சிகாகோவில் இருந்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்கள். ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்ற போது அங்கேயும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போராடியிருக்கிறார்கள். கலையும் போது ‘இதோடு நில்லாமல் தொடர்ந்து செயல்படுவோம்’ என்று முடிவுக்கு வந்து ஒரு குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். நம்பிக்கை விழுதுகள் என்று குழுவிற்கு பெயர். குழுவினர் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க லட்சங்கள் திரண்டிருக்கிறது. ‘தமிழக விவசாயிகளைக் காக்கவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு மட்டும்தான் இந்தத் தொகை செலவிடப்படும்’ என்று முடிவு செய்து கொண்டு தமிழகத்தில் சிலரை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அப்படித்தான் என்னையும் அழைத்தார்கள்.
அதற்கு முன்பாகவே ரமேஷ் தொடர்பு கொண்டிருந்தார். ரமேஷ் ஈரோடு மாவட்டத்தின் ஒழலக்கோயில் பஞ்சாயத்து பகுதியைச் சார்ந்தவர். கிட்டத்தட்ட பனிரெண்டு கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து அது. அவரும் உள்ளூரில் ஆசிரியர் முத்துச்சாமி உள்ளிட்ட நண்பர்களும் இணைந்து அந்த ஊரின் வறட்சி நிவாரணப் பணிக்காக சில வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னார். சிகாகோ நண்பர்கள் அழைத்து ‘ஏதாவது கிராமத்தைத் தேர்ந்தெடுக்கணும்’ என்று கேட்டதும் ஒழலக்கோயில் பஞ்சாயத்துதான் நினைவுக்கு வந்தது. ஒழலக்கோயில் பஞ்சாயத்தின் பனிரெண்டு கிராமங்களிலும் சேர்த்து தோராயமாக ஐந்தாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட இவர்கள் அத்தனை பேரும் விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள். இப்பொழுது மக்கள் இப்பொழுது பிழைப்புக்காக வேறு தொழில்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் தினக்கூலிகளாக இருக்கிறார்கள் அல்லது ஆடு மேய்க்கிறார்கள்.
ஊரில் வேளாண்மை முழுமையாக செத்துப் போய்விட்டது.
‘ஒழலக்கோயிலை நீங்கள் பரிசீலிக்கலாம்’ என்றேன். அதன் பிறகு சிகாகோவிலிருந்து மணிவண்ணனும், சவடா ஆண்டியப்பனும் தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்டார்கள். ‘என்னடா இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள்’ என்று எனக்கே கூட சற்று சலிப்பாகத்தான் இருந்தது. அவர்களிடமிருப்பது நூறு பேர் சேர்ந்து கொடுத்த பணம். நினைத்தபடி எடுத்து நீட்டிவிட முடியாதல்லவா? அவர்கள் இரு குழுவாகச் செயல்படுகிறார்கள். பயனாளிகளைக் கண்டறிய ஒரு குழு, அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து முடிவு செய்யும் இன்னொரு குழு. இரண்டு குழுக்களும் சரியான திட்டம் என்ற முடிவுக்கு வரும் போது நிதியை ஒதுக்கீடு செய்வார்கள்.
ஆரம்பகட்ட உரையாடல்களுக்குப் பிறகு பதினைந்து கேள்விகள் அடங்கிய ஒரு பட்டியலையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் அனுப்பிய கேள்விகளுக்காக உள்ளூர் மக்களைத் திரட்டி விவரங்களைச் சேகரித்து அனுப்பியிருந்தோம்.
பஞ்சாயத்தில் ஏழு குட்டைகள் இருக்கின்றன. அவற்றில் மூன்றையாவது தூர் வாரி நீர்த்தடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ஜேசிபி எந்திர ஒட்டுநரை வைத்துப் பேசியதில் பனிரெண்டு கிராமங்களுக்கும் சேர்த்து தோராயமாக இருபத்தோரு நாட்கள் தேவைப்படும் (ஒரு நாளுக்கு பத்து மணி நேரம்) என்றார். எப்படிக் கணக்கிட்டாலும் 215 மணி நேரங்கள் வரைக்கும் தேவைப்படும். ஒன்றரை லட்சம் வரைக்கும் செலவு பிடிக்கும். உள்ளூர் மக்கள் வெகு ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த ஊர் இளைஞர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக பணம் திரட்டி பதினைந்தாயிரம் ரூபாயைச் சேகரிப்பதாகச் சொன்னார்கள். மீதமிருக்கும் தொகையை சிகாகோ குழுவிடம் வாங்கிக் கொள்வதாகத் திட்டம்.
