Nov 30, 2016

கொண்டாட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்பாக மகனுக்கு பிறந்த நாள் வந்தது. ஏழு வயது முடிந்து எட்டு பிறக்கிறது. நான் பள்ளிக் கூடத்தில் படித்த போது பிறந்த நாள் என்றால் ஆரஞ்சு மிட்டாய் ஒரு பொட்டலம் வாங்கிக் கொடுத்து அனுப்புவார்கள். பத்து ரூபாய் கூட ஆகாது. வீட்டில் அம்மா கேசரி செய்து கொடுப்பார். ரவை கால்கிலோ; சர்க்கரை நூறு கிராம். அதோடு வேலை முடிந்தது. இப்பொழுது எங்கே கேட்கிறார்கள்? ‘அம்மா இவங்களையெல்லாம் கூப்பிடுங்க’ என்று பட்டியல் கொடுத்திருக்கிறான். அவனை யாரெல்லாம் தங்களது பிறந்தநாளுக்கு அழைக்கிறார்களோ அவர்களையெல்லாம் பட்டியலில் சேர்த்திருந்தான்.

ஆறேழு வீடுகள். ஞாயிற்றுக்கிழமை தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ‘இன்வைட் பண்ண போலாம்’ என்று இழுத்துச் சென்றார்கள். ‘எல்லோரும் வந்துடுங்க’ என்று சொல்லும் போதெல்லாம் ‘யாரோ ஒருத்தர் மட்டும் வாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதும் போவதும் நல்லதுதான். ஆனால் கூட்டம் கூட்டமாக வந்தால் அலர்ஜி. ஒவ்வொருவராக வந்தால் ஆற அமர பேசலாம். படை திரண்டு வந்தால் என்ன பேசுகிற மாதிரி இருக்கிறது? திருமண விருந்துகளுக்குப் போகும் போதும் அப்படித்தான். வரவேற்பில் நின்று ஒரு வணக்கம். அடுத்து நேரடியாகப் பந்திதான். எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் ‘பஃபே இல்லாம என்னங்க விருந்து’ என்று கேட்கிறார்கள். காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி எல்லாவற்றையும் தட்டில் வாங்கி வைத்துக் கொண்டு கொறித்துப் பார்த்துவிட்டு அப்படியே தட்டத்தோடு குப்பைக் கூடையில் போட்டுவிட்டு இன்னொரு புதுத் தட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு ஆளுக்கும் இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு ப்ளாஸ்டிக் குடுவை. எல்லாவற்றையும் செய்துவிட்டு ‘என்னப்பா ஊர்ல மழையே இல்லையே’ என்பார்கள். நம்முடைய நாகரிக கொண்டாட்டங்கள் எதுவுமே சூழலியலுக்கு எதிரானவைதான்.

அது போகட்டும். 

வெட்டுவதற்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக், வீட்டில் ஒட்டுவதற்கு பலூன்கள், வண்ணக் காகிதங்கள், வருகிறவர்களுக்கு சுட்டுத் தர பஜ்ஜி மிக்ஸ், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வரும் குழந்தைகளுக்குத் தருவதற்கென அன்பளிப்புகள் என்று சட்டைப் பையில் பெரிய ஓட்டை. ‘அவங்கதானே நம்ம பையனுக்குத் தரணும்?’என்று கேட்டால் ‘நாமும்தான் தரணும்’ என்கிறார்கள். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். 

‘சரி வருஷத்துல ஒரு நாள்தான?’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம்தான். மீறி ஏதாவது பேசினால் பாராளுமன்றமே முடக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. ‘அவனவன் எப்படி கொண்டாடுகிறான்’ என்று எதிர்கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது. பதாகைகள் வைத்து, மண்டபத்தில் ஊரையே கூட்டி விருந்து போடுகிறார்கள். எத்தனையாவது பிறந்தநாள் என்று கேட்டால் ஒன்றாவது பிறந்தநாளாக இருக்கும் அல்லது இரண்டாவது பிறந்தநாளாக இருக்கும். 

எனக்கு ஏப்ரல் மாதம் பிறந்த நாள். வருடம் தவறாமல் தேர்வு சமயத்திலேயே வந்து தொலைக்கும்.  போதாக்குறைக்கு ‘பொறந்தநாள்ல என்ன வேலையைச் செய்யறோமோ அதையேதான் அந்த வருடம் பூராவும் செய்வோம்’ என்று மூடநம்பிக்கையை உருவேற்றி வைத்திருந்தார்கள். அதனால் அன்றைய தினம் முழுவதும் கணக்கையும் அறிவியலும் வைத்து மண்டை காய்ந்தே ஒவ்வொரு வருடமும்  பிறந்த நாளைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் படித்தால்தான் வருடம் முழுவதும் படித்து அறிவு வளருமாம். இப்படி சொம்பையாக இருந்தவனை முட்டைக் கண்ணன் கதிர்வேல்தான் ஒரு பிறந்தநாளின் போது வெகு பிரயத்தனங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்துவிட முயற்சித்தான். கண்களை மட்டுமில்லை.

‘மாப்ள...சாந்தி தியேட்டர்ல படம் பார்க்கலாம்’ என்றான். தமிழகத்தின் முக்கால்வாசி ஊர்களில் சாந்தி திரையரங்கு என்றால் கசமுசாதான். எங்கள் ஊரிலும் அப்படித்தான். பெயர் ராசி போலிருக்கிறது.

படத்தின் பெயர் இன்னமும் நினைவில் இருக்கிறது. Seven nights in beverly Hills. படத்தின் பெயரை மனனம் செய்யவே வெகு நேரம் பிடித்தது. ஆங்கிலப்படம். ‘வசனமா முக்கியம் படத்தை பாருடா’ வகையறா. வீட்டிலிருந்து வரும் போதே பைக்குள் வண்ணச் சட்டை ஒன்றை எடுத்து ஒளித்து வைத்து வரச் சொல்லியிருந்தான். அப்படியே சென்றிருந்தேன். மதியம் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து திரையரங்குக்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டி வளாகத்துக்குள் நுழைந்து துணியை மாற்றிக் கொண்டோம். முட்டைக்கண்ணன் வெகு தைரியமாக இருந்தான். எனக்குத்தான் நடுக்கம். திரையரங்கிலிருந்து வெகு தூரம் தாண்டித்தான் அவனுடைய வீடு இருந்தது. பிரச்சினையில்லை. எனக்கு அப்படியில்லை. ஒன்றரை கிலோமீட்டர்தான். எவனாவது பார்த்து போட்டுக் கொடுத்துவிட்டால் விவகாரம் ஆகிவிடும். தொலைத்து தோசை வைத்து மாற்றிவிடுவார்கள்.

திரையரங்குக்கு வெளியில் நின்று எவ்வளவு பம்ம முடியுமோ அவ்வளவு பம்மினேன். முட்டைக்கண்ணனே நுழைவுச்சீட்டை வாங்கிவிட்டு சைகை செய்தான். அவன் அழைத்தவுடன் எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல பார்த்துக் கொண்டே நடந்து விசுக்கென்று திரையரங்குக்குள் உள்ளே நுழைந்துவிட்டேன். அப்பொழுது அந்தப் பகுதியில் கடைகள் எதுவுமில்லை. சாலையில் போகிற வருகிற ஆட்கள் பார்த்தால்தான் உண்டு. யாரும் பார்க்கவில்லை. உள்ளே போய் அமர்ந்தவுடன் மொட்டைக்கண்ணன் அதகளத்தை ஆரம்பித்தான். பெரிய மனுஷத் தோரணை வந்திருந்தது. ரவுடியைப் போல அவனது உடல்மொழி மாறத் தொடங்கியிருந்தது. கால்களைத் தூக்கி முன்னிருக்கை மீது போட்டான். ட்ரவுசரிலிருந்த பீடியை பற்ற வைத்து இழுத்தான். விசிலடித்தான். 

‘டேய்...படத்தை போட்றா’

‘டேய்...ஃபேனைப் போட்றா’ என்று கத்திக் கொண்டிருந்தவன் திடீரென்று கெட்ட வார்த்தைகளை வரிசையாக விட்டான். திரையரங்கில் நாற்பது ஐம்பது பேர்தான் இருந்திருப்போம். ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன.

நல்லவேளையாக தேசிய கீதமெல்லாம் ஒலிக்கவில்லை. நேரடியாக படத்தின் பெயர் ஓடத் தொடங்கியது. எனக்கு ரத்தம் உடலுக்குள் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆகுமோ என்று அவ்வளவு ஆவல். முதல் காட்சி. வெள்ளைக்காரி வந்து நின்றாள். ஒருவன் பேசியபடியே அருகில் எழுந்து வந்து ஆடைகள் மீது கை வைத்தான். எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது. கண்களைச் சுழற்றியது. ஆனால் ஆடைகளைக் களையக் கூடவில்லை. துண்டித்துவிட்டு அடுத்த காட்சியை ஓட்டினார்கள். ‘டேய்.....கட் பண்ணாதடா’ என்று யாரோ கத்தவும் கதிரானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். நானும் அவர்களோடு சேர்ந்து கத்தினேன். இதெல்லாம் நடந்த போது நாங்கள் வயதுக்குக் கூட வந்திருக்கவில்லை. பதின்மூன்று அல்லது பதினான்கு வயது. ஏழாவதோ எட்டாவதோ. இடைவேளை வரைக்கும் இப்படித்தான் இருக்குமென்றும் இடைவேளை முடிந்த பிறகு தனியாக பிட் ஓட்டுவார்கள் என்றும் முட்டைக்கண்ணன் முன்பே சொல்லி வைத்திருந்தான். அந்த பதினைந்து நிமிடங்கள்தான் உச்சகட்டம். பிறகு அவரவருக்கு விருப்பமான நேரத்தில் எழுந்து வந்துவிட வேண்டும்.

இன்னும் இடைவேளையே வரவில்லை பிறகு எதற்கு இப்பொழுதே கத்துகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கிடைத்த வரைக்கும் இலாபம் என்பதற்காகக் கத்திக் கொண்டிருந்தாரக்ள். பென்ச் மீது ஏறி முட்டைக்கண்ணன் ஆடிக் கொண்டிருந்தான். வெகு தூரத்திலிருந்து ஒரு முரட்டு உருவம் எங்களை நோக்கி வந்தது. தியேட்டர்க்காரன் என்றுதான் நினைத்தேன். ஆனால் பக்கத்தில் வரவும்தான் தெரிந்தது. கதிரானின் அண்ணன். செத்தான் என்று நினைப்பதற்குள் நான்கைந்து பென்ச் இன்னுமிரண்டு ஆட்களின் தோள் மீதெல்லாம் ஏறி வெளியே ஓடிவிட்டான். சிக்கினால் அவனுடைய அண்ணன் என்னையும் மொக்கிவிடுவான். நானும் ஒரே ஓட்டம்தான். தலை தெறிக்க ஓடி தியேட்டருக்கு வெளியே வரும் போது முன்பு போலவே சம்பந்தமேயில்லாதது போல வீட்டுப் பக்கமாக ஓடிவிட்டேன். 

‘இனி இந்த வருடம் பூராவும் எவனாவது துரத்துவான்’ என்று நினைத்த போது வருத்தமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு முட்டைக்கண்ணன் பள்ளிக் கூடத்துக்கே வரவில்லை. மீண்டு வந்தவன் பிரித்து மேய்ந்துவிட்டதாகச் சொன்னான். ‘உங்க வீட்லயும் வந்து போட்டுக் கொடுக்கிறதா சொல்லியிருக்காண்டா’ என்று பற்ற வைத்தான். வெகு நாட்களுக்கு வயிறு கபகபவென்று எரிந்து கொண்டேயிருந்தது. நல்லவேளையாக விபரீதம் எதுவும் நடக்கவில்லை. இல்லையென்றால் பார்க்காத படத்துக்கு பழியை ஏற்ற கதையாகியிருக்கும். அப்பொழுது முடிவு செய்ததுதான் - உள்ளூரில் கசமுசா படங்களையே பார்க்கக் கூடாது என்று. அதன் பிறகு ஈரோடு அபிராமியில்தான் அடுத்த படம்.

விரிவாகச் சொல்லலாம்தான். பொல்லாப்பு ஆகிவிடும்.

மகனின் பிறந்தநாள் கதையை ஆரம்பித்து சூழல் சமூகம் என்றெல்லாம் பொங்கல் வைத்து அபிராமி தியேட்டரில் முடித்திருக்கிறேன். அயோக்கியப்பயல்.

என்ன செய்வது? ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். செய்யாத திருட்டுத்தனமில்லை. எதை பேச நினைத்தாலும் முன்பு எப்போதோ செய்த ஏதாவதொன்று நினைவில் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. யாராவது பெரிய தடியாக எடுத்து வந்து பின்னந்தலையில் அடித்தால் ஒருவேளை எல்லாம் மறந்து போகக் கூடும். அதுவரைக்கும் இப்படித்தான்.

Nov 29, 2016

தொங்கு மீசை

அலுவலகத்தில் ஆண்டு விழா நடக்கிறது. கடந்த வருடமும் நடந்தது. மூலையில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு ‘அடுத்த வருஷம் நான் ஆடுற ஆட்டத்துல மேடையே தெறிச்சு விழுந்துடணும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அப்பொழுது வேறொரு கட்டிடத்தில் இருந்தோம். நிறையப் பெண்கள் இருந்தார்கள். அதனால் அப்படித்தான் முடிவு செய்யத் தோன்றும். ஆசை இருக்குதாம் தாசில் பண்ண; அம்சம் இருக்குதாம் கழுதை மேய்க்க என்பார்கள். எனக்கு கழுதை மேய்க்கக் கூட அம்சமில்லை. கடந்த ஒரு வருடமாக இடுப்பையாவது வளைத்திருந்தால்தானே ஆகும்? விழாவுக்குப் பத்து நாட்கள் கூட இல்லை. இனி முயற்சி செய்தால் கண்டபக்கம் சுளுக்கிக் கொள்ளும். எதுவும் வேண்டாம் என்றிருந்தேன்.

கிரகம் அப்படித்தான் என்றால் நாம் சும்மா இருந்தாலும் விடாது. 

