‘அவங்ககிட்ட சொன்னா எங்கீங்க கேட்கிறாங்க?’
‘பயப்படுறாங்க’
‘அவங்களுக்கு நம்பிக்கையில்லை...நாம எப்படி ஃபோர்ஸ் பண்ணுறது?’ இப்படி திரும்பத் திரும்ப எதிர்கொள்கிற பதில்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
மேற்சொன்னவிதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பவர்களிடம் காட்டுவதற்காகவாவது ஒரு கட்டுரையை விரிவாக எழுத வேண்டும் எனத் தோன்றியது.
அப்பாவுக்கு ஈரலில் பிரச்சினை. பல ஆண்டுகளுக்கு முன்பாக விபத்து ஒன்றில் கால் முறிந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் இரத்தம் செலுத்தினார்கள். அநேகமாக அதுதான் வினையாக இருந்திருக்கக் கூடும். ஹெபாட்ட்டிஸ் சி வைரஸ் உள்ளே புகுந்துவிட்டது. உள்ளே நுழைந்த வைரஸானது பிரச்சினையை வெளிக்காட்டாமல் ஈரலில் தங்கி அதன் மீது தனது வேலையைக் காட்டுகிறது. ஈரல் முழுவதும் தழும்புகளும் காயங்களும் உண்டாகின்றன. இதை chirrohsis என்கிறார்கள். Fibroscan என்கிற கருவியின் மூலம் கண்டறியப்பட்ட போது ஈரல் முற்றாக வலுவிழந்திருந்தது. ஈரல் செயல்படுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது.
இதெல்லாம் நவம்பர் 2015 ஆம் ஆண்டு நடந்தது.
கோவையில் ஒரு குடல் மற்றும் வயிற்று நோய் சிறப்பு மருத்துவமனையில்தா பரிசோதித்தோம். வைரஸைக் கொல்வதற்காகக் கொடுக்கப்பட்ட மாத்திரையின் விலை மட்டும் மாதம் இருபத்து மூன்றாயிரம் ரூபாய். sofocure என்பது அந்த மாத்திரையின் பெயர். மருத்துவமனையில்தான் இந்த விலை. தேடியலைந்து மருந்துகளின் மொத்த விற்பனையாளரைப் பிடித்த போது அதே மாத்திரையை வெறும் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினோம்.
நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த நான்கைந்து மாதங்கள் வரைக்கும் ஒவ்வொரு மாதமும் பெங்களூரிலிருந்து கோவை செல்ல வேண்டியிருந்தது. நன்றாகத்தான் இருந்தார். ஆனால் மெல்ல மெல்ல உடல் நிலை நலிவுற்றபடியே இருந்தது. அதை மருத்துவர்களிடம் சொன்னால் ‘அப்படித்தான் இருக்கும்’ என்றார்கள். பிப்ரவரி மாதத்தில் உடல் வெகுவாக நசிவுற்ற போது அழுத்தம் திருத்தமாக மருத்துவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. சுதாரித்துக் கொண்டவர்கள் உடனடியாக அல்ட்ரா சவுண்ட் செய்து பார்க்கச் சொன்னார்கள். பார்த்துவிட்டு ஈரலில் கட்டி என்றார்கள். அதன் பிறகு வயிற்றில் ஒரு துளையிட்டு ஈரலின் ஒரு பகுதியை எடுத்து மும்பைக்கு அனுப்பி வைத்தார்கள். மும்பையிலிருந்து வந்த முடிவு தலையில் இடியை இறக்கியது. Hepatocellular carcinoma. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதைச் சொல்லவில்லை. கோவையில் அதுவரை மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த குடல் மற்றும் வயிறு சிகிச்சை நிபுணர் இனி தன்னிடம் மருத்துவமில்லை என்றார்.
