Oct 5, 2016

தமிழ்நாடு தனிநாடு

சமீபகாலமாக இந்தியம் என்கிற சொல்லை எதிர்த்து நிறையப் பேசுகிறார்கள். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாகவும் தமிழர்கள் நசுக்கப்படுவதாகவும் பேசுவது மிகச் சாதாரணமாகியிருக்கிறது. அதுவும் சமூக ஊடகங்கள் வந்த பிறகு தேசியம் என்பது குறித்து விரிவான புரிதல் இல்லாதவர்கள் கூட தமிழகத்தை மட்டும் இந்திய வரைபடத்தில் கத்தரித்துவிட்டு ‘இப்படித்தான் இருக்கிறது இந்தியா’ என்று எழுதுகிறார்கள். இந்து-இசுலாமிய பிரச்சினையிலிருந்து காவிரி பிரச்சினை வரைக்கும் எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது.

விவாதங்களும் புரிதல்களும்தான் ஒவ்வொரு சிக்கலுக்குமான தீர்வை நோக்கி நகர்வதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்க முடியும். தீர்வுகள் குறித்து இறுதியில் பேச வேண்டுமே தவிர ‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. இங்கே அதுதானே நடக்கிறது? தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை. ஒருவேளை அப்படியொரு சூழல் வருமாயின் இன்றைக்கு தமிழனுக்கும் கன்னடத்தவனுக்குமான பிரச்சினைக்கு பதில் வெள்ளாளனுக்கும் வேட்டுவனுக்குமான பிரச்சினையாக இருக்கும். தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும். தெலுங்கனுக்கும் தமிழனுக்குமான பிரச்சினைக்கு பதில் தேவனுக்கும் பள்ளனுக்குமான பிரச்சினையாக இருக்கும். அதுதான் நடக்கும்.

தமிழகத்தை இந்த தேசம் வஞ்சிக்கிறது என்றால் எங்கே சிக்கல்? குஜராத்தியை மேலே வர அனுமதிக்கிற இந்தியா எந்த இடத்தில் தமிழனைத் தட்டி வைக்கிறது? வங்காளியை அனுமதிக்கிற தேசம் தமிழனை எங்கே குறைத்து வைக்கிறது? வரிசையாகக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவனையும் இவனையும் கை காட்டுவதைவிடவும் நம்மை நாமே புரிந்து கொள்ளவே நிறைய இருக்கிறது. நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. இவன் இந்தச் சாதி, அவன் அந்த இனம் என்று அடுத்தவன் மீது வன்மத்தைக் கக்கிவிட்டு தமிழனென்றாலே இந்த நாட்டுக்கு இளிச்சவாயத்தனம் என்று அடுத்தவன் மீது பழியை வீசுவது எப்படி சரியாகும்?

இந்தியம் என்பது போலி; இந்த தேசமே வலுக்கட்டாயமாக கட்டமைக்கப்பட்டது என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படியெல்லாம் பகுக்கத் தொடங்கினால் இங்கே எதுவுமே மிஞ்சாது. குடும்பம் மிஞ்சாது; நிறுவனங்கள் மிஞ்சாது- எல்லாவற்றையும் ஏதாவதொரு காரணம் சொல்லி பகுத்து பந்தாடிவிட முடியும். எவ்வளவுதான் அந்நியோன்யமான கணவன் மனைவி என்றாலும் அவர்களுக்கிடையே ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருக்கும். எல்லாவற்றையும் தாண்டித்தான் ஒன்றாக வாழ்கிறார்கள். அணு அணுவாகப் பிரித்தாலும் கூட ஆயிரமாயிரம் சிக்கல்கள் நிறைந்திருக்கும் என்பதுதான் அடிப்படையான நியதி. இந்தியாவாக இருந்தாலும் சிக்கல்கள் உண்டு. தமிழ்நாடு தனிநாடு என்றாலும் சிக்கல்கள் இருக்கும். பகுப்பதால் மட்டுமே சிக்கல்களைக் களைந்துவிட முடியுமென்றால் அதுவொரு முடிவிலியாகத்தான் இருக்கும்.

ஏதாவதொரு வகையில் சமரசம் செய்துதான் பிடிப்போடு இருக்க வேண்டும். இதுபற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் அதிலும் கூட வக்கனையாக ஒரு கத்தியைச் செருகுகிறார்கள். இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். தமிழன் என்றால் அவன் தமிழ் தேசியத்தை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். தட்டையான வாதங்கள். அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் இவை. 

ஆமாம், ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனதான். மறுக்கவெல்லாம் இல்லை. நம்மில் பலருக்கும் சென்ற தலைமுறை வாழ்க்கை முறை தெரிய வாய்ப்பில்லை. நான்கைந்து குழந்தைகள் இருக்கும் வீட்டில் கூட அம்மாவால் அனைத்துக் குழந்தைகளையும் ஒரே மாதிரி பாவிக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஐந்தாறு பேர் வாழ்கிற வீட்டிலேயே நிலைமை அப்படியிருக்கும் போது நூற்றியிருபது கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் அத்தனை பேர்களும் சரிசமமாக பாவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு ஒற்றைக் குழந்தை இருக்கிற வீடு போதும் என்று பேசுவது எந்தவிதத்திலும் நியாயம்?. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அண்ணன் தம்பிகள் நான்கைந்து பேர் தோள் கை போட்டு நிற்பது வேறு; எவ்வளவுதான் புஷ்டியாக இருந்தாலும் ஒற்றை ஆள் தனியாக நிற்பது வேறு.

