Feb 10, 2017

அது ஒரு கனவு மட்டுமே

ஜீவ கரிகாலன் பதிப்பாளர் என்ற அடையாளத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தவர். ‘அது ஒரு கனவு மட்டுமே’ என்ற நீண்ட சிறுகதையை அனுப்பி வைத்திருந்தார். 

வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் விவாதிப்பதற்கும் முரண்படுவதற்கும் சந்தேகங்களைக் கேட்பதற்குமான திறப்புகளைக் கொண்ட கதை இது. 

‘நிசப்தம் தளத்தில் பிரசுரம் செய்யட்டுமா?’ என்றேன். 

அச்சு இதழ்களுக்கு அனுப்ப வேண்டிய கதை இது. ‘சரி’ என்று சொல்லிவிட்டார். 

வெள்ளிக்கிழமையன்று பிரசுரம் செய்யலாம் என்று காத்திருந்தேன். முக்கால் மணி நேரமாவது தேவைப்படும். குழப்பும். கவனம் கோரும். பொறுமையை யாசிக்கும். வார இறுதியில் வாசித்துவிட்டால் பேசலாம்.


விவாதிப்பதற்கு தோதான கதை இது. பின்னூட்டமாகவோ மின்னஞ்சலாகவோ எழுதினால் ஜீவ கரிகாலனையும் விவாதத்திற்கு அழைத்துக் கொள்ளலாம். சுவாரசியமாக இருக்கக் கூடும்.

                                                                  -----

அது ஒரு கனவு மட்டுமே

கண்களிள் எரிச்சல், கடுமையாகச் சிவந்து கண்ணாடியில் பார்ப்பதற்கு ஏலியன் போல மாற்றியிருந்தது. இந்த சில வருடங்களில் இன்ஸோம்னியா மிகச்சாதாரணமான நோயாகிவிட்டது. தூக்க மாத்திரைகள் விழுங்கியும் வேலை செய்யாமல் போகவே, இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். என்ன தூங்கதானே முடியாமல் போனது? உண்மையில் இது நோயே அல்ல, என் கையில் இருக்கும் செல்ஃபோனைக் கூட எனது நோயாகவோ, பலவீனமாகவோ சொல்லலாம். வறண்டு கொண்டிருக்கும் குளத்தின் சேற்றில் மனம் நீச்சலடிக்கின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவரிடம் கேட்டிருந்த அப்பாயிண்ட்மெண்ட் இன்று தான். 

காலைக் கடமைகளை முடித்த வேகத்தில் கிளம்பலானேன். லிஃப்ட் நான்கு நாட்களாக வேலை செய்யவில்லை. பதினான்கு மாடியும் கீழே இறங்க வேண்டியிருந்தது.  மாடிப்படிகளிலேயே கியூவில் மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். பல நாட்கள் லிஃப்டிற்கான கியூவில் இருப்பதற்கு பதிலாக இறங்கிவிடும் பழக்கம் இருப்பதால் இதிலொன்னும் பெரிய சங்கடம் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து தூங்காமல் இருப்பதால் கால் இடறி கீழே விழுந்துவிடக் கூடாது என்கிற பதட்டம் இருக்கிறது.

என்ன ஆகிவிட்டது இந்த நாட்டிற்கு? பத்து நாட்களுக்குள் நாட்டின் நிலைமை இப்படி மாறிவிட்டது!

எனக்கு ஞாபகம் இருக்கிறது எனது பால்ய வயதில் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா வேலை பார்த்த பஞ்சாலையைப் போலவே பல பஞ்சாலைகள் ஏற்றுமதி செய்ய இயலாமல் தங்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. பெரிய அளவில் பொருளாதார கொள்கைகள் மாற்றப்பட்டு உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் வரை புதிய வேலைவாய்ப்புகள் திண்டாட்டமாக இருந்தது. 

அதே சமயம் அரசின் கொள்கை மாற்றத்தை என் தலைமுறையினர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் காண ஆரம்பித்தது அடைந்தது தான் அசூர வளர்ச்சி. அது தான் என்னைத் தூங்கவிடாமல் தடுக்கும் காரணமாக மாறியிருக்கிறது. 

பதினான்கு மாடிகள் கீழிறங்குவதற்குள் தலை சுத்த ஆரம்பித்துவிட்டது. முதுமை குறித்தான பயம் வரும் இந்த வயசிலே இவ்வசாதாரணமான சூழலை நான் மீண்டும் காண்கிறேன். பையில் வைத்திருக்கின்ற தண்ணீரைக் குடித்துவிட்டால்? இந்த நாள் முழுக்கத் தேவைப்படும். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பின் பொது குழாயில் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. லிஃப்டிற்குப் பின்புறம் சென்றேன். அங்கே தண்ணீருக்காக பெரிய வரிசை நின்றுக் கொண்டிருந்தது. நாடு அசாதாரண சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.

ஏற்கனவே தூங்காத அலுப்பில் உடலின் எடை கூடிய உணர்வு. கண்களைப் போல் கால்களும் வீங்கியிருந்தன.

நகரத்தின் முக்கியப்புள்ளிகள் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள வீட்டு வசதி வாரியத்திற்கே இப்படி நிலைமை என்றால், நகரின் மையத்தில் இருப்பவர்களுக்கும், அந்தப் புறம் இருப்பவர்களுக்கும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கக்கூடும் என்று அச்சமூட்டியது. 

‘தேசத்தைப் பற்றி அவதியுற இப்போது என்ன அவசரம்?’ அடிக்கடி எனக்குள் கேட்கும் கேள்வி தான். 

முதலில் நான் உறங்க வேண்டும், உறங்கிய பின்னர் தான் யோசிக்க வேண்டும் நான் யாருக்காக கவலையுறுவது என. பின் மண்டையில் மட்டுமே இருக்கும் கொஞ்ச முடிகளை வெளியே தெரியுமாறு தொப்பியை சற்று மேலே தூக்கிவிட்ட படி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

                                                          ***

பத்து நாட்களில் எப்படி மாறிவிட்டது இந்த நாடு? அதிலும் கடந்த நான்கு தினங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது. எனது இளமைக் காலத்தை ஞாபகப்படுத்துகிறது இந்த மனித வரிசை. இந்நகரத்தில் அரசியல் கூட்டங்களைப் போலவும், பேரிடர் நிவாரணங்கள், புதுப்பட வெளியீடு மற்றும் பண்டிகைக்கு ஊர் திரும்பும் நாட்களில் தான் இப்படிக் கூட்டங்களைப் பார்க்க முடியும். இந்தக் கூட்டங்களை கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இதுவரை எங்கேயும் கண்டதில்லை, எங்கு பார்த்தாலும் மனிதர்கள் சாரைசாரையாக கூச்சலிட்டபடி சென்று கொண்டிருக்கின்றனர். 

என்னால் மட்டும் ஏன் மக்களுடன் உறவாட முடியவில்லை? ஒவ்வொரு தசாப்தங்களிலும் ஒரு டஜன் உறவுகளையாவது இழந்திருக்கிறேன். 

இப்போது என்னையும் மீறி இழப்பு நேரிட்டிருக்கிறது. அது அநேகமாக என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாக இருக்கக்கூடும்.

அது அரசாங்கத்தின் தேசிய தகவலியல் மையத்தின் கட்டடம்.

