ப்ளஸ் டூ மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட முதல் பயிலரங்கை முடித்துவிட்டோம். எழுபத்தைந்து மாணவர்கள் கலந்து கொண்டார்கள். ஏழு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள். தவிர காலனியொன்றிலிருந்து ஐந்து மாணவர்களை சேர்த்திருந்தோம். மொத்தம் எழுபத்தைந்து பேர்.
கொச்சியிலிருந்து வந்திருந்த இராதாகிருஷ்ணன்தான் பயிலரங்கை முழுமையாக வடிவமைத்திருந்தார். வாழ்க்கையின் மதிப்பீடுகள்(Values), தலைமைத்துவ பண்புகள்(Leadership Quality) ஆகிய இரண்டையும் பிரதானமாக வைத்து நிகழ்வை வடிவமைத்திருந்தார். நிகழ்வு நடக்கப் போவதாக எழுதிய போதே பதிவு செய்து யூடியூப்பில் வெளியிடச் சொல்லி சிலர் கேட்டிருந்தார்கள். பயிற்சியாளர்கள் பார்வையாளர்களை நோக்கி வெறுமனே பேசுவதாக இருந்திருந்தால் பதிவு செய்திருக்கலாம்தான்.
இது வொர்க்ஷாப்.
மாணவர்கள் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்க முடியாது. அவர்களது பங்களிப்பும் தேவையாக இருந்தது. அவர்களிடம் சில தாள்கள் கொடுக்கப்பட்டன. மாணவர்கள் அவற்றில் விவரங்களை நிரப்பினார்கள். பிறகு அவை மாணவர்களாலேயே சரி பார்க்கப்பட்டன. உதாரணமாக, இதுவரை பெற்றோர்களிடமிருந்து நீங்கள் என்ன பெற்றுக் கொண்டீர்கள் என்று ஒரு பக்கம் இருக்கும் அதை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் இதுவரையிலும் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன கொடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி இருக்கும். அதை நிரப்ப வேண்டும். திக்கென்றிருக்கும். பெற்றோர், ஆசிரியர்கள், நாடு, இயற்கை என சகலத்திடமிருந்தும் நாம் பெற்றுக் கொண்டதுதான் அதிகம். திருப்பிக் கொடுத்தது அநேகமாக எதுவுமிருக்காது அல்லது சொற்பம் என்பதை மாணவர்களுக்கு புரிய வைப்பதற்காக ஒரு பயிற்சி.
முதல் ஒரு மணி நேரம் மாணவர்கள் யாரும் அதிகம் பேசவில்லை. சற்று பயமாகத்தான் இருந்தது. அவர்களுக்கு சலிப்பாக இருக்கிறதோ என்று சந்தேகமாகவும் இருந்தது. ஐந்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை கொடுத்து அந்தச் சமயத்தில் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் கருத்துக் கேட்டுச் சொல்லச் சொல்லியிருந்தோம். மாணவர்களுடன் வந்திருந்த ஆசிரியர்கள் அதைச் செய்தார்கள். கிட்டத்தட்ட ‘பிரமாதம்’ என்று கருத்து வந்து சேர்ந்ததும் வெகு உற்சாகமாகிவிட்டோம். அதன் பிறகு நேரம் கடந்ததே தெரியவில்லை. இராதாகிருஷ்ணன் முடித்ததும் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மாணவர்கள் என்ன படிக்கலாம் என்று ஷான் கருப்புசாமி பேசினார். நிறையத் தயாரிப்புகளுடன் வந்திருந்தார். இரண்டு பேரும் பேசிய இடைவெளிகளில் புகுந்து ஏன் இந்நிகழ்வை நடத்துகிறோம், இதிலிருந்து மாணவர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் திரட்டி உருட்டி பதிய வைக்கிற வேலை என்னுடையது.
