Jan 31, 2017

எப்படி சாத்தியம்?

யுவராஜூக்கு இருபத்தொன்பது வயதாகிறது. சென்னையில் ஒரு சிறு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நவம்பர் 27 ஆம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டு அடிவயிற்றில் பலமான அடி விழுகிறது. ஒரு வயதுக் குழந்தையுடன் உள்ள மனைவியின் தலையில் பெரும் பாரம் இறங்குகிறது. யுவராஜின் வீட்டில் அவர் மட்டுமே ஒரே சம்பாத்தியம். மருத்துவமனையில் ஆலோசனை செய்துவிட்டு ஒரு சிறுநீரகத்தை எடுக்கச் சொல்லிவிட்டார்கள். வயிற்றுக்குள் நிறைய பிரச்சினைகள். குடல் பகுதி எதிர்பார்த்த அளவில் வேலை செய்யவில்லை. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சொன்ன செலவு பெருந்தொகை. ‘நீங்க வேணும்ன்னா வேற மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கட்ட வேண்டும்.

யுவராஜின் நண்பர் பிரபாதான் தகவல் கொடுத்தார்.

உதவி தேவைப்படுகிறவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு பின்னணியை விசாரிக்க வேண்டியிருக்கும். குடும்பப் பொருளாதார நிலை, எவ்வளவு உதவி தேவைப்படுகிறது உள்ளிட்ட விவரங்களையெல்லாம் சேகரித்துதான் முடிவு செய்ய முடியும். சமீபமாக நிசப்தம் அறக்கட்டளையில் மிகச் சிறந்த தன்னார்வலர்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். உதவி தேவைப்படுகிறவர்களின் விவரங்களை குழுமத்தில் அனுப்பி வைத்தால் யாரேனும் ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். உதவி தேவைப்படுகிறவர்களைச் சந்தித்துப் பேசுவது, விவரங்களைச் சரிபார்ப்பது, எவ்வளவு பணம் தேவைப்படுகிறது அதில் எவ்வளவு தொகையை அவர்களாகவே சமாளித்துக் கொள்ள முடியும் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்களைச் சேகரித்துக் குழுமத்துக்கு அனுப்புகிறார்கள். தேவைப்பட்டால் குழுமத்தில் விவாதமும் நடைபெறுகிறது.

அப்படித்தான் யுவராஜின் குடும்பத்தைச் சந்தித்து விவரங்களைச் சேகரிப்பது உள்ளிட்ட அத்தனை பொறுப்பையும் விஜயகுமார் எடுத்துக் கொண்டார். யுவராஜ் குறித்தான அத்தனை விவரங்களையும் அனுப்பிக் கொண்டேயிருந்தார். ஒற்றைச் சிறுநீரகம் நீக்கப்பட்டு நாற்பத்தைந்து நாட்களுக்கு யுவராஜ் மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்தார். குழாய் மூலமாக உணவு வழங்கப்பட்டது. வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து மனைவி செலவுகளைச் சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் செலவு தாங்கமுடியாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அப்பொழுதும் விஜய் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஜிப்மரில் செலவு குறைவுதான் என்றாலும் வேறு வழியில்லாமல் வலது கால் பாதத்தை நீக்கிவிட்டார்கள். கடைசியில் சிறுகுடல் பகுதியில் குழாய் பொருத்துவதற்காக சென்னையில் எஸ்வி என்ற மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்பொழுது கையில் இருந்த மொத்தப் பணமும் கரைந்திருக்கிறது. கடைசியாக அறுவை சிகிச்சை முடிந்து கட்ட வேண்டிய பணம் என்று பதினைந்தாயிரம் பில் வந்திருக்கிறது. விஜய் மருத்துவமனையில்தான் இருந்தார்.

மருத்துவமனையிலிருந்து விஜய் அழைத்த போது கோபியில் இருந்தேன். சனிக்கிழமை மாலை ஆகியிருந்தது. இனி காசோலையை திங்கட்கிழமைதான் அனுப்ப முடியும். விஜய் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தனது வங்கிக்கணக்கின் காசோலையில் தொகையை எழுதி மருத்துவமனையில் கொடுத்துவிட்டு ‘செவ்வாய்க்கிழமை வரைக்கும் இதை வைத்திருங்கள்..வேறொரு காசோலையைக் கொண்டு வந்து கொடுத்து இதை வாங்கிக் கொள்கிறேன். ஒருவேளை வரவில்லையென்றால் பணத்தை என்னுடைய கணக்கிலிருந்தே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். 

மருத்துவமனைகள் என்றாலே மோசம் என்று பேச வேண்டியதில்லை. அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இன்று காசோலை மருத்துவமனையில் வழங்கப்பட்டுவிட்டது. பதினைந்தாயிரம் என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதற்காக கடைசி வரைக்கும் யுவராஜின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி தன்னுடைய காசோலையைக் கொடுத்துவிட்டு வந்தது என விஜயகுமார் வெகுவாக மெனக்கெட்டிருக்கிறார். 


‘எப்படி இத்தனை வேலைகளைச் செய்ய முடிகிறது?’ என்று யாராவது அடிக்கடி கேட்டுவிடுகிறார்கள். விஜய் மாதிரியானவர்களைத்தான் கை காட்ட வேண்டும். யாருடைய முகமும் வெளியில் தெரியாது. ஆனால் செயல்படுகிறார்கள். அவர்களால்தான் சாத்தியம். அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோம் எனக் களமிறங்கும் வரைக்கும்தான் தயக்கம் இருக்கும். இறங்கிவிட்டால் தாங்கிப் பிடிக்க யாராவது கை கொடுத்துவிடுவார்கள். நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு உதாரணம். எதிர்காலத்தில் இன்னமும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். 

அந்த நம்பிக்கை வந்திருக்கிறது. 

யுவராஜ் நிச்சயம் நலம் பெற்றுவிடுவார். அவர் பூரண நலமடைய மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்வோம். அவருடைய மனைவிக்கும் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் ஆன்ம பலத்தை ஆண்டவன் அருளட்டும். நன்கொடையாளர்களுக்கும், நிசப்தம் அறக்கட்டளையில் இணைந்து செயல்படுகிற தன்னார்வலர்களுக்கும் நன்றி. விஜய்க்கும், பிரபாவுக்கும் தனிப்பட்ட நன்றி.

ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா?

ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். கன்னடக்காரர். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுவார். அவ்வப்போது பேசிக் கொள்வதுண்டு. அவர்தான் ‘குரு..நீங்க ஒருத்தரை சந்திச்சே தீரணும்’ என்றார். அவர் சொன்னது சிந்து என்கிற தெலுங்குப் பெண்ணை. உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியாளர். அவர் மூன்று மாதங்களுக்கு ஜெர்மனி செல்லவிருப்பதாகவும் அதற்கு முன்பாக அவரிடம் பேசச் செல்வதாகவும் சொன்னார். தொற்றிக் கொண்டேன். ராஜராஜேஸ்வரி நகரில் சிந்து தங்கியிருக்கிறார். அவரோடு இன்னும் சிலரும் தங்கியிருக்கிறார்கள்.

சிந்துவுக்கு ஐந்து வயது இருக்கும் போதே பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அந்தக் காலத்து பஜாஜ் வண்டியில் அம்மா பின்னால் அமர்ந்து கொள்ள, சிந்துவை முன்பக்கமாக நிறுத்தி அப்பா ஓட்டிச் சென்றிருக்கிறார்.  சென்று கொண்டிருந்த போது ஒரு வாகனம் வேகமாக வந்து அடித்து வீசியிருக்கிறது. அப்பா அதே இடத்திலேயே நசுங்கிவிட அம்மாவுக்கு தலையில் அடி. ஒன்றிரண்டு நாட்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவர் இறந்து போய்விட்டார். சிந்துவுக்கும் சாதாரணக் காயமில்லை. அந்த வாகனம் இழுத்துச் சென்றிருக்கிறது. இரண்டு கால்களும் நசுங்கி வலது கையும் இல்லை. வெறும் இடது கையோடு உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு நினைவு தெரிந்து கண்விழித்த ஐந்து வயதுக் குழந்தைக்கு உலகமே இருண்டு கிடந்திருக்கிறது. பெற்றவர்கள் இல்லை; கால்கள் இரண்டுமில்லை; ஒரு கையுமில்லை.

உறவினர்கள் சிலர் தங்கள் வீடுகளில் தங்க வைத்திருக்கிறார்கள். ‘இவளுக்கு ஊழியம் செய்ய முடியாது’ என்று முடிவெடுத்தவர்கள் மெல்ல மெல்லத் தள்ளி கடைசியில் ஒரு விடுதியில் கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கொடூரமான விடுதி அது. சரியான உணவு, பராமரிப்பு என எதுவுமே இல்லாத இருள் சூழ் உலகத்திலிருந்து வெளியே வர வழியே இல்லாமல் இரண்டு மூன்று வருடங்கள் கழித்தவர் எதையுமே படிக்கவில்லை. தன்னைச் சுற்றி எல்லாமே பொய்த்துப் போனதாக நினைத்துக் கொண்டிருந்த சிந்து அந்த வயதிலேயே தற்கொலைக்குக் முயன்று தோற்றிருக்கிறார். எப்படி தற்கொலை செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத வயது அது. எப்படிச் சாக முடியும்?