இரண்டு நாட்கள் முன்பாக ஒருத்தி வந்து- சுமாரான ஒருத்தி- ‘நாங்க ஒரு மைம் பண்ணுறோம்..அதில் நீ நடிக்கிறியா?’என்றாள். நாயகன் வேடம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். ஒத்துக் கொண்டு போன போது ஓர் அறையில் விவாதம் நடந்தது. முக்கால் வயசுக்காரன் ஒருத்தன் இருக்கிறான். தொங்கு மீசைக்காரன். அவனை அறிமுகப்படுத்தி இயக்குநர் என்றார்கள். தமிழ்நாடு-கர்நாடகப் பிரச்சினை வந்த போது நிறைய சாடை பேசுவான். ‘தமிழ்நாட்டுக்காரங்க கடல் தண்ணியை சுத்தம் பண்ணிக்கலாம்ல’ என்று கேட்டான். இவனிடமெல்லாம் என்ன பேசுவது? அப்பொழுதிருந்தே அவன் மீது கடுப்பு உண்டு. அவன் இயக்குநர் என்று தெரிந்தவுடனயே ஒரு விக்கல் வந்தது. சாதாரண விக்கல் என்று நினைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த அரை மணி நேரத்துக்கு தொங்கு இல்லாத அலும்பெல்லாம் செய்தது.

‘ஒரு ஸீன் சொல்லுவேன்..நடிச்சுக் காட்டணும்’ என்று ஆரம்பித்தான். audition.

என்னை அழைத்த பெண் ‘மணி, ஸ்கிரிப்ட் எழுதுவான்...’ என்று முடிப்பதற்குள் ‘ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு..அதுல ஒண்ணும் மாத்த வேண்டியதில்லை’ என்று வாயை அடைத்தான். ஓங்கி அறைவிட்டது போல இருந்தது.

இயக்குநர் சார் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு முந்திரிக்கொட்டை ‘என்ன கதை?’ என்றவுடன் சாருக்கு கொஞ்சம் சுள்ளென்றாகிவிட்டது.

‘அதெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டியதில்லை..உங்ககிட்ட இருந்து எதை வாங்கணும்ன்னு எனக்குத் தெரியும்..நான் சொல்லுறதை மட்டும் செஞ்சா போதும்’ என்றான். எனக்கு  சிரிப்பு வந்துவிட்டது. பெரிய இயக்குநர்களைப் பற்றிய துணுக்குச் செய்திகளைப் படித்து கெட்டுப் போயிருக்கிறான். கிராதகன். அதுவும் கன்னட இயக்குநர்களைப் பற்றி படித்திருக்கக் கூடும்.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு இயக்குநர் சார் யாருக்கு என்ன பாத்திரம் என்பதைச் சொன்னார். 

‘நீ ஹீரோ’- இது என்னைப் பார்த்து இல்லை. அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று முடிவு செய்துவிட்டான். ஆஜானுபாகுவானவன் ஒருத்தன் இருக்கிறான். அவன்தான் நாயகன்.

அறையில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தார்கள். அவர்களில் சற்றே அழகான பெண்ணைப் பார்த்து ‘நீதான் ஹீரோயின்’ என்றான். கதையில் அழுகை இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும் என்றெல்லாம் சொன்ன போது ஹீரோவின் முகத்தைப் பார்த்தேன். அவன் சிவந்து கொண்டிருந்தான். ஒருவேளை, உதட்டோடு உதட்டைக் கவ்வுவதாக அவனது கற்பனைக் குதிரை ஓடிக் கொண்டிருக்கக் கூடும். 

கருமம்டா என்றிருந்தது. 

அடுத்ததாக ஒருவன் அரசியல்வாதி, இன்னொருவன் ஆர்மி ஜெனரல் என்றெல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு  கடைசியில் என்னைப் பார்த்து ‘நீ மரம்’ என்றான். குப்பென்றாகிவிட்டது. என்னை அழைத்தவளைப் பார்த்தேன். அவள் எதையோ விழுங்கியது போல என்னைப் பார்த்தாள்.

மைம் என்றால் பேசவே மாட்டார்கள் அல்லவா? கறுப்பு ஆடையை அணிந்து கொண்டு எல்லோருமே முகத்தில் வெள்ளைச் சாயம் பூசிக் கொள்வார்கள். உதடுகளிலும் சிவப்புச் சாயம். மற்றவர்களாவது முகத்தில் ஏதாவது உணர்ச்சி பாவனைகளைக் காட்டுவார்கள். நான் மரம். இந்தப் பக்கம் ஒரு மரம். வந்து நின்றுவிட்டுப் போனால் போதும். 

பற்களைக் கடித்துக் கொண்டு நின்றேன். எப்படி முடியாது என்று சொல்வது எனக் கண்டபடி குழப்பமாக இருந்தது. சரி ஆனது ஆகட்டும் என்று அமைதியாக நின்றிருந்தேன். வேறு வழியில்லை. அமைதியாகத்தான் நின்றிருக்க வேண்டும்.

இயக்குநர் சாருக்கு பெரிய மனது. போனால் போகிறதென்று கதையைச் சொல்லத் தொடங்கினார்.

ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருக்கிறாள். அவனைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பிறக்கிறது. காதல் பிறந்தவுடன் என்ன வரும்? ரொமான்ஸ் வரும். என்ன செய்வார்கள்? மரத்தைச் சுற்றிப் பாடுவார்கள். அதாவது என்னைச் சுற்றி. கையில் விளக்குக் கொடுப்பானா என்று தெரியவில்லை. இப்படி காதல் செய்து கொண்டிருக்கும் போதுதான் அவன் இராணுவ வீரன் என்று அவளுக்குத் தெரிய வருகிறது. புளகாங்கிதம் அடைந்து உடனடியாகத் திருமணம் செய்து கொள்கிறாள். முதலிரவுக்கு முன்பாக இராணுவத்திற்கு வரச் சொல்லி தந்தி வருகிறது. கிளம்பிச் செல்கிறான். இப்பொழுது உங்களுக்கே முடிவு தெரிந்திருக்குமே- பாகிஸ்தானுடனான போரில் இறந்துவிடுகிறான். அதே மரத்தினடியில்- இப்பொழுதும் நான்தான் - வந்து அழுது கதறுகிறாள். அரற்றிவிட்டு கடைசியில் நாடுதான் முக்கியம்; வாழ்க்கை அப்புறம் என்று முடிவுக்கு வருகிறாள். ஜாரே ஜஹான்சே அச்சா பாடல் ஒலிக்கிறது. தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லோரும் வந்து மேடையில் நின்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் பார்வையாளர்களின் கைதட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். மைம் முடிந்தது.

‘இதெல்லாம் சிவாஜி காலத்திலேயே பார்த்துட்டோம்டா தொங்கு மீசை’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வங்காளி உள்ளே புகுந்து ‘அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்ல..செகண்ட் ஹீரோ இல்லையா?’ என்றான். எல்லோரும் கொல்ல்ல்ல்ல் என்று சிரித்தார்கள். இயக்குநர் சாருக்கு பல்பு எரிந்து ‘யோசிக்கலாம்’ என்றார்.

எல்லோரும் கலைந்து வெளியே வந்தோம். ஒவ்வொருவருக்கும் அருகில் சென்று அவரவர் பாத்திரங்களின் முக்கியவத்துவம் பற்றி பேசினான் தொங்கு மீசை. என்னிடம் வந்து ‘மரம்தான் முக்கியமான பாத்திரம்’ என்றான். ‘மூடு’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.

‘சாரி பாஸ்..இப்போத்தான் எனக்குத் தேதி தெரிய வந்துச்சு...பதினஞ்சாம் தேதி ஊருக்குப் போகணும்’ என்றேன்.

‘நல்லா யோசிச்சுத்தான் சொல்லுறியா?’ என்றான். 

ஏமாந்தால் ஆஸ்கார் விருது தவறிப் போய்விடும். ‘நல்ல சான்ஸை மிஸ் பண்ணுறேன்னு வருத்தமாத்தான் இருக்கு..ஆனா வேற வழியில்லை...வேணும்ன்னா பழனியைக் கேட்டுப்பாருங்களேன்’ என்றேன். பழனி அலுவலக நண்பர். ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன்தான் குழி பறிப்பான். பறித்துவிட்டேன். அப்பாவி பழனிதான் மரமாக நடிக்கிறார். எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது. 

அலுவலகத்தில் அந்தப்பக்கமாக வரும் போதும் போதும் பழனி முறைக்கிறார். ‘மரத்துக்கு எதுக்குய்யா ரிகர்சல்..டெய்லி கூப்ட்டு சாவடிக்கிறான்’ என்றார். அப்பாடா என்றிருந்தது. முகத்தைச் சலனமே இல்லாமல் வைத்துக் கொண்டு தாண்டிச் சென்றுவிடுகிறேன்.

இவர்களையெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது.


இன்று காலையில்தான் அமீர்கான் உடலை மாற்றும் சலனப்படத்தைப் பார்த்தேன். குண்டாக இருந்தவர் ஐந்தே மாதங்களில் உடம்பை ஏற்றி எப்படி மாறியிருக்கிறார்? அவரளவுக்கு ஐந்து மாதங்களில் சாத்தியமில்லை. தின்பதும் உடம்பை ஏற்றுவதும் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எனக்கு அப்படியா? நிற்க நேரமில்லை. ஐந்து மாதங்களில் சாத்தியமில்லை. எப்படியும் பத்து நாட்களாவது கூடுதலாகத் தேவைப்படும். ஐந்து மாதங்கள் பத்து நாட்கள். தேதியை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்லி வேணியிடம் சொன்னேன். இன்னும் ஒரு மாசம்தான். இந்தக் காலண்டரைத் தூக்கி வீசிடுவோம்ன்னு தைரியத்துல சொல்லாதீங்க என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த உலகம் வெற்றியாளரகளை எப்பொழுதும் ஆரம்பத்தில் கேவலமாகத்தான் பார்த்திருக்கிறது. காலையிலேயே அமீர்கானைப் போல பட்டாப்பட்டி ட்ரவுசரோடு நான்கைந்து படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். ஐந்து மாதங்கள் பத்து நாட்கள் கழித்து நெஞ்சு நிறைய எட்டு அல்லது பத்து பேக்குகளுடன் நான்கைந்து படங்கள் எடுத்து- அதுவும் அவரைப் போலவே ஜட்டியோடு- வெளியிட்டு இந்த உலகத்துக்கு நிரூபிக்கிறேன். 

அப்புறம் இருக்கிறது இந்த தொங்கு மீசைக்கு கச்சேரி.

பவானியின் கதை

லேடீஸ் க்ளப் கூட்டம் அது. உயர்தரக் குடும்பப் பெண்கள் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமான உரையாடலுக்குப் பிறகு தலையாய பிரச்சினையைப் பற்றி பேசத் தொடங்குகிறார்கள். ‘உனக்குமா முடி கொட்டுது; எனக்கும்தான்’ என்று ஆரம்பிக்கிற பேச்சு ஏன் கொட்டுகிறது எதனால் கொட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நகராட்சிக்கு ஒரு மனு எழுதுகிறார்கள். ‘இந்தப் பொம்பளைங்களுக்கு பொழப்பே இல்ல’ என்றுதான் நகராட்சி அதிகாரிகள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் க்ளப்பின் உறுப்பினர்கள் உள்ளூர் பெருந்தலைகள் அல்லது பெருந்தலைகளின் வீட்டுக்காரம்மாக்கள். விட முடியாதல்லவா? மேன்மைமிகு உறுப்பினர்களுக்கு என்று ஆரம்பித்து ஆற்றிலிருந்து வரும் நீரை வடிகட்டி குளோரின் சேர்த்து அனுப்புவதாகவும் நகராட்சியில் பிரச்சினை எதுவுமில்லை என்று பதில் அனுப்புகிறார்கள். 

பெண்கள் விடுவார்களா? அதுவும் லேடீஸ் க்ளப் பெண்கள்.

அக்கம்பக்கத்து நகராட்சிகளில் செயல்படக் கூடிய க்ளப்புகளிலும் விசாரிக்கிறார்கள். பிற ஊர்ப் பெண்களுக்கும் அதுதான் தலையாய பிரச்சினை. குழாயில் வரும் தண்ணீரை மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புகிறார்கள். விவகாரம் தண்ணீரில்தான் இருக்கிறது. ஏதோ சில ரசாயனங்கள்தான் பிரச்சினை என்ற முடிவு வருகிறது. அந்த ரசாயனத்தினால் புற்று நோயிலிருந்து விரையில்லாத ஆண் குழந்தைகள் வரைக்கும் ஆயிரம் பிரச்சினைகள் வரக் கூடும் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள். பிரச்சினையின் அடிநாதத்தைக் கண்டறிந்துவிட்டார்கள். இனி பெண்கள் மட்டுமே போராடுவது சாத்தியமில்லாதது என்று உள்ளூரில் முக்கியமான சமூக ஆர்வலர்களைச் சேர்த்து நதி நீர் பாதுகாப்புக் குழுவொன்றை அமைக்கிறார்கள். 

பவானி நதி நீர் பாதுகாப்புக் குழு என்று பெயர் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகான இந்தக் குழுவின் போராட்டம் அசாத்தியமானது.

பவானி ஆறு நீலகிரி மலைத் தொடரில் தொடங்கி சிறிது தூரம் கேரளாவுக்குள் பாய்ந்து பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி வழியாகச் சென்று பவானியில் காவிரியுடன் சங்கமிக்கிறது. வற்றாத ஜீவ நதி. இந்த நதியின் நீரில்தான் பிரச்சினை என்பதை லேடீஸ் க்ளப் கண்டறிகிறது. இதெல்லாம் நடப்பது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில். 1994 ஆம் ஆண்டில் நதிநீர் பாதுகாப்புக் குழு அமைக்கப்படுகிறது.

தாங்கள் போராடப்போவது சாதாரண ஆட்களை எதிர்த்து இல்லையென்பது அப்பொழுதே அவர்களுக்குத் தெரியும். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்கிற நிறுவனத்தை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும். அவர்கள்தான் டன் கணக்கான கழிவுகளை ஆறுகளில் அப்படியே கொட்டுகிறார்கள். நீரின் நிறம் மாறுகிறது. யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏனோ செத்துக் கிடக்கின்றன என்று நினைத்துக் கொள்கிறார்கள். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாத நீராக பவானி நீர் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு முதலில் இது குறித்தான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதை உணர்ந்து விவசாய சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள், வணிகர்கள் என்று சகலரையும் திரட்டுகிற வேலையைத் தொடங்குகிறார்கள். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பிரச்சினை குறித்துப் பேசுகிறார்கள். ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.

