Dec 11, 2016

நீட் வெற்றி

நேற்று மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் பாலை வார்த்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வான NEET ஐ தமிழிலும் எழுதலாமாம். தமிழகத்தைச் சார்ந்த கல்வியாளர்களின் கோரிக்கைகளில் இது முக்கியமானதாக இருந்தது. குறைந்தபட்சம் மாணவர்களால் கேள்விகளையாவது புரிந்து கொள்ள முடியும். பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் இதைத் தெரிவித்திருக்கிறார். ஹிந்தியை எப்படியும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அதனால் ஹிந்தியில் எழுதலாம். மம்தா பானர்ஜி விடமாட்டாரோ என்னவோ என்று பெங்காலியைப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். குஜராத்தி, மராத்தியை ஏன் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் என்று நமக்கே தெரியும். தெலுங்கும் பட்டியலில் இருக்கிறது. ஆங்கிலம் தவிர மேற்சொன்ன ஆறு மொழிகளில் எதில் வேண்டுமானாலும் நீட் தேர்வை மாணவர்களால் எழுத முடியும். 

கன்னடம், ஒடியா, மலையாளம் முதலான முக்கியமான மொழிகளில் தேர்வு எழுத முடியாது என்பது அந்தந்த மாநிலங்களுக்கு பெரும் பாதிப்புதான். இனி அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் ஒருவேளை அனைத்து மாநில மொழிகளும் கவனிக்கப்படக் கூடும். அது அவர்கள் வேலை. ஒன்றரை லோட்டா தண்ணீர் கொடுக்கவே கன்னடக்காரர்களும், மலையாளிகளும் தலைகீழாக நிற்கிறார்கள். தமது மொழியை விட்டுக் கொடுப்பார்களா? பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

இடையில் சி.பி.எஸ்.சி புகுந்து ‘அய்யய்யோ...இப்படி பல மொழிகளில் நடத்தினால் கேள்வித்தாள் வெளியாகிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதே’ என்று கேட்டிருக்கிறார்கள். இழுத்துப் பிடித்து நாக்கில் வசம்பை தேய்த்து அவர்களை விட்டுவிடலாம். யு.பி.எஸ்.சி பல மொழிகளில் தேர்வுகளை நடத்துகிறார்கள். கேள்வித்தாள் வெளியாகிறதா என்ன? ஒரு தேர்வையே கேள்வித்தாள் வெளியாகாமல் நடத்த முடியவில்லையென்றால் இடத்தைக் காலி செய்யச் சொன்னால் அடங்கிவிடுவார்கள் என நினைக்கிறேன். இவர்கள் இருக்கட்டும். இன்னொரு கூட்டம் இருக்கிறது- மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்று பெயர். ‘மருத்துவப்படிப்பு முழுவதும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் நுழைவுத்தேர்வும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய சரியான வாக்கியம் கிடைக்கவில்லை. ஒருவேளை இம்மிபிசகாமல் இப்படிச் சொல்லியிருப்பார்களெனில் இவர்களை எல்லாம் எப்படி படித்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

காலங்காலமாக மருத்துவம் பொறியியல் இன்னபிற கல்லூரிப்படிப்பிலும் சேர்கிற பிராந்திய மொழி வழி படித்த மாணவர்கள் வீணாகவா போய்விட்டார்கள்? 

பனிரெண்டாம் வகுப்பு வரை பிற மொழிகளில் பாடம் கற்ற மாணவனை ‘இனிமேல் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டியிருக்கும்; அதனால் நுழைவுத்தேர்வையும் ஆங்கிலத்திலேயே எழுதி உள்ளே வா’ என்று சொல்வதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. விட்டால் ‘இனிமேல் மருத்துவம்தானே படிக்கப் போகிறாய் அதனால் மருத்துவத்திலிருந்துதான் நுழைவுத்தேர்வுக்கான கேள்விகள் வரும்’ என்று சொன்னாலும் சொல்வார்கள். மிளகாய் பஜ்ஜிகள். அவர்கள் எப்படியோ சொல்லிவிட்டுப் போகட்டும். கோமாளிகள் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கத்தான் செய்வார்கள். இப்போதைக்கு அவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை தமிழில் நுழைவுத் தேர்வை எழுதுகிற வாய்ப்பு மறுக்கப்படும் போது பேசிக் கொள்ளலாம்.

பாராளுமன்றத்தில் பதில் சொன்ன அமைச்சர் அந்தந்த மாநிலங்களுக்காக ஒதுக்கக் கூடிய மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையிலும் சரி, இதுவரை கடைபிடிக்கப்படும் மாநில அளவிலான இட ஒதுக்கீட்டிலும் சரி- கை வைக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். நல்ல விஷயம். நம்முடைய மாணவர்கள் நம் மாநிலத்திலேயே படிக்கலாம். நீட் தேர்வினை எழுதிய காரணத்திற்காகவே பிற மாநில மாணவர்கள் தமிழகக் கல்லூரிகளை வந்து ஆக்கிரமிக்க முடியாது. இவையெல்லாம் தமிழகத்தின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள்தான். எல்லாவற்றோடும் சேர்த்து இனி தேர்வையும் தமிழில் எழுதலாம் என்றிருக்கிறார்கள். 

