Jan 23, 2017

வெற்றித்துளி

நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் கழைக்கூத்தாடிகளின் காலனியில் வசிக்கும் ஜிம்னாஸ்டிக் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது வழங்கி வருவதைத் தெரிந்து வைத்திருக்கக் கூடும். சுமார் இருநூற்றைம்பது குடும்பங்கள் வசிக்கும் இந்தக் காலனி மக்களின் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்காகவே தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் இங்கே செயல்பட்டு வருகிறது. திருமதி.தனபாக்கியம் இப்பொழுது பயிற்சியாளராக இருக்கிறார். வெளியூர்வாசி. கிராமத்திலேயே தங்கியிருந்து பயிற்சியளிக்கிறார்.

கடந்த சில வருடங்களாக சற்றே சுணங்கியிருந்த இந்தப் பயிற்சி முகாம் இப்பொழுது வேகம் பிடித்திருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். நிசப்தம் சார்பில் யாராவது ஒருவர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். பயிற்சி முகாமிலிருக்கும் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விருதுப் போட்டியில் நான்கு மாணவர்கள் இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றிருக்கிறார்கள். மொத்தப் பரிசுத் தொகை ரூ.2,75,000. ஏழை மாணவர்களான அவர்களுக்கு இது பெருந்தொகை.


எப்படியும் முதலிடம் வந்துவிடுவார்கள் என நம்பியிருந்தோம். ஆனால் முதலிடம் வர முடியவில்லை. அதுவொன்றும் பிரச்சினையில்லை. சுணங்கியிருந்த அவர்களுக்கு இதுவொரு தொடக்கம்தான். ஏற்கனவே சொன்னது போல இந்தக் காலனியிலிருந்து ஒருவராவது ஒலிம்பிக் வரை சென்றுவிட வேண்டும் என்ற விருப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களால் முடியும். இயல்பாகவே மிகச் சிறப்பாக ஜிம்னாஸ்டிக் செய்யக் கூடியவர்கள்தான். சரியான தேவையைக் கண்டறிந்து உற்சாகமூட்ட வேண்டியிருக்கிறது. அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டவுன் அழைத்துப் பேசினார்கள். ‘உங்ககிட்டத்தான் முதல்ல சொல்லுறோம்’ என்றார்கள். வெகு சந்தோஷமாக இருந்தது. குடியரசு தினத்தன்று எப்படியும் நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சென்று பார்ப்பது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். ‘நம்ம கூட இருக்கிறான்’ என்கிற நினைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

மாணவர்களின் வெற்றியில் நமக்கு பெரிய பங்கு எதுவுமில்லை.  அவர்களின் உழைப்பு இது. ஆனால் ஆதரவாக இருந்திருக்கிறோம்.

அவர்களிடம் பேசும் போதெல்லாம் ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். நிசப்தம் வழியாகச் செய்யப்படுகிற உதவிகள் யாவுமே பல நாடுகளிலிருந்து வழங்கப்படுகிற உதவிகள் என்றும் உங்களின் ஒவ்வொரு வெற்றியையும் பல்வேறு நாடுகளிலிருந்து அவர்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். அது அந்தக் காலனி மக்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தமது பிள்ளைகளின் வெற்றியை பல நாடுகளில் வசிப்பவர்களும் கவனிக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.

எளிய மக்களுக்கு இதுதான் மிகப்பெரிய அங்கீகாரம். காலங்காலமாக ஊர் ஊராகச் சென்று கூத்தாடிய மக்கள் அவர்கள். இப்பொழுதுதான் ஓரிடத்தில் தங்கி வாழ்கிறார்கள். சேர்மேன் கந்தசாமி என்ற உள்ளூர் பெரிய மனிதர்தான் தமது நிலத்தை வழங்கி குடிசை அமைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். இப்பொழுது அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஓடிக் கொண்டேயிருந்த அந்த மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்முடைய ஆதரவையும் அங்கீகாரத்தையும்தான். அதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும். கொண்டேயிருப்போம்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். உதவிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் சார்பிலும்!