எஸ்.ஐ.வி நிறுவனமானது இன்றைக்கு டாடா ஸ்டீல் பிரச்சினையில் தவிடு தின்று கொண்டிருக்கும் சைரஸ் மிஸ்த்ரிக்குச் சொந்தமானது. லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. முதலாளிகள் எப்பொழுதும் முதலாளிகளாகவே இருப்பார்கள். அப்பொழுதும் அப்படித்தான். குழுவுக்கு எல்லாவிதமான அழுத்தங்களையும் கொடுக்கிறார்கள். மறைமுகமான மிரட்டல் விடப்படுகிறது. சோதனை மாதிரியை எடுத்துக் கொண்டு சென்றால் இவர்களுக்கு பின்னாலேயே ஆய்வகத்திற்கு மிஸ்திரியின் ஆட்கள் சென்று சரிக்கட்டுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று பலரும் விலை பேப்படுகிறார்கள். பலர் படிகிறார்கள். சிலர் துணிகிறார்கள்.


போராட்டம் வேகம் எடுக்கிறது. பவானி நதி நீர் பாதுகாப்புக்குழுவின் தலைவராகச் செயல்பட்ட மருத்துவர் சத்தியசுந்தரி எல்லாவற்றுக்கும் துணிகிறார். எந்தச் சூழலிலும் போராட்டம் கைவிட்டுவிடப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பயமில்லாமல் இல்லை. ஆனாலும் அவருக்கு ஆதரவாக நிறையப் பேர் நிற்கிறார்கள். அவர் எங்கே சென்றாலும் அவரைத் தனியாக விடாமல் ஒரு கூட்டம் அவருடனேயே செல்கிறது. மக்கள் அணி திரள்கிறார்கள். தொண்ணூறுகளின் மத்தியில் விஸ்கோஸ் ஆலைக்கு எதிராக வழக்கு தொடரப்படுகிறது. ஆலையைக் காப்பாற்றிவிடுவதற்காக விஸ்கோஸ் நிறுவனம் எல்லாவிதத்திலும் தயாராகிறது. பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆலை அது. சும்மா விடுவார்களா?

அப்பொழுது என்.கே.கே.பெரியசாமிதான் சுற்றுச்சூழல் அமைச்சர். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் போராட்டக் குழுவினருக்கு மிஸ்த்ரி குழுவினரால் விருந்து வழங்கப்படுகிறது. எப்படியும் வளைத்துவிடலாம் என்பது திட்டமாக இருந்திருக்கக் கூடும். உணவைத் தட்டத்தில் எடுத்த பிறகு ‘அப்புறம்...சமாதானமா போய்டலாமா?’என்பதுதான் மிஸ்திரி குழுவினரிடமிருந்து வந்து விழுந்த முதல் வாக்கியம் என்றார் மருத்துவர் சத்திய சுந்தரி. இதை அவர்கள் நேரடியாக மருத்துவரிடம் கேட்காமல் அமைச்சரிடம் கேட்டிருக்கிறார்கள்.

‘டாக்டர்கிட்ட பேசிக்குங்க...’ என்றாராம் என்.கே.கே.

மிஸ்திரியின் பார்வை மருத்துவரை நோக்கித் திரும்பியிருக்கிறது. ‘உங்களுக்கும் எனக்கும் என்னங்க பிரச்சினை? கழிவை நிறுத்துறதுன்னா சொல்லுங்க..சமதானமா போய்டலாம்’ என்றிருக்கிறார். அவ்வளவுதான் பேச்சு. அதற்கு மேல் எதுவுமில்லை. முகம் சுருங்கிப் போன மிஸ்திரி இனி சமாதானத்திற்கு வாய்ப்பில்லை என்ற முடிவை அடைந்திருகிறார்.

போராட்டக் குழுவினர் ஊர் திரும்பிய பிறகு ‘நம்ம எதிரிங்க கூட சரிசமமா உட்கார்ந்து எப்படிங்க சாப்பிடலாம்?’ என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். சத்தியசுந்தரியின் பதில் மிக முக்கியமானது. பெரிய போராட்டம் அல்லது சிறிய போராட்டம் என்றில்லை- எந்தப் போராட்டமாக இருப்பினும் அது வெற்றியடைவதற்கு போராளிகளின் மனவலிமை மட்டுமே போதுமானதில்லை; அணுகுமுறைதான் மிக முக்கியமானது. மக்களின் ஆதரவைப் பெறுகிற அதே சமயத்தில் எதிரியின் வலுவைக் குறைக்க வேண்டுமானால் அவனுக்கு நம் மீது வன்மம் வரவே கூடாது என்றாராம். எனக்கு இந்த வரிகள் மிகப் பிடித்துப் போயின. எதிராளி நம் மீது வன்மமும் கோபமும் கொள்ளும் போது அவனது வெறியும் வேகமும்தான் அதிகமாகிறது. அதன் பிறகு நாம் இன்னமும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

இப்பொழுதெல்லாம் ஊருக்குப் போகும் போது அடிக்கடி மருத்துவரைச் சந்திக்கிறேன். அவருக்கு எண்பது வயதாகிறது. இன்றைக்கும் சூழலியல் சார்ந்து தொடர்ந்து இயங்குகிறார். காலை நேரத்தில் மருத்துவம் பார்க்கிறார். சீமைக் கருவேலம் மர ஒழிப்பிற்காக பாடுபடுகிறார். வறட்சி பாதிக்கும் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கான வாழ்வாதார பிரச்சினைகளைப் போக்குவதற்கான வேலைகளைச் செய்கிறார். சூழலியல் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அவரைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் போது இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது.

மிகப்பெரிய காரியத்தை இந்தக் குழு செய்திருக்கிறது. 

அணி திரட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் விஸ்கோஸ் ஆலைக்கு எதிராகத் தீர்ப்பு எழுதப்பட்டது. ‘சுத்தமே செய்தாலும் கூட ஆற்றில் நீரைக் கலக்க அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பு வந்த பிறகு விஸ்கோஸ் படிப்படியாக தனது செயல்பாட்டை நிறுத்தி மொத்தமாக மூடப்பட்டுவிட்டது. மேட்டுப்பாளையத்திற்கு அருகே இருக்கும் சிறுமுகை என்ற சிற்றூரில் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட விஸ்கோஸின் முடிவுரை ஒரு லேடீஸ் க்ளப்பின் கூட்டத்திலிருந்து வேகம் எடுக்கப்பட்டு எழுதப்பட்டது என்பது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நதியைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வமாகப் போராடி வென்ற இந்தப் போராட்டம் சஞ்சீவிகுமாரின் பவானி நீர் குறித்தான தொடரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரா.முருகவேளின் ‘முகிலினி’நாவலை இன்னமும் வாசிக்கவில்லை. அந்நாவல் இது குறித்துப் பேசுவதாக சஞ்சீவி சொன்னார். கி.ச.திலீபன் குங்குமம் தோழில் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

போராட்டத்தின் கதையையும் இன்னபிற விவரங்களையும் ஆவணப்படுத்துகிற ஆர்வமும் விருப்பமும் இருக்கிறது. விஸ்கோஸ் ஆலைத் தரப்பு, ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள், ஜீவானந்தம் உள்ளிட்டவர்களின் பிற போராட்டக் குழுக்கள் என எல்லோரையும் சந்தித்துப் பேச வேண்டும். இதுகுறித்த மேலதிகத் தகவல்கள் அல்லது தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் தெரியப்படுத்தினால் தன்யனாவேன்.

நம் நாட்டில் அரசாங்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனிமனிதர்கள் சார்ந்த அமைப்புகள்தான் செய்கின்றன. இங்கே அரசாங்கம்தான் மரங்களை வெட்ட அனுமதிக்கிறது. நதிகள் மாசுபடுவதை வேடிக்கை பார்க்கிறது. கனிமங்கள் என்ற பெயரில் இயற்கை வேட்டையாடப்படுவதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது. மழை இல்லை. வறட்சி என்று அவ்வப்போது புலம்பவும் செய்கிறது. இதையெல்லாம் யாரோ சில தனி மனிதர்கள்தான் எதிர்த்துக் குரல் கொடுத்தும் போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். இன்றைக்கும் விஸ்கோஸ்தான் மூடப்பட்டிருக்கிறதே தவிர பவானி நதி முழுமையான பாதுகாப்பில் இல்லை. சாயப்பட்டறைகள் கழிவுகளைத் திருட்டுத்தனமாகக் கலக்கிவிடுகின்றன. காகித ஆலைகள் கழிவை கலக்குகிறார்கள். இப்படியான வன்புணர்வு அமைதியான அந்த நதியின் மீது தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டுத்தான் இருக்கின்றன. மீன்கள் சாவது குறைந்திருக்கிறதே தவிர இன்னமும் செத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நீர் கெடுவது தெரியாமலே மக்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாமும் தெரிந்தும் அரசாங்கம் கண்களை மூடி தியானத்தில் இருக்கிறது. 

Nov 28, 2016

திமுகவின் போராட்ட குணம்

கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக பற்றிய செய்திகள் இல்லை.

என்ன ஆயிற்று?

‘ஒன்று எதிர்க்கலாம் அல்லது பாராட்டலாம் ஆனால் கலைஞரை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழக அரசியலைப் பேச முடியாது’ என்பார்கள். இன்றைய தலைமுறை திமுகவை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறதா என்பதை திமுகதான் பரிசீலிக்க வேண்டும். இளந்தலைமுறையின் நம்பகத் தன்மையை மீட்டெடுக்கவும், திமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பாதை குறித்தும் தலைமைதான் யோசிக்க வேண்டும். 

இன்றைய தமிழகத்தில் ஆளுங்கட்சியில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களும் அமைதியாக இல்லை. இந்தச் சூழலில் பழைய திமுகவாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்க முடியும். அரசாங்கம் செயல்படுகிறதா இல்லையா? தமிழக அரசில் முக்கிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? பிரச்சினைகளில் தமிழக அரசின் வெளிப்படையான நிலைப்பாடு என்ன? என்று அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் கேள்விகளை மையமாக வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட தொண்ணூறு எம்.எல்.ஏக்களைக் கொண்ட எதிர்கட்சியான திமுக துணிந்து இறங்கியிருந்தால் இன்றைக்கு தமிழகமே கலகலத்திருக்கும். ஆனால் கட்சி ஏன் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வென்றிருக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெல்வது இயல்பானதுதான். விட்டுவிடலாம். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே தவறைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. அதிமுக பணம் கொடுக்கிற தொகுதிகளில் பணமே கொடுக்காமல் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது அதிமுக கொடுப்பதைவிடவும் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அதிமுக ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திமுக ஐநூறு ரூபாய் கொடுக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் இதே தவறைத்தான் செய்தார்கள். ‘ரெண்டு பேருமே திருட்டுப்பசங்கதான்’ என்று சொல்லிவிட்டு அதிகமாகக் கொடுத்தவனுக்குக் குத்துகிற மனநிலைதான் மக்களிடம் இருக்கிறது. இப்படியே காசைக் கொடுத்துக் கொடுத்து தோற்றுக் கொண்டிருந்தால் ‘நின்று பார்க்கலாம்’ என்கிற மனநிலை கூட முடங்கிவிடாதா? எழுபதுகளிலும் எண்பதுகளிலுமிருந்த திமுகவாக இருந்தால் நிச்சயமாக பணமில்லாமல் தேர்தலைச் சந்தித்திருக்கும். ஆனால் இப்பொழுது திமுகவுக்கு அந்த தைரியம் கிடையாது. சத்தியமே செய்யலாம். 

எம்.ஜி.ஆர் காலத்தில் ஏதாவது போராட்டம் என்று கலைஞர் அறிவித்தால் சென்னையே நடுநடுங்கிப் போகும் என்பார்கள். காவலர் ஒருவர் துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கும் போது தனது சட்டைப் பொத்தான்களை கழற்றிவிட்டுவிட்டு ‘சுடு பார்க்கலாம்’ என்று நெஞ்சைக் காட்டுகிற ஒரு தொண்டனின் படம் அன்றைக்கு ஏக பிரபலம். இன்றைக்கு அப்படியான வேகமும் துணிச்சலும் கொண்ட திமுக தொண்டர்கள் எங்கே போனார்கள்? கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி; தன் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி- ‘காசைக் கொடுத்தால்தான் செலவு செய்வோம்’ என்று அடம் பிடிக்கிற நிர்வாகிகளை உள்ளே விட்டது யாருடைய தவறு? 

ஒரு முறை நண்பர் குமணன் பொதுக்குழுவில் பேசும் போது ‘அண்ணா காலத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் கழகத்துக்கு இருந்தார்கள். இன்றைக்கு எழுபது லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கு இருக்கிறது. ஆனால் அண்ணா காலத்தில் இருந்த அதே ஒரு லட்சம் பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். மீதமெல்லாம் போலி உறுப்பினர்கள்’ என்று பேசியதாகச் சொன்னார். துரதிர்ஷ்டவசமாக அந்த ஒரு லட்சம் பேரில் கூட முக்கால்வாசிப் பேர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். போலிகள்தான் கட்சியின் பதவிகளில் இருக்கிறார்கள். ஒன்றியச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை; நகரச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை என்று பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் பணம் வசூலிக்கிறார்கள். காசு கொடுத்து பதவிக்கு வந்தவன் ஒவ்வொருத்தனும் ‘எங்கே வாய்ப்பு கிடைக்கும்’ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அடிமட்டத்திலிருந்து போராடி களம் கண்டு பதவிகளுக்கு வருகிறவர்கள் போராட்டங்கள் நடக்கும் போது ‘இது நம் கட்சி; என் தலைவன் அறிவித்த போராட்டம்’ என்று களத்தில் நிற்பார்கள். பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும், பணம் வைத்துக் கொண்டு டைம்பாஸூக்கு அரசியலில் இருப்பவர்களுக்கும் பதவியைக் கொடுத்தால் வெள்ளை வேஷ்டி கசங்கிப் போகும் என்றும் சட்டைக் காலரில் வியர்வை படியும் என்றும் மர நிழலில் ஒதுங்கத்தான் பார்ப்பார்கள். போராட்டம் பிசுபிசுக்காமல் என்ன ஆகும்?

இன்றைக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் காசு கொடுத்து, சிபாரிசு பிடித்து பதவிக்கு வந்தவர்கள்தான். இல்லையென்று மறுக்க முடியுமா? 

இப்படி மோசமான உட்கட்டமைப்புகளாலும், கட்சி மீது பற்றுக் கொண்ட நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டதாலும் மெல்ல மெல்ல கரையானைப் போல கட்சி அரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தலைமைக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்தான்.

இப்பொழுது உண்மையான திமுக விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். சகல செல்வாக்கும் படைத்த கனிமொழியே கூடத் திணறிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? கனிமொழி ஏன் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை? தஞ்சையில் கொடிகட்டிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இடைத்தேர்தலில் என்ன செய்தார்? நிறையக் கேட்கலாம். உட்கட்சி விவகாரம் என்பார்கள். கனிமொழி மாதிரியான முகங்கள் மேலே வருவதும் அவருக்குப் பின்னால் கூட்டம் சேர்வதும் நல்ல விஷயம்தான். ஆனால் விடமாட்டார்கள். ஓரங்கட்டுகிறார்கள். 