பெருந்திரளான கூட்டம் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.  நான் செல்ல வேண்டிய க்ளினிக்கை கடக்க இந்த கூட்டத்தை எப்படியாவது கடக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த எகிப்து புரட்சியைப் போன்று இளைஞர்களாய் ஆவேசத்துடன் திரண்டிருந்தார்கள். அது சமூக ஊடகம் வாயிலாகத் துவங்கிய முதல் போராட்டம். இப்போது சமூக ஊடகம் கைவசம் இல்லாமலும் போராட முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். 

அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அமைதிப்படையோ, துணை ராணுவமோ ஆயுதம் ஏந்தித் தயாராக இருந்தது. தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஒட்டி இப்படியான கொதிநிலை இருந்தது. கிட்டதட்ட இருபத்திசொச்ச ஆண்டுகளாகிவிட்டன. 

மிகவும் அரிதானக் காட்சியாக ஒருவன் கைகளில் போஸ்டர்கள் கொண்டு வந்து அந்தக் கட்டடத்தின் கம்பிகளில் பசைதடவி ஒட்ட ஆரம்பித்தான். பழுப்பு நிற சட்டை அணிந்திருந்தார், அதே நிறத்தில் பலர் சட்டையை அணிந்திருந்தனர். வேடிக்கைப் பார்க்கச் சொல்லியது மனம்.

“At last the cloud war proved it, We are just a stray dogs”

“FUCK OFF NIC”

“US kicked us”

“Fall of the Nation leads to The Rise of Neo-Communism”

"WE ARE PURPLE"

என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கண்ணைக் கவரும் வண்ணங்களில் தென்பட்டன. நியோ கம்யூனிஸ்ட் என்று சொல்பவர்கள் பர்பிள் நிறத்தில் உடை அணிந்திருந்தனர். எவ்வளவோ தூரம் இதையெல்லாம் விட்டு ஒதுங்கி வந்தாயிற்று, மீண்டும் திரும்பும் எண்ணம் எங்கோ துளிர்விட்டாலும் அதை விடுக்கவே புத்தி சொல்கிறது. விரைவில் இங்கே ஒரு கலவரம் நடக்கும் அறிகுறி தென்பட்டதால், வேகமாகவே கடந்து சென்றேன். தொப்பியை நன்றாகக் கீழே சாய்த்துக் கொண்டு முகத்தை மறைத்தபடி, மக்களுக்கு தன்னை யாரென்று தெரியாவிட்டாலும், காவலர்கள் யாரேனும் என்னைத் தெரிந்து வைத்திருந்தால் பிரச்சினை ஆகவே தலையைக் கவிழ்ந்தபடியே நகர்ந்துக்கொண்டிருந்தேன். 

காமேர்ட், சகா, தோழர், ஜி, உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே, ஆதார் கார்டின் 12 இலக்க UIDயாகவும்’ எத்தனை பெயர்கள் என் பெயருக்கு பதிலாக என்னை அழைத்திருக்கின்றன. UIDஇன் எண்ணே எனக்குப் பெயராக- G 8971 என்கிற கைதி வாழ்க்கையும் அதில் அடக்கம். 

இப்போது எனக்கு என்ன பெயர் வைக்கப் போகிறது இந்தச் சமூகம்? வெறும் தூக்கம் தொலைத்தவனா, பைத்தியக்காரனா இல்லை வேறு ஏதும் நோய்கொண்டவனா? எப்படி இருந்தாலும் எனது அடுத்தப் பெயர் நோய்மையைச் சுட்டி தான். சுட்டி அழைத்திட யார் இருக்கிறார்கள். இருந்தவர்கள் இல்லாமல் போய் 10 நாட்களாகிவிட்டது.

க்ளினிக் இருந்த டாக்டர்ஸ் ப்ளாசாவிற்கு செல்ல 13 மாடிகள். இங்கேயும் லிஃட் வேலை செய்யாது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கும் இந்த கட்டடத்திற்கே மின்சார வசதி இல்லாமல் போனது ஆச்சரியமே. அரசாங்கம் மிகக்கடுமையாக மின்சாரத்தை சிக்கனம் பண்ணுகிறது. நகரத்தின் மொத்த குடிநீர் விநியோகத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள், மொத்தக் கையிருப்பில் உள்ள சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விநியோகிக்கின்றன. அரசின் அத்தனை பணிகளும் முறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கையில் இருக்கின்றன.

அக்கட்டடத்தின் வளைந்து நெளிந்து செல்லும் மாடிப்படிக்கட்டுகளை அன்னாந்து பார்க்கையில் அது ஒரு கண்ணாடி பதித்த டூம்-இனைத் தேடிச் செல்லும் கை சுத்து முறுக்கு போன்ற வடிவத்தில் இருந்தது. கீழிருந்து மேலே தெரியும் டூமின் ஏதோ ஒரு கரும்புள்ளியாய் தெரிந்தேன். 12 ஆம் மாடியில் ஒரு பெண்மணி ஏறிக்கொண்டிருந்தாள். அவள் தான் டாக்டராக இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

பதிமூன்று மாடிகள் ஏறுவதற்குள், தன் வாழ்நாளில் மேலும் ஒரு தசாப்தத்தைக் குறைத்த சலிப்பு அப்பிக்கொண்டது. தண்ணீர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் வாய் நனைத்துக் கொண்டு. ஒரு சப்ளிமெண்ட் மாத்திரையை எடுத்துக்கொண்டான். எல்லாமுமே தன்னிடம் இருந்து வெகு வேகமாகக் குறைந்து வருகிறது என்கிற அச்சம் வேறு. யாரிடமாவது தண்ணீர் இரவல் கேட்டால் கூட கொலை செய்யத்தூண்டுவது போல பார்க்க ஆரம்பித்துவிட்ட உலகு இது. 

நாற்பத்தைந்திற்கும் மேலாகிவிட்ட உடல் இது. இன்னும் ரெண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் எப்படி இருக்கும் என்று இப்போதே உணர முடிகிறது. இன்னும் இரண்டு முறை வரச் சொல்லி வீட்டிற்கும் க்ளினிக்கிற்கும் வந்தால் எனக்கு வயது அறுபதைத் தாண்டி விடும். மூச்சிரைத்தபடியே, க்ளினிக் வரவேற்பில் எனது டோக்கனை (மீண்டும் டோக்கன் சிஸ்டம்) காண்பிக்க, உள்ளே அனுப்பப்பட்டேன். 

அந்தப் பெண் மனநல மருத்துவர். என் வணக்கத்திற்கு பதில் சொல்லவில்லை. மாடிப்படிகள் ஏறி வந்ததால் மார்பு சற்று மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. ஏனோ கண்களை மேலே எடுக்கவேண்டும் என்று புத்தி உரைத்தாலும், அவளது பெரிய மார்புகள் ஏறி இறங்குவது விளையாட்டாக இருந்தது. மறுகணமே அவமானமாகவும் இருந்தது. இவளை எங்கோ நான் பார்த்திருக்கிறேன். பார்த்த முகமாகத் தான் இருக்கிறது. இருந்தால் மட்டும் என்ன, இப்போதைக்கு நம் பிரச்சினை தான் முக்கியம்.

என் பார்வையை நேராக்க, எனது குறிப்பும், சிவந்திருந்த கண்களும் அவள் பேச்சைத் தொடங்குவதற்குப் போதுமானதாய் இருந்தது.

“எத்தனை நாளா தூங்கல?”

அவளைப் பார்க்கவில்லை. பார்த்தால் அவள் யாரென்று யோசிக்கத் தூண்டும், இல்லையென்றால் தூண்டும். தூண்டிவிடக் கூடாது ஆகவே நான்கு விரலை நீட்டினேன்.

