Feb 10, 2017

சமரசம்

நமக்கென்று ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொண்டால் அதை எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளவே கூடாது என்பார்கள். பழைய புராணக்கதையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் தனது விரதத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்; தனது பக்தியை விட்டுக் கொடுக்காதவர்கள் என்பதுதான் அழுத்தமாகச் சொல்லப்பட்ட செய்தி. இன்றைக்குத்தான் நிலைமை மாறிவிட்டது. இயக்குநர்கள் பேசும் போதே ‘Contemporary ஆ சொல்லுங்க’ என்கிறார்கள். சமரசம் செய்து கொள்வது, வளைந்து போவது, நெளிவது, குழைவது எல்லாம்தான் இன்றைய உலகம் என்றாகிவிட்டது. ‘மேலே போறதுன்னா எவ்வளவு பெரிய தப்பையும் செய்வதில் தப்பே இல்லை’ என்ற மனநிலைதான் எல்லோருக்கும் வந்திருக்கிறது.

வளையாமல் இருப்பவனை பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் உலகம் சொல்லும். 

அப்பாவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் இருக்கிறார். மின்வாரியத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார். பத்து பைசா லஞ்சம் வாங்காதவர். சிபாரிசுகளுக்கு காது கொடுக்காதவர்; சிபாரிசுகளுக்குச் செல்லாதவர். கண் காணாத இடத்துக்கு மாற்றல் என்றாலும் சென்றுவிடுவார். அவரைப் பழிக்காதவர்கள் இல்லை. மகனும் மகளும் அவர்கள் விருப்பத்திற்கு இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். இன்றைக்கு ஊரில் ஒரு வீடு இருக்கிறது. ஓய்வூதியம் வருகிறது. அப்பா இறந்த போது வந்திருந்தார். மிதிவண்டியில் வந்தவரிடம் அருகில் சென்று சில நிமிடங்கள் பேச வேண்டும் எனத் தோன்றியது. கூட்டத்தில் முடியவில்லை. சில நாட்கள் கழித்து அலைபேசியில் அழைத்துப் பேசிய போது ‘பிழைக்கத் தெரியாதவன்னுதான் சொல்லுறாங்க...ஆனா பிழைக்கத் தெரியாதவனா இருக்கிறதுலதான் ஒரு முழுமை இருக்கு’ என்றார். அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 


கடந்த வருடம் Hacksaw Ridge என்றொரு படம் வெளியானது. FM movies தளத்தில் கிடைக்கிறது. 

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கா வரிசையாக படைவீரர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தது. தேஸ்மண்ட் தாஸ் ராணுவத்தில் சேர்கிறான். அவனது ஒரே பிரச்சினை- துப்பாக்கியைத் தொடமாட்டான். ராணுவ அதிகாரிகளுக்கு கிறுக்குப் பிடித்துவிடுகிறது. துப்பாக்கி இல்லாமல் ராணுவத்தில் என்ன செய்ய முடியும் என்று குழம்புகிறார்கள். தாஸை மிரட்டுகிறார்கள். முடியவே முடியாது என்கிறான். தன்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று மென்புன்னகையுடனேயே சொல்கிறான். உத்தரவுகளை மதிக்காததற்காக சிறையில் அடைப்போம் என்று சொல்லி விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் தாஸூக்கு எதிராக முடிவு செய்யப்பட்டால் அவன் சிறையில் தள்ளப்படுவான். சில அதிரடித் திருப்பங்களின் காரணமாக விசாரணையின் முடிவில் அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போர்க்களத்தில் மருத்துவ உதவியாளனாகச் செயல்படலாம் என்று அனுமதிக்கிறார்கள்.

தன்னைச் சுற்றிலுமிருக்கும் அத்தனை வீரர்களும் துப்பாக்கி ஏந்தியபடி ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் முன்னேற தாஸ் மட்டும் துப்பாக்கியில்லாமல் முதலுதவிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்களோடு செல்கிறான். ஓரிரவில் ஜப்பான் அமெரிக்கப்படைகளை வெளுத்து வாங்குகிறது. மொத்த ராணுவமும் சிதறியடித்து ஓடிவிட தாஸ் மட்டும் இரவு முழுவதும் தேடியலைந்து அடிபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரனையும் மீட்டுக் கொண்டு வருகிறான். அந்த இரவில் அவன் காப்பாற்றிய அமெரிக்க வீர்ர்களின் எண்ணிக்கை எழுபதைத் தாண்டுகிறது.

ஹாக்ஸா ரிட்ஜ் படமானது தேஸ்மண்ட் தாஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மெல் கிப்ஸன் இயக்கியிருக்கிறார்.

படங்களைப் பற்றி எழுதும் போது ‘எங்கே கிடைக்குது?’ அல்லது ‘எப்படித் தேடுறீங்க?’ என்று யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார்கள். வாசிப்பதிலிருந்தே படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். சில சமயங்களில் எங்கேயாவது ஒரு குறிப்பை வாசிப்போம். ஹிட்லர் குறித்தோ முசோலினி குறித்தோ வாசிக்கும் போது கூகிளில் ஹிட்லர் மூவிஸ் என்று தேடினால் போதும். வரிசையாகக் கிடைக்கும். ஹிட்லரின் கடைசி பத்து நாட்களைப் பற்றிய படம் கூட இருக்கிறது. அதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும். இரண்டாம் உலகப் போர், முதலாம் உலகப் போர், வரலாறு என்று ஆரம்பித்து வன்முறை, காதல், கொள்ளை, unsimulated sex மூவிஸ் வரைக்கும் வகை தொகையில்லாமல் தேடுவதுண்டு. அன்றைய மனநிலைக்கு ஏற்ப தேடல் இருக்கும். இத்தகைய எந்தக் குறிச்சொல்லுக்கும் இணையத்தில் பட்டியல் கிடைத்துவிடும். ‘டாப் 10 இரண்டாம் உலகப்போர் படங்கள்’ என்று பட்டியல் கிடைத்தால் அதில் உள்ள ஒவ்வொரு படத்துக்கும் IMDB தளத்தில் என்ன ரேட்டிங் என்று பார்ப்பதுண்டு. ஏழு புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் படத்தைத் துணிந்து பார்க்கலாம்.

