Feb 4, 2017

க.சீ.சிவகுமார்

நேற்றிரவு ஒன்பது மணியளவில் செல்லமுத்து குப்புசாமி அழைத்து க.சீ.சிவகுமார் இறந்துவிட்டதாகச் சிலர் சொல்வதாகச் சொன்னார். சிவகுமாரி எண் இருந்தது. ஆனால் அவருடைய எண்ணுக்கே எப்படி அழைப்பது என்று குழப்பம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அதிகாலை நேரத்தில் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும் போது சாலைப் பகுப்பானில் அடிபட்டு முக்கால் மணி நேரம் யாரும் கண்டுகொள்ளாமலேயே கிடந்து பிறகு மருத்துவமனை வாசத்திலிருந்து மீண்டெழுந்து வந்திருந்தார். மரணத்தை வெகு அருகில் பார்த்துவிட்டு அந்த மனிதருக்கு எதுவுமாகியிருக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

நேற்று முழுவதும் நிறைய நண்பர்களிடம் பேசியிருக்கிறார். மாலையில் மனைவி மகள்களுடன் அமர்ந்து தனது இரண்டாவது மகளின் பள்ளி ஆண்டுவிழா வீடியோவை ஒரு மணி நேரம் பார்த்திருக்கிறார்கள். பிறகு மூத்த மகள் வீட்டுப்பாடம் செய்யச் சென்றுவிட தனது அலைபேசியில் அப்பாவுடன் பேசியிருக்கிறார். ஏதோவொரு புத்தகத்தை வழங்கிவிட்டு வந்திருந்தாராம். அதைப் படித்துவிட்டார்களா என்று கேட்டுத்தான் பேசியிருக்கிறார். இணைப்பைத் துண்டித்த சில வினாடிகளில் கால் இடறி நான்காவது மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்திருக்கிறார். அப்பா விழுவதை இளைய மகள் நேரடியாகப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு ஏழு வயது. கால் இடறி விழுகிற சமயத்தில் துணிகாயப் போடும் கம்பியை பற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் இயலவில்லை. சப்தம் கேட்டு அம்மாவும் மகள்களும் கீழே ஓடியிருக்கிறார்கள். அதற்குள்ளாகவே பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் பருக நீர் கொடுத்திருக்கிறார்கள். இரத்தத்தோடு சேர்ந்து நீரும் குமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. ஆட்டோவை வரவழைத்து சிவகுமாரை ஏற்றிக் கொண்டு மனைவி ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்.

சிவகுமாரின் மனைவி சாந்தி அதே மருத்துவமனையில்தான் செவிலியராகப் பணி புரிகிறார். தாம் வருவதை முன்கூட்டியே மருத்துவமனைக்குச் சொல்லிவிட்டார். சில நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிட்டார்கள். மருத்துவமனைக்குச் செல்லும் வரைக்கும் கூட இருதயத் துடிப்பு இருந்திருக்கிறது. ஆனால் தண்டுவடம் முறிந்துவிட்டது. மருத்துவமனையை அடைந்த அடுத்த சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. தகவல் பரவ வழக்கம் போலவே ஆளாளுக்கு ‘குடி குடியைக் குடிக்கும்’ என்று அறிவுரை சொல்லி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் க.சீ.சிவகுமார் உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்து உயிர் பிரிந்திருக்கிறது. 

நேற்றிரவு பதினோரு மணியளவில் காவல்துறையின் விசாரணைகள் நிறைவுற்றன. இரவில் யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. காலையில் காவலர்கள் வந்து கையொப்பமிட்டவுடன் விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தார்கள். வெயில் ஏறுவதற்கு முன்பாக மருத்துவமனையில் நண்பர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். சிவகுமாரின் ஊரிலிருந்து வந்திருந்தார்கள். அப்பாவும் சித்தப்பாவும் தலையைக் குத்தியபடி அமர்ந்திருந்தார்கள். எதுவும் பேசத் தோன்றவில்லை.

