சோலார் மூவிஸ் தளம் இப்பொழுது உருப்படியாக இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட வகை தொகையில்லாமல் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த தளம். இப்பொழுது என்னவோ ஆகிவிட்டது. இவன் ஒருத்தன்தான் தானாவதியா? தொலையட்டும் என்றிருந்த போது இன்னொரு தளம் அறிமுகமாகியிருக்கிறது. FM Movies. உலக சினிமாக்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்களா அல்லது கொள்ளையடித்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் தெளிவான பிரதிகள்.
Last Tango in Paris படத்தை அதில்தான் பார்த்தேன். 1972 ஆம் ஆண்டிலேயே வந்த படம். மர்லன் பிராண்டோ நடித்த படம். பிராண்டோ நடித்திருந்தால் என்ன பிரசாந்த் நடித்திருந்தால் என்ன? எரோடிக் படம் என்றார்கள். எல்லோரும் தூங்கட்டும் என்று காத்திருந்து பார்த்து முடித்துவிட்டேன். இன்றைய காலத்துக்கு அப்படியொன்றுமில்லை என்றாலும் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இந்தப் படத்தை என்ன போடு போட்டிருப்பார்கள் என்று யோசித்தால் கெதக் என்றுதான் இருக்கிறது.
நிறைய நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். வெகு காலம் கழிந்து ஞானோதயம் வந்த பிறகு பல நாடுகளில் தடையை நீக்கியிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரான்ஸ் சென்றிருந்த போது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். வெறும் சந்திப்பு மட்டும்தான். அவருக்கு நாற்பது வயதிருக்கும். ஸ்டிபானியே என்று பெயர். அவரது நண்பரும் நானும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். மாலை வேளைகளில் தனியாக இருக்கிறேன் என்பதால் என்னையும் நடன விடுதிக்கு அழைத்திருந்தார். இருவரும் நடனமாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஏதாவது கண்களுக்கு குளிர்ச்சியாக கிடைக்காதா என்று உண்மையிலேயே ஏங்கிக் கிடந்தேன். ம்ஹூம். வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்டிபானியேவுக்கு திருமணமாகி உறவு முறிந்திருந்தது. தனியாக வசித்துக் கொண்டிருந்தார். நண்பருக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். திருமண உறவு என்று எதுவுமில்லை. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? திருமணம் செய்து கொள்வார்களா? வெறும் வேடிக்கை பார்ப்பதற்காக எதற்காக நடன விடுதிக்கு வருகிறார்கள் என்று அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களது உறவு விசித்திரமானதாக இருந்தது. ‘இந்தியா போன்ற நாட்டிலிருந்து வருபவனுக்கு இது விசித்திரம்தான்’ என்றேன். நண்பர் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்டிபானியேவுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும். நிறையப் பேசினார். நம்மைச் சுற்றிலும் ஏதாவது தடைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். மனம் விரும்புவதைச் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்பது அவளது வாதமாக இருந்தது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். அந்த இரவில் விவாதிக்கும் மனநிலை எதுவுமில்லை.
ஸ்டிபானியே சொல்வதைப் போல மனம் விரும்புவதைச் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சமூகம் எதை விரும்புகிறதோ, வீட்டில் உள்ளவர்கள் எதை விரும்புவார்களோ அதைச் செய்வதுதான் நமது கடமையாக இருக்கிறது. அதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் அமைதியாக வைத்திருக்கிறது. இப்படியொரு பொதுவான மனநிலையில் ஓங்கி சுத்தியல் எடுத்துத் தட்டினால் அதிரத்தானே செய்யும்? அதைத்தான் Last Tango in Paris படத்தில் செய்திருக்கிறார்கள்.
ஒரு வீடு காலியாக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்காக இளம்பெண் வருகிறாள். மரியா ஸ்நெய்டர். அதே வீட்டைப் பார்க்க ஒரு கிழவனும் வந்திருக்கிறான். மர்லன் பிராண்டோ. இருவருக்குமிடையில் உறவு மலர்கிறது. மலர்கிறது என்ற சொல் பூச்சுச் சொல். மலரவுமில்லை துளிர்க்கவுமில்லை. முதன் முறை அது கிட்டத்தட்ட வன்புணர்வுதான். ஆனால் அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. பிறகு இருவருமே அதை விரும்புகிறர்கள். காமம் உடைந்து பெருகிறது. ‘நீ யாருன்னு எனக்குத் தெரிய வேண்டாம்..நான் யாருன்னு உனக்குத் தெரிய வேண்டாம்..இப்படியே இருப்போம்’ என்கிறார்கள். இருவருக்குமே தனது பங்காளியின் பெயர் கூடத் தெரியாது. ஒரு கட்டத்தில் அவனது வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள அவள் விரும்புகிறாள். ஆனால் அவன் அது குறித்துப் பேச மறுத்துவிடுகிறான். சொல்லாமல் பிரிந்து சென்றுவிடும் மர்லன் படத்தின் இறுதியில் அவளைத் தேடி வந்து டாங்கோ நடன விடுதிக்கு அழைத்துச் செல்கிறான். காதலிப்பதாகச் சொல்கிறான். அவனிடமிருந்து விலகி தனது வீட்டுக்குச் செல்லும் அவள் என்ன முடிவை எடுக்கிறாள் என்பதுதான் முடிவு.
