Nov 17, 2016

ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்

வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக 
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில் 
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம் 
ஒன்று, முதலாக இருந்தார்
அல்லது 
கடைசியாக இருந்தார்
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுஞ்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி 
வருகிறீர்களா என்று கேட்டார்
அப்போது
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் வெகுவாக தொந்தரவு செய்த கவிதை இது. கவிஞர் கண்டராதித்தன் எழுதியிருக்கிறார்.

     (கவிஞர் கண்டராதித்தன்)

இரவில் கவிதையை உள்ளுக்குள் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்து திரிந்தது. ஷண்முகசுந்தரத்திற்கு ஒரு உருவம் உண்டானது. பாலண்ணன், வரவேற்பு நிகழ்ச்சி, சுற்றுப்புறம், நூறு கலைஞர்கள், லாரியில் வந்த கடவுள், லாரியின் நிறம் என்று எல்லாமுமாகச் சேர்ந்து மனதுக்குள் சிறு நாடகத்தை உருவாக்குகினார்கள்.

சமீபத்தில் ஒரு நண்பர் ‘வாசிப்புக்கும் படம் பார்ப்பதற்குமான வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?’ என்றார். 

இருக்கிறது. 

திரைப்படம் பார்ப்பதற்கும் வாசிப்பதற்குமான பெருத்த வித்தியாசம் என்றால் மனதின் அலைதலைச் சொல்லலாம். திரை நமது மொத்த கவனக் குவியத்தையும் தன்னை நோக்கி இழுத்துப் பிடித்துக் கொள்கிறது. திரையில் உயரமாக, கறுத்த, வேஷ்டியை மடித்துக் கட்டிய ஒருவர் ஷண்முகசுந்தரமாக வந்தால் மனம் அவரோடு ஒட்டிக் கொள்ளும். வேறு யாரையும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. காட்சியில் சாலையின் இருமருங்கிலும் பசுமை தென்பட்டால் அப்படியே மனம் ஏற்றுக் கொள்கிறது. காய்ந்த பூமியில் இந்த வரவேற்பு நிகழ்ந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கூட நினைப்பதில்லை. ஆனால் வாசிப்பு அப்படியில்லை. ஒவ்வொரு வரிக்குமிடையில் மனம் கிளறப்படுகிறது. வாசிக்கிறவனை யோசிக்கச் செய்கிறது. வாசிப்பின் பெரும்பலம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். பாத்திரம், காட்சி என ஒவ்வொன்றையும் வாசகனின் ஆழ்மனமே முடிவு செய்கிறது. தனது கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொன்றையும் அவனே சிருஷ்டிக்கிறான். இதைத் திரையனுபவம் எந்தக் காலத்திலும் கொடுப்பதில்லை. திரையில் மிளிரும் கதாபாத்திரங்கள்தான் நம் மொத்த எண்ணத்தையும் ஆக்கிரமித்து வழி நடத்துகிறார்கள். அவர்கள் செல்லும் பாதையிலேயே நாமும் பின்னகர்கிறோம். நகர்கிறோம் என்பதைவிட கட்டுண்டபடியே ஓடுகிறோம். கட்டுண்டு கிடத்தலுக்கும் சிறகை விரிப்பதற்குமான பெரும் வித்தியாசம் வாசித்தலுக்கும் படம் பார்த்தலுக்கும் இருக்கிறது.

கண்டராதித்தனின் இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் மனக் கிளறலை நிகழ்த்துகிறது. வாசிக்க வாசிக்க மனம் தானாகவே கிறுக்கிக் கிறுக்கி நாடகத்தை நடத்தி முடிக்கும் போது ஷண்முகசுந்தரத்தின் மீது பரிதாபம் வராமல் இல்லை. ஆனால் அந்த பரிதாபம் அவசியமேயில்லை எனத் தோன்றியது. 

ஸ்ரீமான் ஷண்முகசுந்தரமே எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறார். எவனைப் பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாகத் தன்னந்தனியாக தவில் வாசிக்கிறார். அவரே அலட்டிக் கொள்ளாதபோது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அவரை அரவணைக்கவும் இந்த உலகில் ஏதாவதொரு கடவுள் இருக்கிறது. இல்லையா?