க.சீ.சிவகுமாரின் எழுத்துக்கள் குறித்தும் அவருடனேயே ஒட்டிப் பிறந்திருந்த நக்கலும் மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. பெங்களூரில் நடத்தும் கூட்டங்களுக்கு வருவார். ‘அது வழியாத்தான போற? என்னைய எறக்கி உட்டுடுறியா?’ என்று பைக்கில் ஏறி நிறையப் பேசிக் கொண்டு வருவார்.  அவர் சொல்வதற்கெல்லாம் ‘ஆமாங்கண்ணா’ ‘சரிங்கண்ணா’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும். அவரிடம் அவ்வளவு விஷயங்கள் இருக்கும். அவருடைய கதைகள் குறித்துப் பேசுவதற்கு என்னிடமும் நிறைய இருக்கும். எதையாவது பேசிக் கொண்டே வருவோம். பி.டி.எம் லே-அவுட் வந்துவிடும்.

அறிமுகமான சில மாதங்களிலேயே ஏதோ புது எண்ணிலிருந்து அழைத்திருந்தார்.

‘மணிகண்டனுங்களா?’

‘ஆமாங்க’ 

‘மணிகண்டன்கிட்ட பேசணும்’

‘சொல்லுங்க’ என்றேன்.

‘அதான் பேசியாச்சுல..வெச்சுடுறேன்’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்துவிட்டார். யார் என்று கண்டுபிடிப்பதற்காக நான்கைந்து முறை அழைத்துப் பேச வேண்டியிருந்தது.

வேறு யாராவது இப்படிச் செய்தால் வெறியேறியிருக்கும். ஆனால் க.சீயிடம் அப்படியில்லை. எனக்கு மட்டுமில்லை- எனக்குத் தெரிந்து அவருக்கு எதிரியென்றே யாரும் இல்லை. வெள்ளந்தியான மனிதர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். வெளிப்படையாகவும் பேசுவார். தனது குறைகளை எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் ஒத்துக் கொள்கிற மனிதர் அவர். ‘இந்தக் குடியை மட்டும் விட்டுட்டா போதும்’ என்பார். ‘ஆமாங்கண்ணா..விட்டுடுங்க’ என்றால் ‘அந்தப் பக்கம் போனாவே கை பரபரங்குது..குடிச்சுடுறேன்’ என்பார். 

எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் வெகு இயல்பாகவும் பேசக் கூடிய மனிதராகவேதான் வாழ்ந்தார். 

இன்று ஆதவன் தீட்சண்யா ஒரு சம்பவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு புத்தக வெளியீட்டுக்காக சென்னையிலிருந்து ஓசூருக்கு சிவகுமார் வந்து கொண்டிருக்கிறார். விடிந்தும் ஆளைக் காணவில்லை. செல்போன் இல்லாத காலம் அது. இவர்களுக்கு குழப்பம். பத்து மணி வாக்கில் வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பு வருகிறது. ‘எங்கே இருக்கீங்க?’என்று கேட்ட போது அரக்கோணம் காவல் நிலையத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

‘அங்க என்ன பண்ணுறீங்க?’ என்று கேட்டதற்கு ‘அது ஒரு பெரிய கதை’ என்றாராம். அவரருகில் இருந்த போலீஸ்காரர் ‘கதையாடி உனக்கு’ என்று எக்கு எக்கியிருக்கிறார். 