உள்ளூரிலேயே ஒரு இளைஞர் குழுவைத் தயார் செய்து மொத்த பணியையும் மேற்பார்வை செய்யப் போகிறார்கள். கடந்த ஞாயிறன்று conference call இல் பேசினோம். உள்ளூர் நண்பர்கள், சிகோகோ குழுவினர் என முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நேற்று அவர்கள் சார்பில் ஒழலக்கோயிலுக்கு வேறொருவரை அனுப்பி விவரங்களைச் சரிபார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். தாமஸ், ரமேஷ் மற்றும் முத்துச்சாமி ஆகியோர் அந்த நண்பரை அழைத்துச் சென்று ஊரைச் சுற்றிக் காட்டியிருக்கிறார்கள். அநேகமாக அந்த நண்பருக்கு ஊரின் வலி புரிந்திருக்கக் கூடும். இன்னொரு முறை நாங்கள் அனைவரும் அலைபேசி வழியாகக் கூடிப் பேச வேண்டியிருக்கும். அதன் பிறகு வேலைகளை ஆரம்பித்துவிடலாம் என நினைக்கிறேன்.
ஒழலக்கோயில் குழுவினருக்கும் சிகாகோ குழுவினருக்குமிடையில் இணைப்புப்பாலமாகச் செயல்படுவது மட்டும்தான் என்னுடைய வேலை. அதுவும் ஆரம்பகட்டத்தில் மட்டும்தான். உதவுகிற மனநிலையில் இருக்கிறவர்களுக்கும் உதவி கோருகிறவர்களுக்குமிடையில் எந்தக் குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம். அவர்களுக்கிடையேயான அலைவரிசை ஒத்துப் போய்விட்டால் அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்படத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு நமக்கு பெரிய வேலை இருக்காது.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இத்தகைய முன்னெடுப்புகளை எடுக்கிற நண்பர்களை வெகுவாக பாராட்ட வேண்டும். அவர்களிடம் சேர்ந்திருக்கும் தொகையைக் கொண்டு ஐந்தாறு கிராமங்களையாவது மேம்படுத்திவிட முடியும். அமெரிக்காவில் ஒரேயொரு ஊரிலிருந்து செயல்பட்டாலும் கூட தமிழகத்தின் ஐந்தாறு கிராமங்களை மேம்படுத்த முடியுமென்றால் பல ஊர்களிலும் வசிக்கும் நண்பர்கள் ஆங்காங்கே குழுவாக இணைந்து நீண்டகால நோக்கோடு தமிழகத்தில் வேர் பாய்ச்சினால் பல ஊர்களை தரம் உயர்த்திவிட முடியும். வறட்சி, கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு என பல துறைகளிலும் செயல்பட முடியும்.
ஒவ்வொரு ஊரிலும் யாராவது தயங்காமல் முதல் அடியை எடுத்து வைக்கலாம். அதன் பிறகு வேகம் எடுத்துக் கொள்ளும்.
இத்தகைய செயல்பாடுகளைப் பொறுத்தவரையிலும் ஈகோ இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதும், தொய்வில்லாமல் செயல்களைச் செய்வதும் மிக அவசியம். அதே போல சரியான பயனாளிகளைக் கண்டறிவதும் மிக முக்கியம். நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் துளியளவு வந்தாலும் கூட குழு வலுவிழந்துவிடும். ஆரம்பத்தில் வீரியமாக ஆரம்பித்துவிட்டு பிறகு சுணங்கினால் எந்தக் காலத்திலும் இத்தகைய வேலைகளை மீண்டும் தொடங்க மனமே வராது.
சிகாகோ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து செயல்பட்டு பிறருக்கு முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். இவர்களைப் போலவே இன்னமும் பல வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும் ஆங்காங்கே ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக இத்தகைய செய்திகளைப் பரவலாகப் பேசலாம். ஊர் கூடினால் தேர் நகரும்.