நிகழ்வு ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே மாணவர்களிடம் ஒரு தாளைக் கொடுத்து ‘நீங்கள் இங்கு என்ன எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள்’ என்று எழுதித் தரச் சொல்லி வாங்கிவிட்டோம். நிகழ்வு முடிந்த பிறகு அதே தாளைக் கொடுத்து ‘நீங்கள் எதிர்பார்த்ததில் எவையெல்லாம் பூர்த்தியாகின’ ‘எவையெல்லாம் பூர்த்தியாகவில்லை’ என்று எழுதச் சொன்ன போதும் முக்கால்வாசிக்கும் மேலான மாணவர்கள் வெகுவாகச் சிலாகித்திருந்தார்கள். ஒரு சில மாணவர்கள் வித்தியாசமாக எழுதியிருந்தார்கள். ‘எப்படி வெற்றியடைவதுன்னு சொல்லித் தந்தீங்க..ஆனால் தோல்வியை எப்படி சமாளிக்கிறதுன்னு சொல்லித் தரல’ என்ற ஒரு வரி எனக்கு மிகப் பிடித்துப் போனது. இத்தகைய கேள்விகளுக்கு கடைசி அரை மணி நேரம் பதில் அளித்தோம்.
கிராமப்புறத்தில் செயல்படுகிற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சி வகுப்புகள் அரிதானது. ஒரு பள்ளிக்கு தலா பத்து பேர் என ஏழு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து பயிலரங்கை நடத்தும் போது அது கிட்டத்தட்ட அந்த பகுதி முழுமைக்கும் பரவலாகச் செய்கிற மாதிரிதான். ‘உங்களுக்கு போட்டி உங்கள் வகுப்பறையில் இருப்பவர்கள் இல்லை...பொதுத்தேர்வை முடித்துவிட்டு வெளியே வரும் போது உங்களைப் போலவே பல லட்சம் பேர் திரண்டு நிற்பார்கள். அவர்கள்தான் போட்டி. உங்கள் வகுப்பறையில் உங்களோடு படிக்கும் மாணவர்களுக்கு கை கொடுங்கள். அவர்களைத் தூக்கி விடுங்கள். சேர்ந்து விவரங்களைச் சேகரியுங்கள்..அதுதான் வெற்றி’ என்பதை பயிலரங்கின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தோம். பத்து மாணவர்களில் ஐந்தாறு பேர்களாவது நிகழ்வில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு விவரங்களைக் கொண்டு சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கயிருக்கிறது.
கிட்டத்தட்ட அத்தனை பேரும் ஏழை மாணவர்கள்தான். அவர்களுக்கு நினைவுப் பொருளாக ஏதாவது வழங்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். நிகழ்ச்சி முடியும் போது ஆளுக்கொரு எழுதுகோல் கொடுத்தோம். ஹீரோ பேனா. ப்ளஸ் டூவுக்கு அடுத்து என்ன படிப்பது, என்ன படிப்புகள் இருக்கின்றன உள்ளிட்டவற்றை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்திருக்கிறோம். எல்லாமுமாகச் சேர்ந்து ஐந்தாயிரம் ரூபாய்க்குள்ளாக ஆனது. மாணவர்களுக்கான செலவு மட்டும்தான் இது. நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்க வேண்டியிருக்கிறது. மற்றபடி உணவு, தேநீர், அறை, ப்ரொஜக்டர் உள்ளிட்டவற்றை நம்பியூர் காமராஜ் பள்ளியினர் ஏற்பாடு செய்துவிட்டார்கள். பயிலரங்கில் அவ்வப்போது நல்ல பதில்களைச் சொல்லக் கூடிய மாணவர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக நிறைய சாக்லெட்டுகளை இராதாகிருஷ்ணனே வாங்கி வந்திருந்தார்.
ஏற்பாடுகளை மொத்தமாகச் செய்த ஆசிரியர் தாமஸூக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவரோடு சேர்ந்து கார்த்திகேயனும். கார்த்திகேயன் நிகழ்வு முடியும் போது சில மரக்கன்றுகளை எடுத்து வந்திருந்தார். பள்ளிகளில் நடச் சொல்லி மாணவர்களிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்.
