Feb 21, 2017

தடுப்பூசியும் குழப்பங்களும்

சில வாரங்களுக்கு முன்பாக உறவினர் ஒருவர் அழைத்து ‘எம்.ஆர். தடுப்பூசியைக் குழந்தைகளுக்கு போடுவதில் தவறொன்றும் இல்லை அல்லவா?’ என்றார். அப்பொழுது இது குறித்து ஒன்றும் தெரியவில்லை. இது நாமாகவே பதில் சொல்லுகிற விஷயமும் இல்லை. சில மருத்துவர்களை அழைத்துக் கேட்ட போது ‘அதெல்லாம் பிரச்சினையில்லை...போடச் சொல்லுங்க’ என்றார்கள். அதையே அந்தப் பெற்றோரிடமும் சொன்னேன். ஆனால் பதில் சொல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் ‘மருத்துவர்களிடம் கேட்டேன்..அவர்கள் போடச் சொல்கிறார்கள்’ என்று பாரத்தை மருத்துவர்கள் மீது இறக்கி வைத்து பதில் சொன்னேன். அதற்கடுத்த சில நாட்களில் மேலும் ஒன்றிரண்டு பெற்றோரிடமும் இதே ரீதியிலான உரையாடல் தொடர்ந்தது. கவனமாக பதில் சொன்னாலும் சற்றே பதறாமல் இல்லை. அடுத்தவர்களின் குழந்தைகளுக்கு என்றால் மருத்துவர்கள் சொன்னார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்; நம் குழந்தைக்கு கேட்கும் போது என்ன முடிவை எடுப்பது?

குழப்பம்தான்.

நேற்று தமிழக அரசு ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே எண்பது லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடுகிற இலக்கு இருக்கிறது. கடந்த இருபது நாட்களில் அறுபது லட்சம் குழந்தைகளுக்கு போட்டிருக்கிறார்கள். இன்னமும் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாக்கி. எப்படியும் ஐம்பது லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் தவிர்த்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. ஓசூரிலிருந்து தினமும் அலுவலகம் வந்து போகிற நண்பர் ‘எதுக்குங்க ரிஸ்க்?’ என்றார். அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. கணவனும் மனைவியும் படித்தவர்கள். நல்ல வசதி. ஆனால் இப்படியொரு முடிவை எடுக்கிறார்.

தட்டம்மை- ரூபெல்லா (எம்.ஆர்) தடுப்பூசி விவகாரத்தில் உண்டாகியிருக்கும் இந்த குழப்பங்களுக்கு படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆமாம். அவர்கள்தான் காரணம். எல்லாவற்றையுமே அரையும் குறையுமாக தெரிந்து வைத்திருக்கிறோம். நம்மைச் சுற்றி சதி பின்னப்பட்டிருப்பதாக நம்பிக் கொள்கிறோம். சரியோ தவறோ- நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். யார் எதைச் சொன்னாலும் ‘அப்படியும் இருக்குமோ?’ என்று குழம்பி அடுத்தவர்களையும் குழப்புகிறோம். 

முழுமையாக விவரம் தெரிந்தவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள். எதுவுமே கேள்விப்படாதவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள். வாட்ஸப், ஃபேஸ்புக் என்று வைத்துக் கொண்டு அல்லோலப்படும் அரைகுறைகளின்பாடுதான் பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. உண்மையிலேயே தெளிவடைய முடியவில்லை. இதுவரையிலும் தடுப்பூசிகளுக்கு இவ்வளவு பெரிய குழப்பம் எப்பொழுதாவது வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. போலியோவுக்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் என்று ஒரே நாளில் சகல இடங்களிலும் முகாம்களை அமைத்து ஊற்றிவிடுகிறார்கள். வழியில் போகிற வருகிற குழந்தைகளையெல்லாம் அழைத்து ஊற்றும் போது யாரும் எதிர்ப்பு சொல்வதில்லை. இந்த எம்.ஆர் தடுப்பூசியின் குழப்பத்திற்கு காரணமே பள்ளிகளிலிருந்து கொடுத்து அனுப்பிய ஒப்புதல் விண்ணப்பம்தான் என்று நினைக்கிறேன். 

