Dec 22, 2016

கத்திச் சண்டை

‘கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்க பார்ப்பான்’ என்றொரு சொல்வடை உண்டு. ராம மோகன் ராவுக்கு இன்னும் சில மாதங்கள்தான் மிச்சமிருக்கிறது. ‘பொழுது எப்பொழுது மேற்கே சாயும்’ எனக் காத்திருக்கிற பருவம் இது. சம்பாதித்தையெல்லாம் வைத்துக் கொண்டு சுக வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டியவர். வசமாகச் சிக்கியிருக்கிறார். சேகர் ரெட்டியைவிடவும் அதிகமாகக் கொள்ளையடித்து வைத்திருக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கக் கூடும். ராம மோகன் ராவைவிடவும் அதிகமாகத் திருடுகிற தலைமைச்செயலாளர்கள் இந்தியாவில் இருக்கக் கூடும். ரெட்டியை அமுக்கியதன் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது; அதை வாலாகப் பிடித்துக் கொண்டு ஆர்.எம்.ஆரை வளைத்ததிலும் அரசியல் இருக்கிறது. இதுவொரு தொடக்கம் அல்லது தொடர்ச்சியான அரசியல் பகடையாட்டத்தில் ஒரு கண்ணி.

கடந்த சில நாட்களாக ‘மாநில சுயாட்சி கோருவோம்’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வருமான வரித்துறையின் அலசலின் போது துணை ராணுவப்படையினரைக் குவித்ததைக் காட்டி இதைச் சொல்கிறார்கள். மாநில சுயாட்சி என்பதை முழுமையாக ஆதரிக்கலாம் ஆனால் களவாணிகளைக் காப்பதற்காக மாநில சுயாட்சி வேண்டும் என்று திசை மாற்ற வேண்டியதில்லை. திருடியிருக்கிறார்கள். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருக்கிறார்கள். இப்பொழுது அவர்களை மிரட்டுவதற்கும் பணிய வைப்பதற்கும் மேலிடத்து ஆட்களுக்கு ஒரு காரணம் தேவையாக இருக்கும் போது அந்த திருட்டுத்தனங்களையெல்லாம் கடை விரிக்கிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டுகிறது. தேளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக திருடனைக் காக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஆதரிக்க முடியும்? 

பலவீனம் நம்மிடம்தான். 

முந்நூறுக்கும் நானூறுக்கும் தமிழ்நாட்டு இளிச்சவாயர்கள் வாக்களித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருப்பதனால்தானே மக்கள் செல்வாக்கு, அரசியல் பாரம்பரியம் என்று எதுவுமேயில்லையென்றாலும் எடுத்தவுடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்? குறைந்தபட்ச அரசியல் செயல்பாட்டைக் கூட வெளிப்படையாகச் செய்யாதவர்களைத் தேடிச் சென்று ‘நீங்கதான் காப்பாத்தணும்’ என்று வீட்டு வாசலில் தேவுடு காக்கிறார்கள். கட்சிக்காரர்கள் செல்லட்டும். தவறில்லை. அடிமைகள் வளையட்டும். ஏற்றுக் கொள்ளலாம். ஊடகக்காரர்களுக்கு என்ன வந்தது? பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரிசைகட்டி நிற்க வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு துணை வேந்தர் கூட தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்று துண்டை விரித்து சத்தியம் செய்யலாம். கோடிகளைக் கொட்டி துணை வேந்தர்கள் ஆகிறார்கள். கல்விச் சேவை என்பதெல்லாம் கிஞ்சித்தும் எண்ணத்தில் இல்லை. கொட்டிய காசையெல்லாம் பேராசிரியர் நியமனத்திலிருந்து பல்கலைக்கழக ஊழியர் நியமனம் வரை வழித்துக் கட்டிச் சம்பாதிக்கிறார்கள். அரசின் பல்கலைக்கழக மானியத்தில் ஓட்டை போடுகிறார்கள். காசு கொடுத்து பதவிக்கு வந்தாகிவிட்டது இனி நான்கரை ஆண்டுகள் பதவியைக் கொடுத்தவர்களே பதவியில் இருந்தால் தமக்கு பிரச்சினையில்லை என்று நெடுஞ்சாண்கிடையாக விழுகிறார்கள். 