ஏழு வயது இருக்கும் போது ஒரு கன்னட தம்பதியினர் தமது குழந்தையின் பிறந்தநாளுக்காக உணவளிக்க வந்திருக்கிறார்கள். விடுதியில் சிந்துவையும் பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு சிந்துவை கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டார்கள். வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் வேறொரு நல்ல விடுதிக்கு இடம் மாற்றிக் கொடுத்து அவரது படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பணமும் வசதியும் மட்டுமே மனிதர்களை உருவாக்கிவிடுவதில்லை. சொல்- அதுதான் மனிதர்களை உருவாக்குகிறது. அப்படியான சொற்களைச் சொல்வதற்கு சிந்துவுக்கும் ஒருவர் வந்து சேர உருவேற்றி மெருகேற்றியிருக்கிறார். விடுதிக் காப்பாளர் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ள சிந்து இருளிலிருந்து வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

சிந்துவைச் சந்தித்தோம். ஜெர்மனி கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அறிமுகத்திற்குப் பிறகாக சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். புதிய மனிதர்களைப் பார்க்கிறோம் என்ற எந்தத் தயக்கமும் இல்லாத பேச்சு அது. அவ்வளவு தன்னம்பிக்கை அவருக்குள் இருந்தது. 

‘எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?’ என்றார். மெளனமாக அமர்ந்திருந்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு ‘Achievable targetன்னு ஒண்ணு வெச்சுட்டு அதுக்கு வேலை செஞ்சா மத்த எல்லாத்தையுமே மறந்துடுவோம்’ என்றார். வார்டன் சொன்ன வார்த்தைகளாம் இது. நாம் கீழே கிடக்கும் போது பரிதாபப்படுகிறவர்கள்தான் அதிகம். கை தூக்கிவிடுகிறார்களோ இல்லையோ- உச்சுக் கொட்டுவார்கள். அப்படி உச்சுக் கொட்டுவதில் மனித மனத்திற்கு ஒரு ஆசுவாசம் கிடைக்கிறது. நமக்கு நடக்காதவரைக்கும் தப்பித்தோம் என்கிற ஆசுவாசம் அது. அதைத்தான் சிந்து மாதிரியானவர்கள் தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். ‘அதை உடைச்சுட்டாவே போதும்’ என்றார். ‘உன்னை தேத்திக்கிறதுக்காக என்னைப் பார்த்து நீ ஒன்னும் பரிதாபப்படத் தேவையில்லை’என்று முகத்தில் அறைவது போலச் சொன்னாலே பாதி வெற்றியடைந்த மாதிரிதான்.

அப்படி அறைவதற்குத்தான் படிப்பு. ‘என்கிட்ட ரொம்ப தாழ்வுணர்ச்சி இருந்துச்சு சார்...தாழ்வுணர்ச்சியைப் போக்காம என்னதான் செஞ்சாலும் வெறும் கோபமாத்தான் மிஞ்சிப் போகும்’என்றார். மனிதர்களை, அவர்களின் மனநிலையை, தன்னை என முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறார். நிறைய வாசிக்கிறார். புத்தகங்கள் அவருக்கு உலகின் பெருவெளியைக் காட்டியிருக்கின்றன். காஃப்கா பற்றியும் மார்க்வெஸ் பற்றியும் இயல்பாகப் பேச முடிந்தது. காஃப்காவின் விசாரணை நாவலில் வரும் க குறித்து பேசினார். அவர் பேசும் போது பெரும்பாலும் கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தேன். இத்தகைய மனிதர்களைப் பேசவிட்டு கேட்பதுதான் சரியானதும் கூட.

‘மனுஷனை மனுஷனா நினைக்கிறதுதான் பெரிய மரியாதை....நாம உசத்தின்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு யாரைப் பார்த்தாலும் அவங்களை அவமதிக்கிற மாதிரிதான்’என்று அவர் சொன்ன போது ஓங்கி அறைந்தது போல இருந்தது. மனதுக்குள் எவ்வளவு பெரிய கொம்பை வளர்த்துக் கொண்டு திரிகிறேன்? எவ்வளவு பெரிய உண்மையை இந்தப் பெண் மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்? அவரது வார்த்தைகளும் பேசுகிற தொனியும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருந்தன.  பி.டெக் முடித்துவிட்டு எம்.டெக் படித்துவிட்டு ஜெர்மனி செல்கிறார். இதோடு படிப்பு அவ்வளவுதானாம். ‘இதிலேயே குப்பை கொட்டமாட்டேன்’என்றார். தெளிவாக இருக்கிறார். தன்னாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே படித்திருக்கிறார். ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்து முழுமையாக சமூகப் பணிகளுக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னார். பெங்களூரிலிருந்து கிளம்பி கிராமப்புறங்களில் தங்கி குழந்தைகளுக்கான கல்வி, முன்னேற்றத்திற்காக வேலை செய்வதைத்தான் திட்டமாக வைத்திருக்கிறார். திருமணம் என்பதையெல்லாம் கிஞ்சித்தும் நினைக்கவில்லை போலிருக்கிறது.

‘மீடியா வெளிச்சம் இல்லாம...நேரடியான ரோல்மாடலா இருக்கணும்...பத்து பேரை மேலே கொண்டு வந்துவிட்டாலும் போதும்..சிந்து அக்கா மாதிரி இருக்கணும்ன்னு அந்தக் குழந்தைகளை நினைக்க வைக்கணும்’ என்றார். வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வெளியே வந்த பிறகு வழக்கறிஞர் ‘எப்படி குரு?’ என்றார். எனக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை. அப்படியான மனநிலையில் இருந்தேன்.  இந்த மாதிரியான பெண்கள் குறித்து வெளியே தெரிய வேண்டும். லட்சக்கணக்காணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் அவரிடம் பேசும் போது எதுவும் சொல்லவில்லை. நம்மைவிடவும் அவர் தெளிவானவர் என்ற சிந்தனையே எதையும் பேச அனுமதிக்கவில்லை. ஆளுமை என்பது இதுதான். நாம் சொல்வதுதான் சரி என்று எதிராளியை மனப்பூர்வமாக நம்ப வைத்துவிட வேண்டும். சிந்து அப்படியான ஆளுமை.

Jan 30, 2017

புத்தகக் கண்காட்சி பேச்சு- வீடியோ

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் பேசியதை பதிவு செய்து அந்த சலனப்படத்தை வலையேற்றியிருக்கிறார்கள். இவ்வளவு விரைவாக வலையேற்றிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சுட்டி(யை)க்காட்டிய நண்பர் கதிர்வேலுக்கு நன்றி. 

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி பற்றிய முந்தைய பதிவு மழைக்காற்று

இருபத்தேழு நிமிட பதிவு இது. நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லவும். ‘ஆளை விடு’ என்கிறவர்கள் வலது கைப் பக்கத்தில் மேற்புறத்தில் இருக்கும் x குறியை அழுத்தித் தப்பித்துவிடவும். விளைவுகளுக்கு இந்த வீடியோவை காண்பவர்களே ஜவாப்தாரி.

மழைக்காற்று

சனிக்கிழமையன்று பெரம்பலூரில் நல்ல மழை பெய்ந்திருந்தது. நிலமெல்லாம் சகதி. ஞாயிறு மதியம் பேருந்திலிருந்து இறங்கி நின்று சவரக்கடையைத்தான் தேடினேன். மலேஷியன் ஸ்டைல் சலூன் ஒன்றிருந்தது. தலையில் விதவிதமாகக் கோடு போட்டு படம் எடுத்து மாட்டியிருந்தார் கடைக்காரர் . நம் தலையில் கோடு போட வசதி வாய்ப்புகள் இல்லையென்பதால் முகத்தைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மழையின் குளிர்காற்றை உணர்ந்து பல மாதங்களாகிவிட்டன. மேற்கு மண்டலம் படு மோசம். நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. எந்த விவசாயியின் முகத்திலும் சுணக்கமே இல்லை. ஆழ்துளைக் கிணறுகளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் கூட இன்னமும் பதினைந்து நாட்களுக்குத் தாண்டினால் பெரிது என்கிறார்கள். பங்குனி சித்திரையை நினைக்கவே பயமாக இருக்கிறது.

தென்னம்பிள்ளைகளையும் கால்நடைகளையும் காத்துக் கொள்ள தினசரி ஆயிரம் ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘எப்படியாவது மழை வரும் வரைக்கும் இழுத்துவிட்டால் உயிர் பிழைத்துக் கொள்ளும்’ என்று நம்புகிறார்கள். மழை பெய்யாமல் சாயும் ஒவ்வொரு அந்தியும் அவர்களின் நம்பிக்கையில் பெரும் சம்மட்டியைக் கொண்டு அடிக்கிறது. 

பவானி ஆறுதான் எங்கள் ஊரின் வற்றாத ஜீவ நதி- இரண்டாண்டுகள் முன்பு வரைக்கும். இப்பொழுது அணையில் நீர் இல்லை. வயலிலும் நீர் இல்லை. பசுமை கொழிக்கும் சமயங்களில் எல்லாம் கணுக்கால் உயரத்திற்கு நீரை வயலில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அப்படி நின்றால்தான் நெல் விளையும் என்பார்கள். இருபத்தைந்து கிலோமீட்டர் தெற்கே சென்றால் காய்ந்து கிடக்கும். அந்தப் பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தை நம்பியிருப்பார்கள். வயிறு எரியும். வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான். ஒரு பக்கம் சிக்கனமில்லாத பயன்பாடு. இன்னொரு பக்கம் கஞ்சத்தனத்துடன் நீர் செலாவணி. அரசாங்கம் நினைத்திருந்தால் ஆறுகள், அவற்றிலிருந்து கால்வாய்கள், துணைக் கால்வாய்கள், தடுப்பணைகள் என விஸ்தரித்து அக்கம்பக்கத்து குளம் குட்டைகளை நிரப்பி பரவலாக நீர் வசதிகளை உருவாக்கி எல்லோருக்கும் நீர்ப்பயன்பாட்டை சமமாக்கியிருக்கலாம். அரசு செய்யவில்லை. செழித்துக் கொண்டிருந்த விவசாயிகள் ‘அவனும் விவசாயிதானே?’ என்று அளவோடு பயன்படுத்தி கடைமடை வரைக்கும் நீரை அனுப்பி வைக்கலாம். அவர்களும் செய்யமாட்டார்கள். இவர்களும் செய்யவில்லை. இரண்டே வருடங்கள்தான். நிலைமை தலைகீழாகியிருக்கிறது. ஆழ்குழாய்க் கிணறுகளையே பார்க்காத பூமியில் எழுநூறு அடிக்குச் சென்றாலும் நீர் இல்லை.

