Jan 16, 2017

வானவன் மாதேவி

வானவன் மாதேவி எழுதிய மின்னஞ்சல் இது. அவர் செய்த/செய்து கொண்டிருந்த பணிகளை அவரின் எழுத்து வழியாகவே தெரியப்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டில் அவர் எழுதிய இந்த மின்னஞ்சலை பிரசுரம் செய்கிறேன்.

நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து இன்னொரு அறக்கட்டளைக்கு நேரடியாக உதவி வழங்குவதில்லை என்ற விதிமுறையின்படி ஆதவ் அறக்கட்டளைக்கு உதவவில்லை. ஆயினும் சகோதரியின் மீது மிகுந்த மரியாதை உண்டு.


வானவன் மாதேவி மாதிரியான மனிதர்கள் நீண்டு வாழ்ந்திருக்க வேண்டும். துன்பத்தை அனுபவித்தாலும் தன்னைப் போன்றவர்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக ஆதவ் அறக்கட்டளையை நடத்தி வந்தவர். பொருளாதார சுதந்திரத்துடன், முழுமையான உடல்பலத்துடன் சமூகத்திற்காக துரும்பை எடுத்துப் போடுவது பெரிய காரியமில்லை. வானவன் மாதேவி மாதிரியான மனிதர்கள் தன்னலம் கருதாது சமூகத்திற்காக உழைப்பதுதான் இயற்கைக்கு நிகரான மனிதம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள். எனக்கும் அவர் ஒருவகையில் உந்துசக்தியாக இருந்தார்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் விட்டுச் சென்ற பணிகள் இனியும் தொடரவும் என்னுடைய பிரார்த்தனைகள். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

                                                                       ****


தோழர் வா.மணிகண்டன் அவர்களுக்கு ,

வணக்கம். தங்களின் இலக்கிய பணியும் சமூக பணியும் நட்புகள் வாயிலாக அறிந்தேன். வாழ்த்துக்கள் தோழர்.

என் பெயர் வானவன் மாதேவி .நானும் என் சகோதரி வல்லபி இருவரும் சேலத்தில் ஆதவ் டிரஸ்ட் என்னும் சேவை அமைப்பை நடத்தி வருகிறோம் . நான் என் சிறுவயது முதலே துயருறும் எவ்வுயிருக்கும் இரங்கும் இயல்பானவளாதலால் தசைசிதைவு நோய் தாக்கத்தின் பாதிப்பை நானும் உணர்ந்து என் தங்கையின் (வல்லபி) பாதிப்புகள் என்னைக்காட்டிலும் வேகமாக அதிகரித்ததையும் கண்டு ஏற்பட்ட வேதனைகளும் இந்த சேவை அமைப்பு ஆரம்பிக்க தூண்டியது. எங்கள் நிலை பொருளாதார அளவில் அவ்வளவு ஒன்றும் துயரமானதல்ல.. காந்தியின் எளிமை இளமையிலேயே கைகூடியதாலும் பெரிய ஆசைகள் ஏதுமின்றி, இருப்பதில் நிறைவடையும் இயல்பினால் இது சாத்தியமானது. இருந்தபோதும் சிகிச்சைகளுக்கு ஆன செலவுகள் தந்த சலிப்புகளையும் அவை தரும் ஏமாற்றங்களால் ஏற்படும் விரக்தியும் உண்மையில் மிகவும் கொடுமையானவை...

உண்மையில் நோய்களுக்காக என்னவிதமான மருத்துவம் அவசியம் என்பதில் யாருக்கும் தெளிவில்லாமலே தான் இருந்தோம். பிறகு அனைத்தும் பார்த்து இறுதியில் சில அவசிய மருத்துவ முறைகளாக இயன்முறை மருத்துவமும் (Physiotherapy) தொடுசிகிச்சை (Acupressure) ஆயுர்வேதம் (Ayurveda) ஹோமியோபதி (Homeopathy) & யோகா (Yoga) போன்றவை நோயின் தீவிரத்தைக்குறைக்க உதவுவதை கண்கூடாகக் கண்டோம்.

ஆதவ் டிரஸ்ட் (Aadhav Trust) குறிப்பாக தசைச் சிதைவு நோயால் (Muscular Dystrophy) பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு உதவி செய்யவும், பிற சமூகப் பணிகள் செய்யவும், சிறப்புத் தேவை உள்ளவர்களுக்கு உதவவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2009 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஆதவ் அறக்கட்டளை மூலமாக தசைச் சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்திவருகிறோம். இதுவரை சேலம், ஈரோடு, திருப்பூர் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடத்தி உள்ளோம்.