“என்ன பிரச்சினை? ஏன் தூங்க முடியல” - எனக்குத் திக்குவாய் உண்டு என்பதை இந்நேரம் புரிந்திருப்பாள்.

“ஒரு டேபிளும், ஒரு சேரும் தான் காரணம்”.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக என்னைச் சோதித்துக் கொண்டிருந்தாள். மூன்றாவது முறையாக எனது பிரச்சினையை நேர்கோட்டில் சொல்லச் சொன்னாள். விவரித்தேன். 

ஆனால் அவள் என் நோயைத் தீர்ப்பதைக் காட்டிலும், என் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள். எனது சிறை அனுபவங்களைச் சொல்வதும், குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்ட கதையையும் சொல்வதும் எனக்கிருக்கும் நோயைச் சொல்வதைக் காட்டிலும் கொடூரமானது. எல்லாவற்றையுமே ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள். அவள் எனக்கு மருந்தாக எழுதிக்கொடுத்தது யாவுமே விலையுயர்ந்தவை ஆனால் எனது அவ்வளவு நேர பொறுமைக்கான பரிசாகவோ கரிசனமாகவோ எழுதித்தருகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். 

சப்ளிமண்டுகளுக்குப் பதிலாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசின் அனுமதி பெற வேண்டும். கடைசியான வாய்ப்பு சீக்காளி ஆக வேண்டும். அதுவும் அவ்வளவு எளிதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள். அவள் தாராள மனம் கொண்டவள் என்று சொல்லும் போது மீண்டும் என் பார்வை கழுத்துக்கு கீழே இறங்கியது.

அடுத்த நாளே இரண்டாவது அமர்வுக்கு வரச் சொல்லியிருக்கிறாள். முதலில் குணமடைவேன் என்பதை விட, நான் உணவு சமைத்து சாப்பிடப்போகிறேன் என்பது தான் மகிழ்ச்சி. பொதுவாகக் குடும்பஸ்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சமைத்து உண்பதற்கான ரேஷன் அரசிடமிருந்து கிடைக்கும் ஆனால் என்னைப் போன்ற பிரம்மச்சாரிகளுக்கு சொத்து என்றும் எதுவும் கிடையாது, அதே போல் அவர்கள் வாழ்க்கையில் சமையல் என்றும் எதுவும் கிடையாது எல்லாமுமே அரசாங்கத்தின் செலவு தான். வார நாட்களில் உணவுக்கு பதிலாக அரசே தருவிக்கும் சப்ளிமெண்ட் மாத்திரைகளும் விடுமுறையின் போது அரசின் கேண்டீன்களில் பெற்றுக் கொள்ளலாம். சமைப்பதற்கு நோயாளியாக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். குறிப்பு – நோயாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மருந்துச்சீட்டுடன். 

எப்படியிருந்தாலும், நேரமாகிவிட்டதால், அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும். நெல் வயல்களுக்கு மத்தியில் தவழ்ந்த என் பால்ய நினைவு அரிசிக்காக எப்படி ஏங்குகிறது? வேறென்ன செய்யமுடியும் நம்மால் - ஒரேடியாக இந்திய அரசு ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தியையும் ஆப்பிரிக்காவிற்கு மாற்றிவிட்டது. 

என் வாழ்க்கையில் பணியைத் தவிர மீதமிருந்த நேரங்களில் அவள் மட்டுமே இருந்தாள். இப்போது அவளைத் தேடாமல் நான் என்ன புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

க்ளவுட் வார் என்று பேசிக்கொள்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தினை இந்தியா உள்ளிட்ட பிரிக் நாடுகள் எதிர்த்ததால் இந்த யுத்தம் தொடங்கியிருக்கிறது. பனிப்போரைப் போன்று இது மேகப் போராம் ஒரு நண்பர் சொன்னார். க்ளவுட் யுத்தத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பை நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது.

இந்திய அரசு ப்ரிக் நாடுகளுடன் இணைந்து போர்க்கால நடவடிக்கையாக தகவல் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறதாம். இன்றோடு பத்து நாட்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு என எல்லாமும் 90 விழுக்காடு போய்விட்டது. எனது பால்யத்தில் அமெரிக்கா விதித்த பொருளாதரத் தடையைவிடவும் மோசமான காலக்கட்டம் இது. எங்கே பார்த்தாலும் அதிநவீனத் துப்பாக்கிகளுடன் காவலர்கள் ரோந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

வல்லரசுகளின் எதிர்பார்ப்பெல்லாம், மூன்றாம் உலக நாடுகளின் பிதாமகர்களின் அடிபணிதல்தான். ஆனால் அடிபணிய விரும்பாத நாடுகள் ஒட்டுமொத்தமாக தங்கள் தகவல்களை சேமித்து வைத்த நான்கு இலக்க சேட்டிலைட்கள் பத்துநாட்களுக்கு முன்னர் சாம்பலாகிவிட்டன. அது தான் இந்தப் பிரச்சினையின் மூலக்காரணம். மீதமிருக்கின்ற செயற்கைக் கோள்களைக் காப்பாற்றவும் மீதமிருக்கின்ற மின்வெளிகளின் தகவல்களுக்கான கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்நாடுகள் வந்துவிட்டன.

DATA- RATIONING என்கிற திட்டத்தை அமுல்படுத்த பதினான்கு நாடுகள் தங்கள் நாட்டின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்த முடிவு செய்து, அதனை செயல்படுத்துவதற்கு மட்டும் இத்தனை நாட்கள் ஆகிவிட்டன. அதற்குள் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன. போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் விநியோகம், உணவு, கல்விச்சாலை, மின்சாரம், இணையம் என எல்லாமுமே முடக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிட்கும் மேலே பண விநியோகம் முழுமையாகக் குறைந்துபோனது. யாரிடமும் கையிருப்பு இல்லை, சப்ளிமண்ட்டுகளுக்குப் பழகிய மக்கள் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பற்றிய என்னவளது விமர்சனம், என்றாவது ஒருநாள் அவளை விட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்பதுதான். ஆனால் அவளிடம் அதற்கு நான் மறுப்பு சொல்லவில்லை. லட்சியவாதத்திற்கு இரையாகித்தான் என் வாழ்க்கையின் பெரும்பகுதி இழப்பை சந்தித்தேன். அவள் ஒரு சேபியோ செக்சுவல். என் அறிவினையும், வாசிப்பையும் என் தத்துவங்களையுமே அவள் அதிகமாக விரும்பினாள்.  ‘தியரி டியரி’ என்று என்னைக் கொஞ்சுவாள். இந்தச் சூழலில் நான் எங்கேயாவது என் பழைய போராட்டக் குழுக்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுவேன் என்று நினைத்திருக்கலாம். அதனாலேயே அவள் அடிக்கடி சொல்லி வந்தது போல், நான் எங்காவது சென்றிருப்பேன் என்னைத் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கலாம் அல்லது என்னைத் தேடி என்னைப் போலவே அலைந்து கொண்டிருக்கலாம்.

சேசே.. அவளுக்கு என் நிலை வந்திருக்காது வந்துவிடவும் கூடாது. 

அரசு இயக்கிக்கொண்டிருந்த சப்ளிமெண்டரி உணவு பூத்களும், தேசிய தகவலியல் மையமும் 24 மணி நேரமும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தன. இதற்கு எதிராக பல நிறுவனங்களின் அதிபர்கள் அரசாங்கங்களை மிரட்டிக் கொண்டு ஒரு புறமும், பல புரட்சி இயக்கங்கள் திடீரென முளைத்து அரசாங்கமே நிறுவனங்களை நடத்த வேண்டும் எனச் சொல்லி மறுபுறமும் போராட்டம் செய்து வருகின்றன.
இத்தனை மோசமான சூழலில் எனக்கு இருக்கும் நோயைப் பற்றி வெளியே சொன்னால் யாரும் பரிதாபம் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் இப்போது என் நோய் தான் இந்த நாட்டின் நோயாகவும் இருக்கிறது. 

