Dec 16, 2016

ஆர்கானிக்குக்கு மாறிட்டீங்களா?

வீட்டில் பதஞ்சலி பொருட்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பற்பசையிலிருந்து சோப்பு, ஷாம்பூ வரைக்கும் அதுதான். கேட்டால் ‘கெமிக்கல் பொருட்களை வாங்கக் கூடாது...குழந்தைகளுக்காகவாவது நாம மாறணும்’ என்கிறார்கள்.

அது சரி. முட்டையைக் கூட ப்ளாஸ்டிக்கில் தயாரித்து விற்கிறார்கள். அரிசி ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இப்படி உடல் முழுவதும் ப்ளாஸ்டிக்காலும் வேதிப்பொருட்களாலும் நிரம்பினால் இல்லாத நோயெல்லாம் வரத்தான் செய்யும்.  இந்த பயம்தான் மூலதனம்.

பெங்களூரு மாதிரியான பெருநகரங்களில் வீதிக்கு வீதி தாடிக்கார சாமியார் சிரித்துக் கொண்டிருக்கிறார். பதஞ்சலி நிறுவனத்தின் மார்கெட் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் சோப்பு சீப்பு விற்கிற நிறுவனங்களுக்கு புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி உலகம் முழுவதும் கடை விரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார் ராம்தேவ். ஐந்து வருடங்களில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் என்பது வியாபார இலக்கு. இலக்கை அடைந்துவிடுவார்கள்.

அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் ஆதரவு அவருக்கு முழுமையாக இருக்கிறது. நாக்பூரில் மட்டும் இருநூற்று முப்பது ஏக்கர் நிலத்தை பதஞ்சலி நிறுவனத்துக்கு சலுகை விலையில் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ஏக்கர் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு விற்கிற பகுதியில் ஏக்கர் வெறும் இருபத்தைந்து லட்சத்துக்கு வழங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் பிரச்சினையை எழுப்பியிருக்கின்றன. அப்படித்தான் வழங்குவார்கள். மேல்மட்டத்தின் பூரணமான ஆசியைப் பெற்றவராக ராம்தேவ் உருவெடுத்திருக்கிறார். இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் என்றவொரு பட்டியலை உருவாக்கினால் எப்படியும் முதல் பத்து இடத்திற்குள் அவர் இருக்கக் கூடும். நேரடியாகப் பிரதமரைச் சந்திக்கிறார். முதல்வர்களைப் பார்த்துப் பேசுகிறார். அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து தவறான விளம்பரங்களைச் செய்து வருவதாக சர்ச்சை ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. நேற்று கூட நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்துக்கு பதினோரு லட்ச ரூபாயை அபராதமாகத் தீட்டியிருக்கிறது. பதஞ்சலியின் உப்பு, தேன், ஜாம் என்று பல பொருட்கள் ஆய்வக தரச் சோதனையில் தோல்வியடைந்திருக்கின்றன. எங்கள் வீட்டில் பதஞ்சலி தேன் இருக்கிறது. பதஞ்சலி ஜாம் இருக்கிறது. உப்பு மட்டும் இல்லை. பதஞ்சலியில் உப்பும் விற்கிறார்கள் என்று தெரிந்தால் வாங்கிவிடுவார்கள்.

கடந்த ஒரு வருடமாகவே தமது போட்டியாளர்களைத் தாக்குகிற விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் செய்வதாக சர்ச்சைகள் உருவாகி வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து கடைசியில் அபராதத்தில் முடிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட கிழக்கிந்திய நிறுவனங்கள் என்றும் உங்களைச் சுரண்டுகிற உரிமையை உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்குங்கள் என்று விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சுதேசி இயக்கம் என்பதன் தீவிரமான ஆதரவாளன் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் பெருமைதான். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லி நம்மை வணிக ரீதியாகச் சுரண்டுகிறார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஹிமாலயா, டாபர், பதஞ்சலி போன்ற கார்போரேட் நிறுவனங்கள் ஒரு பக்கம் என்றால் தமிழகத்தில் பெயர் தெரியாத வியாபாரிகள் கூட ஹெர்பல், ஆர்கானிக் ஆகிய சொற்களை வைத்துக் கொண்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கிறார்கள். 