பயிலரங்கு முடிந்து செல்லும் போது மாணவர்கள் வெகு சந்தோஷமாகச் சென்றார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் சில தாள்களை நிசப்தத்தில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ‘சீரியஸாம்...இப்போ செய்தி வந்துடும்...வந்துட்டா பஸ் ஓடாது..சீக்கிரம் கிளம்புங்க’ என்ற அவசரத்தில் இருந்ததால் ஊரிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். இன்னொரு நாள் பொறுமையாக பதிவு செய்கிறேன்.
இப்படியொரு பயிலரங்கு நடக்கப் போகிறது என்பதை வாசித்துவிட்டு சென்னிமலை, ஈரோட்டிலிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் கோபாலகிருஷ்ணன் அரசு ஊழியர். டிஎன்பிஎஸ்ஸி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ப்ளஸ் டூ முடித்துவிட்டு இந்தத் தேர்வை எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி அவரும் கொஞ்ச நேரம் பேசினார். நிச்சயமாக ஒன்றிரண்டு மாணவர்களாவது அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள்.
சில பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், ஆசியர்களும் கூட கடைசி வரைக்கும் அமர்ந்திருந்தார்கள்.
தொட்டுவிட்டோம். ஆழமும் பார்த்தாகிவிட்டது. இனி இதைத் தொடர்ந்து செய்ய இயலும். கும்க்கி என்ற நண்பர் தர்மபுரியில் நடத்த முடியுமா என்று கேட்டிருந்தார். நிச்சயமாகச் செய்யலாம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சேர்ந்தே பயணிப்போம்.
13 எதிர் சப்தங்கள்:
மிகப் பெரிய உதவி என்பதே வழிகாட்டல்தான் .பெருக்கேற்றபடி நிசப்தம் மௌனப்புரட்சி போல செய்துகொண்டு இருக்கிறது .தொடர வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்
anbin mani
hats off to all those people who had volunteered to make the program success ( lighting the future of the young minds ). keep it up. pl update the upcoming programs too as i would like to join and do my part as a cog in the wheel. ( pl refer to my request in the earlier post on the same topic ) # Out of station. sorry.
anbudan
sundar g chennai
Well done Mani & Team !!!
WoWWWWWWW... Valthukkal Manikandan :) Very happy to see!!
நல்லதொரு தொடக்கம். வாழ்த்துகள்!
Dear Mani,
If you could upload the course details and college details which you distributed to students, it may be useful for other 12th students.
with regards
Bro you are doing an excellent and extraordinary job bro... Lot of love and support for you bro...
இது பெரும் உதவி. வாழ்த்துக்கள் மணி.
ரிப்பீட்
Blogger அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...
மிகப் பெரிய உதவி என்பதே வழிகாட்டல்தான் .பெயருக்கேற்றபடி நிசப்தம் மௌனப்புரட்சி போல செய்துகொண்டு இருக்கிறது .தொடர வாழ்த்துக்கள் .
//நிகழ்வு நடக்கப் போவதாக எழுதிய போதே பதிவு செய்து யூடியூப்பில் வெளியிடச் சொல்லி சிலர் கேட்டிருந்தார்கள். பயிற்சியாளர்கள் பார்வையாளர்களை நோக்கி வெறுமனே பேசுவதாக இருந்திருந்தால் பதிவு செய்திருக்கலாம்தான்.
இது வொர்க்ஷாப்.
மாணவர்கள் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்க முடியாது. அவர்களது பங்களிப்பும் தேவையாக இருந்தது//
அதான பா(ர்)த்தேன். அங்கயும் கேமரா வேல செய்யல யோ ன்னு நெனசிட்டேன்!.
Good initiative and great team work anna. Many students and their parents are not aware of available opportunities.Even teachers dont know all the opportunities. It will be good, if you conduct workshop to teachers too. Then they will guide the students easily.
மணி,
கொச்சின் ராதாகிருஷ்ணன், என் நண்பியின் (கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை வகுப்புத்தோழி) நண்பர். பயணம் பதிவை எங்கள் வாட்ஸப் குழுவில் பகிர்ந்தபோது, பார்த்துவிட்டு ராதாகிருஷ்ணனுடன் பேசியிருக்கிறார். மகிழ்ச்சியாயிருந்தது.
-வெங்கி
மிக்க மகிழ்ச்சி
Post a Comment