Dec 14, 2016

இனியன்

சரியான ஆசிரியர் கிடைத்தால் மாணவன் வாழ்க்கையில் பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரி என்பார்கள். யோசித்துப் பார்த்தால் இன்றைய நம் நிலைமைக்கு ஏதோவொரு ஆசிரியர் நிச்சயமாகப் பங்களித்திருப்பார். ஒருவேளை நாம் மறந்திருந்தாலும் மறுப்பது சாத்தியமில்லை. 

எங்கள் ஊரில் ஒரு தலைமையாசிரியர் இருந்தார். இனியன்.அ.கோவிந்தராஜூ.


வெளியூர் ஆள். கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி உதவித் தலைமையாசிரியர் ஆகி பிறகு தலைமையாசிரியர் ஆனார். ‘நீ ஏன் எழுதற?’ என்று என்னிடம் யாராவது கேட்டால் இனியன் அவர்களின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அவர்தான் தலைமையாசிரியர். வருடத்திற்கு இருநூறு நாள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் கூட ஒரு ஐந்தாறு வருடங்களில் ஆயிரத்து இருநூறு முறையாவது அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். தினமும் வணக்க வகுப்பில் பேசுவார். தினசரி ஒரு திருக்குறள். குறளைச் சொல்லி விளக்கம் சொல்லி ஒரு குட்டிக் கதையும் சொல்வார். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி...’ ‘எண்ணித் துணிக கருமம்....’ ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே..’ ஆகிய சில குறள்கள் அவர்ச் சொல்லிச் சொல்லி மனதுக்குள் உருவேறிக் கிடக்கிறது.

சமீபத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசிய சலனப்படம் ஒன்று யுடியூப்பில் கிடைத்தது. தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பாக பேசக் கூடிய இயக்குநர்களில் அவரும் ஒருவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது பேச்சுகளடங்கிய சலனப்படங்களைப் பார்ப்பது உண்டு. ‘உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் வள்ளுவத்தில் சாவி இருக்கிறது’ என்று பேசினார். அது அப்பட்டமான உண்மை. ஆச்சரியம் என்னவெறால் இதை தலைமையாசிரியர் எங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். 

‘அறத்துப் பாலிலும் பொருட்பாலிலுமிருந்து மொத்தமாக பத்து திருக்குறள்களை எடுத்து மனனம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை மட்டும் பின்பற்றினால் போதும். உங்களின் மொத்த ஆளுமையும் மாறிவிடும்’ என்று தலைமையாசிரியர் சொன்னது அன்றைக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் உண்மை இன்றைக்குப் புரிகிறது. பத்துக் குறள்கள் கூட வேண்டாம். ஐந்தே ஐந்து குறள்களைப் பின்பற்றினால் கூட போதும். திருக்குறளைப் புரிந்து கொள்வதையும் பின்பற்றுவதையும் விட personality development என்று தனியாக வேறு எதுவுமில்லை. 

அவரிடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்திருக்கிறார்கள். நிறையப் பேர்கள் வெகு உயரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். தனது வாழ்நாளில் காசு வாங்கிக் கொண்டு தனிப்பயிற்சி நடத்தவில்லை. பாடம் சொல்வது மட்டும்தான் தன்னுடைய கடமை என்று நிற்கவில்லை. பவானி நதி நீர் பாதுகாப்புக் குழுவில் இருந்தார். உள்ளூர் வரலாற்றையும் பள்ளியின் வரலாற்றையும் தோண்டியெடுத்து ஆவணப்படுத்தினார். மாணவர்களைத் துடிப்போடு வைத்திருந்தார். இன்னமும் சில ஆண்டுகள் அவர் அதே பள்ளியிலும் அதே ஊரிலும் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்.

