Nov 21, 2016

தகிடுத்தத்தங்கள்

‘முப்பத்தைந்துக்கு குறைவா ஆகறதில்லைன்னு சொல்லுறாருங்க....முப்பது மேனேஜருக்கு போய்டும்..அஞ்சுதான் எங்களுக்கு’- இந்த உரையாடலை இன்று நேரடியாகக் கேட்க முடிந்தது. பரிமாற்றங்கள் நடைபெறாத(in-operative)கணக்குகளைப் பயன்படுத்தி வங்கி மேலாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. லட்சம் ரூபாயை மாற்றிக் கொடுத்தால் முப்பத்தைந்தாயிரம் போய்விடும். ஆனால் அறுபத்தைந்தாயிரம் மிச்சமாகிவிடும். ‘முப்பத்தஞ்சு அதிகங்க...திருப்பூர்ல பதினஞ்சுல இருந்து இருப்பத்தேழுக்கு முடிச்சுத் தர்ற ஆளு இருக்கு’என்று கூசாமல் பேசுகிறார்கள். இவை எதுவுமே வெட்டி வதந்தி இல்லை. நடந்து கொண்டிருக்கின்றன. 

வாய்ப்புக் கிடைக்கிற இடங்களையெல்லாம் கண்டறிந்து விளையாடுகிற ஆட்கள் காளான்களைப் போல முளைத்திருக்கிறார்கள். திருப்பூர் போன்ற தில்லாலங்கடி ஊர்களில் குதியாட்டம்தான். வங்கி மேலாளர்களிடமிருந்து தரகர்கள் வரைக்கும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு பொற்காலம். மூன்று கோடி ரூபாயை மாற்றிக் கொடுத்திருந்தால் போதும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பாதித்திருப்பார்கள். வருமான வரித்துறையும் ரிசர்வ் வங்கியும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினால் எப்படியும் கொத்துக் கொத்தாக மாட்டுவார்கள். விளக்கெண்ணெய் ஊற்றுவார்களா என்றுதான் தெரியவில்லை.

நிசப்தம் அறக்கட்டளைக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்ததாக எழுதியிருந்தேன். நேற்றைய தினம் வரைக்கும் கூடுதலாக மூன்று மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ‘மாற்ற முடியும் என்று தெரியவில்லை- எரிப்பதற்கும் குப்பையில் கொட்டுவதற்கும் பதிலாக யாருக்காவது பயன்படட்டும்’என்கிற மனநிலையில் இதை எழுதுகிறார்கள். குப்பையில் கொட்டவும் தீயிலிடவும் வேண்டாம்- சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டு நடத்த முடியாமல் செயல்படுகிற பள்ளிகள் தமிழகம் முழுக்கவும் இருக்கின்றன. பத்து லட்சத்திலிருந்து பதினைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்தால் அதில் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம். பல பள்ளிகளில் பல லட்ச ரூபாய்கள் கடன்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. பள்ளி மதிப்புடையதாகத்தான் இருக்கும். சொத்து இருக்கும். ஆனால் விற்கவும் முடியாது. அத்தகைய பள்ளிகளுக்கு தாராளமாக உதவலாம். பணமும் கைவிட்டுப் போகாது, ஒரு நல்ல காரியத்துக்கு உதவியது போலவும் இருக்கும். வருடமானால் ஒரு வருமானம் வந்து கொண்டும் இருக்கும். சட்ட ரீதியாக இது சரியா என்று தெரியவில்லை. ஆனால் எரிப்பதையும் குப்பையில் வீசுவதைக் காட்டிலும் நல்லதுதான். இப்படியான பள்ளிகள் பற்றிய விவரங்களை வேண்டுமானால் கேளுங்கள். தெரியப்படுத்துகிறேன். பணத்தை நேரடியாக வாங்கிக் கொண்டு பாரத்தைச் சுமக்க நிசப்தம் அறக்கட்டளை தயார் இல்லை.

இன்றைக்கும் ஊர்ப்பக்கத்தில்தான் இருக்கிறேன். கடந்த வாரத்தைப் போல நிலைமை இல்லை. சற்று மேம்பட்டிருக்கிறது. ஏடிஎம்களில் பணம் இருக்கிறது. ஆனால் வரிசை இல்லாமல் இல்லை. வங்கிகளிலும் கூட்டம் இருக்கிறது. பார்க்கிறவர்களிடம் இது குறித்துத்தான் பேசுகிறேன். மக்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. எதிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. mixed response. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- சூடோ அறிவாளிகள் சமூக ஊடகங்களில் எழுதுகிற அளவுக்கு எதிர்ப்புணர்வும் இல்லை. காவிக்கூட்டம் கிளப்பிவிடுகிற அளவுக்கு உணர்வெழுச்சியான ஆதரவுமில்லை. சத்தியமே செய்யலாம்- ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் மட்டும் நம்பினால் வெளியுலகுக்கு சம்பந்தமேயில்லாத இருண்ட வனத்தைத்தான் நமக்குக் காட்டுவார்கள்.