புவி உருவாகி நானூற்றைம்பது கோடி வருடங்கள் ஆவதாகச் சொல்கிறார்கள். ஆதி மனிதன் உருவாகி அறுபது லட்சம் வருடங்கள் ஆகிறதாம். பரிணாம வளர்ச்சியில் இன்றைய மனிதன் உருவாகி இரண்டு லட்சம் வருடங்கள் ஓடிவிட்டன. நாகரிக சமூகம் உருவாகி ஆறாயிரம் வருடங்கள் ஆகின்றன. கி.பி.1800களில்தான் தொழில் வளர்ச்சி உண்டாகிறது. 1990களில் உலகமயமாக்கலும் தாராள மயமாக்கலும் வந்து சேர்கின்றன. நானூற்றைம்பது கோடி வருடங்களாகத் தப்பிப் பிழைத்த வளம் கொழித்த பூமி கடந்த இருநூறு வருடங்களில் வேட்டையாடப்படுகிறது. நீர்வளம் சுண்டுகிறது. காற்று மாசடைகிறது. ஆகாயம் கரிப்பிடிக்கிறது. மண் மலடாகிறது. பஞ்ச பூதங்களில் நான்கை சீரழித்துவிட்டோம். நெருப்பு நம்மைக் கவ்விக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இல்லையா இது?

நம் முன்னோர்கள் நமக்களித்த வளங்களில் ஐம்பது சதவீதத்தைக் கூட அடுத்த சந்ததிகளுக்குக் கொடுக்கப் போவதில்லை. இதை எப்படி வளர்ச்சி என்பது? இது வீக்கம். நம்முடைய வளங்களையெல்லாம் பெருமுதலாளிகள் சுரண்டிச் சுரண்டி பண மூட்டைகளாகக் கட்டி நமக்கு சில்லரைகளை அள்ளி வீசுகிறார்கள். அந்தச் சில்லரைகளில் மயங்கி நாடும் தேசமும் மனிதனும் வளர்வதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்கள் வீங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீங்குவதற்காக நமது சந்ததிகளின் எதிர்காலத்தை காலடியில் போட்டு மிதித்து வீங்குகிறவர்கள் மேலே செல்ல நம் தோள்களைக் கொடுக்கிறோம்.

சற்றேறக்குறைய முப்பது நிமிடங்களில் இதைத்தான் பேசினேன். ‘பச்சையைக் காக்க’ என்பது தலைப்பு.

சொல்ல நினைத்தவற்றை அழுத்தமாகச் சொன்னேன் என்று தெரியும். ஆனால் மேடைகளுக்கு ஏற்ற மொழியில் பேசினேனா என்று தெரியவில்லை. எனக்கு முன்பாகப் பேசிய அருட்பிரகாசமும், எனக்குப் பிறகு பேசிய சுமதிஸ்ரீயும் பழுத்த மேடைப் பேச்சாளர்கள். எதை வேண்டுமானாலும் தலைப்போடு இயல்பாகக் கோர்க்கத் தெரிந்தவர்கள். சிரிக்கச் செய்கிறார்கள். கைதட்டச் செய்கிறார்கள். எல்லாவற்றையும் எந்தப் பதட்டமும் இல்லாமல் வெகு இயல்பாகச் செய்தார்கள். எனக்கு இன்னமும் அந்தக் கலை பிடிபடவில்லை. இன்னும் சில மேடைகள் தேவைப்படக் கூடும்.

பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத்தின் தலைவர் சரவணன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். ‘பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் உங்களை பேச அழைக்கிறோம். கூட்டங்களில் பேச எவ்வளவு பணம் தர வேண்டியிருக்கும்?’ என்றார். ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். அரசுப் பள்ளிகள், அரசு சார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் பணம் வாங்குவதில்லை. இன்றைக்கு மட்டுமில்லை- என்றைக்குமே இப்படித்தான் இருக்க வேண்டும் என இருக்கிறேன். அதே போலத்தான் புத்தகக் கண்காட்சி மாதிரியான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும். நமக்கு சற்றேனும் அறிவு இருப்பதாக நம்பி அழைக்கிறார்கள். அதை எளிய மக்களிடம் பகிர்ந்து கொள்ள பணம் எதற்கு? எதைக் கற்றுக் கொள்கிறேனோ அதை இந்த மக்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

வரும் போது கூட நானே வந்துவிடுகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். பெங்களூரு திரும்புவதற்கு அவர்களாகவே பேருந்துக்கு முன்பதிவு செய்துவிட்டார்கள். திருச்சி வரைக்கும் மகிழ்வுந்தில் அழைத்து வந்து இடையில் ஒரு நல்ல கடையில் நிறுத்தி உணவு வாங்கிக் கொடுத்து கை நிறைய இனிப்பும் பலகாரமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அனுப்பி வைத்தார்கள். வெகு மரியாதை.

தாரேஸ் அகமது என்ற மாவட்ட ஆட்சியர்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அவரைப் போன்ற மாவட்ட ஆட்சியர் கிடைத்ததற்கு பெரம்பலூர் மாவட்டத்து மக்கள் வெகு அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நிறையச் செய்திருக்கிறார். அதில் புத்தகக் கண்காட்சியும் ஒன்று. அவருக்குப் பிறகாக வந்திருக்கும் ஆட்சியர் நந்தகுமாரும் அதே ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வருடக் கண்காட்சி ஆறாவது ஆண்டு. அக்கம்பக்கத்து கல்வி நிறுவனங்களான ஹேன்ஸ் ரோவர், தனலட்சுமி சீனிவாசன், ராமகிருஷ்ணா போன்றவை  உறுதுணையாக இருக்கின்றன. நன்கொடைகள் வழங்குகிறார்கள். சரவணன் கைக்காசு சில லட்சங்களைச் செலவு செய்கிறார். உற்சாகத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி போன்ற இன்னொரு வெற்றிகரமான புத்தகக் கண்காட்சியை பெரம்பலூர் நடத்திக் கொண்டிருக்கிறது. கோடிகள் வரைக்கும் வியாபாரம் ஆவதாகச் சொல்கிறார்கள். பின் தங்கிய, சிறிய மாவட்டமான பெரம்பலூருக்கு இது மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு என்றுதான் நம்புகிறேன். நிகழ்த்திக் கொண்டிருக்கும் அத்துணை பேரையும் மனமாரப் பாராட்ட வேண்டும்.

இரவில் பத்தேகாலுக்கு பேருந்து. சுமதிஸ்ரீ மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் அருகில் வந்து ‘நீங்க இப்போ கிளம்பினால் சரியாக இருக்கும்’ என்றார். இரவில் திருச்சி கே.பி.என் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்த போது வெள்ளையும் சுள்ளையுமாக வேட்டி சட்டையில் புத்தகங்கள், பலகாரம், மடிக்கணினி என்று இரண்டு மூன்று பைகளை வைத்துக் கொண்டு நின்றேன். வித்தியாசமாகப் பார்த்தார்கள். பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகு எதை எதையோ மனம் யோசித்துக் கொண்டிருந்தது. தந்தை ஹோன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.வரதராஜன் கைகொடுத்து ‘உங்கள் செயல்களைப் பற்றி நிறையப் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்றார். நான் கவிதை எழுதியதை மறந்துவிட்டார்கள். எழுதுவதைச் சொல்கிறார்கள்தான் ஆனால் நிசப்தம் அறக்கட்டளையைத்தான் முன்னிறுத்துகிறார்கள். பெயருக்கு முன்னாலும் நிசப்தம் என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துகிறார்கள். அது இயல்புதான். நம்முடைய எந்தச் செயல்பாடு அடுத்தவர்களைக் கவர்கிறதோ அதோடுதான் நம்மைக் கோர்ப்பார்கள். இன்று நிசப்தம் முன்னிறுத்துகிறது.

நன்றி யாருக்குச் சொல்வேன் என்று தெரியும்தானே?!

Jan 27, 2017

வழிகாட்டி

மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புவதாகச் சொல்லி சற்றேறக்குறைய ஐம்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அத்தனை பேருக்கும் நன்றி. சுடர் பதிவில் எழுதிய போலவே ஐம்பது மாணவர்களுக்கு வழிகாட்டிகளை நியமிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. செய்யலாம்தான். ஆனால் பணிச்சுமை அதிகம். மாணவர்கள், வழிகாட்டிகள் என  இருதரப்பிலும் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கும். அறக்கட்டளைப் பணியுடன் இதையும் செய்யும் போது திணறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அகலக்கால் வைக்க வேண்டியதில்லை.

எதிர்காலத்தில் வழிகாட்டிகளையும் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வேலையை ஒருவர் முழுமையாக எடுத்துக் கொள்ளும் போது எண்ணிக்கையை மெல்ல மெல்ல அதிகரிக்கலாம் என்கிற யோசனை இருக்கிறது. இப்போதைக்கு இருபத்தோரு பேர்கள் வழிகாட்டிகளின் பட்டியலில் இருக்கிறார்கள். சற்றேறக்குறைய ஐம்பது மாணவர்களுக்கு உதவியிருப்போம் என்றுதான் நினைக்கிறேன். மாணவர்களின் படிப்பு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழிகாட்டிகளை ஒருங்கிணைத்துவிடலாம் என்ற யோசனை இருக்கிறது.

அனுப்பியிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் இந்தப்பட்டியல் தயாராகியிருக்கிறது. யாரேனும் தங்களின் பெயர் விடுபட்டிருப்பதாகவோ அல்லது செயல்பட வேண்டும் என்று விரும்பினாலோ மீண்டுமொருமுறை மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். 

