Nov 8, 2016

நடுவில் கொஞ்சம் பக்கங்கள்

சென்ற தலைமுறை வரைக்கும் வேலை நிரந்தரமின்மை என்பது தலைவலி இல்லை. அரசாங்க வேலையோ தனியார் வேலையோ - அறுபதை நெருங்கும் வரையில் காலத்தை ஓட்டிவிடலாம். முப்பதுகளில் திருமணம், நாற்பதுகளில் சொத்துச் சேர்ப்பு, ஐம்பதுகளில் பிள்ளைகளின் திருமணம் என்பதற்கும் அறுபதை நெருங்குகையில் ஓய்வு பெறுவதற்கும் சரியாக இருக்கும். சொந்தத் தொழில் செய்தவர்கள், விவசாயம் பார்த்தவர்களையெல்லாம் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. அரசுத் துறைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட பணிகளைச் செய்தவர்களின் வாழ்க்கையில் அடுத்த மாத வேலை, சம்பளம் என்றெல்லாம் பெரிய புயல் இருந்ததில்லை.

இன்றைக்கு அப்படியில்லை.

பதினைந்து வருடங்கள் அனுபவம் என்றால் மென்பொருள் துறையில் பதற்றம் வந்துவிடுகிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகாகத் திறந்துவிடப்பட்ட ஆட்டுமந்தைக்  கல்லூரிகளில் படித்துவிட்டு கணினித்துறையிலும் தனியார் துறையிலும் நுழைந்தவர்கள் லட்சக்கணக்கில் தேறுவார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குள் இருக்கும். ‘மிடில் லெவல் ஆட்களைத் தூக்குகிறார்கள்’ என்று செய்தியை வாசிக்கும் போதும் கொஞ்சம் நடுக்கம் வராமல் இல்லை. 

இன்றைய தலைமுறையிலும் கூட முப்பதுகளில் திருமணம், நாற்பதுகளில் சொத்துச் சேர்ப்பு என்ற வாழ்க்கை முறையில் எந்த மாறுதலும் இல்லை. கடந்த தலைமுறை வரை எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இருக்கிறோம். ஆனால் வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, குழந்தைகளின் படிப்புச் செலவு, பெற்றோருக்கான செலவுகள், தமக்கு மெல்ல எட்டிப்பார்க்கும் உடல் உபாதைகளுக்கான வைத்தியங்கள் என்று செலவுகள் கழுத்தை நெரிக்கத் தொடங்கும் போது ‘வேலை இல்லை’ என்று பாறாங்கல்லை நிறுவனம் இறக்கி வைக்கும் போது என்ன செய்ய முடியும்?

முன்பெல்லாம் மென்பொருள் துறை நிறுவனங்களே தமது பணியாளர்களுக்கான ப்ராஜக்டைக் கண்டுபிடித்து வேலையை ஒதுக்குவார்கள். இப்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் தமது நிறுவனத்தில் ‘பெஞ்ச்’சில் இருக்கும் ஆட்களிடம் ‘ரெண்டு மாசத்துல ஒரு ப்ராஜக்ட் கண்டுபிடிச்சுக்குங்க’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். பணியாளரே எந்த ப்ராஜக்டில் ஆட்கள் தேவை என்று கண்டறிந்து, மேலாளரிடம் பேசி, நேர்காணலில் பங்கேற்று, வெற்றி பெற்று வேலையைப் பிடிக்க வேண்டும். அப்படி நிறுவனத்திற்குள்ளேயே தமக்கென வேலையைப் பிடிக்க முடியாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக ‘பெஞ்ச்’ச்சில் இருப்பவர்களை வெளியேற்ற நிறுவனங்கள் தயங்குவதேயில்லை. 

இன்றைக்கு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் நடுத்தர வயதுடைய ஆட்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்பொழுது வெளியேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. என்ன ஒன்று- செய்தி வெளியில் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதாரம் சரியில்லை, பெரிய ப்ராஜக்டகள் வருவதில்லை, இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறோம், உலகமே மெல்லத்தான் இயங்குகிறது என்று ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எதையாவது முன்னிட்டு சப்தம் வராமல் கழுத்தை வெட்டிவிடுகிறார்கள். 

பதினைந்து வருட அனுபவமுள்ள ஓராளுக்கு வருடத்திற்கு பதினைந்து லட்சமோ அல்லது இருபது லட்சமோ கொடுத்து பணியில் வைத்திருப்பதைக் காட்டிலும் நான்கைந்து வருட அனுபவமுடைய ஆளுக்கு வருடம் ஐந்து அல்லது ஆறு லட்சம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்வதைத்தான் நிறுவனங்கள் விரும்புகின்றன. இப்படி முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பவர்கள் வேலையை இழக்கும் அபாயத்தை Mid-career crisis என்கிறார்கள்.