பாரம்பரியத்தை மீட்டெடுப்பது நல்லதுதான். ஆனால் அது சிலருக்கு வியாபார உத்தியாக மாறுவதுதான் அவலம்.

ஒவ்வொரு காலத்திலும் நம் ஊரில்  சில சொற்களுக்கு மதிப்பு உண்டாகும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தி வியாபாரத்தை நடத்துகிறவர்கள் கொடி கட்டிவிடுவார்கள். இன்றைக்கு ஆர்கானிக், ஹெர்பல் உள்ளிட்ட சொற்களுக்கு பெருமதிப்பு உண்டாகியிருக்கிறது. இந்தச் சொற்களை பொட்டலத்தில் அச்சடித்து விற்றால் எந்தப் பொருளாக இருந்தாலும் மக்கள் வாங்குகிறார்கள். அதை வைத்துக் கொண்டுதான் பதஞ்சலியைப் போலவே பல நிறுவனங்களும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்கானிக் பொருளாக விலை கூட்டி விற்கப்படுகிற பொருட்களில் எத்தனை பொருட்கள் வேதிப்பொருள் கலக்கப்படாதவை என்று யாருக்கும் தெரியாது. சாதாரண அரிசி நாற்பது ரூபாய் என்றால் ஆர்கானிக் அரிசி கிலோ நூறு ரூபாய். உண்மையிலேயே இயற்கை வழி விவசாயத்தால்தான் விளைவிக்கப்பட்டதா என்பதைப் பற்றிக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விலை கொடுத்து வாங்குகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நாட்டுச் சர்க்கரை, செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், ஆர்கானிக் சிறுதானியங்கள் என்று சந்தையில் பொருட்கள் குவிக்கப்படுகின்றன. 

‘நாங்க சுத்தமா ஆர்கானிக்குக்கு மாறிட்டோம்’ என்று சொல்வது பெருமையான சொற்றொடராக மாறியிருக்கிறது. ஆனால் ‘சுத்தமான ஆர்கானிக்கா?’என்பதுதான் கேள்வியே.

பழச்சாறு, மூலிகைச் சாறு என்று பல பொருட்களில் நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைப்பதற்காக வேதிப்பொருட்களைச் சேர்க்கத்தான் செய்கிறார்கள். நாட்டுச் சர்க்கரையில் செய்யப்பட்ட பொருட்கள் என்று சொல்லி சுவையூட்டுவதற்காக சில வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். ஆனால் விற்பனைக்கு வைக்கும் போது ‘ஆர்கானிக், ஹெர்பல்’ என்ற சொல்லை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். விற்பனை தூள் கிளப்புகிறது. இதுவொரு மிகப்பெரிய வணிக தந்திரம். ‘உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா?’ என்பதற்கும் இத்தகைய லேபிள் விற்பனைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை.

இன்றைக்கும் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிக்கு கிட்டத்தட்ட அதே விலைதான் கிடைக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்கங்களில் விசாரித்துப் பார்க்கலாம். தோட்டத்தில் ஆலை போட்டு கரும்பை ஆட்டி சர்க்கரை எடுத்துக் கொடுக்கும் விவசாயி கிட்டத்தட்ட அதே வருமானத்தைத்தான் எடுக்கிறான். ஆனால் இடைத்தரகர்கள் அவற்றை வாங்கி பொட்டலம் கட்டி அதன் மீது ஆர்கானிக், ஹெர்பல் என்கிற லேபிள் ஒட்டி பன்மடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். வியாபாரிகள் எப்பொழுதும் வியாபாரிகளாகவேதான் இருக்கிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அதன் வழியாக இலாபம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. சற்றே நுணுக்கமாக கவனித்தால் விழிப்புணர்வை உண்டாக்குவதன் பெயரில் வியாபாரம் செய்கிறவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் அதிகமாக இருக்கிறார்கள். 

