Dec 29, 2017

எனக்குத் தெரியாதே

பத்து வருடங்களுக்கு முன்பாக மலேசியா சென்றிருந்த சமயம். ‘அங்க போய் அது தெரியாது..இது தெரியாதுன்னு சொல்லாத’ என்று நாசூக்காகச் சொல்லி அனுப்பினார்கள். ‘வல்லவனை அனுப்புகிறோம்’ லட்சக்கணக்கில் அவர்களிடம் பில் போடுவார்கள். ‘தெரியாதவனை அனுப்பி ஏமாத்திட்டீங்களா?’ என்று அவர்கள் முரண்டு பிடித்துவிடக் கூடாதல்லவா? அதனால் அவர்களின் பயம் அவர்களுக்கு.

சூங் ஃபூய் கென் என்ற பெண்மணியிடம் அனுப்பி வைத்தார்கள். நல்ல பெண்தான். ஆனால் என்னை அசகாயசூரன் என்று நினைத்துவிட்டாள். எனக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. ‘இதைச் சொல்லிக் கொடு’ என்று கேட்கவும் பயம். மன அழுத்தம் அதிகமானால் எனக்கு வாயில் புண் வரும். காலங்காலமாக கருஞ்சுக்கிட்டி (இத்தினியூண்டு இருப்பதனால் மணத்தக்காளிக்கு சுக்கிட்டி என்று பெயர்) கீரையைத் தின்பதும், சோம்புவை மெல்வதும் என்பதெல்லாம் கதைக்கே ஆகவில்லை. டென்ஷன் ஆவதைக் குறைத்தால் சரியாகிவிடும் என்று தெரிந்த பிறகுதான் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது. அது தனிக் கதை. 

மலேசியாவிலும் அதே கதைதான். அவர்களின் பாமாயில் சமையல் வேறு மூக்கைத் துளைக்கிறது. புண் நாவைத் துளைக்கிறது. ‘ஏண்டா வந்தோம்’ என்றாகிவிட்டது. போதாக்குறைக்கு பொருளாதார மந்தம் ஆரம்பித்து பெரு நிறுவனங்கள் ஆட்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கியிருந்தார்கள். திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சேர்ந்து கீழே தள்ளி மேலே அமர்ந்திருந்தன. 

நமக்கும் ஒரு பொறுமை இருக்கிறதல்லவா?

ஒரு வாரம் பொறுத்துப் பார்த்துவிட்டு சூங் ஃபுய் கென்னிடம் வெட்கத்தைவிட்டுச் சொல்லிவிட்டேன். ‘எனக்கு ஒன்றரை வருஷம்தான் அனுபவம். இப்போத்தான் தெரிஞ்சுட்டு இருக்கேன்..தயவு செஞ்சு சொல்லிக் கொடு ஆத்தா’ என்றேன். அவள் ஓடிப் போய் இன்னொரு சைனாக்காரியிடம் நசுக்கிவிட்டு வந்துவிட்டாள். அவர் நிறுவனத்தின் இயக்குநர். அந்தப் பெண்மணி வழியாக ஹைதராபாத் விவகாரம் போய் அங்கேயிருந்து மேலாளர் அழைத்தார். கிட்டத்தட்ட அழுகிற சூழல்.

‘ஆமாங்க எனக்குத் தெரியல..சொல்லிட்டேன்..வேண்டாம்ன்னா திரும்ப வந்துடுறேன்’ என்றேன். ‘நீ சொல்லியிருக்கக் கூடாது..எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல’ என்றார். 
சொல்லியாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? அவர் என்ன மாய்மாலம் செய்தார் என்று தெரியவில்லை. அநேகமாக பில்லிங் தொகையைக் குறைத்திருக்கக் கூடும். அது எனக்குப் பிரச்சினையில்லை. பெருஞ்சுமை குறைந்தது போல இருந்தது. அதன் பிறகு சூங் ஃபுய் கென்னும் பிலிப்பும் சொல்லிக் கொடுத்தார்கள். 

என் குருவிக்கூட்டு மண்டைக்கு அதுவொரு பெரிய பாடம். 

‘எனக்கு இவ்வளவுதான் தெரியும்..இவ்வளவுதான் முடியும்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டால் போதும். தவறாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். தலையை வெட்டிவிடவா போகிறார்கள். நேர்காணலிலும் கூட இந்தப் பாடம் பயன்படும். ‘இவ்வளவுதான் தெரியும்...எடுத்தால் எடுத்துக்குங்க’ என்கிற மனநிலையோடு அணுகினால் வேலை கிடைக்கிறதோ இல்லையோ- ஒருவேளை வேலை கிடைத்தாலும் அழுத்தம் இருக்காது. அலுவலகத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைக் கூட கேட்டுவிடுவதுண்டு. ‘இது ஃப்ரெஷருக்குக் கூடத் தெரியுமே’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்கள். கடந்த மாதம் கூட ஒரு கன்னடப்பெண்மணி அப்படித்தான் சொன்னாள். ‘ஆமாம்..எனக்குத் தெரியல’ என்றேன். பக்கத்தில் இருந்த நண்பர் ‘உங்களை மதிக்கமாட்டாங்க’ என்றார். மதித்து என் மகனுக்கு பெண் கொடுக்கவா போகிறார்கள்? நம்முடைய மரியாதை அலுவலகத்துக்கு வெளியில் இருந்தால் போதும் என்கிற மனநிலைதான் எனக்கு. சம்பள உயர்வில் கை வைக்கக் கூடும். அதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அலுவலகம் என்றில்லை- பொதுவாக எந்த இடத்திலும் நம்மைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் இருந்துவிட்டால் பாரமே இல்லை. நம்மிடம் எதிர்பார்க்கமாட்டார்கள். எனக்கு அது தெரியும்; இது தெரியும் என்று இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி வைத்து பிம்பத்தைக் கட்டமைத்தால் அத்தனையையும் தூக்கிச் சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. அப்புறம் அழுத்தம் இல்லாமல் என்ன செய்யும்? அழுத்துகிறார்களே என்று நேரத்தை நீட்டி, பயந்து, பதறி என்று ஒரு வழியாக வேண்டியதுதான்.

யாராவது நம்மை இகழ்ந்துவிடுவார்களோ, நம்மை அரைவேக்காடு என்று சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் எல்லோருக்குமே உண்டு. அப்படியெல்லாம் யார் சொன்னாலும் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ‘ஆமாம் அதுக்கென்ன இப்போ?’ என்கிற மனநிலையில் இருந்தால் பெருமளவு ஆசுவாசமாக இருக்கும். குழந்தைகளிடமிருந்தே பழக்கிவிட்டுவிட வேண்டும். இந்தக் காலத்துக் குழந்தைகளிடம் கூட இந்தக் கெட்டபழக்கம் இருக்கிறது. தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்வதில்லை. ‘ஆல் இன் ஆல் அழகுராஜாவாக’ இருப்பதில் ஒரு கெத்து. என்னைவிடச் சிறியவர்கள், மாணவர்கள் என்று யாரிடமும் இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அடிமுட்டாள் என்று அடுத்தவன் சொன்னாலும் கூட அதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதில்லை. அடுத்தவர்கள் சொல்வதால் எல்லாம் நமக்கு எந்த இழப்புமே இல்லை. கடைசி வரைக்கும் கற்றுக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். மெதுவாகக் கற்றுக் கொள்ளலாம். நமக்கு என்ன தெரியாது என்பதை மட்டும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் போதும். கற்றுக் கொள்ளலாம். 

இயல்பாக இருந்து கொண்டால் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. நடித்துப் பழகிவிட்டால் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்க முடியாது.

கேள்வி பதில்கள்

‘நிசப்தம்’ வா.மணிகண்டன்-- ‘வீடு’ மணியன்--வித்தியாசமுண்டா?

எனக்கு அப்படியெதுவும் தெரியவில்லை. ஒரே மாதிரியாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன். வேணியிடம் கேட்டால் ஏதாவது சொல்லக் கூடும். 

2018ல் தனிப்பட்ட முறையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எட்டாவது மாதம் இது. பிப்ரவரியில் தேதி கொடுத்திருக்கிறார்கள். பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் பெங்களூர் வாழ தகுதி இல்லாத நகரம் ஆகிவிடும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். நீங்களும் நம்புகிறீர்களா? உங்கள் திட்டம் என்ன?

பெங்களூரு சீரழிந்து கொண்டிருக்கிறது. பிற பெரிய ஊர்களைப் போலவே. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கோயமுத்தூர் பக்கமாக ஒரு வேலையைக் கண்டுபிடித்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டம். சூழலுக்கு பயந்து மட்டுமில்லை- ஊரோடு ஒட்டி வாழலாம் என்பதற்காக.

வணக்கம்,  ‘குறள் பாட்’ தொடர்பு எண் அல்லது மின்மடல் முகவரி கிடைக்குமா?

சிவாவின் மின்னஞ்சல்: vengaishiva@gmail.com

அரசு வகுத்திருக்கும் புதிய கல்வித் திட்டத்தைக் குறித்துத் தங்கள் கருத்து?

சிலபஸ்ஸை மட்டும்தானே கொடுத்திருக்கிறார்கள்! அதுவும் ஆங்கிலத்தில். பனிரெண்டாம் வகுப்பின் இப்போதைய சிலபஸ் கூட சிறப்பானதுதான். அந்த பாடத்திட்டத்திற்குள் பாடத்தை எப்படி விரிவாக வைக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். பாடத்திட்டத்தைச் சிறப்பாகக் காட்டிவிட்டு உள்ளே பாடங்களை மேம்போக்காக வைத்தால் அது அர்த்தமற்றது. ட்ரெய்லர் மட்டும் காட்டியிருக்கிறார்கள். படம் எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்" என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதே?

அம்மாவும் அப்பாவும் அரசு அதிகாரிகள். அம்மா கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர். ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வரும் போது ‘கீழ்மட்ட ஆளுங்கதான் கண்ணுக்குத் தெரியும்’ என்று அவர்கள் பேசிக் கொள்வதுண்டு. நூறும் இருநூறும் வாங்கும் கடைநிலை ஊழியர்களைத்தான் கைது செய்து கர்ச்சீப்பை முகத்தில் போட்டுக் காட்டுவார்கள். லட்சங்களில் புரளும் அதிகாரிகள் தப்பிவிடுவார்கள். அப்படிப் பார்த்தால் ராஜஸ்தான் இயற்றியிருக்கும் இந்தச் சட்டம் ஒரு வகையில் சரி என்றுதான் தெரியும். கீழ்மட்ட ஊழியர்களுக்கு ஒரு பாதுகாப்பு. அதே சமயம் பட்டா மாறுதலுக்கு என்று போய் நின்றால் கூட லட்சக்கணக்கில் பணம் கேட்கும் அரசு ஊழியர்கள் பெருத்துக் கிடக்கிறார்கள். ஆதரவற்றோர் முதியோர் தொகை வாங்கித் தருவதற்குக் கூட பணம் வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துளிர்விட்டுப் போய்விடும். துளி கூட பயமிருக்காது. 

ஊழல் புகார்களில் சிக்குகிறவர்களை விசாரிப்பதைத் தடை செய்யும் எந்தவிதமான சட்டங்களும் அவசியமற்றவை. இன்னமும் கடுமையாக்க வேண்டும். ஊழியர்களைக் காப்பதாக இருப்பின் தவறான புகார் என நிரூபிக்கப்படுமாயின் புகார் அளித்தவருக்கு கடும் தண்டனையளிக்கும் வகையில் மாற்றியமைக்கலாம்.

நம் உணர்வுகளுக்கான வடிகாலாக குடும்பம் இருக்கிறது என்பதுதான் உண்மை - கொஞ்சம் விரிவாக சொல்லலாமே.

சாலையில், அலுவலகத்தில், வெளியிடங்களில் என நாம் செல்லுமிடங்களில் எல்லாம் நம்மை ஏதாவதொருவகையில் இந்த உலகம் நம்மை கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. எதற்காக என்றே தெரியாமல் நம்மை அழுத்துகிறது. நம்மை ஒரு பலூனாக வைத்து தொடர்ந்து ஊதிக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் மனமும் உடலும் தாங்கும்? ‘எங்கேயோ கடி வாங்கியிருக்கிறான்’ என்பதை நல்ல குடும்பம் மட்டுமே புரிந்து கொள்ளும். வேறு யாருக்கும் அவகாசமும் இல்லை அதற்கான அக்கறையும் இல்லை. ‘போச்சாது விடு..பார்த்துக்கலாம்’ என்பதை பெரும்பாலும் குடும்பம்தான் நமக்கு உணர்த்துகிறது. அதுவொரு ஆசுவாசம் நமக்கு. நாளை மீண்டும் அதே அழுத்தங்கள் நம்மைச் சூழும் என்றாலும் மனம் கொஞ்சம் சாந்தப்படுகிறதல்லவா? அதுதான் வடிகால். சூழலாலும் இன்னபிறராலும் ஊதிப்பெருக்கப்பட்ட உணர்வுகளுக்கான வடிகால் குடும்பம் என்கிற அமைப்பு.

2017ல் விரும்பி வாசித்த எழுத்தாளர் யார்?

கி.வா.ஜ. அவருடைய நிறையப் புத்தகங்கள் தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் (tamilvu.org) இருக்கின்றன.  சிலம்பு பிறந்த கதையிலிருந்து கி.வா.ஜவை வாசிக்கத் தொடங்கினேன். தற்பொழுது ‘என் ஆசிரியப்பிரான்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

சொட்டைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னைப் பார்த்தால் ரஜினி மாதிரியா தெரிகிறது?

Sarahah வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

Dec 27, 2017

வேலை இல்லைன்னா என்ன செய்வது?