யோசித்துப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே ஷண்முகசுந்தரம்தான். நம்மை அனுசரிக்கும் ஒவ்வொருவருமே கடவுள்தான்.

இங்கே யார்தான் முட்டாள் இல்லை? ஒவ்வொருவருமே முட்டாள்தான். என்னையும் உங்களையும் வசைபாடவும், எள்ளி நகையாடவும் உலகின் ஏதோ ஒரு மூலையில் சில நாக்குகள் துடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. எப்பொழுதுமே யாரோ சிலர் வார்த்தைகளைத் தேடிக் கொண்டேயிருப்பார்கள். கண்ணடித்து சிரித்துக் கொண்ருடேயிருப்பார்கள். அந்த உரையாடல்களுக்குள்ளாக நம் பெயரும் அறிவும் திறமையும் சிக்கி நிர்வாணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் எதைப் பற்றியும் அறியாமல் நாம் தனித் தவில் வாசித்துக் கொண்டிருக்கிறோம். என்னை அரவணைக்க நீங்களும் உங்களை அரவணைக்க நானுமாகச் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்?

உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இது பொருந்தும்.

நவீன உலகின் வினோதம் இது. வசவுகளுக்கும் அவமானங்களுக்கும் தப்பி வாழ்கிற மனிதன் என்று ஒருவனையும் கடைத்தேற்ற முடியாது. எல்லோருமே முட்டாள்கள். எல்லோருமே பைத்தியகாரர்கள். எல்லோருமே மடையர்கள்தான். உலகில் கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மனிதனையும் முட்டாள் என்றும் மடையன் என்றும் பைத்தியகாரன் என்றும் சொல்வதற்கு தனிக் கூட்டம் உண்டு. ‘அவனெல்லாம் ஒரு ஆளா’ என்று எப்பேர்ப்பட்ட மனிதனையும் இடது கையால் விசிறிவிடுகிற அறிவாளிகள் பெருத்த பூமி இது. 

உலகம் அப்படித்தான்.

தம்மை கலைஞன் என்றும், எழுத்தாளன் என்றும், அறிவாளி என்றும் கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே கருதிக் கொள்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அடுத்தவர்கள் முட்டாள்கள்தான் - ஷண்முகசுந்தரம் மாதிரி.

பாராட்டாக இருந்தாலும் சரி; வசையாக இருந்தாலும் சரி- வெளிப்படையாகச் சொல்லாத கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது. அவர்கள் நம் முதுக்குப் பின்னால் நம்மைத் திட்டுவார்கள். அலட்சியப்படுத்துவார்கள். அம்போவெனவிடுவார்கள். அந்தப் பக்கமாகச் சென்று நம்மை வசைபாடுவார்கள். நம் நிழலையும் பிம்பத்தையும் கீழே தள்ளிவிட்டு மிதிப்பார்கள். கண்டுகொள்ளாத வரைக்கும் நாம்தான் மிகப்பெரிய வித்வான்கள். நாம்தான் உலகின் அதிசிறந்த ஆளுமைகள். அடுத்தவர்கள் சொல்வது காதில் விழுந்தால் அதோடு கதை முடிந்தது. 

வெகு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய  கவிதை இது.

நமக்கான மிகச் சிறந்த பாடம் ஒன்றையும் புதைத்து வைத்திருக்கிறது. அடுத்தவனின் செய்கையையும் சொற்களையும் சட்டை செய்யாத ஷண்முகசுந்தரங்களுக்கானது இந்த உலகின் சந்தோஷங்கள். அவமானங்களை உதாசீனப்படுத்தும் ஸ்ரீமான்களுக்கானது இந்த உலகின் பாடல்கள்.

என்றைக்காவது ஒரு நாள் ஷண்முகசுந்தரம் சரியாக வாசித்துவிடக் கூடும். அன்றைய தினம் வரைக்கும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனித்தவில் வாசித்துக் கொண்டேதான் இருப்பார். அவரை லாரியில் வரும் கடவுள்கள் அழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 

அட்டகாசம் கண்டராதித்தன்!