Feb 7, 2017

காய் நகர்த்தல்

சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆளுநரிடம் தேதி வாங்கினால் அவர்தான் முதல்வர். சட்டப்படி எல்லாம் சரிதான். அரசியல் சாசனப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ‘இவர்தான் தலைவர்’ என்று கை காட்டினால் அவர்தான் முதல்வர். ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ஒருவேளை ‘பதவிப்பிரமாணம் செய்யாமல் சமாளியுங்கள்’ என்று அழுத்தம் வருமானால் ‘As I am suffering from fever' என்று சொல்லிவிட்டு மும்பையிலும் டெல்லியிலும் சில நாட்கள் அமர்ந்து கொள்ளலாம். அதற்குள் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அமலாக்கப் பிரிவு அழுத்தம் என்று பலவகைகளில் காய் நகர்த்தப்படக் கூடும். நகர்த்துவார்கள்.

தமிழக அரசியலில் உண்டாகியிருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தை அறுவடை செய்வதற்கான எல்லா முஸ்தீபுகளும் நடந்து கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறது. நள்ளிரவில் பன்னீர்செல்வத்துக்கு பதவியேற்பை நடத்தி வைத்த ஆளுநர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவசர அவசரமாக குடும்பத்தோடு தமிழகத்திலிருந்து கிளம்புகிறார் என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடுகிறார்கள். தமக்கு எல்லாவிதத்திலும் சொல்பேச்சு கேட்கிற ஆளாக இருப்பார் என்று பன்னீர்செல்வத்தை டெல்லி வட்டாரம் நம்பியிருக்கக் கூடும். அவரும் நம்பிக்கையுடன்தான் இருந்தார். ஆறேழு மாதங்களாகவது காலத்தை ஓட்டிவிடுவார் என்பது போலத் காட்சிகள் உருவாகின. என்னதான் மேலிட ஆதரவு இருந்தாலும் மிகப்பெரிய வலையமைவை எதிர்த்து அரசியல் செய்கிற அளவுக்கு அவருக்கு சாமர்த்தியம் போதாது. வலுவும் இல்லை. தன்னந்தனியாக தனித்துவிடப்பட்டதைப் போல அவர் உணர்ந்திருக்கக் கூடும். ராஜினாமா செய்துவிட்டார் அல்லது செய்ய வைக்கப்பட்டார்.

சசிகலா முதல்வர் ஆவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். பொதுமக்களிடம் இயல்பாகப் பேசும் போது சசிகலாவின் மீது மிகப்பெரிய கோபத்தைக் காட்டுகிறார்கள். அதிமுகவின் கட்சி நிர்வாகிகள் பதவிக்காகவும் தனிப்பட்ட இலாபங்களுக்காகவும்தான் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். கட்சி நிர்வாகிகளுக்கு வேறு வழியில்லை. இன்னமும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரைக்கும் இலாபம்தானே? சசிகலாவுக்கு பொதுமக்களிடம் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தேர்தல் நடைபெற்றால் பதில் கிடைத்துவிடும். 

படித்தவர்கள் மற்றும் விவரம் தெரிந்தவர்களில் ஒரு பகுதியினர் சசிகலாவை ஏற்றுக் கொள்வதாக பேசி எழுதுகிறார்கள். மன்னார்குடிக்காரர்கள், சுய சாதிச் சார்புடையவர்கள் போன்ற காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால் ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் அடிநாதமாக ‘பாஜக வந்துவிடுமோ’ என்கிற அச்சம் தெரிகிறது. பன்னீர்செல்வம் மாதிரியானவர்கள் முதல்வராகத் தொடரும் போது பாஜக தனக்கான எல்லா வேலைகளையும் தமிழகத்தில் செய்து கொள்ளும் என்று பயப்படுகிறார்கள். அதிமுகxதிமுக என்கிற இரட்டை நிலையில் ஒன்று வலுக்குறையும் போது மத்தியில் வலுவாக இருக்கும் பாஜக தனது இடத்தை ஸ்திரமாக்கிக் கொள்கிற வாய்ப்பு அதிகம் என்று சலனமடைகிறார்கள். சசிகலாவும் அவரது குடும்பமும் ஆட்சியிலும் கட்சியிலும் வலுபெற்றுவிட்டால் பாஜக உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். திமுகxஅதிமுக என்கிற இரட்டை நிலையே தொடரும். 

