Feb 14, 2017

அரசியல் தெளிந்தது

கடந்த முப்பதாண்டு காலம் தமிழக அரசியலைக் குதறிச் சின்னாபின்னமாக்கி சாக்கடையாக மாற்றிக் கொண்டிருந்த சசிகலாவின் அரசியல் கனவுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை புனித முகமாக்கி அதன் பின்னால் இருந்தபடியே ரவுடியிசம், சொத்துப் பறிப்பு, ஊழல் என்று கயமைத்தனங்களால் தமிழகத்தைச் சீரழித்துக் கொண்டிருந்த சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகாக தமிழகம் முழுவதும் விரவிக் கிடந்த பயம், நடுக்கம், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்திருப்பதாகத்தான் உணர்கிறேன்.

அரசியல் நாகரிகம் என்பதே கிஞ்சித்தும் இல்லாத ஒரு சூழலில் கருணாநிதி ஓய்ந்து, ஜெயலலிதா மறைந்து மிகப்பெரிய வெற்றிடம் உருவான போது ஆசுவாசமாக இருந்தது. இனி நாகரிக அரசியலையும் சக மனிதர்களை மதிக்கும் போக்கும் தமிழக அரசியலிலும் உருவாகக் கூடும் என்ற நம்பத் தொடங்கிய தருணத்தில் சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், சட்டமன்ற ஆளுங்கட்சித் தலைவர் என்று அடுத்தடுத்த குண்டுகளை வீசினார்கள். ‘சிரித்துக் கொண்டார்கள்..அதனால் சந்தேகம் வலுத்தது’ என்று கேவலமாகப் பேசிய போது எரிச்சல் வந்தது. நேற்றைய தினம் வரைக்கும் நாலாந்தர அரசியல்வாதியைப் போல பேசிக் கொண்டிருந்த சசிகலாவின் பேச்சும், உடல்மொழியும் மீண்டுமொரு இருண்ட காலத்திற்கு தமிழகம் இழுத்துச் செல்கிறதோ என்ற பயத்தை உருவாக்காமல் இல்லை.

உச்ச நீதிமன்றத்தால் எழுதப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம்.

எழுபத்தைந்து நாட்களாக ஜெயலலிதாவை உள்ளே வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய மனிதனையும் கிட்டவே அண்டவிடாமல் தனது சர்வாதிகாரத்தின் கோர முகத்தைக் காட்டியது ஒரு சாம்பிள்தான். ஆசிட் அடிப்பதும், மிரட்டுவதும், உதைப்பதும், சொத்துக்களை பறிப்பதும், ஊடகங்களை அதட்டுவதும் என எல்லாவிதத்திலும் திகிலூட்டிக் கொண்டிருந்த வன்முறையாளர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. ஆடிட்டரை செருப்பால் அடித்தும், ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தும், மருத்துவரை சிறையில் அடைத்தும், எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் காலில் விழச் செய்தும், அதிகாரிகளைக் குறுகச் செய்தும் அருவெறுப்பான அரசியலை நடத்திக் கொண்டிருந்தார்கள். 

எதிர்ப்பவர்களை எல்லாம் இல்லாமல் போகச் செய்கிற வல்லமை அவர்களிடமிருந்தது. வாயை அடக்குகிற முரட்டுத்தனம் இருந்தது. தமிழகத்தில் யாரையும் வழிக்குக் கொண்டு வருகிற வலையமைவை வைத்திருந்தார்கள். அதுதான் பயத்தைக் கொடுத்தது. யார் குரல் கொடுத்தாலும் கருணையே இல்லாமல் அவர்களின் குரல்வளையை நெறித்தார்கள். ஊடகங்கள் மெளனமாகின. ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்ற மொன்னைச் சமூகத்தை வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருந்தார்கள்.

