Nov 14, 2016

திட்டமும் அமலாக்கமும்

நான்கு நாட்களாக ஊரில் சுற்றிக் கொண்டிருந்தேன். பணத்துக்கு பெரும் தட்டுப்பாடு. எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை. வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள். நான்காயிரம் ரூபாயை மாற்றுவதற்கு முக்கால் மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமையன்று நடத்துநராக இருக்கும் சித்தப்பா ‘இதை நிறையப் பேரு பாராட்டுறாங்க’ என்று சொன்ன நிலைப்பாடு இன்னமும் அப்படியே இருக்குமா என்று தெரியவில்லை. அவர் திமுக அனுதாபி. அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு நாட்களில் சிரமங்கள் குறைந்திருந்தால் அவர் சொன்னது போல மக்கள் ஏற்றிருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது கடுப்பேறியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

சிரமப்படுகிறார்கள். ஐசிஐசியை வங்கியில் நின்றிருந்த போது ‘ஒரு மாசம் முன்னாடியே ஐநூறைக் குறைச்சுட்டு ஏ.டி.எம்ல வெறும் நூறு ரூபாயை லோடு பண்ணியிருக்கலாம்ல சார்’ என்று காக்கிச் சட்டையணிந்திருந்த பள்ளிக்கூட ப்யூன் ஒருவர் யோசித்த அளவுக்கு மோடி ஏன் யோசிக்கவில்லை எனத் தோன்றியது. அவர் சொன்னது போல நூறு ரூபாயின் புழக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. 

பல வங்கிகளில் கையிருப்பு போதுமானதாக இல்லை. பணம் கேட்டுச் செல்பவர்களிடம் ‘பணம் இல்ல சார்’ என்று சொல்லி வரிசையிலேயே நிற்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். மீறி வரிசையில் நின்றால் மாலை நான்கு மணிக்கெல்லாம் வரிசையில் நிற்பவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிக் கொள்கிறார்கள். ஒவ்வொரும் கொடுக்கும் அடையாள விவரங்களை வங்கிப் பணியாளர் கணினியில் தட்டச்சு செய்கிறார். பிறகு வங்கியின் முத்திரையிட்டு கையொப்பமிட்டு அவர் அனுப்பி வைத்த பிறகு காசாளரிடம் செல்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. இந்த வேகம் போதுமானதே இல்லை. அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்தால் வேகம் கூடியிருக்கும். ஆனால் அவ்வளவு தகவல்களையும் சேகரித்து வைப்பது தொழில்நுட்ப ரீதியாக கடினமான காரியமாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு மனிதரும் தங்களது அடையாள அட்டையை பிரதி எடுக்கும் போது நாடும் முழுவதும் பல கோடிக் கணக்கான டன் காகிதங்கள் வீணடிக்கப்பட்டிருக்கும். அடையாள அட்டைக்கு ஒரு காகிதம் என்றால் விண்ணப்பத்திற்கென ஒரு காகிதம். ஆக, ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் இரண்டு தாள்களை வீணாக்க வேண்டியிருக்கிறது. பணப்பரிமாற்றம் முழுமையாக நடந்து முடிக்கும் போது காகிதங்களுக்கு என மட்டும் பல கோடி மரங்கள் வெட்டப்பட்டிருக்கும். ‘சுவச் பாரத்’ என்று பேசுகிறவர்கள் இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். அதைத் தவிர, ஒவ்வொரு மனிதனும் தனது வேலையை விட்டுவிட்டு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. இப்படி மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் போது அவனது உற்பத்தித் திறன் வீணடிக்கப்படுகிறது. சராசரியாகக் கணக்கு எடுத்தாலும் கூட ஒவ்வொரு நாளும் நாட்டின் productivity வீணாகப் போகிறது என்று பார்த்தால் வாயடைத்துப் போகும். பெரிய திட்டத்தை அறிவிக்கும் முன்பாக இத்தகைய மறைமுக விளைவுகளைக் குறைப்பதற்காக ஏன் அரசாங்கம் எதையுமே யோசிக்கவில்லை எனத் தெரியவில்லை.

திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே இது சிறந்த திட்டமெனத் தோன்றியது. திட்டம் சிறந்ததுதான். தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். காய்கறி விற்பவர், ஆட்டோக்காரர், தள்ளுவண்டிக் கடைக்காரர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளும், வணிகர்களும், தொழிலதிபர்களும் மாட்டிக் கொண்டு விழிப்பார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள். மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கியின் மூலமாக நூறு ரூபாய்த் தாள்களை அதிகளவு புழக்கத்தில் விட்டிருக்கலாம். புது நோட்டுக்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்கலாம். வங்கிகளில் மக்களின் விவரங்களைப் பெறுவதற்கான வசதிகளைச் செய்திருக்கலாம். மக்களின் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது போன்றவை குறித்தெல்லாம் முன்பே யோசித்து முடிவு செய்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். திட்டத்தை அறிவித்துவிட்டு மோடி ஜப்பானுக்கு விமானம் ஏறியதைத்தான் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அவசரமாக அறிவிக்க வேண்டுமென்றால் ஜப்பான் பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இல்லையெனில் ஜப்பானிலிருந்து திரும்பி வந்து அறிவித்திருக்கலாம். நூற்றியிருபது கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகிற திட்டமொன்றை அறிவிக்கும் போது பிரதமர், அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் என அனைவரும் இரவு பகலாகக் கண்காணித்து பிரச்சினைகளை அவ்வப்போது சரி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும். இதைக் கூடச் செய்யாமல் ஜப்பானுக்குச் சென்று ‘என்னைக் கொன்றாலும் பரவாயில்லை’ என்று நீலிக் கண்ணீர் வடிப்பது அசிங்கமாக இருக்கிறது.  உள்நாட்டிலேயே இருந்து உன்னிப்பாக கவனிப்பது என்பது பிரதமரின் தார்மீகக் கடமை இல்லையா?

முதலில் ஒன்றிரண்டு நாட்களில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்றார்கள். இன்றைய தினம் வரைக்கும் பணத்துக்காக மக்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘மக்கள் வெறுப்பு’ என்கிற ஒரு அம்சம் போதும்- எவ்வளவு பெரிய திட்டத்தையும் அடித்து நொறுக்குவதற்கு. அதைத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் மூன்று வாரங்களில் நிலைமை சரியாகிவிடும் என்கிறார்கள். ஆனால் சந்தோஷம்தான். ஆகுமா என்பது சந்தேகம்தான்.

மக்களை அலைகழிப்பது மட்டுமில்லாமல் இதுவொன்றும் தவறே நடக்காத வழிமுறை என்று சொல்ல முடியவில்லை. ஏகப்பட்ட பேர் தில்லாலங்கடி வேலைகளையும் ஆரம்பித்திருந்தார்கள். ஒருவருக்கு நான்காயிரம் ரூபாய்தான் ஒரு நாளைக்கான அளவு என்பதால் PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று மூன்று நான்கு வங்கிகளில் நின்று பனிரெண்டு அல்லது பதினாறாயிரம் ரூபாயை மாற்றிக் கொள்கிறார்கள். எதற்காகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் செய்கிறார்கள். 

வங்கிகளிலும் சில கசமுசா வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். பெங்களூரில் ‘நீங்க ஏற்கனவே பணத்தை மாத்திட்டீங்க’ என்று சிலரிடம் சொல்லி அனுப்பிவிட்டதாகச் செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக வங்கி நண்பர்கள் சொல்கிறார்கள்.  நமது வாக்கை யாரோ செலுத்துவது போலத்தான். சில வங்கிப் பணியாளர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. இன்னமும் விவரங்கள் வெளியே வரத் தொடங்கும் போது விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.

திட்டத்தை அறிவிப்பதால் மட்டுமே அத்தனையும் சீர் செய்யப்படுவதில்லை. எப்படி அமுல்படுத்தப் போகிறோம், சாமானியர்கள் பாதிப்படைவதை எப்படிக் குறைக்க போகிறோம், பெருச்சாளிகளுக்கு எப்படிக் கண்ணி வைக்கிறோம் என்று நிறைய அலசி ஆராய்ந்து செய்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இவ்வளவு நாட்கள் இவ்வளவு பேர் திணறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

ஆனால் ஒன்று- நாம் அறிவாளி மாதிரி அதையும் இதையும் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இத்தகையை விவகாரங்களில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது. உ.பி.தேர்தலுக்காக காத்திருக்கலாம். 

குறிப்பு: தளத்தின் வலதுபுறத்தில் ஒரு கருத்துக் கணிப்பு இருக்கிறது. கட்டுரையை மறந்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதையும் கணக்கு பார்க்கலாம்.