Dec 20, 2016

அசைவம்

சைவத்திற்கு மாறிவிட்டேன் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அது ஆயிற்று பல மாதங்கள். ஆரம்பத்தில் வெகு கடினம். நினைக்கும் போதெல்லாம் நாக்கு பரபரவென்றது. அதுவும் விருந்துக்குச் சென்றால் பக்கத்து இலையில் கோழி குதிக்கும். ஆடு ஆடும். மீன் துள்ளும். என்னடா இது நம் மனோவலிமைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடியே பருப்பையும் ரசத்தையும் கரைத்து உள்ளே தள்ளினால் இறங்குவேனா என்று மல்லுக்கு நிற்கும். கோழியைக் கடிப்பதாக நினைத்து வாழைக்காய் பஜ்ஜியை ஒரு கடி. ஆட்டை இசிப்பதாக நினைத்து முட்டைக்கோசு பொரியலை ஒரு கடி. சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். 

பிறந்ததிலிருந்தே அசைவம்தான். உடல் தேற வேண்டும் என்பதற்காக தினந்தோறும் இரவில் ஆட்டுக்கால் சூப்பு வைத்து அடுத்த நாள் காலையில் அம்மா கொடுத்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஞாயிறு தவறாமல் மிளகு அரைத்து வைத்த அசைவக் குழம்பு வீட்டில் மணக்கும். நாக்குப் பழகிக் கிடக்கிறது. வேலைக்குச் சேர்ந்து ஓரளவு காசு கையில் சேர்ந்த பிறகு வாரத்தின் இடைப்பட்ட நாட்களிலும் அசைவம்தான். ஒரு நாளாவது பிரியாணி தின்னக் கிளம்பிவிடுவேன். இத்தனை வருடங்களில் மருந்துக்காகக் கூட அசைவத்தைத் தவற விட்டதில்லை. முப்பது வருடங்களாகப் பழகிய நாக்கு இது. திடீரென்று தின்னக் கூடாது என்று சொன்னால் எப்படிக் கேட்கும்? திடீரென்றுதான் தோன்றியது. கனவு மாதிரி. விட்டுவிட்டேன்.

கடந்த ஒரு வருடமாக வள்ளலாரைப் பின்பற்றுகிறவர்கள், சித்த மருத்துவர்கள் என நிறையப் பேர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.  அத்தனை பேரும் அசைவத்தை எதிர்க்கிறார்கள். பலராமய்யா என்றொரு சித்த மருத்துவர். தொழில்முறையில் வழக்கறிஞர். பிறகு நீதிபதியானவர். இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் எழுதிய சித்த மருத்துவத் திரட்டு என்ற நூல் மிக முக்கியமான நூல். அதை வைத்து மருத்துவம் பழகுகிறோமோ இல்லையோ- வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம்.

இரவில் ஏழு மணிக்கு உணவை உண்டுவிட்டு ஒன்பது மணிக்கு உறங்கச் சொல்கிறார். பதினோரு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பாக எழுந்துவிட வேண்டும். இரவில் ஒரு செப்பு பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் அதிகாலையில் குடித்துவிட வேண்டும். காலைக்கடன்களை முடித்துவிட்டு ஓடவோ வேகமான பயிற்சிகளைச் செய்யவோ வேண்டியதில்லை- நான்கைந்து மைல்களுக்கு உலாவினால் போதும். ஒவ்வொரு வாய் சோற்றையும் பதினைந்திலிருந்து பதினேழு முறை மென்று அரைத்துக் கூழாக்கிவிட வேண்டும். உண்டு முடிக்கும் வரையில் இடையில் நீர் அருந்தக் கூடாது. அசைவம் தவிர்க்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி நிறைய.

வரிசைக்கிரமமாக எழுதினால் ஒரு அழகான கட்டுரையை எழுதிவிடலாம். பலராமய்யா சொல்லக் கூடிய ஒவ்வொரு விதியுமே பின்பற்றுவதற்கு எளியவைதான். ஆனால் சற்றே மெனக்கெட வேண்டும். நோயின்றி வாழ்தலைக் காட்டிலும் வேறு என்ன பேறு இந்த வாழ்க்கைக்குத் தேவைப்படப் போகிறது? மருத்துவமனைகளின் வாயில்களில் ஒரு நாள் நின்றுவிட்டு வந்தால் போதும். ‘சாகிற வரைக்கும் ஆஸ்பத்திரிப் பக்கம் வராம இருந்தா அதுவே பெரிய வரம்’ என்ற நினைப்பு வந்துவிடும். நோய் வந்த பிறகு மருத்துவம் பார்ப்பது வேறு; வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தில் நோயைத் தள்ளிப் போடுவது வேறு. இரண்டாவது சாலச் சிறப்பு. அப்படியான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்களுக்கான புத்தகங்களையும் உரையாடல்களையும் தேடிக் கொண்டிருந்த போதுதான் பலராமய்யா குறித்தான அறிமுகம் உண்டானது. அவரும் அசைவத்தை முற்றாக விலக்கச் சொல்கிறார்.