வெளியில் வந்து பார்த்தால்தான் நிலைமை புரிகிறது. பணம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே திணறுகிறார்கள். குறைவாக வைத்திருப்பவர்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள். கோடிகளில் வைத்திருப்பவர்களுக்கு வரிசையில் நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரியும் அதனால் வரிசையில் நிற்பதில்லை. இதுதான் நிதர்சனம். பணக்காரன் ஏடிஎம்மில் நின்றானா? நடிகன் வந்து நின்றானா என்று பொங்கல் வைக்கிறவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை. எதிர்க்க வேண்டும். எதிர்க்கிறார்கள். கோபி, சத்தியமங்கலத்தில் நான்காயிரம் ரூபாயை மாற்றிக் கொடுத்தால் நானூறு ரூபாய் கமிஷன் தந்திருக்கிறார்கள். ஆதார் கார்டுக்கு ஒரு முறை, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு முறை என்றாலும் கூட ஒரு நாளைக்கு எந்நூறு ரூபாய் கிடைக்கும். பணத்தை வாங்கியவனே திரும்பத் திரும்பத் வரிசையில் நிற்கிறான் என்று விரலில் மை வைத்ததற்கு அர்த்தமில்லாமல் இல்லை. அரசாங்கமும் என்னதான் செய்யும்? ஏதாவதொரு விதத்தில் கட்டுப்படுத்தித்தானே ஆக வேண்டும்?

கடந்த வாரத்தில் மாற்றித் தருவதற்காக இருபத்து இரண்டு சதவீதம் கமிஷன் என்று பேசி அழைத்திருக்கிறார்கள். ‘எல்லாமே நூறு ரூபா நோட்டுதான்...காசு எண்ணுற மிஷின் எங்ககிட்ட இல்ல..நீங்கதான் எடுத்துட்டு வந்துடணும்’என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதெல்லாம் நம்புகிற விதத்திலேயே இருந்திருக்கிறது. ஏதோ ஒரு வனாந்திரத்தில் இருக்கும் குடோனுக்கு வழி சொல்லி இரவு நேரத்தில் அங்கே வரச் சொல்லியிருக்கிறார்கள். சில கோடிகளுடன் சென்றவர்களை ஏழெட்டு பேர் சேர்ந்து அடித்து நொறுக்கி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். பணம் போனால் தொலைகிறது; உயிர் பிழைத்தால் போதும் என்று வந்திருக்கிறார்கள்.

நடந்திருக்கிறது. சகலமும் நடைபெறுகின்றன. 

இதுதான் சாத்தியம். இப்படித்தான் நடக்கும் என்று கணிக்கவே முடிவதில்லை. எங்கேயெல்லாம் ஓட்டை என்பதைத் தெரிந்து அங்கேயெல்லாம் தகிடுதத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஓராளுக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் அதிகபட்சமாக மாற்ற முடியும். பணம் எடுத்தால் கையில் மை வைக்கப்படும் என்பதையெல்லாம் நாம் கிண்டலடித்தாலும் யோசித்துப் பார்த்தால் வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசு இன்னமும் ஏகப்பட்ட முறைகளைக் கொண்டு வர வேண்டும். வங்கி மேலாளர்களைக் கவனிக்க வேண்டும். இதுவரை இயங்காத வங்கிக் கணக்கில் ஏன் திடீரென்று பணம் வருகிறது என்பதை பரிசீலிக்க வேண்டும். செய்வார்கள் என்று நம்பிக்கையிருக்கிறது. நேற்று ஒரு வருமான வரித்துறை அலுவலரிடம் பேசிய போது ‘எல்லாமே கண்காணிப்பில் இருக்கு...இப்போ தப்பிக்கிற மாதிரி தெரியலாம்..ஆனால் மாட்டுவாங்க’என்றார். இரண்டரை லட்ச ரூபாயைத் தாண்டியவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்துவிட்டதாகவும் சொன்னார்.

பல லட்சம் கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வந்திருக்கிறது. இன்னமும் வந்து சேரும். கார்போரேட் நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுக்காமல் இந்திய அளவிலான மிகப்பெரிய திட்டங்களைச் செயல்படுத்தினால் உருப்படியாக இருக்கும். தங்க நாற்கரச் சாலை உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்ட போது நிறைய எதிர்க்குரல்கள் எழுப்பப்பட்டன. இன்றைக்கு அதுவொரு மிகச் சிறந்த திட்டமாக இருக்கிறது. அப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசம் முழுமைக்குமான நீர் வழிச்சாலை, நதி நீர் இணைப்பு என்று என்று பெரிய திட்டங்களாகச் செயல்படுத்தத் தொடங்கினால் இவர்கள் புலம்புகிற பணப்புழக்கத் தட்டுப்பாடு, வாங்கும் திறன் அடிபடுவது போன்ற சிக்கல்களையெல்லாம் தாண்டிவிடக் கூடும். பார்க்கலாம்.

அரசியல், காழ்ப்புணர்வு, சமூக ஊடக அராஜகங்களின் அடிப்படையில் விமர்சனங்கள் செய்தாலும் கோடிகளைத் தாண்டி வைத்திருப்பவர்கள் நிச்சயமாக மாட்டிக் கொண்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்னமும் டிசம்பர் 31 ஐ நெருங்குகையில் வெவ்வேறு விதமான பித்தலாட்டங்களும் அயோக்கியத்தனங்களும் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும். சென்னை, பெங்களூர் மாதிரியான நகரங்களில் அமர்ந்து கொண்டு ‘எனக்கு எகனாமிக்ஸ் தெரியும்’ என்று பீலாவிட்டபடி எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இதை முற்றாக மோசமான திட்டம் என்று சொல்ல முடியாது என்றுதான் திரும்பத் திரும்ப முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.