Feb 14, 2017

சர்வாதிகாரியின் கடைசிக்கணங்கள்

வாழ்க்கையில் சகல செல்வாக்கும் அதிகாரமும் மிக்கவர் அவர். அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. அலட்டலும் தோரணையும் மிகுந்திருந்த காலத்தில் தமக்கு எதிரானவர்கள் அத்தனை பேரையும் நசுக்குகிறார்.  எதிரிகள் கொல்லப்படுகிறார்கள். அடித்து வீழ்த்தப்படுகிறார்கள். இவர் நினைப்பதைத்தான் ஊடகங்கள் எழுதுகின்றன. விசுவாசிகள் அவரது மிகச் சிறந்த அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.  பயம் என்பதை அடுத்தவர்களுக்குக் காட்டுகிறார். இவரைக் கண்டவர்கள் அத்தனை பேரும் மிரண்டு நடுங்குகிறார்கள். 

தாம் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கருதி இந்த தாம் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்கிற வெறியோடு போராடுகிறார். பேராசைகள்தான் சர்வாதிகாரிகளின் இறுதி அத்தியாயங்களை எழுதுகின்றன என்பதை புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது.

உருவத்துக்கும் ராட்சச குணத்துக்கும் சம்பந்தமேயில்லாத அந்த மனிதரின் கடைசி நாட்கள் நெருங்குகின்றன. எதிரிகள் சூழ்ந்து நிற்கிறார்கள். பல திசைகளிலிருந்தும் தாக்குதல்கள் வருகின்றன. சிக்கினால் தன்னைக் குற்றவாளி என்று முத்திரை குத்தி கழுவிலேற்றப் போகிறார்கள். அவருக்கான அனைத்து வழிகளும் அடைபட்டுவிட்டன. அபத்தமான நாடகத்தின் இறுதிக் காட்சிகள் அவை.

இனி என்ன செய்வது?

வாழ்வின் குரூரமான வெற்றிச்சுவையை ருசித்து வாழ்ந்தவர்களுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. தேசமே தன்னிடம் மண்டியிட்டுக் கிடந்ததை அனுபவித்தவர்களுக்கு எதிரிகளிடம் தோல்வியடைவது உவப்பானதில்லை. சரணாகதியாவதையோ அடுத்தவர்களிடம் மண்டியிடுவதையோ ஆழ்மனதினால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. விசாரணை, தண்டனைகள், வசவுகள் என எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற மனநிலையும் இல்லை. 

விசுவாசிகளைத் தவிர யாருடைய கண்களிலும் படாமல் ஒளிந்து கொள்கிறார். அங்கேயிருந்தும் தமது விசுவாசிகளை எதிரிகளுடனான சண்டைக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் இனி சாத்தியமில்லை என்றாகிறது. 

தனது அதிகாரம் பொடிப்பொடியாக உதிர்ந்து போனதை உணர்கிறார். தானும் தனது விசுவாசிகளும் கட்டி வைத்திருக்கும் கோட்டையை தகர்த்துவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் போது அவர் மனம் சஞ்சலமில்லாததாகிவிடுகிறது. தன்னால் இயலும் வரை போராடிப் பார்த்த பிறகே இந்தச் சூழல் உருவாகியிருக்கிறது என்பது அவருக்குத் தெரிகிறது. தனது கடைசித் தருணங்களில் சலனமே இல்லாமல் முகத்தை வைத்துக் கொள்கிறார். 

வலுவான எதிரிகள் கைகோர்த்துவிட்டார்கள். சிக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற தருணம் அது. விசுவாசிகளோடு தங்கியிருந்த இடத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுக்கிறார். கடைசி விநாடிகள் எழுதப்பட்ட அந்தத் தருணம் உணர்ச்சிப்பூர்வமானது.

தமது விசுவாசிகளுடன் ஸ்நேகப்பூர்வமாக பேசுகிறார். விருந்து உண்கிறார். தமது மரணத்துக்குப் பிறகு உடலை என்ன செய்ய வேண்டுமெனெ அறிவுறுத்துகிறார். எதிரிகள் முகாமை நெருங்குவதற்குள்ளாக அவர் சொன்னபடியே விசுவாசிகள் செய்து முடிக்கிறார்கள். வரலாறு அவரை வில்லனாகக் குறிப்பிடுகிறது. எந்தக் காலத்திலும் அழிக்கவே முடியாத கறையுடன் இறந்து போகிறார் அவர்.


தம்மைச் சிங்கமெனக் கருதிக் கொண்டு உலகையே மிரளச் செய்த சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி தினங்கள்தான் இப்படியிருந்தன.

Downfall என்றொரு படம். 2004 ஆம் ஆண்டு வெளியானது. 