ஓரங்கட்டுவது எல்லாக் கட்சியிலும் உண்டுதான். தமக்கு எதிராக மேலே வந்துவிடக் கூடும் என்று பயப்படும் போதெல்லாம் தலைமை தட்டி வைப்பது வாடிக்கைதான். ஆனால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்கள் தமக்கான ஆட்களைத் திரட்டிக் கொண்டு கட்சிக்கு எதிராகச் செயல்பட முடியாது. ஆனால் திமுகவில் செய்ய முடியும். ‘நானே போகல..நீ ஏண்டா போறீங்க?’ என்று எடுபிடிகளைக் கேட்க முடியும். அதுதான் பிரச்சினை. அதிமுகவில் இருப்பது சர்வாதிகாரம். திமுகவில் இருப்பது போலி ஜனநாயகம். கட்சியின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் போலி ஜனநாயகத்தைவிடவும் சர்வாதிகாரம் எவ்வளவோ தேவலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி மூன்றாவது சக்தி எதுவுமே தென்படவில்லை. இவர்களில் யாரோ ஒருவர்தான் வெல்ல முடியும். ஒருவரே வெல்லாமல் மாறி மாறியாவது வெல்லட்டும் என்றுதான் மனம் விரும்புகிறது. ஆனால் இனி அதிமுகவை வெல்ல வேண்டுமானால் திமுகவின் போர்க்குணத்தால்தான் முடியுமே தவிர, பணத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது.

அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும், கலைஞரும் உருவாக்கி வைத்திருந்த போர்க்குணத்தால்தான் இனி அது சாத்தியம். ஆனால் அதைத் திரும்ப மீட்டுவது சாதாரணக் காரியமில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கட்சி குறித்தான நல்லெண்ணத்தை விதைக்க வேண்டும். எவ்வளவோ இருக்கிறது. அட்டைக் கத்தி வைத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் சுழற்றுகிறவர்கள் கட்சியின் மீதான வெறுப்பைத்தான் வளர்க்கிறார்களே தவிர கட்சியின் மீதான அபிமானத்தை வளர்ப்பதாகத் தெரியவில்லை.

தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு கடந்த தேர்தலின் போது மாறிய நண்பர் ஒருவரிடம் பேசிய போது கடந்த ஐந்தாண்டுகளாக தேமுதிக அறிவிக்கும் போராட்டங்கள் இப்படித்தான் இருந்ததாகச் சொன்னார். தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாகக் கூடுவார்கள். அரை மணி நேரம் கோஷமிடுவார்கள். பிறகு தேநீர் அருந்திவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். மறுநாள் ‘வெற்றி வெற்றி’ என்று அறிக்கை வரும். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கிடக்கிறது. நோட்டாவில் விழும் வாக்குகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த சட்டமன்றத்தின் எதிர்கட்சி. ‘அப்படித்தான் மனிதச் சங்கிலி இருந்தது’ என்றார். 

திமுகவையும் தேமுதிகவையும் ஒப்பிடுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. தேமுதிகவெல்லாம் கட்சியே இல்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்த திமுகவின் ஆற்றலும் வலிமையும் இப்பொழுது என்ன ஆகியிருக்கிறது என்பதைக் கட்சிதான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஓரங்கட்டுதலும், பணமும் மட்டுமே கட்சியை ஆட்சிக்கட்டிலுக்கு எடுத்துச் சென்றுவிடாது என்பதை கலைஞருக்கு அடுத்து இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எழுதி வைத்துக் கொள்ளலாம். கட்சியின் அடிப்படையில் மாறுதல்களைக் கொண்டு வராமல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தால் திமுக நாறடிக்கப்பட்டுவிடும். அதிமுக எல்லாவிதத்திலும் தயாராக இருக்கிறது. இன்னொரு ஐந்தாண்டுகளுக்கு கீழ்மட்ட அதிகாரங்கள் கைவசமாகவில்லையென்றால் கட்சியின் நிலைமை விபரீதமாகிவிடும். 

Nov 27, 2016

ஒரு புஸ்தகம் போடணும்...

டிசம்பர் மாதம் நெருங்கும் போது புத்தகம் அச்சாக்கம், பதிப்பகங்களை அணுகுவது குறித்து ஒன்றிரண்டு பேர்களாவது கேட்பது வாடிக்கையாகிருக்கிறது. எழுதியதையெல்லாம் புத்தகமாக்கிவிட வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? போதாக்குறைக்கு கிடைக்கிற சந்துகளிலெல்லாம் நம்மவர்கள் விளம்பரங்களை ஆரம்பித்து வைத்து உசுப்பேற்றுகிறார்கள்.

‘உங்களுக்கு புடிச்ச பதிப்பகத்துக்கு அனுப்பி வைங்க...காசு வாங்காம அச்சடிச்சுக் கொடுத்தா புக்கா வரட்டும்...ஒருவேளை காசு கேட்டாங்கன்னா யோசிச்சுங்க’ என்றுதான் பதில் சொல்கிறேன்.

பணம் கொடுத்து புத்தகத்தை பதிப்பிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அப்படி புத்தகத்தை வெளிக் கொண்டு வருவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று நிறைய இருக்கக் கூடும். பணிபுரியும் இடத்திலும் உறவினர்களிடமும் ‘இவர் எழுத்தாளர்’ என்று நம் பெயர் ஒரு படி உயரக் கூடும். காதலிக்காகவோ, மனைவிக்காகவோ அல்லது நமக்கே நமக்கான சந்தோஷத்துக்காகவோ என்று பின்னணியில் ஏதாவதொரு காரணம் இருக்கும்.

புத்தகம் வெளியானால் சந்தோஷம்தான். இல்லையென்றல்லாம் சொல்லவில்லை. ஆனால் அதற்காக ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் என்று செலவு செய்ய வேண்டியதில்லை. அது பெருந்தொகை. எவ்வளவு செலவாகும் என்று தோராயமாகப் பார்ப்பதற்கு முன்பாக ஏன் இப்பொழுதே புத்தகம் வெளியாக வேண்டும்? எவ்வளவு பிரதிகள் விற்கும் உள்ளிட்ட ஒன்றிரண்டு சுய பரிசோதனைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒருவேளை எந்தக் கேள்வியையும் கேட்டுக் கொள்ளவில்லையென்றாலும் கூட  ‘ஏன் ஏதாவதொரு குறிப்பிட்ட பதிப்பகத்தின் மூலமாக புத்தகம் வெளி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்ற ஒற்றைக் கேள்விக்காகவாவது பதில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

‘அந்த பதிப்பகம் பிரபலமானது. அவர்கள் மூலமாகப் புத்தகம் வெளியானால் கவனம் கிடைக்கும்’ என்ற எண்ணமிருந்தால் அடித்து நொறுக்கிவிடலாம். அதுவொரு myth. வெளிநாடுகளில் வசிக்கும் முக்கால்வாசி நண்பர்கள் இப்படித்தான் நம்பிக் கொண்டு புத்தகத்தை அனுப்பி வைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. தீபாவளி சமயத்தில் லட்டு உருட்டிக் குவித்து வைக்கிற சேட்டு கடைக்கும் டிசம்பர் மாத பதிப்பக வேலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. உற்பத்தித் துறையில் மாஸ் புரொடக்‌ஷன் என்ற சொல் உண்டு. கிட்டத்தட்ட அதுதான் நடக்கிறது.

புத்தகத்தைக் கொண்டு வருவதோடு சரி.

ஓர் எழுத்தாளனின் புத்தகத்தை ஒரு பதிப்பகம் கொண்டு வருகிறது என்பதற்காகவே அந்த பதிப்பகம் அவனுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்து அவனுக்கான விளம்பரங்களைச் செய்து கொடுப்பதில்லை. யாரைப் பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன, எந்த எழுத்தாளனின் பெயரைக் குறிப்பிட்டு பதிப்பாளன் பொதுவெளியில் பேசுகிறான் என்பதிலெல்லாம் ஆயிரத்தெட்டு அரசியல் உண்டு. தமக்கு எல்லாவிதத்திலும் உவப்பான ஒன்றிரண்டு எழுத்தாளனை மட்டுமே ஒவ்வொரு வருடமும் பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்கும். அந்த உவப்பான ஒன்றிரண்டு பேர் பட்டியலில் சேர்வதற்காக வருடம் முழுவதும் மெனக் கெட வேண்டும். கொஞ்சம் கூடத் தயங்காமல் சொறிந்துவிட வேண்டும். கூழைக் கும்பிடு போட வேண்டும். பஜனை பாட வேண்டும். நம் ஈகோவை காலடியில் போட்டு மிதித்துவிட்டுத்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியா கிட்ட போற கணக்கா’ என்ற சொலவடை எங்கள் ஊர்ப்பக்கம் பிரசித்தம். அப்படியான கதைதான் இது.  

‘எழுத்தின் தரத்திற்காகவே இந்த எழுத்தாளனைத் தூக்கிப் பிடிக்கிறோம்’ என்று பதிப்பகம் சொல்லுமானால் வாய் உட்பட எதில் வேண்டுமானாலும் சிரிக்கலாம். பெரும்பாலான பதிப்பகங்கள் அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. எப்பொழுது யாரைத் தூக்கி விட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். எப்பொழுது தூக்கிவிட்டவனை இழுத்து கீழே தள்ள வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். உன்னிப்பாகக் கவனித்தால் நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஆனால் அதே சமயம் நேரடியாகக் கண்களுக்குப் புலனாகாத நுண்ணரசியல் இது.

இந்த மாதிரியான கச்சடா வேலைகளையும் கழிசடை அரசியலையும் செய்யாத நல்ல பதிப்பகங்களும் இருக்கின்றனதான். ஆனால் அவையெல்லாம் மறைக்கப்பட்டுவிடுகின்றன. அவர்கள் சரி; இவர்கள் தவறு என்றெல்லாம் அறம் பேச முடியாது. வல்லவன் பிழைத்துக் கொள்கிறான் என்கிற தத்துவம்தான் இங்கே செயல்படுகிறது. அதனால் எவனோ எப்படியோ போனாலும் நாம் தப்பித்துக் கொள்வோம் என்கிற அளவுக்கான தெளிவாவது இருந்தால் சரிதான்.

நம்முடைய பெயர் பரவலாக வாசக கவனம் பெறாத போதும், புத்தகமாகக் கொண்டு வந்தால் விற்பனை ஆகுமா என்று சந்தேகம் வலுத்திருக்கும் போதும் புத்தகம் வெளியிடுவது என்பது தற்காலிக இன்பம்தான். அந்தத் தற்காலிக இன்பம் தேவையற்றது. தொடர்ந்து எழுதி நம்மை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தலாம். ‘இல்லை இல்லை..எனக்கு அந்த இன்பம் தேவை’ என்று சொன்னால் அதற்காக சில அடிப்படையான விஷயங்களையாவது தெரிந்து வைத்துக் கொண்டு களமிறங்கலாம். 

நூறு பக்கமுள்ள புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சடித்தால் முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இருநூறு பக்கங்கள் என்றால் நாற்பதாயிரம் ரூபாயும் முந்நூறு பக்கங்களுடைய புத்தகம் என்றால் ஐம்பதாயிரம் வரைக்கும் ஆகலாம். இதுதான் அதிகபட்சம். வடிவமைப்பு, அட்டை உருவாக்கம் என எல்லாமும் சேர்ந்த செலவு இது. பதிப்பகங்களில் கொடுக்கும் போது அவர்கள் பணம் கேட்கக் கூடும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசியும் என்பதால் இந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் தரலாம். அவ்வளவுதான் கணக்கு. இதற்கு மேலாகக் காசு கொடுத்துவிட்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருப்பது தேவையே இல்லை.

பதிப்பகத்தின் லோகோவே தனது புத்தகத்துக்குத் தேவையில்லை என்று நினைக்கிறவர்களுக்கு ‘ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்’ சாலச் சிறப்பு. ஆயிரமோ இரண்டாயிரமோ செலவு செய்து புத்தகத்தை வடிவமைத்து சிடியில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது அச்சடித்துக் கொள்ளலாம். பக்கத்துக்கு இருபத்தைந்து காசு கணக்கு ஆகும். அட்டை அச்சுக்குக்கு பதினைந்திலிருந்து இருபது ரூபாய். நூறு பக்கமுள்ள புத்தகம் என்றால் நாற்பது ரூபாயில் வேலை முடிந்தது. ஐம்பது பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம்.  ஆயிரம் பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். 

மேற்சொன்ன இந்தக் கணக்கு விவரமாவது நமக்குத் தெரிந்திருந்தால் யாரும் நம் வாயை ஏய்க்க முடியாது.

‘நீங்களா புக் போட்டா எப்படி விப்பீங்க?’ என்று கொக்கி போடுவார்கள். பதிப்பகம் வழியாக புத்தகம் வெளியாகும் போது புத்தகக் கண்காட்சிகளில் விற்பனை செய்வார்கள். சுயமாக அச்சடித்தால் எப்படி விற்பனை செய்வது என்கிற குழப்பம் உண்டாவது இயல்புதான். ஆனால் அதுவொன்றும் பெரிய காரியமில்லை. சில கடைக்காரர்கள் ஒவ்வொரு ஊரிலும் புத்தகக் கண்காட்சியில் கடை போடுகிறார்கள். அவர்களிடம் விற்பனை உரிமையைக் கொடுத்துவிடலாம். விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்குப் போய்விடும். ஆனாலும் நம் புத்தகம் பரவலாக விற்பனைக்குக் கிடைக்கும். 

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் என்னுடைய புத்தகம் வெளியாகும். அந்தச் சமயங்களில் இதைப் பேசினால் ‘பரபரப்பு உண்டாக்கி இவன் புஸ்தகத்துக்கு விளம்பரம் தேடுறான்’ என்பார்கள். வாசகர்களுக்கு அதிர்ஷ்டவசமாக, இந்த வருடம் என்னுடைய புத்தகம் எதுவும் வெளியாகவில்லை. யாரும் வாய் மீது போட முடியாது. இனி பேச வேண்டியதுதான்.

Nov 25, 2016

குரூரங்கள் மிகு உலகு

வாசிப்பதற்கென சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.  இணையத்திலிருந்து தேடியெடுத்த கவிதைகள்.

