ஜப்பான் ஒரு முறை சென்றிருக்கிறேன். அவர்களைக் காமிக்ஸ் பிரியர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தொடரூர்திகளில், ஓய்விடங்களில் என பார்க்கும் இடங்களிலெல்லாம் காமிக்ஸூம் கையுமாக வயது வித்தியாசமில்லாமல் இருப்பதை கவனிக்கலாம். அது வெறும் காமிக்ஸ் இல்லை. ‘அதுக்கு பேரு மாங்கா’ என்று சமீபத்தில்தான் தெரியும். கருப்பு வெள்ளை ஓவியங்கள். ஜப்பானில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரளுகிற தொழில் அது. மொத்த மதிப்பு முப்பது நாற்பதாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று சில இணையக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள்.
காமிக்ஸ் என்றால் வெறுமனே த்ரில் அல்லது ரொமான்ஸ் என்றில்லாமல் கிட்டத்தட்ட எல்லாவிதமான வகைமைகளையும் உள்ளடக்கியது மாங்கா. ஃபோர்னோகிராபி வரைக்கும் உண்டு. மாங்கா ஓவியங்கள் பெரும்பாலும் தொடராக வெளிவருகின்றன. பிரசுரத்திற்குப் பிறகு கிடைக்கிற வாசக வரவேற்பைப் பொறுத்து அனிமேஷன் படங்களாகவும் வெளிவருகின்றன. இப்படி எழுத்தாளர், ஓவியர்கள், அனிமேஷன் தயாரிப்பாளர்கள் என்று ஏகப்பட்ட பேருக்கு இதுவொரு தொழிலாகவே இருக்கிறது.
தமிழில் நிலைமை அப்படியா இருக்கிறது? அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் எழுத்தாளருக்குக் கிடைக்கும். அதைவிட சற்றே அதிகமாக பதிப்பாளருக்குக் கிடைக்கும்- அதுவும் ஓரளவு கவனம் பெற்ற புத்தகமாக இருந்தால்.
மாங்கா பற்றித் தெரிந்து கொண்ட பிறகு வாசிப்பதில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வெறுமனே எழுத்துருவோடு நின்று கொள்ள வேண்டியதில்லை. படைப்பாளனுக்கும் வாசகனுக்குமான உறவு எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஓவியங்கள், அனிமேஷன் என்று படைப்பானது எப்படியொரு உருவில் வேண்டுமானாலும் வாசகனை அடையலாம். ஆனால் விதவிதமான வடிவங்கள் குறித்து தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். வடிவங்கள் உருமாறி, இன்னொரு வடிவம் பெற்று வேறொரு உருவத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும் போது ‘இப்போவெல்லாம் யார் சார் படிக்கிறாங்க?’ என்கிற புலம்பலுக்கு அவசியமே இருக்காது.
தமிழில் அத்தகைய முயற்சிகள் வெகு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்துரு, படங்கள் தவிர வேறு பெரிய முயற்சிகள் எதுவுமில்லை. வாசிப்பவனுக்கு வித்தியாசமான அனுபவங்களும் இல்லை. முன்பெல்லாம் பேருந்துகளில் ஏறி ஏதாவதொரு சஞ்சிகையை வாங்கிப் புரட்டுபவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் விசாரித்துப் பார்த்தால் வியாபாரத்தில் பெரிய அடி விழுந்திருப்பதைச் சொல்வார்கள். செல்ஃபோன்கள் யாருடைய நேரத்தையும் தின்று தீர்ப்பதற்கான வஸ்துவாக மாறியிருக்கிறது. அதிலும் வாசிப்பதைவிடவும் விரல் நுனியால் உருட்டி ஓட்டுகிறவர்கள்தான் அதிகம்.
நம் ஊரில் காமிக்ஸ் என்றால் என்றால் அது சிறுவர்களுக்கானது என்பதோடு நின்றுவிட்டது. அதன் சாத்தியங்கள் இன்னமும் விரிவடையலாம்.
மாங்கா வடிவில் வரும் படைப்புகளை மொழிமாற்றம் செய்வதும் எளிது. திணற வேண்டியதில்லை.
கணபதி சுப்ரமணியம் தமிழில் மாங்கா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தற்பொழுது சென்னையில் வசிக்கிறார். ஜீவகரிகாலனின் ‘அது ஒரு கனவு’ சிறுகதையை மாங்கா ஓவியங்களாக்கி அதை ஒரு புத்தக வடிவில் கொண்டு வருகிறார்களாம். இந்தச் செயல்பாட்டுக்கு வாசகர்களின் தரப்பில் கிடைக்கவிருக்கிற வரவேற்பைப் பொறுத்து வேறு சில கதைகளையும் இப்படி உருவாக்குகிற திட்டமிருப்பதாகச் சொன்னார்கள்.
‘அது ஒரு கனவு’ சிறுகதையின் முதல் பகுதியை வாசித்துவிட்டு மாங்காவையும் பார்த்துவிட்டுச் சொல்லலாம். கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம். கணபதி சுப்ரமணியத்திற்கு இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன்.
ஜிரொ டனிகூசி என்கிற மாங்கா ஓவியரைப் பற்றிய சிறுகுறிப்பை சமீபத்தில் ஒத்திசைவு எழுதியிருக்கிறார்.
1 எதிர் சப்தங்கள்:
√
Post a Comment