ஒன்பதாம் வகுப்பில் எனக்கு ஓர் அறிவியல் வாத்தியார் இருந்தார். பெயரைச் சொன்னால் இப்பொழுதும் கூட வந்து கும்மினாலும் கும்மிவிடுவார். ஆனால் பெயரே இல்லாமல் ஒரு கதையைச் சொல்ல முடியாதல்லவா? சும்மானாச்சுக்கும் ஆண்டமுத்து என்று வைத்துக் கொள்வோம். ஆண்டமுத்துவின் வயிறு அண்டாவைப் போல இருக்கும் என்பதால் அண்டாமுத்து என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும். அண்டா தனிப்பயிற்சி எடுப்பார். ‘வாத்தியார்கிட்ட படிச்சா மார்க் போட்டுருவாரு’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததனால் பையன்களும் திமுதிமுவென்று அவரிடம் சேர்ந்து திமிலோகப்படுத்துவார்கள். எனது ஜாதகப்படி ஒன்பது கோள்களும் ஒட்டுக்காக உச்சத்தில் நின்றதால் தனிப்பயிற்சியே வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். வீட்டிலும் தண்ணீர் தெளித்திருந்தார்கள்.
எட்டாம் வகுப்பு வரைக்கும் வேறு வாத்தியார்கள் பாடம் நடத்துவார்கள். ஒன்பது பத்தாம் வகுப்பிலிருந்து முதுநிலை வாத்தியார்கள். அத்தனை பேரும் அதுவரையிலும் அறிமுகமில்லாத வாத்தியார்கள்தான். பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிட்ட அண்ணன்கள் எல்லாம் ‘டேய் அண்டாமுத்து குமுறி உட்ருவாண்டா...பார்த்து நடந்துக்க’ என்று சொன்னதன் அர்த்தம் முதலில் புரியவில்லை. கொஞ்சம் பயமிருக்கும். ஆனால் அப்படியொன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அண்டாமுத்து தன்னிடம் தனிப்பயிற்சி படிக்காத மாணவர்களிடமெல்லாம் ஒரு அதீத பாசத்தைக் காட்டுவார். குதர்க்கமான பாசம் அது. அவர்களிடம் பேசும் போது சிரித்தபடியே முகத்தை வைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொள்வார். அவர் சிரிக்கிறாரா பற்களை வெருவுகிறாரா என்று தெரியாது. நல்ல வாத்தியார் என்ற நம்பிக்கையில் கொஞ்ச நாட்கள் அஜால் குஜாலாகப் பேசித் திரிந்தேன். எல்லாவற்றுக்கும் அதே சிரிப்பு.
அந்தக் காலத்தில் ஜென் நிலை என்பதற்கெல்லாம் அர்த்தம் தெரியாதல்லவா? இன்றைக்காக இருந்தால் ‘இவன் ஜென்யா’ என்று சொல்லியிருப்பேன். அன்றைக்கு ‘இவரு ஜெம்ய்யா’ என்று சொல்லித் திரிந்தேன். அப்பவும் கூட நந்தகுமார் எச்சரித்தான். ஒரு வருடம் சீனியர். ‘கால் பரீட்சை வரைக்கும் அப்படித்தான்...அதுக்கப்புறம் இருக்கு’ என்றான். அடக்கினால் அடங்குற ஆளா நான்? அதன் பிறகும் அஜால்குஜால்தான். வகுப்பிலேயே அதிகமாக பேசுகிறவனாக இருந்தேன். அதுவும் வாத்தியார்களிடம். அண்டாமுத்து என்றால் இன்னமும் இளக்காரம்.
முன் காலாண்டுத் தேர்வு வந்தது.
தேர்வுக்குப் பிறகாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்திருந்தார்கள். விடுமுறையில் ஆட்டம் முடித்து வகுப்புக்குச் சென்றவுடன் முதல் விடைத்தாளை அண்டாமுத்துதான் கொடுத்தார். வரிசைக்கிரமமாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். என்னுடைய பெயரை அழைத்ததும் வேகமாக ஓடினேன். நேருக்கு நேராக ஒரு பார்வை பார்த்துவிட்டு தாளை நீட்டினார். வாங்கிப் பார்த்தால் குபீரென்றிருந்தது. நூற்றுக்கு பதினேழரை. இன்னும் பத்து குறைத்துப் போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். வீட்டிற்குக் கொண்டு போனால் அம்மா ருத்ரதாண்டவம் ஆடி விடுவார். ஏதாச்சும் செய்தே தீர வேண்டியிருந்தது. அண்டாவிடம் தனிப்பயிற்சி படித்துக் கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் குறைந்து அதைப் பற்றித் தங்களுக்குள் குலாவிக் கொண்டிருக்க நான் ரேங்க் ஷீட்டில் சிவப்பு நிற அடிக்கோடு வராமல் இருக்கவே பதினேழரை மதிப்பெண்கள் வேண்டுமே என்று பதறிக் கொண்டிருந்தேன்.