பெயர்
துறை
இடம்
Dineshkumaar
IT- Testing
Chennai
Manokaran
CSIR
Karaikudi
Keerthi Narayan
IRS
Calicut
Bhaskaran
Mechanical
Coimbatore
Raja
IT- QA
Bangalore
Karthi Gopalaswamy
IT- Developer
US
Balasubramanian Ramasamy
SW-Consultant
US
Balamurugan
Aeronautics
Delhi
Raghuram Periyasamy
RBS
UK
Pratap
Software
US
Vetriselvan
Construction
Oman
Shiva subramaniam
IT
UK
Boopathi Ayyasamy
SW-Developer
Chennai
Santhosh
IT-Architect
Bangalore
Balakumar
BSNL
Madurai
Sivakumaran
SW
Vilupuram
Pawan
IT
Hyderabad
Murugesan
Operations
Saudi
Rakesh Natarajan
Sales
Bahrain
Kartikeyan Krishnamurthy
Analog Design
Germany
Asok
IT
US

தொடக்கத்தில் ஐந்து பேர்களுக்கு மாணவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கிறேன். 

வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்கள்-

1) வாரம் ஒரு முறையேனும் மாணவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். கல்வி சார்ந்து, ஆளுமை உருவாக்கம் சார்ந்து எந்தவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும்- பெரும்பாலான மாணவர்களுக்கு சொல்லத் தெரியாது. அதனால் ‘கண்டறிய வேண்டும்’ என்கிற சொல் பொருத்தமானதாக இருக்கும்.

2) ஆளுமை உருவாக்கத்திற்கென தனிப்பட்ட வழிமுறைகள்/வழிகாட்டும் நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தாங்களும் உள்ளீடுகளைத் தரலாம்.

3) தேர்வுகள், நல்ல தேர்ச்சி சதவீதம் ஆகியவை முக்கியமான குறிக்கோள்கள். இடைத் தேர்வுகளில் மாணவர்கள் என்ன மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்பதைக் கண்காணித்துக் கொள்வதும் நம்முடைய வேலையாக இருக்கும்.

4) வளாக நேர்முகத் தேர்வு/வேலை வாய்ப்புகளுக்கான தயாரிப்புகளுக்கு உதவ வேண்டும்.

5) ஆங்கில மொழிப்புலமையை வளர்த்துக் கொள்வதையும் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கண்காணிக்கவும்.

6) ஒரே வரியில் சொன்னால் - மாணவர்களின் வெற்றியில் வழிகாட்டிக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது.

5) முக்கியமான குறிப்பு: எந்தக் காரணத்திற்காகவும் நிதியுதவியைச் செய்யக் கூடாது. தேவையான உதவிகளை ஆலோசனை செய்துவிட்டு வழங்கலாம்.

ஒருவேளை மாணவர்களைச் சரியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றாலும் மாணவர்களிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையெனிலும் முன்பே தெரிவித்துவிடவும். அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

படிப்பு கூட பிரச்சினையில்லை. எப்படியாவது உருட்டிவிடுகிறார்கள். ஆனால் தயக்கம், வெட்கம் என்பதைத்தான் பல மாணவர்களாலும் உடைக்க முடிவதில்லை. வேலைக்கும், வளாக நேர்முகத் தேர்வுக்கும் எதைச் செய்ய வேண்டும் என்ற புரிதல் இருப்பதில்லை. மேற்படிப்புக்கான வாய்ப்புகள் என்ன என்பதைப் பற்றிய நிறையக் குழப்பம் இருக்கின்றன. ஆங்கிலத்தில் பேசுவதிலும் பிரச்சினை இருக்கிறது. நேர்காணலை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து உடை, தோரணை ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாறுதல், தன்னம்பிக்கையை வளர்த்தல் உள்ளிட்ட நிறையவற்றில் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடையே இருக்கிறது. இந்த உதவிகளைத்தான் வழிகாட்டிகள் செய்யவிருக்கிறார்கள். 

வருடம் ஒரு மாணவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறோம் என்பதுதான் மிகப்பெரிய ஆசுவாசம் இது. எப்படி இதை முன்னெடுக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து எதிர்காலத்தில் விரிவாகச் செய்யலாம்.

வாழை அமைப்பு இத்தகைய பணியைச் செய்கிறது. நிசப்தம் பணியின் செயல்பாடு அதிலிருந்து சற்று மாறுபட்டதாக இருக்கும்.
விவரங்களைத் தொடர்ந்து பதிவு செய்கிறேன். 

ஆர்வமுடன் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. இணைந்து செயல்படுவோம்.

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி

‘என்னையும் நம்பி பேசக் கூப்பிடுறாங்க’ என்று எழுதியிருந்தேன் அல்லவா? அந்த பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியின் அழைப்பிதழ் இது. தினமும் பேச்சாளர்கள் வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று நானும் பேசுகிறேன். ‘பச்சையைக் காக்க’ என்பதுதான் தலைப்பு. இயற்கை சார்ந்து இனி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சூழலியல் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிற எல்லாவற்றையும் விடவும் இன்றைக்கு இதுதான் முக்கியமாகத் தெரிகிறது. பல நூறு கோடி ஆண்டுகளாக உருவாகி மெருகேறிய இந்தப் புவியை வெறும் ஐம்பதாண்டுகளில் சின்னாபின்னப்படுத்தியிருக்கிறோம். கொத்திக் குதறியிருக்கிறோம். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு வாழ்வதற்கே தகுதியில்லாத மலட்டு மண்ணாக அடுத்த சந்ததியினருக்குக் கொடுத்துச் செல்வதற்கான எல்லாவிதமான முஸ்தீபுகளிலும் ஈடுபட்டிருக்கிறோம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

29.01.2017 அன்று என்னைப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அன்றைய தினமே இன்னமும் மூன்று பேர்கள் பேசுகிறார்கள். மற்ற மூவருமே கவிஞர்கள். நல்லவேளையாக நான் கவிதை எழுதியதையெல்லாம் மறந்துவிட்டார்கள். நெல்லை ஜெயந்தா நன்றாகப் பேசுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுமதி ஸ்ரீ பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அடித்து நொறுக்குவார். அவர்களைவிட நன்றாகப் பேசினால்தான் எடுபடும். இல்லையென்றால் ‘எவண்டா இவன்...’ என்று சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. எழுத்தைப் போலவேதான் பேச்சும். பேசப் பேச மெருகு கூடும். 

பள்ளி, கல்லூரிக்காலங்களில் நிறையப் பேசியதுண்டு. அரட்டை அரங்கத்தில் வட்டத்திற்குள் எல்லாம் வந்தேன். அதன் பிறகு கொம்பை வளர்த்துக் கொண்டு பேச்சிலிருந்து துண்டித்துக் கொண்டேன். அது மிகப் பெரிய தவறு. பேச்சும் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம்தான். நமது எண்ணங்களை ஆழமாகப் பதிய வைக்க பேச்சும் நிச்சயமாகப் பயன்படும். இனித் தொடர்ந்து பேசுவதற்கான வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம்.

பெரம்பலூர் பகுதிக்காரர்கள் யாரேனும் இருப்பின் சொல்லுங்கள். ஞாயிறு மதியமே பெரம்பலூருக்கு வந்து மாலை வரையிலும் அக்கம்பக்கத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம். 


Jan 25, 2017

சினிமா தயாரிக்கணும்

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பர் சந்திக்க வந்திருந்தார். எம்.ஜி. சாலையில் உள்ள வாசுதேவ் அடிகாஸ் கடையில் சந்தித்தோம். இருபத்தைந்து வயதைவிட முன்பின்னாக இருக்கக் கூடும். ஒரு தனியார் கல்லூரியில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். சொற்ப சம்பளம். ‘ஒரு படம் தயாரிக்கிறோம்..கதை வேணும்’ என்றார். கன்னடத்தில் இப்பொழுதெல்லாம் குறைந்த தொகையில் படம் தயாரிக்கிறார்கள். அந்த ஆர்வம்தான் நண்பருக்கும். நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கு ஐந்து லட்சம் போட்டு படம் தயாரிப்பதாக உத்தேசம்.

சினிமாவின் அடிப்படை புரிதல் எதுவுமில்லாமல் இருந்தார். பணமும் கேமிராவும் இருந்தால் படத்தை எடுத்துவிட முடியும். அதை வணிகம் செய்வதில் எவ்வளவு சூட்சமங்கள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். லேசுப்பட்ட காரியமில்லை. ‘ஏப்ரல் மார்ச் வரைக்கும் சினிமாவின் நுட்பங்கள் பத்தியெல்லாம் கொஞ்சம் தேடிப்புடிங்க...ஓரளவுக்கு ஐடியா கிடைக்கட்டும்..மே மாசத்துக்கு மேல பட வேலையை ஆரம்பிங்க’ என்று சொல்லியிருந்தேன். அவருக்கும் அது சரியான அணுகுமுறையாகப்பட்டிருக்க வேண்டும். ஒத்துக் கொண்டார்.

அதன்பிறகு அடிக்கடிசந்திப்பதுண்டு. வரும்போதெல்லாம் கையில் ஒரு பென்-டிரைவுடன் வருவார். அதில் நல்ல கன்னடப்படங்களாக வைத்திருப்பார். கொடுத்துப் பார்க்கச் சொல்வார். தனது கனவுப்படத்துக்கான reference அவை. மிக ஆர்வமாக இருந்தார். நிறையப்படங்களைப் பார்த்திருந்தார். சினிமா குறித்து வாசிப்பதும் பலரிடம் பேசுவதுமாகவும் இருந்தார். நேற்றும் சந்திக்க வந்திருந்தார். வழக்கமாக அவர் வரும்போதெல்லாம் நான் காபி வாங்கித் தருவது வழக்கம். நேற்று நான் வருவதற்கு முன்பாகவே காபிக்கான டோக்கனும் கையில் ஒரு இனிப்புப் பொட்டலமுமாக நின்றிருந்தார். படம் தயாரிக்கிறார். அதற்குத்தான் இனிப்புப் பொட்டலம்.