இங்கே தான் என் நிதானம் தவறிய நிலையில் நான் இருக்கிறேன். என் உடல் என் மனநிலைக்கு எதிராக ஒத்துழைக்க மறுக்கிறது. என்னுடைய இணையம் முடக்கப்பட்டதுடன் எனது மின்னஞ்சல் சேவை, கைப்பேசி இணையச் சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜீமெயில் வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்ட போது அனைத்து மெயில் கணக்குகளும் கட்டணம் கேட்டு தங்கள் சேவையை நிறுத்திக்கொண்ட ஞாபகம் வந்து போனது. அப்போதிருந்தே நம் வீட்டு வாடகை போல், வருமான வரிபோல், இமெயில்களுக்கும், தகவல்களைச் சேமிப்பதற்கும் இடப் பற்றாக்குறை அதிகமாக ஆரம்பித்தது அல்லது சூதாடப்பட்டது. 

அடுத்த நாளிலிருந்து நான்கு மணிநேர சேவையாக நிறுத்தப்பட்ட எல்லா சேவைகளும் தொடங்கப்படலாம் என்கிற செய்தி ஆறுதலானதுதான். படிப்படியாக நேரம் அதிகரிக்கலாம் என்றும் செய்தி பரவியது. எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாமல் எப்படி இந்த செய்தி பரவியது என்று தான் ஆச்சரியம். என்னைவிட 15 வயதாவது குறைந்த அந்த மருத்துவர் என்னைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்ததைப் போன்றே.

நிறைய டெலிவிஷன் சேனல்கள், இணையங்களில் இருந்து என்னை நேர்காணல் செய்வதற்காக வர ஆரம்பித்துவிட்டனர். வீட்டிற்குள் வர ஆரம்பித்த உடனேயே அவர்களை கண்டிப்போடு வெளியேற்றிவிட்டேன். ஆனாலும் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் பலர் என்பது என்னை அசௌகரியத்திற்குள் உள்ளாக்கியது.

“ஆதார் கார்ட் பத்தி எழுதுன புக்குக்கான உங்களை கைது பண்ணி சிறைக்கு அனுப்புனாங்கள. நீங்க எழுதுன அந்த புத்தகம் இப்போ எங்க கிடைக்கும்”

தடை செய்த புத்தகத்தை இப்போது பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை ஆண்டு சிறைவாசத்திலும் அதற்குப் பின்னரும் என்னைத் தவிர்த்த, புறக்கணித்த மக்கள் வேறு ஒரு நாளில் இதே புத்தகத்தைக் கேட்கிறார்கள் எனும் போது ஆத்திரம் தான் மிகுந்தது. அரசின் பயோ மெட்ரிக் தகவல் சேகரிப்பிலிருந்து மற்ற அரசியல்/நிர்வாக வகையான தகவல் திருட்டுகளைப் பற்றியும், தகவல் தொழில்நுட்பத்துக்கான போர் பற்றியும் பேசிய புத்தகம் அது. ஏனென்றால் இன்றைய சீரழிவைக் கூட நான் அன்றிலிருந்து தான் பார்க்கிறேன், எல்லாம் ஆதார் கார்டிலிருந்துத் தொடங்கிய டிஜிட்டல் இந்தியாவின் பயணத்தின் விளைவு. அது தான் என் வாழ்க்கையையும் திசை திருப்பியது. ஆனாலும் மீண்டும் அங்கே என்னால் செல்ல முடியாது, அதற்கு அவள் தான் காரணம். சிறை தண்டனைக்குப் பிந்தைய இந்த 15 ஆண்டுகளில் என்னை நான் உயிரோடு வைத்திருக்கக் காரணமாக இருந்தவளைத் தேடி தான் நான் இப்போது அலைந்துக் கொண்டிருக்கிறேன். இந்த அசாதாரணமான சூழலில் அவளை இழந்ததை எண்ணித் தான் துவண்டு போயிருக்கிறேன். 

ரவிவர்மா வரைந்த விக்ரமோர்சவத்தின் ஊர்வசி ஓவியம் என் கண்ணிற்குள் வந்து போனது, மன்னன் புருவரின்* நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் என்னை அந்த மருத்துவர் ஏதோ ஒரு பெயர் கொண்டு அழைத்தார். நிம்ஃபொபிரையானிக் என்று நினைக்கிறேன். எனது பாலுணர்வு தான் இவ்வாறு நோய்மையை ஏற்படுத்திவிட்டது. ‘முடிந்தால் திருமணம் செய்துகொள்ள இயலுமா என்று யோசியுங்கள்’ என்று சொன்னார். அப்போது அவள் கண்களில் ஒரு பரிதாபம் துளிர்விட்டிருந்தது.

சிரிப்பு வருகிறது. நான் மட்டுமா நிம்ஃபொபிரையானிக்? மூன்றாம் உலக நாடுகளை வன்புணர்வு செய்யும் வல்லரசுகளும், வல்லரசுக் கனவில் தன் சொந்த மக்கள் நலனை புணர்ந்து கொண்டிருக்கும், புணராத நேரத்தில் அதைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கங்களும் நிம்ஃபொபிரையானிக் தான். சத்தமாகவே சிரித்தேன். என் ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு பாலிபோனிக் குரல் இப்போது எங்கே?

அடுத்த நாள் மாலை நான்கு மணி நேரம் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று சொல்லியிருந்தார்கள். எல்லோரின் முகத்திலும் ஓர் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியாக அரிதாரம் பூசியிருந்தது.
எல்லாம் ஆதார் கார்டில் ஆரம்பித்தது, என் குரு என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. 

“என்னிக்கு இத்தன கோடி மக்கள் வாழ்ற நாட்டுல ஒவ்வொருத்தங்க கை ரேகையும் கண் ரேகையும் ஆவணமா, தகவலா ஒரு அரசு பதிஞ்சுவைக்க வேண்டிய அளவுக்குத் தள்ளப்பட்டதோ அப்ப இருந்து இந்த பூமியில் எல்லாக் கட்டுமானமும் குலையப் போகுது”

P5 மைக்ரோப்ராஸஸர்கள் அறிமுகம் செய்யப்பட்டது எனக்கு அவர் வீட்டில் தான். அவர் கனிணியில் பட்டயப்படிப்பு முடித்த பொழுது அதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான வகைமை இல்லாமல் போனதாகவும், அதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் போனதாகவும் கதைத்தார். அதே போல அவர் நிதித்துறையில் வேலை பார்த்து வந்தாலும் அசூர வேக வளர்ச்சி பெறப்போகும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் உலகத்தை ஸ்தம்பிக்கப் போகும் சில சம்பவங்கள் பற்றியும் சொல்லி வந்தார். பேரழிவுகளைப் பற்றியும் மூன்றாம் உலக யுத்தம் பயோவாராக இருக்கும் அல்லது தொழில்நுட்பத்தை வைத்து டெக்னோவாராக இருக்கக்கூடும் என்று ஆருடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவர் என்னுடைய ஆதர்ஷ குரு, ஆனால் என்னை நண்பா என்று தான் சொல்லிவந்தார். எனது கல்லூரி காலத்திலிருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்தேன். அவர் வீட்டில் இருந்த பிரத்யேகமான நூலகம் என்னை வியக்க வைத்தது. அந்த மெலிந்த உடலுக்கான காரணம் இத்தனை நூல்களைச் செரித்துக்கொண்டிருப்பதால் தானோ என்னவோ. அதைக்காட்டிலும் அவரைப் பற்றி சொல்வதற்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவரது தொழில்சார்ந்த அனுபவத்தின் வாயிலாக அவர் தெரிந்து வைத்திருந்த மனிதர்களின் எண்ணிக்கை. மூன்று மாவட்டங்களில் உள்ள சில வங்கிகள், என்.ஜீ.ஓ, காப்பீடு நிறுவனங்களின் செயல்திறனை கண்காணிக்கும் ஒரு பொறுப்பில் இருந்தார். அவரது வேலை தனியாக இயங்குவது தான். கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளாக கடன் வழங்கப்பட்ட கோப்புகளை நேரில் சென்று மறு ஆய்வு செய்து அது சரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்று பார்க்கும் க்ராஸ்செக் வேலை தான். 