அத்தனை பேருக்கும் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு ‘யாருக்காச்சும் திருத்தம் இருக்கா?’ என்றார். இதற்காகத்தான் காத்திருந்தேன். என்னைப் போலவே இன்னமும் பலரும். திமுதிமுவென்று ஓடிச் சூழ்ந்து நின்றோம். முதன் முறையாக அண்டாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எழுந்து தபார் துபார் என்று மொத்து மொத்தென்று மொத்தினார். கண்ணீர்ப்புகைக்கு சிதறிய கூட்டமாக சிதறினோம். இந்தக் கலவரத்தில் ஒருத்தன் எனது விடைத்தாளை டர்ரென்று கிழித்துவிட்டான். ஒரு பாகம் என் கையில் இருக்க இன்னொரு பாகம் துண்டிக்கப்பட்ட ஆட்டுத்தலையாக துள்ளிக் கொண்டிருந்தது. ‘அட நாதாரி’ என்று தாளைப் பொறுக்க முயற்சிக்க அடுத்த அடி என் முதுகில்தான் விழுந்தது. அண்டாவேதான்.
‘சுத்தி வந்து நின்னுட்டு...குசு விட்டாக்கூட வெளியே போவாது’ என்றார். அத்தனை ரணகளத்திலும் அவரது புலமையை ஒரு வினாடி சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. நல்லவேளையாக கூட்டத்திற்காகத்தான் அந்த அடி. விடைத்தாள் கிழிந்தது தெரிந்திருந்தால் அடி கூடுதலாகியிருக்கும். எப்படியோ தம் கட்டி எழுந்து நின்றேன். ஆளாளுக்கு அறிவியல் புத்தகத்தில் பதிலைத் தேடிக் கொண்டிருந்தார்கள். கிழவன் கோவணமாகக் கிடந்த இரண்டு பகுதிகளையும் எப்படி ஒட்டுவது என்று நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இரண்டையும் சேர்த்துப் பிடித்து அண்டாவிடம் சென்று நின்றேன். எனக்கு முன்பாகவே நான்கைந்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.
சக்தி வினாயகரை வேண்டிக் கொண்டிருந்தேன்.
‘குண்டன் பாஸ் பண்ணி விட்டுட்டா அஞ்சு ரூபாய் உண்டியலில் போடுறேன்’ என்பது வேண்டுதலாக இருந்தது. எழுபது எண்பது வாங்கினாலே விட மாட்டார்கள். ‘ட்யூஷனுக்கு போ போன்னு சொன்னேன்ல’ என்பார்கள். அத்தனை மதிப்பெண்களுக்கு எங்கே போவது? பிச்சை கேட்டாலும் கூட கிடைக்காது. இப்போதைக்கு பாஸ் செய்வோம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. வரிசையில் முன்பாக நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் கும்மாங்குத்துதான். அறைதான். உதைதான். வெட்டுவதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கும் வெள்ளாடு போலத்தான் இருந்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பதற்றம். இந்த லட்சணத்தில் அவசரமாக முட்டிக் கொண்டு நின்றது. பாபா ராம்தேவ் யோகாசனம் செய்வது போல கால்களைப் பிணைத்துக் கொண்டு நின்றேன்.
முன்பாக நின்றிருந்தவர்கள் எல்லாம் அடியையும் வாங்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக வாங்கியதோடு கடுப்பிலேயே இடத்துக்கு போயிருந்தார்கள். அடுத்து நான்தான்.
‘வாடா...பிரகலநாதா’ என்றார்.
‘எம்பேரு மணிகண்டன் சார்’ என்றேன்.
‘என்னது மணி ஆட்டுறியா?’ என்றார். மற்ற பையன்களுக்கு அப்படியொரு சிரிப்பு.
‘அடேய் அண்டாமுத்து’ என்று மனதுக்குள் கறுவினேன். ஆனால் வாயைத் திறக்கவா முடியும்?
‘எத்தன மார்க் வாங்கியிருக்க?’
‘பதினேழரை சார்’
‘படிச்சாத்தான மார்க் வரும்’ என்று சொல்லியபடியே முடியைப் பிடித்து ஆட்டினார். அப்பொழுது தலையில் முடி இருந்தது.
