Feb 17, 2017

ஏன் வீண் வேலை?

அமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்றை எழுதியவுடன் ‘இதெல்லாம் நடக்குமா?’ 'இதெல்லாம் வெட்டிவேலை’ ‘இவர் எத்தனை நாட்களுக்கு அமைச்சர்?’ ‘இணையத்தில் படிப்பாரா?’ என்று நிறையக் கேள்விகள். இப்படியான வினாக்கள் எனக்கும் இருந்தன. விண்ணப்பம் எழுதி அவர்கள் பரிசீலித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறு என்பது வெறு 5% தான். தெரிந்தேதான் அனுப்புகிறேன். 

பொதுநலனுக்கான கோரிக்கை மனுவை பொதுவெளியில் வெளியிடுவது என்பது அமைச்சரின் கண்களில்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டுமேயில்லை. இப்படி வெளியிடும்பட்சத்தில் என்ன கோரிக்கைகள் அவை? அந்தக் கோரிக்கைகளுக்கான அவசியம் என்ன? அவை சரியான கோரிக்கைகளா என்கிற உரையாடல்கள் தொடங்கக் கூடும்.

நம் சமூகத்தின் பொதுவான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதும் அது குறித்து விவாதிக்கிற உரையாடல்களும் அவசியமில்லையா? மணல் பிரச்சினை, வறட்சி, சுற்றுச் சூழல் சார்ந்த சிக்கல்கள், விவசாயிகளுக்கான தேவைகள், கல்வியில் நடைபெற வேண்டிய மாறுதல்கள், சுகாதாரத் துறையில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் என்று நமக்கு ஆயிரம் குறைகள் உண்டு. ‘இதுதான் தேவை’ என்று எப்பொழுது பேசப் போகிறோம்?

நம்முடைய தேவைகள் என்னவென்று துல்லியமாகச் சொல்கிற திறன்தான் அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்பதற்கான முதல் தகுதி. அதை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லையா? நம்மில் எத்தனை பேருக்கு நம்முடைய தேவைகளை அடுத்தவர்களுக்கு புரியும்படியாகச் சொல்லத் தெரியும்? வீட்டில் உள்ளவர்களிடமும் அலுவலகத்தில் உள்ளவர்களிடமுமே கூட நாசூக்காகவும் தெளிவாகவும் புரிய வைக்கத் தெரியாமல் திணறுகிறவர்கள்தான் அதிகம். அப்படியிருக்கையில் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் எப்படிச் சொல்லப் போகிறோம்? நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

வெறுமனே மீம்ஸ்களை உருவாக்குவதும், அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களைக் கலாய்ப்பது மட்டும்தான் சமூக ஊடகத்தின் வழியாக நம்முடைய செயல்பாடாக இருக்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் வெறுமனே சிரித்துத் தாண்டிச் செல்வதைத்தான் மொன்னைச் சமூகம் என்கிறார்கள். நடக்காது, வாய்ப்பில்லை, சாத்தியமில்லை, வீண் வேலை என்று எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகப் பேசுவதைத்தான் இன்றைய நவீன சமூகத்தின் பெரும் பலவீனமாகச் சொல்கிறார்கள்.

பொதுவாகவே நாம் விமர்சனம் செய்கிற மனிதர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோம்? நமது எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களிடம் எப்பொழுதாவது ஏதாவதொரு வகையில் குரல் எழுப்பியிருக்கிறோமா? அதை அவர்கள் கவனத்தில் கொண்டார்களா அல்லது உதாசீனப்படுத்தினார்களா என்று ஏகப்பட்ட வினாக்கள் இருக்கின்றன. 

ஓர் இளைஞன் கேட்டால்  மேலே இருப்பவர்கள் பதில் சொல்லாமல் விடக் கூடும். பத்து இளைஞர்கள் கேட்டால் கண்டுகொள்ளாமல் விடக் கூடும். நூறு இளைஞர்கள் அதே கோரிக்கையை முன்வைத்தால்? ஆயிரம் பேர் திரண்டு விண்ணப்பங்களை அனுப்பினால்? ஒன்றையாவது அவர்கள் திரும்பிப் பார்த்துத்தானே ஆக வேண்டும்? பத்துக்காவது பதில் சொல்லித்தானே தீர வேண்டும்? அதைச் செய்வோம்.