‘இந்த வேலை இல்லைன்னா என்ன செய்வது?’ என்று கேட்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்தான் என்றாலும் ‘எதையாவது செய்து வெளியில் போய்டணும்’ என்கிற நினைப்பு இருக்கிறவர்கள் எதையாவது உருட்டியும் புரட்டியும் கொண்டிருக்கிறார்கள். கோயமுத்தூரில் கார்போரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து பொள்ளாச்சியருகே சில ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். யாருமே வேலையை விடவில்லை. ஆள் மாற்றி ஆள் பார்த்துக் கொள்கிறார்கள். வேளாண்மை என்பது எடுத்தவுடனேயே இலாபம் தந்துவிடவா போகிறது? ஆயிரத்தெட்டு மேடு பள்ளம். விவசாயம் மட்டுமே போதாது என்று புரிந்து கோவையிலேயே ஒரு தேநீர்க்கடையைத் தொடங்கியிருக்கிறார்கள். பெரிய லாரி கண்டெய்னர் ஒன்றைப் பிடித்து அதை அழகுபடுத்திக் கடையாக மாற்றியிருக்கிறார்கள். ஓரளவு தம் கட்டியவுடன் அவரவர் வேலையை விட்டுவிடுவதாக உத்தேசம்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தார். வேலையை விட்டுவிட்டு இரண்டு மூன்று வாகனங்களை சல்லிசான விலைக்கு வாங்கி ட்ராவல் ஏஜென்ஸி ஒன்றைத் தொடங்கினார். அவருக்கு பெங்களூருவுக்குள் ஓரளவுக்குத் தொடர்புகள் இருந்தன. இப்பொழுது அதோடு சேர்த்து ஐஸ்கிரீம் கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். கடை நடத்தும் வணிக வளாகத்திற்கு வாடகையே பெருந்தொகை.‘அதெல்லாம் பிரச்சினையில்லைங்க...அந்தளவுக்கு வியாபாரம் இருக்கு’ என்றார். சந்தோஷம்தான்.

விதவிதமான ஆர்வலர்கள். கேக் செய்வதற்கான நுட்பங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு கார்போரேட் வேலையை விட்டுவிட்டு கேக் கடை ஆரம்பித்தவரைத் தெரியும். மற்றுமொரு மூன்று நண்பர்கள் சேர்ந்து ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் ஓர் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். 

‘இப்போ இருக்கிற வேலையை மட்டுமே நம்பிட்டு இருக்க முடியாது’ என்று நினைக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. கார்போரேட் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கு இத்தகைய எண்ணம் வருவது நல்லதுதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அடுத்தவர்களிடம் பணியாற்றி அவர்கள் தரும் சம்பளத்தை வாங்கிக் கொள்வது மட்டுமே போதுமானது என்கிற எண்ணம் நம் ரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிறது. அதைத்தான் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. வேலை நேரத்தை அதிகரிப்பது, அழுத்தம் கொடுப்பது, சம்பளத்தில் கை வைப்பது என சகல தகிடு தத்தங்களையும் பணியாளர்களிடம் காட்டுகின்றன.

இந்தியா மாதிரியான மக்கள் நெருக்கம் மிகுந்த பிரதேசத்தில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலே பல கோடிப் பேருக்கு சுயதொழில் அமையும். கார்போரேட்களில் அடிமையாகவே வாழ வேண்டியதில்லை.

சிறிய மெஸ் அது. மதிய உணவு மட்டும்தான். சமைப்பது, பாத்திரம் கழுவுவது என குடும்பத்தினரே வேலை செய்கிறார்கள். ‘இந்த மாதிரியான சின்ன ஊர்ல மத்தியானம் மட்டும் சாப்பாடு போட்டு வியாபாரம் நடத்த முடியுமா?’ என்று எண்ணம் தோன்றாமல் இல்லை. கடைக்காரரிடம் கேட்டால் ‘என்ன மாதிரி சாப்பாடு போடுறோம் என்பதில்தான் வெற்றி இருக்கு’ என்றார். வீட்டு முறைச் சமையல், குடும்பத்தினரே பரிமாறுவது என வியாபாரத்தை வியாபாரமாக மட்டுமில்லாமல் தொழில் நடத்துகிறார்கள். இரண்டே மாதங்களில் வாடிக்கையாளர் பரப்பை அதிகரித்துவிட்டார்கள். நல்ல வியாபாரம். தினசரி இருநூறு சாப்பாடு. ஒரு சாப்பாடு எழுபது ரூபாய். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் போக இரண்டு அல்லது மூன்றாயிரம் நின்றால் கூட போதுமானது. பார்ட்டி ஆர்டர் எடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஐடியில் பணியாற்றிவிட்டுச் சென்றவர் தொடங்கிய கடை இது. ஒரு குடும்பத்துக்கு அறுபதாயிரம் ரூபாய் என்பது போதுமான தொகை. போதும் என்ற மனம்தானே பொன் செய்யும்.

வேலையை விட்டுவிட்டுச் சென்ற நண்பரிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்கிறது. ‘என்ன செய்வது?’ என்று நிறையப் பேருக்குக் குழப்பம். இன்றைக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தால் அதே அளவு வருமானம் கிடைக்கும்படியாகத்தான் தொழில் தொடங்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. ஆனால் ‘நமக்கு இவ்வளவு போதுமானதாக இருக்கும்’ என்று முடிவு செய்துவிட்டு அதற்கேற்ற தொழிலைத் தொடங்குவது எளிதான காரியம் என்றார். உறவுக்காரர்களும் அக்கம்பக்கத்தவர்களும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். ‘கூமுட்டையா இருக்கானுங்க...பெங்களூர்ல வேலையை விட்டுட்டு வந்து தொழில் பார்க்கிறேன்னு சொல்லிட்டுத் திரியறான்’ என்று தன் மகனைப் பற்றிப் பேசிய அப்பாவை எதிர்கொண்டிருக்கிறேன். குடும்பத்தினரே அப்படியென்றால் வெளியாட்கள் எப்படியெல்லாம் கிசுகிசுப்பார்கள்? எல்லாவற்றையும் சமாளிக்கிற மனநிலைதான் முதல் அவசியமாக இருக்கும். 

சந்தோஷ் நாராயணனைத் தெரிந்திருக்கும். ஓவியர். கார்போரேட் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நல்ல சம்பளம். வேலையை விட்டுவிட்டார். Freelancer ஆக இருக்கிறார். மிகச் சந்தோஷமாக இருக்கிறார். மாதத்தில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் வருமானத்திற்கான வேலையைச் செய்துவிட்டு மீதமிருக்கும் நாட்களில் தமக்குப் பிடித்தமான பணிகளைச் செய்கிறார். கடைசி வரைக்கும் அவரது ஓவியம் அவரைக் கைவிட்டுவிடாது. தமது வேலையை விட்டுவிட்டு அப்பாவின் நெசவுத் தொழிலைப் பார்த்துக் கொள்வதற்காக ஈரோடு சென்றுவிட்டவர், அப்பாவிடமிருந்தும் தாத்தாவிடமிருந்தும் கற்றுக் கொண்ட நகை வேலையைத் தொடர்கிற மென்பொருள் வல்லுநர் என்று யாரையாவது எதிர்கொண்டபடியேதான் இருக்க நேர்கிறது. அவர்கள் ஏதோவொரு விதத்தில் ஓர் அடி கூடுதலாக வைத்து கச்சடாவைத் தாண்டிவிட்டவர்களாகத்தான் தெரிகிறது.

இத்தகைய மனிதர்களைப் பார்க்கும் போது ஆசுவாசமாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு வளர்ச்சி என்ற பெயரில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான முயற்சிகள்- கார்போரேட் நிறுவனங்கள், பாடத்திட்டங்கள்- என்பவையெல்லாம் வெறுமனே பணத்தைக் குறி வைத்து ஓடுகிற அடிமைக் கூட்டத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. கூட்டத்தில் ஒரு வேலையைப் பிடித்துவிட வேண்டும். கடன் வாங்கி வீடு கட்டி, கார் வாங்கி கடைசி வரைக்கும் வெளியேறத் தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிற கூட்டம். தமது வாழ்நாளின் அதிகபட்சமான சொத்து என்பது நகரில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகத்தான் இருக்கும். அதற்காக பெறுகிற அழுத்தங்களும் நசுக்கல்களும் வாழ்நாளில் பத்து வருடங்களைத் தின்றிருக்கும்.

‘இந்த வாழ்க்கை முறையைத் தாண்டி என்னவோ இருக்கிறது- அப்பாவும் தாத்தாவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது எதையோ நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்பதை ஒரு தலைமுறை மெல்ல உணரத் தொடங்குவது அவசியமானதுதான். ‘இஞ்சினியரிங் படி, கம்யூட்டர் கத்துக்கோ’ என்று தம் குழந்தைகளிடம் சொல்லாமல் ‘உனக்குப் புடிச்சதைப் படி’ என்று சொல்லுகிற பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஆரோக்கியமானதுதான்.

வாழ்வதற்கு எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கின்றன. நூறு கோடி மக்களைக் கொண்ட தேசத்தின் Potential என்பது மிகப் பெரிய கடல். எவ்வளவோ வேலைகளைச் செய்ய இயலும். நமக்கு பிடித்தமான, ஒத்து வருகிற வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஒரே சூட்சமம்- நமக்கு எது ஒத்து வரும் என்பதைக் கண்டறிவதில் இருக்கிறது.  

Dec 26, 2017

ஓர் அப்டேட்

மூன்று நாட்களாக பள்ளி குறித்தான வேலைகளுக்காக அலைந்து கொண்டிருந்தோம். இடம் தேடுவதுதான் முக்கியமான பணியாக இருந்தது. நான்கைந்து இடங்களைப் பார்த்திருக்கிறோம். விலை அதிகமாகச் சொல்கிறார்கள். ‘வருமானத்துக்காக பள்ளியைத் தொடங்கவில்லை; சேவைதான் நோக்கம்’ என்று விளக்கினால் செண்ட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் குறைக்கிறார்கள். அது அவர்கள் இடம். விலை சொல்வது அவர்கள் உரிமை.

‘இன்னும் பங்கு பிரிக்காம இருக்குங்க..முக்கால் ஏக்கர் வரும்...நீங்க எடுத்துக்குங்க...எங்கப்பாவும் சொந்தக்காரங்களும் என்ன சொல்வாங்கன்னு தெரியல..ஆனா இடம் ஒத்து வருமான்னு பார்த்துட்டுச் சொல்லுங்க’ என்று சொல்லுகிற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த இடம் தற்போதைய பள்ளியிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருக்கிறது. ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

இடத்துக்கென பெருந்தொகை சாத்தியமில்லை. நாற்பது லட்சத்துக்குள் இடம் பார்க்க வேண்டும். ‘இப்போ ஒரு தொகையைக் கொடுத்துவிடலாம். பிறகு மீதத் தொகையைக் கொடுத்துவிடலாம்’ என்று கூட சில நண்பர்கள் சொன்னார்கள். சரி என்று ஐம்பது அல்லது அறுபது லட்சத்துக்கு சரி என்று சொல்லிவிட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. பெரிய கும்பிடு போட்டிருக்கிறேன். ஒருவேளை பணத்தைப் புரட்ட முடியாவிட்டால்? விபரீதமாகிவிடும்.

நல்லதொரு இடமாகக் கிடைத்தால் சிறு தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுவிட்டு அடுத்தகட்ட வேலையைத் தொடங்க வேண்டும். தற்போதைய நிர்வாகத்திடமிருந்து கை மாற்றுவது, நகராட்சியின் சான்றிதழ்கள், வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையின் சான்றிதழ்கள், கல்வித்துறையின் அனுமதி, உள்ளூர் அரசியல் என எவ்வளவோ இருக்கின்றன. எங்கேயிருந்து தடைக்கல் உருண்டு விழும் என்று தெரியாது. முரட்டுவாக்கில் மொத்தப்பணத்தையும் கொடுத்து கிரயத்தை முடித்துவிட்டு ஏதேனும் ஒரு திசையிலிருந்து சிக்கல் வந்துவிட்டால் பணத்தை மீட்டு எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஒவ்வொரு அடியையும் யோசித்துத்தான் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

நமக்கு உதவுகிற பணிகளில் இருக்கும் நண்பர்களிடமும் இதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ‘நம்முடைய தனிப்பட்ட பணம் என்றாலோ அல்லது இலாப நோக்கில் ஆரம்பிப்பதாக இருந்தாலோ எவ்வளவு முரட்டு முடிவுகளையும் எடுக்கலாம். இது அப்படியன்று. ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வேண்டியப்வேண்டியிருக்கும். ஒருவேளை பள்ளியைத் தொடங்க முடியாவிட்டால் அது பற்றி எந்தக் கவலையுமில்லை. ஆனால் பணம் எந்த விதத்திலும் வீணாகிவிடக் கூடாது’ என்பதை அழுத்தமாகப் பேசியிருக்கிறேன். அவர்களும் புரிந்திருக்கிறார்கள்.

இனி ஒரு வாரம் அதனதன் போக்கில் நடைபெறட்டும். நான் பெரிதாகத் தலையிடப் போவதில்லை. மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தொடர்ந்து சகல திசைகளிலுமிருந்து க்ரீன் சிக்னலைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனவரி இரண்டாம் தேதியன்று நிலவரம் குறித்து தெளிவான காட்சி கிடைக்கும். அப்பொழுதுதான் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளுக்குப் பிறகு பள்ளி தொடங்குகிறது. அதன் பிறகு இன்னொரு முறை நிலவரம் குறித்து எழுதுகிறேன். அனைத்துத் தரப்பும் சரி என்று சொன்னபிறகு இடம் அமைந்தால் நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியில்லையெனில் ஓரடி பின்னால் நகர்ந்துவிடலாம்.

நிறையப் பேர் விசாரிக்கிறார்கள். ‘சொல்ல முடியும்ன்னா சொல்லுங்க’ என்றார் ஒரு நண்பர். இதில் மறைக்க என்ன இருக்கிறது?

திரை மறைவு அல்லது ஒளிவு மறைவுக் காரியங்கள் என்றெல்லாம் எதையும் செய்யப் போவதில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெளிப்படையாக, அத்தனை பேருக்கும் தெரிந்தபடியேதான் நடக்கும். அப்பட்டமாக எழுதுவதால் காரியம் தடைப்பட்டுப் போகும் என்றால் தடைப்பட்டுப் போகட்டும். தவறு எதுவுமில்லை. செயலைச் செய்வதைக் காட்டிலும், அடுத்தகட்ட வளர்ச்சி என்பதைவிடவும் நம் மீதான நம்பகத்தன்மைதான் மிக அவசியம். அதில் ஒற்றைக் கீறல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாகவே இருக்க விரும்புகிறேன்.

நன்றி.

Dec 22, 2017

ஏன் இந்த முடிவு?

