Dec 22, 2016

கத்திச் சண்டை

‘கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்க பார்ப்பான்’ என்றொரு சொல்வடை உண்டு. ராம மோகன் ராவுக்கு இன்னும் சில மாதங்கள்தான் மிச்சமிருக்கிறது. ‘பொழுது எப்பொழுது மேற்கே சாயும்’ எனக் காத்திருக்கிற பருவம் இது. சம்பாதித்தையெல்லாம் வைத்துக் கொண்டு சுக வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டியவர். வசமாகச் சிக்கியிருக்கிறார். சேகர் ரெட்டியைவிடவும் அதிகமாகக் கொள்ளையடித்து வைத்திருக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கக் கூடும். ராம மோகன் ராவைவிடவும் அதிகமாகத் திருடுகிற தலைமைச்செயலாளர்கள் இந்தியாவில் இருக்கக் கூடும். ரெட்டியை அமுக்கியதன் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது; அதை வாலாகப் பிடித்துக் கொண்டு ஆர்.எம்.ஆரை வளைத்ததிலும் அரசியல் இருக்கிறது. இதுவொரு தொடக்கம் அல்லது தொடர்ச்சியான அரசியல் பகடையாட்டத்தில் ஒரு கண்ணி.

கடந்த சில நாட்களாக ‘மாநில சுயாட்சி கோருவோம்’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வருமான வரித்துறையின் அலசலின் போது துணை ராணுவப்படையினரைக் குவித்ததைக் காட்டி இதைச் சொல்கிறார்கள். மாநில சுயாட்சி என்பதை முழுமையாக ஆதரிக்கலாம் ஆனால் களவாணிகளைக் காப்பதற்காக மாநில சுயாட்சி வேண்டும் என்று திசை மாற்ற வேண்டியதில்லை. திருடியிருக்கிறார்கள். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருக்கிறார்கள். இப்பொழுது அவர்களை மிரட்டுவதற்கும் பணிய வைப்பதற்கும் மேலிடத்து ஆட்களுக்கு ஒரு காரணம் தேவையாக இருக்கும் போது அந்த திருட்டுத்தனங்களையெல்லாம் கடை விரிக்கிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டுகிறது. தேளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக திருடனைக் காக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஆதரிக்க முடியும்? 

பலவீனம் நம்மிடம்தான். 

முந்நூறுக்கும் நானூறுக்கும் தமிழ்நாட்டு இளிச்சவாயர்கள் வாக்களித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருப்பதனால்தானே மக்கள் செல்வாக்கு, அரசியல் பாரம்பரியம் என்று எதுவுமேயில்லையென்றாலும் எடுத்தவுடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்? குறைந்தபட்ச அரசியல் செயல்பாட்டைக் கூட வெளிப்படையாகச் செய்யாதவர்களைத் தேடிச் சென்று ‘நீங்கதான் காப்பாத்தணும்’ என்று வீட்டு வாசலில் தேவுடு காக்கிறார்கள். கட்சிக்காரர்கள் செல்லட்டும். தவறில்லை. அடிமைகள் வளையட்டும். ஏற்றுக் கொள்ளலாம். ஊடகக்காரர்களுக்கு என்ன வந்தது? பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரிசைகட்டி நிற்க வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு துணை வேந்தர் கூட தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்று துண்டை விரித்து சத்தியம் செய்யலாம். கோடிகளைக் கொட்டி துணை வேந்தர்கள் ஆகிறார்கள். கல்விச் சேவை என்பதெல்லாம் கிஞ்சித்தும் எண்ணத்தில் இல்லை. கொட்டிய காசையெல்லாம் பேராசிரியர் நியமனத்திலிருந்து பல்கலைக்கழக ஊழியர் நியமனம் வரை வழித்துக் கட்டிச் சம்பாதிக்கிறார்கள். அரசின் பல்கலைக்கழக மானியத்தில் ஓட்டை போடுகிறார்கள். காசு கொடுத்து பதவிக்கு வந்தாகிவிட்டது இனி நான்கரை ஆண்டுகள் பதவியைக் கொடுத்தவர்களே பதவியில் இருந்தால் தமக்கு பிரச்சினையில்லை என்று நெடுஞ்சாண்கிடையாக விழுகிறார்கள். 

நாம் மொத்தமாகக் கரைபடிந்து கிடக்கிறோம். படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. நாம் சில்லரைப் பணத்துக்கு வாக்களித்தால் நினைத்தவர்களெல்லாம் ‘நீங்கதான் தமிழகத்தைக் காப்பாத்தணும்’ என்று சொல்லத்தான் செய்வார்கள். நம் சார்பில் காலில் விழ இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? தலைவர்கள் என்று தன்னெழுச்சியாக எழுந்து வர இங்கே யாருமே இல்லையா என்ன? எவருக்கும் மேலே வர தைரியமும் துணிவும் இல்லையா? இல்லை. இல்லை என்பதால்தானே மோடியின் படை இங்கே இறங்குகிறது? ஜெவின் மறைவுக்குப் பிறகு மக்கள் செல்வாக்குடன் யாரோ ஒருவர் வந்திருந்தால் வெளியிலிருந்து ஏன் தலையை நீட்டப் போகிறார்கள்? வலுவில்லை. மக்கள் செல்வாக்கில்லை. இருக்கிறவர்களிடம் குறைந்தபட்ச நேர்மையும் இல்லை. மிரட்டினால் மடங்கதான் வேண்டும். கடந்த மாதத்தில் மேற்கு வங்காளத்தில் இதே துணை ராணுவப்படையைக் குவித்தார்கள். ‘நீங்க கிளம்புகிற வரைக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு நான் கிளம்பமாட்டேன்’ என்று மம்தா பானர்ஜி அமர்ந்தார். வழியே இல்லாமல் படைகளை விலக்கினார்கள். அதே தைரியம் இன்றைக்கு தமிழக முதல்வரிடம் இருக்கிறதா என்ன? 

குறைகளையும் பலவீனங்களையும் நம்மிடம் வைத்துக் கொண்டு ‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்று கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும். 

கசடுகளை நிரப்பி வைத்திருக்கிறோம். தவறான மனிதர்களுக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறோம். ஒன்று நீ திருடு; இல்லையென்றால் நான் சுருட்டுகிறேன் என்று கமுக்கமாக ஒப்பந்தம் போடுவதற்குத்தான் மாநில சுயாட்சி என்றால் அதற்கு அவசியமே இல்லை. இப்பொழுது மூன்றாவதாக ஒரு கூட்டம் உள்ளே நுழைய முயற்சிக்கிறது. தென்னிந்தியாவில் கேரளாவை எடுத்துக் கொண்டால் கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸ்ஸூம் மோதுகிறார்கள். காங்கிரஸை மட்டம் தட்டினால் பாஜக மேலே வந்துவிட முடியும். ஆந்திராவில் தெலுங்கு தேசக்கட்சியும் காங்கிரஸூம்தான் முக்கிய எதிரிகள். தெலுங்கானாவில் காங்கிரஸூம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும்; கர்நாடகாவில் காங்கிரஸூம் பாஜகவும். தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் காங்கிரஸூக்கு குழி பறித்தால் பாஜக வலுப்பெற்றுவிடும் என்கிற நிலைமைதான் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒன்று அதிமுகவை அழிக்க வேண்டும் அல்லது திமுகவைக் கரைக்க வேண்டும்.

அதிமுகவை அடித்து மட்டம் தட்ட சுளையான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மிரட்டுகிறார்கள். உருட்டுகிறார்கள். அதிமுகவில் வலுவான ஆள் இருந்திருந்தால் படிய வேண்டியிருந்திருக்காது. ‘நீ செய்வதைச் செய்; நான் பார்த்துக்கிறேன்’ என்று துணிந்து நின்றிருக்கலாம். வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். ஊதுகிற மகுடிக்கு ஆடித்தான் ஆக வேண்டும். 

இன்றைக்கு நம் முன்னால் இருப்பதெல்லாம் ஒரே வேண்டுகோள்தான். ‘எங்களை ஆள்வதற்கு நேர்வழியில் வா’ என்பது மட்டும்தான். யாரும் ஆட்சிக்கு வரட்டும். தவறு எதுவுமில்லை. ஆனால் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று வரட்டும். திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ, பாஜகவோ அல்லது வேறு யாரோ- மக்கள் விரும்பினால் ஆட்சிக்கு வரட்டும். களமிறங்கி வெல்லட்டும். வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரட்டும். அதை விட்டுவிட்டு இல்லாத சகுனித்தனங்களையெல்லாம் செய்தால் அதை எதிர்க்கத்தான் வேண்டும். புறவாசல், பின்வாசல் என்று எந்த முறையாக இருந்தாலும் அது களவாணித்தனம்தான். பாஜக பின்வாசல் வழியாக நுழைவதற்கும் மன்னார்குடி குழுமமும் தீபாவும் நாற்காலிக்கு குறி வைப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னார்குடியும் தீபாவுமாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை குறி வைக்கிறார்கள். பாஜக மொத்தமாகக் குறி வைக்கிறது.

தமிழகத்தின் அரசியல் போர்க்களத்தில் யார் யாரோ கதுமையான வாளை வைத்துச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். சேகர் ரெட்டி, ஆர் எம் ஆர் என்று தலைகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் விழத்தான் போகின்றன. தவறேதுமில்லை. அப்படியாவது சில கசடுகள் வெளியேறட்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். தயவு செய்து மாநில சுயாட்சி மாதிரியான நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி திருடர்களையும் கேடிகளையும் காப்பாற்றுவதற்கு குரல் கொடுக்க வேண்டியதில்லை. 

Dec 21, 2016

சைவம் Vs அசைவம்

ஜட்ஜ் பலராமய்யாவின் சித்த மருத்துவத் திரட்டு மொத்த இரண்டு பாகங்கள். பாகம் ஒன்று எளிமையானது. பாகம் இரண்டு அவ்வளவு எளிதில் புரியாது. இரண்டு பாகங்களையும் மெரினா புத்தகங்கள் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அப்படித்தான் ஆர்டர் செய்திருந்தேன். பணம் அனுப்பவில்லை. புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்து அவர்களை அழைத்து ‘புத்தகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. பணத்தை எப்படிக் கொடுப்பது’ என்று கேட்ட பிறகு வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். புத்தக வியாபாரத்தில் மனிதர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா என ஆச்சரியமாக இருந்தது.

இரண்டு பாகங்களும் சேர்த்து ஆயிரம் ரூபாய். முதல் பாகம் மட்டும் அறுநூறு ரூபாய். இணைப்பில் இருக்கிறது.

சைவத்துக்கு மாறியது குறித்து எழுதிய கட்டுரைக்கு வந்த பெரும்பாலான பாராட்டுகளும் சரி; எதிர்ப்புகளும் சரி- ‘பெருங்குற்றத்திலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது’ என்ற ஒற்றை வரியை முன்வைத்துத்தான் இருந்தன. ‘ஆமாம், கொல்லாமை புனிதம்’ என்று ஒரு சாரார் சொன்னால் ‘இறைச்சி உண்ணாததைப் புனிதப்படுத்த வேண்டாம்’ என்று இன்னொரு சாரார் பேசினார்கள். உண்மையில் புனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை முன் வைத்து அசைவத்தை கைவிடவில்லை. ஒரே வினாடியில் எடுத்த முடிவு அது. ஒரு நள்ளிரவுப் பயணத்தின் போது திடீரென இறைச்சியைத் தொடக் கூடாது எனத் தோன்றியது. அடுத்த தினத்திலிருந்து உண்பதில்லை. அவ்வளவுதான்.

அசைவப் பிரியன் நான். 

2008 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டபடியால் இனி திருமணம் வரைக்கும் அசைவத்தைத் தொடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருந்தார்கள். திருமணத்துக்கு ஆறு மாத காலம் இடைவெளியிருந்தது. மலேசியா, பிரான்ஸ் என்று இரண்டு தேசங்களுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பும் கிட்டியிருந்தது. தினந்தோறும் அசைவ உணவைத்தான். ‘சம்பிரதாயங்களை மீறுவதால் திருமண வாழ்க்கைக்கு ஏதாவது ஆகிவிடுமோ’ என்ற பயமிருந்தாலும் மனம் கட்டுக்குள்ளேயே இல்லை. தின்று தீர்த்தேன். அதனால்தான் இப்பொழுதும் கூட அசைவத்திற்கு எதிரான மனநிலை தோன்றினாலும் கூட எவ்வளவு நாள் கைவிட முடியும் என்று சந்தேகமாகத்தான் இருந்தது. 

இப்பொழுது முடிவெடுத்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அசைவத்தைத் தொட வேண்டும் என்கிற எண்ணம் இனி வராது என்ற நம்பிக்கை வந்துவிட்ட பிறகு வெளியில் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாரத்தில் கூட அலுவலக நண்பர்களோடு விருந்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்பது பேர்களில் ஏழு பேர் அசைவம். என்னையும் சேர்த்து இருவர் மட்டும் சைவம். சலனமில்லாமல் பருப்புப் பொடியும் நெய்யும் ஊற்றி உண்டுவிட்டு எழுந்து வர முடிந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகுதான் நேற்றைய கட்டுரையை வெளியிடுகிற தைரியமும் கூட வந்தது. இனி எந்தக் காலத்திலும் ஆசைக்காக அசைவம் உண்ண வேண்டியதில்லை என்கிற தைரியம் அது. 

நாம் செய்கிற எந்தவொரு காரியத்துக்கும் மனம் ஒரு நியாயத்தைத் தேடும் அல்லவா? நாம் செய்தது சரிதான் என்று நம்மை நாமே நம்பச் செய்வதற்கான வித்தை அது. அப்படியான ஒரு ஆறுதல்தான் ‘இனி உணவுக்காக ஒரு உயிரைக் கொல்ல வேண்டியதில்லை’ என்று தோன்றியதும் கூட. உண்மையிலேயே அதுவொரு ஆசுவாசம்தான். அதிகாலையில் எங்கள் ஊர் சந்தைக்கடையில் ஓங்கி அடித்துக் கொல்லப்படுகிற மாடுகளையும், கதறக் கதற டிவிஎஸ் 50 வண்டியில் கட்டி எடுக்கப்பட்டு வந்து கழுத்து அறுக்கப்படும் ஆடுகளையும் பார்த்து அதையே தின்று சப்புக்கொட்டி ருசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோவொரு விடுதலையுணர்வு கிடைப்பது இயல்பானது. ஆனால் அதற்காக சைவத்தைப் புனிதப்படுத்திக் காட்டி, அசைவம் உண்கிறவர்களையெல்லாம் ஏதோ கொலைக்குற்றவாளிகளைப் போல கூண்டில் ஏற்ற வேண்டும் என்கிற எண்ணம் இல்லை.

