Nov 27, 2016

ஒரு புஸ்தகம் போடணும்...

டிசம்பர் மாதம் நெருங்கும் போது புத்தகம் அச்சாக்கம், பதிப்பகங்களை அணுகுவது குறித்து ஒன்றிரண்டு பேர்களாவது கேட்பது வாடிக்கையாகிருக்கிறது. எழுதியதையெல்லாம் புத்தகமாக்கிவிட வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? போதாக்குறைக்கு கிடைக்கிற சந்துகளிலெல்லாம் நம்மவர்கள் விளம்பரங்களை ஆரம்பித்து வைத்து உசுப்பேற்றுகிறார்கள்.

‘உங்களுக்கு புடிச்ச பதிப்பகத்துக்கு அனுப்பி வைங்க...காசு வாங்காம அச்சடிச்சுக் கொடுத்தா புக்கா வரட்டும்...ஒருவேளை காசு கேட்டாங்கன்னா யோசிச்சுங்க’ என்றுதான் பதில் சொல்கிறேன்.

பணம் கொடுத்து புத்தகத்தை பதிப்பிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அப்படி புத்தகத்தை வெளிக் கொண்டு வருவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று நிறைய இருக்கக் கூடும். பணிபுரியும் இடத்திலும் உறவினர்களிடமும் ‘இவர் எழுத்தாளர்’ என்று நம் பெயர் ஒரு படி உயரக் கூடும். காதலிக்காகவோ, மனைவிக்காகவோ அல்லது நமக்கே நமக்கான சந்தோஷத்துக்காகவோ என்று பின்னணியில் ஏதாவதொரு காரணம் இருக்கும்.

புத்தகம் வெளியானால் சந்தோஷம்தான். இல்லையென்றல்லாம் சொல்லவில்லை. ஆனால் அதற்காக ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் என்று செலவு செய்ய வேண்டியதில்லை. அது பெருந்தொகை. எவ்வளவு செலவாகும் என்று தோராயமாகப் பார்ப்பதற்கு முன்பாக ஏன் இப்பொழுதே புத்தகம் வெளியாக வேண்டும்? எவ்வளவு பிரதிகள் விற்கும் உள்ளிட்ட ஒன்றிரண்டு சுய பரிசோதனைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒருவேளை எந்தக் கேள்வியையும் கேட்டுக் கொள்ளவில்லையென்றாலும் கூட  ‘ஏன் ஏதாவதொரு குறிப்பிட்ட பதிப்பகத்தின் மூலமாக புத்தகம் வெளி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்ற ஒற்றைக் கேள்விக்காகவாவது பதில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

‘அந்த பதிப்பகம் பிரபலமானது. அவர்கள் மூலமாகப் புத்தகம் வெளியானால் கவனம் கிடைக்கும்’ என்ற எண்ணமிருந்தால் அடித்து நொறுக்கிவிடலாம். அதுவொரு myth. வெளிநாடுகளில் வசிக்கும் முக்கால்வாசி நண்பர்கள் இப்படித்தான் நம்பிக் கொண்டு புத்தகத்தை அனுப்பி வைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. தீபாவளி சமயத்தில் லட்டு உருட்டிக் குவித்து வைக்கிற சேட்டு கடைக்கும் டிசம்பர் மாத பதிப்பக வேலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. உற்பத்தித் துறையில் மாஸ் புரொடக்‌ஷன் என்ற சொல் உண்டு. கிட்டத்தட்ட அதுதான் நடக்கிறது.

புத்தகத்தைக் கொண்டு வருவதோடு சரி.

ஓர் எழுத்தாளனின் புத்தகத்தை ஒரு பதிப்பகம் கொண்டு வருகிறது என்பதற்காகவே அந்த பதிப்பகம் அவனுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்து அவனுக்கான விளம்பரங்களைச் செய்து கொடுப்பதில்லை. யாரைப் பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன, எந்த எழுத்தாளனின் பெயரைக் குறிப்பிட்டு பதிப்பாளன் பொதுவெளியில் பேசுகிறான் என்பதிலெல்லாம் ஆயிரத்தெட்டு அரசியல் உண்டு. தமக்கு எல்லாவிதத்திலும் உவப்பான ஒன்றிரண்டு எழுத்தாளனை மட்டுமே ஒவ்வொரு வருடமும் பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்கும். அந்த உவப்பான ஒன்றிரண்டு பேர் பட்டியலில் சேர்வதற்காக வருடம் முழுவதும் மெனக் கெட வேண்டும். கொஞ்சம் கூடத் தயங்காமல் சொறிந்துவிட வேண்டும். கூழைக் கும்பிடு போட வேண்டும். பஜனை பாட வேண்டும். நம் ஈகோவை காலடியில் போட்டு மிதித்துவிட்டுத்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியா கிட்ட போற கணக்கா’ என்ற சொலவடை எங்கள் ஊர்ப்பக்கம் பிரசித்தம். அப்படியான கதைதான் இது.  