தம்பியும் நானும் பதறிப் போனோம். கோவை மெடிக்கல்ஸ் என்ற இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த பேயறைந்த இரவில் அறை ஒதுக்கித் தந்தார்கள். இந்த நோய்க்கு மார்க்கெட்டில் ஒரேயொரு மாத்திரைதான் இருப்பதாகச் சொன்னார்கள். நெக்ஸாவேர் என்பது மாத்திரையின் பெயர். மாதம் கிட்டத்தட்ட நாற்பத்து மூன்றாயிரம் ரூபாய் வரைக்கும் தேவைப்படும். அதே மாத்திரை உள்ளூர் நிறுவனம் ஒன்றும் தயாரிக்கிறது. விலை குறைவு. ‘எது எடுத்துக்குறீங்க?’ என்றார் மருத்துவர். எங்களுக்கு பதில் தெரியவில்லை. ‘நீங்கதான் முடிவு செய்யணும்’ என்று சொல்லிவிட்டார்கள். பணத்துக்காக பயப்பட்டுவிடக் கூடாது என்று விலை அதிகமான மாத்திரைக்கு ஒத்துக் கொண்டோம். அது உடலில் சூட்டைக் கிளப்பும். உடல் தாங்காது. ஆனால் வேறு வழியே இல்லை. ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு இரவோடிரவாக பெங்களூரு வந்து இரண்டு மூன்று மருத்துவமனைகளில் நிபுணர்களைச் சந்தித்துக் கேட்ட போது ‘அது ஒண்ணுதான் சிகிச்சை’ என்றார்கள். அறுவை சிகிச்சை, ஈரல் மாற்று என்று எதுவும் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இதெல்லாம் நடந்தது 2016 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில். மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் அப்பாவின் உடல் தளர்ந்து கொண்டேதான் இருந்தது. வெளிப்புறத் தோற்றத்தை வைத்து மட்டும் சொல்லவில்லை. ஈரலின் பணி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக SGOT, SGBT, Bilirubin போன்றவை ரத்தத்தில் எவ்வளவு அளவு இருக்கிறது என்று பார்க்கிறார்கள். மாதாமாதம் அளவு கூடிக் கொண்டே போனது. ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவரிடம் கேட்கையில் ‘இதையெல்லாம் குறைக்க முடியாது...கட்டுப்பாட்டில் வெச்சிருக்கலாம்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். எல்லாமும் ஜூன் மாத இறுதிவரைக்கும்தான். ஜூன் இறுதியில் கோவை மருத்துவரிடம் காட்டிவிட்டு பெங்களூரு சென்ற ஒரே வாரத்தில் நிலைமை கை மீறிப் போனது.
குளிர்காற்று வீசிய ஒரு தினத்தில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பாவால் எழுந்து படுக்கையறைக்குச் செல்ல முடியவில்லை. கால் வீங்கிவிட்டது. வயிறும் வீங்கியிருந்தது. அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் நினைவு தவறிப் போனது. தூக்கி வந்து காரில் படுக்க வைத்து வண்டியைக் கோவைக்கு விரட்டினோம். கோவை மருத்துவமனையில் அவசரப்பிரிவில் படுக்க வைத்தார்கள். அப்பாவுக்கு அரைகுறையான ஞாபகம் மட்டும்தான் இருந்தது. மதியத்திற்கு மேல் தனது அறைக்கு அழைத்த மருத்துவர் 1.1 இருக்க வேண்டிய பிலிரூபின் 3.6 ஐ நெருங்கிவிட்டது; 15-37க்குள் இருக்க வேண்டிய SGOT 399 ஐ தொட்டுவிட்டது; 12-78க்குள் இருக்க வேண்டிய SGBT 245 ஐ தாண்டுகிறது. ஈரல் முற்றாக செயல் இழந்ததன் அறிகுறிகள் இவை என்றும் இனி ஈரலைச் செயல்பட வைப்பதற்கு சாத்தியமே இல்லை என்றார். ‘இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்பது அவர் வாதம். கை கால்கள் பதறத் துவங்கின. அம்மாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.
மருத்துவர் சிவசங்கர்தான் ‘நீங்க அப்பாவை இங்க கூட்டிட்டு வாங்க பார்த்துக்கலாம்’ என்றார். கோவை மெடிக்கல்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் பின்னால் வண்டியில் வரச் சொல்லிவிட்டு தம்பியையும் மாமா பையனையும் மட்டும் ஏற்றிக் கொண்டு அப்பாவை படுக்க வைத்துக் கொண்டு கோபிக்கு கிளம்பினோம். வரும் வழியில் எல்லாம் அப்பாவுக்கு பிடித்த எதையாவது பேசிக் கொண்டே வந்தேன். ‘ம்ம்’ என்கிற சப்தம் மட்டும் அப்பாவிடமிருந்து வந்தது. தாரை தாரையாக வழிகிற கண்ணீரைத் துடைக்காமலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.
