Nov 17, 2016

மாணவர்களை போருக்கு அனுப்புகிறீர்களா?

மாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே திரும்பிவிட்டார்? ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்றாலும் சென்றார்- தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிறார்களா அல்லது மேலே இருந்து தண்டல்காரர் யாரோ ஆட்டி வைக்கிறாரா என்றே புரியவில்லை.  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

NEET- National Eligibility cum Entrance Test தேர்வு தேசம் முழுமைக்கும் பொதுவானது. இந்தத் தேர்வில் மதிப்பெண் வாங்கினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிப்பார்கள். தேர்வு சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்குமாம். இதுதான் பிரச்சினையே. நகர்புறத்திலும் சி.பி.எஸ்.ஈ பாடத்திலும் படிக்கக் கூடிய மாணவர்கள் ஒப்பேற்றிவிடுவார்கள். கிராமப்புற பள்ளி மாணவர்களின் நிலைமைதான் பரிதாபம். எட்டாம் வகுப்பு வரைக்கும் ‘ஆல் பாஸ்’. பத்தாம் வகுப்பில் விடைத்தாளில் கை வைத்தாலே நானூறு மதிப்பெண்கள் என்று நாசக்கேடு செய்து வைத்திருக்கிறோம். இந்த லட்சணத்தில் தமிழக அளவிலான நுழைவுத் தேர்வு என்றாலே எண்பத்தைந்து சதவீத மாணவர்களுக்கு சிரமம்தான் இதில் தேசிய அளவிலான தேர்வை எப்படி எழுதுவார்கள்?

‘தமிழகம் சட்டப்பூர்வமாக நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கும்’என்று பாண்டியராஜன் சொல்லியிருக்கிறார் என்றாலும் கூட ‘இந்த வருடம் கட்டாயமாக நீட் தேர்வு நடக்கும்’என்று சொன்னதுதான் உறுத்துகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களிடம் அமைச்சரே நேரடியாகப் பேசிப் பார்க்கலாம். மாதிரி நீட் தேர்வுத் தாளைக் கொடுத்து அவர்களைத் தேர்வு எழுதச் சொல்லி பரீட்சித்துப் பார்க்கலாம். தேர்வு எழுதுவது இரண்டாம்பட்சம். ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளில் எத்தனை கேள்விகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிந்து கொண்டால் கூட போதும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் தொண்ணூற்றொன்பது சதவீத மாணவர்கள் கேள்விகளைப் புரிந்து கொள்ளவே வெகு சிரமப்படுவார்கள். அணு என்பதுதான் Atom என்பது அவர்களுக்குத் தெரியாது. மூலக்கூறு என்பது Molecule என்பது பனிரெண்டாம் வகுப்பில் தெரிவதில்லை. விடுபடுதிசைவேகம்தான் escape velocity என்பது கல்லூரி வந்த பிறகுதான் பல பேர் தெரிந்து கொள்கிறார்கள். இதில் ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளை புரிந்து அர்த்தப்படுத்திக் கொண்டு அதற்கான விடைகளை யோசித்து பதில் எழுதுவது என்பது வெகு சிரமமான காரியம்.

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது தேசிய அளவிலான ஒரு தேர்வை எழுதிய அனுபவமிருக்கிறது. முதல் பத்து நிமிடங்கள் வரை பெரும் லட்சியம் உருண்டு கொண்டிருந்தது. கேள்விகளைப் புரட்டிய பிறகு பதினோராவது நிமிடத்திலிருந்து லட்சியம் சிதறி, அடுத்த இரண்டு மணி நேரம் நாற்பத்தொன்பது நிமிடத்தை எப்படி ஓட்டுவது என்பதுதான் பெரிய கேள்வியாக உருவெடுத்து நின்றது. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்கள், கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள் என்று அத்தனை பேருக்கும் இந்த மாதிரியான தமது இருண்ட கால நினைவு வந்து போகக் கூடும். அதே இருண்ட கால நினைவை தமிழகத்தில் உயிரியல் பாடப்பிரிவில் படிக்கும் அத்தனை அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்கும் கொடுப்பதற்கான கதவைத்தான் அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்திருக்கிறார்.

நீட் தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்தில் இருக்கும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற இரண்டு அம்சங்கள் போதுமானது- கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை அடித்து நொறுக்குவதற்கு. கிராமப்புறம் என்று மட்டுமில்லை- தேனி, அவிநாசி, கோபி, சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம் மாதிரியான இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் இருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் கூட இந்தத் தேர்வை எழுதுவதற்கான சாத்தியமில்லை. மாணவர்களை விட்டுவிடலாம்- நமது ஆசிரியர்கள் எத்தனை பேரால் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சியளிக்க முடியும்? முதலில் அவர்கள் தயாராகட்டும். 

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது சரியான அணுகுமுறைதான். ஆனால் அவகாசம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்திலும் தேசிய அளவிலான தேர்வு நடத்த வேண்டுமென்று விரும்பினால் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் அவகாசம் பெற்று எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நான்காண்டுகளில் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும் போது ஓரளவுக்குத் தயாராவர்கள். அப்படியில்லாமல் ‘நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம்..இந்த ஆண்டிலிருந்தே எங்கள் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவார்கள்’என்று அறிவிப்பது நீரைக் கொதிக்கை வைத்து எடுத்து தலையிலிருந்து கொட்டுவது போலத்தான். 

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்றால் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய கல்லூரிகளிலும் இந்தத் தேர்வின் அடிப்படையில்தானே சேர்க்கை நடைபெற வேண்டும்? இத்தனைக்கும் அவையிரண்டும் மத்திய அரசாங்கத்தின் கல்லூரிகள். ஆனால் அவர்கள் மட்டும் தம்முடைய நுழைவுத் தேர்வையும் சேர்க்கை நடைமுறையையுமே பின்பற்றுவார்கள் என்பது எந்தவிதத்தில் நியாயம்? அந்த இரண்டு கல்லூரிகள் மட்டும் எச்சுல பொறந்த கச்சாயங்களா என்பதை மத்திய அரசாங்கம் தெளிவு படுத்தட்டும்.

ஒருவேளை தேசிய அளவிலான தேர்வு நடத்துவதாக இருப்பின் அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லையா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வழியில் மட்டுமே தேர்வு நடைபெற்றால் சில வருடங்களில் தமிழ் வழிக் கல்வியை விட்டுவிட்டு வெகு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிவிடுவார்கள். நாடு முழுவதிலுமே பிராந்திய மொழி வழிக் கல்வியை நொண்டியடிக்க வைக்க இது ஒன்று போதும். 

நீட் தேர்வைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பெரிய சலனமில்லை. இவ்வளவு அமைதி ஆபத்தானது. பள்ளிக்கல்வி வட்டாரங்களோடு முடிந்து போகக் கூடிய விஷயமில்லை இது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை அடித்து நொறுக்கிக் கேள்விக்குறியாக்குகிற இந்த முயற்சியை அரசியல் மாறுபாடுகளையெல்லாம் மறந்து அனைத்துக் கட்சிகளும் இதை எதிர்க்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். சமூக ஊடகங்களில் இது குறித்தான விவாதங்கள் நடைபெற வேண்டும். மக்களிடையே பேச்சு உருவாவதையும், நான்கைந்து ஆண்டுகளுக்காகவாவது தள்ளி வைப்பதற்கான முயற்சிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும். 

அவகாசம் வாங்குங்கள். மாணவர்களைத் தயார்படுத்தலாம். பிறகு போருக்கு அனுப்புவோம்.