இனி ஒரே பிரச்சினை- நுழைவுத்தேர்வை எழுதி மதிப்பெண் பெற வேண்டும். அவ்வளவுதான். வெறும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்வது சாத்தியமில்லை. தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்குச் சேர்வதாக இருந்தாலும் கூட நீட் நுழைவுத் தேர்வில் தகுதி மதிப்பெண்களைப் பெறுவது அவசியம். இன்றைக்கு வெறும் ப்ளஸ் டூ மதிப்பெண்களை வைத்துக் கொண்டு செய்யப்படுகிற சேர்க்கையில் பல தில்லாலங்கடி வேலைகள் நடைபெறுகின்றன. விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படுகிற இடத்திலேயே பணம் கொடுத்து வளைக்கிற கயமைத்தனம் நடப்பதாக அரசல் புரசலாக ஒரு பேச்சு உண்டு. அப்படியும் கூட கட்-ஆஃப் மதிப்பெண்கள் தேறவில்லையென்றால் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குகிறார்கள். வெறும் தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற்ற பணக்காரப் பையனெல்லாம் ஸ்டெத்ஸ்கோப்பை கழுத்தில் போடும் போது நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்கள் விரல் சூப்பிக் கொண்டு நிற்பதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மொத்த சேர்க்கையும் இப்படித்தான் நடக்கிறது குற்றம் சாட்டவில்லை. ஆனால் தேர்வுகள் எளிதாக்கப்பட்டு, சேர்க்கை முறையானது கையாளப்படும் போது பலவிதமான தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.

கடந்த பல ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவதற்காக உதவுவதாகச் சொல்லி நம்முடைய மாணவர்களின் திறனை வெகுவாக குறைத்துவிட்டோம். மனனம் செய்வதே தேவையில்லை என்கிற அளவில்தான் நம்முடைய படிப்பு இருக்கிறது. திருக்குறளும், நாலடியாரும் மனனம் செய்ய வேண்டியதில்லை. தேற்றங்களைக் கூட மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. இது என்னவாகியிருக்கிறது என்றால் கிராமப்புற மாணவர்கள் மனனம் செய்யும் திறனையும் இழந்திருக்கிறார்கள். புரிந்து படிக்கிற வாய்ப்பையும் இழந்திருக்கிறார்கள்.

நம்பியூரில் பயிலரங்கு நடத்தினோம் அல்லவா? அங்கே எழுதி வாங்கப்பட்ட சில தாள்களைப் படித்த போது வெகு அதிர்ச்சியாக இருந்தது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சரியான வாக்கிய அமைப்பை உருவாக்கத் தெரியவில்லை. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தப்பும் தவறுமான வாக்கிய அமைப்புகள். சில மாணவர்கள் ‘nigalchi nanraka irunthathu' என்று தங்கிலீஷிலேயே முழுத் தாளையும் நிரப்பியிருக்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பிலேயே இதுதான் நிலைமை. பிற வகுப்புகளை யோசித்துப் பார்க்கலாம்.

கல்வித்துறைக்கென தமிழக அரசு நிறையச் செலவு செய்கிறது. நோட்டுப் புத்தகங்கள் மிகத் தரமானவை. அதையெல்லாம் மறுக்கவே முடியாது. அதே சமயம் கற்றல் முறையில் நிறைய ஓட்டைகள் விழுந்திருக்கின்றன. அதைச் சரி செய்ய வேண்டுமானால் இத்தகைய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் அவசியமானவைதான். ‘நுழைவுத் தேர்வே தேவையில்லை’ என்று பேசுகிறவர்களின் பேச்சைக் கேட்டால் காலம் செல்லச் செல்ல தமிழக மாணவர்களை மூலையில் தள்ளி மிதிப்பது போல ஆகிவிடும். 

இனி நம்முடைய கவனமெல்லாம் நம்முடைய மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வதில்தான் இருக்க வேண்டும். தமிழ் மொழியில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது. மத்திய அரசை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிச்சயமாக இதற்காக நன்றி கூற வேண்டும். தமிழகக் கல்வியமைச்சரும், கல்வித் துறையும், ஆசிரியர்களும் இனி மாணவர்களைத் தயார் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுக்கட்டும். நாம் கடந்த பத்தாண்டுகளில் எங்கே பலவீனப்பட்டு போயிருக்கிறோம் என்று தெரிய வரும். துல்லியமான வேலைகளைச் செய்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் நம்முடைய மாணவர்கள் தயாராகிவிடுவார்கள். அதைவிட்டுவிட்டு ‘தேர்வே வேண்டாம்’ என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம்மிடம் இருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்வோம். வெற்றி தானாகக் கிடைக்கும்.