நடுத்தர வயதுக்காரர்கள் வேலையை இழப்பதற்கு சம்பளம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்குமே தனது முப்பத்தைந்தை நெருங்கும் வயதில் தான் செய்து கொண்டிருக்கும் வேலையில் அல்லது தொழிலில் ஒரு சலிப்பு வருவது சகஜம்தான். அதுவரையிலும் தாம் செய்து கொண்டிருந்த வேலை சலிப்பு மிக்கதாகத் தோன்றும். ஆங்கில எழுத்து ‘U'வடிவம்தான். வேலை செய்யத் தொடங்கும் ஆரம்பகாலத்தில் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல வடியும். முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதின் போது அது முழுமையாக வடிந்து தேக்கமடையும். அந்தச் சமயத்தில்தான் நிறுவனங்கள் கழுத்துப்பட்டையை வாங்கி வைத்துக் கொண்டு வெளியில் அனுப்பிவிடுகின்றன.

U எழுத்து மேலேயிருந்து கீழே இறங்கி மீண்டும் மேலேறுவதைப் போலவே ஒவ்வொருவரின் தொழில் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் உண்டு என்கிறார்கள். அதை விளையாடுவதற்கு நம்மைத் தயாராக்கிக் கொள்கிறோமா என்பதில்தான் நாற்பதுக்கு மேலான நமது வாழ்க்கையின் உற்சாகம் தீர்மானிக்கப்படுகிறது. 

விவரமானவர்கள் முப்பத்தைந்து வயதை நெருங்கும் போது ‘இனி அடுத்து என்ன?’ என்று திட்டமிடத் தொடங்குகிறார்கள். செய்த வேலையையே தொடர்வதா அல்லது புது ஆற்றில் இறங்கிவிடலாமா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. இதுவரையிலும் செய்த வேலை அல்லது தெரிந்த தொழில்நுட்பத்தையே தொடர்வது என்றால் நம்மை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளப் போகிறோம் என்று திட்டமிட வேண்டியிருக்கிறது. அவசர யுகத்தில் நாம் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியவை ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டேதான் இருக்கின்றன. தெரிந்ததை புதுப்பித்துக் கொள்ளுதல்(Refresh) புதியதைக் கற்றுக் கொள்ளுதல்(Learning), சான்றிதழ்த் தேர்வுகள் (Certification) என்பதையெல்லாம் கணித்து அடிக்க வேண்டியது ஒரு பக்கம் என்றால் புது ஏரியாவில் உள்ளே புகுவதென்றால் நமக்கு எது ஒத்து வரும், அந்தத் துறையில் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும், நேர்காணலில் எப்படிப் பேச வேண்டும், என்ன காரணம் சொல்லி புது வேலையை வாங்குவது என்று திட்டமிடுவது இன்னொரு பக்கம். செய்து கொண்டிருந்த வேலையை புதுப்பித்துக் கொள்வதைவிடவும் புது ஆற்றில் காலைவிடுவதற்குக் சற்றே துணிச்சல் அதிகமாக வேண்டும். ரிஸ்க்கும் அதிகம். ஆனால் இதில்தான் உற்சாகம் அதிகம்.  

பொதுவாகவே நடுத்தர வயதுடைய ஆட்களுக்கான வாய்ப்புகள் என நிறைய இருக்கின்றன. ‘இதனை இவன் முடிக்கும்’ என்பதான வேலைகள் அவை. அவற்றை நாம்தான் தேட வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நண்பர்களிடம் விவாதிப்பதன் வழியாகவோ அல்லது இணையத்தில் அலசி ஆராய்வதன் வழியாகவோ நம்முடைய அடுத்த இலக்கைக் கண்டுபிடித்துவிட முடியும். அடுத்த வருடத்தில் என்ன செய்யப் போகிறோம், அடுத்த ஐந்தாவது வருடத்தில் என்னவாகப் போகிறோம் என்ற இலக்குகளை அமைத்துக் கொண்டால் அதை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கலாம். இதைச் செய்தாலே கூட பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பித்துவிட முடியும். பெரும்பாலானவர்கள் இந்த இடத்தில்தான் சறுக்கிவிடுகிறோம்.

போட்டி மிகு இந்த உலகத்தில் முப்பத்தைந்து வயதை நெருங்கும் போது பாம்பு பழைய சட்டையை உரிப்பதைப் போல நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வதும், நமக்கு நாமே அறிவு புகட்டிக் கொள்வதும் அவசியம் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். முப்பத்தைந்து வயதிலும் நாற்பதிலும் வந்து சேர்கிற சலிப்பு நிரந்தரமானது இல்லை. அது தற்காலிகமானது. அதற்குப் பிறகுதான் ஏற்றமே இருக்கிறது. ஒன்றே ஒன்று- சற்று நேரம் ஒதுக்கி யோசிக்கவும், எதிர்காலப் பாதையைத் திட்டமிடவும், எத்தனிப்புகளை மேற்கொள்ளவும் மெனக்கெட வேண்டும். அதைச் செய்துவிட்டால் அடுத்த இருபதாண்டுகளுக்கு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி நாம் அசமஞ்சமாக இருந்துவிட்டு உலகத்தைப் பழித்து பயனில்லை. அது வேகமாகத்தான் ஓடும். தனது வேகத்தோடு ஒத்து வருகிறவனையெல்லாம் இழுத்துக் கொண்டே ஓடுகிறது. தடுமாறி நிற்கிறவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அது வெறியெடுத்தபடி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது- காலங்காலமாக.