Feb 28, 2017

மருத்துவம்

தடுப்பூசி விவகாரத்திற்கான விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாரம்பரிய மருந்துகள், சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றை சிலர் கடுமையாகத் திட்டி எழுதியிருந்ததை வாசிக்க முடிந்தது. பஞ்சகவ்யம், அர்க் உள்ளிட்டவைதான் செமத்தியாக அடி வாங்கின .‘கோமியத்தைக் குடித்தால் கேன்சர் சரியாகுமா மடையனுகளா?’என்று எழுதியிருந்தார்கள். கேன்சர் சரியாகுமா என்று தெரியவில்லை. ஆனால் பஞ்சகவ்யத்தையும் அர்க்கையும் நாம் போகிற போக்கில் உதாசீனப்படுத்த வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அவர்கள் சொன்னார்கள்; இவர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் அடுத்தவர்களைக் கைகாட்டவில்லை. நேரடியான அனுபவமிருக்கிறது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக அப்பாவுக்கு உடல்நிலை வெகு மோசமாகியிருந்தது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்தோம். பரிசோதனைகளையெல்லாம் பார்த்துவிட்டு அங்கேயிருந்த மருத்துவர் சுதாகர் வேறு சில மருத்துவர்களிடமும் ஆலோசனை செய்துவிட்டு எங்களை அவரது அறைக்குள் அழைத்தார். தம்பி, நான், மாமா ஆகியோர் மட்டும் இருந்தோம். 

‘இனி எதுவும் செய்வதற்கில்லை. வேறு எந்தச் சிகிச்சையளித்தாலும் பலனிருக்காது. வீட்டுக்கு ‘எடுத்துட்டு’ போய்டுங்க’ என்றார். எவ்வளவுதான் சிரமம் என்றாலும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வேடிக்கை பார்க்க எப்படி மனம் வரும்? கோபியில் உள்ள அபி மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். ‘கிட்டத்தட்ட கோமா’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

மாமனாரின் தம்பி அடிக்கடி மன்னார்குடிக்கு வணிகக் காரணங்களுக்காக சென்று வருகிறவர். மன்னார்குடிக்கு பக்கத்தில் லட்சுமாங்குடியில் ஒரு கோசாலை இருக்கிறது. அங்கேயிருந்து பஞ்சகவ்யமும் அர்க்கும் வாங்கி வந்திருந்தார். ‘இதைக் கொடுங்க மாப்பிள்ளை’ என்று கொடுத்தார். சத்தியமாக எனக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கையில்லை. முதல் இரண்டு நாட்களுக்கு அது மட்டும்தான் கொடுத்தோம். நீராகாரம் கூட வாங்கிக் கொள்கிற நிலையில் இல்லாதவர் இரண்டு அல்லது மூன்றாம் நாளில் மெல்ல வாயைத் திறந்து விழுங்கினார். பஞ்சகவ்யமும் அர்க்கும் கடுமையான வாசனையைக் கொண்டவை. குடிப்பது அவ்வளவு எளிதில்லை. வாயில் ஊற்றும் போதெல்லாம் முகத்தைச் சுளித்தார். கடைசி தருணத்தில் அவரைக் கொடுமைப்படுத்த வேண்டியதில்லை எனத் தோன்றியது. மாமனாரிடம் என்னுடைய கவலையைச் சொன்ன போது ‘இன்னும் ஒரு நாள் கொடுங்க...வேண்டாம்ன்னா நிறுத்திடலாம்’ என்றார். ஆனால் அன்றைய இரவே அப்பாவுக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. ஹார்லிக்ஸை ஸ்பூனில் ஊற்றினார்கள். குடித்தார். அதன் பிறகுதான் பிற வைத்தியங்கள் ஆரம்பமாகின. அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு நடமாடினார். உணவு உண்டார். தானாகவே மருத்துவமனைக்குச் செல்கிற அளவுக்குத் தேறியிருந்தார்.

ஈரல் பரிசோதனை அடுத்த இரண்டு மாதங்களில் சராசரி அளவுகளைத்தான் காட்டியது. ஆறு மாதமாக தொடர்ந்து எடுத்த பரிசோதனை முடிவுகள் இன்னமும் இருக்கின்றன. இயல்பாகத்தான் இருந்தார். ஆனால் வேறொரு பிரச்சினை உருவாகியிருந்தது. வயிறில் நீர் கோர்த்துக் கொண்டேயிருந்தது. (ascites). ஊசி வைத்து நீரை உறிஞ்சி எடுக்கும் போது இரத்த அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் அப்பாவை இழந்துவிட்டோம் என நினைக்கிறேன். மருத்துவர்களிடம் பேசினால் வேறு ஏதாவது சொல்லக் கூடும். ஆனால் ‘கிட்டத்தட்ட கோமா’ என்ற நிலையிலிருந்தவருக்கான தொடக்கத்தை பஞ்சகவ்யமும் அர்க்கும்தான் கொடுத்தன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால் இடைப்பட்ட இரண்டு அல்லது மூன்று தினங்களில் அதைத்தான் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருந்தோம். அதை மட்டும்தான்.

நோயைக் குணப்படுத்துகிற தன்மையும் வலுவும் இல்லாததாக பஞ்சகவ்யமும் அர்க்கும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உதாசீனப்படுத்த வேண்டியதில்லை என்றுதான் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பொதுவெளியில் இதை எழுதினால் யாராவது நக்கலடித்துக் குறுக்குக் கேள்விகள் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்கிற அளவுக்கு என்னிடம் மருத்துவ அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நேரடி அனுபவம் இதுதான். பஞ்சகவ்யத்துக்கும் அர்க்குக்கும் வக்காலத்து வாங்குவதால் எனக்கு பைசா பிரயோஜனம் இல்லை. ஆனால் அனுபவப்பூர்வமாக பார்த்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன்.