அசைவம் புனிதமற்றது என்று தீர்ப்பெழுதவுமில்லை. 

ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை நியாயப்படுத்த என்னளவில் காரணங்களை அடுக்குகிறேன். அதில் மனதளவிலான ஆசுவாசமும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த ஆசுவாசத்தை வெளிப்படையாகச் சொல்லும் போது ‘சைவம் சரி; அசைவம் தவறு’ என்கிற தொனி உண்டாகிறது. அவ்வளவுதான். சரி தவறு என்பதெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் நியாயமாக இருக்கக் கூடிய எல்லாமும் இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்தால் அநியாயமாக இருக்கும். நாம் எந்தப் பக்கமாக நிற்கிறோம் என்பதைப் பொறுத்துத்தானே முடிவுகளே அமைகின்றன?

கொல்லாமையை வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரைக்கும் நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். வள்ளுவனை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கொல்லாமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வள்ளலாரை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் புலால் உண்ணுதலை தவிர்க்க வேண்டும். புத்தமும் சமணமும் சரி என்று பேசுகிறவர்கள் அசைவத்தை தவிர்க்கத்தான் வேண்டும். வள்ளுவன் சரி; வள்ளலார் சரி; புத்தம் சரி; சமணம் சரி என்ற புரிதலை நோக்கி நகர வேண்டுமானால் என்னளவில் சில பழக்கங்களை விட்டொழிக்க வேண்டியதாகிறது. அதில் அசைவம் தவிர்த்தலும் ஒன்றாகிறது. 

சித்த மருத்துவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். வள்ளலாரைப் பின் தொடர்கிறவர்கள் பழக்கமாகியிருக்கிறார்கள். அவர்களுடன் பேசும் போது புலால் உண்ணாமை சரி எனப்படுகிறது.

சித்த மருத்துவத்தை முன் வைத்துப் பேசினாலும் கூட சித்த மருத்துவம் முற்றிலும் அஹிம்சையில்லை. மருந்து தயாரிப்புக்காகவே உயிர்களைக் கொல்வதுண்டு. விலங்குகளின் ரத்தங்களை எடுக்கிறார்கள். ஏதோவொரு மருந்து தயாரிப்புக்கு நூறு ஆண் சிட்டுக்குருவிகளின் கழுத்தை அறுத்து ரத்த எடுத்ததாக ஒரு சித்த வைத்தியர் சொன்னார். ஆனால் அதே சித்த வைத்தியர் நோய்க்கு மருந்து கொடுக்கும் போது முதல் வேலையாக அசைவத்தைக் கைவிடச் சொல்வார். அவரும் அசைவம் உண்ணக் கூடிய மருத்துவர்தான். மருந்து உண்ணும் போது மட்டும் ஏன் அசைவத்தை தவிர்க்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் உடல் இலகுவாகச் செயல்படுவதற்கு சைவம்தான் சரி என்கிறார். புலால் உணவை சீரணிக்க நம் உடல் அதிகமாக மெனக்கெடுகிறது. நமது தட்பவெப்பத்துக்கு இறைச்சியை விடவும் சைவமே சிறப்பு என்கிறார். சுவடிகள் அப்படித்தான் சொல்கின்றன; சித்த மருத்துவப்பாடல்கள் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்கிறார். என்கிறார் என்பதைவிடவும் என்கிறார்கள் என்பது சரியாகப் பொருந்தும். பன்மை. நிறையப் பேர் சொல்கிறார்கள். தமிழ் மருத்துவம் பேசக் கூடிய மருத்துவர்கள் யாரேனும் இது குறித்து இன்னமும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லக் கூடும்.

இப்படியெல்லாம் யோசிக்கையிலும் தெரிந்து கொள்ளும் போதும் ஏதோவொரு வகையில் சைவ உணவு மனதுக்கும் உடலுக்கும் சரி என்பதாகப் படுகிறது. நீடுழி வாழ விரும்பினால் முன்னோர்களின் வழியைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வழியையும் வள்ளுவத்தையும் சித்தர்களையுமே பின் தொடர விரும்புகிறேன். அவர்கள் சொல்வதற்கேற்ப சிலவற்றை நாம் தொடர்ந்து சில விதிகளைச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. அதில் அசைவம் உண்ணாமையும் ஒன்று. உடல், உள்ளம் என இரண்டையும் சேர்த்துத்தான் சைவத்தின் பக்கமாக நிற்கிறேன். எனக்கு இந்தப் பக்கம் சரி என்று படுகிறது. அதே சமயம் அந்தப் பக்கமாக நிற்பவர்கள் தம்மைச் சரி என்று கருதினால் அதை மறுக்கவும் எதிர்க்கவும் இப்போதைக்கு என்னிடம் ஒன்றுமில்லை.

Dec 20, 2016

அசைவம்

சைவத்திற்கு மாறிவிட்டேன் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அது ஆயிற்று பல மாதங்கள். ஆரம்பத்தில் வெகு கடினம். நினைக்கும் போதெல்லாம் நாக்கு பரபரவென்றது. அதுவும் விருந்துக்குச் சென்றால் பக்கத்து இலையில் கோழி குதிக்கும். ஆடு ஆடும். மீன் துள்ளும். என்னடா இது நம் மனோவலிமைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடியே பருப்பையும் ரசத்தையும் கரைத்து உள்ளே தள்ளினால் இறங்குவேனா என்று மல்லுக்கு நிற்கும். கோழியைக் கடிப்பதாக நினைத்து வாழைக்காய் பஜ்ஜியை ஒரு கடி. ஆட்டை இசிப்பதாக நினைத்து முட்டைக்கோசு பொரியலை ஒரு கடி. சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். 

பிறந்ததிலிருந்தே அசைவம்தான். உடல் தேற வேண்டும் என்பதற்காக தினந்தோறும் இரவில் ஆட்டுக்கால் சூப்பு வைத்து அடுத்த நாள் காலையில் அம்மா கொடுத்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஞாயிறு தவறாமல் மிளகு அரைத்து வைத்த அசைவக் குழம்பு வீட்டில் மணக்கும். நாக்குப் பழகிக் கிடக்கிறது. வேலைக்குச் சேர்ந்து ஓரளவு காசு கையில் சேர்ந்த பிறகு வாரத்தின் இடைப்பட்ட நாட்களிலும் அசைவம்தான். ஒரு நாளாவது பிரியாணி தின்னக் கிளம்பிவிடுவேன். இத்தனை வருடங்களில் மருந்துக்காகக் கூட அசைவத்தைத் தவற விட்டதில்லை. முப்பது வருடங்களாகப் பழகிய நாக்கு இது. திடீரென்று தின்னக் கூடாது என்று சொன்னால் எப்படிக் கேட்கும்? திடீரென்றுதான் தோன்றியது. கனவு மாதிரி. விட்டுவிட்டேன்.

கடந்த ஒரு வருடமாக வள்ளலாரைப் பின்பற்றுகிறவர்கள், சித்த மருத்துவர்கள் என நிறையப் பேர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.  அத்தனை பேரும் அசைவத்தை எதிர்க்கிறார்கள். பலராமய்யா என்றொரு சித்த மருத்துவர். தொழில்முறையில் வழக்கறிஞர். பிறகு நீதிபதியானவர். இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் எழுதிய சித்த மருத்துவத் திரட்டு என்ற நூல் மிக முக்கியமான நூல். அதை வைத்து மருத்துவம் பழகுகிறோமோ இல்லையோ- வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம்.

இரவில் ஏழு மணிக்கு உணவை உண்டுவிட்டு ஒன்பது மணிக்கு உறங்கச் சொல்கிறார். பதினோரு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பாக எழுந்துவிட வேண்டும். இரவில் ஒரு செப்பு பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் அதிகாலையில் குடித்துவிட வேண்டும். காலைக்கடன்களை முடித்துவிட்டு ஓடவோ வேகமான பயிற்சிகளைச் செய்யவோ வேண்டியதில்லை- நான்கைந்து மைல்களுக்கு உலாவினால் போதும். ஒவ்வொரு வாய் சோற்றையும் பதினைந்திலிருந்து பதினேழு முறை மென்று அரைத்துக் கூழாக்கிவிட வேண்டும். உண்டு முடிக்கும் வரையில் இடையில் நீர் அருந்தக் கூடாது. அசைவம் தவிர்க்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி நிறைய.

வரிசைக்கிரமமாக எழுதினால் ஒரு அழகான கட்டுரையை எழுதிவிடலாம். பலராமய்யா சொல்லக் கூடிய ஒவ்வொரு விதியுமே பின்பற்றுவதற்கு எளியவைதான். ஆனால் சற்றே மெனக்கெட வேண்டும். நோயின்றி வாழ்தலைக் காட்டிலும் வேறு என்ன பேறு இந்த வாழ்க்கைக்குத் தேவைப்படப் போகிறது? மருத்துவமனைகளின் வாயில்களில் ஒரு நாள் நின்றுவிட்டு வந்தால் போதும். ‘சாகிற வரைக்கும் ஆஸ்பத்திரிப் பக்கம் வராம இருந்தா அதுவே பெரிய வரம்’ என்ற நினைப்பு வந்துவிடும். நோய் வந்த பிறகு மருத்துவம் பார்ப்பது வேறு; வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தில் நோயைத் தள்ளிப் போடுவது வேறு. இரண்டாவது சாலச் சிறப்பு. அப்படியான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்களுக்கான புத்தகங்களையும் உரையாடல்களையும் தேடிக் கொண்டிருந்த போதுதான் பலராமய்யா குறித்தான அறிமுகம் உண்டானது. அவரும் அசைவத்தை முற்றாக விலக்கச் சொல்கிறார்.

இப்படி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அசைவத்திற்கு எதிரான மனநிலை தெளிவாக உருவாகியிருக்கிறது. ஆதிமனிதனின் உணவே அசைவம்தான் என்று யாராவது சொல்லும் போது நம்ப முடிவதில்லை. அப்படியென்றால் குரங்கு அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? மனிதனும் கூட குரங்கைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். இடையில் அசைவம் பழகியிருக்கக் கூடும். இப்படியெல்லாம் உருட்டி புரட்டி ஒரு முடிவுக்கு வந்து இப்பொழுது மிகத் தீவிரமாக சைவத்தை ஆதரிக்கிற மனநிலை வடிவம் பெற்றிருக்கிறது. 

ஆரம்பத்தில் வீட்டிலேயே கூட யாரும் நம்பவில்லை. ‘இவனாவது கறி திங்காம இருக்கிறதாவது’ என்றார்கள். நானும் கூடத்தான் நம்பவில்லை. மனோரீதியாகப் பெரும் போராட்டம்தான். அசைவத்தை விட்டுவிட்ட பிறக் ஒன்றிரண்டு வாரங்கள் கழித்து வீட்டில் கொத்துக்கறி செய்து வைத்திருந்தார்கள். ‘அசைவத்தை விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு குழம்பு மட்டும் ஊற்றச் சொல்லிக் கேட்டால் கலாய்ப்பார்கள். அதனால் அவர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாக நகர்ந்து பிறகு அவசர அவசரமாக ஒரு கரண்டி ஊற்றித் தின்ன வேண்டியதாகிவிட்டது. நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை. அலுவலகத்திலும் சைவத்துக்கு மாறிவிட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். ஆனால் நாம் மாறிவிட்டோம் என்பதற்காக அவர்கள் தின்னாமல் இருப்பார்களா? அடுத்தவன் பிரியாணி தின்னும் போது அவன் வாயைப் பார்ப்பது போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை. 

பக்கத்து வீட்டில் குழம்பு கொதிப்பதும், ரோட்டோரக் கடையில் ரோஸ்ட் மணப்பதும் வெகு தீவிரமாக ஈர்த்தன. ஆரம்பத்திலிருந்தே சைவபட்சிகளாக இருப்பவர்கள் மிகச் சாதாரணமாகத் தாண்டிப் போய்விடுவார்கள். என்னைப் போன்றவர்களுக்கு வெகு சிரமம். பற்களைக் கடித்து மனதை வழிக்குக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் இப்பொழுது தெளிவாகியிருக்கிறது. அசைவத்தைத் தவிர்த்த பிறகு ஏதோ பெருங்குற்றத்திலிருந்து விடுபட்ட மனநிலை உண்டாகியிருக்கிறது. பெருமைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதுவொரு ஆசுவாசம். இனி எந்தக் காலத்திலும் ஓர் உயிரைக் கொல்லப் போவதில்லை என்று நினைக்கும் போது மனமும் ஒரு முகமாகியிருக்கிறது.

நாகர்ஜூனாவில் கோழி மார்பு ரோஸ்ட், சிக்கன் 65, இறால் பிரியாணியைப் பக்கத்து இலைக்காரன் தின்னும் போதும் கூட பருப்பு பொடியையும், கோங்குரா ஊறுகாயையும் கவனம் சிதறாமல் உண்ண முடிகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அசைவத்தை தவிர்க்கச் சொல்லி உபதேசம் செய்வதற்காக இதை எழுதவில்லை. வாழ்க்கை முறையில் நாம் நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தினசரி நடவடிக்கைகள், உணவுப்பழக்கவழக்கங்கள் என ஏகப்பட்டவை. புனைவுகளையும் அன்றாட நடப்புகளையும் மட்டுமே வாசித்தும் பேசியும் கொண்டிராமல் நம்மளவில் மாற வேண்டியவனவற்றைப் பற்றி யோசிக்கும் போதும் தெரிந்து கொள்ளும் போதும் எவ்வளவோ இருப்பதாகத் தோன்றுகிறது. 

சொல்ல வேண்டுமெனத் தோன்றியது!

Dec 19, 2016

மாணவர்களுக்கு...

என்னய்யா உங்க திட்டம் என்ற கட்டுரையை வாசித்தவர்களில் சிலர் பவர் பாய்ண்ட் தேவை என்று கேட்டிருந்தார்கள். வைரஸ் தாக்கியிருந்த பென் டிரைவிலிருந்து தகவல்களை எடுக்க சிவக்குமரன் ஒரு உபாயத்தைச் சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி. மீட்டாகிவிட்டது.

பவர் பாய்ண்ட்டும் அதற்குரிய விளக்கமும் கீழே-                                        


எதற்காக இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? நோக்கம் என்ன, பயிற்சியாளரின் தகுதிகள் என்பதைச் சொல்வதற்காக..


நமக்கான இலக்கு என்ன, அதை அடைவதற்கான திட்டம், அதற்கான நேர மேலாண்மை மற்றும் படிப்பதற்கும் தேர்வை எழுதுவதற்குமான நுணுக்கங்களைச் சொல்லித் தருவதுதான் இந்தப் பயிற்சி வகுப்பின் நோக்கம்...