கோபியில் அபி மருத்துவமனையில் படுக்க வைத்த போது ‘கிட்டத்தட்ட கோமா’ என்றார்கள். குறைந்திருந்த சோடியத்தின் அளவை சரி செய்தல், வயிற்றை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளையெல்லாம் அலோபதி மருத்துவத்தின் வழியாகச் செய்தார்கள். அதே சமயம் எந்த மாற்று மருத்துவமாக இருந்தாலும் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.
மாமா ஒருவர் பஞ்ச கவ்யத்தையும் அர்க்கையும் கொண்டு வந்து கொடுத்து புகட்டச் சொன்னார்கள். அப்பாவுக்கு விழுங்குகிற வலுவே இல்லை. டீஸ்பூனில் வைத்து உதட்டை ஈரமாக்கினார்கள். கசப்பில் வாயைச் சுழித்தார். மருந்து கொடுத்த மாமாவிடம் ‘இனியும் அவரைக் கஷ்டப்படுத்தணுமா?’ என்றேன். ‘இரண்டு நாளைக்கு கொடுங்க மாப்பிள்ளை’என்றார்கள். இன்னொருவர் ‘தினமும் நித்யகல்யாணி பூவை கொதிக்க வெச்சு கொடுங்க’ என்றார். அதையும் செய்தோம்.
பிரச்சினைகளைக் கேள்விப்பட்டு பேராசிரியர் வெற்றிவேல் வந்தார். சங்ககிரி மனோ என்கிற சித்த மருத்துவரிடம் மருந்து இருப்பதாகச் சொன்னார். பூரமெழுகு என்று பெயர். அதை சித்த மருத்துவத்தின் கீமோதெரபி என்கிறார்கள். உடலில் கட்டியை வளரவிடாமல் தடுப்பதோடு மேலும் பரவாமல் தடுக்கிறது என்கிறார்கள். மனோ பூரமெழுகுக்காக காசு எதுவும் வாங்கிக் கொள்வதில்லை. ‘எனக்கு வைத்தியம் தெரியுது..செய்யறேன்’ என்றார். வெற்றிவேல் இன்னொரு மருத்துவர் இருப்பதாகச் சொல்லி மொடச்சூர் சரவணனிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் பிலிருபீன் அளவைக் குறைப்பதற்கான மருந்தை வாங்கிக் கொண்டோம். இன்னொரு சரவணன் என்கிற சித்த மருத்துவர் வேம்பு, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, துளசி, சீரகம், வில்வம் உள்ளிட்ட மூலிகைப் பொடிகளைக் கலக்கி வைத்துக் கொண்டு கசாயம் வைத்துத் தரச் சொன்னார். அம்மா சலிப்பில்லாமல் செய்து கொடுத்தார். ஒவ்வொரு மருத்துவரையும் காலகாலத்துக்கும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மெல்ல நினைவு வந்தது. சாப்பிட வாயைத் திறந்தார். சில நாட்களில் எழுந்து அமர்ந்தார். பிறகு நடக்கத் தொடங்கினார். இன்றைக்கு கிட்டத்தட்ட இயல்புக்கு வந்துவிட்டார்.
இப்படி எல்லாவிதமான சித்த நாட்டு மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்த போது ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைந்தது. ‘அதெல்லாம் பிரச்சினையில்லை....மூணு நாளைக்கு பப்பாளி இலைச் சாறைக் கொடுங்க’ என்றார்கள். அப்படியே கொடுத்தோம். எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து இயல்பான அளவில் இருக்கிறது. ரத்தச் சிவப்பணு எண்ணிக்கை எட்டு என்கிற அளவில் இருந்து வந்தது. மாதுளம் பழமும், கறிவேப்பிலை பொடியும் தொடர்ந்து எடுத்து வருகிறார். இப்பொழுது பத்து என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பிரச்சினைக்கு ஏற்ப வைத்தியம். இப்பொழுது அப்பாவால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடக்க முடிகிறது. எப்பொழுதும் போல சாப்பிடுகிறார். வயிறு வீக்கம் இருந்தது. அலோபதி மருத்துவர் சிவசங்கர் நீர் வெளியேற்ற மாத்திரை கொடுத்திருக்கிறார். அதோடு கோவன் இலையைச் சாறு செய்து அவ்வப்பொழுது கொடுக்கிறோம். வீக்கம் குறைந்திருக்கிறது. நேற்று இரத்தப் பரிசோதனை செய்தோம். கிட்டத்தட்ட அத்தனையும் இயல்பான நிலையில் இருக்கிறது.