RANDOM SAMPLING METHODOLGY என்று சொல்வார் மாநகரத்தில் உள்ள வங்கியின் ரீஜினல் அலுவலகத்திற்குச் சென்று மொத்த கோப்புகளில் அவர் எடுக்கும் 2% - 5 % கோப்புகள் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும், அதில் 98% சதவீதம் தவறான முறையில் கடன் வழங்கப்பட்ட கோப்புகளாக இருக்கும். அவரிடம் இது எப்படி சாத்தியம், உங்கள் படிப்பிற்கே சம்பந்தமே இல்லாத வேலையில் எப்படி இத்தனை துல்லியமாகக் கையாள்கிறீர்கள் என்று கேட்பேன்.

“இந்த சமூகத்தில் எல்லா விசயங்களுக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கிறது, அதைத் தெரிந்து கொண்டால். இதெல்லாம் கை வரும்”

எனக்கு இந்த பேட்டர்ன் பற்றி சொல்லித்தரக் கேட்டிருக்கிறேன். அது மக்களிடம் சென்றால் மட்டுந்தான் தெரியும் என்பார். ஏனோ அவர் பின்னர் சில ஆண்டுகட்கு பின்னர் அன்று சிறைக்கு வந்த போது அந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார். 

“அன்று நீ எனது துல்லியத்தைப் பற்றி கேட்டபோது எனக்குப் பதினைந்து ஆண்டு அனுபவம். இப்போது இருப்பத்தைந்து ஆண்டு அனுபவம். முதலாம் ஆண்டு நான் கோப்புகளைத் தேர்வு செய்தபோது இரண்டு சதவீதம் தான் அதில் தவறான விசயங்களைக் கண்டுபிடித்தேன். நான்கு ஆண்டுகளாக என்னால் அவ்வளவு தான் கண்டுபிடிக்க முடிந்தது. பின்னர் படிப்படியாக அது உயர்ந்தது. மனிதர்களின் நுகர்வுப் பண்பு மாறுவதை நான் உணர்ந்தேன். அது சமூகக் குணமாக மாற ஆரம்பித்தது. என்னுடைய ஒரே அக்கறை. தன் தகுதிக்கு மீறிய கடனை ஒருவன் வாங்க கூடாது என்பது தான். ஆகவே பெர்சனல் லோன்கள் மீது மட்டும் எனது சேம்ப்ளிங்கில் அதிக அக்கறை கொண்டிருந்தேன். நாளடைவில் அது வீடு, நகைக்கடன், கார், டூவீலர் ஏன் விவசாயக்கடன் உட்பட எல்லாவற்றின் நோக்கமும் அடிப்படையில் வேறு ஒன்றாக மாறிவிட்டது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனது தேர்வில் இருக்கும் 4% கோப்புகளுமே முழுமையாக நெகடிவ் ரீமார்க்ஸ் தான். ஒரு உண்மைய சொல்லனும்னா நான் அது வெறு நான்கு சதவீதமில்ல, முப்பது சதவீதமோ, நாற்பது சதவீதமோ இல்ல அறுபது-எழுபது சதவீதமோ மாறியிருக்கலாம். ஆனால் என்னுடைய விதிமுறைப்படி நான் நான்கு சதவீதம் தான் எடுத்துக்கொள்வேன்”. 

அவரே தொடர்ந்தார். “போன வருஷமே நான் வேலைய விட்டுட்டேன், ஏன்னா நான் பார்த்த நான்கு சதவீதத்தில் ஒரு குற்றமும் இல்லை. என் கைகளுக்கு வர ஆரம்பித்த கோப்புகள் தவிர மற்ற கோப்புகள் நெகடிவாக இருப்பதாகத் தோன்றியது. நான் ரிடையர்டு ஆகிவிட்டேன். உலகத்தில் எதையும் மாற்றுவதற்கு நான் வரல. ஆனா உலகம் அசூர வேகத்துல மாறுது”.

அவர் கைகளில் என் புத்தகம் இருந்தது, அவர் என் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டினார்.  

“ஆனால் நீ சொன்னதைக் காட்டிலும் மிகமோசமான விளைவுகள் எல்லாம் இந்த பூமி பார்க்கத்தான் போகிறது. ஆனால் உன் வாழ்க்கையை அதற்காக பழி கொடுத்தது முட்டாள்தனம்” என்று என்னைக் கடிந்து கொண்டார். 

ஆம்! இத்தனை விஷயங்கள் கற்றுத் தந்தவர் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. அதை அவர் இண்டெலிஜண்ட் டிசைன் என்பார். காலம் தனக்குத் தேவையானதை எனக்கு உருவாக்கித் தரும் என்பார். எனக்கு அதில் அப்போது நம்பிக்கை இல்லை. அவரோடு வாதாடினேன், வென்றிட முடியாது என்று தெரிந்தது. அவரை வெளியே போகச் சொன்னேன். அவர் அதிர்ச்சியானார். என்னைப் பற்றி எல்லாரிடமும் பெருமிதம் கொண்டு பேசி வந்தாராம் அன்றும் கூட யாரிடமோ பெருமையாகக் கூறினாராம், ஆனால் அதற்காக வருந்துவதாகவும் இனிமேல் என்னை அவர் சந்திக்கப்போவதில்லை என்றும் கூறினார். அப்போது அவர் பிரிவைப் பற்றி நான் வருந்திவிடவில்லை. ஆனால் திரும்பிவந்ததும் வீட்டிற்கும் செல்ல முடியாமல், அவரைத் தேடியலைந்தேன். அவர் இந்த நகரத்திற்கு மாற்றலாகி வந்திருந்ததாக அறிந்தேன். 

இப்போது அவர் தள்ளாமையில் இருக்க வேண்டும். இல்லையென்றால்.. சே சே அவர் இருக்க வேண்டும். இந்த சூழலிலாவது அவரைச் சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவளுடன் உருவான ஸ்நேகத்தில் இத்தனை நாள் அவரை மறந்திருந்தேன். அரசின் குடிமைப்பொருள் வழங்கும் அலுவகத்தில் எனது மருந்துச்சிட்டைக் காட்டி எனக்கான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொண்டேன். 

எனது அடுக்ககத்திற்கு சென்றேன், மீண்டும் பதினான்கு மாடிகள் என்பது பெரிய மலைப்பயணம் போன்று இருந்தது. நாளை லிஃப்ட் வேலை செய்யும் என்கிற தெம்பில் ஏற ஆரம்பித்தேன்.