பிறகு திலகவதி ஐபிஎஸ் உதவியின் மூலமாக காவல் நிலையத்திலிருந்து கிளம்பி வந்த பிறகு கதையை விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். அது ஏதோ திருவிழாச் சமயம். தொடரூர்தியில் வெகு கூட்டம். சிவகுமார் அண்ணன் ‘இவ்வளவு கூட்டம் வருதுல்ல...ரயில்வேக்காரனுக நாலஞ்சு பெட்டி சேர்த்துனா என்ன?’ என்று பேசியிருக்கிறார். கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் ‘இதெல்லாம் யார் சார் கேட்கிறாங்க..உங்களை மாதிரி யாராச்சும் கேட்டாத்தான் உண்டு’ என உசுப்பேற்றவும் இவருக்கு ஜிவ்வென்றாகியிருக்கிறது. ‘இப்போ பாருங்க என்ன பண்ணுறேன்’ என்றவர் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்திவிட்டார். அரக்கோணம் ஸ்டேஷனில் கொண்டு போய் அமர வைத்துவிட்டார்கள்.

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது நீதிபதி ‘நீங்க செஞ்ச காரியத்துக்கு எவ்வளவு ஃபைன் தெரியுமா?’ என்றாராம்.

‘ஏழை எழுத்தாளனுங்கய்யா..நீங்களா பார்த்து செய்யுங்க’ என்று சொல்லி சிரிப்பூட்டி ஆயிரத்து ஐநூறு ரூபாய் கட்டியிருக்கிறார். அவரிடம் இப்படி நிறையச் சம்பவங்கள் உண்டு. வாழ்க்கையை கிட்டத்தட்ட ஒரு கொண்டாட்டமாக வைத்திருந்தவர்.  


தமது குழந்தைகள் இருவருக்கும் தம்மை வெகுவாகப் பிடிக்கும் என்பதில் அவருக்கு பெருமிதம் இருந்தது. அதற்கேற்பவே அவரும் வெகு பாசமாக இருந்தார். அவரது மூத்த மகள் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் புத்தகக் கண்காட்சியில்தான் வெளியாகியிருக்கிறது. ‘என் மக எழுத வந்துட்டா’ என்றுதான் எல்லோரிடமும் பேசியிருக்கிறார். 

இன்று காலையில் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் மார்ச்சுவரிக்குச் சென்ற போது அங்கேயிருந்த செக்யூரிட்டி ‘பார்க்கணுமா?’என்றார்.

‘ஆமாம்’ என்றேன். அவர் பீரோ போன்ற பெட்டியைத் திறந்து துணியை விலக்கினார். ஜிப் வைக்கப்பட்ட உறையில் வைத்திருந்தார்கள். ஜிப்பைத் திறக்கும் போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பார்க்க தைரியமில்லை. காவலர்கள் வந்த பிறகு உடலை ஏற்றி விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கே இரண்டு மணி நேரங்களுக்கு மேலானது. அவரது நினைவுகளைத்தான் அசைபோடத் தோன்றியது. அவரது உடல்மொழியும் பேசுகிற தொனியும் சிரிப்பும் தனித்துவமானது. அவையெல்லாம் திரும்பத் திரும்ப வந்து போயின.

க.சீ.சிவகுமாரின் புத்தகங்கள் கல்லூரிக் காலத்தில் அறிமுகமாகின. நகைச்சுவையும் இயல்பான மொழி நடையும் துல்லியமான கவனிப்பும் அவருடைய பெரும்பலமாக இருந்தன. இன்னமும் வெகு உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர்.

ஒன்றேகால் மணிவாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்து வெள்ளைத் துணியைச் சுற்றி எடுத்து வந்து வைத்தார்கள். கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் என்ற அடையாளம் இல்லாத வெற்று உடல் அது. முகத்தில் சிறு பிசிறு கூட இல்லை. சவரம் செய்யப்பட்ட முகம் தெளிவாக இருந்தது. அந்த மென்புன்னகை அப்படியே இருந்தது.  சிவகுமார் அண்ணனுக்கு நாற்பத்தியாறு வயதாகிறது. அவருக்கு இன்னமும் காலம் இருந்தது. அவர் இன்னமும் நிறைய எழுதியிருக்க வேண்டும். ஆனால் காலம் அவரை வாரிக் கொண்டது.