கலாய்ப்பது, நக்கலடிப்பது என்பதையெல்லாம் நாம் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் வாதிடவில்லை. அவையும் இருக்கட்டும். அதேசமயம் நம்முடைய செயல்பாட்டில் பத்து சதவீதமாவது constructive ஆக இருக்க வேண்டும். நமக்கான தேவைகள் என்பது குறித்தான தெளிவு இருக்க வேண்டும். அதைக் கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய முறையில் கேட்கத் தெரிய வேண்டும். அதுதான் குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வு என்பது. இல்லையா?

வெறுமனே நகைத்து கலாய்த்துவிட்டுவிட்டால் உருப்படியாக என்ன நடக்கும்? அவர்கள் சீந்தவே மாட்டார்கள். சட்டையைப் பிடித்து உலுக்கினால் தமது அதிகாரத்தைக் காட்டவே முயற்சிப்பார்கள். இங்கே எல்லாவற்றையும் போராட்டத்தின் வழியாகவே செய்ய வேண்டியதில்லை. முரட்டுத்தனத்தைக் காட்ட வேண்டியதில்லை. முகத்தை உர்ரென்றே வைத்துக் கொண்டு திரிய வேண்டியதில்லை. அழுத்தம் திருத்தமாக பேசத் தெரிந்தால் போதும். அதை சிரித்துக் கொண்டேயும் கேட்கலாம். பணிந்தபடியும் கோரலாம். அவர்கள் செய்து தருகிறார்களா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் கேட்கும் இடத்தில் இருக்கிறோம். கேட்டுத்தான் பார்ப்போமே? நடந்தால் நடக்கட்டும். நடக்காவிட்டாலும் கேட்டு வைப்பதில் என்ன தவறு? 

இன்றைக்கு ஒருவர் அமைச்சராக இருப்பார். நாளை இன்னொருவர் அமைச்சராகக் கூடும். ஆகிவிட்டுப் போகட்டும். நம்முடைய கோரிக்கைகள் அப்படியேதானே இருக்கின்றன? நமக்கு எது தேவை என்கிற தெளிவு உருவாகிவிட்டால் அதுவே போதுமானது. நமது கோரிக்கையை அடையமுடியாவிட்டால் அதுவே நம்முடைய லட்சியமாகக் கூட மாறக் கூடும். நம் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதையும் கூட அதுவே தீர்மானிக்கலாம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் எதைக் கேட்க வேண்டும், சுற்றுச் சூழல்துறை அமைச்சரிடம் எதைக் கேட்க வேண்டும் என்று எனக்கு நானே தெளிவுற விரும்புகிறேன். விரும்புவதைக் கேட்டுப் பார்க்கிறேன். நாளை செங்கோட்டையனுக்கு பதிலாக இன்னொருவரும், கருப்பணனுக்கு பதிலாக வேறொருவரும் கூட அமைச்சராகிவிடலாம். ஆனால் அவர்களிடமும் இதையே புதிதாக வருகிறவர்களிடமும் முன்வைக்கலாம்.

நோக்கங்களை அடைவதற்கான உரையாடல்களை பொதுவெளியில் உருவாக்குவதிலும் மாற்று வழிகளை ஆராய்வதிலும் மனம் செல்லட்டுமே!

வெற்றி தோல்வி என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்னைப் போலவே இன்னமும் சிலர் இதையே செய்யக் கூடும். யாரோ ஒருவர் வந்து ‘இதை நீ இப்படிச் செய்தால் இன்னமும் சிறந்த பலன் கிடைக்கும்’ என்று சொல்லி புதிய அணுகுமுறையைக் கற்பிக்கக் கூடும். அதற்காகவே  என்ன செய்கிறேன் என்பதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டேயிருக்கிறேன். எங்கோ இருந்து யாரோ ஒருவர் நம்மை பின் தொடரக் கூடுமல்லவா? யாரோ ஒருவர் புதுவழியைக் காட்டக் கூடும் அல்லவா? எதிர்பார்ப்பது அவ்வளவுதான். நம்மைச் தெளிவு புரிதலும் உருவாகியும் அழிந்தும் உருமாறியபடியேயும் இருக்கட்டும். மற்றபடி, தொடர்ந்து இயங்குவோம். அவ்வளவுதான்.