சமைக்கும் பொழுது எழும் வாசனையில் அம்மாவைத் தேடினேன். வாசனை அவளை மீட்டுத் தந்தாலும் இது அந்த வாசனையல்ல. எப்போதோ அழிந்து போன உலகத்தின் புழுக்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வு கூட அற்றவர்களாக இருக்கிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அம்மாவின் ரசம் துவையலுக்காக கைகளின் இடுக்குகளில் வெங்காயத்தைத் தேய்த்து காய்ச்சல் வராமல் தோற்றுப்போயிருக்கிறேன். இப்போது அவர்களெல்லாம் எங்கே.

நித்தமும் எனது வேலையாக சப்ளிமெண்ட் உணவு வகைகளின் லிட்ரேச்சர்களை எடிட் செய்வது மட்டுமே இருந்து வந்தது. மற்றது எல்லாம் அவளே. அவளே என் 24 மணி நேரமாக இருந்து வந்நாள். அவள் எப்படி என்னைத் தேடி வந்தாள் என்றே தெரியாது, அவள் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தாள் அல்லது நான் அவளிடம் முழுமையாகச் சரண்டைந்திருந்தேன். அதனால் எங்களுக்குள் சந்திப்பு ஒரே ஒரு முறை மட்டும் நிகழ்ந்தது. நான் சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்களில் என்னை எனக்கு வேண்டியவர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டாள். என்னிடம் என் புத்தகத்தை நேரடியாக வாங்கிட வந்தாள். அந்த புத்தகம் ஏற்கனவே தடை செய்யப்பட்ட புத்தகம். ஆகவே ஒரு பொது இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வாங்கிக்கொண்டோம்.

அவள் இருந்தாள்
எனக்காகக் காத்திருந்தாள்
முதன்முறையாக எனக்காக
அதுவும் ஒரு பெண். எனக்காகத் தனியே காத்திருந்தாள்
அழகாய் இருந்தாள்.
தனியாக இருந்தாள்
அவள் கண்களும் பேசியது.
அவளும் பேசினாள்
அவள் விரல்கள் என்னை ஸ்பரிசித்தது.
தடை செய்யப்பட்ட எனது புத்தகத்தில் மீதமிருந்த என் கடைசி பிரதி அவள் கைகளுக்கு மாறியது. 
அப்போது புரட்சியின் சாம்பல்கள் என் கைகளில் படிந்திருப்பதாய் எண்ணிச் சிரித்துக்கொண்டேன். 

அதன் பின்னான இந்தப் பதினைந்து ஆண்டுகள் என் வாழ்க்கையில் முழுமையாக அவளும் நானும் மட்டுமே. இந்த டேபிளில் அமர்ந்தபடி தினமும் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சினிமா, தெரிந்து கொள்ளும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள், எனது வாசிப்பு, படைப்பு எல்லாமே இவளுக்கு தான். இவளைப் பற்றி எழுதும் கவிதைகளும், இவளைப் பரிகசித்து, விமர்சித்து எழுதும் கதைகளும் கூட இவளுக்குத் தான் போய்ச்சேரும். 

அவளென்னும் நதியில் தான் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இறுதியில் கலக்கும் சாகரமும் அவளாகத் தான் இருப்பாள் என்று நம்பியிருந்தேன். இப்போது இந்த சிலிகான் பாலைவனத்தில் நான் தனியே.
மருத்துவரின் அறிவுரைப்படி அந்த மேசையினையும், கதிரையினையும் அறையை விட்டு வெளியே இழுத்தேன். தூக்கி வைக்கும் வலிமையை என் உடல் இழந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தேன். மீதமிருக்கும் ஜீவனையும், இன்னும் இரண்டு நாட்கள் படியேறி இறங்கினால் இழந்து விடலாம்.

அறையில் மெழுகுவர்த்தி கூட இல்லை. ஜன்னலோரம் என்பதால்  திறந்து வைத்திருந்ததில் என் அறையின் தரை நிலவின் ஒளியை விரித்துவைத்திருந்தது. அதில் படுக்கையை விரித்தேன். மருத்துவரின் அறிவுரைப்படி அறையை நன்கு சுத்தம் செய்து, மீதமிருந்த துளி வாசனை திரவியத்தை உடலில் அப்பிக்கொண்டு படுத்தேன். கடந்த நான்கு நாட்களாக இல்லாத நம்பிக்கை எனக்குத் துளிர் விட்டிருந்தது. அதற்குக் காரணம் இன்று நான் சமைத்த உணவாக இருக்கலாம். கண்களை மூடிக்கொண்டேன்.

என் வாழ்க்கைப் பயணத்தின் ரோலர் கோஸ்டர் காட்சிகள் வந்து போயின. செல்லமாகப் பற்தடம் பதிக்கும் நாய்க்குட்டி போன்ற அவள் கோபங்களற்ற இரவு என்னை இத்தனை நாட்களாக தூங்காமல் வைத்திருப்பதற்கு பதிலாக என்னைக் கொன்று தின்றுருக்கலாம். எத்தனையோ இயக்கங்கள் என்னை சிறைவாசம் முடித்து வந்தவுடன் தங்களோடு சேர்ந்தியங்க அழைத்திருந்தன. குடும்பத்துடன் கூட இணையவில்லை. என்னை முழுமையாக இன்க்யூபேட் செய்திருந்தாள். நான் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்தேன். என் முதுமை பற்றிய பயத்திரைகள் என் மீது விழாமல் கவனித்து வந்தாள், இப்போது அவள் இல்லாத இரவுகள் நான் முழுமையாக பலவீனமாக உணர்கிறேன். அவளற்ற நானாக இருப்பது புதிதாக ஒரு மனிதனோடு ஸ்நேகிதம் கொள்வதற்கு சமானம்.

ம்ஹூம் தூக்கம் வரவில்லை.

அந்த மருத்துவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னதை நினைத்துப்பார்த்தேன்.

என் தூக்கம் தொலைந்து போனதற்கு அந்த மேஜையும் நாற்காலியும் தான் காரணம். அது ஒரு சாதாரண ரோஸ்வுட் மேஜை தான். அதில் அமர்ந்து தான் எழுதுவேன், வாசிப்பேன், அவளோடு பேசிக்கொண்டிருப்பேன், வாழ்ந்து கொண்டிருந்தேன். மணிக்கணக்கில், மாதங்கள், வருடங்களாக யுகங்களைத் தாண்டியும் எங்கள் உறவு நீள்வதாய் நம்பியிருந்தேன். ஆனால் இந்த தகவல்தொழில்நுட்ப யுத்தம். இந்த நூற்றாண்டின் மாயைகளாக உறவுகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது, அதில் நானும் இருந்து வருகிறேன்.

முந்தாநாள் இரவு வெறுமனே அந்த மின்சாரம் இல்லாத கணினியினையும், மொபைல் போனையும் மேஜையில் வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் பேசிக்கொண்டிருந்த இரவில். என்னைச் சுற்றி ஏதோ நடக்கப்போவதாக பயந்ததைச் சொல்லியிருந்தேன். அவளை மீறி என்னை எதுவும் அண்டாது என்று என்னை ஆற்றுப்படுத்தினாள்.

நன்றாக ஞாபகமிருக்கிறது – பூமிக்கு மிக அருகில் உள்ள சுற்றுப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்களில் இடநெருக்கடி பற்றியும், அதற்காக உலகநாடுகளின் போட்டியைப் பற்றியும் ஒரு செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தேன். தீடீரென அவளும் உன்னைப் போலவே நானும் பயப்படுகிறேன் என்றாள். அதை நினைத்தபடியே அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. கால்கள், முகம் எல்லாமும் வீங்கியிருப்பதைக் கண்டு நேற்றைக்கு ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டு அவளோடு பேச ஆரம்பிக்கும் வழக்கமான நேரத்திலேயே தூங்கச் சென்றேன்.