ஏதோ நல்ல விளைவு இருக்கிறது என்று தெரிகிறது. ஏன் விளைவு ஏற்படுகிறது? நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறதா? என்கிற விவரமெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. ‘தினமும் இவ்வளவு குடுங்க’ என்ற கணக்கெல்லாம் எதுவுமில்லை. நாமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

இத்தகைய பிரச்சினை தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளுகளுக்கும் உண்டு. சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் சித்த மருத்துவ முறை திணறிக் கொண்டிருக்கக் காரணம் என்று முழுமையாக நம்பலாம். உதாரணமாக இருதயத்துக்கான அலோபதி மருத்துவரிடம் நம்முடைய நுரையீரல் பிரச்சினையைச் சொன்னால் அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் ‘நீங்க Pulmonologist ஐ பாருங்க’ என்று அனுப்பி வைத்துவிடுவார். அலோபதி மருத்துவர்களின் இந்தக் குணம் வெகுவாக மெச்சத் தகுந்தது. தம்மால் இயலாததை இயலாது என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்வார்கள். இந்தக் குணத்தை முக்கால்வாசி சித்த மருத்துவர்களிடம் நான் பார்த்ததில்லை. எல்லாவற்றையும் தாங்களே சரி செய்ய வேண்டும் என்று முயற்சிப்பார்கள். ஒரு நோய்க்கு பல மருந்துகள் இருக்கக் கூடும். ஆனால் ஒரு மருந்து வேலை செய்யவில்லையென்றால் அதை ஒத்துக் கொள்கிற attitude இருக்காது. இப்படி மறைப்பதால்தான் சித்த மருத்துவமே புரட்டு என்கிற மனநிலையை பொதுவெளியில் உருவாக்குகிறார்கள். 

முறையான கல்வி இல்லாமல் அனுபவப்பூர்வமாக மருந்து கொடுக்கிறவர்களை பெருமொத்தமாக நிராகரித்துவிட முடியாது. அனுபவப்பூர்வமாக மருந்து கொடுக்கிறவர்களில் தேர்ந்த நிபுணர்களும் உண்டு. அதே சமயம் எந்த வரைமுறையுமில்லாமல் எல்லோரையும் விட்டுவிடுவதும் சரியில்லை. மருந்து என்ற பெயரில் ஸ்டீராய்டைக் கொடுக்கிறவர்களும் கலந்து கிடக்கிறார்கள். சித்த, பாரம்பரிய மருந்துகளைப் பொறுத்தவரையிலும் நிறைய ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. மருத்துவக் குறிப்புகளை முறைப்படுத்துதல், மருந்து தயாரிப்பதை ஒழுங்குபடுத்துதல், அனுபவ ரீதியிலான மருத்துவர்கள் குறித்தான முழுவிவரங்களையும் சேகரித்தல் என்று நிறையக் காரியங்கள் இருக்கின்றன. தமிழக அரசு நினைத்தால் முடியும். நீண்டகால நோக்குடன் கூடிய ஒருவர் சுகாதாரத் துறைக்கு அமைச்சராகும் போதோ அல்லது மாற்று மருத்துவத் துறை ஒழுங்குபடுத்துதலுக்கு என்றே தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்படும்போதோ இதெல்லாம் நடக்கலாம்.

வெறுமையாக பீற்றிக் கொண்டிருந்தால் மட்டுமே தமிழரின் பாரம்பரியமெல்லாம் உன்னத நிலையை அடைந்துவிடாது. காரியத்தில் இறங்க வேண்டும்.

சித்த மருத்துவத்தை ஒப்பிடும் போது ஆயுர்வேதம் மிகத் தெளிவான இடத்தை அடைந்திருக்கிறது. பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அலோபதி மருத்துவமனையைப் போலவே ஆயுர்வேத பல்நோக்கு மருத்துவமனைகள் (Multispeciality) இருக்கின்றன. BAMS படித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களுக்கு இணையாக ஓர் அமர்வுக்கு ஐநூறு ரூபாய் கூட வாங்குகிறார்கள். அவர்களின் மருத்துவ முறை முழுமையாக பாடமாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த ஆயுர்வேத கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதம் படித்துவிட்டு வருகிறவர்கள் அவர்களே மருந்து தயாரித்து மண்டை காய்வதில்லை. பெரும்பாலான மருந்துகளை நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை ஆகிய வேலைகளை மருந்து நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன. மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களைப் போலவே மருந்துச் சீட்டை மட்டும் எழுதித் தருகிறார்கள்.

சித்த மருத்துவத்திலும் இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படும் போது மருத்துவம் உன்னதமான நிலையை அடையக் கூடும். அரைவேக்காட்டு சித்த மருத்துவர்கள் சொல்வதைப் போல வானத்துக்குக் கீழாக இருக்கும் எல்லாவிதமான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒழுங்குபடுத்தும் போது பல நோய்களுக்கும் மருந்து இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளக் கூடும். ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்- மருத்துவ முறையில் பிரச்சினைகள் இல்லை- மலிந்து கிடக்கும் போலிகளினாலும், மருத்துவ அணுகுமுறையில் நிலவும் பக்குவமின்மையினாலும்தான் பிரச்சினைகள் உண்டாக்கப்படுகின்றன.