிடும் என்று நம்பினால் இந்தச் செயல்பாடு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதற்காக இதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

அரசு சாரா நிறுவனங்கள், சூழலியல் அமைப்புகள், உள்ளூர் பொதுமக்கள், தனிமனித ஆர்வலர்கள் என எல்லோருமே சேர்ந்து இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தமிழகம் முழுவதுமே இதை ஒரே சமயத்தில் செயல்படுத்த வேண்டும். ஒருபக்கம் செய்து இன்னொரு பக்கம் விட்டுவிட்டால் மீண்டும் பரவிவிடும்.

நேற்று வேமாண்டம்பாளையத்தில் ஊர்க்கூட்டம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள், Y's மென் அமைப்பின் சார்பில் அபிலாஷ், மருத்துவர் சத்தியசுந்தரி, எஸ்.வி.சரவணன், அரசு தாமஸ், கார்த்திகேயன், அவிநாசி அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட கூட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.

நிசப்தம் பங்குபெறுவது என்பது இரண்டாம்பட்சம். காசோலையைக் கொடுத்தோம் கிளம்பினோம் என்றிருப்பதாக இருந்தால் அதில் பலன் ஏதுமில்லை. மக்களின் ஈடுபாடு இருக்க வேண்டும். நம்முடைய ஊர்; நம் வேலை என்கிற உணர்வு அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படியான ஈடுபாடு இல்லையென்றால் நாம்தான் பேச வேண்டும். அப்படி பேசி அவர்களை நம்மோடு இணைத்துக் கொண்டால் நிச்சயமாக வெற்றிகரமாகச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக ஊர்க்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களிடம் இதையேதான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தேன். இதுவொரு உதாரணமான தொடக்கம். மக்களின் தன்னெழுச்சியுடன் நடத்தினால் அது அக்கம் பக்கமெல்லாம் பரவக் கூடும். 

உள்ளூர் மக்கள் உடன் நிற்கிறார்கள். ஊர் பெரியவர்கள் களமிறங்குகிறார்கள். அனுபவஸ்தர்கள் கை கோர்க்கிறார்கள். நேற்று கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அழைத்துப் பேசினார்கள். ஊர்மக்களில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டம் திருப்தியாக இருந்ததாகச் சொன்னார்கள். வருகிற சனிக்கிழமையன்று தொடங்குகிறோம். சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் நிசப்தம் அறக்கட்டளையின் முக்கியமான செயல்பாடாக இதைச் சொல்லலாம். இதுவரையிலும் ஓர் ஊரையே திரட்டி எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. இதுதான் தொடக்கம். மற்றவர்களின் உதவியோடு சேர்ந்து தொடங்குகிறோம். 

வாய்ப்பிருப்பவர்கள் வருக! அடுத்தடுத்த களத்துக்குச் சென்று கொண்டேயிருப்போம்.

(விவரங்களுக்கு அரசு.தாமசு- 9842097878 அவர்களை அழைக்கலாம்)