Feb 28, 2017

அப்படி என்னய்யா இருக்குது?

சில பல வருடங்களுக்கு முன்பாக ஹெரால்ட் பிண்ட்டர் என்றொருவருக்கு பரிசு கொடுத்தார்கள். என்ன பரிசு என்று மறந்துவிட்டது. தேடிப் பார்த்துக் கொள்ளவும். ஆனால் அந்த பிண்ட்டரை பற்றி கட்டுரை எழுதியது வேண்டுமானால் நினைவில் இருக்கிறது. அவர் விருது பெற்றதை எழுதி ‘மானே தேனே பொன்மானே’ வகையறா கட்டுரை. 

அப்பொழுதெல்லாம் எனக்குள் அதிதீவிர சாத்தான் ஒன்று குடியிருந்தது. ஆண்பாலா பெண்பாலா என்று தெரியாத ஒரு சாத்தான் அது. இந்த உலகத்துக்கு முன்பாக நம் மண்டையைக் கழற்றிக் காட்டி நம் அறிவைக் காட்டிவிட என்று அது சதா உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கும். விட்டேனா பார் என்று நானும் தயாராகவே இருப்பேன். அப்படித்தான் ஹெரால்ட் பிண்ட்டர் என்று கேள்விப்பட்டவுடன் இணையத்தில் தேடி எனக்கு புரிகிற வரிகளையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து சரியான பதத்தில் கிளறி எடுத்து பிரசுரமும் செய்துவிட்டேன். சில பேர் பாராட்டவும் செய்தார்கள். ஏதோவொரு அச்சு இதழிலும் பிரசுரமானது. 

‘அட்ரா சக்கை!’ என்று நினைத்துக் கொண்டேன். பிண்ட்டரின் எழுத்துக்களை அக்குவேறு ஆணிவேறாக படித்து பரவசம் அடைந்த பரமாத்மாவின் தொனியில் எழுதியிருந்த அந்தக் கட்டுரை சிக்கினால் படித்துப் பார்த்து உய்யவும். நல்லவேளையாக அப்பொழுதெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. தலை தப்பியது பிண்ட்டர் புண்ணியம்.

அதன் பிறகாவது அமைதியாக இருந்திருக்கலாம். ஹிக்கின் பாதம்ஸ் மாதிரியான ஓர் ஆங்கில புத்தகக் கடைக்குள் நுழைந்து அந்த படுபாதகரின் புத்தகத்தையும் வாங்கிவிட்டேன். இரவில் படித்தாலும் புரியவில்லை. விடிந்தும் விடியாமலும் படித்தாலும் புரியவில்லை. வரியில் ஒரு சொல் புரியவில்லை என்றால் அகராதியில் அர்த்தம் தேடலாம். வரியே புரியவில்லையென்றால் என்னதான் செய்வது? இந்த ஆளுக்கு எதுக்குய்யா பரிசு கொடுத்தார்கள் என்று மண்டை காய்ந்ததுதான் மிச்சம். அதன் பிறகுதான் விருதுக்கும் நமக்கும் காத தூரம் போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன். விருது வாங்கிய புத்தகங்கள் என்றால் ‘ப்ளீஸ் go back' என்று சொல்லிவிடுவது வாடிக்கை. தமிழில் பிரச்சினையில்லை- முக்கால்வாசி விருதுகளை ‘அட நம்மாளுய்யா’ என்கிற வகைப்பாட்டில்தானே கொடுக்கிறார்கள்?

விருது வாங்குகிற புத்தகங்கள்தான் புரியாது என்றால் விருது வாங்குகிற திரைப்படங்களும் கூட சவ்வுதான் போலிருக்கிறது. நேற்றிரவு Moonlight படத்தைப் பார்த்தேன். சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்று தெரிந்தவுடனே பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்ட படம் அது. இரவு பதினொன்றரை மணி வரைக்கும் அலுவல் ரீதீயிலான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. அதன் பிறகுதான் நேரம் கிடைத்தது.


படம் முழுக்கவே கறுப்பின மக்கள்தான். படத்தின் களம் அமெரிக்காதான் என்றாலும் ஊறுகாய் அளவுக்குக் கூட வெள்ளையர்கள் இல்லை.

ஷெரோன் குட்டிச் சிறுவன். அவனை சில கறுப்பினச் சிறுவர்கள் துரத்தி வந்து கல்லால் அடிக்கிறார்கள். ஷெரோன் ஒரு வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான். பம்மியபடி பதுங்கியிருக்கும் அவனை ஒரு போதை வஸ்து விற்கிற மனிதன் மீட்டுச் செல்கிறான். அவனது மனைவி தெரசா சிறுவனுக்கு உணவளிக்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்கிறார்கள். சிறுவன் வாயையே திறப்பதில்லை. வெட்கப்படுகிற சிறுவன் அவன். அன்றைய இரவில் அவர்கள் வீட்டிலேயே உறங்கிக் கொள்கிறான். அடுத்த நாள் காலையில் சிறுவனை அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறான் அந்தப் பெரியவன். ஷெரோனின் அம்மா முகத்தில் கடுப்பைக் காட்டுகிறாள். சிறுவனை அந்தக் காலனியில் எல்லோரும் லிட்டில் என்றழைக்கிறார்கள். எல்லோருக்குமே அவன் சவலைப் பிள்ளைதான். சீண்டுகிறார்கள். கெவின் மட்டும் அவனுடன் நட்போடு பழகுகிறான். ‘அடுத்தவன் கலாய்க்க வாய்ப்புத் தராதே’ என்று உசுப்பேற்றுகிறான். லிட்டிலின் அம்மாவுக்கும் போதைப் பழக்கம் உண்டு. அவளை லிட்டில் வெறுக்கிறான்.