பிரச்சினைகள் அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றின. நூற்றாண்டு கண்ட பள்ளி அவர் சென்றதிலிருந்து நொடியத் தொடங்கியது. இன்றைக்கும் உள்ளூரில் பேசினால் ‘இனியன் இருக்கிற வரைக்கும்தான் டைமண்ட் ஜூபிலி பள்ளிக் கூடமா இருந்துச்சு’ என்று பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் ஒழுக்கம், படிப்பு ஆகியவற்றில் அவரளவுக்கு அவர் பின்னால் வந்தவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. இன்றைக்கு பள்ளிக் கூடம் மெல்ல மெல்ல ஒட்டடை ஏறிக் கொண்டிருக்கிறது. யாராவது மறுத்தாலும் கூட இதுதான் உண்மை.

இனியன் காலத்தில் தமிழ் பாடத்தில் கூட மாநில அளவிலான ரேங்க் வாங்கிய பள்ளி அது. இன்றைக்கு நகரத்தில் இருக்கும் பள்ளிகளுடன் கூட போட்டியிட முடிவதில்லை. இதுதான் நிதர்சனம். பள்ளியின் தலைமையாசிரியர் மட்டும் சரியாக இருந்தால் போதும்- தூக்கி நிறுத்திவிடுவார்கள். தலைமையாசிரியர் சரியில்லையென்றால் அந்தப் பள்ளியில் என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் காய்ந்து கருவாடாகிவிடும். அது இனியன் விவகாரத்தில் சரியானது.

இனியன் அவர்களை வெளியேற்றியது பள்ளிக்கும் உள்ளூருக்கும்தானே இழப்பே தவிர அவருக்கு பெரிய பாதிப்பில்லை. இன்றைக்கு அறுபதைத் தாண்டிய பிறகும் ஏதாவதொரு கல்லூரியிலும் பள்ளியிலும் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். வானொலியில் பேசுகிறார். இதழ்களில் எழுதுகிறார். தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார்.

1997 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாடினார்கள். காலையில் கொடியேற்றுவதுடன் நிகழ்ச்சியை முடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படியான தலைமையாசிரியர் இல்லை. பள்ளியில் விடிய விடிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரவில் மாணவர்கள் கவிதை வாசிக்கலாம் என்று சொல்லியிருந்தார். கடைசி நேரத்தில் ஏழெட்டு பக்கங்களில் ஒரு மொக்கைக் கவிதையை எழுதிக் கொண்டு போய் கொடுத்தேன். உணவு உண்பதற்காக வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவர் திரும்பவும் தனது இருக்கைக்குச் சென்று வரிக்கு வரி திருத்திக் கொடுத்தார். எனக்கும் கவிதை எழுதத் தெரியும் என்று நான் நம்பத் தொடங்கிய தருணம் அது. நள்ளிரவில் கவிதை வாசித்தேன். என் கவிதையைக் கேட்டுத்தான் சுதந்திரமே கிடைத்தது போன்ற கித்தாப்புடன் வாசித்தது இன்னமும் நினைவில் நிற்கிறது.

‘படிக்கிற வயசுல பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டின்னு வாழ்க்கையைத் தொலைச்சுடாத’ என்று அம்மாவும் அப்பாவும் திட்டிய போது அவர்களை அழைத்து ‘படிக்கிறதை எல்லோரும் செய்யலாம்..இதெல்லாம் இவனை மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர்தான் செய்ய முடியும்..அவன் போக்குல விடுங்க’ என்று சொல்லி அவர்களை மடை மாற்றிவிட்டதும் அவர்தான்.

தவறுகளில் சிக்கிக் கொண்ட மாணவர்களை திட்டுகிற மாதிரி திட்டி தனியாக அழைத்துக் கனிவாகப் பேசி அனுப்புவார். வணக்க வகுப்புகளில் மாணவர்களைப் பேசச் சொல்லி உற்சாகமூட்டுவார். ஒவ்வொரு நாளும் வணக்க வகுப்பில் ஒருவன் திருக்குறள் சொல்ல வேண்டும்; இன்னொருவன் ஆங்கில பழமொழி ஒன்றைச் சொல்லி அதற்கு அர்த்தம் சொல்ல வேண்டும்; இன்னொருவன் அன்றைய தினத்தின் முக்கியச் செய்திகளை வாசிக்க வேண்டும்; மற்றொருவன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க அதை மாணவர்கள் பின் தொடர்ந்து சொல்ல வேண்டும். வாரம் ஒரு வகுப்பு. ஐந்து நாட்களும் வெவ்வேறு மாணவர்கள். மேடை பயம் என்பது மாணவர்களிடமிருந்து இயல்பாகவே காணாமல் போனது.