அது ஒரு சுவாரஸியமான கதை.

அதற்கு முன்பாக இவரைப் பற்றிச் சொல்வதற்கு இன்னமும் கொஞ்சம் இருக்கின்றன. அம்மாவும் அப்பாவும் இல்லை. சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். ஜே.சி.சாலையில் சிறிய வீடொன்று உள்ளது. வீட்டில் தனியாகத்தான் தங்கியிருக்கிறார். சித்தி மாமா என்று தூரத்துச் சொந்தங்களின் உதவியினால் டிப்ளமோ வரைக்கும் படித்திருக்கிறார். துறுதுறுப்பானவர். பகலில் கல்லூரியில் வேலை. மாலையில் பேல்பூரிக்கடையும் நடத்துகிறார். தமக்கான சம்பளம் குறைவென்றும் பேல்பூரிக்கடை நடத்திக் கொள்வதாகவும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் சொல்லியிருக்கிறார். சரியென்று சொன்ன நிர்வாகத்தினர் தள்ளுவண்டியை கல்லூரி வளாகத்தில் நிறுத்திக் கொள்வதற்கும் அனுமதித்திருக்கிறார்கள். 

காலையில் எழுந்து கடைக்குத் தேவையான மசாலாவை வீட்டிலேயே அரைத்துக் கொண்டு வந்து கல்லூரி கேண்டீனில் வைத்துக் கொள்கிறார். மாலையில் வியாபாரம். ‘எப்படியும் ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு வரைக்கும் நிற்கும்’ என்றார். அந்த வருமானம்தான் அவரைக் கனவு காணத் தூண்டியிருக்கிறது. அவரது நண்பர் ஒருவரின் மூலமாக பெங்களூரில் இருக்கும் காரணத்தின் அடிப்படையில் என்னைச் சந்தித்திருக்கிறார். 

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயத்தை என்னிடம் சொல்லாமல் விட்டிருந்தார். ஒருவேளை அது முக்கியமில்லை என்று அவர் நினைத்திருக்கக் கூடும். தமது பேல்பூரிக்கடையை ஒரு மிக முக்கியமான தமிழ் பிரமுகரின் வீட்டுக்கு முன்பாக நடத்துகிறார். அந்தப் பிரமுகர் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்லும் போது இவர் வணக்கம் வைப்பது வழக்கம். பையனின் குடும்பம், வேலை குறித்தெல்லாம் மெல்ல மெல்லத் தெரிந்து கொண்டவர் இவர் மீது சற்றே அதிகமாகப் பாசம் வைத்திருக்கிறார். செல்போனில் பேசிக் கொள்கிற அளவுக்கு பாசம் அது. அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களுக்கே ஆச்சரியம்தான். தமிழர்களிடமே கூட அதிகமும் பழகாத அந்தப் பிரமுகர் ஒரு கன்னடக்காரப் பையனிடம் நன்றாகப் பேசிப் பழகும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்?

வீட்டில் தனியாக இருந்த பிரமுகர் இவரை அழைத்து வைத்துக் கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார். பேச்சுவாக்கில் தான் சினிமா தயாரிப்பது பற்றிய விவரங்களைச் சொல்லியிருக்கிறார் நண்பர். பேல்பூரிக்கடை நடத்துகிற பையனுக்கு அவ்வளவு பணம் எப்படி என்று குழம்பியவரிடம் தமது திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். ‘இப்போ கையில் எவ்வளவு இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். இவர் மூன்று லட்சம் என்று சொல்லவும் தமது நண்பரை அழைத்து அறிமுகப்படுத்தி ‘நம்ம பையன்..மூணு லட்சம் தர்றான்...பார்ட்னரா சேர்த்துக்குங்க...தொழில் கத்துக்கணும்.அதுதான் முக்கியம்....நீங்க பொறுப்பு’ என்று சொல்லியிருக்கிறார். அதிர்ஷ்டம் என்பதா முகராசி என்பதா என்று தெரியவில்லை. பிரமுகரின் நண்பர் பெயர் பெற்ற தயாரிப்பாளர். பிரமுகர் சொன்னதற்காகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவர் இன்னமும் பணம் கூடத் தரவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஷரத்துகள் தெளிவாக இருந்தன. அந்த ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டுதான் இனிப்புப் பொட்டலத்துடன் வந்திருந்தார். 

தயாரிப்பாளரும் பிரமுகரும் ‘பேல்பூரிக்கடை நடத்துறதையெல்லாம் இப்போ சொல்ல வேண்டாம்..சினிமாக்காரங்க மதிக்கமாட்டாங்க...ஜெயிச்சுட்டு சொல்லிக்கலாம்’ என்றிருக்கிறார்கள். இவர் இடது காதில் கடுக்கண் அணிந்து, குறுந்தாடி வைத்து தோரணையையே மாற்றியிருக்கிறார். கடந்த பத்து நாட்களாக தயாரிப்பாளர் இவரைக் கூடவே அழைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். நிறையப் பிரபலங்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘நம்ம படத்துல பார்டனர்’ என்றுதான் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இப்படி நிறையச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது.

வாழ்க்கையில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கிறவர்களுக்கு எப்படியாவது கதவு திறந்துவிடும். நம்மைவிடப் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் போது ‘இதையெல்லாம் எப்படி பேசுவது? ஏதாவது தப்பா எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்றெல்லாம் தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். அதை உடைத்துவிட வேண்டும். யார் மூலமாக எந்த வாய்ப்பு வரும் என்று யாருக்குத் தெரியும்? 

இது பக்காவான calculative risk. ‘ஒருவேளை படம் விழுந்துடுச்சுன்னா சமாளிச்சுடுவீங்களா?’ என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று கேட்கவில்லை. ஆனால் அவராகவே சொன்னார். ‘மூணு லட்சம்தான் சார்...ஆறு மாசத்துல பேல்பூரிக்கடையில் சம்பாதிச்சுடுவேன்...கத்துக்கிறேன்ல...அது முக்கியம்..வயசு இருக்கு..பார்த்துக்கலாம்’ என்றார். தெளிவாகப் பேசினார். வாயடைத்துப் போனேன். ஜெயித்துவிடுவார். ஜெயிக்கமாட்டாரா என்ன?

Jan 24, 2017

நம் நண்பன்

சென்னைக் கலவரத்தில் மாணவர்கள் வன்முறை, விஷமிகள் வன்முறை என்றுதான் நேற்று காலையிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன். சமூக மற்றும் வீடியோ யுகத்தில் எந்தவொரு செயலையும் வெறும் வாய்ஜாலத்தால் மறைத்துவிட முடிவதில்லை. மாலைவாக்கில் வன்முறையைப் பற்ற வைத்ததே காவலர்கள்தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வரத் தொடங்கிவிட்டன. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வளவு தூரம் உண்மை என்று புரிந்து கொள்ளலாம்.

வன்முறை தொடங்கிய பிறகு வடபழனி உள்ளிட்ட இடங்களில் கலவரக்காரர்களும் சேட்டைகளைச் செய்திருக்கிறார்கள். சிக்கிய அரசு அதிகாரியின் வாகனத்தை ஒரு குழு எப்படித் தாக்குகிறது என்பதற்கு கீழே இருக்கும் வீடியோ உதாரணம்.எவனோ அடிக்கிறான், நொறுக்குகிறான், நெருப்பை  மூட்டுகிறான் என்பதற்கும் காவல்துறையே இதையெல்லாம் செய்கிறது என்பதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது.

ஆட்டோக்காரன் என்ன பாவம் செய்தான்? அவன் வண்டியை எரிப்பது, குடிசைகளுக்கு முன்பாக நிற்கும் வண்டிகளை நொறுக்குவது என ருத்ரதாண்டவத்தை காவல்துறை நிகழ்த்தியிருக்கிறது.

உளவுத்துறையின் வழியாக வேறொரு மாதிரியான தகவலைக் கசியச் செய்து பழிகயை பிறரின் மீது போட்டுவிட்டு காவல்துறை யாரோ சிலரின் ஏவல்துறையாக செயலாற்றிய கருப்பு தினத்தை பதிவு செய்து வலையேற்றியே அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கிடைத்த வீடியோக்களை ஆவணத்திற்காக இங்கே பதிவு செய்து வைக்கிறேன். இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கக் கூடும். கிடைத்தால் இதே பதிவில் இணைத்துவிடுகிறேன். நிரந்தர ஆவணமாக இருக்கட்டும்.

வெட்கப்படுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. முந்தின நாள் வரை சிரித்துக் கொண்டும் மாணவர்களோடு விளையாடிக் கொண்டுமிருந்த காக்கிச்சட்டைகள் ஒரே இரவில் ஏன் மாறிப் போனார்கள்? யார் மாறச் சொன்னார்கள்? புரிவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகக் கூடும். தனிமையில் யோசித்தால் உண்மையிலே வலிக்கிறது.

ஒருவேளை இவையனைத்து மார்ஃபிங் செய்யப்பட்டவை அல்லது போலியானவை என்பதாக இருப்பின் அதை நிரூபிப்பதும் காவல்துறையின் கடமைதான். ஏனெனில் இந்த சலனப்படங்கள் உலகம் முழுக்கவும் பரவியிருக்கின்றன.

(Videos can be seen through browsers)

When you see 'Plugin not supported'

This Error Happens when you try to View Flash content in Chrome Browser on Android.