இது படத்தின் முதல் பகுதி.

படத்தின் இரண்டாவது பகுதியில் லிட்டில் டீன் ஏஜ் வயதுதை அடைகிறான். அப்பொழுதும் அவன் சவலைதான். ‘அவனுக்கு லேடீஸ் ப்ராப்ளம் சார்’ என்று வகுப்பறையில் கலாய்க்கிறார்கள். கெவினை வைத்தே கல்லூரியின் டான் ஒருவன் ஷெரோனை அடிக்க வைக்கிறான். மரண அடி அது. ஷெரோன் சற்று உடல் வலு பெற்று மீண்டும் பள்ளிக்கு வந்து அந்த டானை அடித்து வீசிவிட்டு சிறைக்குச் செல்கிறான். இந்தப் பருவத்திலும் கெவின் - ஷெரோன் நட்பு தொடர்கிறது. இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். கெவின் ஷெரோனுக்கு மைதுனம் செய்துவிடுகிறான். ஷெரோனுக்கு கெட்ட கனவுகள் வருகின்றன.

இது படத்தின் இரண்டாம் பகுதி. 

மூன்றாவது பகுதியில் ஷெரோன் சிறையிலிருந்து வெளிப்படுகிறான். அட்லாண்டா பகுதியில் போதைப் பொருள் விற்கிறான். கெவினின் அழைப்பின் பேரில் ஊருக்கு வருகிறான். போதைப்பழக்க மீட்பு விடுதியில் இருக்கும் தனது அம்மாவைச் சந்தித்து இருவரும் நெகிழ்கிறார்கள். பிறகு கெவினைச் சந்திக்கிறான். இருவரும் கெவின் வீட்டுக்குச் சென்று அணைத்துக் கொள்கிறார்கள். 

அவ்வளவுதான். படம் முடிந்தது.

கதையை இவ்வளவு தட்டையாகச் சொல்லியிருந்தாலும் நுட்பமான காட்சிகளும், நுணுக்கமான நடிப்பும் படம் முழுவதுமே உண்டு. ஆனால் திரைக்கதை என்று பார்த்தால் வெகு தட்டை. இசை, ஒளிப்பதிவு என எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் ‘சிறந்த படம்’ என்று ஆஸ்கர் விருது வாங்குகிற அளவுக்கு என்ன இருக்கிறது என்று புரியவே இல்லை. நம் ஊரில்தான் பெண்கள் எழுதினால் பெண்ணியம் என்று கணக்கெடுத்துக் கொள்வார்கள். தலித் ஒருவர் எழுதினால் தலித்தியம் என்று முடிவு கட்டிவிடுவார்கள். அப்படி ஏதாவது அக்கப்போராக இருக்குமோ என்று கூட நினைத்தேன். ‘சரக்கு விற்பதில் என்னய்யா கறுப்பின சுதந்திரமும் வலியும்?’ என்று ஏதோ மண்டைக்குள் கத்திக் கொண்டேயிருக்கிறது.

இதில் ஏதேனும் அரசியல் இருந்து அதற்காக விருது வழங்கியிருக்கிறார்களா என்றால் அப்படியும் தெரியவில்லை. படம் ஒன்றரை மணிக்கு முடிந்தது. மூன்று மணி வரைக்கும் விமர்சனங்களைப் படித்தேன். எதுவுமே சமாதானம் அடைகிற அளவுக்கான விமர்சனமாக இல்லை. படமோ, எழுத்தோ- ஈர்க்க வேண்டும். விமர்சனத்தைப் படித்து அதற்கும் படைப்பைக் கொண்டு போய் வலுக்கட்டாயமாக பொருத்தக் கூடாது. 

உலகமே பாராட்டி விருதளிக்கும் ஒரு படத்தை இவ்வளவு எளிமையாக ‘தட்டை’ என்று சொல்லக் கூடாது என உள்மனம் உறுத்தாமல் இல்லை.  ஆனால் பிண்ட்டர் கட்டுரை எழுதிய கணக்காக உடான்ஸ் பாண்டியாகிவிடக் கூடாது என்றும்தான் தோன்றுகிறது. என்ன செய்ய?

நேற்றிரவிலிருந்து ஒரே கேள்விதான்- உண்மையிலேயே மொக்கைப் படம்தானா? அல்லது என் ரசனைதான் நான்கு சண்டை, ஒரு கசமுசா என்று எதிர்பார்த்து மொன்னையாகிக் கிடக்கிறதா என்று புரியவில்லை. 

வாய்ப்பிருப்பவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

கருந்தேள் ராஜேஷ் மாதிரியான சினிமாக்காரர்கள்  யாராவது சுருக்கமாக ஒரு வியாஸம் எழுதினால் பேருவகை அடைந்து ஐயம் தெளிவுறலாம்.