நேற்றிலிருந்து மின்னஞ்சல்கள், அலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக் தனிச் செய்திகள் எனத் திணறிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வியிருக்கிறது. யாருமே ‘இதை நீ செய்யக் கூடாது’ என்று உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால் அக்கறையுடன் கூடியதான விசாரணைகள், வினாக்கள், மற்றும் சந்தேகங்கள். நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கிய போது இத்தகைய கேள்விகளை எதிர்கொள்ளவில்லை. அப்பொழுது யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. ‘ஒருத்தன் ஆரம்பிக்கிறேன்னு சொல்லுறான்..ஆரம்பிக்கட்டும்’ என்பதான மனநிலைதான் பலருக்கும் இருந்திருக்கும். இப்பொழுது அப்படியில்லை. நிறைய நண்பர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அக்கறை கொண்டிருக்கிறார்கள். ‘நீ அகப்பட்டுவிடக் கூடாது..பிற வேலைகளையெல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்ற அக்கறைதான் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் தெரிகிறது. 

உள்ளபடியே நெகிழ்ச்சிதான். 

‘எண்ணித் துணிக கருமம்’.நிறைய யோசித்திருக்கிறேன். கேட்கப்பட்ட வினாக்கள், நான் யோசித்தவை ஆகியவற்றிலிருந்து சில விவகாரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

1) ‘பள்ளிக்கூடத்தை எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்ட போது எனக்குள் எழுந்த முதல் கேள்வி ‘எதுக்கு?’ என்பதுதான். ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. நாமும் ஒன்றை இழுத்துப் போட்டு எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வியிலிருந்துதான் யோசனைகள் சுழன்றன. 

பெற்றோர் இல்லாமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து குழந்தைகளையாவது அழைத்து அவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது வெகு நாள் கனவு. ஆனால் அதற்கு ஆகும் மாதாந்திரச் செலவு பயமூட்டியது. ஆசிரியர்களை நியமித்து, உணவுக்கான செலவுகள் என்று கையைக் கடித்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு அமைப்பை ஆரம்பித்துவிட்டால் இடையிலும் நிறுத்த முடியாது. அதனால்தான் இவ்வளவு நாட்களாகத் தயங்கிக் கொண்டிருந்தேன். 

அரசு உதவி பெறும் பள்ளி (Govt Aided school) என்பது நல்லதொரு வாய்ப்பு. ஆசிரியர்களுக்கான ஊதியம், உணவு என சகலத்தையும் அரசாங்கம் வழங்கிவிடுகிறது. அற்புதமான நிர்வாகத்தை நாம் கொடுத்தால் குழந்தைகளை மேலே கொண்டு வந்துவிட முடியும். யோசித்துப் பார்த்தால் பள்ளிக் கூடத்தை எடுத்துக் கொள்வது சரியான முடிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் குழந்தைகளை விட்டு அவர்களுக்கான கட்டணத்தைக் கட்டிவிடலாமே என்று கேள்வி எழலாம். குழந்தைகளுக்கான உணவையும் உறைவிடத்தையும் வழங்குவது மட்டுமே நோக்கமில்லை. அவர்களை முழுமையான மனிதர்களாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் அநாதைகள் என்கிற மனநிலை கிஞ்சித்துமில்லாத ஆளுமைகளாக அவர்கள் இருக்க வேண்டும். அற்புதமான வசதிகளுடன் நல்ல உணவு, கல்வி என சகலவிதமான செகளரியங்களுடன் அந்தக் குழந்தைகள் மேலே வர வேண்டும். அதற்கு நிர்வாகம் நம் வசம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

2) நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான சூப்பர் 16, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சிகள், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிலரங்குகள் என தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். வகுப்பறைகள் கூட கைவசமில்லை. வெவ்வேறு பள்ளிகளில் இடம் கேட்டுத்தான் நடத்த வேண்டியிருக்கிறது. நிசப்தத்தின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு நமக்கென ஒரு களமாக இந்தப் பள்ளி இருக்கும் என்பது இரண்டாவது முக்கியமான காரணம்.

3) மிக முக்கியமான ஒரு அம்சத்திலும் தெளிவாக இருக்கிறேன். நிசப்தம் அறக்கட்டளை எந்தக் காலத்திலும் நிறுவனமயமாகாது (Institutionalize). ‘இதுவும் ஒரு என்.ஜி.ஓ’ என்கிற வடிவத்தை எந்தக் காலத்திலும் எடுக்காமல் தனியாக, உதிரியாகவேதான் செயல்படும். 

4) வேறொரு நிறுவனத்துடன் அல்லது அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிற எண்ணமும் இல்லை. அதனால் நம்முடைய இலக்கும், நோக்கமும் தடைபட்டுப் போகக் கூடும். நாம் ஒன்று நினைப்போம். கூட்டாளி இன்னொன்று நினைப்பார். அது தேவையில்லாத சச்சரவுகளை உண்டாக்கக் கூடும். எங்கேயாவது தேங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஆலோசனைகள் கேட்பதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றையும் குதப்பி முடிவு நாம் எடுப்பதாக இருக்க வேண்டும். ‘இந்த முடிவு கூட்டாளிக்குப் பிடிக்காதோ’ என்று நினைப்பதற்கான சூழலே உருவாகக் கூடாது. அது நம்முடைய தன்னிச்சையான தன்மையைச் சிதைத்துவிடும்.

5) கணக்கு வழக்குகளை பொதுவெளியில் வைப்பது என்பதான செயல்பாடுகளில் இப்பொழுது நிசப்தம் எப்படிச் செயல்படுகிறதோ அப்படியேதான் செயல்படும். பள்ளி என்பது நிசப்தம் அறக்கட்டளையின் ஓர் அங்கம். இப்பொழுது செய்து கொண்டிருக்கும் பணிகளுடன் சேர்த்துக் கூடுதலான இன்னொரு செயல்பாடு. இப்பொழுது பிற செயல்களில் தன்னார்வலர்கள் உதவுவது போல பள்ளியின் செயல்பாட்டில் ஆசிரியர்கள் உதவுவார்கள். அவ்வளவுதான். நாம் அடுத்த கட்டமாக நாம் நகர்வதற்கான படிக்கட்டு. அதைத் தாண்டி அதில் எதுவுமில்லை. 

6) நிசப்தம் வழியாக எளியவர்களுக்கான சீரிய மருத்துவ முகாம், மருத்துவப் பரிசோதனைக் கூடம் போன்ற சில கனவுத் திட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் உடனடியாகச் செய்ய முடியாது. படிப்படியாகத்தான் நகர வேண்டும். அவற்றையெல்லாம் செயல்படுத்த இதுவொரு முன்னோடியான செயலாக இருக்கும். கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. இங்கேயிருந்து கற்றுக் கொள்வோம்.

பெரிய காரியம்தான். இன்னமும் ஐம்பது லட்ச ரூபாயாவது தேவை. சில நண்பர்கள் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சாதாரணமாக முடித்துவிட முடியாது என்று தெரியும்.

பார்க்கலாம்.

‘இதை எடுத்துச் செய்தே தீர வேண்டும்’ என்று எதையுமே செய்வதில்லை. சமூகப்பணிகளில் அது சரியான அணுகுமுறையும் இல்லை. ‘இதனை இவனால் இவன் முடிக்கும்’ என்ற குறள் மீது அசாத்தியமான நம்பிக்கை கொண்டவன். ‘இந்த வேலை இவனிடம் போக வேண்டும்’ என்று இயற்கை நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படி இயற்கை நம்மைத் தேர்ந்தெடுக்கும் போது இறுக்கமாக நிற்பதும் சரியில்லை. நெளிந்து குழைந்து வழிவதும் சரியில்லை. நாம் நாமாகவே இருப்போம். பள்ளிக்கூடத்தை நாம்தான் நடத்த வேண்டும் என்றிருந்தால் நம் வசம் வந்தே தீரும். நமக்கென அது விதிக்கப்படவில்லையெனில் தலை கீழாக நின்றாலும் நம்மிடம் வந்து சேராது. எனவே அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதே அர்ப்பணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எல்லாக் காலத்திலும் செயல்படுவோம். எந்தவொரு சிறு வட்டத்திலும் சிக்கிக் கொள்ளாமல்.

Dec 21, 2017

அடுத்த கட்டம்...

ஒரு பெரிய திட்டம் இரண்டு நாட்களாக மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. நிசப்தம் சார்பில் பள்ளிக்கூடம் ஒன்றுக்கான பூர்வாங்க வேலைகளைத் தொடங்கலாமா என்ற யோசனை அது.

கோபிச்செட்டிபாளையத்தில் செயல்படும் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளி (Government Aided School). ஆசிரியர்களுக்கான ஊதியம், மாணவர்களுக்கான சத்துணவு என அனைத்தையும் அரசாங்கம் வழங்கிவிடுகிறது. மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி நிர்வாகத்தை மட்டும் தனியார் செய்ய வேண்டும். உதவி பெறும் பள்ளிகளுக்கான விதிமுறைகளைப் பொறுத்தவரையில் பள்ளி நடத்துவதற்கான இடம், கட்டிடம் ஆகியவற்றை நிர்வாகமே அமைத்துக் கொள்ள வேண்டும். தாய்த்தமிழ் பள்ளிக்குச் சொந்தக் கட்டிடம் இல்லை. அவர்களால் இடம் வாங்கி கட்டிடம் கட்ட முடியவில்லை. எல்லாவிதத்திலும் முயற்சித்துப் பார்த்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போகிறார்கள். 

‘பள்ளிக்கூடத்தை நீங்க எடுத்துக்குறீங்களா?’ என்று நண்பர்கள் கேட்ட போது குழப்பமாக இருந்தது.

பள்ளிக்கூடத்துக்கென குறைந்தது பத்து அல்லது பதினைந்து சென்ட் இடமாவது வாங்க வேண்டியிருக்கும். பள்ளிக்கூடம் தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில்தான் அந்த இடம் இருக்க வேண்டும். அதுவொரு விதி. இடம் வாங்குவதற்கு முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய் வரைக்கும் தேவைப்படும். (ஒரு செண்ட் மூன்று லட்ச ரூபாய் என்ற கணக்கு) அதன் பிறகு கட்டிடம் கட்டுவதற்கான செலவு இருக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஐந்து வகுப்பறைகள், ஒரு தலைமையாசிரியர் அறை மற்றும் ஒரு சத்துணவுக் கூடம். கட்டிடத்துக்கு என குறைந்தபட்சம் ஐம்பது லட்சம் ரூபாயாவது ஆகும். அறக்கட்டளையில் முப்பது லட்சம் இருக்கிறது. இன்னுமொரு பத்து லட்ச ரூபாய் இருந்தால் இடத்தை வாங்கிவிடலாம். கட்டிடத்திற்குத் தேவையான இன்னமும் ஐம்பது லட்ச ரூபாயைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. 

இரண்டு நாட்களாகவே குழப்பம்தான்.

தமிழகத்தில் எவ்வளவோ பள்ளிகள் இருக்கின்றன. இன்னொரு பள்ளிக்கூடம் எதற்கு என்று கேள்வி எழலாம். ஒரே கனவுதான். இது மட்டும் சரியாக அமையும்பட்சத்தில் வெறுமனே பாடசாலையாக மட்டும் இருக்காது. அடுத்த சில ஆண்டுகளில் அம்மா அப்பா இல்லாத, வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இருபத்தைந்து குழந்தைகளையாவது ஒவ்வொரு வருடமும் அழைத்து வந்து அவர்களைத் தங்க வைத்து படிப்பும் உணவும் கொடுத்தும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்த வேண்டும். அதுதான் அடிப்படையான நோக்கம்.

சிக்மகளூர் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சில்லரையைக் கொடுத்துவிட்டு ‘பெத்தவங்க யாருமில்லையா?’ என்று கேட்ட போது ‘அம்மா அப்பா ரெண்டு பேருமே இல்லை’ என்றான். இரவுகளில் பேருந்து நிலையத்திலேயே தூங்கிக் கொள்வானாம். அப்பொழுது அவனுக்கு எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே கூட இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கக் கூடுமல்லவா? அவர்களுக்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்ததுண்டு. ‘நம்மால் அவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முடியாது’ என்று தயக்கம் இருக்கும். இது அதற்கானதொரு வாய்ப்பு என நினைக்கிறேன்.

கனவு சரிதான். செயல்படுத்த வேண்டுமல்லவா? பணம் மட்டுமில்லை. கட்டிடம் மேலெழும் போது கண்காணிக்க வேண்டும், பள்ளியின் நிர்வாகத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். நிறைய இருக்கின்றன. பெரிய காரியமிது. நிறைய உழைப்புத் தேவை. எண்ணித் துணிக கருமம். அதனால்தான் நிறைய யோசனைகள். அம்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அறக்கட்டளை ஆரம்பித்த போதும் இப்படித்தான் எதிர்த்தார்கள். தான் உண்டு தம் குடும்பம் உண்டு என்று இருந்த நடுத்தர மனநிலை அவருக்கு. அவரைச் சமாளித்துக் கொள்ளலாம். 

எப்பொழுதுமே இப்படியான காரியக்குழப்பத்தில் இருக்கும் போது ஏதாவதொரு சமிக்ஞை கிடைக்கும். அலுவலகம் முடித்து வந்த போது ஜெயக்குமார் ‘ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்புகிறேன்’ என்று செய்தி அனுப்பியிருந்தார். ‘உங்ககிட்ட பேசணும்’ என்றேன். அவர் அழைத்த போது திட்டத்தைச் சொல்லி அதற்காக இந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்றேன். ‘தாராளமாக’ என்றார். ஏதோவொரு பச்சைக்கொடி. இல்லையா? 

சிறப்பான நூலகம், கணினிப் படிப்பு, அந்நிய மொழியறிவு, விளையாட்டு, கலை என சகலத்திலும் மாணவர்களைத் தயார்படுத்தும் தரமான மாதிரிப்பள்ளியாக உருவாக்க வேண்டும். ஆர்வமுள்ள வெளியாட்கள் பள்ளியிலேயே பத்து பதினைந்து நாட்கள் தங்கி தனித்தனி பயிற்சிகள் அளிப்பதற்கான ஏற்பாடுகள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்குச் செல்லும்படியான மாணவர்களை உருவாக்குதல் என்று கனவு மிக மிகப்பெரியது.

ஒருவேளை பள்ளி ஆரம்பிக்கப்படுமாயின், அதுவும் நிசப்தம் அறக்கட்டளையைப் போலவே கணக்கு வழக்குகளை வெளியிட்டு வெளிப்படையாகச் செயல்படும் பள்ளியாக இருக்கும். 