‘எழுத்தின் தரத்திற்காகவே இந்த எழுத்தாளனைத் தூக்கிப் பிடிக்கிறோம்’ என்று பதிப்பகம் சொல்லுமானால் வாய் உட்பட எதில் வேண்டுமானாலும் சிரிக்கலாம். பெரும்பாலான பதிப்பகங்கள் அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. எப்பொழுது யாரைத் தூக்கி விட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். எப்பொழுது தூக்கிவிட்டவனை இழுத்து கீழே தள்ள வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். உன்னிப்பாகக் கவனித்தால் நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஆனால் அதே சமயம் நேரடியாகக் கண்களுக்குப் புலனாகாத நுண்ணரசியல் இது.

இந்த மாதிரியான கச்சடா வேலைகளையும் கழிசடை அரசியலையும் செய்யாத நல்ல பதிப்பகங்களும் இருக்கின்றனதான். ஆனால் அவையெல்லாம் மறைக்கப்பட்டுவிடுகின்றன. அவர்கள் சரி; இவர்கள் தவறு என்றெல்லாம் அறம் பேச முடியாது. வல்லவன் பிழைத்துக் கொள்கிறான் என்கிற தத்துவம்தான் இங்கே செயல்படுகிறது. அதனால் எவனோ எப்படியோ போனாலும் நாம் தப்பித்துக் கொள்வோம் என்கிற அளவுக்கான தெளிவாவது இருந்தால் சரிதான்.

நம்முடைய பெயர் பரவலாக வாசக கவனம் பெறாத போதும், புத்தகமாகக் கொண்டு வந்தால் விற்பனை ஆகுமா என்று சந்தேகம் வலுத்திருக்கும் போதும் புத்தகம் வெளியிடுவது என்பது தற்காலிக இன்பம்தான். அந்தத் தற்காலிக இன்பம் தேவையற்றது. தொடர்ந்து எழுதி நம்மை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தலாம். ‘இல்லை இல்லை..எனக்கு அந்த இன்பம் தேவை’ என்று சொன்னால் அதற்காக சில அடிப்படையான விஷயங்களையாவது தெரிந்து வைத்துக் கொண்டு களமிறங்கலாம். 

நூறு பக்கமுள்ள புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சடித்தால் முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இருநூறு பக்கங்கள் என்றால் நாற்பதாயிரம் ரூபாயும் முந்நூறு பக்கங்களுடைய புத்தகம் என்றால் ஐம்பதாயிரம் வரைக்கும் ஆகலாம். இதுதான் அதிகபட்சம். வடிவமைப்பு, அட்டை உருவாக்கம் என எல்லாமும் சேர்ந்த செலவு இது. பதிப்பகங்களில் கொடுக்கும் போது அவர்கள் பணம் கேட்கக் கூடும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசியும் என்பதால் இந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் தரலாம். அவ்வளவுதான் கணக்கு. இதற்கு மேலாகக் காசு கொடுத்துவிட்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருப்பது தேவையே இல்லை.

பதிப்பகத்தின் லோகோவே தனது புத்தகத்துக்குத் தேவையில்லை என்று நினைக்கிறவர்களுக்கு ‘ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்’ சாலச் சிறப்பு. ஆயிரமோ இரண்டாயிரமோ செலவு செய்து புத்தகத்தை வடிவமைத்து சிடியில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது அச்சடித்துக் கொள்ளலாம். பக்கத்துக்கு இருபத்தைந்து காசு கணக்கு ஆகும். அட்டை அச்சுக்குக்கு பதினைந்திலிருந்து இருபது ரூபாய். நூறு பக்கமுள்ள புத்தகம் என்றால் நாற்பது ரூபாயில் வேலை முடிந்தது. ஐம்பது பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம்.  ஆயிரம் பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். 

மேற்சொன்ன இந்தக் கணக்கு விவரமாவது நமக்குத் தெரிந்திருந்தால் யாரும் நம் வாயை ஏய்க்க முடியாது.

‘நீங்களா புக் போட்டா எப்படி விப்பீங்க?’ என்று கொக்கி போடுவார்கள். பதிப்பகம் வழியாக புத்தகம் வெளியாகும் போது புத்தகக் கண்காட்சிகளில் விற்பனை செய்வார்கள். சுயமாக அச்சடித்தால் எப்படி விற்பனை செய்வது என்கிற குழப்பம் உண்டாவது இயல்புதான். ஆனால் அதுவொன்றும் பெரிய காரியமில்லை. சில கடைக்காரர்கள் ஒவ்வொரு ஊரிலும் புத்தகக் கண்காட்சியில் கடை போடுகிறார்கள். அவர்களிடம் விற்பனை உரிமையைக் கொடுத்துவிடலாம். விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்குப் போய்விடும். ஆனாலும் நம் புத்தகம் பரவலாக விற்பனைக்குக் கிடைக்கும். 

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் என்னுடைய புத்தகம் வெளியாகும். அந்தச் சமயங்களில் இதைப் பேசினால் ‘பரபரப்பு உண்டாக்கி இவன் புஸ்தகத்துக்கு விளம்பரம் தேடுறான்’ என்பார்கள். வாசகர்களுக்கு அதிர்ஷ்டவசமாக, இந்த வருடம் என்னுடைய புத்தகம் எதுவும் வெளியாகவில்லை. யாரும் வாய் மீது போட முடியாது. இனி பேச வேண்டியதுதான்.