திமுகவின் அமைதியைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். நடக்கிற குழப்பம் நடக்கட்டும். அவசரப்பட்டு கை வைத்தால் ‘திமுகதான் கலைத்தது’ என்று பரப்புரை செய்தே அனுதாபம் தேடிவிடுவார்கள். அதனால் விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் சரி என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. சசிகலாவின் மீது வெறுப்பு ஏற ஏற அது திமுகவுக்கு இலாபம்தான். அதற்கான எல்லா தூபங்களையும் போட்டுக் கொண்டிருந்தால் போதும். தானாக சரியும். அதே சமயம் இதில் ரிஸ்க் இல்லாமல் இல்லை. நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. ஒருவேளை சசிகலா வலுவான முதல்வராகி மக்களைக் கவர்கிற திட்டங்களாக அறிவித்து ஓபிஎஸ் அதிர்ச்சி கொடுத்தது போல ‘அட இந்தம்மா பரவாயில்லையே’ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டால் அடுத்த இருபதாண்டுகளுக்கு திமுக கடுமையாக மல்லுக்கட்ட வேண்டியதாகிவிடும். 

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் சசிகலா தலைமைக்கு வரும் போது ‘ஜெயலலிதாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை’ என்று ஸ்டாலின் பேசுவதையும் அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சசிகலாவைவிடவும் ஓபிஎஸ் இருப்பதுதான் திமுகவுக்கும் கூட நல்லது. வலுவில்லாத தோற்றத்திலேயே அதிமுக தொடரும். தேர்தலில் தம் கட்டிவிடலாம்.

பாஜக தரப்பும் இப்படித்தான் கருதக் கூடும். சசிகலா வலுப்பெற்றால் அது பாஜகவுக்கும் தலைவலியாகிவிடும். ஓபிஎஸ் மாதிரியானவர்கள் இருந்தால் ‘நீங்க இருபது சீட்டுல நில்லுங்க; நாங்க இருபதுல நிற்கிறோம்’ என்று சொல்ல முடியும். சசிகலாவின் கரங்கள் வலுவடைந்துவிட்டால் ‘நாலு சீட்டாவது கொடுங்கம்மா’ என்கிற சூழல் வந்துவிடும். முதல்வரைச் சந்திக்க அருண் ஜெட்லிதான் சென்னை வர வேண்டும். 

அரசியல் கணக்குகள் பலவிதங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. வைகோ, விஜயகாந்த், சீமான், திருமா போன்றவர்களால் இந்த சுழற்சியில் எந்த அரசியலையும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இரண்டு மூன்றாம் கட்ட அரசியல் கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிக் கிடப்பதை தமிழகம் வெகு வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறது.

அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். 

குழம்பிய அரசியல் குட்டையில் சசிகலா முதல்வராவதை சாதாரணக் குடிமகனாக எந்தவிதத்திலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. குறைந்தபட்சம் கட்சியிலாவது செயலாற்றியிருக்க வேண்டும். ஊர் ஊராகப் பயணித்து தொண்டர்களைச் சந்தித்திருக்க வேண்டும். தமிழக மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் மனநிலையையும் எந்தவிதத்திலும் அறிந்து கொள்ளாத ஒருவர் திடீரென்று முதல்வராவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

சட்டப்படி சரிதான் என்றால் நாளை பெரும் பணக்காரனோ, தொழிலதிபரோ அல்லது தாவூத் இப்ரஹிம் மாதிரியான வேறு பணம் படைத்தவனோ கூட நூற்று நாற்பது எம்.எல்.ஏக்களை வளைக்க முடிந்தால் முதலமைச்சராக முடியும். எம்.எல்.ஏக்களை வளைப்பது மட்டுமே முதல்வருக்கான தகுதி என்பது அரசியலமைப்பு விதிகளின் படி சரியானதாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் அநியாயம்.

குறைந்தபட்சம் ஒரு மாநில அளவிலான தேர்தலையாவது சந்திக்க வேண்டும். அது உள்ளாட்சித் தேர்தலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். வேட்பாளர்களைத் தேர்வு செய்து, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, பரப்புரைக்காக களமிறங்கி மக்களின் நாடி பிடித்து அவர்களிடம் பேசி வாக்கு வாங்கி பிறகு ஆகட்டும் முதலமைச்சர். உள்ளாட்சித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று கூடக் கேட்கவில்லை. குறைந்தபட்சம் தேர்தல் என்றால் என்னவென்றாவது பார்த்தவர் முதல்வராக ஆகட்டும். ‘அம்மாவின் பின்னணியே நான்தான்..அவரை இயக்கியதே நான்தான்’ என்றெல்லாம் சொல்வதை அப்படியே நம்புகிறோம். ஒரேயொரு தேர்தலில் ஆளுமையைக் காட்டிவிட்டு முதல்வர் ஆகலாமே. அவ்வளவு அவசரம் என்ன? ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் உதிர்ந்தா விடும்? அரசியலில் ஆளுமை என்பது பதவியில் இல்லை. மக்களை தம்மோடு மானசீகமாக இறுகிப் பிணைக்கும் ஆற்றலில் இருக்கிறது.