கல்வி சார்ந்த பணிகளில் இது அடுத்த கட்டமாக இருக்கும். காலடி வைத்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. இன்னமும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. கருத்துகளைச் சொல்லுங்கள். ஆர்வமுள்ள நண்பர்களிடமும் அமைப்புகளிடமும் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். தனியொரு மனிதனால் செய்யக் கூடிய காரியமில்லை. கூடி இழுத்துப் பார்க்கலாம். பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் நிர்வாகத்தைக் கை மாற்றுவதற்கான வேலைகளில் இறங்கிவிடலாம்.

(குறிப்பு: வெளிநாடுகளில் இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து நிசப்தம் அறக்கட்டளைக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது. FCRA என்று தனியாக அனுமதி பெற வேண்டும்.  அது நிசப்தம் அறக்கட்டளையில் இல்லை. இந்திய வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே அறக்கட்டளைக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். நன்றி)

Dec 20, 2017

கேள்விக்கென்ன பதில்?

அதிகப்படியான மிரட்டல் என்று எதை நினைக்கிறீர்கள். அப்படி செய்பவரை நேரில் காணும்போது என்ன செய்ய தோன்றும். சும்மா ஒரு General Knowledge-க்குத்தான்?

எதிராளிகள் நம்முடைய பலவீனத்தை வைத்து மிரட்டுவதுதான் அதிகப்படியான மிரட்டலாக இருக்க முடியும். பத்து வருடங்களுக்கு முன்பாக ஓர் அரசியல்வாதியைத் திட்டி எழுதியிருந்தேன். அது இணையத்தில் பரவலான போது அதுவரையிலும் என்னிடம் நன்கு பழகியிருந்த நபரொருவர் அழைத்து நல்லது செய்வது போலப் பேசினார். ‘ஆட்சி அவங்ககிட்ட இருக்குது...நீ ஏம்ப்பா அப்படி எழுதுன? அவங்க கோபப்படுறாங்க..உங்க அம்மா அப்பா எல்லாம் அரசு ஊழியர்கள்தானே..அவங்களை கண்காணிக்க ஆரம்பிச்சுடுவாங்க...நீ பண்ணுற பிரச்சினைக்கு அவங்க ஏன் மாட்டணும்?’ என்று எனக்கு ஆதரவாக இருப்பது போலவே மிரட்டினார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு ‘அதெல்லாம் ஜோக்குக்கு எழுதினேன்..மன்னிச்சுடுங்கன்னு எழுது...மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்கள் என்பதுதான் அப்பொழுது என்னுடைய பலவீனமாக இருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தி மிரட்டினார்- மிரட்டுவதே தெரியாமல். எப்பொழுதும் மறக்கவே முடியாது. இத்தகைய மனிதர்களைத் திரும்பச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மிரட்டியதைக் காட்டிக் கொண்டதில்லை.

சங்கர்-கெளசல்யா தீர்ப்பு குறித்து உங்கள் எண்ணம் என்ன? நீங்கள் மரண தண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவரா? இத்தகைய தீர்ப்புகள் ஆணவக் கொலைகளை தடுக்கும் என நினைக்கிறீர்களா?

சமீபமாக இரண்டொரு காதல் பிரச்சினைகளில் தலையிட்டிருக்கிறேன். சாதியப்பற்றும் வெறியும் அதிகம் கொண்ட பகுதியில் இருந்து வந்தவன் என்ற முறையில் இது பற்றி பிறிதொரு சமயம் விரிவாகவே எழுத வேண்டும். பொதுவாகப் பெற்றவர்களின் சிக்கலே ‘ஊர் என்ன சொல்லும்?’ என்பதாகத்தான் இருக்கிறது. ‘வெள்ளையும் சொள்ளையுமா நாளைக்கு நான் நல்லகாரியம் கெட்ட காரியம்ன்னு போக முடியுமா?’என்கிறார்கள். குழந்தைகளின் வாழ்க்கையைவிடவும் ஊர்ச் சொல்தான் முக்கியம் என்று உருவேற்றப்பட்டிருக்கும் சாதியக் கட்டமைப்புகளில் இத்தகைய தீர்ப்புகள் பெரிய மாறுதலை உண்டாக்கிவிடாது. ஒருவேளை பயத்தை உண்டாக்கலாம். கொல்வதற்கான பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு ‘திவ்யா இளவரசனுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும்’ ‘சங்கருக்கு என்னாச்சு தெரியும்ல..ஆளை வெச்சுக் கொன்னுட்டு தூக்குல தொங்கிடுவேன்’ என்று காதலர்களை எமோஷனல் ப்ளாக் மெயில் செய்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிற சாத்தியங்களும் அதிகம்.  ‘மானம் போனதுக்கப்புறம் உசுரு போனா கெடக்குது...’ என்று அருகாமையில் அமர்ந்து உசுப்பேற்றுகிறவர்களுக்கும் இதுவொரு நல்ல வாய்ப்பு. எந்தவிதமான குற்றமாக இருப்பினும் மரண தண்டனையளிக்க மனிதனுக்கு உரிமையில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. 

கமல் எழுதும் என்னுள் மையம் கொண்ட புயல் படிக்கிறீர்களா? எவ்வகையாயினும் ஏனென்று கூறவும்.
வாசிப்பதில்லை.

தமிழில் தற்போது வெளிவரும் தினசரிகளில் எது சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?

தமிழ் இந்து. 

பொதுவாகவே ஒவ்வொரு தினசரிக்கும் ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். தினமலர், தினகரனின் தீவிரமான ஒரு பக்கச் சார்புத் தன்மை, உள்ளூர் தாண்டிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தராத தினத்தந்தி, மிகக் குறைவான செய்திகளை மட்டுமே வழங்கும் தினமணி போன்றவைகளை ஒப்பிடும் போது இந்துவில் வெளியாகும் செய்திகளின் ஆழம், அதன் பரந்துபட்ட தன்மை போன்றவை அதனைச் சிறந்ததாகக் கருத வைக்கிறது. அவ்வப்போது, ‘சாய்கிறார்கள்’ என்ற எண்ணம் தோன்றுவதும், அதிகளவில் பிம்பப்படுத்துவதும் அதன் பலவீனம் என நினைக்கிறேன்.

எப்படி நண்பா உன்னை போல் இவ்வளவு நல்லவனாக இருப்பது?

வெளிப்படையாக இருக்கிறேன். நல்லவனாக இல்லை. (நீங்கள் கலாய்க்கவில்லை என்ற நம்பிக்கையில் பதில் எழுதியிருக்கிறேன்)

This is Rajkumar. I am basically from Kanyakumari. I came to know from my friends about your organisation.Its regarding recent ockii cyclone which caused huge losses to people living in southern coastline. Sir if possible can your trust help them in whatever way possible. 

Sarahah தளத்தை சில நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டுவிட்டதால் தங்களுடைய இந்தச் செய்தி கண்ணில்படாமல் தவறிப் போனது. ஓகி புயல் குறித்தான செய்திகளை கவனித்த போது நம்மால் ஏதாவது செய்ய இயலுமா என்று யோசித்ததுண்டு. சில நண்பர்களிடமும் விசாரித்தேன். மீனவர்களைக் காணவில்லை என்பதுதான் முக்கியமான பிரச்சினை என்பதால் களத்தில் இறங்கி நாம் செய்யக் கூடிய பணிகளாகத் தெரியவில்லை. ஒருவேளை என்னுடைய புரிதல் தவறாக இருக்கலாம். என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும் என்பதைத் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் அனுப்பினாலும் சரி. தேவைப்படும்பட்சத்தில் நிச்சயமாக பரிசீலித்துவிட்டுச் செய்யலாம்.

(இனி வாரம் ஒரு முறை Sarahah கேள்விகளுக்கு பதில் எழுதிவிடுகிறேன். தவற விட்டமைக்கு மன்னிக்கவும்.)

Dec 19, 2017

கைவிடப்படாதவர்கள்

பிரபாகர் அழைத்து ‘எங்க இருக்கீங்க?’என்றார். நீட் கோச்சிங் அறையில் இருந்தேன். இப்பொழுது வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்குத் தனித்தனி ஆசிரியர்கள் வருகிறார்கள். அது பற்றித் தனியாகச் சொல்கிறேன்.

இடத்தைச் சொன்னேன். ‘அப்பா உங்களைப் பார்க்கணும்ன்னு சொல்லுறாங்க’என்றார்.

வரச் சொல்லியிருந்தேன். மாலையில் குடும்பத்தோடு வந்தார்கள். ‘பிரபுவையும் எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க’ என்று அதிர்ச்சியாக இருந்தது. பிரபுவுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவரையும் அழைத்து வந்திருந்தார்கள். குளிர் காதுக்குள் செல்லாமல் இருக்க இரண்டு பக்கமும் காதுகளை அடைத்து ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்திருந்தார். அவரது உடல் வெகுவாக இளைத்திருந்தது.

‘அவரை ஏங்க தொந்தரவு பண்ணுறீங்க?’ என்றேன்.

‘அண்ணன் உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாரு’ என்றார் பிரபாகர். பிரபுவும் வருவதாக இருப்பின் நானே அவர்களின் வீட்டுக்குச் சென்றிருப்பேன்.

லம்பாடிகளின் குடும்பம் அது. பிரபுவுக்கு என்னைவிடவும் வயது குறைவாகத்தான் இருக்கும். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு தாலசீமியா. அவ்வப்பொழுது குருதி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரபுவுக்கு இருதயப் பிரச்சினை. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சில சிகிச்சைகளைச் செய்தும் பெரிய பலனில்லை.

‘உங்க லிமிட் முடிஞ்சுடுச்சுங்க’ என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு அங்குமிங்குமாகப் பணம் புரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அணுகிய போது நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்திருந்தோம். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது.  

அதற்கு நன்றி சொல்வதற்காகத்தான் வந்திருந்தார்கள்.

எளிய மனிதர்கள் அவர்கள். எப்படிப் பேசுவது என்பது கூடத் தெரியாது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளம் பழங்களை வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு ஒரு தட்டத்தையும் எடுத்து வந்து அதில் வைத்து நீட்டினார்கள். அவர்கள் அவ்வளவு செலவு செய்திருக்க வேண்டியதில்லை. உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் திரும்ப அழைப்பதே அரிதினும் அரிது. இவர்கள் தேடி வந்துவிட்டார்கள். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. ‘இதெல்லாம் வேண்டாங்க’ என்று மறுத்த போதும் அவர்கள் விடுவதாக இல்லை. நம்மிடமெல்லாம் வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக் கொண்டேன். அவர்களுக்கு அது திருப்தி. 

‘மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுங்க பிரபு’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரபு, அம்மா, அப்பா என மூன்று பேரும் காலைத் தொட்டுக் கும்பிட வந்துவிட்டார்கள். ஒரு குதி குதித்து அந்தப் பக்கமாக நகர்ந்த போதும் பிரபு எழவே இல்லை. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். ‘என் குழந்தைகளுக்காவது நான் உசுரோட இருக்கணும் சார்’ என்றார். அந்தக் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். இரு குழந்தைகளின் முகமும் நினைவில் வந்து போனது. இவர் தப்பினால்தான் தாலசீமியா குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். அவர்களால் முடியுமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் முயற்சிப்பார்கள். 

இத்தகைய மனிதர்களைத்தான் தேர்ந்தெடுத்து உதவ வேண்டும். ஒவ்வொரு ரூபாயும் யாரோ ஒருவருடைய உழைப்பு; நம்பிக்கை. 

கடந்த வாரத்தில் கார்த்திக் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்த இந்த பதிவு செய்யப்பட்ட ஒலியைக் கேளுங்கள். ஒரு குழந்தை தனது பிறந்த நாளுக்காக யாரும் தமக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டாம் எனத் தனது உறவினர்களிடம் சொல்லி அதற்கு பதிலாக பணம் அனுப்பி வைக்கச் சொல்லிக் கேட்கிறது. கிடைக்கும் பணத்தை நிசப்தம் தளத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம். எந்தச் சலனமுமில்லாமல் கவின் பேசுவதைக் கேட்டால்  மனதுக்குள் என்னவோ பிசையும்.

இதே ஒலிக்கோப்பை பிரபுவையும் கேட்கச் சொன்னேன். இப்படி எத்தனை எத்தனை பேரின் அன்பும் ஆதரவும்தான் பிரபு போன்றவர்களை எழுந்து வரச் செய்கிறது.

‘உலகத்துல எங்கேயோ இருக்கிற எத்தனையோ பேரின் பணம் இது. பணம் மட்டுமில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என ஒரு கணமாவது பிரார்த்திப்பார்கள்..உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது..வந்தாலும் பார்த்துக்கலாம்’ சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரபுவின் அம்மா உடைந்துவிட்டார். அழத் தொடங்கினார். இங்கே எந்த மனிதனும் கைவிடப்பட்டவர்கள் இல்லை. அல்லவா? இந்த உலகம் எளிய மனிதர்களின் அன்பினால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வேறு எதுவுமில்லை. நிச்சயமாக வேறு எதுவுமில்லை. பாசாங்கில்லாத வெறும் அன்பு மட்டுமே. இந்த நம்பிக்கையும் பாஸிட்டிவிட்டியும்தான் நாம் இயங்குவதற்கும் வாழ்வதற்குமான அச்சாணி.  

Dec 18, 2017

குழந்தைகளா? ப்ராய்லர் கோழிகளா?

‘ஆண்டுவிழா நடத்துகிறோம். உங்கள் மகன் கலந்து கொள்வதாக இருப்பின் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து அனுப்பவும்’ என்றொரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்கள். பள்ளியிலிருந்து. ஏற்கனவே கொடுத்த காசெல்லாம் போதாது என்று இப்படியொரு வருமானம். பணம் கொடுத்தால் மேடையேறலாம். இல்லையென்றால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும். கடந்தாண்டு சென்றிருந்தேன். முப்பது அல்லது நாற்பது குழந்தைகளை மேடையில் ஏற்றிவிடுவார்கள். ஐந்து நிமிடங்கள் பாட்டு ஒன்று பாடும். திக்குக்கு ஒன்றாக கையை அசைப்பார்கள். அவ்வளவுதான். நடனம் முடிந்தது. பெற்றவர்கள் ஆளுக்கு ஒரு கேமிராவைத் தூக்கிக் கொண்டு வந்து மேடைக்கு முன்பாக நின்று கொள்வார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவரவருக்கு அவரவர் பிள்ளை. காக்கைக்கும் தன் குஞ்சு...