கவிதைகளை இரவு நேரங்களில் வாசிப்பது வழக்கம். ஊர் அடங்கிய பிறகு, அன்றைய தினத்துக்கான வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு தூரத்தில் நாய்கள் ஓசையெழுப்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் எடுத்து வைத்திருக்கும் கவிதைகளிலிருந்து ஒவ்வொன்றாக வாசிக்கும் போது மனதுக்குள் சலனமுண்டாக்கும் கவிதைகளை மட்டும் திரும்பத் திரும்ப அசைபோடுவதுண்டு. சலனமுண்டாக்காத கவிதைகள் மோசமான கவிதைகள் என்று அர்த்தமில்லை. நம்மை ஈர்க்காத அதே கவிதைகள் பிறிதொரு சமயத்தில் கவிதைகள் நம் கவனத்தைக் கோருபவையாக அமையக் கூடும். கவிதை வாசித்தலுக்கும் ஆழ்மனநிலைக்கும் பெரும் தொடர்பு உண்டு. அந்தந்த நேரத்துக்கான மனநிலைதான் நம்மோடு கவிதையின் ஒட்டுதலை நிர்ணயிக்கின்றன. 

சந்தோஷமோ, துக்கமோ- இரவில் மனதுக்கு நெருக்கமான ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு உறங்குவது ஒருவிதமான இன்பம். 

மொழியின் எந்த வடிவத்தைக் காட்டிலும் கவிதைதான் நம்முடனான அந்தரங்கமான தொடர்பை உண்டாக்கக் கூடியவை. அந்தரங்கமான தொடர்பு என்றால்- கவிதைக்கும் நமக்குமாக உண்டாகக் கூடிய அலைவரிசை. வாசிக்க வாசிக்க பயிற்சியில் உண்டாகக் கூடிய தொடர்பு இது. நாவல், சிறுகதை உள்ளிட்ட எழுத்தின் பிற வடிவங்களில் பெரும்பாலும் எழுத்தாளன் சொல்ல வருவதையேதான் கிட்டத்தட்ட வாசகனும் புரிந்து கொள்கிறான். ஆனால் கவிதையில் அப்படியில்லை. அதன் விதவிதமான கோணங்களையும் பரிமாணங்களையும் எழுதியவனே கூட யோசித்திருக்க மாட்டான். கவிதையுடன் தமக்கு உண்டாகக் கூடிய தொடர்பின் வழியாக வாசகர்களே வெவ்வேறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

வெ.மாதவன் அதிகனின் கவிதைகள் சில.

(கவிஞர். வெ.மாதவன் அதிகன்)

                                                                      (1)

நீங்கள் யாரை அங்கு பார்த்தீர்களோ
அது அவர் தான்
சந்தேகம் வேண்டாம்

நீங்கள் எந்நேரத்தில் பார்த்தீர்களோ
அது அதற்குரிய பொழுதுதான்
தயக்கம் வேண்டாம்

நீங்கள் பார்த்தது 
உங்களுடைய கண்களால் தான்
பயமேதும் வேண்டாம்

நீங்கள் 
இப்பொழுது யாரை கொலை செய்ய 
துணிந்தீர்களோ அதுவும் அவர் தான்
சிறிதளவும் கனிவு வேண்டாம் செய்மின்

                                                           (2)

உங்களில் யாருக்கு நன்றி சொல்வது?
எவ்வளவு அழகாக வெட்டியிருக்கிறீர்கள் தலையை
கழுத்தை அதன் நீள்குறுக்கு வெட்டில்
வாழை மீனின் வறுவல் துண்டினை போல்
துளி உதிரம் கூட சிந்தாமல்
சற்றும் பிசிறு நீளாமல் நேர்த்தியாக
அதையென் கையில் கொடுத்து 
என்னையே அழகு பார்க்கச் செய்கிறீர்
முகம் கழுவி விட்டு கண்ணீர் நீக்கி
சுவைக்க ஒரு லாலிபப் வாங்கி கொடுக்கவும் 
பின் தலைவாரி முகப்பூச்சிட்ட தலையை
தூக்கிக் கொண்டு செல்லவும் வைத்தீர்
ஆனாலும் குறையொன்றுமில்லை
தலையில்லாத கழுத்து 
எவ்வளவு ஆனந்தம்
எவ்வளவு பேரின்பம்
எவ்வளவு பரமானந்தம் பரமம்

                                                                   (3)

அவளுக்கு பிங் நிறம் வேண்டும்
பிங் நிறத்திலொரு டெடிபேர்
பிங் நிறத்திலொரு நாய்குட்டி
பிங் நிறத்திலொரு பூனை
பிங் நிறத்திலொரு வீடு
பிங் நிறத்தில் வாசலும் கோலமும்
அவளுக்கு காதல் வந்தபோது
அழுவதற்கு பிங் நிற கண்ணீர்
இப்படியாக கடைசியிலொரு
பிங் நிற தாலியும் கேட்டாள்
இப்பொழுது 
அவள் பிங் நிற கழுத்தை
பிங் நிற கத்தியால்
பிங் நிற இரத்தம் கொப்பளிக்க
பிங் நிற கடவுள் அறுத்துக் கொண்டிருக்கிறார்.

மாதவனின் இந்த மூன்று கவிதைகளிலும் ஒரு மெல்லிய இணைப்பு இருக்கிறது- குரூரம். 

கவிதைகளில் வன்மும் குரூரமும் மிதமிஞ்சிக் கிடக்கிறது. ஆனால் காரியங்கள் நாசூக்காகச் செய்யப்படுகின்றன. ஆர்ப்பாட்டம் இல்லை. அழிச்சாட்டியம் இல்லை. தலையை வெட்டி அதை வெட்டுப்பட்டவனின் கையிலேயே கொடுத்து வாயில் லாலிபாப்பையும் வைக்கிறார்கள். இந்த உலகம் அப்படித்தானே இருக்கிறது?  ஒவ்வொருவரும் மனம் நிறைய கொப்புளிக்கும் வன்முறையையும் பொறாமையையும் புதைத்து வைத்திருக்கிறோம். அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காதா என ஏங்குகிறோம். கிடைக்கும் போது தயக்கமேயில்லாமல், ஆனால் வெகு நாசூக்காக வெளிப்படுத்துகிறோம்.

அதைத்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. கொல்லச் சென்றிருப்பவனிடம் ‘அவன்தான் செஞ்சுடுங்க’ என்று அமைதியாகச் சொல்கிறார்கள். தலையை வெட்டி அவனிடமே கொடுக்கிறார்கள்; பிங்க் நிறக்காரியை பிங்க் நிறக் கடவுளே கழுத்தை அறுக்கிறார். குரூரம்தான். ஆனால் எவ்வளவுதான் நாசூக்கும் நாகரிகமும்?

கவிதையில் இவ்வளவு வன்முறைக்கான இடம் எங்கேயிருந்து உருவாகிறது? வன்முறைகள் அவசியம்தானா? 

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் கசப்பும் கசடும் வெளிப்படும் இடமாகத்தான் நவீன கவிதை இருக்கிறது. ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று மறுத்தாலும் குரூரமானவர்களும் நம் தோல்விகளை ரசித்து அனுபவிக்கிறவர்களும் திரும்பிய திசையெங்கும் இருக்கிறார்கள். வாழ்க்கையின் புதிரான இண்டு இடுக்குகளில் எதிராளியின் சதிராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் கவிஞன் இதையெல்லாம் கவிதையாக்கும் போது வன்முறை வந்து அமர்கிறது. குரூரம் தனக்கான இடத்தைப் பிடிக்கிறது. இதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. 

கவிதை, எப்பொழுதுமே காலத்தின் கண்ணாடியாகத்தான் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இயங்கும் உலகினை தனது சொற்களால் படம்பிடிக்கிறது. அப்படியிருக்கையில் வன்மத்தையும் பகைமையுணர்ச்சியையும் எப்படித் தவிர்க்க முடியும்?

வெ.மாதவன் அதிகனின் நிறையக் கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன. மாதவனின் சர்க்கரைக் கடல் என்ற தொகுப்பு வெளியாகியிருக்கிறது. அதன் பிறகு வேறு ஏதேனும் தொகுப்பு வெளியாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் கவிதைகளைத் தொடர்ந்து பதிவிடுகிறார். அங்கிருந்துதான் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.

மாதவன், விருதாச்சலம் பக்கத்தில் அரசு ஆசிரியர். 

சமீபமாக மனதுக்கு நெருக்கமான கவிஞர்களில் ஒருவர். நிறையக் கவிதைகளை ஒரு சேர வாய்க்கும் போது ஒரே சொற்களைத் திரும்பப் பயன்படுத்துவது, தொடர்ந்து எழுதப்படும் குறுங்கவிதைகள், சில கவிதைகள் ஒரே வகையிலான சட்டகத்திற்குள்(Template) சிக்கியிருப்பது என்பதாக சில குறைகள் கண்ணில்பட்டன. 

இருந்துவிட்டுப் போகட்டும்.

வெ.மாதவன் அதிகன் மாதிரியான கவிஞர்கள் கவனம் பெற வேண்டியவர்கள். தொடர்ந்து எழுத வேண்டியவர்கள். அவரது செழுமையான அடுத்த தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மின்னஞ்சல்: madhavanadhigan@gmail.com

எவ்வளவோ இருக்கு

லட்சத்தில் இருந்தாலும் சரி, ஆயிரத்தில் இருந்தாலும் சரி- தமது வருமானத்தில் குறிப்பிட்ட விகிதத்தை அடுத்தவர்களுக்கு ஒதுக்குகிறவர்கள் ஒரு பக்கம் என்றால் அம்மா அப்பாவிடமிருந்து சில்லரைக் காசுகளை வாங்கி உண்டியலில் நிரப்பி நிரம்பியவுடன் உடைத்து அப்பாவிடம் கொடுத்து நிசப்தம் அறக்கட்டளைக்கு மாற்றச் சொல்கிற நிதின் மாதிரியானவர்கள் இன்னொரு பக்கம். மனம் சற்றே சுணங்கும் போது இத்தகைய மின்னஞ்சல்கள்தான் எதைப் பற்றியும் யோசிக்கவே வேண்டியதில்லை என்று முட்டுக் கொடுக்கின்றன.

நிதின் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். துபாய்வாசி. ஏழெட்டு வயது இருக்கும். சேகரித்த காசை அப்பாவிடம் கொடுத்து அதை அறக்கட்டளைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறான். கணக்குக்கு வந்துவிட்டது. ஆறாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறான். தொகை பெரியதில்லை. ஆனால் மனம் பெரிது.

‘நிதின் பெயருக்கு ரசீதை அனுப்பிவிடுங்கள்’ என்று அவனது அப்பா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

‘சேர்த்து வைக்கிற காசுல சைக்கிள் வாங்கிக்கட்டுமா?’ ‘காசு கொடுக்கிறேன் சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களா?’ என்றுதான் பெரும்பாலான குழந்தைகள் கேட்பார்கள். தாம் சேகரித்து வைத்த பணத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலையை உண்டாக்குவதே மிகப்பெரிய விஷயம். அடுத்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு அதில் சந்தோஷமடைகிற குழந்தைகள் அதே எண்ணத்தோடு வளரும் போது பணம் என்பது பிரதானமாகவே தெரியாது. 

நம் பணத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்குக் கிடையாது. ‘என் பணம் என்னுடையது’ என்கிற கஞ்சத்தனம் ஊறிக் கிடக்கிறது. முட்டையில் படைத்ததுதானே கட்டைக்குப் போகும் வரைக்கும் இருக்கும்? வளர்ந்ததே அப்படித்தான். எட்டாம் வகுப்பில் மிதி வண்டி வாங்கிக் கொடுத்தார்கள். ஓடுகிற வண்டியில் ப்ரேக் அடித்தால் ப்ரேக் கட்டை தேய்ந்துவிடும் என்று காலை நிலத்தில் உரசி உரசியே வண்டியை மெதுவாக்குவேன். பென்சில் கூட அதிகமாகச் சீவ மனம் வராது. அழிப்பானை முடிந்த வரை தவிர்த்துவிட்டு விரலிலேயே தேய்த்துப் பார்ப்பேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறதுதான். ஆனால் அப்படித்தான் இருந்தேன்.

‘இருபது ரூபாய் கூட அப்பா கடன் வாங்குகிறார்’ என்ற ஒற்றை வரி ஆழமாகத் தைத்துக் கிடக்கிறது. அப்பா வாங்கியது தெரியும். இருபது ரூபாயை யாரிடமோ கேட்டு அவர்கள் சலித்துக் கொண்டதும் தெரியும். அது கூடக் காரணமாக இருக்கலாம். 

வாசிக்கிறேன், எழுதுகிறேன், நிறைய மனிதர்களைச் சந்திக்கிறேன். ஆனால் இன்றைக்கும் கூட அப்படித்தான் இருக்கிறேன். எழுதுவதால் கிடைக்கக் கூடிய பணத்தைத் தவிர சம்பளத்திலிருந்து ஒற்றைப் பணம் கூட அறக்கட்டளைக்கு தருவதில்லை. அறக்கட்டளை காரியங்களுக்காக வெளியூர்களுக்கு போய் வருகிற செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாம் செய்கிறேன்தான். ஆனால் அவையெல்லாம் எனக்கான செலவுகள். சேகரிக்கிற அனுபவங்களுக்காக நான் கொடுக்கிற கூலி. அதனால் சமாதானம் ஆகிக் கொள்வதுண்டு.

சம்பளப் பணம் குடும்பத்தைத் தாண்டி அடுத்தவர்களுக்குச் செல்வதில்லை. மனம் பழகிவிட்டது.

கடந்த வாரம் ஊரில் இருந்தேன். கரட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த அழகர் என்கிற மாணவன் பயிற்சியின் போது கீழே விழுந்துவிட்டான். கை விரல்கள் வீங்கிவிட்டன. அபி மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்கள். தகவல் வந்தது. சென்றிருந்தேன். மருத்துவர் கார்த்திகேயன் பார்த்துவிட்டு காசு வாங்கிக் கொள்ளவில்லை. எக்ஸ்ரேவுக்கும் காசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வீக்கத்திற்காக மட்டும் மருந்து எழுதிக் கொடுத்திருந்தார்கள். அழகரின் அம்மாவும் அப்பாவும் தினக்கூலிகள். வெறும் நூற்றியருபது ரூபாய்தான் மருந்துச் செலவு. அவர்களிடம் காசு இல்லை. சட்டைப்பையில் பணம் வைத்திருந்தேன். அதை எடுப்பதற்குள் எவ்வளவு போராட்டத்தை மனதுக்குள் நடத்தினேன் என்று எனக்குத்தான் தெரியும். 