ஒவ்வொருவருக்கும் நீண்டகால இலக்கு (Long term goal) இருக்க வேண்டும். அது என்ன என்பதை மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான பேச்சு இது. மாணவர்களிடம் ஒரு தாளைக் கொடுத்து அதில் எழுதச் சொன்னோம்.


குறுகிய கால இலக்கு (Short term goal) என்பது நம்முடைய நீண்டகால இலக்கை அடைய உதவுவதாக இருக்க வேண்டும். ப்ளஸ் டூ மாணவர்களின் இன்றைய குறுகிய கால இலக்கு என்பது மதிப்பெண்கள்தான். தங்களால் எவ்வளவு மதிப்பெண் வாங்க இயலும் என்பதையும் ஒரு தாளில் எழுத வேண்டும். இது அவர்கள் வாங்க விரும்பக் கூடிய மதிப்பெண்கள் இல்லை. எவ்வளவு தம்மால் வாங்க முடியும் என நம்புகிற மதிப்பெண்கள்.

தம்மால் வாங்க முடியும் என நம்புகிற  மதிப்பெண்கள் தம்முடைய நீண்டகால இலக்கை அடைவதற்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை மாணவர்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும். நிச்சயமாக போதுமானதாக இருக்காது. அப்படியென்றால் எவ்வளவு மதிப்பெண்கள் தேவை என்பதைக் கண்டறிந்து அதை அவர்கள் குறுகிய கால இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். 700 மதிப்பெண்கள் வாங்க முடியும் என நம்புகிற மாணவன் ஆயிரம் என்பதை தம்முடைய இலக்காக முடிவு செய்ய வேண்டும். ‘என்னுடைய இலக்கு ஆயிரம் மதிப்பெண்கள்’ என்று எழுதி அதே தாளில் பாடவாரியாக தம்முடைய இலக்கு மதிப்பெண்களை எழுதி தமது கண் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இலக்கை முடிவு செய்தாகிவிட்டது. அதை எப்படி அடைவது? வடிவேலு உதவுவார். ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’

மார்ச் இரண்டாம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. அந்தத் தேதியின் அடிப்படையில் இன்னமும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பாடத்துக்கும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட வேண்டும். இன்றைய தேதியிலிருந்து கணக்கிட்டால் ஒரு பாடத்துக்கு பனிரெண்டு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களைக் கழித்துவிட்டால் ஒவ்வொரு பாடத்துக்கும் பத்து நாட்கள் கிடைக்கும்.

ஒரு சில பாடங்கள் எளியதாக இருக்கக் கூடும். அத்தகைய பாடங்களை ஒன்றிரண்டாகச் சேர்த்து ஒரே நாளில் படித்துவிட முடியும். சில பாடங்கள் கடினமானதாக இருக்கக் கூடும். அதை ஒன்றரை அல்லது இரண்டு நாட்களுக்கு பிரித்து வைத்து படிக்க வேண்டும். இதை மாணவர்களே ஆலோசித்து முடிவு செய்து பாடங்களை க்ரூப் செய்ய வேண்டும். உதாரணமாக பொருளாதாரத்தில் பனிரெண்டு பாடங்கள் இருக்கிறதெனில் நம்மிடம் கைவசம் உள்ள பத்து நாட்களில் எப்படி படிக்கலாம் என்கிற திட்டமிடல் இது. 

தெளிவாகச் சொன்னால் மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இனி 72 நாட்களுக்கும் ஒரு ஷெட்யூல் தயாரிக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமான பாடங்களைத் தொடங்க வேண்டும். நான்கைந்து நாட்களில் இந்த ஷெட்யூலின் படி படிக்க ஆரம்பித்துவிட்டால் மாணவர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். பிறகு வேகமெடுக்கும். நாட்கள் ஆக ஆக படிக்கும் வேகம் கூடிவிடும். அநேகமாக ஐம்பது அல்லது அறுபது நாட்களில் முழுமையாக படித்துவிட முடியும். மீதமிருக்கும் நாட்களை திரும்பவும் படிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திட்டமிடுவதைக் காட்டிலும் நேர மேலாண்மை என்பது மிக முக்கியம். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பள்ளியில் கரைந்துவிடும். ஆக, பத்து மணி நேரம். மீதமிருக்கும் பதினான்கு மணி நேரத்தில் தூக்கத்திற்கு ஆறு மணி நேரம், பிற வேலைகளுக்கு ஒரு மணி நேரம் என்று ஒதுக்கிவிட்டு குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் படிக்க ஒதுக்க வேண்டும். சிரமம்தான். ஆனால் இன்னமும் எழுபது நாட்களுக்குத்தான் இதைச் செய்யப் போகிறோம் என்று வலியுறுத்த வேண்டும்.  டிவி, மொபைல் போன்றவற்றிற்காக பத்து நிமிடங்கள் ஒதுக்கலாம் முற்றாகத் தவிர்த்துவிட்டால் இன்னமும் நல்லது.சபதமிட்டு வாசித்தல், திரும்பத் திரும்ப வாசித்தல். ஒரு தாளில் முக்கியமான வார்த்தைகளை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு அதை அவ்வப்போது எடுத்துப் பார்த்தல், படித்தவற்றை எழுதிப்பார்த்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். ஒரு மணி நேரம் படித்துவிட்டு ஐந்து நிமிடங்கள் காலார நடந்து வரலாம். அந்தச் சமயத்தில் மனதுக்குள் படித்தவற்றை ஓட்டிப்பார்க்க வேண்டும். பழைய கேள்வித்தாள்களை எடுத்து அவற்றுக்கு பதில் எழுதிப் பார்ப்பதை முழுமையாகப் படித்து முடித்த பிறகு செய்யலாம்.


தேர்வு எழுதுவதற்கான சில எண்ணப் பகிர்தல்கள் இவை. தேர்வுக்கு முன்பாக இது குறித்து விரிவாக மாணவர்களிடம் பேசுகிற திட்டமிருக்கிறது. அடிக்கோடிடுங்கள், வினா எண்ணைச் சரியாக எழுதுங்கள், எளிமையான கேள்விகளை முதலில் எழுதுங்கள் (படிக்கும் போது கடினமான பகுதிகளை முதலில் படிக்க வேண்டும்) என்பதையெல்லாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.


நம்பிக்கையூட்டும் சில சொற்கள். எல்லோருக்கும் ஒரே அளவு மூளைதான். எல்லோருக்கும் ஒரே அளவு நேரம்தான். ஒருவன் வெல்கிறான் என்பதற்கும் இன்னொருவன் தோற்கிறான் என்பதற்குமான வித்தியாசம் வெறும் உழைப்புதான். எழுபது நாட்கள் கைவசமிருக்கிறது. உழைப்பு மட்டுமே உங்களை உயர்த்து.

கடைசி இருபது நிமிடங்கள் கலந்துரையாடல்.

குறிப்பு: இவை யாவும் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள், மாணவர்களுடனான உரையாடல், வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தயாரித்த உள்ளடக்கம். என்னைக் காட்டிலும் அனுபவமும் ஆற்றலும் உடையவர்கள் இதைக் காட்டிலும் சிறப்பாகத் தயாரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருவேளை இந்த உள்ளடக்கம் பயன்படும் என்று கருதுகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். இன்னமும் மெருகூட்ட முடியும் என்றாலும் மகிழ்ச்சி. 

என்னய்யா உங்க திட்டம்?

கடந்த வாரத்தின் இறுதியில் வெளியூர்களில் வேலை எதுவுமில்லை. அப்பாவும் அம்மாவும் ஊரில் இருக்கிறார்கள். பார்த்து வருவதற்காகச் சென்றிருந்தோம். இரண்டு நாட்களை வேலை எதுவுமில்லாமல் கழிப்பது சாதாரணக் காரியமில்லை. 

தலைமையாசிரியர் அரசு தாமஸிடம் பேசிய போது ‘ஒரு பயிற்சி வகுப்புக்குத் தயாராகுங்க...நமது பள்ளியிலேயே நடத்தலாம்..மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார். ஞாயிற்றுக்கிழமை பயிலரங்கு. எதையெல்லாம் சொல்லித் தர வேண்டும், எப்படிச் சொல்லித் தருவது என்று யோசித்து, விவரங்களைச் சேகரித்து சனிக்கிழமையைத் தீர்த்திருந்தேன். மூன்று காலனிகளிலிருந்து இருபது மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் கூட சயின்ஸ் க்ரூப் மாணவர் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களைத்தான் காலனி மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறார்கள். 


தாமஸ் அவர்களின் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைதான் மாணவர்கள் படிக்கிறார்கள். ப்ளஸ் டூ மாணவர்கள் பற்றியெல்லாம் அவர் கவலையே பட வேண்டியதில்லை. ஆனால் களப்பணியாளர். சனிக்கிழமையன்றே காலனிக்குத் தகவல் சொல்லி மாணவர்களைத் திரட்டி வந்து, பள்ளியைத் திறந்து வைத்துக் காத்திருந்தார். தேனீரிலிருந்து அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்து பயிற்சி வகுப்பு முழுமைக்கும் கூடவே இருந்தார். அவர் மாதிரியான ஆசிரியர்களும் களப்பணியாளர்களும் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்தால் போதும். கனவேலையைச் செய்யலாம்.

காலனியிலிருந்து ஒரு சுமைதூக்கும் வண்டியைப் பிடித்து மாணவர்கள் வந்திருந்தார்கள். ‘நாற்காலி வேண்டாங்கண்ணா..கீழேயே உட்கார்ந்துக்கலாம்’ என்றார்கள். நல்லதாகப் போய்விட்டது. அப்பொழுதுதான் இயல்பாக இருக்கும்.

வகுப்பு ஆரம்பித்தவுடன் தமது நீண்டகால இலக்கு என்ன என்பதை தாள் ஒன்றில் எழுதச் சொன்னேன். ‘ஐபிஎஸ் அதிகாரி ஆவது’ ‘ஆசிரியர் ஆவது’ என்று எழுதினார்கள். அடுத்தகட்டமாக குறுகியகால இலக்கு என்னவென்பதை எழுத வேண்டும். இப்போதைக்கு அவர்கள் முன்பாக இருக்கக் கூடிய குறுகியகால இலக்கு என்பது ப்ளஸ் டூ தேர்வுதான். இன்னமும் இரண்டரை மாதங்களில் தேர்வு தொடங்குகிறது. அதைச் சுட்டிக் காட்டி பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண்களைத் தம்மால் பெற முடியும் என்று எழுதச் சொன்னேன். 550, 600, 610 மதிப்பெண்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள். அவ்வளவுதான் அவர்களது நம்பிக்கை. Longterm and Shortterm goal ஆகியவற்றை எழுதிய பிறகு, இந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு தமது நீண்டகால இலக்கை அடைய முடியுமா என்று சுய கேள்வி கேட்க வேண்டும். அத்தனை பேரும் புரிந்து கொண்டார்கள். இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. நீண்டகால இலக்குக்கும் குறுகிய கால இலக்குக்கும் இடைவெளி பெரிதாகப் பெரிதாக நீண்டகால இலக்கு என்பது வெறும் ஆசையாக மட்டுமே தேங்கிவிடும். அதை அடையவே முடியாது.

இதை உணர்த்துவதுதான் நோக்கம். அப்படியென்றால் 550 மதிப்பெண்கள் என்ற நிலையிலிருந்து 1000 மதிப்பெண்கள் என்ற நிலைக்கு மாற வேண்டும். கூடுதலாகப் பெற வேண்டிய 450 மதிப்பெண்கள்தான் அவர்களுடைய குறுகிய கால இலக்காக இருக்க வேண்டும். இதை அடைந்துவிட்டால் அவர்களது நீண்டகால இலக்கை அடைந்துவிட முடியும் என்பதைப் புரிய வைப்பதற்காக முதல் அரை மணி நேரம் தேவைப்பட்டது.

மாணவர்களில் சிலர் பொறியியல் படிக்கப் போவதாக எழுதிக் கொடுத்தார்கள். கலைப்படிப்பு படிக்கிற ப்ளஸ் டூ மாணவனால் பொறியியல் படிப்பில் சேர முடியாது என்கிற புரிதல் கூட இல்லாமல் அரையாண்டுத் தேர்வு வரைக்கும் வந்துவிட்டார்கள் என்பதுதான் கிராமப்புற பள்ளி மாணவர்களின் அவலம். கல்வித்துறை வெறும் புள்ளி விவரங்களைக் கோரிக் கோரியே ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ‘தேர்ச்சி’ மட்டும்தான். நூறு சதவீதத் தேர்ச்சி என்பதை மட்டும்தான் கருத்தில் வைத்திருக்கிறார்களே தனிப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள், கல்வி அறிவு, சமூக அறிவு, எதிர்காலம் குறித்தான விவரங்கள் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை.

ஒரு பள்ளியில் கணக்குப்பதிவியலில் ‘ஏழு பாடங்களை மட்டும் படிங்க..பாஸ் பண்ணிடலாம்’ என்று சொல்லிவிட்டு மீதமிருக்கும் மூன்று பாடங்களை டீலில் விட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தப் பாடங்களையும் இதுவரை மூன்று நான்கு முறை படித்துத் தேர்வு எழுதிவிட்டார்கள். அரசுப் பள்ளி மாணவன் இன்னமும் மூன்று பாடங்களைத் தொடாமலேயே வைத்திருக்கிறான். அப்புறம் எப்படி தனியார் பள்ளிகளோடு போட்டியிட முடியும்? அரசும் கல்வித்துறையும்தான் யோசிக்க வேண்டும்.

களத்தில் இறங்கும் போதுதான் அவலட்சணம் தெரிகிறது. நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இலக்கை நிர்ணயித்த பிறகு திட்டமிடல்-

மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இன்றிலிருந்து பிப்ரவரி கடைசி வரைக்கும் 72 நாட்கள் இருக்கின்றன. ஒரு தேர்வுக்கு சராசரியாக 12 நாட்கள். ஏதாவது காரணங்களால் இரண்டு நாட்களைக் கழித்துவிட்டாலும் கூட ஒரு தேர்வுக்கு பத்து நாட்கள் என்ற கணக்கில் கைவசம் இருக்கிறது. இருக்கிற பாடங்களைப் பத்தாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவைப் படிக்க வேண்டும். படித்து முடிக்க முடிக்க டிக் அடித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் படிக்க முடியாமல் விடும் போது அடுத்த நாளின் நேரத்தில் கடன் வாங்கி முந்தைய நாளில் விட்ட பாடத்தைப் படிக்க வேண்டும். இந்தத் திட்டமிடலுக்காக ஒரு முக்கால் மணி நேரம் பிடித்தது. ஒவ்வொரு மாணவனும் அவரவராகவே திட்டமிட்டனர்.

அதன் பிறகு எப்படிப் படிப்பது என்று ஒரு மணி நேரம் என்று பேச வேண்டியிருந்தது. 

ஒரு நாளைக்கு படிப்பதற்கென ஏழு மணி நேரங்களை ஒதுக்குவது, சரியாக உறங்குவது, சரியான உணவு, படிக்கும் போது ஒரு துண்டுச்சீட்டில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது, செல்போன், டிவியைத் தவிர்ப்பது, படிக்கும் போது எடுத்து வைத்தக் குறிப்பை அவ்வப்பொழுது திரும்ப வாசிப்பது, ஒவ்வொரு முறையும் வாசித்து முடித்த பிறகு எழுதிப் பார்ப்பது, பழைய வினாத்தாள்களை எடுத்து விடை எழுதிப் பார்ப்பது என்று படிப்பதற்கு நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இவையெல்லாம் ஒவ்வொரு மாணவனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான நுணுக்கங்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட அத்தனை பள்ளிகளிலும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்றைக்கு பல பள்ளிகளில் இதையெல்லாம் சொல்லித் தருவதேயில்லை போலிருக்கிறது.

திட்டமிடல், நேர மேலாண்மை, எப்படி படிப்பது என்பதற்குப் பிறகு தேர்வு எழுதும் கலை. அதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. 

ஒவ்வொரு விடையை எழுதி முடித்த பிறகு அடிக்கோடிடுங்கள் என்று சொன்னதைக் கூட ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தேர்வுக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாக இதற்கென தனியாக ஒரு வகுப்பு நடத்துவதாகச் சொல்லியிருக்கிறோம். இப்போதைக்கு முழுமையாகவும் தெளிவாகவும் படித்து முடிக்கட்டும். இன்னமும் நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது. தேர்வு முடியும் வரைக்கும் தொடர்ந்து தொடர்பில் இருக்கச் சொல்லியிருக்கிறேன். அடுத்த வருடத்திலிருந்து இன்னமும் வேகமாக, இன்னமும் பரவலாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் சமூகத்தின் மிக முக்கியமான இருண்ட பக்கமாக என் சிற்றறிவுக்குப் படுகிறது.

அரசு தாமஸ் இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, வணக்கம்.

தாங்கள் ஆற்றி வரும் கல்வி, மருத்துவம் தொடர்பான தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை நன்கு அறிந்தவன் நான். 
இவைகளைத் தாண்டி, கழைக் கூத்தாடி மக்கள் வாழும் கரட்டுப்பாளையம், எம்ஜிஆர் காலனி மக்களுக்காக விருப்பத்துடன் தொடர்ந்து செய்து வரும் பணிகளையும் அறிவேன்.

நேற்றைய நாளில் (17.12.16ஞாயிறு) அந்தக் காலனியைச் சார்ந்த மேனிலைக் கல்வி (+2) பயிலும் 17 மாணவியருக்கு தாங்கள் நடத்திய " பயிலரங்கு" மிகப் பெரிய அளவில் பயனளிக்கும் நிகழ்வாகும்.

தேர்வு எழுத இன்னும் 72 நாட்களே உள்ளதென்பதைக் கூட உணர்ந்திராத......

கலைப் படிப்பு படிக்கின்ற மாணவன் நான், +2 க்குப் பின் பொறியியல் படிப்பேன் என்று சொல்லுகிற......

மிகச் சாதாரண நிலையில் இருந்த அவர்களுக்கு,
👆 இலக்கு என்ன? (குறுகிய | நீண்ட கால )
👆 எப்படித் திட்டமிடுவது?
👆 எப்படித் தயாரிப்பது?
👆 நேர நிர்வாகம்?
👆 படிப்பதற்கான நுணுக்கங்கள் (எப்படி? எப்போது?)
👆 தேர்வுத் தாளில் எப்படி எழுதுவது? 
👆 வெற்றி நிச்சயம் 

என்ற அளவில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகமூட்டிய தங்களின் பணியை வெறும் அறிவார்ந்த பணி என்றல்ல, அக்கறையுள்ள பணி என்றே சொல்ல வேண்டும்.

அண்ணா! அண்ணா! என்று உங்களைச் சுற்றிச் சுற்றி வந்த அவர்கள், தங்களிடம் உறுதியளித்தபடி, ஆயிரம் ஆயிரம் பெறுகின்றார்களோ இல்லையோ, குறிப்பிட்ட அளவு விழுக்காடு வளர்ச்சியை உறுதியாக எட்டுவார்கள் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை!

வெற்றி நிச்சயம், மணி!

தொடரட்டும் ஏழை மாணவர்களுக்கான தங்களின் பணி!

இனி அடுத்த 72 நாட்களில் மாணவர்கள் படிப்பதற்கானத் திட்டம், அதை அவர்கள் செயல்படுத்தும் பாங்கு ஆகியவற்றைத் தான் கண்காணிப்பதாக அய்யா சொல்லியிருக்கிறார். அவருக்கு மனப்பூர்வமான நன்றி. 

பவர் பாய்ண்ட்டை மொத்தமாக இங்கே பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் சேமித்து வைத்திருந்த பென் ட்ரைவில் வைரஸ். சாம்பிள் காட்டுவதற்காக என்னையும் சேர்த்து எடுக்கப்பட்ட நிழற்படத்தை பிரசுரிக்க வேண்டியதாகியிருக்கிறது. பொறுத்தருள்க!

Dec 16, 2016

சிறுகதைப் பட்டறை

‘எனக்கு கதை சொல்லத் தெரியாது’ என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால் ‘என்னிடம் கதை இல்லை’ என்று சொல்கிற ஒரு மனிதனைக் கூட கண்டுபிடிக்க முடியாது. நம் ஒவ்வொருவரிடமும் நூறு நல்ல கதைகளாகவது உண்டு. நூறு அதிகமெல்லாம் இல்லை. நிச்சயமாக நூறு தேறும். இந்த மனம் இருக்கிறதே? ஒரு பாழுங்கிணறு. பாதாளக் கரண்டி கொண்டு கிளறினால் அள்ளி எடுத்து வெளியில் கொட்ட முடியும். அப்படிக் கிளறி சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் புதைந்தே கிடக்கும்படியாக விட்டுவிடுகிறார்கள். 

அவ்வளவுதான் வித்தியாசம்.

எழுதுகிற விருப்பம் எல்லோருக்குமே ஏதாவதொரு தருணத்தில் வந்து போயிருக்கும். ‘ஒரு காலத்தில் நானும்தான் கவிதை எழுதினேன்’ என்றோ ‘என்னுடைய சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன’ என்றோ சொல்கிற மனிதர்களை எங்கேயாவது சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். ‘அப்புறம் ஏன் எழுதல?’ என்று கேட்டால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் நம்மை சமரசப்படுத்தாத காரணமாக இருக்கும்.

அலசிப் பார்த்தால் தான் விரும்புகிற எழுத்துவடிவம் வசமாகததுதான் முக்கியமான காரணமாக இருக்கும். எழுதும் போது எழுத்தின் சரியான வடிவத்தைப் பிடித்துவிட வேண்டும். கொஞ்ச நாட்கள் பிடிக்கக் கூடும். ஆனால் எழுத்து மீது சலிப்பு வருவதற்குள் எட்டிப் பிடித்துவிட வேண்டும். அதுதான் மிக முக்கியம். அப்படி ஒரு வடிவத்தைப் பிடித்துவிட்டால் அதுவே தனது கொக்கியில் நம்மை மாட்டிக் கொள்ளும். எழுத்து மீது நமக்கு ஈர்ப்பும் காதலும் வந்துவிடும். பிறகு நாமாக விரும்பினாலும் அது நம்மை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது. இதுதான் சூட்சமம்.

பதின்ம வயதிலும் இருபதிலும் முப்பதுகளிலும் எழுதுகிற எத்தனிப்பு ஒவ்வொருவருக்குமே எட்டிப் பார்க்கும். அப்பொழுது சரியான வாய்ப்புகளும், நம் எழுத்தை சற்றே மடை மாற்றிவிடுகிற ஆசானும் கிடைத்துவிட்டால் நமக்கான எழுத்து வடிவத்தை எட்டிப் பிடித்துவிடலாம்.

எழுத்து என்பதே பயிற்சிதானே?

தவம், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்றெல்லாம் யாரேனும் அளந்துவிட்டால் நம்ப வேண்டியதில்லை. எழுதுவதற்கான தொடக்கம் கிடைத்துத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் எழுத்து வசமாகிவிடும். எழுதிக் கொண்டேயிருக்க மெல்ல மெல்ல நமக்கென்று எழுத்தின் தனித்த வடிவம் உருப்பெறும். ஒரு கட்டத்தில் நம்முடைய comfort zone ஐ அடைந்துவிடுவோம். அதன் பிறகு வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிப்பதும், அவர்களின் எழுத்துக்களின் வெவ்வேறு கூறுகளை அலசுவதும், நம்முடைய எழுத்தைச் செதுக்குவதும், புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்வது நம்முடைய உழைப்பு மற்றும் எழுத்துக்கான அர்ப்பணிப்பு சார்ந்த விஷயங்கள்.

ஆக, எழுதுவதற்கான எத்தனிப்பு இருக்கிற இளைஞர்களைச் சற்றே கிள்ளிவிட்டால் போதும். துளிர்த்துவிடுவார்கள். கிள்ளிவிடுகிறவர்கள் பெருந்தலைகளாக இருந்தால் மோதிரக் குட்டுதான்.

லாவண்யா சுந்தரராஜன் ஒரு அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அவரது அமைப்பான உயிரோடையும் காலச்சுவடும் சேர்ந்து சிறுகதை எழுத்துப் பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முப்பது வயதுக்குள்ளானவர்கள் யாரேனும் சிறுகதை எழுதுகிறவர்களாக இருந்தால் ஒரு நல்ல வாய்ப்பு. திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் பட்டறையை நடத்துகிறார்கள். மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகள். சிறுகதையின் அறிமுகம், அதன் வரலாறு, பங்கேற்பாளர்களின் கதைகளைப் பற்றிய கலந்துரையாடல், பொதுவான உரையாடல் என்று பிரித்து மேய்கிறார்கள். பிரித்து மேய்கிறார்கள் என்று சொன்னதற்கு அர்த்தமிருக்கிறது. பெருமாள் முருகன், சுகுமாரன், பாவண்ணன், க.மோகனரங்கன் ஆகிய பெருந்தலைகள்தான் பயிற்சியாளர்கள். 

கே.என்.செந்தில், மதிவாணன், குமாரநந்தன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை ஆட்களும் பங்கேற்கிறார்கள்.

இத்தகைய பயிலரங்குகள் ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த திறப்புகளை உண்டாக்கவல்லவை. திறந்த மனதோடு காதுகளைத் திறந்து வைத்தபடி அமர்ந்து வந்தாலே ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். சுகுமாரன், பெருமாள் முருகன், பாவண்ணன் மற்றும் மோகனரங்கன் ஆகிய நான்கு பேருமே இத்தகைய நிகழ்ச்சிகளுக்காக தங்களை வருத்திக் கொண்டு தயார் செய்து வருகிறவர்கள். நான்கு பேருமே எனக்கு ஒருவிதத்தில் ஆசிரியர்கள் என்பதால் மிகப்பெரிய மரியாதை உண்டு. 

முப்பது வயதுக்குள் இருந்தால் மட்டும்தான் அனுமதிப்பார்களாம். லாவண்யாவிடம் சிறப்பு அனுமதி கோரவிருக்கிறேன். ‘முடிதான் கொட்டியிருக்கு; ஆனா இருப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது’ என்று சொல்லிப் பார்க்கிறேன். கலந்து கொள்ள அனுமதித்தால் நல்லது. இல்லையென்றால் ஏதாவது சான்றிதழை திருத்தி உள்ளே நுழைந்துவிடலாம் என்பதுதான் இறுதித் திட்டம். 

பிப்ரவரி 10, 11, 12 அல்லது 18, 19, 20 ஆகிய நாட்களில் நிகழ்வு நடக்கிறது.

வழக்கமாக இத்தகைய பட்டறைகளில் நுழைவுக் கட்டணம் கேட்பார்கள். இவர்கள் அதுவும் கேட்பதில்லை. உணவும், தங்குமிடமும் கூட அவர்களே கொடுத்துவிடுகிறார்கள். பெரிய மனம். வெற்றிகரமாக முடிக்கிற ஐந்து பேருக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை வாழ்நாள் முழுமைக்கும் வழங்குகிறார்களாம். பெரிய பெரிய மனம்.

முப்பது வயதுக்குள்ளாக இருப்பின் ஒரு சிறுகதையைச் சொந்தமாக எழுதி shortstories.workshop2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்து அழைத்தால் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம். ப்ளாக் டிக்கெட் ஏதாவது உஷார் செய்ய முடியுமென்றால் முயற்சிப்போம்.

இத்தகைய பயிலரங்குகளுக்கான இடம், பணம், ஆட்களைத் திரட்டுவது என்பதெல்லாம் பெரிய வேலை. எழுத்துக்காகவும் இலக்கியத்திற்காகவும் இத்தகைய பணியைச் செய்கிறவர்களை தலை வணங்கிப் பாராட்டலாம். 

நிகழ்வு வெற்றிகரமாக அமையவும், நிறையப் பேர் பயன்படவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ஆர்கானிக்குக்கு மாறிட்டீங்களா?

வீட்டில் பதஞ்சலி பொருட்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பற்பசையிலிருந்து சோப்பு, ஷாம்பூ வரைக்கும் அதுதான். கேட்டால் ‘கெமிக்கல் பொருட்களை வாங்கக் கூடாது...குழந்தைகளுக்காகவாவது நாம மாறணும்’ என்கிறார்கள்.

அது சரி. முட்டையைக் கூட ப்ளாஸ்டிக்கில் தயாரித்து விற்கிறார்கள். அரிசி ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இப்படி உடல் முழுவதும் ப்ளாஸ்டிக்காலும் வேதிப்பொருட்களாலும் நிரம்பினால் இல்லாத நோயெல்லாம் வரத்தான் செய்யும்.  இந்த பயம்தான் மூலதனம்.

பெங்களூரு மாதிரியான பெருநகரங்களில் வீதிக்கு வீதி தாடிக்கார சாமியார் சிரித்துக் கொண்டிருக்கிறார். பதஞ்சலி நிறுவனத்தின் மார்கெட் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் சோப்பு சீப்பு விற்கிற நிறுவனங்களுக்கு புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி உலகம் முழுவதும் கடை விரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார் ராம்தேவ். ஐந்து வருடங்களில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் என்பது வியாபார இலக்கு. இலக்கை அடைந்துவிடுவார்கள்.

அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் ஆதரவு அவருக்கு முழுமையாக இருக்கிறது. நாக்பூரில் மட்டும் இருநூற்று முப்பது ஏக்கர் நிலத்தை பதஞ்சலி நிறுவனத்துக்கு சலுகை விலையில் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ஏக்கர் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு விற்கிற பகுதியில் ஏக்கர் வெறும் இருபத்தைந்து லட்சத்துக்கு வழங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் பிரச்சினையை எழுப்பியிருக்கின்றன. அப்படித்தான் வழங்குவார்கள். மேல்மட்டத்தின் பூரணமான ஆசியைப் பெற்றவராக ராம்தேவ் உருவெடுத்திருக்கிறார். இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் என்றவொரு பட்டியலை உருவாக்கினால் எப்படியும் முதல் பத்து இடத்திற்குள் அவர் இருக்கக் கூடும். நேரடியாகப் பிரதமரைச் சந்திக்கிறார். முதல்வர்களைப் பார்த்துப் பேசுகிறார். அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து தவறான விளம்பரங்களைச் செய்து வருவதாக சர்ச்சை ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. நேற்று கூட நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்துக்கு பதினோரு லட்ச ரூபாயை அபராதமாகத் தீட்டியிருக்கிறது. பதஞ்சலியின் உப்பு, தேன், ஜாம் என்று பல பொருட்கள் ஆய்வக தரச் சோதனையில் தோல்வியடைந்திருக்கின்றன. எங்கள் வீட்டில் பதஞ்சலி தேன் இருக்கிறது. பதஞ்சலி ஜாம் இருக்கிறது. உப்பு மட்டும் இல்லை. பதஞ்சலியில் உப்பும் விற்கிறார்கள் என்று தெரிந்தால் வாங்கிவிடுவார்கள்.

கடந்த ஒரு வருடமாகவே தமது போட்டியாளர்களைத் தாக்குகிற விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் செய்வதாக சர்ச்சைகள் உருவாகி வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து கடைசியில் அபராதத்தில் முடிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட கிழக்கிந்திய நிறுவனங்கள் என்றும் உங்களைச் சுரண்டுகிற உரிமையை உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்குங்கள் என்று விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சுதேசி இயக்கம் என்பதன் தீவிரமான ஆதரவாளன் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் பெருமைதான். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லி நம்மை வணிக ரீதியாகச் சுரண்டுகிறார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஹிமாலயா, டாபர், பதஞ்சலி போன்ற கார்போரேட் நிறுவனங்கள் ஒரு பக்கம் என்றால் தமிழகத்தில் பெயர் தெரியாத வியாபாரிகள் கூட ஹெர்பல், ஆர்கானிக் ஆகிய சொற்களை வைத்துக் கொண்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கிறார்கள். 

பாரம்பரியத்தை மீட்டெடுப்பது நல்லதுதான். ஆனால் அது சிலருக்கு வியாபார உத்தியாக மாறுவதுதான் அவலம்.

ஒவ்வொரு காலத்திலும் நம் ஊரில்  சில சொற்களுக்கு மதிப்பு உண்டாகும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தி வியாபாரத்தை நடத்துகிறவர்கள் கொடி கட்டிவிடுவார்கள். இன்றைக்கு ஆர்கானிக், ஹெர்பல் உள்ளிட்ட சொற்களுக்கு பெருமதிப்பு உண்டாகியிருக்கிறது. இந்தச் சொற்களை பொட்டலத்தில் அச்சடித்து விற்றால் எந்தப் பொருளாக இருந்தாலும் மக்கள் வாங்குகிறார்கள். அதை வைத்துக் கொண்டுதான் பதஞ்சலியைப் போலவே பல நிறுவனங்களும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்கானிக் பொருளாக விலை கூட்டி விற்கப்படுகிற பொருட்களில் எத்தனை பொருட்கள் வேதிப்பொருள் கலக்கப்படாதவை என்று யாருக்கும் தெரியாது. சாதாரண அரிசி நாற்பது ரூபாய் என்றால் ஆர்கானிக் அரிசி கிலோ நூறு ரூபாய். உண்மையிலேயே இயற்கை வழி விவசாயத்தால்தான் விளைவிக்கப்பட்டதா என்பதைப் பற்றிக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விலை கொடுத்து வாங்குகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நாட்டுச் சர்க்கரை, செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், ஆர்கானிக் சிறுதானியங்கள் என்று சந்தையில் பொருட்கள் குவிக்கப்படுகின்றன. 

‘நாங்க சுத்தமா ஆர்கானிக்குக்கு மாறிட்டோம்’ என்று சொல்வது பெருமையான சொற்றொடராக மாறியிருக்கிறது. ஆனால் ‘சுத்தமான ஆர்கானிக்கா?’என்பதுதான் கேள்வியே.

பழச்சாறு, மூலிகைச் சாறு என்று பல பொருட்களில் நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைப்பதற்காக வேதிப்பொருட்களைச் சேர்க்கத்தான் செய்கிறார்கள். நாட்டுச் சர்க்கரையில் செய்யப்பட்ட பொருட்கள் என்று சொல்லி சுவையூட்டுவதற்காக சில வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். ஆனால் விற்பனைக்கு வைக்கும் போது ‘ஆர்கானிக், ஹெர்பல்’ என்ற சொல்லை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். விற்பனை தூள் கிளப்புகிறது. இதுவொரு மிகப்பெரிய வணிக தந்திரம். ‘உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா?’ என்பதற்கும் இத்தகைய லேபிள் விற்பனைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை.

இன்றைக்கும் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிக்கு கிட்டத்தட்ட அதே விலைதான் கிடைக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்கங்களில் விசாரித்துப் பார்க்கலாம். தோட்டத்தில் ஆலை போட்டு கரும்பை ஆட்டி சர்க்கரை எடுத்துக் கொடுக்கும் விவசாயி கிட்டத்தட்ட அதே வருமானத்தைத்தான் எடுக்கிறான். ஆனால் இடைத்தரகர்கள் அவற்றை வாங்கி பொட்டலம் கட்டி அதன் மீது ஆர்கானிக், ஹெர்பல் என்கிற லேபிள் ஒட்டி பன்மடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். வியாபாரிகள் எப்பொழுதும் வியாபாரிகளாகவேதான் இருக்கிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அதன் வழியாக இலாபம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. சற்றே நுணுக்கமாக கவனித்தால் விழிப்புணர்வை உண்டாக்குவதன் பெயரில் வியாபாரம் செய்கிறவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் அதிகமாக இருக்கிறார்கள். 

ஆர்கானிக், மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும் நாம் இழந்து போன பழைய உணவு முறையை மீட்டெடுப்பதையும் தவறு என்று சொல்லவில்லை.

மெல்ல மெல்ல வேதிப்பொருட்களிடமிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் ஆர்கானிக், ஹெர்பல் என்ற சொற்களை நம்பி விலை அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை. ‘இனி நமக்கு எந்த நோயும் வராது’ என்று கண்மூடித்தனமான மூட நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. சாதாரணப் பொருட்களில் எப்படி கலப்படங்கள் இருக்கின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஆர்கானிக் என்றும் ஹெர்பல் என்றும் விற்கப்படுகிற பொருட்களிலும் கலப்படங்கள் இருக்கின்றன. நிறுவனங்களின் வழியாக சந்தைக்கு வரக் கூடிய பெரும்பாலான பொருட்களுக்குக் குறைந்தபட்சம் தரக் கட்டுப்பாடு என்றாவது உண்டு. யாரேனும் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு நடத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆர்கானிக், ஹெர்பல் என விற்கப்படுகிற பெரும்பாலான பொருட்களுக்கு எதுவுமேயில்லை. அப்படியே விற்கப்படுகின்றன. நாமும் தயக்கமேயில்லாமல் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உள்ளூர் வியாபாரிகள் இப்படியென்றால் பெரு முதலாளிகளும் சளைத்தவர்கள் இல்லை. ‘ஹெர்பல் பொருள்’ என்று விளம்பரப்படுத்தி விற்கப்படுகிற பொருட்களைப் பற்றி நாம் சற்றேனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஹெர்பலைச் சேர்த்திருக்கிறார்களே தவிர அது முழுமையான மூலிகப் பொருள் கிடையாது. பதஞ்சலி, டாபர், ஹிமாலயா என்று எந்த நிறுவனத்தின் பொருளை எடுத்தாலும் அதன் உள்ளடக்கத்தை(ingredients)பார்த்தால் வேதிப் பொருள் ஏதாவதொன்றின் பெயர் இருக்கிறது. அப்படி இல்லாத பொருட்கள் ஏதேனும் இருப்பின் அத்தகைய பட்டியலை நாம் தயாரிக்கலாம்.

சரியான உணவுப் பழக்கம், பாரம்பரியத்தை நோக்கித் திரும்பும் வாழ்க்கை ஆகியவற்றின் மீதாக கவர்ச்சி ஊட்டப்பட்டு அதன் வழியாக சிலர் நம் சட்டைப்பையில் ஓட்டையிட்டு இலாபம் சம்பாதிக்க அனுமதிப்பதும் கூட ஒருவிதமான அடிமைத்தனம்தான். நமக்கான சுய அறிவைப் பயன்படுத்தி சற்றேனும் விழித்துக் கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. நம்மைச் சுற்றிக் குவிக்கப்படுகிறவற்றில் எவையெல்லாம் தரமானவை என்றும் எவையெல்லாம் கலப்படங்கள் என்றும் குறைந்தபட்சமான ஆய்வையாவது செய்ய வேண்டியிருக்கிறது.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்-

ஹெர்ப்ல பொருட்கள் என்று பெயரிட்டு இங்கே விற்கப்படுகிறவை முழுமையான ஹெர்பல் பொருட்கள் இல்லை. அதில் ஹெர்பலையும் சேர்த்திருக்கிறார்கள். அதனால் ஹெர்பல் என்று பெயரிடுகிறார்கள். இன்னமும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் சீயக்காயை வெறும் சீயக்காய் பொடியாக விற்பது வேறு; நுரைப்பதற்காக சில வேதிப் பொருட்களைச் சேர்த்து அதனுடன் சீயக்காயைச் சேர்ப்பது வேறு. இங்கே நம்மிடம் சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. அவ்வளவுதான். நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும்.

Dec 15, 2016

அண்டாமுத்து ட்யூஷன்

ஒன்பதாம் வகுப்பில் எனக்கு ஓர் அறிவியல் வாத்தியார் இருந்தார். பெயரைச் சொன்னால் இப்பொழுதும் கூட வந்து கும்மினாலும் கும்மிவிடுவார். ஆனால் பெயரே இல்லாமல் ஒரு கதையைச் சொல்ல முடியாதல்லவா? சும்மானாச்சுக்கும் ஆண்டமுத்து என்று வைத்துக் கொள்வோம். ஆண்டமுத்துவின் வயிறு அண்டாவைப் போல இருக்கும் என்பதால் அண்டாமுத்து என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும். அண்டா தனிப்பயிற்சி எடுப்பார். ‘வாத்தியார்கிட்ட படிச்சா மார்க் போட்டுருவாரு’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததனால் பையன்களும் திமுதிமுவென்று அவரிடம் சேர்ந்து திமிலோகப்படுத்துவார்கள். எனது ஜாதகப்படி ஒன்பது கோள்களும் ஒட்டுக்காக உச்சத்தில் நின்றதால் தனிப்பயிற்சியே வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். வீட்டிலும் தண்ணீர் தெளித்திருந்தார்கள்.

எட்டாம் வகுப்பு வரைக்கும் வேறு வாத்தியார்கள் பாடம் நடத்துவார்கள். ஒன்பது பத்தாம் வகுப்பிலிருந்து முதுநிலை வாத்தியார்கள். அத்தனை பேரும் அதுவரையிலும் அறிமுகமில்லாத வாத்தியார்கள்தான். பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிட்ட அண்ணன்கள் எல்லாம் ‘டேய் அண்டாமுத்து குமுறி உட்ருவாண்டா...பார்த்து நடந்துக்க’ என்று சொன்னதன் அர்த்தம் முதலில் புரியவில்லை. கொஞ்சம் பயமிருக்கும். ஆனால் அப்படியொன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அண்டாமுத்து தன்னிடம் தனிப்பயிற்சி படிக்காத மாணவர்களிடமெல்லாம் ஒரு அதீத பாசத்தைக் காட்டுவார். குதர்க்கமான பாசம் அது. அவர்களிடம் பேசும் போது சிரித்தபடியே முகத்தை வைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொள்வார். அவர் சிரிக்கிறாரா பற்களை வெருவுகிறாரா என்று தெரியாது. நல்ல வாத்தியார் என்ற நம்பிக்கையில் கொஞ்ச நாட்கள் அஜால் குஜாலாகப் பேசித் திரிந்தேன். எல்லாவற்றுக்கும் அதே சிரிப்பு.

அந்தக் காலத்தில் ஜென் நிலை என்பதற்கெல்லாம் அர்த்தம் தெரியாதல்லவா? இன்றைக்காக இருந்தால் ‘இவன் ஜென்யா’ என்று சொல்லியிருப்பேன். அன்றைக்கு ‘இவரு ஜெம்ய்யா’ என்று சொல்லித் திரிந்தேன். அப்பவும் கூட நந்தகுமார் எச்சரித்தான். ஒரு வருடம் சீனியர். ‘கால் பரீட்சை வரைக்கும் அப்படித்தான்...அதுக்கப்புறம் இருக்கு’ என்றான். அடக்கினால் அடங்குற ஆளா நான்? அதன் பிறகும் அஜால்குஜால்தான். வகுப்பிலேயே அதிகமாக பேசுகிறவனாக இருந்தேன். அதுவும் வாத்தியார்களிடம். அண்டாமுத்து என்றால் இன்னமும் இளக்காரம். 

முன் காலாண்டுத் தேர்வு வந்தது. 

தேர்வுக்குப் பிறகாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்திருந்தார்கள். விடுமுறையில் ஆட்டம் முடித்து வகுப்புக்குச் சென்றவுடன் முதல் விடைத்தாளை அண்டாமுத்துதான் கொடுத்தார். வரிசைக்கிரமமாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். என்னுடைய பெயரை அழைத்ததும் வேகமாக ஓடினேன். நேருக்கு நேராக ஒரு பார்வை பார்த்துவிட்டு தாளை நீட்டினார். வாங்கிப் பார்த்தால் குபீரென்றிருந்தது. நூற்றுக்கு பதினேழரை. இன்னும் பத்து குறைத்துப் போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். வீட்டிற்குக் கொண்டு போனால் அம்மா ருத்ரதாண்டவம் ஆடி விடுவார். ஏதாச்சும் செய்தே தீர வேண்டியிருந்தது. அண்டாவிடம் தனிப்பயிற்சி படித்துக் கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் குறைந்து அதைப் பற்றித் தங்களுக்குள் குலாவிக் கொண்டிருக்க நான் ரேங்க் ஷீட்டில் சிவப்பு நிற அடிக்கோடு வராமல் இருக்கவே பதினேழரை மதிப்பெண்கள் வேண்டுமே என்று பதறிக் கொண்டிருந்தேன். 

அத்தனை பேருக்கும் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு ‘யாருக்காச்சும் திருத்தம் இருக்கா?’ என்றார். இதற்காகத்தான் காத்திருந்தேன். என்னைப் போலவே இன்னமும் பலரும். திமுதிமுவென்று ஓடிச் சூழ்ந்து நின்றோம். முதன் முறையாக அண்டாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எழுந்து தபார் துபார் என்று மொத்து மொத்தென்று மொத்தினார். கண்ணீர்ப்புகைக்கு சிதறிய கூட்டமாக சிதறினோம். இந்தக் கலவரத்தில் ஒருத்தன் எனது விடைத்தாளை டர்ரென்று கிழித்துவிட்டான். ஒரு பாகம் என் கையில் இருக்க இன்னொரு பாகம் துண்டிக்கப்பட்ட ஆட்டுத்தலையாக துள்ளிக் கொண்டிருந்தது. ‘அட நாதாரி’ என்று தாளைப் பொறுக்க முயற்சிக்க அடுத்த அடி என் முதுகில்தான் விழுந்தது. அண்டாவேதான். 

‘சுத்தி வந்து நின்னுட்டு...குசு விட்டாக்கூட வெளியே போவாது’ என்றார். அத்தனை ரணகளத்திலும் அவரது புலமையை ஒரு வினாடி சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. நல்லவேளையாக கூட்டத்திற்காகத்தான் அந்த அடி. விடைத்தாள் கிழிந்தது தெரிந்திருந்தால் அடி கூடுதலாகியிருக்கும். எப்படியோ தம் கட்டி எழுந்து நின்றேன். ஆளாளுக்கு அறிவியல் புத்தகத்தில் பதிலைத் தேடிக் கொண்டிருந்தார்கள். கிழவன் கோவணமாகக் கிடந்த இரண்டு பகுதிகளையும் எப்படி ஒட்டுவது என்று நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இரண்டையும் சேர்த்துப் பிடித்து அண்டாவிடம் சென்று நின்றேன். எனக்கு முன்பாகவே நான்கைந்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.

சக்தி வினாயகரை வேண்டிக் கொண்டிருந்தேன். 

‘குண்டன் பாஸ் பண்ணி விட்டுட்டா அஞ்சு ரூபாய் உண்டியலில் போடுறேன்’ என்பது வேண்டுதலாக இருந்தது. எழுபது எண்பது வாங்கினாலே விட மாட்டார்கள். ‘ட்யூஷனுக்கு போ போன்னு சொன்னேன்ல’ என்பார்கள். அத்தனை மதிப்பெண்களுக்கு எங்கே போவது? பிச்சை கேட்டாலும் கூட கிடைக்காது. இப்போதைக்கு பாஸ் செய்வோம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. வரிசையில் முன்பாக நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் கும்மாங்குத்துதான். அறைதான். உதைதான். வெட்டுவதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கும் வெள்ளாடு போலத்தான் இருந்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பதற்றம். இந்த லட்சணத்தில் அவசரமாக முட்டிக் கொண்டு நின்றது. பாபா ராம்தேவ் யோகாசனம் செய்வது போல கால்களைப் பிணைத்துக் கொண்டு நின்றேன்.

முன்பாக நின்றிருந்தவர்கள் எல்லாம் அடியையும் வாங்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக வாங்கியதோடு கடுப்பிலேயே இடத்துக்கு போயிருந்தார்கள். அடுத்து நான்தான். 

‘வாடா...பிரகலநாதா’ என்றார்.

‘எம்பேரு மணிகண்டன் சார்’ என்றேன்.

‘என்னது மணி ஆட்டுறியா?’ என்றார். மற்ற பையன்களுக்கு அப்படியொரு சிரிப்பு.

‘அடேய் அண்டாமுத்து’ என்று மனதுக்குள் கறுவினேன். ஆனால் வாயைத் திறக்கவா முடியும்?

‘எத்தன மார்க் வாங்கியிருக்க?’

‘பதினேழரை சார்’

‘படிச்சாத்தான மார்க் வரும்’ என்று சொல்லியபடியே முடியைப் பிடித்து ஆட்டினார். அப்பொழுது தலையில் முடி இருந்தது. 

‘படிச்சேன் சார்’

‘கிழிச்ச’

‘இல்ல சார்..நிஜமாவே படிச்சேன்’

அந்த ஆள் விடுவதாகத் தெரியவில்லை. ஆட்டுகிற ஆட்டில் சிறுநீர் கசிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அரை ட்ரவுசர். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும். ‘விட்றாதடா’ என்று பற்களைக் கடித்தபடியே இறுக்கிக் கொண்டிருந்தேன். நான் தொடைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க அந்த ஆளும் விடாமல் தலைமுடியைப் பிடித்துக் கொண்டிருந்தார். 

விடைத்தாளிலிருந்து ஒவ்வொரு பதிலையும் சப்தம் போட்டு படித்துக் காட்டச் சொன்னார். ஒவ்வொரு விடையாகப் படித்துக் காட்டியவுடன் ‘சரியா டா?’ என்று பையன்களைக் கேட்பார். அவர்கள் சரி என்று சொன்னால் மதிப்பெண்கள் வரும். அவர்கள் தவறு என்று சொன்னால் கும்முதான்.

துக்கமும் சந்தோஷமுகாகக் கலந்து கடைசியில் கூட்டிக் கழித்து இருபத்தெட்டு வந்து சேர்ந்தது. 

‘சார் சார்....இன்னொரு கேள்வி திருத்தாம இருக்கு சார்’ என்றேன். அதுக்கு ஒரு மூன்று மதிப்பெண்கள்.

நான்கு மதிப்பெண்கள்தான் பாக்கி. ‘எங்க ட்யூஷன் போற?’என்றார்.

‘எங்கேயும் போறதில்ல சார்’ - இதைச் சொன்னவுடன் அவருக்கு பல்பு எரிந்ததை ஒரு வினாடி கவனிக்க முடிந்தது. எனக்கு முன்பாக கும்மாங்குத்து வாங்கியவர்கள் எல்லாம் முத்துசாமி ட்யூஷன், பாட்ஷா ட்யூஷன் என்று சொன்னார்கள். அதனால் கும்மாங்குத்து. எங்கேயும் போவதில்லை என்றவுடன் விடைத்தாளை வாங்கிக் கொண்டு கனிவு வந்தவராக ‘இதைக் கூட கிழிக்காம வெச்சிருக்க மாட்டியா’ என்று கேட்டு அங்கும் இங்குமாக மதிப்பெண்களைச் சேர்த்து நாற்பதாக்கினார். உயிர் திரும்ப வந்தது.

‘அடுத்த வருஷம் பத்தாவது...ஒன்பதாங்க்ளாஸ் முக்கியம்..ட்யூஷன் சேர்ந்துக்க..பணத்தைப் பத்தி யோசிக்காத..அதை மெதுவா கொடு’ என்றார். அடியையும் கொடுத்துவிட்டு கருப்பட்டியையும் கொடுத்தால் குளுகுளுவென்று இருக்கும் அல்லவா? அப்படி இருந்தது.

ரணகளமும் அழிச்சாட்டியமும் அவரிடம் தனிப்பயிற்சி படிக்காத ஆட்களுக்குத்தான். அண்டாவிடம் தனிப்பயிற்சி படிக்கும் மாணவன் யாருமே அவரிடம் மதிப்பெண் கேட்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விசாரித்தால் முந்தின நாளே தனிப்பயிற்சி வகுப்பின் போது விடைத்தாளைக் கொடுத்துத் திருத்திவிட்டாராம். 

அடங்கொண்ணிமலையா என்று சொல்லிக் கொண்டேன். 

இன்னமும் முக்கால் வருடம் பாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இப்படியே குத்தினால் எப்படித் தாங்குவது? ஏதாவது செய்ய வேண்டும் என்று மண்டை காய்ந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அப்பொழுது ஒரு வாத்தியார் இருந்தார். தனியார் பள்ளி ஆசிரியர் அவர். அவர்தான் ‘மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு பெட்டிஷன் போடுறியா? சொல்லித் தர்றேன்’ என்றார். எங்கேயிருந்தாவது கிருஷ்ணர்கள் வந்து திரெளபதிக்கு சேலை கொடுத்துவிடுவார்கள் அல்லவா?

‘அட்ரஸ் மட்டும் கொடுங்க’ என்று வாங்கிக் கொண்டு நான்கைந்து பக்கம் எழுதி தபாலில் அனுப்பியிருந்தேன். கையொப்பமெல்லாம் எதுவுமில்லை. மொட்டைக் கடுதாசி.

என்னதான் புகார் அனுப்பினாலும் தனிப்பயிற்சியொன்றில் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். சசிகலா அணியில் சேர விரும்பாதவர்கள் தீபா அணியில் சேர எத்தனிப்பது போல அண்டாமுத்து வேண்டாம் என்று முத்துச்சாமி வாத்தியாரிடம் சேர்ந்து கொண்டேன். அடி வாங்குகிற போதெல்லாம் சொல்லி அழுவதற்காகவாவது ஒரு தோள் வேண்டும் அல்லவா? 

எனது புகார் என்ன ஆனது என்று தெரியவில்லை. வெளியில் யாரிடமும் சொல்லவுமில்லை. ஆனால் அந்தக் காலத்தில் கல்வி அதிகாரிகள் ஓரளவுக்கேனும் நேர்மையுடன் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதன் பிறகு அந்த வருடம் முழுமைக்குமே அண்டாமுத்து தனிப்பயிற்சி சேரச் சொல்லி எங்கள் வகுப்பில் யாரையுமே அடிக்கவில்லை. 

Dec 14, 2016

இனியன்

சரியான ஆசிரியர் கிடைத்தால் மாணவன் வாழ்க்கையில் பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரி என்பார்கள். யோசித்துப் பார்த்தால் இன்றைய நம் நிலைமைக்கு ஏதோவொரு ஆசிரியர் நிச்சயமாகப் பங்களித்திருப்பார். ஒருவேளை நாம் மறந்திருந்தாலும் மறுப்பது சாத்தியமில்லை. 

எங்கள் ஊரில் ஒரு தலைமையாசிரியர் இருந்தார். இனியன்.அ.கோவிந்தராஜூ.


வெளியூர் ஆள். கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி உதவித் தலைமையாசிரியர் ஆகி பிறகு தலைமையாசிரியர் ஆனார். ‘நீ ஏன் எழுதற?’ என்று என்னிடம் யாராவது கேட்டால் இனியன் அவர்களின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அவர்தான் தலைமையாசிரியர். வருடத்திற்கு இருநூறு நாள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் கூட ஒரு ஐந்தாறு வருடங்களில் ஆயிரத்து இருநூறு முறையாவது அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். தினமும் வணக்க வகுப்பில் பேசுவார். தினசரி ஒரு திருக்குறள். குறளைச் சொல்லி விளக்கம் சொல்லி ஒரு குட்டிக் கதையும் சொல்வார். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி...’ ‘எண்ணித் துணிக கருமம்....’ ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே..’ ஆகிய சில குறள்கள் அவர்ச் சொல்லிச் சொல்லி மனதுக்குள் உருவேறிக் கிடக்கிறது.

சமீபத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசிய சலனப்படம் ஒன்று யுடியூப்பில் கிடைத்தது. தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பாக பேசக் கூடிய இயக்குநர்களில் அவரும் ஒருவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது பேச்சுகளடங்கிய சலனப்படங்களைப் பார்ப்பது உண்டு. ‘உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் வள்ளுவத்தில் சாவி இருக்கிறது’ என்று பேசினார். அது அப்பட்டமான உண்மை. ஆச்சரியம் என்னவெறால் இதை தலைமையாசிரியர் எங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். 

‘அறத்துப் பாலிலும் பொருட்பாலிலுமிருந்து மொத்தமாக பத்து திருக்குறள்களை எடுத்து மனனம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை மட்டும் பின்பற்றினால் போதும். உங்களின் மொத்த ஆளுமையும் மாறிவிடும்’ என்று தலைமையாசிரியர் சொன்னது அன்றைக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் உண்மை இன்றைக்குப் புரிகிறது. பத்துக் குறள்கள் கூட வேண்டாம். ஐந்தே ஐந்து குறள்களைப் பின்பற்றினால் கூட போதும். திருக்குறளைப் புரிந்து கொள்வதையும் பின்பற்றுவதையும் விட personality development என்று தனியாக வேறு எதுவுமில்லை. 

அவரிடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்திருக்கிறார்கள். நிறையப் பேர்கள் வெகு உயரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். தனது வாழ்நாளில் காசு வாங்கிக் கொண்டு தனிப்பயிற்சி நடத்தவில்லை. பாடம் சொல்வது மட்டும்தான் தன்னுடைய கடமை என்று நிற்கவில்லை. பவானி நதி நீர் பாதுகாப்புக் குழுவில் இருந்தார். உள்ளூர் வரலாற்றையும் பள்ளியின் வரலாற்றையும் தோண்டியெடுத்து ஆவணப்படுத்தினார். மாணவர்களைத் துடிப்போடு வைத்திருந்தார். இன்னமும் சில ஆண்டுகள் அவர் அதே பள்ளியிலும் அதே ஊரிலும் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்.

பிரச்சினைகள் அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றின. நூற்றாண்டு கண்ட பள்ளி அவர் சென்றதிலிருந்து நொடியத் தொடங்கியது. இன்றைக்கும் உள்ளூரில் பேசினால் ‘இனியன் இருக்கிற வரைக்கும்தான் டைமண்ட் ஜூபிலி பள்ளிக் கூடமா இருந்துச்சு’ என்று பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் ஒழுக்கம், படிப்பு ஆகியவற்றில் அவரளவுக்கு அவர் பின்னால் வந்தவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. இன்றைக்கு பள்ளிக் கூடம் மெல்ல மெல்ல ஒட்டடை ஏறிக் கொண்டிருக்கிறது. யாராவது மறுத்தாலும் கூட இதுதான் உண்மை.

இனியன் காலத்தில் தமிழ் பாடத்தில் கூட மாநில அளவிலான ரேங்க் வாங்கிய பள்ளி அது. இன்றைக்கு நகரத்தில் இருக்கும் பள்ளிகளுடன் கூட போட்டியிட முடிவதில்லை. இதுதான் நிதர்சனம். பள்ளியின் தலைமையாசிரியர் மட்டும் சரியாக இருந்தால் போதும்- தூக்கி நிறுத்திவிடுவார்கள். தலைமையாசிரியர் சரியில்லையென்றால் அந்தப் பள்ளியில் என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் காய்ந்து கருவாடாகிவிடும். அது இனியன் விவகாரத்தில் சரியானது.

இனியன் அவர்களை வெளியேற்றியது பள்ளிக்கும் உள்ளூருக்கும்தானே இழப்பே தவிர அவருக்கு பெரிய பாதிப்பில்லை. இன்றைக்கு அறுபதைத் தாண்டிய பிறகும் ஏதாவதொரு கல்லூரியிலும் பள்ளியிலும் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். வானொலியில் பேசுகிறார். இதழ்களில் எழுதுகிறார். தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார்.

1997 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாடினார்கள். காலையில் கொடியேற்றுவதுடன் நிகழ்ச்சியை முடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படியான தலைமையாசிரியர் இல்லை. பள்ளியில் விடிய விடிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரவில் மாணவர்கள் கவிதை வாசிக்கலாம் என்று சொல்லியிருந்தார். கடைசி நேரத்தில் ஏழெட்டு பக்கங்களில் ஒரு மொக்கைக் கவிதையை எழுதிக் கொண்டு போய் கொடுத்தேன். உணவு உண்பதற்காக வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவர் திரும்பவும் தனது இருக்கைக்குச் சென்று வரிக்கு வரி திருத்திக் கொடுத்தார். எனக்கும் கவிதை எழுதத் தெரியும் என்று நான் நம்பத் தொடங்கிய தருணம் அது. நள்ளிரவில் கவிதை வாசித்தேன். என் கவிதையைக் கேட்டுத்தான் சுதந்திரமே கிடைத்தது போன்ற கித்தாப்புடன் வாசித்தது இன்னமும் நினைவில் நிற்கிறது.

‘படிக்கிற வயசுல பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டின்னு வாழ்க்கையைத் தொலைச்சுடாத’ என்று அம்மாவும் அப்பாவும் திட்டிய போது அவர்களை அழைத்து ‘படிக்கிறதை எல்லோரும் செய்யலாம்..இதெல்லாம் இவனை மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர்தான் செய்ய முடியும்..அவன் போக்குல விடுங்க’ என்று சொல்லி அவர்களை மடை மாற்றிவிட்டதும் அவர்தான்.

தவறுகளில் சிக்கிக் கொண்ட மாணவர்களை திட்டுகிற மாதிரி திட்டி தனியாக அழைத்துக் கனிவாகப் பேசி அனுப்புவார். வணக்க வகுப்புகளில் மாணவர்களைப் பேசச் சொல்லி உற்சாகமூட்டுவார். ஒவ்வொரு நாளும் வணக்க வகுப்பில் ஒருவன் திருக்குறள் சொல்ல வேண்டும்; இன்னொருவன் ஆங்கில பழமொழி ஒன்றைச் சொல்லி அதற்கு அர்த்தம் சொல்ல வேண்டும்; இன்னொருவன் அன்றைய தினத்தின் முக்கியச் செய்திகளை வாசிக்க வேண்டும்; மற்றொருவன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க அதை மாணவர்கள் பின் தொடர்ந்து சொல்ல வேண்டும். வாரம் ஒரு வகுப்பு. ஐந்து நாட்களும் வெவ்வேறு மாணவர்கள். மேடை பயம் என்பது மாணவர்களிடமிருந்து இயல்பாகவே காணாமல் போனது.

ஒரு ரூபாயைக் கண்டெடுத்துக் கொண்டு போய் கொடுத்தாலும் அடுத்த நாள் அந்த மாணவனை வணக்க வகுப்பு மேடைக்கு அழைத்துப் பாராட்டுவார். 

அவர் காலத்தில் மாணவர் பேரவை சிறப்பாக இயங்கியது. தேர்தல் நடக்கும். மாணவத் தலைவனை மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், இலக்கிய மன்றம் செயல்பட்டது. இலக்கியமன்றச் செயலாளராக ஒருவன் செயல்படுவான். ஏதேனும் செயல்பாடுகள் பள்ளியில் நடந்து கொண்டேயிருக்கும். மாணவர்கள் பட்டிமன்றங்கள் நடைபெறும். வெளியாட்கள் வந்து பேசுவார்கள். நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் படை, தேசிய மாணவர் படை என்று சகலவிதமான அமைப்புகளும் மிகத் தீவிரமாக இயங்கின. பசுமை பாதுகாப்புப்படை என்று தனியாக ஒரு அமைப்பு நடத்தப்பட்டது.

சொல்லிக் கொண்டே போகலாம். இனியன் அவர்களின் செயல்பாடுகளால் ஒவ்வொரு மாணவனும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைந்திருக்கக் கூடும். முதல்பத்தியில் சொன்னது போல ஒருவேளை மறந்திருக்கலாமே தவிர மறுக்க முடியாது.

ஆசிரியர்களின் பலம் நமக்கு நேரடியாகத் தெரிவதில்லை. வாழ்க்கையின் வேறொரு கட்டத்தில் அசைப்போட்டு பார்த்தால் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் நம்மை முழுமையாக உருவாக்கி வெளியுலகத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்றைக்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு என்பது வெறும் மதிப்பெண்களாக சுருங்கிவிட்டது. அறம், ஒழுக்கம், நன்னெறி என்பதையெல்லாம் பெரும்பாலான ஆசிரியர்கள் போதிப்பதுமில்லை அதை யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. பள்ளியின் நோக்கம் என்பதே கடைசியில் எழுதுகிற மூன்று மணி நேரத் தேர்வு மட்டும்தான் என்று வந்து நின்றிருப்பது சாபக்கேடு மட்டுமல்ல அதுவொரு பிணி. பள்ளி என்பது பாடம் மட்டுமில்லை. மதிப்பெண்கள் மட்டுமில்லை. அது வேறு உலகம். வாழ்வியலின் அடித்தளமே பள்ளியும் ஆசிரியர்களும்தான்...இல்லையா?

முந்தைய காலத்தில் தமிழகத்தில் தமது ஆசிரியர்களுக்கு நன்றி கூறியும் பாராட்டியும் அடிக்கடி கூட்டம் நடக்கும் என்று சொல்வார்கள். இன்றைக்கு அது அருகிவிட்டது. எங்கள் ஊரில் எனக்கு நினைவு தெரிந்து அப்படியொரு நன்றி பாராட்டும் கூட்டம் எந்த ஆசிரியருக்கும் நடைபெறவில்லை. அதைச் செய்யலாம் எனத் தோன்றியது. உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து இனியன் அவர்களிடம் படித்த மாணவர்களின் கூடட்த்தை பிப்ரவரி மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடத்தலாம். நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விரைவில் எழுதுகிறேன்.

ஆசிரியர்களுக்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. சிறு நன்றி. அது போதும்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இனியன் அவர்களின் பழைய மாணவர்கள் அத்தனை பேரிடமும் இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்க முயற்சி செய்வோம். வாட்ஸப், மின்னஞ்சல், ஃபேஸ்புக் ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். குழுவொன்றை அமைத்து விரிவான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

நன்றி.

Dec 13, 2016

வீட்டில் எப்படி விடுறாங்க?

‘உன்னையெல்லாம் வீட்டில் எப்படி விடுறாங்க?’ என்ற கேள்வியை எளிதாகக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு பதில் சொல்வதன் பெரும்பாடு எனக்குத்தான் தெரியும். உதாரணமாக டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு வேலை இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே சொல்லி வைத்திருப்பேன். 29 ஆம் தேதியன்று பையைத் தூக்கித் தோளில் மாட்டுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒன்று அவர்கள் மறந்திருப்பார்கள் அல்லது நான் சொல்லாமல் கோட்டைவிட்டிருப்பேன். ‘இதோட கடைசி...இனிமேல் முன்னாடியே சொல்லாம ஏதாச்சும் ஒத்துக்கிட்டீங்கன்னா பாருங்க’ என்ற எச்சரிக்கையைச் சமாளித்து, சமாதானப்படுத்தி, இனிமேல் வீட்டில் முன் அனுமதி வாங்கிக் கொள்வேன் என்று சத்தியம் செய்து வண்டியேறுவதற்கு ஒரு மணி நேரம் பிடித்துவிடும். 

இது வழமைதான் என்றாலும் வேணி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறாள். விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும்தான். ஆனால் உருப்படியான வேலையைத்தான் செய்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. மெல்ல மெல்ல அலைவரிசைக்கு வந்து இப்பொழுதெல்லாம் சலித்துக் கொள்வதில்லை. பிறந்தநாள், திருமண நாள் மாதிரியான நாட்களிலாவது வீட்டில் தங்கச் சொல்லிக் கேட்கிறாள். இந்த வருடம் அதுவும் இயலாமல் போய்விட்டது. அவளுடைய பிறந்த நாளன்றுதான் எங்கள் ஊருக்கு கவிஞர் அறிவுமதி வந்திருந்தார். வேணியும் மகியும் முன்பே அவளது அப்பா வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அறிவுமதியுடன் எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கடைசிப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். முடியாமல் போய்விட்டது. அடுத்த ஐந்தே நாட்களில் திருமண நாள். அதற்கடுத்த நாள்தான் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பயிலரங்கை ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். அதன் காரணமாக திருமண நாளன்றும் வீட்டில் இல்லாமல் இருந்தேன். வருத்தம்தான் என்றாலும் பெரிய எதிர்ப்பு இல்லை.

எனக்கும் கூடச் சந்தோஷமாக இருந்தது.

நாம் ஒன்று நினைக்க சிலர் வேறொன்று நினைப்பார்கள். அன்றைய தினம் சில பெரியவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நல்ல மனிதர்கள்தான். அக்கறை கொண்டவர்கள். ஆனால் அறிவுரை செய்கிறோம் என்ற பெயரில் எதையோ கொளுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த போது நான் வீட்டில் இல்லை. வீடு திரும்பிய போது யாருமே முகம் கொடுத்துப் பேசவில்லை. ஒன்றும் புரியவில்லை. வெகு குழப்பம். இப்பொழுதெல்லாம் வீட்டில் நடப்பது குறித்தெல்லாம் மகிதான் தகவல் தருகிறான். அவனை அழைத்து ‘அப்பாவை உன் கூடவே வெச்சுக்க...பிழிஞ்சு எடுத்துடு...வெளியேவே விடாத’ என்று சொன்னார்களாம். சங்கடமாக இருந்தது. இதை அவர்கள் அவனிடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை.

வேணியிடம் ‘எதுக்கு கல்யாண நாளன்னைக்கு வெளிய அனுமதிக்கிற?’ என்று கேட்கவும் அவளுக்கும் தப்பு செய்து கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட உறுத்தியிருக்கிறது. ‘இருபத்தஞ்சு வருஷமா வீடு படிப்புன்னுதான் இருந்தான்..கையில் கொடுத்தாச்சு..இனி இவதான் பொறுப்பு’என்றிருக்கிறார்கள். எந்த மனைவியாக இருந்தாலும் சலனமுறத்தான் செய்வார்கள். இவ்வளவு நடந்த பிறகு வீட்டில் எப்படி முகம் கொடுத்துப் பேசுவார்கள்?

வாரத்தில் ஐந்து நாட்களையும் வீட்டுக்காகத்தான் செலவிடுகிறேன். எப்பொழுதுமே ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களுக்கு உழைக்கிறோம் என்ற பெயரில் குடும்பத்தைக் கைவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையின் காரணமான பயம் அது. சம்பளத்தை குடும்பத்திடம் ஒப்படைப்பதிலிருந்து மகனுக்குச் சொல்லித் தருவது, அவனோடு விளையாடுவது வரை நிறைய நேரம் செலவழிக்கிறேன். அப்படியிருந்தும் திரைப்படங்களுக்குச் செல்வது, வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு வெளியில் செல்வது போன்ற சிலவற்றைச் செய்ய முடிவதில்லை. அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் முடிந்த வரை இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் உண்டு நம் வேலையுண்டு என்று குடும்பத்தோடு மொத்த நேரத்தையும் செலவழித்தபடியே காலத்தை ஓட்டிவிடலாம்தான். ஆனால் அப்படியிருப்பதில் இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எதுவுமேயில்லை. வாழ்ந்ததற்கான சிறு அர்த்தமாவது இருக்க வேண்டுமல்லவா?

குடும்பம், குழந்தை, மனைவி, வீடு, சம்பாத்தியம் எல்லாமே முக்கியம்தான். இல்லையென்றல்லாம் சொல்லவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்திற்கென எதையாவது நம்மால் செய்ய முடியும். யாருக்காவது கை கொடுக்க முடியும். நாயும்தான் பிழைப்பை ஓட்டுகிறது.  நரியும்தான் பிழைக்கிறது. பிழைப்பதற்கும், வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? நாயும் நரியும் பிழைக்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும். 

சம்பாத்தியம், குண்டுச்சட்டி வாழ்க்கையிலிருந்து சற்றேனும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்தல் சாத்தியமேயில்லை. ஒன்றேயொன்று- நம்மைச் சார்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இப்பொழுதுதான் வீட்டிலிருப்பவர்கள் ஓரளவுக்கு புரிந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாராவது வந்து பானையை உடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். 

பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது மகியிடம் கேட்டேன். அவன் விவரங்களைச் சொன்னதும் எனக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு பேச்சு வரவில்லை. அவன் மனதில் அது கிட்டத்தட்ட நஞ்சை விதைப்பது மாதிரிதான். எந்தத் தந்தையும் தனது மகனுக்கு எல்லாவிதத்திலும் ரோல்மாடல் ஆகிவிட முடியாது. ஆனால் குழந்தைகள் அப்பனைத்தான் பின் தொடர்வார்கள். அப்பன் செய்கிற செயல்களையே தாமும் செய்வார்கள். அதுதான் ஒவ்வொரு அப்பனுக்கும் பெருமையும் கூட. ஒருவேளை தனது அப்பா செய்வது சரியில்லை என்கிற எண்ணம் மட்டும் உண்டாகிவிட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு தலைகீழாக நின்றாலும் அவர்கள் நம்மை பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அப்பன் ஆகாவழியாக இருந்தாலும் கூட ‘உங்கப்பன் செய்யறது சரியில்லை’ என்று குழந்தையிடம் சொல்வதைப் போன்ற பாவம் எதுவுமேயில்லை. அப்படிச் சொல்ல விரும்பினால் அப்பனிடம் சொல்ல வேண்டுமே தவிர குழந்தையிடம் சொல்லக் கூடாது. ஒருவேளை அப்படிச் சொன்னால் அந்த அப்பனின் மொத்தக் கனவையும் அடித்து உடைப்பது மாதிரிதான்.