ஜூலை
02- 2016
|
அக்டோபர்
08- 2016
|
Normal
Range
|
|
SGOT
|
399
|
18.0
|
15-37 U/l
|
SGBT
|
245
|
34.0
|
12-78 U/l
|
Total Bilirubin
|
3.57
|
0.7
|
0.3-1.1 mg/dl
|
Direct Bilirubin
|
2.45
|
0.3
|
0- 0.25 mg/dl
|
இன்றைக்கும் கூட பரிபூரண குணம் என்று சொல்லவில்லை. ஆனால் miracle என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். முதுமைக்குரிய தளர்வுடன் நன்றாகவே இருக்கிறார். தெளிவாக இருக்கட்டும் என்பதற்காகவே நவம்பர், பிப்ரவரி, ஜூலை மாதங்களில் என்ன நடந்தது என்று மாதம் வாரியாகவே சொல்லியிருக்கிறேன்.
இது குறித்தெல்லாம் முன்பே ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன். ஆனாலும் மேற்சொன்ன கேள்விகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவின் உடல் நிலையை இவ்வளவு விரிவாகவும் அப்பட்டமாகவும் எழுதக் காரணம் இருக்கிறது. எந்த மருத்துவத்தையும் குறை சொல்வதோ தூக்கிப்பிடிப்பதோ நோக்கமில்லை. நேரடி சாட்சியமாக இருந்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் மிகை குறை இல்லாமல் அப்படியே எழுதியிருக்கிறேன்.
இது குறித்தெல்லாம் முன்பே ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன். ஆனாலும் மேற்சொன்ன கேள்விகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவின் உடல் நிலையை இவ்வளவு விரிவாகவும் அப்பட்டமாகவும் எழுதக் காரணம் இருக்கிறது. எந்த மருத்துவத்தையும் குறை சொல்வதோ தூக்கிப்பிடிப்பதோ நோக்கமில்லை. நேரடி சாட்சியமாக இருந்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் மிகை குறை இல்லாமல் அப்படியே எழுதியிருக்கிறேன்.
ஒவ்வொரு மருத்துவத்திலும் ஏதோவொரு பலம் இருக்கிறது. நவம்பர் மாதத்திலிருந்து எடுத்த ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி என்று அத்தனைவிதமான முடிவுகளும் கைவசம் இருக்கின்றன. யார் கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன்.
இந்தக் கட்டுரை கூட நம்பிக்கையை விதைப்பதற்காகத்தான். நம்மைச் சுற்றி இருக்கிற நல்லனவற்றை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
பாரம்பரிய மருத்துவத்தைப் பொறுத்தவரையிலும் நேர்மையான மருத்துவர்களைக் கண்டறிவதுதான் மிகப்பெரிய காரியம். அதைச் செய்துவிட்டால் போதும். பாதிக்கடலைத் தாண்டியது போலத்தான்.
சித்தர்கள் வாக்கு ஒன்றும் நினைவுக்கு வருகிறது - ‘எவனெவனுக்கு எது எது கிடைக்கணுமோ அது அது அவனவனுக்குக் கிடைக்கும். நீ பறிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது’.
ஆயினும், சொல்வதைச் சொல்வோம். ஏதாவதொருவகையில் எங்கேயாவது சில உயிர்கள் தேறி வரட்டும். எல்லாவற்றையும் ரகசியமாக பதுக்கி வைத்து என்ன செய்யப் போகிறோம்?
16 எதிர் சப்தங்கள்:
அப்பாவின் உடல்நிலை நன்கு குணமாகி நீண்ட நாள் வாழ பிரார்த்திப்போம்,
Coming to the point of traditional medicine, I have heard few experiences like this from my friends. How do we stream line this, document this, for our generation and for future generations, Also to eliminate the risk as you pointed out, of some bad apples spoiling the concept itself?
We have to create a medical wikipedia, easily accessible, searchable first. I am onboard for any such efforts. There are many books available, which if we can start digitize with the authors permission, that will be a good start I think.
Hello Sir,
Could you provide the contact details of those Sidda doctors mentioned in this post??
Thanks
Chitra
"பாரம்பரிய மருத்துவத்தைப் பொறுத்தவரையிலும் நேர்மையான மருத்துவர்களைக் கண்டறிவதுதான் மிகப்பெரிய காரியம்."
I had faced similar experience with my father. we didn't try alternate medicine.