FM movies தளத்தில் இல்லாத படங்களே இல்லை. முன்பு சோலார் மூவிஸ் என்றொரு தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைவிடவும் இது சிறப்பு.

முன்பெல்லாம் காகிதங்களில் நிறையப் படிப்போம். பத்திரிக்கைக் குறிப்புகள், செய்தித்தாள்கள் என்று நமக்குக் கிடைக்கக் கூடிய செய்திகள் பலதரப்பட்டதாக இருக்கும். நாமும் பலவிதங்களில் சிந்திப்போம். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. காலையில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி வந்தால் நாள் முழுவதும் அதேதான். ஒரே செய்திக்கான வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு பார்வைகளைப் பார்ப்பதோடு அன்றைய தினம் முடிந்துவிடுகிறது. ஓபிஎஸ்ஸூம் சசிகலாவும் அடித்துக் கொண்டிருந்தால் நமக்கும் தலை முழுவதும் அதுதான் நிறைந்து கிடக்கிறது. ட்ரம்ப் என்ன சொன்னார்? காஷ்மீரில் என்ன நடக்கிறது? உத்தரகாண்ட் நிலநடுக்கம் என்ன ஆனது? ஹாசினி என்ற பெண்ணைக் கொன்றவன் யார்? கிரிக்கெட் என்ன ஆயிற்று - இப்படி எதையுமே உள்வாங்கிக் கொள்வதில்லை. நம்மை மொத்தமாக சமூக ஊடகம்தான் ட்யூன் செய்து கொண்டிருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது.

நேற்று மாலை அலுவலகம் முடிந்து வெளியே வரும் போது தலை இறுகிக் கிடந்தது. திரை இயக்குநர் ஒருவரை அழைத்தேன். ‘காலையிலிருந்து ஷூட்..எதையுமே கவனிக்கல..தமிழ்நாடு எப்படி இருக்குது?’ என்றார். பொறாமையாக இருந்தது. இத்தனைக்கும் அவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருந்துவிட்டு ஐந்தே நிமிடங்களில் மொத்தத் தகவலையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த ஐந்து நிமிடத் தகவலுக்காகத்தான் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்தைத் தின்றிருக்கிறேன். எங்கே சரி செய்ய வேண்டும் என்று யோசனையாக இருந்தது.

மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள எல்லாவிதமான செய்திகளும் தகவல்களும் தேவை. ஒன்றை மட்டுமே கட்டிக் கொண்டு அதையே நாள் முழுக்கவும் வெவ்வேறு தொனிகளில் வாசித்து குதப்பிக் கொண்டிருந்தால் மனம் இறுகிவிடும். நம்முடைய எண்ணத்தை பிரதிபலிப்பவர்களை மட்டுமே ஏற்கத் தோன்றும். நமக்கு ஒவ்வாத கருத்துகளைச் சொல்கிறவர்கள் மீது அவசியமேயில்லாத வன்மம்தான் வரும். தனிப்பட்ட முறையில் அவர் சிறந்தவராகவே இருந்தாலும் கருத்தின் அடிப்படையில் பகைமை பூண்டு கொள்வோம். 

சரி இது இருக்கட்டும்.

தாஸ் தன்னைச் சமரசம் செய்து கொள்ளாதவன். தான் நம்புகிற கொள்கைகளில் உறுதியாக நிற்கிறான். பிரச்சினைகள் வருகின்றன. சோதனைகளைச் சந்திக்கிறான். ஆனாலும் இறுதி வரைக்கும் வளையாமல் நின்று நினைத்ததைச் சாதிக்கிறான். இந்த கதாப்பாத்திரம் வெகுவாகப் பிடித்துப் போனது. இத்தகைய பாத்திரங்களைச் சித்தரிக்கும் பாத்திரங்களும் புத்தகங்களும் நாம் கற்றுக் கொள்வதற்கான பாடங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றன. வெறுமனே பொழுது போக்கு என்பதைத் தாண்டியும் எதையாவது அழுத்தமாக கீறிவிட்டுவிடுகின்றன.

எவ்வளவு சமரசங்களைச் செய்து கொள்கிறோம்? உலகமே அப்படித்தான் இருக்கிறது என்று நமக்கு நாமாகச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு குண்டுச்சட்டியில் குதிரையை ஓட்டியபடியே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம். இல்லையா? பெரும் தலைவர்கள்- அரசியலில் மட்டுமில்லை- பெரும்பாலான துறைகளில் தமது லட்சியத்துக்காகவும் நோக்கத்திற்காகவும் சமரசம் செய்யாதவர்கள்தான் வரலாறுகளில் இடம்பிடிக்கிறார்கள். அற்ப லாபத்திற்காகவும் குறுகிய கால பலன்களுக்காகவும் தமது நிலைப்பாடுகளையும் பாதைகளையும் இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்கிறவர்களை வரலாறு மறந்துவிடுகிறது. வரலாறு மட்டுமில்லை நிகழ்காலமே கூட அந்தப் பக்கமாக நகர்ந்த பிறகு கழுவி ஊற்றுகிறது.