ஆர்கானிக், மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும் நாம் இழந்து போன பழைய உணவு முறையை மீட்டெடுப்பதையும் தவறு என்று சொல்லவில்லை.

மெல்ல மெல்ல வேதிப்பொருட்களிடமிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் ஆர்கானிக், ஹெர்பல் என்ற சொற்களை நம்பி விலை அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை. ‘இனி நமக்கு எந்த நோயும் வராது’ என்று கண்மூடித்தனமான மூட நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. சாதாரணப் பொருட்களில் எப்படி கலப்படங்கள் இருக்கின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஆர்கானிக் என்றும் ஹெர்பல் என்றும் விற்கப்படுகிற பொருட்களிலும் கலப்படங்கள் இருக்கின்றன. நிறுவனங்களின் வழியாக சந்தைக்கு வரக் கூடிய பெரும்பாலான பொருட்களுக்குக் குறைந்தபட்சம் தரக் கட்டுப்பாடு என்றாவது உண்டு. யாரேனும் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு நடத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆர்கானிக், ஹெர்பல் என விற்கப்படுகிற பெரும்பாலான பொருட்களுக்கு எதுவுமேயில்லை. அப்படியே விற்கப்படுகின்றன. நாமும் தயக்கமேயில்லாமல் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உள்ளூர் வியாபாரிகள் இப்படியென்றால் பெரு முதலாளிகளும் சளைத்தவர்கள் இல்லை. ‘ஹெர்பல் பொருள்’ என்று விளம்பரப்படுத்தி விற்கப்படுகிற பொருட்களைப் பற்றி நாம் சற்றேனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஹெர்பலைச் சேர்த்திருக்கிறார்களே தவிர அது முழுமையான மூலிகப் பொருள் கிடையாது. பதஞ்சலி, டாபர், ஹிமாலயா என்று எந்த நிறுவனத்தின் பொருளை எடுத்தாலும் அதன் உள்ளடக்கத்தை(ingredients)பார்த்தால் வேதிப் பொருள் ஏதாவதொன்றின் பெயர் இருக்கிறது. அப்படி இல்லாத பொருட்கள் ஏதேனும் இருப்பின் அத்தகைய பட்டியலை நாம் தயாரிக்கலாம்.

சரியான உணவுப் பழக்கம், பாரம்பரியத்தை நோக்கித் திரும்பும் வாழ்க்கை ஆகியவற்றின் மீதாக கவர்ச்சி ஊட்டப்பட்டு அதன் வழியாக சிலர் நம் சட்டைப்பையில் ஓட்டையிட்டு இலாபம் சம்பாதிக்க அனுமதிப்பதும் கூட ஒருவிதமான அடிமைத்தனம்தான். நமக்கான சுய அறிவைப் பயன்படுத்தி சற்றேனும் விழித்துக் கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. நம்மைச் சுற்றிக் குவிக்கப்படுகிறவற்றில் எவையெல்லாம் தரமானவை என்றும் எவையெல்லாம் கலப்படங்கள் என்றும் குறைந்தபட்சமான ஆய்வையாவது செய்ய வேண்டியிருக்கிறது.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்-

ஹெர்ப்ல பொருட்கள் என்று பெயரிட்டு இங்கே விற்கப்படுகிறவை முழுமையான ஹெர்பல் பொருட்கள் இல்லை. அதில் ஹெர்பலையும் சேர்த்திருக்கிறார்கள். அதனால் ஹெர்பல் என்று பெயரிடுகிறார்கள். இன்னமும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் சீயக்காயை வெறும் சீயக்காய் பொடியாக விற்பது வேறு; நுரைப்பதற்காக சில வேதிப் பொருட்களைச் சேர்த்து அதனுடன் சீயக்காயைச் சேர்ப்பது வேறு. இங்கே நம்மிடம் சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. அவ்வளவுதான். நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும்.