In fact at the same Gastro hospital in singanallur with the same/similar stage 3 tumor.
We wanted to try Ayurveda.got the medicine's but father couldnt try it.
when we had to see him suffer, allopathy gave immediate costly, temporary, systemic relief. Would have definitely tried ayurveda, if it's institutionalized more.
may be there should be a hybrid hospitals with western diagnostics and mixed medicines. for those who are terminally ill. as we would be willing to try them.
Even if we want to try, there is no clear path to know who, where, how to get the access to medicines and doctors.
feeling sad that we might lose the war against allopathy medicine. unless corporates look at this as a cash cow.
அன்பின் மணி,
அப்பாவின் உடல்நிலை தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி.உங்கள் விடாமுயற்சியும், பாசமுமே காரணம்.அருமையாக வைத்யம் செய்திருக்கிறீர்கள்.குடும்ப ஒற்றுமையும், கட்டுக்கோப்பும் மெய்சிலிர்க்கவெய்க்கிறது.தற்காலத்தில் எளிதில் காண
முடியாதது.அப்பாவின்
நோய் முற்றிலும் குணமாகி அவர் நீண்டநாள் வாழ பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துக்கள்
அப்பாவின் உடல்நிலை குனமாக எனது பிரார்த்தனைகள்.
4 வருடங்களுக்கு முன் என் மனைவிக்கு சோரியாலிஸ் வந்து பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. ஆங்கில மருத்துவத்தால் குனப்படுத்தவே முடியாது என்று கைவிரித்து விட்ட பிறகு அடையாறு இம்காப்ஸ் இல் ஆயுர்வேத மருந்துகள் உணவு பத்தியத்துடன் 6 மாதங்கள் எடுத்த பிறகு இப்போது அதற்கான தடயங்ககளே இல்லை.
முயற்சி திருவினையாக்கி யிருக்கிறது
//சித்தர்கள் வாக்கு ஒன்றும் நினைவுக்கு வருகிறது - ‘எவனெவனுக்கு எது எது கிடைக்கணுமோ அது அது அவனவனுக்குக் கிடைக்கும். நீ பறிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது’//
"நம்ம கண்ணுக்கு இந்த பதிவு படணும்" ன்னு இருந்திருக்கு.பட்டிருச்சு.இந்த பின்னூட்டம் எத்தன பேர் கண்ணுக்கு படணும் ன்னு இருக்கோ?
//சொல்வதைச் சொல்வோம். ஏதாவதொருவகையில் எங்கேயாவது சில உயிர்கள் தேறி வரட்டும்.// அப்பாவின் மீதான உங்களின் அன்பும், சிகிச்சையின் தேடலுமே அப்பாவின் உடல்நிலை தேறியதற்கு முக்கிய காரணம்.
மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி கண்ணீரை வரவழைக்கிறது
விஸ்வநாதன்
மெய் சிலிர்க்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. உங்களுடைய அர்ப்பணிப்பு, மற்றும் சரியான நேரத்தில் சரியான மாற்று மருந்து மருத்துவர் எல்லாம் உதவியது. பொதுவாக, இம்மாதிரி தருணங்களில் நம்மை ஏமாற்ற முயற்சிக்கும் கூட்டமே அதிகம். இம்மாதிரி சித்த மருத்துவர்களை இனம் கண்டு ஊக்குவிப்பது முக்கியம்.
Not trying to influence or anything. I have listened to all the videos of Healer Baskar. His thoughts are really worth something listen to and follow, for preventive care.
இர்ஷாத் IMCOMPS -இல் மருத்துவர் பெயர் மற்றும் முகவரி தந்து உதவ முடியுமா ? IMCOMPS திருவான்மியூர் -இல் தான் உள்ளதாக ஞாபகம்.
இப்படி அர்பணிப்புடன் மாணிட சேவை புரியும் தங்களை தந்த தந்தை நலம் பெறுவார்.
Thanks for sharing Sir,
GOd is great and has shown you correct Siddha Doctors and your father is cured.
Amazing.
with best wishes,
tgranganathan
bro we lost our beloved father and mother.... after taking treatment in apollo chennai...
we firmly believed apollo doctors....
they died in apollo hospital
now myself my brother feel guilty about not trying other types f tratment...one of the reasons ....we were brought up in cities....know only ALLOPATHY DOCTORS TREATMENT...
WE SALUTE YOU BRO... FOR YOUR EFFORTS...
Post a Comment