‘படிச்சேன் சார்’
‘கிழிச்ச’
‘இல்ல சார்..நிஜமாவே படிச்சேன்’
அந்த ஆள் விடுவதாகத் தெரியவில்லை. ஆட்டுகிற ஆட்டில் சிறுநீர் கசிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அரை ட்ரவுசர். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும். ‘விட்றாதடா’ என்று பற்களைக் கடித்தபடியே இறுக்கிக் கொண்டிருந்தேன். நான் தொடைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க அந்த ஆளும் விடாமல் தலைமுடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
விடைத்தாளிலிருந்து ஒவ்வொரு பதிலையும் சப்தம் போட்டு படித்துக் காட்டச் சொன்னார். ஒவ்வொரு விடையாகப் படித்துக் காட்டியவுடன் ‘சரியா டா?’ என்று பையன்களைக் கேட்பார். அவர்கள் சரி என்று சொன்னால் மதிப்பெண்கள் வரும். அவர்கள் தவறு என்று சொன்னால் கும்முதான்.
துக்கமும் சந்தோஷமுகாகக் கலந்து கடைசியில் கூட்டிக் கழித்து இருபத்தெட்டு வந்து சேர்ந்தது.
‘சார் சார்....இன்னொரு கேள்வி திருத்தாம இருக்கு சார்’ என்றேன். அதுக்கு ஒரு மூன்று மதிப்பெண்கள்.
நான்கு மதிப்பெண்கள்தான் பாக்கி. ‘எங்க ட்யூஷன் போற?’என்றார்.
‘எங்கேயும் போறதில்ல சார்’ - இதைச் சொன்னவுடன் அவருக்கு பல்பு எரிந்ததை ஒரு வினாடி கவனிக்க முடிந்தது. எனக்கு முன்பாக கும்மாங்குத்து வாங்கியவர்கள் எல்லாம் முத்துசாமி ட்யூஷன், பாட்ஷா ட்யூஷன் என்று சொன்னார்கள். அதனால் கும்மாங்குத்து. எங்கேயும் போவதில்லை என்றவுடன் விடைத்தாளை வாங்கிக் கொண்டு கனிவு வந்தவராக ‘இதைக் கூட கிழிக்காம வெச்சிருக்க மாட்டியா’ என்று கேட்டு அங்கும் இங்குமாக மதிப்பெண்களைச் சேர்த்து நாற்பதாக்கினார். உயிர் திரும்ப வந்தது.
‘அடுத்த வருஷம் பத்தாவது...ஒன்பதாங்க்ளாஸ் முக்கியம்..ட்யூஷன் சேர்ந்துக்க..பணத்தைப் பத்தி யோசிக்காத..அதை மெதுவா கொடு’ என்றார். அடியையும் கொடுத்துவிட்டு கருப்பட்டியையும் கொடுத்தால் குளுகுளுவென்று இருக்கும் அல்லவா? அப்படி இருந்தது.
ரணகளமும் அழிச்சாட்டியமும் அவரிடம் தனிப்பயிற்சி படிக்காத ஆட்களுக்குத்தான். அண்டாவிடம் தனிப்பயிற்சி படிக்கும் மாணவன் யாருமே அவரிடம் மதிப்பெண் கேட்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விசாரித்தால் முந்தின நாளே தனிப்பயிற்சி வகுப்பின் போது விடைத்தாளைக் கொடுத்துத் திருத்திவிட்டாராம்.
ரணகளமும் அழிச்சாட்டியமும் அவரிடம் தனிப்பயிற்சி படிக்காத ஆட்களுக்குத்தான். அண்டாவிடம் தனிப்பயிற்சி படிக்கும் மாணவன் யாருமே அவரிடம் மதிப்பெண் கேட்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விசாரித்தால் முந்தின நாளே தனிப்பயிற்சி வகுப்பின் போது விடைத்தாளைக் கொடுத்துத் திருத்திவிட்டாராம்.
அடங்கொண்ணிமலையா என்று சொல்லிக் கொண்டேன்.
இன்னமும் முக்கால் வருடம் பாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இப்படியே குத்தினால் எப்படித் தாங்குவது? ஏதாவது செய்ய வேண்டும் என்று மண்டை காய்ந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அப்பொழுது ஒரு வாத்தியார் இருந்தார். தனியார் பள்ளி ஆசிரியர் அவர். அவர்தான் ‘மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு பெட்டிஷன் போடுறியா? சொல்லித் தர்றேன்’ என்றார். எங்கேயிருந்தாவது கிருஷ்ணர்கள் வந்து திரெளபதிக்கு சேலை கொடுத்துவிடுவார்கள் அல்லவா?