பாடல் முடிந்தவுடன் ‘ஓ வாவ்...சூப்பர்ப் டான்ஸ்’ என்று தொப்புள் தெரிய சேலை கட்டிக் கொண்டு நடக்கவே தெரியாத செவத்த டீச்சர் மைக்கில் கத்தியவுடன் கூட்டம் புளகாங்கிதம் அடைந்து ஆர்பரிக்கும். இதுக்கு எதுக்கு பணம் வாங்குகிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. உடைக்கு மட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுமா? விழா நடத்துவதற்கான மொத்தச் செலவையும் நம் தலையில் கட்டிவிடுவதற்கான ஏற்பாடு அது. சில பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கூட வாங்குகிறார்களாம். கல்லுக்கு ஏற்ற பணியாரம். சோறு கூட போடுவார்களாக இருக்கும்.

‘இதெல்லாம் தேவையில்லை’ என்று சொன்னால் ‘நம்ம பையன் மட்டும் மேடையில் ஆடலைன்னா நல்லா இருக்குமா?’ என்கிறார்கள். ப்ராய்லர் கோழி இன் மேக்கிங்.

‘டேய் ஆண்டு விழா போட்டிகளில் கலந்துக்கிறவங்களுக்கு நாளைக்கு செலக்‌ஷன்..ஆலமரத்துக்கு கீழ நடக்கும்...கலந்துக்கிறவங்க கலந்துக்கலாம்’ என்று ஒரு சுற்றறிக்கையை வாசித்துவிட்டு ஆசிரியரோ ஆசிரியையோ வகுப்பறையில் அறிவித்தவுடன் மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடிவினா, நாடகம் என்று எல்லாவற்றிலும் காலை நனைத்துவிட வேண்டும் என்ற ஆசை பற்றிக் கொள்ளும்.

நடராஜ் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் பண்டிட். எந்நேரமும் வாய் சிவக்க வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருப்பார். அவரும் மன்சூர் அலி என்ற இன்னொரு ஆசிரியரும்தான் பெரும்பாலும் கலை நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நடனம் ஆடிக் காட்டலாம், நாடகம் நடத்திக் காட்டலாம். அவர்களுக்குப் பிடித்திருந்தால் ‘உங்க டீம் செலக்ட் ஆகிடுச்சு’ என்பார்கள். பிறகு தகவல் பலகையிலும் அறிவித்துவிடுவார்கள். அதன் பிறகு மாணவர்களாகத் தயாரித்துக் கொள்ள வேண்டியதுதான். மூன்றாம் வகுப்புக்கான கலை நிகழ்ச்சியில் கூட ஆடிக்காட்டச் சொல்லித் திறமையிருந்தால்தான் தேர்ந்தெடுத்தார்கள். பணம் கொடுத்தால் மேடையேறலாம் என்கிற அயோக்கியத்தனமெல்லாம் இல்லை.

அருள்பிரகாஷ் என்றொரு சீனியர் ‘டேய் நான் நாடகம் போடுறேன்..நீ வர்றியா?’ என்றார். 

‘சரிங்கண்ணா’ என்றேன். இரண்டே பேர்தான். நான் வரிசையாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர் பதில் சொல்வார். அத்தனையும் நகைச்சுவையான கேள்வி பதில்கள். அப்படித்தான் நினைத்துக் கொண்டோம். 

ஒரே நாளில் ஒத்திகையெல்லாம் பார்த்துவிட்டு ஆலமரத்துக்குக் கீழாகச் சென்றோம். முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலேயே பல நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் நடராஜூம் மன்சூர் அலியும் கழித்துக் கட்டினார்கள். 

எங்களை அழைத்தார்கள். குறளிலிருந்து ஆரம்பிப்போம் எனத் திட்டமிட்டிருந்தோம். தமிழாசிரியரை ஈர்ப்பதற்கான உபாயம் அது.

‘உம் பேரு என்ன?’

‘அருள் பிரகாஷ்’

மன்சூர் அலி என்னைப் பார்த்து ‘டேய் சுண்டைக்காயா..உம்பேரு என்ன?’ என்றார்.

சொன்னேன். ‘நாடகமா?’ 

‘ஆமாங்கய்யா’- வகுப்புகளைக் குறித்துக் கொண்டார்கள்.

அருள்பிரகாஷ்தான் ஆரம்பித்தார். ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை அண்டர்வேரைக் கிழிக்கும்’. அதுவரைத் தலையைக் குனிந்து கொண்டிருந்த தமிழாசிரியர் தலையைத் தூக்கிப் பார்த்தார்.

‘மறுபடி சொல்லு’ என்றார்.

என்னவோ விபரீதம் நடக்கப் போகிறது என எனக்குத் தெரிந்தது. அருளுக்கு அது தெரியவில்லை. நம்மை பாராட்டப் போகிறார் போலிருக்கிறது என்ற நினைப்பில் மீண்டும் உற்சாகமாகச் சொல்ல எழுந்தார். ஆசிரியருக்கு ஒரு கால் சற்றே ஊனம். தத்தி எழுந்து வந்தவர் அருகில் இருந்த செடிக்குள் வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு கும்மினாரே பார்க்கலாம். மன்சூர் அது வரைக்கும் அமைதியாகத்தான் இருந்தார். ஒருவேளை அவருக்கு உடனடியாக அர்த்தம் புரிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

‘அண்டர்வாரைக் கிழிக்குமாமா..’என்று நடராஜ் வாத்தியார் எடுத்துக் கொடுக்கவும் விபரீதம் எனக்குத் திரும்பியது. பையன்கள் கமுக்கமாகச் சிரித்தார்கள். மன்சூர் அடிப்பதற்குக வாகாக நான் அருகிலேயே நின்றிருந்தேன். ‘அவனுக்கு நீ அசிஸ்டெண்ட்டா?’ என்று கும்மிய கும்மு இருக்கிறதே.

நல்லவேளையாக முதல் குறளிலேயே தடுத்தாட்கொண்டார்கள். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவின் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்த குறள்களையெல்லாம் எங்களின் வசனங்களில் நுழைத்திருந்தோம். அதையெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்திருந்தால் கொத்து புரோட்டா போட்டிருப்பார்கள்.

அடியை வாங்கிக் கொண்டு ஆடுகளத்தில் அமர்ந்திருந்தோம். இரண்டு பேருக்குமே முகம் வீங்கிப் போய்க் கிடந்தது. வாத்தியார்களை மாற்றி மாற்றித் திட்டிக் கொண்டிருந்தோம்.

பையன்கள் வந்தார்கள். 

‘என்னடா ஆச்சு?’ சுரத்தேயில்லாமல் கேட்டோம். 

மறுபடியும் நாளைக்கு வரச் சொன்னார்கள் என்று சொல்லவும் அருளுக்கு உற்சாகம். ‘வேற ஒண்ணு ரெடி பண்ணலாமா’ என்றார். அப்பொழுது அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நான் ஆறாம் வகுப்பு.

‘நான் வரலைங்கண்ணா’ என்றேன். எத்தனை முறை அடி வாங்குவது?

‘டேய்...இப்போ அடி வாங்க மாட்டோம்’ என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. அதையும் இதையும் சொல்லி கடைசியாக ஒரு வழியாக்கினார். இடையில் ஒரே நாள்தான் இருந்தது. பக்திப் பழங்களாக மாறினோம். ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டுக்காக அடித்துக் கொள்ளும் விநாயகர்-முருகன் கதை. அதே நகைச்சுவைதான் அடிநாதம். ஒரே நாளில் தயாரோனோம். 

வாத்தியார் முன்னாடி நின்ற போது குதர்க்கமாகப் பார்த்துவிட்டு ‘ஏதாச்சும் தப்பும் தவறுமா செஞ்சீங்க..சாவடிச்சுடுவேன்’ என்றார். 

தலையை ஆட்டிவிட்டு நாடகத்தை ஆரம்பித்தோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்துவிட்டு ஆசிரியருக்கு ஒரே சிரிப்பு. அவரே சில ஐடியாக்களைக் கொடுத்து மெருகேற்றினார். ஆண்டுவிழா மேடையில் எங்களுக்குத்தான் பயங்கரமான கைதட்டு. அருள் பிரகாஷூக்கு எப்படியென்று தெரியவில்லை. என் வாழ்வில் மிக முக்கியமான சில நாட்கள் அவை. ஆயிரத்து ஐநூறெல்லாம் செலவு இல்லை. உடையெல்லாம் பெரிதாக இல்லை. சட்டையைக் கழற்றிவிட்டு நான் முருகனாக இருந்தேன். அவர் யானை முகத்தை அட்டையில் தயாரித்து ஒட்டிக் கொண்டு விநாயகராக மாறினார்.

அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் ப்ராய்லர்ஸ் இன் மேக்கிங் என்பதன் தெளிவான வித்தியாசம் புரிகிறது. குழந்தைகளுக்கு ‘இதெல்லாம் வாய்ப்புகள்’ என்றுச் சுட்டிக் காட்டுவது வேறு. ‘நீ இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று மோல்டிங் செய்வது வேறு. குழந்தைகளுக்கு சுதந்திரச் சூழல் அவசியம். அவரவர் போக்கில் விட்டுவிட வேண்டும். அவர்களுக்கே நிறையத் தோன்றும். அவர்களுக்குத் தோன்றுவதை அதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒழுங்குபடுத்தினால் போதும். அதை விட்டுவிட்டு சனிக்கிழமை கிதார் வாசி; ஞாயிற்றுக்கிழமை அபாகஸ் பழகு; கிரிக்கெட் கோச்சிங் என்று தாளிப்பதுமில்லாமல் மேடையிலும் இதுதான் உடை. இதுதான் நடனம் என்றெல்லாம் எல்லாவற்றையும் நாம் வடிவமைத்துக் கொடுப்பதற்குப் பெயர்தான் ப்ராய்லர் கோழி வளர்ப்பு. குழந்தைகள் அவர்களுக்கான களங்களை அவர்களாகக் கண்டறியட்டும். எல்லாவற்றிலும் நாமே மூக்கை நுழைத்தால் அதைப் போன்ற டார்ச்சர் அவர்களுக்கு வேறெதுவுமில்லை.

Dec 15, 2017

பள்ளியை மூடிவிடாதீர்கள்!

வெற்று அறிவிப்புகளால் மட்டுமே இந்த அரசாங்கம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகமில்லாமல் இல்லை. அதுவும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் மிகுந்த சலிப்பூட்டுகின்றன. வண்ணமயமான அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுகிறவர்கள் அதில் எவ்வளவு சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்? 

486 பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் தொடங்கப்படும் என்பதில் ஆரம்பித்து முப்பது கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகம் வாங்கப்படும், முதுகலை மாணவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, கீழடியில் நூலகம் அமைக்கப்படும் என முப்பத்தியேழு அதிரடி அறிவுப்புகளை ஜூன் மாதத்தில் வெளியிட்டார்கள். எத்தனை அறிவிப்புகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகளாவது தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாள்கள் வழங்கப்படும், 100 அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைப்போம் என்று கல்வித்துறை அமைச்சர் செல்லுமிடங்களில் எல்லாம் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஜூன் மாதத்தில் ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்டு வெளியான முப்பத்தியேழு அறிவிப்புகளில் தமிழகம் முழுவது 30 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்கிற அறிவிப்பு மிக முக்கியமானது. அதே சமயத்தில் காதில் பூ சுற்றக் கூடியதும் கூட. இன்றைக்கு எந்த அரசுத் தொடக்கப்பள்ளியில் வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாக இருக்கும். ‘நாங்க ரெண்டு வாத்தியார் இருக்கிறோம்...இருபத்திரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள்’ என்று ஓர் ஆசிரியர் சொன்ன போது ஐந்தாம் வகுப்பில் மட்டும் இருபத்தியிரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் சேர்த்து மொத்தமாகவே அவ்வளவு மாணவர்கள்தான். சமவெளிப்பகுதிகளிலும், நகரங்களுக்கு அருகாமையிலும் இருக்கக் கூடிய பள்ளிகளில் இந்த நிலைமை. ஊட்டி, பர்கூர் மாதிரியான மலைப்பகுதிகளில் இரண்டு இலக்கத்தைக் கூட மாணவர்களின் எண்ணிக்கை தாண்டுவதில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த நிலைமையில் இருக்கிற பள்ளிகளை மேம்படுத்துவதுதான் அவசியமான காரியமாக இருக்குமே தவிர எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்கிற கணக்கில் புதிய பள்ளிகளைத் தொடங்குகிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் கலர் கலராக ரீல் சுற்றுவதாகத்தான் இருக்கும்.

1990களில் தமிழகம் முழுவதும் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளிகளைத் தொடங்குவதற்காக வழி நடைப்பயணம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று நன்கொடை பெற்று- என்னுடைய நினைவு சரியாக இருக்குமானால் ‘வீட்டுக்கு ஒரு செங்கல்’ என்பதுதான் அந்த நடைபயணத்தின் முழக்கம்- தமிழகம் முழுவதும் பல தாய்த்தமிழ் பள்ளிகளைத் தொடங்கினார்கள். அந்தந்த ஊர்க்காரர்களே நிர்வாகிகளாகச் செயல்பட்டார்கள். அப்பொழுது நான் பொடியன். எங்கள் ஊரில் அந்த ஊர்வலம் வந்த போது அவர்களுடன் கூடவே கொஞ்ச தூரம் பயணித்துக் கத்திவிட்டு வந்தேன். அதன் பிறகு எங்கள் ஊரிலும் தாய்த் தமிழ் பள்ளியைத் தொடங்கினார்கள். பிறகு அது அரசு உதவி பெறும் பள்ளியாகவும் மாறியது. சற்றேறக்குறைய நூற்றைம்பது மாணவர்கள் படிக்கிறார்கள். முன்பு குறிப்பிட்டது போல அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் அந்தப் பள்ளியைத்தான் விரைவில் இழுத்து மூடப் போவதாக நிர்வாகிகள் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. 