Step 1: Go to Google Play Store,Do a Search for "Puffin Web Browser" and Install it .
Step 2: Open Puffin browser and Go to the URL where you have yourFlash Content.You will be able to see content that includes Flash Jan 23, 2017

வெற்றித்துளி

நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் கழைக்கூத்தாடிகளின் காலனியில் வசிக்கும் ஜிம்னாஸ்டிக் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது வழங்கி வருவதைத் தெரிந்து வைத்திருக்கக் கூடும். சுமார் இருநூற்றைம்பது குடும்பங்கள் வசிக்கும் இந்தக் காலனி மக்களின் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்காகவே தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் இங்கே செயல்பட்டு வருகிறது. திருமதி.தனபாக்கியம் இப்பொழுது பயிற்சியாளராக இருக்கிறார். வெளியூர்வாசி. கிராமத்திலேயே தங்கியிருந்து பயிற்சியளிக்கிறார்.

கடந்த சில வருடங்களாக சற்றே சுணங்கியிருந்த இந்தப் பயிற்சி முகாம் இப்பொழுது வேகம் பிடித்திருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். நிசப்தம் சார்பில் யாராவது ஒருவர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். பயிற்சி முகாமிலிருக்கும் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விருதுப் போட்டியில் நான்கு மாணவர்கள் இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றிருக்கிறார்கள். மொத்தப் பரிசுத் தொகை ரூ.2,75,000. ஏழை மாணவர்களான அவர்களுக்கு இது பெருந்தொகை.


எப்படியும் முதலிடம் வந்துவிடுவார்கள் என நம்பியிருந்தோம். ஆனால் முதலிடம் வர முடியவில்லை. அதுவொன்றும் பிரச்சினையில்லை. சுணங்கியிருந்த அவர்களுக்கு இதுவொரு தொடக்கம்தான். ஏற்கனவே சொன்னது போல இந்தக் காலனியிலிருந்து ஒருவராவது ஒலிம்பிக் வரை சென்றுவிட வேண்டும் என்ற விருப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களால் முடியும். இயல்பாகவே மிகச் சிறப்பாக ஜிம்னாஸ்டிக் செய்யக் கூடியவர்கள்தான். சரியான தேவையைக் கண்டறிந்து உற்சாகமூட்ட வேண்டியிருக்கிறது. அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டவுன் அழைத்துப் பேசினார்கள். ‘உங்ககிட்டத்தான் முதல்ல சொல்லுறோம்’ என்றார்கள். வெகு சந்தோஷமாக இருந்தது. குடியரசு தினத்தன்று எப்படியும் நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சென்று பார்ப்பது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். ‘நம்ம கூட இருக்கிறான்’ என்கிற நினைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

மாணவர்களின் வெற்றியில் நமக்கு பெரிய பங்கு எதுவுமில்லை.  அவர்களின் உழைப்பு இது. ஆனால் ஆதரவாக இருந்திருக்கிறோம்.

அவர்களிடம் பேசும் போதெல்லாம் ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். நிசப்தம் வழியாகச் செய்யப்படுகிற உதவிகள் யாவுமே பல நாடுகளிலிருந்து வழங்கப்படுகிற உதவிகள் என்றும் உங்களின் ஒவ்வொரு வெற்றியையும் பல்வேறு நாடுகளிலிருந்து அவர்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். அது அந்தக் காலனி மக்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தமது பிள்ளைகளின் வெற்றியை பல நாடுகளில் வசிப்பவர்களும் கவனிக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.

எளிய மக்களுக்கு இதுதான் மிகப்பெரிய அங்கீகாரம். காலங்காலமாக ஊர் ஊராகச் சென்று கூத்தாடிய மக்கள் அவர்கள். இப்பொழுதுதான் ஓரிடத்தில் தங்கி வாழ்கிறார்கள். சேர்மேன் கந்தசாமி என்ற உள்ளூர் பெரிய மனிதர்தான் தமது நிலத்தை வழங்கி குடிசை அமைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். இப்பொழுது அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஓடிக் கொண்டேயிருந்த அந்த மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்முடைய ஆதரவையும் அங்கீகாரத்தையும்தான். அதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும். கொண்டேயிருப்போம்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். உதவிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் சார்பிலும்!

Jan 22, 2017

நான் பெரிய ரவுடிங்க

நேற்று (21-ஜனவரி)யன்று கோபியில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டத்தில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. இரவு பனிரெண்டு மணிக்கும் கூட போராட்டக்களத்தில் ஆட்கள் இருப்பதாகச் சொன்னார்கள். கோபி மாதிரியான மூன்றாம் கட்ட சிறு நகரங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம். குடும்பத்தோடு வந்து பந்தலில் அமர்ந்திருக்கிறார்கள். உண்மையிலேயே கூட்டத்தைப் பார்த்த உடன் உடல் குலுங்கி அடங்கியது. 

போராட்டம் பற்றி நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. விரிவாக எழுதுகிறேன். 

திரு. குமணன் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி ஒலிவாங்கியை வாங்கிக் கொடுத்தார். பேச வேண்டும் என்று நினைத்ததைத்தான் பேசினேன். ஆனால் சற்றே உணர்ச்சிவசப்பட்டேன் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கூட்டம் அப்படியான கூட்டம். என்னையும் மீறி வேகமாக பேசச் செய்தது. 

நான் மிகப்பெரிய ரவுடி என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும். எனவே வீடியோவை பார்த்துவிட்டு கலாய்க்காமல் போய்விடவும். மீறி கலாய்த்தால் அழுதுவிடுவேன் என்பதை மட்டும் மிரட்டலாக விடுத்து விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!


திரு.குமணனுக்கும், பேசியதைப் படம் பிடித்து அனுப்பி வைத்த திரு.தாமஸ் அவர்களுக்கும் நன்றி. கோபியின் இள ரத்தங்களுக்கும், அத்தனை சங்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

Jan 21, 2017

விருதைத் திருப்பியளித்தல்

ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விருதைத் திருப்பித் தருவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு  முன்பு சாகித்ய அகடமியின் விருதுகளை சில எழுத்தாளர்கள்- வெளிமாநில எழுத்தாளர்கள்தான் - திருப்பி அனுப்பிய போது அது அவசியமில்லை என்கிற எண்ணம்தான் இருந்தது. ஆனால் அப்படியில்லை. எழுத்தாளனின் தார்மீகக் கோபம் மக்களின் கரங்களுக்கு எவ்வளவு வலு சேர்க்கும் என்பதைக் கூட்டத்தில் ஒருவனாக நிற்கும் போது உணர முடிகிறது. சமூகத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு பிரச்சினைக்காக குரல் எழுப்பும் போது மக்களுக்கு தார்மீக ஆதரவளிக்கும் வகையில் தமக்கு அளிக்கப்பட்ட விருதினை திருப்பித் தருவது என்பது அழுத்தத்தைக் கூடுதலாக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

தமிழக எழுத்தாளர்கள் விருதுகளை பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்வார்கள். விதிவிலக்குகள் உண்டு. லட்சுமி சரவணக்குமார் ஒரு விதிவிலக்கு. தமக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை சாகித்ய அகடமியிடமே திருப்பியளித்திருக்கிறார்.


இன்றைக்கு தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது. காலை பெங்களூரிலிருந்து கிளம்பி ஊருக்கு வரும் போது வழிநெடுகிலும் போராட்டங்கள்தான். குக்கிராமங்களில் கூட ஷாமியானா பந்தலிட்டு ஏழெட்டு பேரிலிருந்து சில நூறு பேர்கள் வரைக்கும் ஊர் ஊருக்கும் அமர்ந்திருக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடல் நிரம்பி வழிகிறது. பெருங்கூட்டமாகத் திரண்டு அமைதிப் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் இறங்கி பார்த்துவிட்டு வந்தேன். அத்தனை பேரும் ஓரே அளவிலான உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பம்சமே. இன்றைக்கு தேர்தலே நடத்தாமல் கூட எத்தனை சதவீத தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று அனுமானித்துவிடலாம்.

எந்த இடத்திலும் பெரிய சச்சரவுகள் இல்லை. கலவரங்கள் இல்லை. நாளுக்கு நாள் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு ஒழுங்குடன் இவ்வளவு பேர் திரண்ட இத்தகையதொரு போராட்டத்தை இனி நம் வாழ்நாளில் சந்திப்போமா என்று தெரியாது. தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது இந்தப் போராட்டத்தை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். இத்தகையதொரு உணர்வுப்பூர்வமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசுகள் வழங்கிய விருதுகளை திருப்பியளிக்கும் செயலை மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும்.

சேலத்தில் ஒரு முன்னாள் இராணுவ வீரர் திருப்பிக் கொடுத்திருக்கிறார். எழுத்தாளர்களில் லட்சுமி சரவணக்குமார் மட்டும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். பிற எழுத்தாளர்கள், நடிகர்கள் என்று வேறு யாரும் மூச்சே விடவில்லை. நடிகர்களை விட்டுவிடலாம். எழுத்தாளர்கள் இருக்கிறார்களே- வாயைத் திறந்தாலே ‘நீ விருதைத் திருப்பிக் கொடுத்துடு’ என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கிடப்பார்கள் போலிருக்கிறது. இரண்டு மூன்று கொலுக்கட்டைகளைத் தொண்டைக்குழியில் சிக்க வைத்திருக்கிறார்கள்.

விருது வாங்கிய போதெல்லாம் உச்சந்தலையும் உள்ளங்காலும் புரியாமல் குதித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைதியாக மோட்டுவளையைப் பார்த்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விருதைத் திருப்பியளிப்பது என்பது அவரவர் விருப்பம். தரவில்லையென்றால் யாரும் எதுவும் கேட்க வேண்டியதில்லை. கேட்டாலும் ‘இவனுக்கு இது பொறுக்கலையா? நாம வாங்கின விருதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுறான்’ என்று ரத்தக்குசு விடக் கூடும். அவர்களை விட்டுவிடலாம்.