ட்ராடல் யூங்கே (Traudl Junge) என்ற பெண் தமது இருபத்தியிரண்டு வயதில் ஹிட்லரின் தனிச்செயலராக வேலைக்குச் சேர்கிறார். ஹிட்லரே நேரடியாக நேர்காணலை நடத்துகிறார். அவளைத் தேர்ந்தெடுத்தவுடன் அவளுக்கு வெகு சந்தோஷம். 1942 ஆண்டு இறுதியில் வேலைக்குச் சேர்கிறாள். 1941 ஆம் ஆண்டின் இறுதிவாக்கிலேயே ஜெர்மனி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுமையையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் வளைத்துவிட்டார்கள். ஆக, ட்ராடல் மிகப்பெரிய உலகத் தலைவனின் செயலராக பணியில் சேர்கிறார். ஆனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உச்சத்தை அடைந்து 1945 ஆம் ஆண்டில் ஹிட்லர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.

போருக்குப் பிறகு ட்ராடல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு 2002 ஆம் ஆண்டு வரைக்கும் உயிரோடிருந்தார். அவர் தமது நினைவுகளைப் புத்தகமாக எழுத அது திரைவடிவமும் பெறுகிறது. அந்தப் படம்தான் Downfall.

தவறவே விடக் கூடாத படம் என்ற பட்டியலைத் தயாரித்தால் நிச்சயமாக இதைச் சேர்த்துக் கொள்வேன். ஒளிப்பதிவு, இசையும், நடிகர்களின் நடிப்பும் ஈர்ப்பு சக்திகள். ஹிட்லராக நடித்த ப்ருனோ கன்ஸ் அட்டகாசம். இப்படம் நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. 

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஹிட்லர் தனது விசுவாசப்பட்டாளம், பணியாளர்கள், காதல் மனைவி இவாவுடன் பதுங்குகுழிக்குள் செல்கிறார். அங்கேயிருந்துதான் போரின் கடைசிக் கட்டங்களை நகர்த்துகிறார். ஆனால் தோல்வி அவரை வெகு வேகமாகச் சூழ்கிறது. அவரோடு தங்கியிருக்கும் படைவீரர்களுக்கும் இவாவுக்கும் தாம் இறந்துவிடப் போகிறோம் என்பது புரிந்துவிடுகிறது. குடிக்கிறார்கள். நடனமாடுகிறார்கள். அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே குண்டு விழுகிறது. ஆனாலும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அல்லது சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். 

பதுங்கு குழிக்குள் ஹிட்லரும் அவருக்கு அடுத்த கட்டத் தலைவர்களும் போர் குறித்தே பேசுகிறார்கள். சிலர் எதிரணிக்கு ஓடுகிறார்கள். அவர்களைக் குற்றவாளிகள் என அறிவிக்கிறார். தண்டனைகள் வழங்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அவரோடு இருப்பவர்கள் அவர் சொல்வதை அப்படியே கேட்கிறார்கள். யாரும் அவருடன் விவாதிக்கத் தயாராக இல்லை. சொல்வதைச் செய்கிறார்கள். ஆயினும் தோல்விச் செய்திகள்தான் வந்து கொண்டேயிருக்கின்றன.

தோல்வி நெருங்க நெருங்க ஹிட்லர் மிரட்டுகிறார். அதட்டுகிறார். ஆனால் முகத்தை அடுத்த கணமே சலனமில்லாமல் மாற்றிக் கொள்கிறார்.

எல்லாம் முடிந்துவிடுகிறது. இனியும் சாகவில்லையென்றால் வளைத்துவிடுவார்கள். சாவுக்குப் பிறகும் தனது முகம் சிரித்தபடியே இருக்க வேண்டும் எனச் சொல்லும் இவா சயனடை விழுங்கிக் கொள்கிறார். ஹிட்லர் சாவின் முறைகளைத் தெரிந்து கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்று செத்துவிடப் போவதாகச் சொல்லிக் கொண்டு அறைக்குள் சென்று சுட்டுக் கொண்டு சாகிறார். இவாவும் ஹிட்லரும் இறந்தது உறுதியான பிறகு அவர்களது உடல் மீது பெட்ரோலை ஊற்றி விசுவாசிகளே எரித்துவிடுகிறார்கள்.

உலகையே கதிகலங்கச் செய்த ஹிட்லரின் அடையாளம் இப்படித்தான் முற்றாக அழிக்கப்பட்டது. அவ்வளவுதான் வாழ்க்கை. வாய்ப்பும் வசதிகளும் அதிகாரமும் இருக்கும் போது ஆட்டம் போடுவது பெரிய காரியமில்லை. நமது குரல் விண்ணை அதிரச் செய்யலாம். காலடியில் யாரை வேண்டுமானாலும் பணிக்கலாம். வாழ்வின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. அது எப்பொழுதுமே நம்மை விட்டு வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதில்லை. பேராசைகளும் அதீத வெறியும் வாழ்க்கையின் இறுதிக்கணங்களை கண்ணியமில்லாததாக அவலமாக்கிவிடக் கூடும். 

ஹிட்லரின் வாழ்க்கை ஓர் உதாரணம்.