‘உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவிருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தெரியாது. நாளைக்கு ஏதாச்சும்ன்னா நீங்கதான் பொறுப்பு’ என்று சொல்லாமல் சொன்னால் திக்கென்று இருக்குமா இருக்காதா? இப்படி பொறுப்பைத் துறந்து ‘எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்குங்க’ என்றால் அரையும் குறையுமாக இருக்கும் நடுத்தரவர்க்கத்தினர் குழம்பத்தான் செய்வார்கள். நோயைத் தடுக்கிறோம் என்ற பெயரில் ஏதாவது வம்பு வந்து சேர்ந்துவிடக் கூடாது என்று யோசிப்பதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்? நமக்கு என்றால் கூட ஆனது ஆகட்டும் என்று நினைக்கலாம். குழந்தையை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?

‘அமெரிக்கா நம்மையெல்லாம் வைத்து டெஸ்ட் செய்யுதாமா’ என்று எங்கிருந்தோ கிளம்புகிற செய்திகளையெல்லாம் நம்ப வேண்டியதில்லைதான். ஒருவேளை- அதில் உண்மை இருந்து தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறாமல் இருக்க முடிவதில்லையே. நம் ஊரில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ‘இதையெல்லாம் செய்யமாட்டார்கள்’ என்று வரையறை ஏதாவது இருக்கிறதா? காசு கிடைக்குமென்றால் எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்றுதானே இவர்களைப் பற்றி பிம்பப்படுத்தி வைத்திருக்கிறோம். அமெரிக்க மருந்துக் கம்பெனி கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருப்பான். இவர்கள் தலையை ஆட்டியிருப்பார்கள் என்றுதான் மனம் நம்பச் சொல்கிறது. இவர்களின் பரிசோதனைக்கு நம் குழந்தை பலியாகிவிடக் கூடாது என்று சாமானிய மனிதனின் மனநிலையில் இருந்து யோசிப்பதில் என்ன தவறு?

எல்லாவற்றிலும் நடுத்தர வர்க்கத்தையும் எளிய மனிதர்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

என்னால் மருத்துவர்களிடம் பேச முடிகிறது. ஒரு மருத்துவரினால் தெளிவாகச் சொல்ல முடியவில்லையென்றால் இன்னொரு மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள முடிகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு தகப்பனுக்கும் இது சாத்தியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? கூலிக்குச் செல்கிறவனிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து ‘வேணும்ன்னா போட்டுக்க..நாளைக்கு எங்களைக் கேட்கக் கூடாது’ என்று சொன்னால் அவன் ‘இந்த சங்காத்தமே வேண்டாம்’ என்று சொல்வதை எப்படி தவறென்று சொல்ல முடியும்?

அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசிக்கு நான் எதிரியில்லை. ஒரு எளிய தகப்பனாக இருந்து இந்த விவகாரத்தைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பயம் ஏன் உண்டாகியிருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெற்றோரிடமிருந்து எதற்காக இப்படியொரு ஒப்புதல் விண்ணப்பத்தை அரசாங்கம் கேட்டது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பெற்றோரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியெல்லாம் கேட்காமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் யாரும் எதுவும் கேட்டிருக்கப் போவதில்லை. இத்தனை விவாதங்கள் உண்டாகி நினைத்தவர்கள் எல்லாம் மருத்துவர்கள் ஆகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கமே அதற்கான இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 

‘அரசாங்கத்துக்கே சந்தேகம் இருக்கிறதோ?’ என்ற குழப்பத்தை ஏன் விளைவித்தார்கள் என்று அரசுதான் விளக்க வேண்டும்.

ஒரு சாரார் சொல்வதைப் போல அரசாங்கமும் கார்போரேட் நிறுவனங்களும் செய்கிற ‘சதி’க்கு எம் பிள்ளைகளை சோதனை எலிகளாகவும் கொடுக்க விரும்பவில்லை. இன்னொரு சாரார் சொல்வதைப் போல ‘தடுப்பூசி போடவில்லையென்றால் அது உன் குழந்தைக்கு நீ செய்கிற துரோகம்’ என்ற பழிச்சொல்லையும் தாங்க விரும்பவில்லை. ஒரு எளியவனாகக் கேட்பதெல்லாம் அரசாங்கத்திடமிருந்து மிகச் சாதாரண விளக்கத்தை மட்டும்தான்.