நிசப்தம் அறக்கட்டளையின் பிப்ரவரி மாத வரவு செலவுக் கணக்கு இது.
அறக்கட்டளையில் ரூ.11,43,425.63 (பதினோரு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நானூற்று இருபத்தைந்து ரூபாய்) இருக்கிறது. நிரந்தர வைப்பு நிதியில் பதினேழு லட்ச ரூபாய் இருக்கிறது. ஆக மொத்தம் இருபத்தெட்டு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நானூற்று இருபத்தைந்து ரூபாய் கைவசம் இருக்கிறது. கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் நல உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது.
அறக்கட்டளையின் வரவு செலவு பற்றி யாருமே எதுவுமே கேட்பதில்லை. ‘இவிய என்ன அநியாயத்துக்கு நம்புகிறார்கள்?’ எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது. கேட்கிறார்களோ இல்லையோ- கணக்கைச் சொல்லிவிட வேண்டும்.
வரிசை எண் 08: சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மருத்துவச் செலவுகளுக்காக பதினைந்தாயிரம் வழங்கப்பட்டது. இது குறித்தான விரிவான பதிவு இணைப்பில் இருக்கிறது.
வரிசை எண் 09: வைபவ் கிருஷ்ணாவுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய்.

வரிசை எண் 19: கொளப்பலூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளி இது. பெரும்பாலும் ஏழை மாணவிகள்தான் படிக்கிறார்கள். தேர்வு வரைக்குமான காலத்திற்கு மாணவிகளுக்கு உணவை பள்ளி நிர்வாகமே ஆள் வைத்துச் சமைத்துப் போடுகிறது. தேவையான அரிசியை வேறொரு நன்கொடையாளர் கொடுத்திருந்தார். காய்கறிக்கு தேவையான பணத்தை ஆசிரியைகளே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். செலவு சற்றே அதிகரிக்க அணுகியிருந்தார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவடையும் வரைக்கும் மாணவிகளின் உணவுக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
வரிசை எண் 22: பல்லடம், குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள லட்சுமி மில்ஸ் நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இப்பொழுது நிறுவன உதவி எதுவும் இல்லாமல் சுயமாகச் செயல்படுகிற பள்ளி. இந்தப் பள்ளிக்கு தொடுதிரை வகுப்பறை அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக எண்பத்து நான்காயிரம் ரூபாய் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டது. பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதமும் என் பதிலும் இது-
அன்புள்ள தலைமையாசிரியருக்கும், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்,
வணக்கம்.
தங்களின் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் பள்ளி குறித்து விரிவாக விசாரித்த பிறகே இந்த உதவியைச் செய்தோம். விசாரித்த வரையிலும் தங்களின் கற்றலும் கற்பித்தலும் மிகச் சிறப்பாக இருப்பதாகவே தெரிய வந்தது. நீண்டகாலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கே நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள்.
சிறு குறிப்பு- இந்த நன்றியறிவிப்பு கடிதத்தை தமிழில் அனுப்பியிருந்தால் இன்னமும் கூடுதலாக மகிழ்ந்திருப்பேன்.
நன்றி.
மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்
இதே போல நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளியில் தொடுதிரை வகுப்பு அமைப்பதற்கான CPU மட்டும் நம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டது. தொடுதிரை உள்ளிட்ட பிறவற்றை அவர்களே வாங்கிக் கொண்டார்கள். பல்லடம் பள்ளிக்கு எண்பத்து நான்காயிரம், நகராட்சி பள்ளிக்கு பதினான்காயிரம்- ஆக, தொண்ணூற்று எட்டாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
வரிசை எண் 24: கொச்சி சென்று பயிற்சி பெறும் இரு பெண்களின் தங்கும் மற்றும் உணவுக்கான தொகை ஒன்பதாயிரம் ரூபாய். விரிவான பதிவு இணைப்பில் இருக்கிறது.
வரிசை எண் 25: கோவை மாவட்டம் வாகரையாம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் பிரிவுக்கு ஆசிரியர் கிடையாது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்தாலும் மூன்றாம் பாடப்பிரிவை கல்வித்துறை ஊக்குவிப்பதில்லை. அதற்கான காரணத்தை வேறொரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஆனால் இத்தகைய சில பள்ளிகளில் பாடப்பிரிவை மூடிவிடாமல் பெற்றோர் ஆசிரியர் கழகமே மூன்றாம் பாட பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமித்து சம்பளம் அளித்து வருகிறார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வீதம் சம்பளத்தில் ஒரு ஆசிரியரை நியமித்து பாடம் சொல்லித் தருவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
வரிசை எண் 27: ஸ்டான்லி மருத்துக் கல்லூரியில் முதலாண்டு சேர்ந்திருக்கும் வாடகை கார் ஓட்டுநரின் மகளுக்கு விடுதிக் கட்டணம் பதினைந்தாயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.
வரிசை எண் 28: வாழை அமைப்பு சார்பில் கட்டப்படும் பள்ளிக்கு வழங்கப்பட்ட தொகை இது. விரிவான கட்டுரை இணைப்பில் இருக்கிறது.
ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துரைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். தொடர்ந்து உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது அன்பு.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment