Nov 15, 2016

Day of the Falcon

வீட்டில் பழைய சாமான்களைத் துழாவிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத ஒன்று சிக்குவதைப் போல வேறொரு படத்தைத் தேடிக் கொண்டிருந்த போது ‘Day of the Falcon’ சிக்கியது. வெளிநாட்டுப் படம் எதையாவது பார்க்க வேண்டும் என விரும்பினால் ஐ.எம்.டி.பி தளத்தில் படத்துக்கான குறியீட்டு எண்ணையும் சில விமர்சனங்களையும் இணையத்தில் தேடி வாசித்துவிடுவது வழக்கம். இரவு பதினோரு மணிக்கு மேல் படம் பார்க்க ஆரம்பித்து ஒன்று அல்லது ஒன்றரைக்குள் தூங்கிவிட வேண்டும் என்பது ஒரு கணக்கு. வீட்டில் இணையம் இருக்கிறது, படம் சிக்குகிறது என்பதற்காக ஆகாவழிப்படங்களைப் பார்க்கத் தொடங்கி முக்கால் மணி நேரம் கழித்து கழுத்துக்குக் கத்தி வந்தால் நேரத்துக்கு நேரமும் வீண் பார்த்த பாவத்துக்குக் கண்ணுக்கும் வலி.

இன்னொரு அம்சம் மனநிலை.

எசகுபிசகான படமோ, சண்டைப் படமோ- இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதைத்தான் துழாவுவேன். இரவு பத்தரை அல்லது பத்தே முக்காலுக்கு வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை மூடி வைக்கும் போதே என்ன படம் என்று மனம் குதப்பத் தொடங்கிவிடும். கூகிளில் அடித்தால் காட்டிக் கொடுத்துவிடும். அப்படியான ஒரு மனநிலையில்தான் - எதையோ தேட- எதைத் தேடினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்தப் படம் மாட்டியது.

ப்ரிடா பிண்ட்டோ நடித்த படம். பிண்ட்டோவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் அவ்வளவும் பிடிக்காது என்று அர்த்தமில்லை. முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. நாயகிதான். ஆனால் ஊறுகாயாக வந்து போகிறார்.

பிண்ட்டோ இருக்கட்டும். 

படத்தின் கதையை முழுமையாகச் சொல்லாமல் கோடு காட்டினால் இப்படித்தான் - 

மத்திய கிழக்கு நாடுகளின் இரண்டு மன்னர்களிடையே நடைபெறும் சண்டையின் இறுதியில் ஒருவன் சரணடைகிறான். சரணடைகிறவனின் மகன்களை வெற்றியாளன் பறித்துக் கொள்கிறான். அவன் ஒன்றும் கொடுமை செய்வதில்லையென்றாலும் பெற்றவர்களை விட்டுக் குழந்தைகள் பிரிகிறார்கள். மன்னர்கள் இருவருக்குமிடையிலான ஒப்பந்தமாக ‘yellow belt’ என்னுமிடத்தை எல்லையாக நிர்மாணித்துக் கொள்கிறார்கள். ‘அதற்குள் நானும் வர மாட்டேன்; நீயும் வரக் கூடாது’ என்பது ஒப்பந்தம். 

மத்திய கிழக்கு நாடுகளில் எப்பொழுது எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது என்று தேடினால் பெர்ஷியாவில் 1908 ஆம் ஆண்டு முதன் முறையாக எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எண்ணெய்க்கு அவ்வளவு தேவை இருக்கவில்லை. ஆனால் தேவையானது மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. தாகம் அதிகரிக்க அதிகரிக்க முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கழுகுப் பார்வையோடு சுற்றி வரத் தொடங்குகின்றன. எங்கே எண்ணெய் வளத்தைக் கண்டறிந்தாலும் ‘இதை வெச்சு நீ இந்த உலகத்தையே வாங்கலாமே’ என்று அந்தப் பகுதியின் மன்னனிடம் சொல்லி பொத்தல் போடுகிறார்கள். ஒவ்வொரு சுல்தான்களுக்கும் ஆசை துளிர்விடுகிறது. அதுவரை பாலையும் மணலுமாகக் கிடந்த பூமியில் செல்வம் கொழிக்கத் தொடங்குகிறது. அதுவொரு சுவாரஸியமான தனி வரலாறு.

நம் படத்தின் கதை 1930களில் நடைபெறுகிறது. போரில் வெற்றி பெற்ற மன்னனிடம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து வருகிறவர்கள் ‘நீ மட்டும் ஒத்துகிட்டா இங்கிலாந்து ராஜாவைவிட பணக்காரன் ஆகிவிடலாம்’ என்கிறார்கள். அவனும் ஆசைப்படுகிறான். கரும் பொத்தலில் எண்ணெய் பெருக்கெடுக்கிறது. காசு கொட்டத் தொடங்குகிறது. ஊருக்குள் கார் வருகிறது. மின்சாரம் வருகிறது. பள்ளிகளைக் கட்டுகிறான். மருத்துவமனை அமைக்கிறான். ஆனாலும் கொஞ்சம் பழைய வாசம் அவனிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவனுடைய மகள்தான் பிண்ட்டோ. இசுலாமிய முறைப்படி வழக்கமான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுகிறாள்.

மன்னனிடம் வரும் அதே டெக்ஸாஸ்காரர்களின் வழியாகவே வினையும் வருகிறது. ‘யெல்லோ பெல்ட்’ட்டில் தோண்டினால் இன்னமும் நிறைய எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அந்தப் பகுதி குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் இருக்கிறது. ‘என்னடா இது வம்பா போச்சு?’ என்று குழம்பும் மன்னன் எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று முன்பு தோற்றுப் போன சுல்தானிடம் தனது ஆளைத் தூது அனுப்புகிறான். அந்த மன்னன் அவன் முடியவே முடியாது என்கிறான். அந்த ஒப்பந்தத்தை உடைத்துவிட வேண்டும் என்று குயுக்தியாக யோசிக்கத் தொடங்குகிறான்.

பறித்துக் கொண்டு வரப்பட்ட மகன்களில் ஒருவன் - மூத்தவன் - அப்பனை நோக்கிச் செல்வதற்காகத் தனது பாதுகாவலர்களைக் கொன்று தேவையில்லாமல் குண்டடிபட்டுச் சாகிறான். இளையவன் அவ்வளவு சூட்டிப்பு இல்லை. கண்ணாடி அணிந்த போத்து. எந்நேரமும் புத்தகம் கையுமாகத்தான் இருப்பானே தவிர உடல் பலம் இல்லாதவன். ஆனால் அவனுக்கு தனது மகள் பிண்ட்டோவைத் திருமணம் செய்து வைக்கிறான் மன்னன். திருமணம் செய்தவுடன் அவன் அடிமை என்ற நிலையிலிருந்து இளவரசன் என்ற இடத்துக்கு வருகிறான். அதனாலேயே ‘யெல்லோ பெல்ட்’ குறித்தான ஒப்பந்தம் உடைந்து போந்தாக அறிவிக்கிறான்.

இதற்குமேல் கதையைச் சொல்ல முடியாது. ஆனால் இன்னுமொரு ஒன்றரை வரி மட்டும் சொல்லிவிடுகிறேன். தனது தந்தையிடம் தான் தூது செல்வதாகச் செல்லும் மகன் அசகாய சூரனாக உருவெடுக்கும் படம்தான் ‘Day of the Falcon'. கழுகு என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் குறியீடுதான். எண்ணெய்க் கிணறுகள் வருவதை அங்கேயிருக்கும் பழங்குடிகள் எதிர்க்கிறார்கள். தோற்றுப் போன மன்னனின் ஆட்களும் எதிர்க்கிறார்கள். ‘இது குரானுக்கு எதிரானது’ என்கிறார்கள். ‘அப்படியென்றால் ஏன் அல்லா இந்த மண்ணில் பெட்ரோலியத்தை வைத்தான்’ என்று இளைய மகனே மடக்குகிறான்.

மீதத்தை திருட்டு விசிடியிலோ டோரண்ட்டில் தரவிறக்கியோ காண்க. எஃப்.எம் மூவீஸ் தளத்திலும் கூட காணலாம்.

பணம் சேர்கிற இடத்திலெல்லாம் பிரச்சினைகளும் சேரும் என்பார்கள். ஒட்டகமும் பேரீச்சையுமாக இருந்த நாடுகளில் கருப்புத் தங்கம் கிடைக்கத் தொடங்கிய பிறகுதான் பெரும்புயல் வீசத் தொடங்கியது. அண்டை நாடுகளுக்கிடையில் தொடர்ந்து சண்டைகள் உருவாகின அல்லது உருவாக்கப்பட்டன. பன்னாட்டு உளவு அமைப்புகள் கோடிகளைக் கொட்டி உள்ளடி வேலைகளைச் செய்தன. தமது அசாதாரணமான எண்ணெய் தாகத்துக்காக அந்த மண்ணைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயன்றன. சுல்தான்களும் மன்னர்களும் தலையாட்டி பொம்மைகளாக்கப்பட்டார்கள். பொன்னும் பொருளும் செளகரியங்களும் கொட்டப்பட்டன. கிழக்கு நாடுகளிலிருந்தும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் அணி அணியாக வேலைக்குத் திரண்டார்கள். இடம் வைத்திருந்த அரபுகள் பெருமுதலாளிகள் ஆனார்கள். வெள்ளைக்காரர்களின் சுண்டுவிரலசைவில் அத்தனையும் வரிசைக்கிரமமாக நடைபெறத் தொடங்கின.

இந்தப் பெரும் நாகரிக வரலாற்றின் தொடக்கப் புள்ளியை இந்தப் படம் தொட்டுக் காட்டுகிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் படம்தான். ஆனால் இழுவை என்று சொல்ல முடியாது. இந்த வரலாறு ‘இப்படித்தான் ஆரம்பித்தது’ என்று சுட்டிக் காட்டுவதற்கு இது நல்ல படம். இப்படி ஆரம்பித்த வரலாறு இன்றைய நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை வேறு படங்களிலும் புத்தகங்களிலும் தேட வேண்டும். உங்களுக்குத் தெரிந்தாலும் அறியத் தரவும்.