மேலும் சேலம், திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹோமியோபதி, ஆயுர்வேதம், பிசியோதெரபி உள்ளிட்ட மாற்று மருத்துவர்களைக் கொண்டு இலவச மருத்துவ முகாம் நடத்தி உள்ளோம்.

இம்முகாம்களில் சக்கர நாற்காலி, தையல் மிஷின், மிகவும் மெலிந்த உடல்கொண்டவர்களில் வசதியற்றவர்களுக்கு கட்டில் மெத்தை போன்றவற்றை வழங்கி அவர்களின் வலியை போக்கி வருகிறோம். மேலும், கல்வி உதவிகளும் உடைகளும் வழங்குகிறோம்.

பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு,மரம் நடுதல், ஒழுக்கம், புத்தக வாசிப்பு, பண்பாட்டுக் கலைகள் மற்றும் சேவை குறித்து உரையாற்றி வருகிறோம்.

கணினி பயிற்சி மையம், படிப்பகம் துவக்கப்பட்டுள்ளது. கணினி மையம் பொதுவாக ஏழை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனடையும் குறைந்த கட்டண செலவில் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் பிஸியோதெரபி, அக்கு பிரஷர், யோகா மற்றும் வர்மா சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கியும், பயனாளிகளின் பயண செலவை வழங்கியும், மதிய உணவு வழங்கியும் வருகிறோம்.

சேலம் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டுள்ள ஆதவ் ட்ரஸ்ட் அதன் சிகிச்சை மையத்தின் வாயிலாக தினந்தோறும் இலவச பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

வீடுதான் உலகம் என்று இருக்கும் இவர்களது மகிழ்வுக்காக குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இதுவரை ஏற்காடு , அண்ணா பூங்கா மற்றும் முத்தூர் டேம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளோம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியில் நின்றுவிடுகிறார்கள். எனவே, ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு ஒவியம், சிற்பம், நாட்டுப்புறப்பாடல், ஓரிகாமி, கதை சொல்லல் போன்ற பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.

தற்போதைய பணிகள் 
1. தசைச்சிதைவு நோய் (muscular dystrophy), மூளை முடக்குவாதம் (cerebral palsy), மனவளர்ச்சி குறைபாடு, ஆடிசம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்விக்காக உதவிவருகிறது ஆதவ் ட்ரஸ்ட். 

2. ஆதவ் பராமரிப்பு இல்லத்தில் தினமும் இயன்முறை மருத்துவமும்(Physiotherapy) ஹோமியோபதி மருந்துகளும் வழங்கி வருகிறது. வாரம் ஒரு முறை ஆயுர்வேத மருத்துவம் அக்குபிரஷர் மற்றும் யோகா பயிற்சியும் வழங்கிவருகிறது.

3. 14.7.2014 முதல் பள்ளி செல்ல இயலாத சிறப்புக்குழந்தைகளுக்கான கல்விமையமும் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

4. க்ராபிக்ஸ், அனிமேஷன் உள்ளிட்ட கணினி பயிற்சி வழங்கிவருகிறது.

5. கைவிடப்பட்ட நோய்மையாளர்களுக்கு அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நம்பிக்கை ஒளியூட்டும் பொருப்பை ஆதவ் ஏற்றுக்கொண்டுள்ளது.. அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் நோய்மையின் பாதிப்பில் இருந்து காக்கவும் ஓரளவு முன்னேற்றம் அடையச்செய்யவும் தொடர்ந்து முயன்றுவருகிறது. கடந்த ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றமும் உள்ளது. 

தங்களை எங்கள் ஆதவ் டிரஸ்ட் அன்போடு என்றென்றும் வரவேற்கிறது.

இப்படிக்கு,
வானவன் மாதேவி

ஆதவ்ட்ரஸ்ட்
aadhavtrust.webs.com

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...


Unknown said...

உண்மயில் மிக அபூர்வமான பெண் .தசைசிதைவு நோயளிகளுக்கு அவர்தந்த நம்பிக்கை இணைஇல்லாதது .
சகோதரியின் ஆன்ம சாந்தியடைய பிராத்திப்போம் .