Nov 4, 2016

குண்டுமுட்டி வகையறா

எங்கள் ஊரில் ஒரு ஆயா இருந்தது. குண்டுமுட்டி. மிகப்பெரிய குசலவாதி. சொற்களில் தேன் தடவிப் பேசும். அதுவொரு கலை. இங்கு எந்த மனிதனுக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. யாரிடமுமே பகிர்ந்து கொள்ள முடியாத வலிகளும் வேதனைகளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு அல்லவா? கணவன் அல்லது மனைவியிடமும் கூட இறக்கி வைக்க முடியாமல் உள்ளே என்னவோ புதைந்து கிடக்கிறதென குண்டுமுட்டி ஆயாவுக்கும் தெரியும். தனிமையில் சிக்கினால் எப்பேர்ப்பட்ட கல்லுளிமங்கனிடம் இருந்தும் விவகாரத்தைக் கறந்துவிடும். ஆயாவிடம் இறக்கி வைத்தால் பாரம் குறைகிறது என்று நம்பி உளறினால் அடுத்த அரை மணி நேரத்தில் பக்கத்து வீட்டில் புகைந்து கொண்டிருக்கும். முக்கால் மணி நேரத்தில் அதற்கடுத்த வீட்டில் புகைந்து கொண்டிருக்கும். இப்படியே அடுத்த நாளின் பொழுது புலர்வதற்குள் விவகாரத்தை ஊர் முற்றத்தில் ஏற்றி நிறுத்தியிருக்கும்.

கள்ளக்காதல், கசமுசாகாதல், திருட்டுக்காதல், தில்லாலங்கடித்தனம் என்று ஆயாவால் பிரஸ்தாபிக்கப்படாத விவகாரமே இல்லை. நோட்டீஸ் அடிக்காத குறைதான். உள்ளூரில் அரைக்கிழ ஆட்கள் அலர்ட்டாகி கல்லை விழுங்கியது போல ஆயாவிடம் வார்த்தைகளைவிடாமல் சமாளிக்க முயற்சிப்பார்கள். எப்படி பந்து வீசினாலும் ஆறு அடிக்கிற ஆயாவிடம் தோற்று தோற்று பயந்து போன கிழங்கட்டைகள் குண்டுமுட்டியைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். எங்களைப் போன்ற பொடியன்கள் எல்லாம் குண்டுமுட்டி ஆயாவுக்கு அல்வா சாப்பிடுவது போல- ‘ஏஞ்சாமி...உங்கப்பனும் அம்மாளும் எதுக்கு சண்டை போட்டாங்க?’ என்று கேட்கிற விதத்தில் கேட்டு உறிஞ்சி எடுத்துவிடும். அடுத்த நாள் அம்மாவும் அப்பாவும் தெருவில் இறங்க முடியாது. அத்தனை பேருக்கும் விவகாரம் தெரிந்திருக்கும்.

உளறித்தான் விடுமே தவிர ஆயாவிடம் மிகப்பெரிய பலமிருந்தது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்லிவிடும். அனுபவம் அப்படி. திருமணம் ஆன புதிதிலேயே கணவன் தவறிவிட வாழ்நாள் முழுவதும் தனிக்கட்டைதான். வாழ்க்கை முழுவதுமே துன்பமும் கண்ணீரும் என்றாலும் அத்தனையையும் மறைத்துக் கொள்வதற்கு ஆயாவுக்குத் தெரிந்திருந்தது. ஊரில் எந்தவொரு விழாவிலும் ஆயாதான் முன்னால் நிற்கும் - கல்யாணமாக இருந்தாலும் சரி; கருமாதியாக இருந்தாலும் சரி; பூப்பு நன்னீராட்டு விழாவாக இருந்தாலும் சரி. ஆயிரமாயிரம் மனிதர்களைப் பார்த்துப் பார்த்து உருவேறிய அனுபவம்.

வெளியே ஒப்பித்துவிடும் என்று தெரிந்தாலும் கூட தீர்க்கவே முடியாத விவகாரங்களுக்கு ஆயாவை அழைத்து வைத்து பஞ்சாயத்து செய்து நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். தன்னால் முடியாதபட்சத்தில் ‘வடக்கால ஊட்டுக்காரங்களைக் கூப்பிடு’ ‘இதுக்கு ராசுக்கவுண்டன்கிட்டத்தான் போகோணும்’ என்று சரியான திசையையாவது காட்டிவிடும். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ஆயாவை வெறும் தீர்வுகளுக்கானவளாகத்தான் பார்த்தார்களே தவிர மரியாதை என்பதே இல்லை. ‘உளறுவாய்’ என்றும் ‘ஓட்டவாய்’ என்றும் ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லிக் கரித்துக் கொட்டினார்கள்.

ஆயா இறந்து வெகு காலமாகிவிட்டது. இப்பொழுதும் ஆயாவை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அடுத்தவர்களின் ரகசியத்தைக் காக்கத் தெரியாத எந்த மனிதருக்கும் இன்னொரு மனிதரிடம் மரியாதை என்பதே கிஞ்சித்தும் இருக்காது. பள்ளியில், கல்லூரியில், சக பணியாளர்கள் என்று யாரை வேண்டுமானாலும் நினைத்துப் பார்க்கலாம். அப்படியான ஒரு டிக்கெட் ஏதாவதொரு அடையாளத்தோடு நம்மைச் சுற்றிலும் இருந்து கொண்டேதான் இருக்கும். வாழ்க்கையில் எந்தப் பாத்திரமாக வேண்டுமானாலும் மாறலாம்; ஆனால் குண்டுமுட்டி ஆயாவின் வடிவம் மட்டும் எடுத்துவிடக் கூடாது என்றுதான் ஆசைப்படுவேன்.

பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு மனிதர் அழைத்திருந்தார். குடும்பப் பிரச்சினை. அதோடு சொத்துப் பிரச்சினையும் சேர்ந்திருந்தது. விவரங்களைச் சொல்லிவிட்டு அந்தப் பகுதியில் யாரையாவது தெரியுமா என்றார். நண்பர்கள் மூலம் விசாரித்து அதிகாரி ஒருவரின் தொடர்பு கொடுத்திருந்தேன். பேசி சுமூகமாக முடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. சந்தோஷம்தான். தீபாவளியன்று அழைத்தார். வாழ்த்துச் சொல்லத்தான் அழைக்கிறார் என்று நினைத்தேன். ‘பிரச்சினை எல்லாம் முடிஞ்சுது..தேங்க்ஸ்..ஆனா இதையெல்லாம் எழுதிடாதீங்க’ என்றார். தீபாவளியன்று எனக்கு இதெல்லாம் தேவையா? கோபத்தை அடக்கிக் கொண்டு ‘சார் இப்போ ஊர்லதான் இருக்கேன்..இன்னும் ரெண்டு நாள் இங்கதான் இருப்பேன்..வந்தீங்கன்னா செருப்புல ரெண்டு அடி போட்டுட்டு போய்டலாம்’ என்றேன். ஒரு வினாடி அவருக்குப் புரியவில்லை. பிறகு ‘ஸாரி...ஸாரி’என்றார். ‘அதை நீங்களே வெச்சுக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்துவிட்டேன்.

நிறையப் பேர் இப்படித்தான் பேசுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக சித்த மருத்துவர்களின் அலைபேசி எண் வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்தார். அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கோவை மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். யதேச்சையாக ‘மருத்துவர் யாருங்க?’ என்று கேட்டிருந்தேன். பதிலில் மருத்துவரின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு ‘நமக்குள்ளேயே வெச்சுக்குவீங்கன்னு நம்புறேன்’ என்று எழுதியிருந்தார். அந்த நம்பிக்கை கூட இல்லையென்றால் எதற்காக நம்மை அணுகுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் கன கோபம் வரும். வெறும் தகவலைக் கொட்டுகிற எந்திரமாக மட்டும் நம்மை நினைக்கிறார்கள் என்று தோன்றும் போது ஆயாசமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை என்று நினைத்தால் வாரம் ஒருவராவது சொறிந்துவிடுகிறார்கள்.

பத்து மின்னஞ்சல்கள் வந்தால் அதில் ஒன்றில் இப்படி இருக்கும். இப்படியான ஒன்றுதான் சுள்ளென்று குத்துகிறது. அதற்காகவாவது வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. வேணிக்குக் கூட மின்னஞ்சல் கடவுச் சொல் தெரியும். ஒருமுறை மின்னஞ்சலை வாசித்துவிட்டு ‘இதென்னங்க இந்தப் பிரச்சினைக்கெல்லாம் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்காங்க’ என்ற போது கடியென்று கடித்திருக்கிறேன். யாரோ ஒருவர் நம்மை நம்பி அனுப்புகிற விவகாரத்தை மனைவியென்றாலும் கூட தெரிந்து கொள்ளக் கூடாது என்றுதான் நினைப்பதுண்டு. நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்குமென நம்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் வலியையும், வேதனையையும், துக்கத்தையும் விலாவாரியாக அடுத்தவர்களுக்குப் படையலிடுவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

நம்பி எழுதப்படுகிற இத்தகைய மின்னஞ்சல்களுக்குள்ளும், அலைபேசி அழைப்புகளுக்குள்ளும்தான் ‘ப்ளீஸ் எழுதிடாதீங்க’ வகையறாக்களும் வந்து வாய்க்கிறார்கள்.  இப்படியான சமயங்களில் ஒருவேளை குண்டுமுட்டி ஆயாவாக மாறிக் கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம் வந்து பழைய பதிவுகளையெல்லாம் கூடப் புரட்டிப் பார்ப்பதுண்டு. சுய எள்ளல் செய்து கொள்கிறேனே தவிர அடுத்தவர்களின் பிரச்சினைகளை கழுவில் ஏற்றியதாக ஞபாகமில்லை. ஒருவேளை இதை எழுதினால் வேறு சிலருக்குப் பயன்படும் என்று தோன்றினால் குறைந்தபட்சமாக அடையாளங்களை மறைத்துவிட்டுத்தான் எழுதப்பட்டிருக்கின்றன. பிறகு ஏன் இப்படி சலம்புகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

சக மனிதனை நம்ப வேண்டியதில்லை. ஆனால் நம்புவதாக நடிப்பதுதான் அந்த மனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை. இந்த அடிப்படையான நாகரிகம் கூட இல்லாமல் அணுகுகிறவர்களைத் திட்டுவதற்கு ஆயிரம் சொற்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு இது போதும்.