பிறகு யோசிக்கும் போது வெட்கமாக இருந்தது. வெளியில் ஒரு பிரியாணி உண்டால் கூட இருநூறு ரூபாய் செலவு பிடிக்கும். சர்வசாதாரணமாகத் தோன்றும் போது தின்பேன். அப்பொழுது செலவு பற்றி யோசித்ததேயில்லை. ‘எங்களுக்கு நேரமே சரியில்ல’ என்று அழகரின் அம்மா அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகும் ஏன் உடனடியாகப் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லை என்று யோசிக்கும் போதுதான் மனம் புழுங்குகிறது. இதை வெளியே சொல்வதற்கு வெட்கம் எதுவுமில்லை. இதுதான் மனம். இப்படித்தான் இருக்கிறேன். கச்சடா. கஞ்சத்தனம்.

‘அடுத்தவங்களுக்கு பணத்தைக் கொடு’ என்று மகியிடம் சொன்னதாக நினைவே இல்லை. நம் பணம், நம் சொத்து என்று சொல்லிச் சொல்லி பொறுப்பை வளர்க்கிறேன் என்ற பெயரில் சுயநலத்தைத்தான் ஊட்டிக் கொண்டிருக்கிறேன். 

நிதின் மாதிரியானவர்கள் அனுப்புகிற பணத்திலும் மின்னஞ்சலிலும்தான் சுயகேள்விகள் உருவாகின்றன. மனிதர்கள் எவ்வளவு உயரத்தில் நிற்கிறார்கள் என்பதுதோடு சேர்த்து நம் மனதுக்குள் அடங்கிக் கிடக்கும் கச்சடாக்களும் அலையடிக்கின்றன. எவ்வளவு மாற வேண்டியிருக்கிறது? அடுத்தவனின் கண்ணீரைவிடவும் நம் பணம் முக்கியம் என்கிற எண்ணம் எவ்வளவு பெரிய கழிசடை? நம்முள் கழிசடைகளை வைத்துக் கொண்டிருக்கும் போதே நம்மை அடுத்தவர்கள் நல்லவன் என்று சொல்லும் போதும், அப்படி நம்மை நம்பும் போதும் கூனிக் குறுக வேண்டியதில்லையா?

நெகிழாமல் குலையாமல் கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால் இந்த சுய கேள்விகளும் பதில்களும் குற்றவுணர்ச்சியை உண்டாக்குவதில்லை என்றாலும் கூட கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்பது புரிகிறது. ஆறு வயதுப் பையனிடமிருந்தும் கூட நாம் கற்றுக் கொள்ள முடிகிறது. better late than never. வாழக் காலம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

நன்றி நிதின்.

Nov 24, 2016

நீட்

தங்களின் NEET தொடர்பான இரண்டு கட்டுரைகளையும் வாசித்தேன். முழுவதும் ஒப்புக் கொள்ளக்கூடிய கருத்துகள். இதுவரை நமது அரசு NEET தேர்விற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றே இப்பொழுதும் புதிய தலைமுறையின் ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.

எப்படி இருந்தாலும் தேசிய நீரோட்டத்தில் நமது பிள்ளைகள் கலந்து கொள்ள எண்ணி செயல்பட்டாலும் அதற்கான சூழ்நிலையில் இப்பொழுது நாம் இல்லை. பயிற்சி நிறுவனங்கள்  என்று ஆரம்பித்தாலும் அதுவும் எட்டாக்கனியே. 

CBSE பாடத் திட்டத்தில் படித்தால் மட்டும் அத்தகைய தேர்வுகளை எழுதிவிடமுடியும் என்பதும் கனவாகவே இருக்கின்றது. ஒரு சிலர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதாக வைத்துக் கொண்டாலும் JEE, NEET போன்ற தேர்வுகளுக்காக தயாராகும் வடமாநில மக்கள் மட்டுமல்ல.ஆந்திரா, கர்நாடகா ஏன் நமது மாநிலத்தில் கூட சில பள்ளிகள் ஏற்கனவே மாநில பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு பல ஆயிரங்களை பெற்றுக் கொண்டு அத்தகைய பயிற்சியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தேர்ச்சி விகிதத்தில் அவர்களுக்கு இணையாக வருவதற்கான சூழலும் இல்லை.

மதிப்பெண்களை மட்டுமே லட்சியமாக கொண்டு நமது பள்ளிகள் போலவே JEE, NEET தேர்வுகளுக்காகவே செயல்படும் பயிற்சி நிறுவனங்கள் வீதிக்கு ஒன்றாக இருக்கின்றன. அவற்றில் சேர்வதற்காகவே பல அடுக்குகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது அதுவும் லட்சங்களில் என்பது தனிக்கதை.

இத்தகைய பயிற்சி வகுப்புகள் Foundation Course என்று ஆறாம் வகுப்புகளில் இருந்தும், இல்லையென்றால் எட்டாம் வகுப்புகளில் இருந்தும் ஆரம்பிக்கப் படுகின்றது. அத்தேர்வுகளுக்கான பாடத் திட்டமும், CBSE காண பாடத் திட்டமும் ஒன்று என்றாலும் பாடங்கள் எடுக்கப்படும் முறைகளும், கேள்வித் தாள்களும் வகுப்பறை பாடத்திற்கும் அப்பாற்பட்டது.

அத்தகைய தேர்வுகளில் ஒரு வருடத்தில் கேட்கப்படும் கேள்விகள் மீண்டும் கேட்கப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய புதிய கேள்விகளும், தயாரிப்புகளும் தொடர்கின்றன.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பிறகு எழுதப்படும் ஒரு தேர்விற்காக குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் மாணவர்கள் உழைக்கிறார்கள்.

இதில் ரெகுலராக நடக்கும் பள்ளியின் தேர்வுகளும் இணைந்து கொள்ளும். இத்தகைய தயாரிப்புகளில் இறங்கும் மாணவர்களும் வெற்றி பெறுவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், பயிற்சி நிறுவனங்கள் ஆரம்பித்து, பிறகு பயிற்சி கொடுத்தாலும் நமது பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் நுழையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப்பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் கவுன்சிலிங்க்கு சென்றிருக்கிறேன். ஒரு நாளைக்கு மாணவர்கள் பதினெட்டு மணிநேரம் படிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். சுவாசிப்பதும், சிந்திப்பதும்கூட அத்தேர்வைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்பதுவும் அவர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்று.

இப்படியாக தயார்படுத்தப்பட்டு அனுப்பப்படும் மாணவர்களுக்கு மத்தியில் எத்தகைய அறிவுடையப் பிள்ளைகளாக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள்.

அதற்கான தயார் நிலைக்கு நமது பிள்ளைகள் வரும் வரை நீங்கள் சொல்லியது போல சில வருடங்களுக்காவது இத்தேர்வை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அரசு ஒரு புறம் முயற்சித்தாலும் பெற்றோர்களும், மக்களும் யோசிக்கவேண்டிய தருணம்.

கிரி.
                                                                ****
                                                                 (2)

அன்புள்ள வா.ம. அண்ணனுக்கு,

அரசு கல்வி குறித்து தாங்கள் தொடர்ந்து கவனப்படுத்தி வருவது மகிழ்ச்சி. நிசப்தம் பதிவு மாஃபா வரை சென்று அவர் விரிவான பதிலளிப்பதாக சொல்லியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.

நீட் தேர்வு குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

அதற்கு முன் கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று சொல்வதே எனக்கு சரியாகப் படவில்லை. அரசுகல்வியின் அவலத்தை மறைக்க தமிழக அரசு வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளட்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதில் தோல்வியடைந்து விட்டோம் என்பதை நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் கிராமப்புற மாணவர்களின் பின்னால் ஒளிந்து கொள்வதாகத்தான் எனக்கு படுகிறது. மாணவர்களால் தேர்ச்சி அடைய முடியாது என்பதைவிட நாம் மாணவர்களை அந்நிலைமையில் வைத்துள்ளோம் என்பதுதானே பிரதான உண்மை.

நியாயமாக பார்த்தால் கல்வியில் நாட்டின் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் நமக்கு இம்மாதிரி பொது நுழைவுத்தேர்வுகள் சாதகமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நிலமையோ நேரெதிராக உள்ளது. நீட் வந்தால் நமது மாணவர்கள் பாதிக்கப்படுவது இருக்கட்டும். அதற்குமுன் இப்போதிருக்கும் சூழலையும் சரிபார்ப்பது அவசியம் எனப் படுகிறது.

1. சென்றாண்டு மருத்துவ கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்த எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைத்தது?

2. நீட் தேர்வின் முக்கிய சாதகமாக கூறப்படுவது அது தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்கள் நிரப்புவதில் உள்ள முறைகேடுகளை தடுக்கும் என்பது. அது தடுக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் இப்போதிருக்கும் முறைகேடுகளை தவிர்க்க என்ன வழி?

3. பிற மாநில அரசுகள் இதில் கொள்ளும் நிலைப்பாடு என்ன? அங்கும் கிராமப்புற மாணவர்களின் நிலை இதே தானா அல்லது அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

இவை குறித்து நம்பகமான தரவுகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கேட்டுக் கொள்வது அவசியம் எனப் பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம், ஆங்கில-ஹிந்தி வினாத்தாள் இவை இரண்டும் நீட் தேர்வின் அம்சமாக இருப்பின் அவை நிச்சயம் எதிர்க்கப்படவேண்டியதே. ஆனால் அடிப்படை பிரச்சனை நமது அளிக்கத் தவறும் கல்வித் தரத்தில் இருப்பதாகவே பார்க்கிறேன்.

நமது அரசுகல்வியை விமர்சித்தும் ஆராய்ந்தும் நீங்கள் விரிவாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் இவ் விவகாரத்தை பேசும் பலரும் மத்திய அரசின் மீது மொத்த பழியையும் போட்டு இங்கு வருடாவருடம் நூற்றுக்கணக்கில் மருத்துவத்தில் சேர்ந்து கொண்டிருந்த அரசுபள்ளி மாணவர்களுக்கு இனி வாய்ப்பில்லாமல் போய்விடும் என உருவாக்கும் சித்திரத்தைதான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பாரி.

                                                                ***

பாரியும் கிரியும் எழுதியிருக்கும் இரு கடிதங்களுமே முக்கியமானவை.

தேசிய அளவிலான தேர்வுகளை எழுதுவதற்கு நமது பள்ளி மாணவர்களிடம் திறன் இல்லை என்பதை மறுக்கவே முடியாது. தேசிய அளவிலான எந்தத் தேர்வாக இருப்பினும் சரி- தமிழகத்தின் நிலைமை அதலபாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் உண்மை. உதாரணமாக ஐஐடி-ஜே.ஈ.ஈ தேர்வை எடுத்துக் கொள்ளலாம். ஐஐடி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வில் கிட்டத்தட்ட முக்கால்பகுதியை ஆந்திரப்பிரதேசம், உபி, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் பீஹார் மாநிலங்கள்தான் எடுத்துக் கொள்கின்றன. தமிழகத்திலிருந்து சொற்பமாக- அநேகமாக சென்னை போன்ற மாநகரத்திலிருந்துதான் உள்ளே நுழைகிறார்கள்.

ஐஐடியில் படித்தால்தான் அறிவாளியா என்று யாராவது கேட்கக் கூடும். அந்தக் கேள்விக்குத் தனியாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் நமது மாணவர்களால் ஏன் அந்தத் தேர்வுகளில் வெல்ல முடிவதில்லை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆறாம் வகுப்பிலிருந்தே நம்முடைய பாடங்களும் தேர்வு முறைகளும் மனனம் செய்வதைத்தான் பிரதானமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் மதிப்பெண்கள் வாங்குவதுதான் வலியுறுத்தப்படுகிறது. வேறு எதுவுமே அவசியமில்லை. அதற்காக ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களைக் கூட பின்னால் தள்ளிவிடுகிற மனநிலையைத்தான் மாணவர்களுக்கு ஊட்டுகிறார்கள். அதுதான் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 

மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் இருக்கும் வரைக்குமாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. கிராமப்புற மாணவர்களுக்காக நீக்குகிறோம் என்று சொல்லி அதை ஒழித்தார்கள். இப்பொழுது படு மோசம். முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரைக்கும் உருவேற்றினால் போதும். அதைத் தவிர வேறு எதையும் நமது கல்வி முறை எதிர்பார்ப்பதில்லை. நமது கல்விமுறையில் இருக்கும் மிகப்பெரிய அவலம் இது.

தமிழகம் முழுவதுமே புரிந்து படித்தல் என்கிற எண்ணம் சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசுப் பள்ளியில் படிக்கிற மாணவர்களின் நிலைமை இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களின் பிரச்சினையே பக்கத்து ஊரில் இருக்கும் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடுவதாகத்தான் இருக்கிறதே தவிர அதைத் தாண்டி பெரிய உலகம் இருக்கிறது என்பதெல்லாம் எண்ணத்திலேயே இருப்பதில்லை. நாற்பது மாணவர்கள் இருக்கும் ஒரு வகுப்பறையில் ஒரு மாணவன் சிறப்பாக இருப்பதோடு பள்ளி ஆசிரியர்கள் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

‘என்ன சார் பண்ணுறது? பத்தாவதுல நல்ல மார்க் வாங்கின பசங்க எல்லாம் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போய்ட்டாங்க’என்கிறார்கள். மிச்சமிருக்கிற வெகு சிலரை இரண்டாண்டுகளில் பட்டை தீட்டி மெருகேற்றி மாநில அளவிலான போட்டிக்கு ஒப்பேற்றுவதற்குள்ளாகவே அவர்களின் கண்ணாமுழி திருகிறது. இந்த நிலைமையில் தேசிய அளவிலான போட்டிக்கு என்ன செய்வார்கள்?

தமிழக அளவில் நம் கல்வி முறையில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன-

வெறுமனே மனனம் செய்வது என்பதை முதலில் அடித்து நொறுக்க வேண்டும். சிந்தித்தல், புரிந்து படித்தல் என்பதுதான் படிப்பின் அடிப்படையே என்பதை அடிநாதமாக மாற்ற வேண்டும். 499 அல்லது 498 என்று வெறும் எண்களாக மட்டுமே பாடங்களை வாந்தியெடுக்க வேண்டியதில்லை என்கிற சூழல் உருவாக்கப்படல் வேண்டும். அதன் பிறகுதான் நாம் தேசிய அளவிலான தேர்வு முறைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே முடியுமே தவிர அதுவரைக்கும் ‘நம் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கூவி ஒளிந்து கொள்ளத்தான் வேண்டும்.