ஆனால் லட்சுமி சரவணக்குமாரை பாராட்டியே தீர வேண்டும். திருப்பித் தர வேண்டாம் என்று சாகித்ய அகடமி அலுவலகத்தில் மன்றாடியிருக்கிறார்கள். ஒருவேளை நிரந்தர தீர்வு கிடைத்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். போராட்டத்தின் பெருவெளிச்சத்தில் லட்சுமியின் இந்த ஆகப்பெரிய செயல் அதிகளவில் கவனம் பெறவில்லை. இன்னமும் கவனம் பெற்றிருக்க வேண்டும். தமிழக அளவில் ப்ளாஷ் அடித்திருக்க வேண்டிய செயல் இது. 

பணம், விருது என்பதெல்லாம் வரும் போகும். மக்களோடு எந்தத் தருணத்தில் உடன் நின்றோம் என்கிற கர்வம் இருக்கிறது அல்லவா? அதுதான் எழுத்தாளனுக்கான பெருமிதம். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக லட்சுமி சரவணக்குமார் தமது விருதைத் திருப்பியளித்தார் என்று காலகாலத்துக்கும் யாராவது ஒருவர் எங்கேயாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். சமூக உணர்வும், மக்களோடு இணைந்து நிற்கும் மனமும் இன்றைய எழுத்தாளனுக்கும் இருக்கிறது என்பதை லட்சுமி சரவணக்குமார் காட்டியிருக்கிறார்.

அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அதே சமயத்தில் ‘நான் சொல்லித்தான் லட்சுமி சரவணக்குமார் விருதை திருப்பிக் கொடுத்தார்’ என்கிற தொனியில் ஒரு இலக்கிய மோஸ்தர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை கடங்கநேரியான் உள்ளிட்ட நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். சங்கடமாக இருக்கிறது. எழுதியவரைவிடவும் லட்சுமி சரவணக்குமாருக்கு சமூகம் குறித்தான பிரக்ஞை அதிகம் என்றே நம்புகிறேன். முடைநாற்றமெடுத்த அரசியல் குட்டையில் ஊறிக் கிடப்பதன் வெளிப்பாடு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். யாரைச் சொல்கிறேன் என்று புரியாதவர்கள் விட்டுவிடலாம். விக்கிபீடியாவில் அவர் பற்றிய பக்கத்தில் அவருக்கு மத்திய அரசின் துறையொன்று விருது வழங்கியிருப்பதைப் எழுதி வைத்திருக்கிறார்கள். ‘நான் சொல்லித்தான் லட்சுமி திருப்பிக் கொடுக்கிறார்’ என்று எழுதுவதாக இருந்தால் தம்மிடம் இருக்கும் விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு எழுதியிருக்க வேண்டாமா? என்ன இழவெடுத்த லாஜிக் என்றே புரியவில்லை. ஊரான் வீட்டு நெய்யே என்று எச்சில் வழிய அடுத்தவனின் செயலில் தமக்கான கிரெடிட்டை எடுத்துக் கொள்கிற அல்பத்தனத்தைப் பற்றி இந்தத் தருணத்தில் எழுதி சர்ச்சைகளை உருவாக்க வேண்டியதில்லைதான் என்றாலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

லட்சுமி சரவணக்குமாரின் சமூக உணர்வு சார்ந்த இந்தச் செயலை பல ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளிக்கொணர வேண்டும். செய்வார்களா என்று தெரியவில்லை. லட்சுமி யாரிடமும் வளைந்து போகாதவர். அதுமட்டுமில்லை- பொடனி அடியாக அடிக்கவும் தயங்காதவர். சொறிந்துவிடுகிறவர்களாக இருந்தால் நம்மூரில் இடம் தருவார்கள். திமிறுகிறவராக இருந்தால் ஓரம்தான் கட்டுவார்கள். ஓரங்கட்டுகிறவர்கள் கட்டிவிட்டுப் போகட்டும். வரலாறு உன்னை நினைவில் வைத்திருக்க வாழ்த்துகிறேன். திரண்டு நிற்கும் சமூகத்துக்கு ஆதரவாக தோளோடு தோள் சேர்க்கும் லட்சுமியின் இந்தச் செயலுக்கு ஆதரவாக பல்லாயிரம் பேர் மனதார வாழ்த்துவார்கள். அவர்களோடு நானும் ஒருவனாகவே இருக்கிறேன். இந்தத் தமிழ்ச் சமூகத்தில் தன் பிழைப்பு, தன் புகழ், தன் பாதுகாப்பு என்றே வாழும் பெரும்பாலான எழுத்தாளர்களின் மத்தியில் சமூகத்தின் உணர்வுகளோடு பிரக்ஞைப்பூர்வமான, தனித்த எழுத்தாளனாகத் தெரியும் லட்சுமி சரவணக்குமாருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

Jan 19, 2017

பெங்களூருடா...

பெங்களூரில் இவ்வளவு கூட்டம் சேருமென்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்தே வாட்ஸப் குழுமங்களில் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று மாலையில் ஒரு செய்தி வந்தது- வியாழன் மாலை 4 மணிக்கு டவுன்ஹாலில் திரண்டு விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்திவேளையில் சில இளைஞர்களிடம் பேசிய போது அனுமதியளிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் இரவில்தான் கடிதம் கைக்கு வரும் என்றார்கள். ஆனால் இரவு வரைக்கும் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அனுமதியில்லை என்ற தகவல் வந்தது. 

இந்த உரையாடல் அத்தனையும் வாட்ஸப் குழுமங்களில்தான் நடைபெற்றது. 

பெங்களூரில் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துவது லேசுப்பட்ட காரியமில்லை. வேறு மாநிலம். இப்பொழுதுதான் பிரச்சினைகள் உண்டாகின. ஆனாலும் இளைஞர்கள் உறுதியாகத்தான் இருந்தார்கள். ‘யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்’ என்று பிலால் என்கிற இளைஞர் செய்தி அனுப்பியிருந்தார். அவரை நேரில் எல்லாம் பார்த்ததில்லை. குழுமத்தின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். அவரைப் போலவே இன்னமும் பல இளைஞர்கள்.

ஃபேஸ்புக்கில் கூட இன்று காலையில் ‘பெங்களூரில் போராட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை’ என்று எழுதியிருந்தேன். ஆனால் சேர்கிற கூட்டத்தை நாமாகக் கலைத்துவிடக் கூடாது என்று நீக்கிவிட்டேன். என்னிடம் மட்டுமே நாற்பது ஐம்பது பேராவது ‘போராட்டம் நடக்கிறதா?’ என்று கேட்டிருப்பார்கள். கேட்டவர்களிடமெல்லாம் அனுமதி கிடைக்கவில்லை என்று மட்டும் பதில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அப்பொழுதே தெரியும் எப்படியும் கன கூட்டம் சேர்ந்துவிடும் என்று. அப்படித்தான் ஆகிப் போனது.

குழுமத்தில் யாரோ ஒரு நண்பர் ‘அண்ணா வெறும் இருபது பேர்தான் இருக்காங்க’ என்று நான்கரை மணிக்கு செய்தி அனுப்பியிருந்தார். பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றேன். வழியில் ஒரு பைக்காரரிடம் ‘டவுன்ஹால் எல்லி இதியே குரு?’ என்ற போது அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கா? என்னை ஃபாலோ பண்ணுங்க’ என்றார். போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. நெருங்க நெருங்க தமிழில் பேசிக் கொள்கிறவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. டவுன்ஹாலைச் சுற்றி கூட்டம் நிரம்பி வழிந்தது. பல நூறு இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இளைஞிகளும்தான். கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் ஐடிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் ஒன்றிணைந்தார்கள்.

‘வீ வாண்ட் ஜல்லிக்கட்டு’

‘தடைசெய் தடைசெய் பீட்டாவை தடை செய்’

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’

‘கட்டு கட்டு ஜல்லிக்கட்டு; காட்டு காட்டு தமிழன் கெத்தைக் காட்டு’ என்று தொண்டை கிழிய கத்தினார்கள். டவுன்ஹால் பகுதியே அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு கூட்டம் கூடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. போலீஸ்காரர்களே கூட ஆச்சரியப்பட்டார்கள். இளைஞர்கள் மடித்து வைத்திருந்த பதாகைகளைக் காட்டினார்கள். வெகு உற்சாகத்துடன் குரல் எழுப்பினார்கள். அனுமதி இல்லை என்கிற நிலைமையில்தான் இவை அத்தனையும் நடைபெற்றது. இன்று பெங்களூரில் அனுமதியில்லை என்ற காரணத்தினால் எனக்குத் தெரிந்தே பலர் ஓசூர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை அனுமதி கிடைத்திருந்து அத்தனை பேருக்கும் சரியான தகவல் சென்றிருந்தால் ஸ்தம்பித்திருக்கக் கூடும்.

தமிழனுக்கு தமிழன் உதவ மாட்டான் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் நினைத்துக் கொண்டும் இருந்தேன். இவ்வளவு உத்வேகமும் உணர்வும் இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது? மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உடல் சிலிர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இளைஞர்களின் உற்சாகத்திலும் ஆர்வத்திலும் அப்படித்தான் தோன்றியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகவே ஐந்தரை மணி வாக்கில் காவலர்கள் கலையச் சொன்னார்கள். மிரட்டவெல்லாம் இல்லை. நாகரிகமாகச் சொன்னார்கள். மறுபடியும் ஞாயிற்றுக்கிழமையன்று பனிரெண்டு மணிக்கு இதே இடத்தில் கூடுவோம் என்று சொல்லிவிட்டு இளைஞர்கள் கிளம்பினார்கள். அநேகமாக ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டுமொருமுறை அதிரக் கூடும்.

