Jan 25, 2017

சினிமா தயாரிக்கணும்

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பர் சந்திக்க வந்திருந்தார். எம்.ஜி. சாலையில் உள்ள வாசுதேவ் அடிகாஸ் கடையில் சந்தித்தோம். இருபத்தைந்து வயதைவிட முன்பின்னாக இருக்கக் கூடும். ஒரு தனியார் கல்லூரியில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். சொற்ப சம்பளம். ‘ஒரு படம் தயாரிக்கிறோம்..கதை வேணும்’ என்றார். கன்னடத்தில் இப்பொழுதெல்லாம் குறைந்த தொகையில் படம் தயாரிக்கிறார்கள். அந்த ஆர்வம்தான் நண்பருக்கும். நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கு ஐந்து லட்சம் போட்டு படம் தயாரிப்பதாக உத்தேசம்.

சினிமாவின் அடிப்படை புரிதல் எதுவுமில்லாமல் இருந்தார். பணமும் கேமிராவும் இருந்தால் படத்தை எடுத்துவிட முடியும். அதை வணிகம் செய்வதில் எவ்வளவு சூட்சமங்கள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். லேசுப்பட்ட காரியமில்லை. ‘ஏப்ரல் மார்ச் வரைக்கும் சினிமாவின் நுட்பங்கள் பத்தியெல்லாம் கொஞ்சம் தேடிப்புடிங்க...ஓரளவுக்கு ஐடியா கிடைக்கட்டும்..மே மாசத்துக்கு மேல பட வேலையை ஆரம்பிங்க’ என்று சொல்லியிருந்தேன். அவருக்கும் அது சரியான அணுகுமுறையாகப்பட்டிருக்க வேண்டும். ஒத்துக் கொண்டார்.

அதன்பிறகு அடிக்கடிசந்திப்பதுண்டு. வரும்போதெல்லாம் கையில் ஒரு பென்-டிரைவுடன் வருவார். அதில் நல்ல கன்னடப்படங்களாக வைத்திருப்பார். கொடுத்துப் பார்க்கச் சொல்வார். தனது கனவுப்படத்துக்கான reference அவை. மிக ஆர்வமாக இருந்தார். நிறையப்படங்களைப் பார்த்திருந்தார். சினிமா குறித்து வாசிப்பதும் பலரிடம் பேசுவதுமாகவும் இருந்தார். நேற்றும் சந்திக்க வந்திருந்தார். வழக்கமாக அவர் வரும்போதெல்லாம் நான் காபி வாங்கித் தருவது வழக்கம். நேற்று நான் வருவதற்கு முன்பாகவே காபிக்கான டோக்கனும் கையில் ஒரு இனிப்புப் பொட்டலமுமாக நின்றிருந்தார். படம் தயாரிக்கிறார். அதற்குத்தான் இனிப்புப் பொட்டலம்.

அது ஒரு சுவாரஸியமான கதை.

அதற்கு முன்பாக இவரைப் பற்றிச் சொல்வதற்கு இன்னமும் கொஞ்சம் இருக்கின்றன. அம்மாவும் அப்பாவும் இல்லை. சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். ஜே.சி.சாலையில் சிறிய வீடொன்று உள்ளது. வீட்டில் தனியாகத்தான் தங்கியிருக்கிறார். சித்தி மாமா என்று தூரத்துச் சொந்தங்களின் உதவியினால் டிப்ளமோ வரைக்கும் படித்திருக்கிறார். துறுதுறுப்பானவர். பகலில் கல்லூரியில் வேலை. மாலையில் பேல்பூரிக்கடையும் நடத்துகிறார். தமக்கான சம்பளம் குறைவென்றும் பேல்பூரிக்கடை நடத்திக் கொள்வதாகவும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் சொல்லியிருக்கிறார். சரியென்று சொன்ன நிர்வாகத்தினர் தள்ளுவண்டியை கல்லூரி வளாகத்தில் நிறுத்திக் கொள்வதற்கும் அனுமதித்திருக்கிறார்கள். 

காலையில் எழுந்து கடைக்குத் தேவையான மசாலாவை வீட்டிலேயே அரைத்துக் கொண்டு வந்து கல்லூரி கேண்டீனில் வைத்துக் கொள்கிறார். மாலையில் வியாபாரம். ‘எப்படியும் ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு வரைக்கும் நிற்கும்’ என்றார். அந்த வருமானம்தான் அவரைக் கனவு காணத் தூண்டியிருக்கிறது. அவரது நண்பர் ஒருவரின் மூலமாக பெங்களூரில் இருக்கும் காரணத்தின் அடிப்படையில் என்னைச் சந்தித்திருக்கிறார். 