‘அட்ரஸ் மட்டும் கொடுங்க’ என்று வாங்கிக் கொண்டு நான்கைந்து பக்கம் எழுதி தபாலில் அனுப்பியிருந்தேன். கையொப்பமெல்லாம் எதுவுமில்லை. மொட்டைக் கடுதாசி.
என்னதான் புகார் அனுப்பினாலும் தனிப்பயிற்சியொன்றில் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். சசிகலா அணியில் சேர விரும்பாதவர்கள் தீபா அணியில் சேர எத்தனிப்பது போல அண்டாமுத்து வேண்டாம் என்று முத்துச்சாமி வாத்தியாரிடம் சேர்ந்து கொண்டேன். அடி வாங்குகிற போதெல்லாம் சொல்லி அழுவதற்காகவாவது ஒரு தோள் வேண்டும் அல்லவா?
என்னதான் புகார் அனுப்பினாலும் தனிப்பயிற்சியொன்றில் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். சசிகலா அணியில் சேர விரும்பாதவர்கள் தீபா அணியில் சேர எத்தனிப்பது போல அண்டாமுத்து வேண்டாம் என்று முத்துச்சாமி வாத்தியாரிடம் சேர்ந்து கொண்டேன். அடி வாங்குகிற போதெல்லாம் சொல்லி அழுவதற்காகவாவது ஒரு தோள் வேண்டும் அல்லவா?
எனது புகார் என்ன ஆனது என்று தெரியவில்லை. வெளியில் யாரிடமும் சொல்லவுமில்லை. ஆனால் அந்தக் காலத்தில் கல்வி அதிகாரிகள் ஓரளவுக்கேனும் நேர்மையுடன் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதன் பிறகு அந்த வருடம் முழுமைக்குமே அண்டாமுத்து தனிப்பயிற்சி சேரச் சொல்லி எங்கள் வகுப்பில் யாரையுமே அடிக்கவில்லை.
14 எதிர் சப்தங்கள்:
சிரித்து சிரித்து ஒரு வழியாகிவிட்டேன்..!
6 Face?
Gold Sami ?
Your sense of humour is great. Get Relaxed.
"இந்த லட்சணத்தில் அவசரமாக முட்டிக் கொண்டு நின்றது. பாபா ராம்தேவ் யோகாசனம் செய்வது போல கால்களைப் பிணைத்துக் கொண்டு நின்றேன்." & "சொல்லியபடியே முடியைப் பிடித்து ஆட்டினார். அப்பொழுது தலையில் முடி இருந்தது. " - Timing .
:) LOL
சத்தமாக சிரித்து விட்டேன் :)
படிச்சாத்தான மார்க் வரும்’ என்று சொல்லியபடியே முடியைப் பிடித்து ஆட்டினார். அப்பொழுது தலையில் முடி இருந்தது.. :) :) :)
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பதற்றம். இந்த லட்சணத்தில் அவசரமாக முட்டிக் கொண்டு நின்றது. பாபா ராம்தேவ் யோகாசனம் செய்வது போல கால்களைப் பிணைத்துக் கொண்டு நின்றேன்.... :)
கிழவன் கோவணமாகக் கிடந்த இரண்டு பகுதிகளையும் எப்படி ஒட்டுவது என்று நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இரண்டையும் சேர்த்துப் பிடித்து அண்டாவிடம் சென்று நின்றேன்..... :) :) :)
sathama vaai vitu sirichen... enna oru comedy.... ayyo kadavule :) :)
சார், நேர்மையான அதிகாரிகள் இப்போதும் உண்டு. அவர்கள் அதிகம் வெளியில் தென்படுவதில்லை. பாபா ராம்தேவின் யோகாசனம் - நல்ல ஒரு காமெடி உவமை.
Hats off to your sense of humor. Can't control my laugh.
Hats off to your sense of humor. Can't control my laugh.
//‘குண்டன் பாஸ் பண்ணி விட்டுட்டா அஞ்சு ரூபாய் உண்டியலில் போடுறேன்’ என்பது வேண்டுதலாக இருந்தது.//
உண்டியல் ல பணம் போட்டீங்களா?. இல்ல அந்த உண்டியல் சாமிக்கும் மொட்டைக் கடுதாசி தானா?
your another version of writing.. really admired
இந்த கட்டுரை ஒரே தமாசு தமாசு!!! எனக்கும் இதே கத தான், ஆனா இரண்டு வாத்தியாருமே அடிப்பாய்ங்க, எதுக்கு அடிக்கிராய்ஙகனு தெரியாது?
I am fan of சேக்காளி, his comments are so good and comedy!!
Post a Comment