தமிழகம் முழுவதுமே சசிகலா எதிர்ப்புணர்வு புகைந்து கொண்டிருந்தது. இன்றைக்கு யாரை அலைபேசியில் அழைத்துப் பேசினாலும் உற்சாகம் கரைபுரளத்தான் பேசுகிறார்கள். இவ்வளவு வன்மத்தைச் சம்பாதித்து வைத்திருந்த ஒரு பெண்மணி அடுத்த முதல்வராகிவிட வேண்டுமென வெறியெடுத்துத் திரிந்தது அருவெறுப்பை உண்டாக்கியிருந்தது. நீ யார் எங்களை ஆள்வதற்கு என்பதை எப்படி கேட்பது எனத் தெரியாமல் தமக்குள் புகைந்து கொண்டிருந்தார்கள்.

விடியல் பிறந்திருக்கிறது.

இப்பொழுதும் கூட நீதியை விலை கொடுத்து வாங்குவதற்கும் மத்திய அரசை வளைப்பதற்கும் எல்லாவிதமான முயற்சிகளையும் சமீபகாலத்தில் சசிகலா தரப்பு செய்திருக்கும். சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட்டதும் கூட இந்தத் தீர்ப்பை மனதில் வைத்துத்தான். தமக்கு எதிராக எழுதப்பட்டுவிட்டால் உடனடியாக திவாகரனுக்கோ, நடராசனுக்கோ அல்லது வேறொரு போனாம்போக்கிக்கோ முதல்வர் பதவியைக் கொடுத்துவிடலாம் என்று துள்ளினார்கள். ஓபிஎஸ்ஸை விட்டுவைத்தால் அவரிடமிருந்து பொறுப்பை கைமாற்றுவது கடினம் என்று பயப்பட்டார்கள். ஒருவேளை சசிகலா முதல்வராகியிருந்தால் அடுத்த முப்பது வருடங்களுக்கு மாஃபியாவின் கரங்களிலிருந்து தமிழகம் விடுபட்டிருக்கவே முடியாது. நம்முடைய தலைமுறை முழுக்கவும் வெறுப்பரசியல் தொடர்ந்திருக்கும். 

தடுத்து நிறுத்திய ஆளுநருக்குத்தான் மனப்பூர்வமான நன்றியைச் சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ் ஒன்றும் உத்தமர் இல்லைதான். பத்தாண்டு காலம் இவர்களுக்குத்தான் கட்டுப்பட்டுக் கிடந்தார். அப்பொழுதெல்லாம் வாயே திறக்காதவர் தன்னை ராஜினாமா செய்யச் சொன்னவுடன் பேசத் தொடங்கினார். ‘நீ சி.எம்; நான் பொ.செ’ என்று சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் அமைதியாகவே இருந்திருக்கக் கூடும். ஓபிஎஸ் நல்லவரோ கெட்டவரோ ஆனால் மன்னார்குடி குழுமத்தளவுக்கு மோசமானவராக இருந்துவிட முடியாது என்ற நினைப்பிலேயேதான் தமிழகம் அவர் பின்னால் திரண்டது. அவரை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முட்டுச்சந்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தியிருந்தது தமிழக அரசியல் சூழல்.

மிகப்பெரிய ஆபத்து நீங்கியிருக்கிறது. நமக்கு அவகாசம் கிடைத்திருக்கிறது. இனி நாம் பொறுமையாக முடிவு செய்யலாம்- உருவாகியிருக்கும் வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம். யார் நமக்குச் சரியானவர், எந்தக் கட்சி வர வேண்டும்?  யார் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரமும் வாய்ப்பும் மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 

இனிமேல்தான் புனிதப்படுத்துதலை அடித்து நொறுக்க வேண்டும். அதிகாரத்திற்கும் ஆட்சிக்குமாக நாக்கைத் தொங்கப் போட்டுத் திரியும் யாருமே புனிதர்கள் இல்லை. வெறியெடுத்த வேட்டை நாய்கள். அதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.

மற்றபடி, இன்றைய தீர்ப்பின் காரணமாக தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தில் வெளிச்சம் விழுந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இன்றைய தினத்தைக் கொண்டாடுவோம்!