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயத்தை என்னிடம் சொல்லாமல் விட்டிருந்தார். ஒருவேளை அது முக்கியமில்லை என்று அவர் நினைத்திருக்கக் கூடும். தமது பேல்பூரிக்கடையை ஒரு மிக முக்கியமான தமிழ் பிரமுகரின் வீட்டுக்கு முன்பாக நடத்துகிறார். அந்தப் பிரமுகர் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்லும் போது இவர் வணக்கம் வைப்பது வழக்கம். பையனின் குடும்பம், வேலை குறித்தெல்லாம் மெல்ல மெல்லத் தெரிந்து கொண்டவர் இவர் மீது சற்றே அதிகமாகப் பாசம் வைத்திருக்கிறார். செல்போனில் பேசிக் கொள்கிற அளவுக்கு பாசம் அது. அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களுக்கே ஆச்சரியம்தான். தமிழர்களிடமே கூட அதிகமும் பழகாத அந்தப் பிரமுகர் ஒரு கன்னடக்காரப் பையனிடம் நன்றாகப் பேசிப் பழகும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்?

வீட்டில் தனியாக இருந்த பிரமுகர் இவரை அழைத்து வைத்துக் கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார். பேச்சுவாக்கில் தான் சினிமா தயாரிப்பது பற்றிய விவரங்களைச் சொல்லியிருக்கிறார் நண்பர். பேல்பூரிக்கடை நடத்துகிற பையனுக்கு அவ்வளவு பணம் எப்படி என்று குழம்பியவரிடம் தமது திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். ‘இப்போ கையில் எவ்வளவு இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். இவர் மூன்று லட்சம் என்று சொல்லவும் தமது நண்பரை அழைத்து அறிமுகப்படுத்தி ‘நம்ம பையன்..மூணு லட்சம் தர்றான்...பார்ட்னரா சேர்த்துக்குங்க...தொழில் கத்துக்கணும்.அதுதான் முக்கியம்....நீங்க பொறுப்பு’ என்று சொல்லியிருக்கிறார். அதிர்ஷ்டம் என்பதா முகராசி என்பதா என்று தெரியவில்லை. பிரமுகரின் நண்பர் பெயர் பெற்ற தயாரிப்பாளர். பிரமுகர் சொன்னதற்காகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவர் இன்னமும் பணம் கூடத் தரவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஷரத்துகள் தெளிவாக இருந்தன. அந்த ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டுதான் இனிப்புப் பொட்டலத்துடன் வந்திருந்தார். 

தயாரிப்பாளரும் பிரமுகரும் ‘பேல்பூரிக்கடை நடத்துறதையெல்லாம் இப்போ சொல்ல வேண்டாம்..சினிமாக்காரங்க மதிக்கமாட்டாங்க...ஜெயிச்சுட்டு சொல்லிக்கலாம்’ என்றிருக்கிறார்கள். இவர் இடது காதில் கடுக்கண் அணிந்து, குறுந்தாடி வைத்து தோரணையையே மாற்றியிருக்கிறார். கடந்த பத்து நாட்களாக தயாரிப்பாளர் இவரைக் கூடவே அழைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். நிறையப் பிரபலங்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘நம்ம படத்துல பார்டனர்’ என்றுதான் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இப்படி நிறையச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது.

வாழ்க்கையில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கிறவர்களுக்கு எப்படியாவது கதவு திறந்துவிடும். நம்மைவிடப் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் போது ‘இதையெல்லாம் எப்படி பேசுவது? ஏதாவது தப்பா எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்றெல்லாம் தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். அதை உடைத்துவிட வேண்டும். யார் மூலமாக எந்த வாய்ப்பு வரும் என்று யாருக்குத் தெரியும்? 

இது பக்காவான calculative risk. ‘ஒருவேளை படம் விழுந்துடுச்சுன்னா சமாளிச்சுடுவீங்களா?’ என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று கேட்கவில்லை. ஆனால் அவராகவே சொன்னார். ‘மூணு லட்சம்தான் சார்...ஆறு மாசத்துல பேல்பூரிக்கடையில் சம்பாதிச்சுடுவேன்...கத்துக்கிறேன்ல...அது முக்கியம்..வயசு இருக்கு..பார்த்துக்கலாம்’ என்றார். தெளிவாகப் பேசினார். வாயடைத்துப் போனேன். ஜெயித்துவிடுவார். ஜெயிக்கமாட்டாரா என்ன?