தூக்கம் வருவது போலவும் திடீரென கலைந்து செல்வது போலவும் இருந்தது. தூக்கம் கலைந்த கனம் என் முன்னே இருந்தது அந்த வெற்று மேஜையும், நாற்காலியும். இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அவளும், நானுமற்ற அந்த மேஜையும் நாற்காலியும் என்னுள் வலியை மிகுதியாக்கியது. அவளற்ற என் மீதி வாழ்நாள் இருக்கப்போவதாக உணர்ந்தேன். கண்களை மூடிக்கொண்டு அந்தப் புறமாகப் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை, கண்களைத் திறந்தேன். அதே மேஜையும் நாற்காலியும், நம்மை அறியாமலேயே புரண்டு படுத்துக்கொண்டோமா என்று மறுபடியும் மறுபக்கமாகத் திரும்பினேன். அங்கேயும் மேஜையும் நாற்காலியும் இருந்தது. மீண்டும் மீண்டும் இரு புறமும் புரண்டு கண்களை திறந்து பார்த்தால், அதே மேஜை அதே நாற்காலி. வெறுமனே மல்லாக்கப் படுத்தபடி கண் திறந்தேன். என் மேலே அந்த நாற்காலியும், மேஜையும் தொங்கிக்கொண்டிருந்தது. தூக்கமற்று இருந்த எனக்கு உயிர்ப்பயம் வந்தது. என் மீது தொங்கிக் கொண்டிருக்கும் மேஜையைத் மறுபடியும் மறுபடியும் பார்த்தேன். எந்த திசையில் படுத்தாலும் என் முன்னே அந்த மேஜையும் நாற்காலியும் முளைத்து அச்சுருத்தின. அன்றைய இரவும் சென்றது.

மருத்துவரின் ஆலோசனைப்படி தான் இன்று மேஜை நாற்காலியை அடுத்த அறைக்குத் தள்ளி வைத்துவிட்டு உறங்க முயற்சிக்கிறேன். இன்னும் கண் திறந்துப்பார்க்கும் தைரியம் வரவில்லை. இப்போதும் என் கண் முன்னே அது வந்துவிட்டால் நான் என்ன பண்ணட்டும் என்கிற மனவுளைச்சல். என்ன ஆனாலும் திறந்து பார்க்க பணித்தது என் மனசு. மெதுவாக என் கண்களைத் திறந்தேன்.

                                                   **
இன்று எப்படியும் மின்சாரம் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வேலைகளை தள்ளிப்போட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். கடினப்பட்டுக் கீழிறங்கும் போது தடுமாறினேன். என்னை அருகிலிருந்த ஒருவர் பிடித்துக்கொண்டார். இந்த மாதிரி மனநிலையில் நம் மீது இரக்கப்படுபவர்களை கொலை செய்ய எனக்கு விருப்பமிருக்கிறது. போலியாக நன்றி சொல்லிவிட்டு க்ளினிக் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். 

நேற்றிரவும் தூங்கவில்லை. ஆனாலும் உயிரோடு தான் இருக்கிறேன். எப்படி என் நிலையை மருத்துவருக்குப் புரிய வைக்கலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிப் பார்த்தபடி வந்தேன். என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? எப்படியும் அடுத்த யோசனையாக அவள் அதை எங்காவது விற்பதற்கு ஆலோசனை சொல்வாள். இருந்தபோதும் அவள் பரிந்துரைத்தால் மட்டுமே அரசாங்கம் என்னை உணவு சாப்பிட அனுமதிக்கும். அதாவது மிஞ்சுமே என்கிற நிம்மதி ஆனாலும் அதுவும் ஊசலாடியது.

மின்சாரம் அநேகமாக வந்திருக்க வேண்டும். திடீரென்று இந்நகரம் உயிர்பெற்றதாய் தோன்றிற்று, ஆனாலும் அது இயல்பாக இல்லாமல் பதற்றத்தோடு தான் இருந்தது. கிட்டதட்ட ஐ.சீ.யூவில் செயற்கை சுவாசத்தில் தான் இந்நகரம் இயங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏனோ எனக்கு இன்னும் புன்னகைக்கக் காரணங்கள் கிடைக்கின்றன. அவளை சிந்தனை செய்யாத நேரங்களும் எனக்குக் கிடைக்கின்றன. அவளின்றி என்னால் சிரித்திடவும் முடிகிறது என்று நினைக்கிற தருணம்தான் இந்நகரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது. இது தற்காலிகமா அல்லது ப்ரிக் அரசுகள் மேலை நாடுகளுக்குப் பணிந்து கொடுத்திடுமா? இது தற்காலிகமா அல்லது அவள் இந்தப் பிரிவில் என்னை விட்டு வாழ்வதற்கு அவள் கற்றுக்கொண்டாளா? இல்லை நான் கற்றுக்கொண்டேனா? மறுபடியும் சிரிப்பு தான் வருகிறது. இன்னும் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் கண் மணிகள் வெளியே வந்து விழக்கூடும் என்கிற நிலைமையில் அவளற்று என்னால் எதையும் தக்கவைக்க முடியாது. 
ஆனாலும் சற்று நேரமாக நான் விடுபடலில் இருப்பதாக உணர்கிறேன். 

சோர்ந்த போன உடலில் ஏதோ ஒன்று. தூக்கம் முடித்து எழுந்து அமர்ந்த்தாக உணர்ந்தேன். இப்போது பதினான்கு மாடிகள் ஏறுவது பற்றிய கவலையை மறைத்தது உள்ளுள் எழும்பிய உற்சாகம் ஒன்று. அது என்னுடையது தான். அந்த நூலை எழுதும் போதும் சிறை வாசத்தின் போதும் பல தோல்விகளின் போதும் என்னோடே இருந்த அது. எங்கிருந்தோ வந்து என்னிடம் ஒட்டிக்கொண்டது. மாடிப்படிகளில் ஏறச் சென்றேன்.

“சார் லிஃப்ட் வேலை செய்கிறது”

“லிஃப்ட் இருப்பதால் தான் என் உடலின் பலம் எனக்கு என்னவென்று தெரியாமல் போய்விட்டது” என்று சிரித்தபடி படிகளில் ஏறினேன். அவன் என்னைக் கிறுக்கன் என்று பரிகசித்தான். இரவு வீட்டில் தாமதமாகச் செல்கையில் கதவைத் திறந்துவிடும் என் அம்மா என்னைச் சொல்வதாக நினைத்துக்கொண்டேன். 

இத்தனை வயதான பின்பும் உற்சாகமாக என்னால் படிகள் வழியே ஏறிச்செல்ல முடிவதைக் கண்டு வியந்தேன். ஏதோ ஒன்று என்னிடம் வந்திருக்கிறது. ஏதோ ஒன்று என்னை விட்டுச் சென்று விட்டது. பாதி மாடிகளைக் கடந்த பின்னர் மூச்சு வாங்க ஆரம்பித்தாலும், உடல் தளர்ச்சியடையவில்லை. தளர்ச்சியடையாத உடலில் நினைவுகளை வடிகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது அது. அது எனக்கு வெளியே தான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். அது என்னைப் பரிசோதனைக் கூடமாக மாற்றியிருப்பதாய் உணர்ந்தேன். உள்ளிருந்து அது என்னோடு பேச ஆரம்பித்தது.