நாம் மொத்தமாகக் கரைபடிந்து கிடக்கிறோம். படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. நாம் சில்லரைப் பணத்துக்கு வாக்களித்தால் நினைத்தவர்களெல்லாம் ‘நீங்கதான் தமிழகத்தைக் காப்பாத்தணும்’ என்று சொல்லத்தான் செய்வார்கள். நம் சார்பில் காலில் விழ இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? தலைவர்கள் என்று தன்னெழுச்சியாக எழுந்து வர இங்கே யாருமே இல்லையா என்ன? எவருக்கும் மேலே வர தைரியமும் துணிவும் இல்லையா? இல்லை. இல்லை என்பதால்தானே மோடியின் படை இங்கே இறங்குகிறது? ஜெவின் மறைவுக்குப் பிறகு மக்கள் செல்வாக்குடன் யாரோ ஒருவர் வந்திருந்தால் வெளியிலிருந்து ஏன் தலையை நீட்டப் போகிறார்கள்? வலுவில்லை. மக்கள் செல்வாக்கில்லை. இருக்கிறவர்களிடம் குறைந்தபட்ச நேர்மையும் இல்லை. மிரட்டினால் மடங்கதான் வேண்டும். கடந்த மாதத்தில் மேற்கு வங்காளத்தில் இதே துணை ராணுவப்படையைக் குவித்தார்கள். ‘நீங்க கிளம்புகிற வரைக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு நான் கிளம்பமாட்டேன்’ என்று மம்தா பானர்ஜி அமர்ந்தார். வழியே இல்லாமல் படைகளை விலக்கினார்கள். அதே தைரியம் இன்றைக்கு தமிழக முதல்வரிடம் இருக்கிறதா என்ன? 

குறைகளையும் பலவீனங்களையும் நம்மிடம் வைத்துக் கொண்டு ‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்று கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும். 

கசடுகளை நிரப்பி வைத்திருக்கிறோம். தவறான மனிதர்களுக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறோம். ஒன்று நீ திருடு; இல்லையென்றால் நான் சுருட்டுகிறேன் என்று கமுக்கமாக ஒப்பந்தம் போடுவதற்குத்தான் மாநில சுயாட்சி என்றால் அதற்கு அவசியமே இல்லை. இப்பொழுது மூன்றாவதாக ஒரு கூட்டம் உள்ளே நுழைய முயற்சிக்கிறது. தென்னிந்தியாவில் கேரளாவை எடுத்துக் கொண்டால் கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸ்ஸூம் மோதுகிறார்கள். காங்கிரஸை மட்டம் தட்டினால் பாஜக மேலே வந்துவிட முடியும். ஆந்திராவில் தெலுங்கு தேசக்கட்சியும் காங்கிரஸூம்தான் முக்கிய எதிரிகள். தெலுங்கானாவில் காங்கிரஸூம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும்; கர்நாடகாவில் காங்கிரஸூம் பாஜகவும். தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் காங்கிரஸூக்கு குழி பறித்தால் பாஜக வலுப்பெற்றுவிடும் என்கிற நிலைமைதான் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒன்று அதிமுகவை அழிக்க வேண்டும் அல்லது திமுகவைக் கரைக்க வேண்டும்.

அதிமுகவை அடித்து மட்டம் தட்ட சுளையான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மிரட்டுகிறார்கள். உருட்டுகிறார்கள். அதிமுகவில் வலுவான ஆள் இருந்திருந்தால் படிய வேண்டியிருந்திருக்காது. ‘நீ செய்வதைச் செய்; நான் பார்த்துக்கிறேன்’ என்று துணிந்து நின்றிருக்கலாம். வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். ஊதுகிற மகுடிக்கு ஆடித்தான் ஆக வேண்டும். 

இன்றைக்கு நம் முன்னால் இருப்பதெல்லாம் ஒரே வேண்டுகோள்தான். ‘எங்களை ஆள்வதற்கு நேர்வழியில் வா’ என்பது மட்டும்தான். யாரும் ஆட்சிக்கு வரட்டும். தவறு எதுவுமில்லை. ஆனால் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று வரட்டும். திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ, பாஜகவோ அல்லது வேறு யாரோ- மக்கள் விரும்பினால் ஆட்சிக்கு வரட்டும். களமிறங்கி வெல்லட்டும். வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரட்டும். அதை விட்டுவிட்டு இல்லாத சகுனித்தனங்களையெல்லாம் செய்தால் அதை எதிர்க்கத்தான் வேண்டும். புறவாசல், பின்வாசல் என்று எந்த முறையாக இருந்தாலும் அது களவாணித்தனம்தான். பாஜக பின்வாசல் வழியாக நுழைவதற்கும் மன்னார்குடி குழுமமும் தீபாவும் நாற்காலிக்கு குறி வைப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னார்குடியும் தீபாவுமாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை குறி வைக்கிறார்கள். பாஜக மொத்தமாகக் குறி வைக்கிறது.

தமிழகத்தின் அரசியல் போர்க்களத்தில் யார் யாரோ கதுமையான வாளை வைத்துச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். சேகர் ரெட்டி, ஆர் எம் ஆர் என்று தலைகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் விழத்தான் போகின்றன. தவறேதுமில்லை. அப்படியாவது சில கசடுகள் வெளியேறட்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். தயவு செய்து மாநில சுயாட்சி மாதிரியான நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி திருடர்களையும் கேடிகளையும் காப்பாற்றுவதற்கு குரல் கொடுக்க வேண்டியதில்லை.