Feb 22, 2017

இரு பெண்கள்

கொச்சியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் பல வருடங்கள் அமெரிக்காவில் இருந்தவர். இந்தியா வந்த பிறகு ஈ-பே நிறுவனத்தில் பணியாற்றினார். சில காரணங்களுக்காக அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறியவர் இப்பொழுது கொச்சியில் ஒரு சிறு நிறுவனத்தின் தூண்களில் ஒருவராக இருக்கிறார். அந்த நிறுவனம் சேர்தலா என்னுமிடத்தில் இருக்கிறது.

அவ்வப்பொழுது அலைபேசியில் பேசிக் கொள்வோம். சில வாரங்களுக்கு முன்பாக அழைத்த போது ஒரு கல்லூரியின் வளாக நேர்முக தேர்வில் இருந்தார். யாராவது கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவதாகவோ, தமது நிறுவனத்தில் ஆட்களுக்கான தேவை இருப்பதாகவோ சொல்லும் போது மூக்கு வியர்த்துக் கொள்ளும். யாரையாவது உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பு அது. ‘வேலைக்கு ஆள் எடுக்கறீங்களா?’ என்றேன். அது வேலைக்கான நேர்முகத் தேர்வு இல்லை.

சேர்தலாவில் நிறுவனம் நடத்துவதால் கேரள அரசாங்கம் சில சலுகைகளை வழங்குகிறது. சலுகைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அதற்கு பிரதியுபகாரமாக அரசுக் கல்லூரி மாணவர்கள் இருபது பேர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறார்கள். Data analytics பயிற்சி. ஒரு மாத கால இலவசப் பயிற்சி இது. கல்லூரி முடித்து வெளியே வரும் போது வேலை தேடுவதற்கு இந்தப் பயிற்சி உதவக் கூடும். ஒருவேளை அவர்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உருவானால் இருபது பேரில் சிறப்பாகச் செயல்படுகிற ஒன்றிரண்டு பேர்களை அவர்களே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

‘இருபது பேர்ல ரெண்டு பேருக்கு தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்பு தர முடியுமா?’ என்றேன். எனக்கு அப்பொழுது எந்த மாணவரை அனுப்ப வேண்டும் என்று தெரியாது. வாய்ப்பு கிடைப்பதுதான் அரிது. வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டால் ஆட்களுக்கா பஞ்சம்? 

‘It should not be problem. எதுக்கும் நான் மேலாண்மையில் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்றார். அவர்கள் சரி என்று சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. உடனடியாக அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் பேசினேன். துறைத்தலைவர் தொடர்புக்கு வந்தார். அவரிடம் விவரங்களைச் சொன்னேன்.

‘சார்...வேலை கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது..ஆனா மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு..வெளியுலகம் தெரியும்’ என்றேன். அந்தக் கல்லூரியில் முப்பத்தைந்து மாணவர்கள் எம்.சி.ஏ படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள். 

‘கொச்சின் சென்று வருகிற செலவு, அங்கே தங்குவதற்கான விடுதிச் செலவு என எல்லாவற்றையும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். நன்றாகப் படிக்கக் கூடிய அதே சமயம் வசதியில்லாத மாணவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். சேர்தலா, எர்ணாகுளத்திலிருந்து முக்கால் மணி நேர பேருந்து பயண தூரத்தில் இருக்கிறது. அதனால் சேர்தலாவிலேயே ஒரு விடுதி இருந்தால்தான் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். அத்தனை ஏற்பாடுகளையும் ராதாகிருஷ்ணனே பார்த்துக் கொண்டார்.

அன்று மாலையே துறைத்தலைவர் அழைத்து இரு மாணவிகளின் பெயர்களைச் சொன்னார். மகேஸ்வரி, ரேணுகாதேவி. இரண்டு மாணவிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசினேன். இருவருக்குமே தந்தை இல்லை. அம்மாக்கள் விவசாயக் கூலிகள். நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருக்கிறார்கள்.

விவரங்களைச் சொல்லி ‘கொச்சி போறீங்களா?’என்றேன். சம்மதம் சொன்னார்கள். ராதாகிருஷ்ணனிடம் இரண்டு பெண்களின் அலைபேசி எண்களையும் கொடுத்திருந்தேன். அவர் ஒருங்கிணைத்துக் கொண்டார். இரண்டு பெண்களும் ஒரு மாதம் தங்கி உணவருந்த எட்டாயிரம் ரூபாய். சென்று வர ஆயிரம் ரூபாய். மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

வேலை தருகிறார்களோ இல்லையோ- கிராமப்புறத்திலிருந்து தமிழ் வழிக்கல்வியில் படித்து மேலே வந்திருக்கும் இத்தகைய விவசாயக் கூலிகளின் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்று காட்டுவதே கூட சிறந்த உதவியாக இருக்கும். அதுவும் வேலை வாய்ப்பு மிகுந்த ஏரியா இது. இத்தகைய படிப்புகளில் முப்பது நாட்கள் பயிற்சி என்றால் பல்லாயிரக்கணக்கில் கறந்துவிடுவார்கள். இலவசமாகச் செய்து கொடுக்கும் நிறுவனத்திற்கும் ராதாகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடலாமா என்று தெரியவில்லை. அதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.

ரேணுகாதேவியும் மகேஸ்வரியும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அழைத்துப் பேசுகிறார்கள். பத்து நாட்களுக்கான பயிற்சி முடிந்திருக்கிறது. மிகவும் திருப்தியாக உணர்கிறார்கள்.

இந்தச் செய்தியை பொதுவெளியில் எழுத ஒரே காரணம்தான் - வேலை வாய்ப்புகள், பயிற்சிகள் குறித்தான வாய்ப்புகள் இருப்பின் தகவல் தெரிவித்தால் எங்கோ ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சரியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிடுகிறேன். இப்படிச் சொல்லும் போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது- Forward மின்னஞ்சல்கள், கண்ணில்படும் விளம்பரங்களையெல்லாம் அனுப்பி வைத்துவிடுவார்கள். அப்படி எதையும் அனுப்ப வேண்டாம். தனிப்பட்ட முறையில் நிறுவனத்தில்/வாய்ப்பில் தங்களால் தாக்கத்தை (influence) ஏற்படுத்த முடியுமெனில் அனுப்பி வைக்கவும்.

இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரைக்கும் ஐந்து நிமிட வேலை, ஒன்றிரண்டு அலைபேசி அழைப்புகளோடு முடிந்துவிடுகிற காரியங்கள்தான். ஆனால் யாரோ ஒரு மாணவனுக்கு அது எதிர்காலமாக இருக்கக் கூடும். நமக்கு மிகச் சாதாரணமான விஷயங்கள் எல்லாம் இங்கு பலருக்கும் அசாதாரணமான பிரம்மாண்டம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் போதும். எவ்வளவு சிறிய வாய்ப்பையும் நாம் உதாசீனப்படுத்த மாட்டோம்.