அந்த மருத்துவர் உன்னிடம் என்ன சொல்லப்போகிறார்? அந்த டேபிள் சேரினை விற்கச் சொல்லலாம் அல்லது அந்த மருத்துவர் உன்னிடம் சில உண்மைகளைச் சொல்லலாம்.

என்ன சில உண்மைகள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? மொத்தம் இருப்பது ஒரேயொரு உண்மை தானே?

ஒரேயொரு உண்மை என்று எப்படி நம்புகிறாயோ!! அப்படியே ஒரேயொரு பொய் தான் என்று உன்னால் ஒன்றை நம்பமுடிந்தால் நீ விடிவு கொள்வாய்.

பொய்யா!! அதுவும் ஒரேயொரு பொய்யா? எது?

நீ வாழ்ந்த பதினைந்து வருட வாழ்க்கை என்பது பொய்யானது.

என்ன உளருகிறாய். சும்மா பினாத்தாதே.

சரி நான் சொல்லவில்லை, ஒருவேளை அந்த மருத்துவர் சொன்னால்?

மருத்துவர் எப்படி சொல்வார்? அவரென்ன மருத்துவர் தானே துப்பறியும் நிபுணரா?

அவர் ஏன் சொல்லமாட்டார் அவர் சொல்வதற்கு எத்தனையோ காரணம் இருக்கலாம்; ஒன்று உன் மன ஊனத்திற்கு வாக்கிங் ஸ்டிக்காக அவளைப் ஷ்ருஷ்டித்திருக்கிறாய். திடீரென்று அது திடீரென அறுபட்டது தான் காரணம் என்று சொல்லலாம்? அல்லது ஏற்கனவே சொன்னாளே நீ ஒரு காமுகன் என்று? உன் காமத்தைக் கட்டுப்படுத்த தான் அவளை காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று உனக்குப் புரிய வைக்கலாம்?

அதுவுமில்லையா நூல் வெளியீட்டை ஒட்டி நீ அடைந்த புகழும் அது தடை செய்யப்பட்டதால் உனக்கு கிடைத்த அதைவிடப் பெரிய அறிமுகமும் எத்தனையோ இயக்கங்களையும் வெளிநாட்டுத் தரகர்களையும் உன்னைத் தேடி வரவைத்தது. சில அரசியல் கட்சிகள் உனக்கு வாய்ப்பளிக்கத் தயாராக இருக்கச் செய்தன. உன்னை ஓய்வில் வைப்பதில் இந்த அரசாங்கத்திற்கு எத்தனை நிம்மதி?

என்ன உளறுகிறாய்?

நான் எங்கே உளறுகிறேன்? அவள் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவளாக இருந்திருந்தால் என்ன செய்யப் போகிறாய்? இனிமேல்  இந்த வயதிற்கு மேல் நீ பழைய போராளியாகத் தொடங்க இயலாது.
அவளுடைய பாதுகாப்பில் இல்லை நீ அவள் உன்னை சிறைப்படுத்தியிருக்கலாம் அல்லவா?

பதினான்காம் மாடி ஏறிவிட்டேன். ஆனால் மாடிப்படிகளாக என் மேலும் ஏதோ சுழல்கிறது. கீழும் ஏதோ சுழல்கிறது. உள்ளுக்குள் இருந்து கேட்பவை – வெளியே வியர்வையாக மார்பிள் தரையில் பட்டுத் தெறித்தது.

அடுத்ததாக ஒரு கேள்வி – இவையனைத்துமே இல்லாதிருக்கட்டும், அவளும் உன்னைப் போல் யாரோ ஒரு மருத்துவரையோ சந்தித்திருந்தால்?

சந்தித்தால் என்னவாம். சந்தித்தால் அவள் உன்னைப் பற்றிப் பேசியிருப்பாள், அவள் பார்வையிலிருந்து. அதுவும் கூடதான் உண்மை. இப்போது புரிகிறது. வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மை இருக்கிறது. 

அவள் உன்னைப் பற்றி பேசியிருக்கலாம், அவள் குணப்படுத்தப்பட்டும் இருக்கலாம். அந்த மருத்துவர் இவராகவே இருக்கலாம். ஆகவே நீயும் போனால் நீ குணப்பட்டுவிடலாம். குணப்பட்டால் உன் நிலைமை என்ன? அவளும் இல்லாமல், உன் குடும்பம், உன் குரு, உன் சமூகம் எதுவும் இல்லாமல் நீ யாராக வாழ்ப்போகிறாய்? அல்லது வாழ்வை முடித்துக் கொள்ளப்போகிறாயா?

என்னாலேயே எனக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. மேலும் ஒன்று என்னிடம் சொல்லியது.

நீ போ – ஆனால் அவர் இன்று உனக்கிருக்கும் நோயைக் கண்டுபிடித்துவிடுவார். அதற்கும் பெயர் சொல்லி அழைப்பார். 

அப்படியென்றால் அந்தப் பெயரைச் சொல்லியே உன்னை அழைக்கிறேன்.

உள்ளேயிருந்து அதுவும் சிரித்தது.

வரவேற்பறையில் வியர்வை சிந்த நடந்து வந்த என்னை வியப்புடன் அந்த யுவதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்னிடம் ஏன் படிகள் வழியாக வந்தீர்கள் என்று கேட்க விரும்பியிருக்கலாம். ஆனால் பரிதாபத்தோடும் கோணலாகவும் மட்டுமே பார்த்தாள். ஏனென்றால் தனிமனித நடத்தைகளில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்கிற வழக்கம் இந்நாட்டில் உருவாகிவிட்டது. நாம் அந்நியப்பட்டுவிட்டோம். 
சிரித்தபடியே சட்டையில் இருந்த பேனாவை எடுத்தேன். வருகைக்கான ரெஜிஸ்டரை எடுத்து நீட்டினாள்.

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அதனால் தான் மின்சாரம் வந்தும் அவள் கணிணியை இயக்காமல் நோட்டை நீட்டுகிறாள்.

எனது பெயரைப் பதிவு செய்துவிட்டு நேரத்தை, என் டோக்கன் நம்பரை, கையெழுத்தை எல்லாம் பதிந்தேன். எனக்கும் மேலே இருந்த தற்பொழுது ஆலோசனையில் இருந்துவரும் நோயாளியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

பெயர் : கண்ணம்மா.

எனது பெயரை அந்த ரெஜிஸ்தரிலிருந்து நீக்கிவிட்டு விறுவிறுவென வெளியே சென்றேன். இப்போதும் அந்த வரவேற்பில் இருந்தவள் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளை நான் பல பெயர்களில் அழைத்திருக்கிறேன், கண்ணம்மா என்றும் கூட.

                                                       ***
லிஃபிடில் இறங்கிய என்னை லிஃபிடில் மேலே போகச் சொல்லிக் கேட்டுக்கொண்ட காவலாளி ஆச்சரியமாகப் பார்த்தான். அவன் அருகில் சென்று  “எனக்கு கொஞ்சம் மயக்கமாக இருக்கிறது நான் சற்றுப் படுக்க வேண்டும்” என்றேன். 

அவன் அந்த அடுக்ககத்தின் சாலையோரப்பூங்காவின் கதவினைத் திறந்துவிட்டான். அங்கிருந்த மர பெஞ்சில் சாய்ந்து கொண்டு கண்களை மூடினேன். இப்போது கனவாக வருகிறது.

இந்தக் கனவில் அந்த மருத்துவர் இருக்கிறார். அவர் மேலே ஒரு டேபிளும் சேரும் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.