ஒரு ரூபாயைக் கண்டெடுத்துக் கொண்டு போய் கொடுத்தாலும் அடுத்த நாள் அந்த மாணவனை வணக்க வகுப்பு மேடைக்கு அழைத்துப் பாராட்டுவார். 

அவர் காலத்தில் மாணவர் பேரவை சிறப்பாக இயங்கியது. தேர்தல் நடக்கும். மாணவத் தலைவனை மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், இலக்கிய மன்றம் செயல்பட்டது. இலக்கியமன்றச் செயலாளராக ஒருவன் செயல்படுவான். ஏதேனும் செயல்பாடுகள் பள்ளியில் நடந்து கொண்டேயிருக்கும். மாணவர்கள் பட்டிமன்றங்கள் நடைபெறும். வெளியாட்கள் வந்து பேசுவார்கள். நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் படை, தேசிய மாணவர் படை என்று சகலவிதமான அமைப்புகளும் மிகத் தீவிரமாக இயங்கின. பசுமை பாதுகாப்புப்படை என்று தனியாக ஒரு அமைப்பு நடத்தப்பட்டது.

சொல்லிக் கொண்டே போகலாம். இனியன் அவர்களின் செயல்பாடுகளால் ஒவ்வொரு மாணவனும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைந்திருக்கக் கூடும். முதல்பத்தியில் சொன்னது போல ஒருவேளை மறந்திருக்கலாமே தவிர மறுக்க முடியாது.

ஆசிரியர்களின் பலம் நமக்கு நேரடியாகத் தெரிவதில்லை. வாழ்க்கையின் வேறொரு கட்டத்தில் அசைப்போட்டு பார்த்தால் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் நம்மை முழுமையாக உருவாக்கி வெளியுலகத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்றைக்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு என்பது வெறும் மதிப்பெண்களாக சுருங்கிவிட்டது. அறம், ஒழுக்கம், நன்னெறி என்பதையெல்லாம் பெரும்பாலான ஆசிரியர்கள் போதிப்பதுமில்லை அதை யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. பள்ளியின் நோக்கம் என்பதே கடைசியில் எழுதுகிற மூன்று மணி நேரத் தேர்வு மட்டும்தான் என்று வந்து நின்றிருப்பது சாபக்கேடு மட்டுமல்ல அதுவொரு பிணி. பள்ளி என்பது பாடம் மட்டுமில்லை. மதிப்பெண்கள் மட்டுமில்லை. அது வேறு உலகம். வாழ்வியலின் அடித்தளமே பள்ளியும் ஆசிரியர்களும்தான்...இல்லையா?

முந்தைய காலத்தில் தமிழகத்தில் தமது ஆசிரியர்களுக்கு நன்றி கூறியும் பாராட்டியும் அடிக்கடி கூட்டம் நடக்கும் என்று சொல்வார்கள். இன்றைக்கு அது அருகிவிட்டது. எங்கள் ஊரில் எனக்கு நினைவு தெரிந்து அப்படியொரு நன்றி பாராட்டும் கூட்டம் எந்த ஆசிரியருக்கும் நடைபெறவில்லை. அதைச் செய்யலாம் எனத் தோன்றியது. உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து இனியன் அவர்களிடம் படித்த மாணவர்களின் கூடட்த்தை பிப்ரவரி மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடத்தலாம். நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விரைவில் எழுதுகிறேன்.

ஆசிரியர்களுக்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. சிறு நன்றி. அது போதும்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இனியன் அவர்களின் பழைய மாணவர்கள் அத்தனை பேரிடமும் இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்க முயற்சி செய்வோம். வாட்ஸப், மின்னஞ்சல், ஃபேஸ்புக் ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். குழுவொன்றை அமைத்து விரிவான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

நன்றி.