அந்தப் பள்ளியில் நிசப்தம் சார்பில் நூலகம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். பள்ளியின் ஓர் ஆசிரியை அழைத்து ‘சார் ஸ்கூலை மூடுறாங்க போலிருக்கு...ஏதாச்சும் செய்ய முடியுமா?’ என்றார். விசாரித்துப் பார்த்தால் பள்ளி வாடகைக் கட்டிடத்தில் நடைபெறுகிறது. இடத்துக்காரர் காலி செய்யச் சொல்கிறார். பள்ளி நிர்வாகம் நகராட்சியை அணுகி ஏற்கனவே மூடப்பட்ட பள்ளிகளின் இடங்களில் ஏதேனும் ஒன்றை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ கொடுத்தால் சொந்தமாகக் கட்டிடம் கட்டிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். நகராட்சி ஆணையரில் தொடங்கி அமைச்சர் வரைக்கும் பேசிப் பார்த்திருக்கிறார்கள். எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. வேறு வழியில்லை. ‘நடத்த முடியாதுன்னு எழுதிக் கொடுத்துடுறோம்..’ என்று சொல்கிறார்கள்.
கல்வித்துறை அமைச்சரின் ஊரில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிக்கே இதுதான் நிலைமை. இந்த லட்சணத்தில்தான் புதிய பள்ளிகளைத் தொடங்குகிறார்கள். புதிய பள்ளித் தொடக்கம் என்றாலும் கூட ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக்கு இடத்தைத்தான் மாற்றித் தரச் சொல்கிறார்கள். அதுவும் ஏற்கனவே வேறு பள்ளிக்கூடம் செயல்பட்ட இடங்களைச் சுட்டிக் காட்டி ‘அந்த இடத்தைக் கொடுங்க’ என்று கேட்கிறார்கள். வெறுமனே இடத்தைப் பூட்டி வைத்துவிட்டு உதடுகளை இறுக வைத்துக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவென்றுதான் மண்டை காய்ந்தது.

அரசியல் ரீதியிலான காரணங்கள் கூட பின்னணியில் இருக்கக் கூடும். தமிழ் உணர்வாளர்களால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியை ஜி.பி.வெங்கிடு என்கிற முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் இப்பொழுது நிர்வகிக்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் தனது தேர்தல் அரசியலில் ஒரேயொரு முறை தோற்றிருக்கிறார் என்றால் அது வெங்கிடுவிடம்தான். செங்கோட்டையன் மாதிரியான பண்பட்ட அரசியல்வாதி இத்தகைய சிறு காரணங்களுக்காக பள்ளியை மூட வைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அப்படியே அரசியல் காரணம் இருந்தாலும் அதுவொன்றும் தவறில்லை. தேவைப்பட்டால் நிர்வாகத்தினரை மாற்றிவிட்டு அரசாங்கமே பள்ளியை நடத்தட்டும். அரசியல் காரணங்களுக்காக ஏன் பள்ளியை மூடுகிறார்கள்? நூற்றைம்பது மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு ஏன் இடமாற்ற வேண்டும்?

இடமும் இருக்கிறது. நிர்வாகமும் இடம் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பெற்றோரும் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள். கல்வியமைச்சரின் வெறும் கண்ணசைவில் முடிய வேண்டிய காரியம் இது என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

அரசியல், நடைமுறைச் சிக்கல் என்ற எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. தமிழ் வழிக்கல்வி நிறுவனமொன்றை மூடுவது என்பது தமிழ் மொழியின் பொடனியில் அடிப்பது போலத்தான். வருடந்தோறும் பொங்கல் விழாவை நடத்தியும், ஆசிரியர்களை ‘அத்தை’ என்றும் ‘மாமா’ என்றும் அழைத்து பள்ளி செல்வதைக் கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றி நீர்த்துப் போகச் செய்துவிடாதீர்கள். அதுவும் கல்வியமைச்சரின் ஊரிலேயே!

பள்ளி குறித்து தி இந்துவில் வெளியான கட்டுரை:ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை: ஆனந்த விகடன் கட்டுரையை இணைப்பில் வாசிக்கலாம்.தாய்த்தமிழ் பள்ளியின் ஆசிரியர்கள் அழைத்துப் பேசிய போது சங்கடமாக இருந்தது. ‘இதில் என்னால் என்ன செய்ய முடியும்ன்னு தெரியலைங்க டீச்சர்...முடிந்தளவுக்கு செய்தியை வெளியில் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்..ஆனால் ஒருவேளை மூடி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் இதற்கெல்லாம் அசந்து போக மாட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமையன்று (16-டிசம்பர்) மாலையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மாணவர்களின் பெற்றோர் நடத்துகிறார்கள். அந்தக் கூட்டம் தாய்த்தமிழ் பள்ளியின் இறுதி அஞ்சலிக் கூட்டமாக இருந்துவிடக் கூடாது என்றுதான் திகிலாக இருக்கிறது.

Dec 13, 2017

உங்களுக்கு என்ன ராசி?

‘உங்களுக்கு என்ன ராசிங்க?’ கடந்த வாரத்தில் ஒரு நண்பர் கேட்டார். சரியாகச் சொன்னால் செவ்வாய்க்கிழமை. நேரில் சந்தித்துக் கொண்டோம்.

‘துலாம் ராசிங்க’

‘அட நம்ம விஜயகாந்த் ராசி’- எனக்கு கோபம் வந்துவிட்டது. வேறு துலாம் ராசிக்காரர்கள் யாரும் இல்லையா என்ன? விஜயகாந்த்தைப் பிடிக்காது என்றில்லை. ஆனால் சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாரே என பல்லை வெறுவினேன்.

‘டிசம்பர் 19 சனிப்பெயர்ச்சி..உங்களுக்கு ஏழரை முடியுது’ என்றார். 

‘துலாம் ராசிக்கு சனி பகவான் தப்பொண்ணும் பண்ண மாட்டாருன்னு சொன்னாங்க’ என்றேன்.

‘யாரு சொன்னது?’ என்று மடக்கினார். 

‘ரோகிணி அய்யர்’. பெயர்தான் ரோகிணி. ஆண்தான். திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இருக்கிறவர். அவருடன் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. ஃபோன் எல்லாம் கிடையாது. அங்கேயிருக்கும் யாரிடமாவது ‘ரோகிணி அய்யரைப் பார்க்கணும்’ என்று சொன்னால் கைகாட்டிவிடுவார்கள். அவர்தான் சொல்லியிருந்தார். 

ஆனால் இவர் விடுவதாக இல்லை. ‘போன ஏழரை வருஷமா உங்களுக்கு பிரச்சினையே இல்லையா?’ என்றார்.

‘மனுஷன்னா பிரச்சினை இல்லாம இருக்குமாங்க?’

‘பிரச்சினை இருக்கும்..ஆனா உங்களுக்கு அதிகமா இருந்திருக்கும்..ஏன்னா ஏழரைச் சனி ’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை’ என்று சொன்ன போதும் அவர் அமைதியாகவில்லை. உண்மையில் கடந்த ஏழரை வருடங்களில் நல்ல வளர்ச்சிதான். நிறுவனம் மாறினேன். நல்ல சம்பள உயர்வு- 

‘எப்போ சம்பள உயர்வு கிடைச்சுது?’

‘2015ல..’

‘பாருங்க..சனி உங்களை விட்டு விலகறதுக்கு முன்னாடி கொடுத்திருக்காரு..அஷ்டமத்துல சனி அள்ளிக் கொடுப்பாரு’

எதைச் சொன்னாலும் அவர் சொல்வதுதான் சரி என்கிறார். அதற்குமேல் அவர் சொல்வதற்கு தலையாட்டிவிடலாம் என்றுவிட்டுவிட்டேன்.

அவர் பெங்களூருவாசி. பிடிஎம் லே-அவுட்டில் குடியிருக்கிறார். 

‘ஜாக்கிரதையா இருந்துக்குங்க...உடம்பு உபாதை ஏதாச்சும் வரும்....விஜயகாந்த் சிங்கப்பூர் போற மாதிரி’ என்றார். 

‘யோவ் விஜயகாந்த் சிங்கப்பூர் போறாருன்னா...நானும் போகணுமா?’ என்று மனதுக்குள் பொங்கிப் பிரவாகம் எடுத்தது.

நம்புவீர்களா என்று தெரியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையன்று சொல்லிவிட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமையன்று ஒரு சேட்டையைச் செய்துவிட்டேன்.

அலுவலகத்தில் ஒரு வெந்நீர் எந்திரம் உண்டு. எப்பொழுது திறந்தாலும் ஆவி பறக்கத் தண்ணீர் கொதிக்கும். பீங்கான் குடுவை ஒன்றையும் அலுவலகத்தில் வைத்திருக்கிறேன். அதில் வெந்நீரைப் பிடித்து பாத்திரங்களை கழுவுவது வழக்கம். சனிக்கிழமை ஊட்டி போவதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிய படியே வெந்நீரைப் பிடித்து வாயில் ஊற்றிவிட்டேன். அந்த ஒரு கணம்தான். அப்படி ஏன் மடத்தனத்தைச் செய்தேன் என்று இதுவரை புரியவில்லை. நல்லவேளையாக தொண்டைக்குச் செல்லவில்லை.

புஸ் புஸ்ஸெண்று நின்ற இடத்திலேயே துப்பிவிட்டு அலுவலகத்தில் வைத்திருந்த வெண்ணெய்யை எடுத்து வாய் நிறைய அப்பிக் கொண்டேன். அடுத்த சில வினாடிகள் சுவையரும்புகள் வெடித்து உரிந்து கிடந்தன. நாக்கை நீட்டி கண்ணாடியில் பார்த்தால்... அடங்கொக்கமக்கா.

‘சொல்லாமலே’ லிவிங்ஸ்டன் மாதிரி ஆகிவிடுவேனோ என்று பயமில்லாமல் இல்லை. வாயில் ஒரு புண் வந்தாலே ஒரு வழியாக்கிவிடும். இது நூற்றுக்கணக்கில். சனிக்கிழமை வரைக்கும் வலி தெரியவில்லை. மரத்துப் போய்க் கிடந்தது. எதைத் தின்றாலும் மசமசவென்று மண்ணைத் தின்பது போலத்தான் இருந்தது. ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மரமரப்பு சரியாகி வலி ஆரம்பித்தது. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.  ரணகளம்!

ஒவ்வொரு கணமும் பிடிஎம் லே-அவுட்வாசியும், விஜயகாந்த்தும்தான் நினைவுக்கு வந்து போனார்கள். ஒருவேளை நாக்கு வழியாக நரம்பு மண்டலம் கசமுசாவாகி விஜயகாந்த் போலவே நமக்கும் நரம்பு பாதிப்பு வந்துவிடுமோ என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலிருந்து தப்பித் தேறிவிட்டேன். அந்த நண்பரை அழைத்து விவகாரத்தைச் சொன்னேன்.

‘நான் தான் சொன்னேன்ல’ என்றார். 

‘இதைச் சொல்லுறதுக்கே இங்க வந்தீங்களா சார்?’ என்றேன்.

நமக்கு நடக்கப் போற ஒவ்வொண்ணையும் எப்படியாவது ஒரு வகையில் இயற்கை நம்மிடம் அறிவிச்சுடும்..அதை எப்படி சீரியஸா எடுத்துகிறோம்ங்கறதுல இருக்கு’ என்றார். அது சரி.

நலம் விசாரித்துவிட்டு ‘நீங்க என்ன நட்சத்திரம்ன்னு சொன்னீங்க?’

‘விசாகம்’

‘அட நம்ம டிடிவி தினகரனுக்கும் அதே நட்சத்திரம்தான்’ என்றார்.

மறுபடியும் முதலில் இருந்தா? ‘சார் மேனேஜர் கூப்பிடுறார்’ என்று கொன்ன வாயில் நாக்கைக் கடித்தபடியே சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

Dec 11, 2017

அடர்வனம்

நம்ப முடிகிறதா?

ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.


அடர்வனம் பற்றித் தெரியாதவர்களுக்காக-

அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய நிபுணர் கண்டறிந்த மரவளர்ப்பு முறை இது. விதவிதமான மரங்களை வெகு நெருக்கமாக நட்டு வளர்க்கிறார்கள். தாவரங்கள் சற்றே வளர்ந்த பிறகு மனிதர்களாலேயே உள்ளே நுழைய முடியாதபடியான நெருக்கம். பறவைகளுக்கும், அணில், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகளுக்குமான வனமாக அது மாறிவிடும். விதைகள் திரும்பத் திரும்ப வனத்துக்குள் விழுந்து முளைக்கும் போது வனத்தின் நெருக்கம் பெருகிக் கொண்டேயிருக்கும்.

பொதுவாக, செடிகளை இடைவெளி விட்டு நட்டு அவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் பார்த்து, மனிதர்கள் முறித்துவிடாமல் காத்து என சகல பிரயத்தனங்களையும் செய்து காப்பாற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவு. அடர்வனத்தில் ஆரம்ப முதலீடு சற்றே அதிகம் என்றாலும் தப்பித்து மேலே எழும்பக் கூடிய மரங்களின் எண்ணிக்கை அதிகம். 

அடர்வனம் ஒன்றை திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் என்ற ஊரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவிநாசியிலிருந்து கோவை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. பதினெட்டு சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு மரங்கள். சற்றேறக்குறைய அறுபது வகையான மரங்கள் இவை. சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு வகை மரத்தையும் கலந்து வைத்திருக்கிறார்கள். பதினெட்டு செண்ட் இடத்துக்கும் கம்பிவேலி உண்டு. அதனால் விலங்குகள் நுழைவதில்லை. உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்பதால் அவர்களும் வனத்துக்குள் நுழைவதில்லை. அடர்வனம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐம்பது செடிகள் பட்டுப் போய்விட்டன ஆயினும் இரண்டாயிரத்து நூறுக்கும் அதிகமான செடிகள் உயிர்பிடித்திருக்கின்றன.

