Feb 3, 2017

ஜனவரி 2017

அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரக் காரணமான இரண்டு மாணவர்களில் நந்தினியும் ஒருத்தி. இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். நந்தினியின் அப்பா கிராமத்து சலவைத் தொழிலாளி. நந்தினிக்கு இரண்டு அக்காக்கள். மூன்று பேருமே படிப்பில் சுட்டிதான் என்றாலும் நந்தினி எல்லோரையும்விடவும் டாப். 200க்கு 199.25 கட் ஆஃப் வாங்கியிருந்தாள். அவளுக்கு உதவி கேட்டு நிசப்தத்தில் எழுதிய ஒரே இரவில் நன்கொடை குவிந்தது. தேவைக்கு அதிகமாகவே உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தேவையானவர்களுக்கு தேவையான அளவுக்கு மட்டும் உதவி கிடைக்கும்படி ஒழுங்கு செய்ய அறக்கட்டளைக்கான அவசியம் இருப்பதாகத் தோன்றிய பிறகுதான் நிசப்தம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.

நந்தினியின் அப்பாவும் ஓரளவு தனது சம்பாத்தியத்திலிருந்து மகளின் படிப்புக்குச் செலவு செய்தாலும் நந்தினி அறக்கட்டளையின் உதவியுடன் படித்துக் கொண்டிருக்கிறாள். நந்தினிக்கு இப்பொழுது ப்ரீத்தி மணிவாசகம் வழிகாட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

ஜனவரி மாத்தின் வரவு செலவுக் கணக்கு கீழே இருக்கிறது. வரிசை எண் 8 இல் இருக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கான விவரம் டிசம்பர் மாத வரவு செலவுக் கணக்கிலேயே வந்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டிருக்கும் பத்தொன்பதாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய்(வரிசை எண்: 19) நந்தினியின் கல்லூரி விடுதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகை. 

இவை தவிர வைபவ் கிருஷ்ணா என்கிற குழந்தைக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகை இரண்டாயிரம் ரூபாய் ஜனவரியில் வழங்கப்பட்டிருக்கிறது.வங்கியில் இருப்பாக பத்து லட்சத்து இருபத்தொன்பதாயிரம் ரூபாய் இருக்கிறது. இது தவிர நிரந்தர வைப்பு நிதியில் பதினேழு லட்சங்கள் இருக்கின்றன. ஏதேனும் வினாக்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

என்னய்யா உங்க திட்டம் என்ற கட்டுரையை வாசித்திருக்கக் கூடும். வாசிக்காதவர்கள் சில நிமிடங்கள் ஒதுக்கி வாசித்துவிடுங்கள். கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பேரும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். குடிசைவாசிகள். ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவர்களைச் சந்தித்து இனி வரும் நாட்களில் ப்ளஸ் டூ தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். இப்பொழுது திட்டமிட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக அவர்களது காலனிக்குச் சென்றிருந்தோம். எப்படி படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதுதான் நோக்கம். தங்களது காலனியில் நிறைய தொந்தரவுகள் இருப்பதாகச் சொன்னார்கள். உடனிருந்த திரேசாள் பள்ளி தலைமையாசிரியர் திரு.தாமஸ் அவர்கள் இரவு நேரங்களில் தம் பள்ளியில் அமர்ந்து படித்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்தப் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வேறு அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இம்மாணவர்களின் மீதான அக்கறையின் காரணமாக வழங்கப்பட்ட அனுமதி அது.


கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் குழுவாக வந்துவிடுகிறார்கள். இரவு உணவையும் எடுத்து வந்து விடுகிறார்கள். இரவில் பதினொரு மணி வரைக்கும் படிக்கிறார்கள். அதன்பிறகு படுத்து உறங்கிவிட்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். அவ்வப்போது தலைமையாசிரியர் சென்று பார்த்துக் கொள்கிறார். ‘நாம முதல் முதலா சந்திக்கும் போது எப்படி இருந்தாங்க...இன்னைக்கு ஆச்சரியமா இருக்கு மணி’ என்றார். சந்தோஷமாக இருந்தது. அவர்களிடம் தெளிவு வந்திருக்கிறது. நிறையப் பாடங்களை ‘சாய்ஸில் விட்டுவிடலாம்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது முழுமையாக எல்லாப்பாடத்தையும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில் ‘விடைத்தாள்கள் எப்படி இருக்க வேண்டும்’ என்று இன்னுமொரு பயிற்சி வகுப்பை நடத்தும் திட்டமிருக்கிறது.

முதலில் அக்கம்பக்கத்து மாணவர்கள் எழுபது பேருக்கு ஒரு நாள் கருத்தரங்கை நடத்தினோம். பிறகு பதினேழு மாணவர்களுக்கு அரை நாள் கருத்தரங்கு. இப்பொழுது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். தலைமையாசிரியர் இடம் கொடுத்து அடிக்கடி சென்று பார்த்துக் கொள்கிறார். கார்த்திகேயன் அருகாமையில் இருக்கும் ஒரு நூற்பு ஆலையில் மேலாளராக இருக்கிறார். அவர் சொன்னதையடுத்து அதிகாலை நான்கு மணிக்கு நூற்பாலையின் கேண்டீனிலிருந்து மாணவர்களுக்கு தேநீர் வந்துவிடுகிறது. மாணவர்களும் வெகு தீவிரமாக இருக்கிறார்கள்.

பதினேழு பேர்களும் ஜொலித்துவிட வேண்டும் என்பதுதான் லட்சியம். குறைந்தபட்சம் பத்து பேராவது கலக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம்.

இத்தகைய செயல்பாடுகளை ஒரு பயிற்சியாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமிருக்கிறது. கல்வி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து எழுதுகிறேன். ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தெரியப்படுத்தலாம். 

நன்றி.