இப்படி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அசைவத்திற்கு எதிரான மனநிலை தெளிவாக உருவாகியிருக்கிறது. ஆதிமனிதனின் உணவே அசைவம்தான் என்று யாராவது சொல்லும் போது நம்ப முடிவதில்லை. அப்படியென்றால் குரங்கு அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? மனிதனும் கூட குரங்கைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். இடையில் அசைவம் பழகியிருக்கக் கூடும். இப்படியெல்லாம் உருட்டி புரட்டி ஒரு முடிவுக்கு வந்து இப்பொழுது மிகத் தீவிரமாக சைவத்தை ஆதரிக்கிற மனநிலை வடிவம் பெற்றிருக்கிறது. 

ஆரம்பத்தில் வீட்டிலேயே கூட யாரும் நம்பவில்லை. ‘இவனாவது கறி திங்காம இருக்கிறதாவது’ என்றார்கள். நானும் கூடத்தான் நம்பவில்லை. மனோரீதியாகப் பெரும் போராட்டம்தான். அசைவத்தை விட்டுவிட்ட பிறக் ஒன்றிரண்டு வாரங்கள் கழித்து வீட்டில் கொத்துக்கறி செய்து வைத்திருந்தார்கள். ‘அசைவத்தை விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு குழம்பு மட்டும் ஊற்றச் சொல்லிக் கேட்டால் கலாய்ப்பார்கள். அதனால் அவர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாக நகர்ந்து பிறகு அவசர அவசரமாக ஒரு கரண்டி ஊற்றித் தின்ன வேண்டியதாகிவிட்டது. நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை. அலுவலகத்திலும் சைவத்துக்கு மாறிவிட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். ஆனால் நாம் மாறிவிட்டோம் என்பதற்காக அவர்கள் தின்னாமல் இருப்பார்களா? அடுத்தவன் பிரியாணி தின்னும் போது அவன் வாயைப் பார்ப்பது போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை. 

பக்கத்து வீட்டில் குழம்பு கொதிப்பதும், ரோட்டோரக் கடையில் ரோஸ்ட் மணப்பதும் வெகு தீவிரமாக ஈர்த்தன. ஆரம்பத்திலிருந்தே சைவபட்சிகளாக இருப்பவர்கள் மிகச் சாதாரணமாகத் தாண்டிப் போய்விடுவார்கள். என்னைப் போன்றவர்களுக்கு வெகு சிரமம். பற்களைக் கடித்து மனதை வழிக்குக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் இப்பொழுது தெளிவாகியிருக்கிறது. அசைவத்தைத் தவிர்த்த பிறகு ஏதோ பெருங்குற்றத்திலிருந்து விடுபட்ட மனநிலை உண்டாகியிருக்கிறது. பெருமைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதுவொரு ஆசுவாசம். இனி எந்தக் காலத்திலும் ஓர் உயிரைக் கொல்லப் போவதில்லை என்று நினைக்கும் போது மனமும் ஒரு முகமாகியிருக்கிறது.

நாகர்ஜூனாவில் கோழி மார்பு ரோஸ்ட், சிக்கன் 65, இறால் பிரியாணியைப் பக்கத்து இலைக்காரன் தின்னும் போதும் கூட பருப்பு பொடியையும், கோங்குரா ஊறுகாயையும் கவனம் சிதறாமல் உண்ண முடிகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அசைவத்தை தவிர்க்கச் சொல்லி உபதேசம் செய்வதற்காக இதை எழுதவில்லை. வாழ்க்கை முறையில் நாம் நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தினசரி நடவடிக்கைகள், உணவுப்பழக்கவழக்கங்கள் என ஏகப்பட்டவை. புனைவுகளையும் அன்றாட நடப்புகளையும் மட்டுமே வாசித்தும் பேசியும் கொண்டிராமல் நம்மளவில் மாற வேண்டியவனவற்றைப் பற்றி யோசிக்கும் போதும் தெரிந்து கொள்ளும் போதும் எவ்வளவோ இருப்பதாகத் தோன்றுகிறது. 

சொல்ல வேண்டுமெனத் தோன்றியது!