பெங்களூரு வீட்டிற்கு வந்த பிறகும் கூட மனது ஒரு வகையில் பிசைந்து கொண்டேயிருந்தது. 

கடந்த வார இறுதியிலும் கூட அவர்களை பெங்களூரிலேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தேன். அவனுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. எங்களது திருமண தினத்துக்கான வாழ்த்துமடல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தான். அதை என்னிடம் கொடுக்கவில்லை. வேணியிடம்தான் கொடுத்திருக்கிறான். அதை வாசித்துவிட்டு அவள் வருந்தக் கூடும் என்று திரும்பத் திரும்ப ‘அப்பா செய்யறது சரிதானங்கம்மா...அதான் இப்படி எழுதியிருக்கேன்..உங்களையும் பிடிக்கும்’ என்று சொன்னானாம்.

திங்கட்கிழமை அதிகாலை பெங்களூர் வந்து  சேர்ந்த போது வாழ்த்துமடல் கண்ணில்படும்படி வைத்துவிட்டுத் தூங்கியிருந்தான். அதைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. 

அவர்கள் அவனிடம் சொன்ன வார்த்தைகளும், அதைக் கேள்விப்பட்ட போது என் முகம் வாடியதும் அவனை வருத்தியிருக்க வேண்டும். ஒரு வாரம் யோசித்திருக்கிறான். திருமண நாள் முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகாக இதைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்.

வாழ்த்து மடலில் கீழேயிருப்பதை எழுதியிருந்தான் -

'My Name is Mahinandhan. I am proud of my father & my mother but I am more proud of my father than my mother because he helps people'

பல சமயங்களில் இரவு நேரங்களில் மகியிடம் விளையாட்டாகக் கேட்பதுண்டு. வேணி அருகாமையில் இருந்தால் கேட்பேன். இல்லையென்றால் கேட்க மாட்டேன். ‘நீ அம்மா பையனா? அப்பா பையனா?’ என்று கேட்ட ஒவ்வொரு முறையும் ‘எனக்கு ரெண்டு பேரையும்தான் பிடிக்கும்’ என்பான். ஒரு முறை கூட அம்மா பையன் என்றோ அப்பா பையன் என்றோ தனித்துச் சொன்னதேயில்லை.  இப்பொழுதுதான் அவனது சங்கல்பத்தை மீறியிருக்கிறான்.

சந்தோஷத்தைவிடவும் நெகிழ்வாக இருக்கிறது.

இதை எழுதலாமா என்று கூட யோசனை இருந்தது. ஆனால் எழுதுவதில் தவறேதுமில்லை. பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள். என்னால் முகத்துக்கு நேராக இதைச் சொல்ல முடியாது. ஆனால் எழுத்து வழியாக சொல்லிவிட முடியும். 

முந்தைய தலைமுறை ஆட்களைவிடவும் இன்றைய தலைமுறைக் குழந்தைகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். என்னிடமிருந்து ஏதாவதொரு நல்ல குணத்தை அவன் பின்பற்றுவதாக இருந்தால் இதைப் பின்பற்றட்டட்டும். வாழ்தலின் அர்த்தம் அது மட்டும்தான்.

Dec 12, 2016

ஸ்ரீனி

ரெட்டி ஒருவர் இருக்கிறார். ஸ்ரீனிவாசலு ரெட்டி. ஆந்திராக்காரர். ஒரு காலத்தில் வசதியாக இருந்த குடும்பம். அப்பா செல்லாக்காசான அரசியல்வாதி. என்.டி.ஆர் பிறகு சந்திரபாபு நாயுடு என தெலுங்கு தேசத்துக்காக வரிசையாகச் சொத்தை இழந்துவிட்டார்கள். இன்றைக்கு ஒன்றுமில்லை. வேலை கைவசமிருக்கிறது. எங்கள் அலுவலகத்தில்தான் பணிபுரிகிறார். பெங்களூரில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அதிகமாக பேசிக் கொள்வதில்லை. எப்பொழுதாவது பேசும் போது ஊருக்கு தான் செய்கிற காரியங்களைச் சொல்வார். வறிய மனிதர்களுக்காக தனது சம்பளத்தில் பெரிய ஓட்டையைப் போட்டுவிடுகிறார். இதெல்லாம் மனைவிக்கு தெரியாது போலிருக்கிறது. ‘நீ செய்யறதை யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை’ என்று ஸ்ரீனியின் அம்மா சொல்வாராம். மனைவிக்கு மட்டுமில்லை- யாருக்குமே சொல்வதில்லை. இத்தகைய வேலைகளை நானும் செய்வதால் தேநீர் அருந்தச் செல்லும் போது இது குறித்து மேம்போக்காக பேசிக் கொள்வோம். மக்களுக்கு எது தேவையானதாக இருக்கிறது, எங்கே சிரமப்படுகிறார்கள் என்பதெல்லாம் பேச்சில் வந்து போகும்.

கடந்தவாரத்தில் ஸ்ரீனியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. தொடர்ந்த காய்ச்சல். இப்பொழுது டெங்கு தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. பயந்து போனவர்கள் தூக்கிக் கொண்டு செய்ண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பிறகு அங்கேயிருந்து வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். அங்கேதான் ஸ்ரீனி சீனானைச் சந்தித்திருக்கிறார். சீனான் கட்டிடக் கூலி. தமிழகத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம். அப்பா துடைப்பம் விற்கிறார். அம்மா வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார். சீனான், அவரது மனைவி, சீனானின் சகோதரர் மூன்று பேரும் கட்டிட வேலைக்குச் செல்கிறார்கள். சொந்தமாகக் குடிசை கூடக் கிடையாது. யாரோ ஒரு மனிதரின் நிலத்தில் குடிசை போட்டிருக்கிறார்கள். மின்சாரம் வசதியெல்லாம் இல்லை. நிலத்தோடு ஒட்டிய குடிசை. குழந்தைகளோடு படுத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரு சீதோஷ்ண நிலைக்கு நிலத்தில் படுப்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

சீனானுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் மீனாட்சிக்கு மூன்று வயதாகிறது. கடந்த வாரத்தில் தீடிரென்று மூச்சுத் திணறல். கூடவே வலிப்பும் வந்திருக்கிறது. அதே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். முதுகெலும்பில் நீர் கோர்த்திருக்கிறது. அதை நீக்க சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பதினைந்தாயிரத்துக்கும் குறைவில்லாமல் செலவாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆறேழு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். சீனானிடம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் இருந்திருக்கிறது.

‘இல்லன்னா எடுத்துட்டு வேற ஆஸ்பத்திரிக்கு போய்டுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். சீனானுக்கும் அவரது மனைவிக்கும் எங்கே தூக்கிக் கொண்டு செல்வது என்று தெரியவில்லை. அவரும் அவரது மனைவியும் அழுது கொண்டிருந்த போது மருத்துவ நிர்வாகத்திடம் ஸ்ரீனி பேசியிருக்கிறார்.

‘இன்னைக்கு நான் கட்டிடுறேன்’ என்று சொல்லியிருக்கிறார். 

‘இன்னைக்கு நீங்க கட்டிடுவீங்க..நாளைக்கு?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீனி அழைத்திருந்தார். எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. மென்பொருள் துறையில் வேலை செய்கிறவர்களை அவ்வளவு எளிதில் நம்ப வேண்டியதில்லை என்று நினைப்பேன். நம்ப வேண்டியதில்லை என்றால் பொய் சொல்வார்கள் என்ற அர்த்தமில்லை. பொய் சொல்ல மாட்டார்கள். ஆனால் மிக எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள். இங்கே நெகிழ்ந்துவிடக் கூடிய ஆட்கள் அதிகம்.

‘யோசிச்சுட்டுச் சொல்லுறேன்’ என்று பதில் சொல்லியிருந்தேன். அந்தப் பதிலுக்கும் அவர் தயாராக இருந்தார். 

ஒருவேளை அறக்கட்டளையிலிருந்து பணம் கிடைக்கவில்லையென்றால் வெளியில் கடன் வாங்கி குழந்தையைக் காப்பாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். முடிவு செய்ததற்கு ஏற்ப ‘குழந்தையைக் காப்பாத்துங்க...நான் பார்த்துக்கிறேன்’ என்று மருத்துவமனைக்கு உறுதியளித்தவர் தனது பணம் பதினாறாயிரம் ரூபாயை உடனடியாகக் கட்டியும்விட்டார். அவர் பணம் கட்டிய பிறகுதான் மருத்துவமனைக்கே உறைத்திருக்கிறது. தனக்கு எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு குழந்தைக்கு கடன் வாங்கியாவது கட்டத் துணிந்த ஒரு ஆளை இந்தக் காலத்தில் அவர்கள் அவ்வளவு எளிதில் பார்த்திருக்க முடியாது. தமது மருத்துவமனையிலேயே  சமூகப் பணிகளுக்கு என ஒரு துறை இருக்கிறது எனச் சொல்லி அங்கே அனுப்பியிருக்கிறார்கள். 

ஸ்ரீனியிடம் ஒரு பலமிருக்கிறது. அவரால் யாரிடமும் பேரம் பேச முடியும். பொதுவாகவே ரெட்டிகளுக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய பலம் அது. influential characters. மருத்துவமனையின் பெருந்தலைகள் ஒவ்வொருவரையும் சனிக்கிழமையன்று பார்த்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்குச் செவி மடுத்திருக்கிறார்கள். ஸ்கேன், எக்ஸ்ரே என தம்மால் இயன்றக் கூடிய எல்லாவற்றையும் இலவசமாகச் செய்து கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். மருத்துவரும் தனக்குப் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

முதல் கையை வைக்கும் வரைக்கும்தான் தயங்கித் தயங்கி மனிதர்கள் நிற்பார்கள். நாம் துணிந்து கையை நீட்டிவிட வேண்டும். பிறகு பல கைகள் சேர்ந்துவிடும். 

சனிக்கிழமையன்று ஸ்ரீனி மீண்டும் அழைத்தார். ‘எல்லாம் பேசிட்டேன் மணி..இன்னுமொரு பதினோராயிரம் மட்டும் வேணும்’ என்றார். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. எங்கேயோ பார்த்த ஒரு குழந்தைக்காக நாய் மாதிரி அலைந்திருக்கிறார். மருத்துவமனை நிர்வாகங்களிடம் பேசிய அனுபவம் எனக்கும் இருக்கிறது. சாமானியத்தில் வளைய மாட்டார்கள். ஐந்தாயிரம் ரூபாயைக் குறைப்பதற்கே தாவு தீர்ந்துவிடும். ஆனால் ஸ்ரீனி சலிக்காமல் பேசியிருக்கிறார்.  பேசியதோடு நில்லாமல் வளைத்திருக்கிறார்.

ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் தான் பேசிய விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு, பேச்சுவாக்கிலேயே ‘எப்படி விட்டுட்டு வர்றது..என் குழந்தை மாதிரிதானே அதுவும்’ என்றார். சுளீரென்றிருந்தது. இப்படியெல்லாம் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் யோசிக்க மாட்டார்கள். அதுவும் இடையில் பணம் வந்து நிற்கும் போது சொந்தமே விலகிப் போய்விடுகிறது. பணத்தையும் கொடுத்து தனக்குச் சொந்தமாகவும் கருதுவது சாதாரணக் காரியமில்லை. ஸ்ரீனி மிகப்பெரிய மனம் படைத்தவர். நம்மைச் சுற்றிலும் நல்லவர்கள் இருப்பதுதானே நமக்கு பலம்? 

‘திங்கட்கிழமை பெங்களூரு வர்றேன்..கொடுத்துடலாம்’ என்று சொல்லியிருந்தேன்.

இன்று குழந்தையையும் அதன் பெற்றோரையும் பார்க்கச் சென்றிருந்தோம். சீனானுக்கு பேசக் கூடத் தெரியவில்லை. வெகுளி. அப்பாவி. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

வழக்கமாகக் கேட்பது போல ‘சாப்பிட்டீங்களா?’ என்றேன். 

முகத்தைச் சலனமே இல்லாமல் வைத்துக் கொண்டு ‘இல்லை’ என்றார். 

‘காலைல?’ என்றேன். 

அவர் கடைசியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்து. கையில் இருபது ரூபாயை வைத்திருந்தார். மனைவியும் அப்படித்தான். சாப்பிடவே இல்லை. அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரிய குழந்தைக்கு மருத்துவமனையில் கொடுத்த உணவையே இளையவனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுமே சோர்ந்து போய்க் கிடந்தார்கள். நாங்கள் சென்றிருந்த போது சீனானின் மனைவி கட்டிலிலேயே தலையைக் குத்தி அமர்ந்திருந்தார். இந்த நாட்டில் இதுவொரு சாபக்கேடு. விவரமேயில்லாத எளிய மனிதர்கள் அவர்கள். குழந்தைக்கு நோய் வந்தால் எங்கே செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள். சீனானுக்கு தன்னுடைய பெயரே சரியாகத் தெரியவில்லை. ஊரில் எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவார்களாம். அதே பெயராகிவிட்டது. எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பகீரென்றிருக்கிறது.

‘உங்க ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வர்றேன்’ என்று சீனான் கேட்டார். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கையைப் பிடித்து நிறுத்தினோம்.

‘போன வாரம் எந்தத் துணி போட்டிருந்தாங்களோ அதே துணியைத்தான் இப்பவும் புருஷனும் பொண்டாட்டியும் போட்டிருக்காங்க’ என்றார். சீனான் எங்களது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மருத்துவரைச் சந்தித்தோம். ‘இப்போதைக்கு பிரச்சினையில்லை...ஆனால் இவங்க எப்படி மெய்ண்டெய்ன் பண்ணப் போறாங்கங்கிறத பொறுத்து இருக்கு’ என்றார். அவர்களால் முடிந்ததுதான் முடியும். ஒற்றைக் குடிசை. அதற்குள் ஏழு ஜீவன்கள். குளிர்காலம். நினைத்துப் பார்க்கவே சில்லிடுகிறது. 


அறக்கட்டளையிலிருந்து பதினோராயிரத்து ஐநூறு ரூபாய்க்கான காசோலையை எழுதிக் கொடுத்தேன். ஸ்ரீனி என்னைக் கொடுக்கச் சொன்னார். ஸ்ரீனி மாதிரியான மனிதர்கள் முன்பாக நானெல்லாம் ஒன்றுமேயில்லை. அவரையே கொடுக்கச் சொன்னேன். கொடுத்தார். சீனானுக்கும் அவரது மனைவிக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஸ்ரீனி தனது சட்டைப்பையிலிருந்து முந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு சாப்பிடச் சொன்னார்.

எனக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. காற்று குளிரேறிக் கிடந்தது.