ஒரு வனம் உருவாகிக் கொண்டிருப்பதை நேரடியாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். கடந்த வருடம் அடர்வனத்தில் செடிகள் நட்டப்பட்டவுடன் பார்த்துவிட்டு வந்தோம். அப்பொழுது பெரிய நம்பிக்கையில்லை. ‘ஐம்பது சதவீத மரங்கள் தப்பித்தாலே பெரிய விஷயம்’ என்று கூட நினைத்தேன். ஆனால் தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான மரங்கள் பெரிதாகியிருக்கின்றன. இளைஞர்களின் உழைப்பும் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பும் இல்லையென்றால் சாத்தியமேயில்லை. வளர்ந்த மரங்களைப் பார்த்த போது நம்ப முடியாத மகிழ்ச்சி எங்களுக்கு. அடர்வனத்துக்கு அருகாமையிலேயே குளம் ஒன்றிருக்கிறது. மழை நீர் தேங்கி நிற்கும் அந்தக் குளத்தில் பறவைகள் அமர்ந்திருந்தன. பாம்புகளும் அணில்களும் வனத்துக்குள் உலவுகின்றன. பறவைகள் சில அதே அடர்வனத்தில் கூடு கட்டியிருக்கின்றன. இன்னமும் மரங்கள் முழுமையாக வளரும் போது நிறையப் பறவைகள் இந்த வனத்துக்குக் குடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தங்கள் பகுதிகளில் மரம் வளர்க்க முயற்சிக்கும் இளைஞர்கள் இத்தகைய வனங்களைப் பற்றி யோசிக்கலாம். 

முதலில் மண்ணை வளப்படுத்துகிறார்கள். ஒன்றரை அடி குழி தோண்டி மண்ணோடு இயற்கை உரங்களைக் கலந்து மீண்டும் அந்தக் குழியை நிரப்பி செடிகளை நட்டுவிடுகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல நிலத்தைப் பாதுகாக்க கம்பிவேலி அமைக்கிறார்கள். முதல் ஒரு வருடத்திற்கு சீரான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கும். சொட்டு நீர் பாசனம் அமைக்க வாய்ப்பிருப்பவர்கள் அதைச் செய்யலாம். இதைத் தவிர பெரிய பராமரிப்பு எதுவுமில்லை. ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் வனம் தானாகவே பிழைத்துக் கொள்ளும். உதிரும் இலைகளே அவற்றுக்கான உரம். அதன் நிழலே மழை ஈரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும். வனத்தில் விளையும் கனிகள் பறவைகளை ஈர்ப்பதற்கான வழி. பறவைகள் பறக்கும் இடங்களுக்கெல்லாம் இங்கேயிருந்து விதைகளை எடுத்துச் செல்கின்றன. இப்படி சூழலியலின் இன்னொரு அங்கமாக இந்த வனம் மாறிவிடுகிறது.

குள்ளே கவுண்டன் புதூரில் இதனைச் சோதனை முயற்சியாகத்தான் தொடங்கியிருக்கிறார்கள். திட்டத்துக்கு நிறையப் பேர் உதவியிருக்கிறார்கள். இந்த அடர்வனத்தின் வெற்றி அக்கம்பக்கத்தில் இன்னமும் பல அடர்வனங்களை உருவாக்கக் கூடும். சங்கிலி போல பல இடங்களிலும் அடர்வனம் அமைக்கப்படும் போது அதன் விளைவுகள் இன்னமும் நிறையப் பலன்களை உருவாக்கும். அடர்வனம் குறித்து நிறையப் பேர் விசாரிப்பதாக உள்ளூர் இளைஞர்கள் சொன்னார்கள். இத்தகைய செய்திகள் பரவலான ஊடகக் கவனம் பெறுமானால் மேலும் பல ஊர்களில் அடர்வனம் குறித்தான எண்ணங்கள் உருவாகக் கூடும். உள்ளே ஒதுங்கியிருக்கும் பொன்னே கவுண்டன் புதூர் மாதிரியான சிற்றூர்கள் ஊடகவியலாளர்களின் கவனத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வாட்ஸப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் பரவலானால் இந்த அடர்வனத்தின் வெற்றி பரவலாகத் தெரிய வரும். மரம் நடுதல், பசுமை உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள நண்பர்கள் குள்ளே கவுண்டன் புதூர் அடர்வனம் பற்றிய செய்தியை நண்பர்கள் வட்டாரத்தில் பரவலாகப் பரப்பலாம். 

அட்டகாசப்படுத்தியிருக்கும் இளரத்தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

ஒரு வருடத்திற்கு முன்பாக அடர்வனம்:ஒரு வருடத்திற்குப் பிறகாக இப்பொழுது:

காணொளிக்காட்சி:

(அடர்வனம் குறித்து திரு. சதீஷ் விளக்குகிறார்)

அடர்வனம் அமைப்பது குறித்தான சந்தேகங்கள் இருப்பின் திரு.சதீஷைத் தொடர்பு கொள்ளலாம்- 98421 23457. சந்தேகங்கள் இரண்டாம்பட்சம். ஒரு வாழ்த்தைச் சொல்லாம். 

அடர்வனம் குறித்தான முந்தைய பதிவு

Dec 8, 2017

ஊட்டிக்கு வருகிறீர்களா?

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனை சில மாதங்களுக்கு முன்பாகச் சந்தித்த போது ‘ஊட்டியில் ஃபிலிம் பெஸ்டிவல் நடத்துறோம்..’என்றார். ஊட்டியில் இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதெல்லாம் சாமானியக் காரியமில்லை. ஆனால் தம் கட்டிவிட்டார்கள். இன்று தொடங்குகிறது. 127 குறும்படங்களை மூன்று நாட்களுக்குத் திரையிடுகிறார்கள். மிஷ்கின், சசி, லிங்குசாமி, பிரசன்ன வித்தனகே உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா, பவா செல்லதுரை உள்ளிட்ட எழுத்தாளர்கள், அஜயன் பாலா, லட்சுமி சரவணக்குமார், லீனா மணிமேகலை, ராஜு முருகன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றும் எழுத்தாளர்கள் என நிறைய முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். நாளைக்குச் சென்று சில படங்களையாவது பார்த்து வரலாம் என்றிருக்கிறேன். 

எனக்கு ஊட்டி மீது தீராக் காதல். தூர்தர்ஷன் செய்திகளில் ஷோபனா ரவியும், ஃபாத்திமாபாபுவும் உதகமண்டலத்தில் கொடைக்கானலைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன். என்ன இருந்தாலும் நமக்கு பக்கத்து ஊர் அல்லவா என்கிற பாசம் அது. எங்கள் ஊரிலிருந்து ஊட்டி பக்கம்தான். ஒன்றரை மணி நேரத்தில் அடிவாரமான மேட்டுப்பாளையத்துக்குச் சென்றுவிடலாம். பிரதான சாலையில் நின்று பார்த்தால் கூட மலைகளின் அரசி தெரிவாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது முதன்முறையாக அழைத்துச் சென்றார்கள். இன்பச் சுற்றுலா அது. பள்ளியிலிருந்து ஒரு பேருந்து ஏற்பாடு செய்து அமர இடமில்லாத மாணவர்களுக்காக நடுவில் மர பெஞ்சுகளை நிறுத்தி கம்பியில் இறுகக் கட்டி அடைத்து அழைத்துச் சென்றார்கள்.

வாழ்க்கையில் அனுபவித்தறியாத அந்தக் குளிரில் தறிகெட்ட கழுதைகளாகக் குதித்தோம். அதில் ஒரு ஆகாவழி இருந்தான். பேருந்து கிளம்பியதிலிருந்தே கன சேட்டை. ஆசிரியர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஊட்டியில் இறங்கியவுடன் ஒரு பூங்காவின் இறக்கமான பகுதியில் ஓடியவன் நிற்க முடியாமல் ஓடி கம்பி வலையில் மோதி விழுந்தான். கம்பி வேலியின் முனை கண் இமையைக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தது. முகமெல்லாம் இரத்தம். ஒரே கூச்சல். ஆசிரியர்கள் அவனைத் தூக்கிச் சென்றார்கள். உடனடியாக கோவையில் சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டும் என்று சொன்னதாகச் சொல்லி கார் ஒன்றை வாடகைக்குப் பிடித்து கோவைக்குத் தூக்கிச் சென்றார்கள். கொண்டு வந்திருந்த சோத்து மூட்டையைப் பிரித்துத் தின்றுவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பினோம். அதன் பிறகு பல வருடங்களுக்கு ஊட்டியுடன் அதிகப் பரிச்சயமில்லை. ஜெயமோகன் நடத்திய நித்யா கவிதையரங்குக்காகச் சென்றிருக்கிறேன்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஊட்டியில் பாலநந்தகுமார் செய்கிறார். ஊட்டி என்பது வெறுமனே சுற்றுலாத்தலம் என்கிற பிம்பத்தைத் தாண்டி இலக்கிய நிகழ்வுகளை நடத்துவது, திரைப்படவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என பாலாவும் அவரது நண்பர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊட்டி மாதிரியான ஊர்களில் சிரமப்பட்டு நடத்தப்படுகிற இலக்கிய நிகழ்வுகள், திரை நிகழ்வுகள் மிகுந்த கவனம் பெற வேண்டியது அவசியம். இத்தகைய நிகழ்வுகள் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்படுவதுதான் அறிவார்ந்த தளத்துக்கு பெருவாரியான மக்களை இழுத்து வரும்.

ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறோம். எந்தவொரு புத்தகமும் ஐநூறு பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படுவதில்லை. தீவிர இலக்கியப் புத்தகங்களை விடுங்கள்.  உடல்நலம் சார்ந்த புத்தகங்களுக்கும் பணம் சார்ந்த புத்தகங்களுக்கும் இருக்கக் கூடிய ஆதரவு பிற எந்தத் துறை சார்ந்த புத்தகங்களுக்கும் இருப்பதில்லை. அடிப்படையான காரணம்- பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு நம்மிடமில்லை. நாம் வாசித்தால் நம் பிள்ளைகள் வாசிப்பார்கள். நாமே வாசிப்பதில்லை. அடுத்த தலைமுறை எப்படி வாசிக்கும்?

‘கேரளாவில் மட்டும் புக் விக்குது..இங்க யாருமே படிக்கிறதில்லை’ என்று புலம்பினால் மட்டும் என்ன மாற்றம் நிகழும்? சமூக அளவில் விரிவான அளவில் அதற்கான களங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இப்பொழுதுதான் புத்தகக் காட்சிகள் பரவலாக நடத்தப்படுகின்றன. திரைப்பட விழாக்களுக்கான தேவையும் நிறைய இருக்கிறது.

நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள் முதலானவை குறித்தான நிகழ்வுகள், உரையாடல்கள் நம் அன்றாட உரையாடல்களில்- நண்பர்களுடனான உரையாடல்கள், குடும்ப உரையாடல்கள்- என சகல இடங்களிலும் இடம் பெறும் போது நம் சமூகத்தின் பக்குவத்தன்மை இன்னுமொருபடி மேலே உயரும். வெறுமனே கூச்சலும் உணர்ச்சிவசப்படுதலுமாகத்தானே நம் பெரும்பான்மைச் சமூகம் இருக்கிறது? படித்தவர்களே அப்படித்தான் இருக்க்கிறார்கள். சக மனிதர்களிடம் எப்படிப் பேசுவது என்கிற பக்குவத்தன்மை கூட இல்லாதவர்களை அத்தனை இடங்களிலும் பார்க்க முடிகிறது. 

நேற்று ஒரு நண்பன் அழைத்திருந்தான். வெகு அணுக்கமான பள்ளித் தோழன். பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக பத்து வருடங்கள். பெங்களூரில்தான் இருக்கிறான். அவனுடைய எண் என்னிடமில்லை. அவன் அழைத்த போது அழைப்பைத் தவறவிட்டிருந்தேன். இன்று காலையில் அழைத்து ‘கூப்பிட்டிருந்தியாடா...என்ன அதிசயம்?’ என்றேன். ‘இன்னொருத்தனுக்கு பண்ண வேண்டியது..தெரியாம உன்னைக் கூப்பிட்டுட்டேன்’ என்றான். அதன் பிறகு என்ன பேசுவது?

எனக்கு வெகு ஆச்சரியம். ‘சும்மா பேசலாம்ன்னு கூப்பிட்டேன்’ என்று சொல்லி சக மனிதனை மகிழ்வூட்டுகிற நாசூக்குத் தன்மையைக் கூடவா இழந்துவிட்டோம்? அப்படி அவன் சொல்லியிருந்தால் பழையதை எல்லாம் கிளறி எவ்வளவோ பேசியிருப்பேன். ‘சரிடா பார்க்கலாம்’ என்று துண்டித்துவிட்டேன். பட்டங்கள் வாங்குவது வேறு; வாழ்க்கையைப் புரிந்து கொள்கிற சூட்சமம் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமேயில்லை. 

சிங்கம், சாமி போன்ற வணிக ரீதியிலான படங்கள் மட்டுமே படங்கள் இல்லை. சக மனிதனின் உடல்மொழி, சூழலுக்கு ஏற்ப மாறுபடும் அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டுகிற, வணிக நோக்கங்கள் பெரியதாக இல்லாத திரைப்படங்கள் கூட நமக்கான புத்தகங்கள்தான். பாடங்கள்தான். இத்தகைய படங்கள் பற்றிய நம்முடைய அறிதலும் தெளிவும் விசாலமாக்கப்பட வேண்டிய தேவை நிறைய இருக்கிறது.

திரைப்பட விழாக்களின் வழியாகத்தான் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்பதில்லைதான். ஆனால் நம்முடைய ஆர்வத்தின் மீது அது ஒரு நெருப்புப் பொறியை உரசி வீசும். தேடுதலை விரிவாக்கும். அதற்கான களமாகத்தான் புத்தகக் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள் என்பவையெல்லாம். பெரு நகரங்களை விட்டு வெளியில் வந்திருக்கும் இத்தகைய நிகழ்வுகள் சகல ஊர்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, விரிவான உரையாடல்களுக்கான களம் ஏற்படட்டும். பேராசைதான். ஆனால் சாத்தியப்படக் கூடிய தொலைவில்தான் இருக்கிறது.

இன்று கிளம்பி வாருங்கள். ஊட்டியில் சந்திப்போம். இல்லையென்றால் ‘ஊட்டிக்குத் தனியாத்தான் போவோணுமாட்ட இருக்குடா மணியா’ என்று யாராவது நக்கலடிப்பார்கள்.

ஊட்டித் திரைப்படவிழா இணையதளம்

Dec 7, 2017

நிசப்தம் செயலி (App)

நிசப்தம் தளத்துக்கு ஐபோன் செயலியும் தயார்.

ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு செயலியை உருவாக்கித் தந்த சிவராஜ்தான் இதையும் செய்திருக்கிறார். நிசப்தம் தளத்துக்கான ஆண்ட்ராய்ட் செயலி குறித்து எழுதிய போது ‘ஆப்பிளுக்கு இல்லையா?’என்றார்கள். சிவராஜிடம் அப்பொழுது சொன்னதோடு சரி. ஐபோனுக்கான செயலியை உருவாக்கினால் பணம் கட்டி கணக்குத் தொடங்கித்தான் அதைப் பயனாளிகளுக்குக் கொடுக்க முடியுமாம். சிவராஜ் அதைச் சொன்னார். ‘இதுக்கெல்லாம் செலவு பண்ண வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அதை மறந்தும் விட்டேன். இப்பொழுது எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

‘ஏகப்பட்ட தப்பு வந்துச்சுண்ணா..அதான் லேட்’ என்றார். தவறுகளையெல்லாம் சரி செய்து பிரசுரம் செய்த போது ஆப்பிள் நிறுவனம் நிராகரித்திருக்கிறது. இப்படி நிராகரிக்கப்படும் செயலிகளை உருவாக்குகிறவர்கள் மறு பரிசீலனை மனுவை அனுப்பி வைத்தால் அவர்கள் பரிசீலிப்பார்கள். தேர்தல் ஆணையத்தைவிடவும் பரவாயில்லை போலிருக்கிறது. முதலில் நிராகரித்து கடைசியில் ஏற்றுக் கொண்டார்களாம். 

‘அப்படி என்ன சொன்னீங்க?’ என்றேன்.

‘உண்மையைச் சொன்னேன்’ என்றார். அநேகமாக ‘இது யாருக்காக செஞ்சுட்டு இருக்கோம்ன்னு தெரியும்ல?’ என்று கேட்டிருப்பார். அந்த ஒரு கேள்வி போதாதா? ஆப்பிள் அலறியிருக்கும்.

‘இப்படியே பில்ட்-அப் கொடுத்துக் கொடுத்தே காலத்தை ஓட்டிட்டு இரு’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டீர்கள். தயவு செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழாமல் கேட்காமல் கலாய்க்கவும்.

தொழில்நுட்பத்தின் வேகத்தோடு ஓட முடியவில்லையென்றாலும் துரத்துவதை நிறுத்திவிடக் கூடாது. ‘எனக்கு இதெல்லாம் தெரியாது’ என்று ஒதுங்கிவிடாமல் நெட்டையோ குட்டையோ துரத்திக் கொண்டேயிருக்க வேண்டும். நானாக இதையெல்லாம் செய்திருக்கப் போவதில்லை. சிவசுப்பிரமணியன், சிவராஜ் மாதிரியானவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். நிசப்தமும் தொழில்நுட்பத்தைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

ஆண்ட்ராய்டுக்கான செயலியை இந்த இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம். 

ஆப்பிளுக்கான செயலியை பின் வரும் இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

‘நிசப்தம்’ என்று தேடிப்பார்த்தாலும் கிடைக்கும். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 

எந்த விதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயலியை உருவாக்கிக் கொடுத்த சிவராஜூக்கு மனப்பூர்வமான நன்றி!

Dec 6, 2017

வண்டியைக் கொடுங்க!

ஸ்ரீனி என்றொரு நண்பர் இருக்கிறார். நல்லவர். நல்லவர் என்றால் உண்மையிலேயே நல்லவர். சம்பளத்தில் ஒரு பகுதியை மனைவிக்குத் தெரியாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமளவுக்கு நல்லவர். அவர் ஓட்டிப் பழகுவதற்காக ஒரு கார் வாங்கியிருக்கிறார். அரதப்பழசான மாருதி 800. அதுவும் மனைவியின் பெயரில். ஏழெட்டு மாதங்கள் ஓட்டிப்பழகிய பிறகு அதை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் வாங்கிய தரகரிடமே காரைக் கொடுத்துவிட்டார்.

தரகருக்கு வாங்கி விற்பதுதான் பிழைப்பு. ஸ்ரீனியிடம் வாங்கிய வண்டியை முப்பத்தெட்டாயிரத்துக்கு விற்றுவிட்டு முப்பதாயிரத்தைக் கொடுத்திருக்கிறார். ‘எட்டாயிரம் ரூபா கமிஷன் சார்’ என்றாராம். இவர்தான் நல்லவராச்சே? விட்டுவிட்டார். இது நடந்து ஒன்றிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த மாதம் காவல்துறை ஸ்ரீனியின் வீட்டுக்கு வந்துவிட்டது. காவல்துறையைப் பற்றித்தான் தெரியுமே! அக்கம்பக்கத்து டீக்கடையில் விசாரித்து, துணி தேய்க்கும் கடைகளில் விசாரித்து வலை வைத்து அமுக்குவது போல அதிகாலை ஐந்து மணிக்குக் கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால் ஆந்திராவின் பிரபல கடத்தலான செம்மரக் கடத்தலுக்கு அந்தக் கார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முப்பத்தெட்டாயிரம் கொடுத்து வாங்கிச் சென்றவன் வண்டியை கடத்தலுக்கு விட்டுவிட்டான். காவலர்கள் வண்டியை வளைத்து வண்டி யாருடையது என்று விசாரித்து கடைசியில் இங்கே வந்துவிட்டார்கள். கடப்பாவில் ராஜம்பேட் என்ற ஊரில் இதெல்லாம் நடந்திருக்கிறது. ஸ்ரீனியும் அவரது மனைவியும் வசமாகச் சிக்கிக் கொண்டார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் விடுவார்களா? ஸ்ரீனியிடம் கேட்டால் ‘அப்பவே கையெழுத்தெல்லாம் போட்டு புரோக்கர்கிட்ட கொடுத்துட்டேன்’ என்று சொல்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கதவைத் தட்டிவிட்டார்கள்.  செம்மரக் கடத்தலில் பெரிய நெட்வொர்க் இருக்கக் கூடும் என்றுதான் டீக்கடை விசாரிப்புகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இவர்களை ஏதோ நக்சலைட்டுகள் என்று நினைத்திருக்கக் கூடும். ஸ்ரீனியின் மனைவி செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறாள். பாவம். அதிகாலையியே அழ வைத்துவிட்டார்கள். ஸ்ரீனியிடம் பேசினால் ‘போலீஸே பரவால்லைங்க’ என்கிறார். ‘எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்று கரித்துக் கொட்டுகிறாளாம். அனுபவத்தில் அடிபட்ட ஒவ்வொரு ஆணும் அவரது வலியைப் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீனியின் அப்பா செல்வாக்கு மங்கிப் போன தெலுகுதேசக் கட்சிக்காரர். அந்தக் காலத்தில் பெரிய ஆள். இப்பொழுது ஒன்றுமில்லை. என்றாலும் இத்தகைய வேலைகளைச் செய்கிற அளவுக்கு இன்னமும் விட்டகுறை தொட்டகுறையாக தொடர்பில் இருக்கிறார். பெங்களூரிலிருந்து ஸ்ரீனியின் மனைவியைக் கடப்பாவுக்கு அழைத்துச் செல்வதற்குள்ளாகவே எம்.எல்.ஏ அமைச்சர் என்றெல்லாம் பிடித்து கைது வரைக்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். ‘இங்க இருந்து கடப்பா வரைக்கும் கூட்டிட்டு போய் போக்குவரத்து செலவுக்கு பத்தாயிரம் வாங்கிட்டாங்க’ என்றார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.

இன்னமும் சிக்கல் முழுமையாக விட்டபாடில்லை. என்னவோ செய்து கைது செய்யாமல் விட்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வழக்கு இவரது மனைவி மீதுதான் இருக்கிறது. வழக்காடி இவர்கள்தான் உடைக்க வேண்டுமாம். அலுவலகத்தில் தூக்கம் வரும் போதெல்லாம் எழுந்து போய் ஸ்ரீனியிடம் ‘அந்த புரோக்கர்கிட்ட பேசுனீங்களா?’ என்று வாய் கொடுத்தால் போதும். அந்தத் தரகனை வண்டி வண்டியாகத் திட்டுவார். நமக்குத் தூக்கம் போய்விடும்.

இன்று சாத்தப்பன் பெங்களூரு வந்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் தொடங்கிய போது அதில் அவரும் ஒரு பங்குதாரர். எமகாதகன். ஆண்களிடமெல்லாம் பேச மாட்டார். நேற்று மாலையில் அதிசயமாக அழைத்து ‘நீங்க ஆபிஸூக்கு பைக்ல போவீங்களா? கார்லயா?’ என்றார். நானாவது காராவது? பெட்ரோல் தீர்ந்துவிடும் என்று அவ்வப்பொழுது இறங்கித் தள்ளிச் செல்வதற்குக் கூட தயங்கமாட்டேன். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியும் ஆயிற்று; பெட்ரோலுக்கு பெட்ரோலும் மிச்சம்.

‘ஒண்ணுமில்ல. ஆபிஸ் வேலையா உங்க ஊருக்கு வந்திருக்கேன்...ஒரு நாளைக்கு வண்டி வேணும்’ என்றார். 

எனக்கு அதுவொன்றும் பிரச்சினையில்லை. கொடுத்துவிடலாம். வண்டியில் ஹார்ன் இருக்காது. ஒழுங்காக பிரேக் பிடிக்காது. ‘நயன்தாரா ஸ்லோவாகு’ என்றால் மெதுவாகிவிடும். ‘அனுஷ்கா ஸ்பீடா போ’ என்றால் வேகம் எடுத்துவிடும். எப்பொழுதாவது- இல்லை இல்லை- அடிக்கடி சண்டை வந்து கீழே தள்ளிவிட்டுவிடும். என் சட்டை பேண்ட்டையெல்லாம் கழற்றச் சொல்லி- குதர்க்கமாக யோசிக்காமல் மேலே படியுங்கள்- என் கை கால்களைப் பார்த்தீர்களேயானால் நிறைய சிராய்ப்புகள் இருக்கும். அதெல்லாம் இந்த அனுஷ்கா alias நயன்தாராவின் கோபச் சிணுங்கல்களால்தான்.

பெரும்பாலும் வண்டி ரிசர்விலேயேதான் ஓடும். அதற்கு மட்டும் கோபம் வராதா? கடுப்பில் தள்ளிவிட்டுவிடுகிறது. ஈரச் சாலையில், கொட்டி வைக்கப்பட்ட மணல் மீது, ஓரமாக நின்று கொண்டிருக்கும் மாடு என்று வகைதொகையில்லாமல் விழுந்திருக்கிறேன். அதிகபட்சமாக இருநூறு ரூபாய்க்கு எரிபொருள் நிரப்புவேன். அப்பேர்ப்பட்ட நம்மையும் நம்பி ஒருவர் வண்டியைக் கேட்கிறார். ரிசர்வில் கொடுத்தால் நன்றாக இருக்காது அல்லவா? கடைக்குச் சென்று முப்பது ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினேன். பெட்ரோல் பங்க் பொடியன் மார்க்கமாகப் பார்த்தான். அவனுக்கு என்ன? பார்த்துவிட்டுப் போகட்டும். அநேகமாக இரண்டு கிலோமீட்டர் ஓடினால் ரிசர்வ் விழுந்துவிடும். அது போதும்.

காலையில் மடிவாலாவில் சாத்தப்பன் நின்றார். ஸ்ரீனியின் மனைவி பணியாற்றும் அதே இடம். இட ராசி சரியில்லையே என்று நினைத்தேன். வண்டியில் ஏறிக் கொண்டார். என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு வண்டியை வாங்கிக் கிளம்பியவர் ‘நாலு கியருமே கீழேயா?’ என்றார். ‘என்னது இனிதான் கியர் பத்தியே தெரிஞ்சுக்க போறீங்களா?’ என்றேன். சிரித்தார். சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?

‘நாலு மணிக்கு வர்றேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். மணி ஐந்தாகி, ஆறாகி இன்னமும் காணவில்லை. நல்ல பிள்ளையாகக் கொண்டு வந்து கொடுத்துவிடக் கூடும். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் என்னவெல்லாம் செய்தாரோ என்று பரப்பன அக்ரஹாரா பெருமாளுக்குத்தான் வெளிச்சம். ஸ்ரீனிக்காவது அவரது அப்பா உதவினார். என் தம்பியிடம் பிரச்சினை போனால் ‘வெச்சு கும்மி அனுப்புங்க..அப்போத்தான் திருந்துவான்’ என்பான். எதற்கும் இங்கே எழுதி வைத்துவிடலாம். சின்னம்மாவுக்கு பக்கத்து அறையில் வைத்து வெளுத்து வாங்கும் போது ‘சார்...ப்ளீஸ் நிசப்தம் படிங்க..எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று கெஞ்சவாவது உதவும்.

நவம்பர் 2017

நிசப்தம் அறக்கட்டளையின் நவம்பர் மாதக் கணக்கு விவரங்கள்-

  • நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புக்காக மாணவர்களுக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றோம். அதற்காக ரூ.2500 செலவு செய்யப்பட்டது.
  • பிரபுவின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ 50000 வழங்கப்பட்டது. பிரபு மருத்துவமனையிலிருந்து நேற்று வீட்டுக்கு வந்துவிட்டார். நலமாக இருப்பதாக அவரது தம்பி அழைத்துத் தகவல் சொன்னார். பிரபு குறித்து முன்பு எழுதியிருக்கிறேன். கூலித்தொழிலாளி. நாடோடிக் குடும்பம். அவருக்கு இருதயத்தில் பிரச்சினை. அவரது குழந்தைக்கு தாலஸீமியா. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் உடலில் ரத்தம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்காக அவரது அப்பாவுக்கு உதவப்பட்டிருக்கிறது. அப்பாவின் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இனி குழந்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 
வரவு:
  • வழக்கம் போல லண்டனில் வசிக்கும் சார்லஸ் பெருந்தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்.
  • கடந்த முறை யாவரும் பதிப்பகத்திலிருந்து ராயல்டி வரவில்லை என்று எழுதியிருந்தேன். அதை அனுப்பிவிட்டார்கள். ரூ.17,800 கடந்த வருடம் எழுத்து வழியாகக் கிடைத்த வருவாய். அந்தத் தொகையை நிசப்தம் அறக்கட்டளையில் செலுத்தப்பட்டிருக்கிறது.

நன்கொடையாளர்களுக்கு நன்றி.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.