வெறுமனே பயிற்சிகள், பயிற்சி நிலையங்கள் என்பதெல்லாம் காசு சம்பாதிக்கும் இன்னொரு வழிமுறையாகத்தான் இருக்கும்.

தட்டையான பாடத்திட்டங்கள், மொந்தையான மனனம் என்பதையெல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாக கல்வித் திட்டத்தை மாற்றியமைக்காத வரைக்கும் தேசிய அளவிலான தேர்வுகளில் மட்டுமில்லை- நாம் எதிலுமே வெல்ல முடியாது. இப்பொழுது கல்வித்துறையில் நாம் வெற்றி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் வெற்றியே இல்லை. அறிவியலும் சமூகவியலும் மொழியியலும் உலகில் எவ்வளவோ உயரத்தை அடைந்து கொண்டிருக்கின்றன. நாம் வெறுமனே பன்னாட்டு நிறுவனங்களுக்காக இணையத்தில் மேய்ந்து வாந்தியெடுக்கும் மந்தைகளைத்தான் லட்சியமாக வைத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

சிறுகச் சிறுக

ஒரு மாணவி. அவளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறாள். சற்றே பொறுத்திருந்தால் சித்தா, ஆயுர்வேதம் படிப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் அவசரம். தனியார் கல்லூரிகள் அவசரப்படுத்தத்தான் செய்வார்கள். ‘இன்றே கடைசி. பணத்தைக் கட்டவில்லையென்றால் இடம் வேறொருவருக்கு போய்விடும்’ என்பார்கள். புரட்டிக் கொண்டு போய் பார்மஸி படிப்பில் பணத்தைக் கட்டிவிட்டார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேதப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் போது தனியார் கல்லூரிக்காரன் விடுவானா? ‘பணத்தை தர முடியாது. போறதுன்னா போய்க்குங்க’ என்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் மகளும்தான். என்ன செய்ய முடியும்? இன்னமும் அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். 

நகர்ப்புற மாணவர்களும் இத்தகைய குட்டைகளில் விழுகிறார்கள் என்றாலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். 

வலை விரிக்க ஆட்கள் சுற்றிச் சுற்றித் திரிகிறார்கள். ‘ருவாண்டாவில் மருத்துவம்’ ‘சீனாவில் அக்குபஞ்சர்’ ‘பல்கேரியாவில் பல் மருத்துவம்’ என்று எதையாவது ஆசைகாட்டி உள்ளே இழுத்துவிட தரகர்கள் பெருகிவிட்டார்கள். நம்மூர் கல்லூரிகளிலேயே கூட மாணவர்களைச் சேர்த்துவிட்டால் தரகுத் தொகை தருவதற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யாவில் மருத்துவப்படிப்புக்குச் சேர்த்துவிட்டு தலைமறைவான தரகர்களைத் தெரியும். ‘அடுத்த வருஷத்துல இருந்து பேங்க்ல லோன் வாங்கிக்கலாம்..இந்த வருஷம் மட்டும் கட்டுங்க’ என்பார்கள். வீட்டையோ காட்டையோ அடமானம் வைத்துக் கட்டுவார்கள். அதோடு சரி. தரகுத் தொகையைக் கல்லூரியிடமிருந்து பெற்றுக் கொண்டு எங்கேயாவது போய்விடுவார்கள். வங்கியில் கடனும் கிடைக்காது. விற்கச் சொத்தும் இருக்காது. பூக்கட்டி விற்கும் ஒரு பெண்மணி முதலாமாண்டு வீட்டை அடமானம் வைத்தார். அடுத்த ஆண்டு அதை விற்றார். மூன்றாமாண்டு ஒன்றரை ஏக்கர் காட்டை விற்றார். அடுத்த ஆண்டுக்கு என்ன வழி என்று தெரியாமல் தேம்பித் தேம்பி அழுததை நேரில் பார்த்தேன். 

பரிதாபமாகத்தான் இருக்கும். ஆனால் பல லட்ச ரூபாய்கள் தேவை. எதுவுமே செய்ய முடியாது. 

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டுமானால் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தர வேண்டும். தரகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்தும், கல்வியின் வாய்ப்புகள் குறித்தும் பேச வேண்டும். இதையே இரண்டு வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரிய அளவில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. இப்பொழுது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இராதாகிருஷ்ணன் கொச்சியில் வசிக்கிறார். மென்பொருள் துறையில்தான் இருக்கிறார். அதே சமயம் ஐ.ஐ.எம்மில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் பேசும் போது ‘ஒரு வொர்க்‌ஷாப் மாதிரி ஏற்பாடு செய்யலாம்’ என்பார். ஆசை இருக்கும்தான். ஆனால் நிறைய சிக்கல்கள் உண்டு. பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பல பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ‘வ்வ்வ்வ்யாக்’ வகையறா. எவனோ எப்படி போனால் எனக்கு என்ன என்று இருப்பார்கள். அவர்களிடம் பேசி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்வுக்கு அழைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். எந்த மாவட்டத்தில் நடத்துகிறோமோ அங்கு ஒரு பொறுப்பாளர் வேண்டும். 

அரசு தாமஸ் அவர்களிடம் பேசும் போது ‘நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அவரும் நானும் அமர்ந்து எந்தெந்த பள்ளிகள் என்பதை மட்டும் முடிவு செய்தோம். ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை மட்டும் நேரில் சந்தித்துப் பேசினோம். பிற ஆறு பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும் தானே சந்தித்துப் பேசிவிடுவதாகச் சொல்லிவிட்டு களமிறங்கியிருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் சென்று வொர்க்‌ஷாப் என்ன மாதிரியானது, என்ன சொல்லித் தரப் போகிறோம் என்பதையெல்லாம் விளக்கிவிட்டு அவர்கள் பள்ளியிலிருந்து தலா பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 04 ஆம் தேதியன்று நிகழ்வு நடைபெறுகிறது. ஒரு நாள் நிகழ்வு. ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பிக்கிறோம்.

வாழ்வியல் மதிப்பீடுகள் (Values of Life), தலைமைத்துவம் (Leadership Qualities) மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகான படிப்புகள் குறித்தான ஆலோசனை ஆகியவைதான் நிகழ்வின் மையப் பொருள். நிகழ்வு குறித்தான விளம்பரம் எதுவும் இருக்காது. பதாகை கூட இருக்காது. வெளியாட்கள் யாரும் அனுமதிப்படமாட்டார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்கள்- அறிவியல், வணிகவியல் என எந்தப் பிரிவில் இருந்து வேண்டுமானாலும் இருப்பார்கள். ஒரு சிற்றரங்கில் இந்த நிகழ்வை நிகழ்த்தவிருக்கிறோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பள்ளியுமே கிராமப்புறத்தில் இயங்கும் பள்ளிதான். ஒவ்வொரு வருடமும் நல்ல தேர்ச்சி சதவிகிதம் காட்டுகிறார்கள். இந்நிகழ்வு ஒரு சாம்பிள். இதில் கிடைக்கக் கூடிய அனுபவம், மாணவர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளீடுகளாகக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்துகிற திட்டமிருக்கிறது. இந்த வருடமே செய்ய இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுத்துவக்கத்திலேயே தொடங்கிவிடலாம் என்றிருக்கிறோம். ஆனால் ஒன்று - அந்தந்தப் பகுதிகளில் அரசு தாமஸ் மாதிரியான பொறுப்பாளர்கள் கிடைக்க வேண்டும். பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தலைமையாசிரியர்களைச் சந்தித்துப் பேசி அனுமதி வாங்கி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிற வேலையைச் செய்து கொடுத்தால் நிகழ்வை நடத்தலாம். யாரும் பணம் எதிர்பார்ப்பதில்லை. இராதாகிருஷ்ணனும் கூட தனது வேலையைக் கெடுத்துக் கொண்டு கைக்காசைச் செலவழித்துதான் நிகழ்வுக்கு வருகிறார். 

இதுவொரு டீம் வொர்க்.

நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களிடம் இது குறித்துப் பேச முடியும் என நினைப்பவர்கள்- கிராமப்புற மாணவர்கள் என்பதை நினைவில் கொள்க- இணைந்து கொள்ளலாம். விவரங்கள், முன் அனுபவம் உள்ளிட்டவற்றை மின்னஞ்சலில் அனுப்புங்கள். 

கிராமங்களுக்கும், மாணவர்களுக்கும் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. சிறுகச் சிறுகச் செய்வோம். ஒவ்வொரு எட்டும் ஒரு மைல்கல்தான்.

Nov 23, 2016

ஊர்கூடி

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக நான்கைந்து பேர்கள் பார்க்க வந்திருந்தார்கள். தினகரனும் அவனது அம்மாவும் வந்திருந்தார்கள். பதினோரு வயதுச் சிறுவன் அவன். ரத்தச் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தியாவதில்லை. அவ்வப்பொழுது மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் ஏற்றி வருவதாகச் சொன்னார்கள். ஆனபோதிலும் கூட வெளுத்திருந்தான். தினகரன் வயிற்றில் இருக்கும் போதே அவனது அப்பா இறந்துவிட்டார். அம்மா பக்கத்தில் இருக்கும் மில் வேலைக்குத் தினக் கூலியாகச் சென்று வருகிறார். இந்த நிலைமையில்தான் பையனுக்கு நோயும் பீடித்துக் கொண்டது. காய்ச்சல், உடல் வலுவின்மை என்று காரணம் தெரியாமல் பல பக்கமும் சுற்றியதில் கடைசியாக சென்னை அப்பல்லோவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை (Bone Marrow Transplantation) செய்துவிடச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒன்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்கு சென்னையிலேயெ தங்கியிருந்து தினசரி பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். கணவனும் இல்லை; பெற்றவர்களும் ஸ்திரமில்லை. ஆதரவற்ற அந்தப் பெண்ணுக்கு வேறு வழியில்லை. அறுவை சிகிச்சை, தங்கும் செலவு, வீட்டு வாடகை என எல்லாமும் கணக்குப் போட்டால் பெரிய காரியம் அது.

ஊர்க்காரர்கள்தான் தினகரனுக்காக உதவி கேட்க வந்திருந்தார்கள். விசாரித்த போது இம்மியளவு கூட உண்மையிலிருந்து பிசகாமல் விவரங்களைத் தந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நிச்சயமாக உதவிவிடலாம். ஆனால் எப்படியும் அவர்கள் சார்பில் ஒரு பெருந்தொகை இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் உதவுவதில் அர்த்தமேயில்லை. ஊரில் வசூல் செய்தெல்லாம் புரட்டுவது நடக்கிற காரியமா? 

அப்பன் இல்லாத குழந்தைக்கு மருத்துவமனைச் செலவு என்று கேட்டால் ‘யார் வீட்டில்தான் மருத்துவச் செலவு இல்லை’ என்று நினைக்கிற மனிதர்கள்தானே இங்கே அதிகம்? ஊர்க்காரப் பெரியவரிடம் பேசிய போது ‘உங்க ட்ரஸ்ட்ல இருந்து எவ்வளவு செய்ய முடியும்ன்னு நினைக்கறீங்க தம்பீ?’ என்றார். 

இப்படியொரு கேள்வியை யாராவது கேட்டால் பதில் சொல்வதில்லை. உடனடியாக ஒரு தொகையத் தருவதாக ஒத்துக் கொள்வதும் சரியில்லை. ‘உங்களால முடிஞ்சளவுக்கு பணத்தைப் புரட்டுங்க..அப்புறம் எவ்வளவு தேவைப்படுதோ அதைக் கேளுங்க..பரிசீலிக்கிறோம்’ என்பதுதான் வழக்கமாகச் சொல்கிற பதிலாக இருக்கும். தேவைக்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டியதில்லை என்பதுதான் இதன் அடிப்படை. 

‘ஒரு லட்ச ரூபாய் நீங்க ஒதுக்கி வெச்சுடுங்க தம்பி..மிச்சப்பணத்தை தலையை அடமானம் வெச்சாவது புரட்டிட்டு வந்துடுறேன்’என்று சொல்லிச் சென்றார். தினகரனின் பெயரையும் அறக்கட்டளைகளின் கோரிக்கைப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தோம். இடையில் ஒரு முறை அவர்களே அழைத்து பணம் புரட்டுகிற வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சொன்னார்கள். எவ்வளவு திரட்டியிருக்கிறார்கள் என்று அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை. 

தமிழக முதல்வரை அப்பல்லோவில் சேர்த்திருந்ததால் அறுவை சிகிச்சை உடனடியாக நடக்காது என்பது போலவும் சொல்லியிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் தினகரனுக்கு அவ்வப்பொழுது இரத்தம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

முதன்முறையாகச் சந்திக்க வந்திருந்த போது தினகரனின் அம்மா ‘என் வாழ்க்கைக்கே இவன் ஒருத்தன்தாங்க பிடிப்பு..எப்படியாச்சும் காப்பாத்திடணும்’ என்று அழத் தொடங்கினார்.  அம்மா அழுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பையனுக்கு நீ தைரியம் சொல்லணும்..நீயே அழுதா அவன் மனசு ஒடிஞ்சுடுவான்ல..கண்ணைத் தொடைச்சுக்க’ என்று பெரியவர்கள் அவரை ஆறுதல்படுத்தினார்கள். அப்பொழுது என்ன சொல்வதென்று எனக்குத்  தெரியவில்லை. ‘எல்லாம் நல்லபடியா நடக்கும்’என்று மட்டும் சொல்லியனுப்பியிருந்தேன்.

நோய்மையின் கொடுமையும் உச்சமும் குழந்தைகளுக்கு வரும் போதுதான் பார்க்க சகிப்பதில்லை. மனமும் அமைதியாவதேயில்லை. வாழ்க்கையில் போராட்டங்கள் சகஜம்தான். வாழத் தொடங்குவதற்கே போராட வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

கடந்த வாரத்தில் அழைத்திருந்தார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பேசிவிட்டதாகவும் பணத்தோடு வந்தால் அறுவை சிகிச்சையைச் செய்துவிடலாம் என்று சொன்னதாகவும் காசோலையை பெற்றுக் கொள்ள வரலாமா என்று கேட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

‘பணத்தை புரட்டிட்டீங்களா?’என்றேன்.

புரட்டிவிட்டார்கள். கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மடியேந்தியிருக்கிறார்கள். யார் யாரோ ஐம்பது பேரிடம் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார்கள். ஏழு பேர் தலா பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். மூன்று பேர் ஆளுக்கு ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் முன்னால் நின்று நடத்திய பெரியவர் மணி தனது பங்காக ஐம்பதாயிரத்தைச் சேர்த்திருக்கிறார். இவை தவிர ஐம்பதும் நூறும் இருநூறும் ஐநூறுமாக ஒரு பெரும் தொகை. நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம். எல்லாமும் சேர்த்துப் பார்க்கும் போது தேவையான பணம் கிடைத்த மாதிரிதான்.