இந்தப் போராட்டங்களை ஊடகங்கள் பதிவு செய்திருக்குமா; கூட்டத்தில் யார் தலைவன் என்றெல்லாம் எந்தச் சந்தேகமும் யாருக்கும் இல்லை. எதைப்பற்றியும் யாரும் கவலையும்படவில்லை. தமிழனுக்காக குரல் கொடுக்கிறோம் என்பது மட்டும்தான் அத்தனை பேரின் மனதிலும் இருந்திருக்க வேண்டும். அவரவர் வேலையைவிட்டுவிட்டு சாலையில் இறங்கியிருந்தார்கள். பெங்களூரின் மையப்பகுதியைத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டார்கள்.

கத்தியதில் தொண்டை வலிக்கிறது. வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. ஜல்லிக்கட்டுவுக்கான போராட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்றேன். நம்பவேயில்லை. இரண்டு மூன்று நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே?


பெங்களூரு தமிழர்கள் என்றால் ஜீன்ஸ் பேண்ட்டும் டீஷர்ட்டுமாக கம்யூட்டரைத் தட்டிக் கொண்டு, சினிமா படத்துக்கு ஆன்லைனில் புக் செய்து, ரெட்பஸ்ஸில் ஊருக்குச் சென்று வந்தபடி தம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சுரணையே இல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்தீர்களா? பெங்களூருடா என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது.

உண்மையிலேயே இந்த மாலை அற்புதமானது. ஒருங்கிணைத்த அத்தனை இளைஞர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம். சாதி, மதம், அரசியல் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் தமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம். அதுதான் காலத்தின் தேவை! 

கண்ணாமூச்சி

தமிழக அளவிலான போராட்டங்களில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களும்மு ன்வைக்கப்படுவதாக சில நண்பர்கள் எழுதியிருந்தார்கள். போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் எதற்காக களமிறங்கியிருக்கிறோமோ அதை மட்டுமே முன் வைக்க வேண்டும். நமக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். ஒன்று தீர இன்னொன்று முளைத்துக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் போராட்டக்களத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தால் நமது முக்கியமான நோக்கத்தை நீர்த்துப் போகச்  செய்யும். போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.

நீட் தேர்வு ஒன்றும் தீண்டத்தகாதது இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக பேசிய போது ஒரு கல்வித்துறை அதிகாரி சொன்ன விஷயம் மிக முக்கியமானது. பத்தாம் வகுப்பின் கேள்வித்தாள்கள் எளிதாக இருப்பதும், நானூற்று தொண்ணூற்றொன்பது மதிப்பெண்கள் கூட வாங்கிவிட முடியும் என்பது ஒன்றும் இயல்பாக நடப்பதில்லை.  திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

நானூறு மதிப்பெண்களைத் தாண்டுகிறவர்கள் நிச்சயமாக பனிரெண்டாம் வகுப்பில் முதல் பிரிவில்தான் சேர்வார்கள். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தால் போதும். பொறியியல் கல்லூரியினர் வலைவிரித்து அமுக்கிக் கொள்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை- பல அரசுப் பள்ளிகளில் கணிதப் பிரிவைத் தவிர பிற பாடத்திட்டங்களை மூடிவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக அன்னூர் பக்கமிருக்கும் வாகரையாம்பாளையம் என்ற ஊரின் மேனிலைப் பள்ளியிலிருந்து சிலர் வந்திருந்தார்கள். அவர்களது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு பெண் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். அரசுப்பள்ளி மாணவி மருத்துவப்படிப்பில் சேர்வதிலிருந்து பள்ளியின் தரத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்தப்பள்ளியில் Third group என்று சொல்லப்படுகிற பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலிருந்து இவர்களாக சம்பளம் கொடுத்து ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறார்கள். மாதாமாதம் சம்பளம் கொடுப்பதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கு கடனாகிக் கொண்டிருக்கிறது. உதவி கேட்டு வந்திருந்தார்கள். ‘கவர்ண்மெண்ட்ல கேட்கலையா?’ என்று கேட்டேன். அவர்களும் கேட்டிருக்கிறார்கள். கல்வி அதிகாரிகள் ‘உங்களை யார் தேர்ட் க்ரூப் நடத்தச் சொன்னது’ என்று கேட்கிறார்களாம். 

அடிநாதம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முதல் பிரிவில் படித்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை. அதனால் யாரையெல்லாம் வளைக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் வளைக்கிறார்கள். பத்தாம் வகுப்பில் நிறையப் பேர் நானூறைத் தாண்டுகிறார்கள். மூன்றாம் பாடப்பிரிவு பல பள்ளிகளில் மூடப்படுகிறது. நானூறைத் தாண்டியவர்களுக்கு முதல் பாடப்பிரிவைத் தவிர வேறு வழியில்லாமல் செய்யப்படுகிறது. முதல் பிரிவில் படிக்கிறவர்களில் முக்கால்வாசிப்பேர் பொறியியல் படிப்பில் சேர்கிறார்கள். பல நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆட்களைப் பிடித்துத் தரும் வேலையைக் கல்வித்துறை செய்து கொண்டிருக்கிறது.

ப்ரொபஷனல் படிப்புகள் என்று கித்தாப்பாகச் சொல்லப்படுகிற படிப்புகளில் படிக்கும் தமிழக மாணவர்களின் லட்சணம் இதுதான்.

பொறியியல் படிப்பு எப்படி இருக்கிறது என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே? சென்னையிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்தில் இருக்கும் நிறுவனங்களில் மனித வள ஆட்களிடம் பேசி ‘எங்க ஊரில் ஒரு பொறியியல் கல்லூரி இருக்கு..வந்து ஆளுங்களை வேலைக்கு எடுங்க’ என்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் முகத்தைச் சுளிக்காமல் பதில் சொன்னால் காதை வட்டம் போட்டு அறுத்துக் கொள்ளலாம். மாணவர்களிடம் தகுதியே இல்லை என்று சொல்லாமல் பேச்சை ஆரம்பிக்க மாட்டார்கள். பிரச்சினை மாணவர்களிடம் இல்லை. கல்வியை ஒழுங்கு செய்யாத அரசிடம் இருக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு தாறுமாறாக கல்லூரிகளைத் திறக்க அனுமதி கொடுத்தார்கள். தகுதியே இல்லாத ஆசிரியர்களை நியமனம் செய்து கல்லூரிகளைத் தொடங்கினார்கள். முதலாளிகளும் மாணவர்களை இழுத்து வந்தால்தானே போட்ட முதலீட்டை எடுக்க முடியும்? எல்லா வழிகளிலும் கல்வியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

பொறியியல் கல்வியை ஒழுங்குபடுத்த நீட் மாதிரியான தேர்வுகள் அவசியம்.

முதலில் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு குறித்தான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மருத்துவ படிப்பில் உள்ள இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுதலும் இருக்காது. சிலர் சொல்வது போல இது அகில இந்தியத் தேர்வு; பீஹாரிகளும், தெலுங்கர்களும் வந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பிவிடுவார்கள் என்பதில் உண்மை இல்லை. நமக்கான இடங்கள் நம்மிடமேதான் இருக்கும். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக அடிப்படை அறிவு இருக்கிறதா என்று நிரூபிப்பதற்காக ஒரு நுழைவுத்தேர்வை வைத்திருக்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறானோ இல்லையோ- எழுபத்தைந்து லட்சம் வைத்திருக்கிற மனிதர் தனது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். அவன் படித்துவிட்டு வந்து ஆரம்பத்தில் போட்ட முதலீட்டை மீட்டெடுப்பதிலேயேதான் குறியாக இருக்கிறான். அதற்கு ஒரு தடை வேண்டியதில்லையா? 

முதலில் மருத்துவப்படிப்பு ஒழுங்காகட்டும். பிறகு இதே முறை பொறியியல் கல்விக்கும் வரட்டும். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை படிக்க வேண்டுமானால் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களில் குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும் என்ற நிலை உண்டாகும் போதுதான் கல்லூரி அளவிலான படிப்பு படிப்பாக இருக்கும். பார்மஸி, பொறியியல் போன்ற பல படிப்புகள் நாறிக்கிடக்கின்றன. எம்.ஈ முடித்துவிட்டு ஏழாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தால் ஒரு தலைமுறையையே பாழடித்துவிடுவோம்.

நீட் தேர்வைத் தடை செய்வதைச் சொல்வதைவிட நாம் செய்ய வேண்டிய வேலை- நமது பாடத்திட்டங்களைச் செதுக்குவது, தேசிய அளவிலான தரம் கூட்டுதல், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்துதல்த, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல் போன்றவைதான். இவற்றையெல்லாம் செய்யாமல் நீட் தேர்வை தடை செய்யச் சொல்லி போராடுவது என்பது நம் குறைகளை மறைத்துக் கொண்டு மாணவர்களை வலுவில்லாதவர்களாகவே வைத்திருப்பதாகத்தான் இருக்கும். அடிப்படையான புரிதல் இல்லாமல் அரசியல் கட்சிகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

கல்வியைப் பொறுத்தவரையில் அரசுப்பள்ளிகளை ஒழிப்பதிலும் வருங்கால சந்ததியினரை வலுவில்லாமல் ஆக்குவதிலும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருக்கிறது. கணக்கிட முடியாத கோடிகள் புரளும் வணிகம் இது. அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், பினாமிகள் என்று ஏகப்பட்ட பேர்கள் இதில் சம்பாதித்துக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே ஒரு தேர்வை ரத்துச் செய்யச் சொல்வதனால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. தமிழகத்தின் கல்வி நிலையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால மாறுதல்களைப் பற்றி நாம பேச வேண்டிய தருணம் இது. அப்படிச் செய்யாவிட்டால் அரசியல்கட்சிகளும், அறிவாளிகளும் நம்மோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டேதான் இருப்பார்கள். நாமும் குருட்டுவாக்கில் அவர்களைப் பின்பற்றிக் கொண்டேதான் இருப்போம்.

விவாதிக்கலாம்....