உண்மையிலேயே அட்டகாசமான படம். இந்தப் படத்துக்காக மர்லன் பிராண்டாவுக்கும் இயக்குநருக்கும் ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். மரியா ஸ்நெய்டருக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. அந்தப் படத்தில் அவர் அறிமுகமான போது வயது பத்தொன்பது. கிட்டத்தட்ட படம் நெடுகவும் அரை நிர்வாணமாகவோ அல்லது முழு நிர்வாணமாகவோ வருகிறார். ஆனால் மர்லன் பிராண்டோ ஒரு காட்சியில் கூட தனது உடலைக் காட்டுவதில்லை. ‘அவருக்கு தன் உடல் குறித்தான வெட்கம் இருந்தது’ என்று வெகு காலத்திற்குப் பிறகு மரியா ஒரு நேர்காணலில் மர்லன் பிராண்டோ குறித்துச் சொல்லியிருக்கிறார். டெய்லி மெயிலில் வெளியாகியிருக்கும் மரியாவின் நேர்காணல் மிக முக்கியமானது. படத்தை பார்ப்பவர்கள் நேர்காணலையும் வாசித்தால் நிறையக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். எனக்கு ஒரு மிக முக்கியமான கேள்வி இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு, நேர்காணலை வாசித்துவிட்டு உங்களுக்கும் அதே கேள்விக்கான பதில் கிடைத்ததா என்று சொல்லுங்கள்.
மரியாவின் குழந்தைத்தனமான முகமும் சுருட்டை முடியும் அவரது சேஷ்டைகளும் கவித்துவமானவை. படம் முடிந்த பிறகும் அவைதான் திரும்பத் திரும்ப மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கின்றன.
மர்லன் பிராண்டோவுக்கும் மரியாவுக்குமான உறவு மட்டுமே படத்தின் கதையில்லை. மரியாவுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறான். தங்களது ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்துக் கொண்டிருப்பவன் அவன். அவனது செயல்பாடு அவளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் சகித்துக் கொள்கிறாள். இன்னொரு பக்கம் மர்லன் பிராண்டோவின் மனைவிக்கு வேறொருவனுடன் உறவு இருந்து அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி இருவருக்குமே வேறு கதைகள் இருந்தாலும் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எதையும் பேசிக் கொள்வதில்லை. விளையாடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். கூடுகிறார்கள்.
பேசத் தகுந்த படத்தை பார்க்கும் போதும் மெச்சத் தகுந்த புத்தகத்தை வாசிக்கும் போதும் அதை நான்கு பேருக்காவது அறிமுகப்படுத்திவிட வேண்டும். அதே படத்தைப் பற்றியும் புத்தகத்தைப் பற்றியும் வேறு நூறு பேர் கூட விரிவாக எழுதியிருக்கட்டும். நாமும் எழுதுவதிலும் பேசுவதிலும் தவறேதுமில்லை. படைப்புகளை முன்வைத்துப் பேசிக் கொண்டேயிருப்பதில் ஒரு அலாதியான சுகம் இருக்கிறது.
சலனத்தை உண்டாக்கிய படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் குறிப்புகளையும் துழாவி வாசிப்பதே கூட சுவாரஸியம்தான். இந்தப் படம் குறித்தான பெரும்பாலான குறிப்புகள் அத்தகைய சுவாரஸியத்தைக் கொடுத்தன. மர்லன் பிராண்டோவின் நடிப்பை வெகுவாக சிலாகிக்கும் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அந்த மனிதனைச் சிலாகிப்பதில் எந்தத் தவறுமில்லை. கடைசியில் கண் கலங்கும் ஒற்றைக் காட்சிக்காகவே ரசிகர் மன்றம் ஏதாவது இருந்தால் இணைந்து கொள்ளலாம். இறந்து கிடக்கும் தனது மனைவியுடன் பேசும் காட்சிக்காக அகில இந்திய மர்லன் பிராண்டோ ரசிகர் மன்றத்தின் தலைவனாகவே கூட மாறலாம்.
7 எதிர் சப்தங்கள்:
புது படத்தின் பிரிண்ட் காமிரா ப்ரிண்ட்தான்.. சீக்கிரமே இழுத்து மூடிவிடுவார்கள்..
why you are not watching these movies with your family sir? you are denying them the advantage.
Survival மற்றும் தேடல்னு ரெட்டை குதிரைல அசால்ட்டா சவாரி செய்யுற உங்கள பாத்தா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.. :)
keep going!!!
~ அருண்
ஸ்டிபானியே - கதை ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. Dejavu ?
//மனம் விரும்புவதைச் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சமூகம் எதை விரும்புகிறதோ, வீட்டில் உள்ளவர்கள் எதை விரும்புவார்களோ அதைச் செய்வதுதான் நமது கடமையாக இருக்கிறது. அதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் அமைதியாக வைத்திருக்கிறது//
அதிகாரத்தை கையில் எடுப்பவர்களால் அவர்கள் விருப்பப்படி செய்ய முடிந்து அதை நியாயப்படுத்தவும் முடிகிறதால் தான் "எல்லோருக்கும் சாத்தியமில்லை" என்ற வார்த்தை பிரயோகமோ!.
படம் பார்த்து விட்டு அப்புறம் அதைப் பற்றி
//இந்தப் படத்துக்காக மர்லன் பிராண்டாவுக்கும் இயக்குநருக்கும் ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள்.//
Marlon Brando and Bernardo Bertolucci were Nominated for Academy Awards. They did not win.
http://www.imdb.com/title/tt0070849/awards?ref_=tt_awd
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே ......
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் தெய்வமே ......
Post a Comment