காசோலையை வாங்கிக் கொண்டு ‘வாழ்க்கையில் இதை மறக்கவே முடியாதுங்க’ என்றார் பெரியவர். 

‘உலகத்துல எங்கெங்கயோ இருந்து யார் யாரோ நல்லவங்க கொடுக்கிற பணம்ங்க’ என்றேன். அவருக்கு விவரம் தெரிந்திருந்தது. நிசப்தம் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ‘எல்லோரும் நல்லா இருக்கட்டும்’ என்றார். தினகரனின் அம்மாவை அழைத்துக் காசோலை வாங்கிவிட்டதாகச் சொல்லி அவரிடம் அலைபேசியைக் கொடுத்தார். அந்தப் பெண்மணி நேற்றும் அழுதார். 

‘நீங்க சென்னைக்கு போங்க...நான் அப்பப்போ வந்து பார்க்கிறேன்’என்று சொல்லியிருக்கிறேன். அவருக்கு அது ஆறுதலாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். அது மீண்டும் அழுகையைக் கிளறிவிட்டது. அலைபேசியை பெரியவர் மணியிடம் கொடுத்துவிட்டேன். 

‘இது சாதாரணக் காரியமில்லைங்க...ஊரே சேர்ந்து ஒரு பையனைக் காப்பாத்துது..இந்தக் காலத்துல நினைச்சுக் கூட பார்க்க முடியல’ என்றேன். அதுதான் உண்மை. எந்தவிதமான வசதி வாய்ப்புமில்லாத ஒரு சிறுவனை ஆயிரமும் ஐநூறுமாகக் கொடுத்து இத்தனை பேர் தத்தெடுத்திருக்கிறார்கள் என்பதே சிலிர்க்கச் செய்கிறது. சத்தியமங்கலம் பக்கத்தில் இருக்கும் காசிபாளையம் அரியப்பம்பாளையம் இன்னும் சில ஊர்களில் பணத்தைப் புரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதராகச் சந்தித்து அவர்களிடம் பணம் வாங்குவதைக் கூச்சமே இல்லாமல் செய்த அந்தக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காலில் விழுந்து வணங்கினாலும் கூடத் தவறில்லை. 

நேற்று அதிகாலை சென்னைக்கு தொடரூர்தி ஏறியிருக்கிறார்கள். தினகரன் நல்லபடியாக ஊர் திரும்பட்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளலாம். ஊரே வாழ்த்தி அனுப்பியிருக்கிறது. நல்லபடியாகத்தான் திரும்புவான்.

இரவுகள்

ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக ‘பெங்களூருக்கு 330 ரூபாதான் டிக்கெட்...புக் பண்ணிடட்டுமா?’ என்று கேட்டார்கள். வார இறுதி, தீபாவளி, பொங்கல் சமயங்களில் ஆம்னி பேருந்துகளில் செமத்தியாக இலாபம் வைத்து அடிக்கிறார்கள். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரைக்கும் கூடக் கறக்கிறார்கள். வாரத்தின் நடுவில் என்றால் கிடைத்தவரைக்கும் கிடைக்கட்டும் என்ற மனநிலையில் முந்நூற்று முப்பது வரைக்கும் கூட இறங்குகிறார்கள். something is better than nothing.

தனியாகப் பயணிக்கும் போதெல்லாம் இலவசமாகவே அழைத்துச் செல்வதாகச் சொன்னாலும் கூட ஆம்னி பேருந்தில் ஏறுவதில்லை. தூங்குவதைத் தவிர அதில் வேறு எந்த அனுபவமும் இல்லை. பயணங்களின் போது முடிந்தவரை ஊராக இறங்கி ஏற வேண்டும். இரவுகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கண் உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சப்தம் உண்டு.  தனித்த வாசனையும் உண்டு.

கோபியிலிருந்து ஈரோடு வரைக்கும் ஒரு பேருந்து. இரவு பத்து மணிக்கு மேலாக ஈரோடு பொதுக்கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதே பெரிய சாதனைதான். இலவசக் கழிப்பறையின் துர்நாற்றம், கசகசப்பு என்பதெல்லாம் ஒரு பக்கம். அது பெரிய விஷயமுமில்லை. உள்ளே நுழைந்து நமக்கான இடத்தைப் பிடித்து நிற்கும் போதே இரண்டு மூன்று பேர்களாவது நமக்கு இருபக்கமும் வந்து நின்று கொள்வார்கள். அவர்களது கண்கள் கீழே குத்திட்டு நிற்கும்.‘கொத்திட்டு போய்டுவாங்க போலிருக்கு’என்று மறைத்து மறைத்து ஒரு வழியாகக் காரியத்தை முடிக்கும் போது பரிதாபமாக ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள். காதல், காமம், பரிதாபம், தாபம் என எல்லாவற்றையும் கலந்து கட்டிய பார்வை அது. எந்தக் காரணத்திற்காகவும் கண்களை மட்டும் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்தபடியே வேகவேகமாக கழிப்பறையை விட்டு வெளியே வருவதே மிகப்பெரிய வெற்றி பெற்றதான ஒரு மனநிலையை உருவாக்கிவிடும். வெளியே வந்தாலும் விடமாட்டார்கள். பின்னாலேயே ஒன்றிரண்டு பேராவது வருவார்கள். ஆனால் பயப்பட வேண்டியதில்லை. வேறொரு ஆள் உள்ளே நுழையும் வரைக்கும்தான் நம்மை பின் தொடர்வார்கள். இன்னொருவன் உள்ளே நுழைந்தால் அவனுடையதை எட்டிப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். 

பனிரெண்டு மணிக்கு பெண் தனியாகப் போவது மட்டுமே சுதந்திரமில்லை. கழிப்பறைக்கு ஒரு ஆண் தனியாகச் செல்வதுமே கூடத்தான் உண்மையான சுதந்திரம்.

ஈரோட்டைவிடவும் சேலம் சுவாரஸியம். வழக்கமாக சேலத்தை அடையும் போது நள்ளிரவு தாண்டியிருக்கும். பனிரெண்டு மணிக்கு சேலத்தில் பேருந்து ஏறினால் நான்கு மணிக்கெல்லாம் பெங்களூரில் இறக்கிவிட்டுவிடுவார்கள். பெங்களூரின் தெருநாய்கள் பெரும்பாலானவை குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் கத்தரித்து விடப்பட்டவை. அதிகாலைக் குளிரில் அவற்றின் தூக்கத்தைக் கெடுத்தால் இருக்கிற கடுப்பையெல்லாம் நம்மிடம் இறக்கி வைத்து அழிச்சாட்டியம் செய்யக் கூடியவை. அவைகளுக்கு பயந்தே ஒரு மணி வரைக்கும் சேலத்தில் பேருந்து ஏறுவதில்லை. அதுவொரு சங்கல்பம். இருக்கிற முக்கால் மணி நேரத்தைக் கழிக்க வேண்டுமல்லவா?

சேலம் பேருந்து நிலையத்தில் சுக்குக் காபியை மிதிவண்டியில் வைத்து விற்பார்கள். உளுத்தம் கஞ்சியும் கிடைக்கும். ஒரு லோட்டாவை அடித்தால் கொஞ்ச நேரம் தெம்பாகச் சுற்றலாம். வெளியே இருந்து பார்த்தால்தான் பெரிய பேருந்து நிலையம். நடந்தால் பத்து நிமிடத்தில் சுற்றி வந்துவிடலாம். ஆனால் ஆங்காங்கே நின்று பார்க்க நிறையக் காட்சிகள் உண்டு. பெங்களூரு பேருந்துகள் நிற்கும் பக்கமாக அரவாணிகள் நிற்பார்கள். அட்டகாசமான அரிதாரத்தோடு நிற்கும் அவர்களிடம் வந்து பேசுகிறவர்களின் உடல் மொழியை கவனிப்பதற்காகவே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம். வெட்கப்பட்டுக் கொண்டே வருகிறவர்கள், தயங்கித் தயங்கி நிற்பவர்கள், தாம் கெத்தாக இருப்பதாக நம்பிக் கொண்டு அவர்களை அணுகுகிறவர்கள்- விதவிதமான மனிதர்கள்.

இரவுகளில் மட்டும் மனிதர்களுக்கு ஏதோவொரு சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. பகல் முழுவதுமாக அணிந்து திரிந்த முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு காமத்தை மட்டுமே அணிந்து திரிகிறார்கள். தடுமாறவும் திசை மாறவும் எல்லாவிதமான வாய்ப்புகளையும் இரவு திறந்துவிட்டுவிடுகிறது. மனம் திக்கற்றுத் திரியும் இரவில் மனிதர்களின் ஒவ்வொரு அசைவுமே அசாத்தியமான தனித்தன்மை கொண்டவை.

ஒற்றைப் பையைத் தூக்கிக் கொண்டு தலையில் நிறைய பூ வைத்தபடி சற்றே குண்டடித்த பெண்கள் ஏற்காடு செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பேச இன்னொரு கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும். நடைபாதை முழுக்கவும் பழங்களை அடுக்கி வைத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் வியாபாரிகள், ‘வாங்க சார் டீ, காபி, கூல்டிரிங்க்ஸ்’ என்று அழைக்கும் கடைக்காரர்கள், அந்தக் கடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் இளையராஜா, பழக்கடை ஊதுபத்திகள் என்று சேலம் நம்மை கிறுகிறுப்பூட்டக் கூடிய ஊர். 

கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற அடுத்த நிலை ஊர்களின் பேருந்து நிலையங்களில் பத்து மணிக்கு மேலாக சவக்களை வந்துவிடும். மயான அமைதி நிலவும். பேய் கூட படுத்துறங்க பயப்படும். அதுவே சென்னை கோயம்பேட்டில் காவல்துறையினர் அலும்பு செய்வார்கள். வியாபாரிகளையும் ப்ளாட்பாரவாசிகளையும் துரத்திக் கொண்டேயிருப்பார்கள் - பழத்தில் ஒட்டும் ஈக்களை விரட்டுவது போல. சில வினாடிகளில் ஈக்கள் வந்து ஒட்டுவது போலவே மனிதர்களும் திரும்ப வருவார்கள். அதில் சுவாரஸியம் எதுவுமில்லை. பார்க்க பார்க்க பரிதாபம்தான் வரும். ஆனால் சேலம், கோவை, மதுரை மாதிரியான தூங்கா பேருந்து நிலையங்கள் அப்படியானவை இல்லை. ஒவ்வோர் இரவும் ஓராயிரம் கதைகளைக் கொண்டவை.

மனிதர்களை நெருங்கிச் செல்லும் போதுதான் வாழ்க்கையின் விதவிதமான நிறங்களை  உணர முடிகிறது. இணையமும் செல்போனும் வந்த பிறகு மனிதர்களுடனான உறவுகள் நமக்கு முற்றாகத் துண்டித்துப் போய்விட்டன. சக மனிதர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூட அருகிவிட்டன. யாராவது என்னிடம் ‘ஏன் ஆம்னி பேருந்தில் செல்வதில்லை?’என்று கேட்டால் இதுதான் முக்கியமான காரணம். செகளரியமாக இருப்பது சுகமானதுதான். ஆனால் சுவாரஸியமற்றது.

இந்த முறை சேலத்தில் இறங்கிச் சுற்றிக் கொண்டிருந்த போது வேலி முட்கள் நிறைந்திருந்த அதன் எல்லையில் ஏதோவொரு கட்டிட வேலை நடைபெறுவது தெரிந்தது. மண்ணைக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்திருந்தார்கள். அதன் மீது திட்டுத் திட்டாக நம்மவர்கள் ஈரமாக்கி வைத்திருந்தார்கள். மண் மேட்டுக்கு அருகே சென்றாலே ‘சார்...தள்ளிப் போங்க’ என்று சொல்வதற்காக பாதுகாவலர்களை நியமித்திருக்கிறார்கள். 

‘ஏண்ணா துரத்தறீங்க?’என்றேன். 

‘நாளைக்கு காலையில ஆளுங்க வேலைக்கு வருவாங்க’ என்றார். 

கால்களை மெட்டிக் கொண்டு வேலி முள் பக்கமாக நகர்ந்தால் மூன்று ஆட்கள் தலை தெரிந்தது. மூவருமே ஆண்கள்தான். எழுந்து நின்றார்கள். ‘வர்றீயா?’என்றான் எவனோ ஒருவன். ‘அடங்கொக்கமக்கா’என்றபடி வடிவேலு நடப்பது போல வெக்குடு வெக்குடு என்று வேகமாக நடந்த போது ‘டேய்..டேய்’என்றார்கள். நடந்த வேகத்தில் தலை தெறித்துவிடும் போலிருந்தது. இழுத்துச் சென்று துணியை உருவிவிட்டால் எப்படிக் கதற வேண்டும் என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக ஓடிய போது சற்றே தள்ளி வேலி முள் பக்கத்திலிருந்து இன்னொருவன் வெளிப்பட்டான். தலையில் நிறைய முடி இருந்தது. கிட்டத்தட்ட முதுகு வரைக்குமான கூந்தல். மீசையில்லை. மழித்திருந்தான். பெண்ணின் நளினம் அவனது நடையில் இருந்தது. உதட்டைக் குவித்து நாயை அழைப்பது போல ஒலியெழுப்பினான். தொண்டையைக் கணைத்தான். இப்பொழுது ‘அடங்கொண்ணிமலையா’என்று சொல்லிக் கொண்டேன்.

முட்புதருக்குள் இன்னமும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பதற்றத்தில் பேருந்துக்குப் பக்கமாக வந்த போதுதான் சிறுநீர்ப்பை நிரம்பியிருந்தது ஞாபகம் வந்தது. பரவாயில்லை என்று பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தேன். நடத்துநர் ‘இடையில எங்கேயும் நிக்காது...அடுத்து ஒசூர்தான்’என்றார். இரண்டரை மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் ஆகும். ‘டேங்க் வெடித்துவிட வாய்ப்பிருப்பதால்’ இறங்கிக் கொண்டேன். கட்டணக் கழிப்பறையை நோக்கி நடந்த போது ஒரு ஆண் பூனை பெண் பூனையை வேகமாகத் துரத்திக் கொண்டு ஓடியது. குழந்தையைப் போலக் கதறிய அந்தப் பெண் பூனை ஒரு பக்கமாக ஒதுங்கியது. ஆண் பூனையின் வால் மட்டும் வெளியில் தெரிந்தது.