அரசியல்வாதிகள் சரியில்லை. வல்லரசு என்ற பெயரில் வேட்டைக்காடாக மாற்றியிருக்கிறார்கள். கார்பேரேட்டுகள் கொள்ளையடிக்கின்றன. இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. பழங்குடிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பட்டியல் பெரிதுதான். ஆனால் தனிநாடாக அறிவிப்பதால் எந்தவொரு பிரச்சினைக்குமே தீர்வு கிடைத்துவிடாது. நாளைக்கும் இதே ஊடகங்கள்தான்; இதே அரசியல்வாதிகள்தான்; இதே கார்ப்பரேட்டுகள்தான். இன்றைக்கு வடக்கத்தியவர்களுக்கு வீசுகிற எலும்புத்துண்டையும் பிஸ்கட்டையும் நாளைக்கு நம்மவர்களுக்கு வீசுவார்கள். ‘நம்மை நாமே ஆளலாம்’ என்பதெல்லாம் புரட்டுவாதம். ஆளுகிறவன் எல்லாக்காலத்திலும் ஆண்டையாகத்தான் இருப்பான். மாற்றானை அடிமையாக வைத்திருக்கத்தான் எத்தனிப்பான். இதுதான் நிதர்சனம். தமிழன் தமிழனுக்கே தலைமையேற்றாலும் அவன் அத்தனை பேரையும் ஒரே தட்டில் வைக்கப் போவதில்லை.

பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் போது அதன் அடிநாதங்களைப் பேச வேண்டியிருக்கிறது. கீழே நிலவும் சிக்கல்களை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகள் சாமானியர்களின் மட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும். இவைதான் எந்தக் காலத்திலும் தீர்வுகளை நோக்கி நகர்த்தும். அத்தகைய Collective resolution தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். அதைவிட்டுவிட்டு நமக்கு பிடித்த ஒரு தீர்வைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு எல்லோரும் அதை நோக்கியே ஓட வேண்டும் என்று பேசுவது எந்தவொரு காலத்திலும் முடிவைத் தராது. வேண்டுமானால் தொங்கிக் கொண்டிருப்பவனுக்கு நான்கைந்து கைத்தடிகளை கூடுதலாக பெற்றுத்தரலாம். இன்றைக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விரிவான புரிதல்கள் இல்லாத முரட்டுத்தனமாக கைத்தடிகள்.

இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன். பன்முகக் கலாச்சாரம் என்பதை உளமார விரும்புகிறேன். தேசியம் என்கிற சொல்லை வலுப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் குரல் எழுப்புவேன். அதுதான் இறுதிவரைக்கும் லட்சியமாகவும் இருக்கும். இதனை உரக்கப் பேசுவதிலும் தயக்கம் எதுவுமில்லை.

16 எதிர் சப்தங்கள்:

Unknown said...

A simple question.
What should a wife do when a husband not treat her equally?
Yes. She should go for divorce and stand on her own leg.

The same criteria applies to India-Tamilnadu relation.
Why can't Tamils form an independent country? What's the wrong in it?
Don't deviate the topic by indicating caste issues and some meaningless words.

Even people were not having that mush issues in British rule? Shall we allow British to rule India again?
Let's make adjustments with British and have a happy life. What do you think? You need nation and its map only. So lets allow British to rule. They will take care of the so called India nation.

அன்பே சிவம் said...

யப்பா ரொம்ப அவசரமா இங்க நம்ம மணிக்கு ஒரு தமிழின துரோகி பட்டம் பார்சேல்

சேக்காளி said...

தமிழன் , தமிழகம் என்ற காரணங்களுக்காக மட்டுமே வஞ்சிக்கப் படும் போது எப்படி யோசிக்கச் சொல்லுகிறீர்கள்?

Unknown said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு வணக்கம்.
சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இயங்குவதை நிறுத்திக் கொண்டாலும் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் யதார்த்த எழுத்து நடைதான் காரணம்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை விமர்சித்து நீங்கள் கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழ்தேசியத் தாகமும் குரலும் அதிகரித்து விட்டது. ஒரு தமிழ்த்தேசியவாதியாக மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் கட்டுரைக்கு மறுப்பு எழுத ஆர்வம் உள்ளது. மறுப்பு என்பதை விட விவாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.
விவாதம் என்பதற்காக தாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்த்தேசியவாதிகளின் குரலை சற்று கேட்டுப் பாருங்கள் என்றே சொல்ல விழைகிறேன்.

//எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது//
தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறும்போது தேசத்தின் மீது விமர்சனம் எழுப்பப்படுவது இயல்புதான். தேசம் என்பதை புனிதமாகக் காட்டி வழிபாடு செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவுமில்லை.

//‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. //
அப்படி யாரும் எடுத்த எடுப்பிலேயே தனிநாடு கோரிக்கையோடு கிளம்பவில்லை.
உதாரணத்திற்கு தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசியவாதிகளின் அரசியல் பயணத்தை திருப்பி பாருங்கள். இந்திய நீரோட்டத்தின் பாதையிலிருந்து விலகி தமிழ்த்தேசியம் நோக்கி வந்திருக்கிறார்கள்.
அண்ணன் சுப.உதயகுமாரால் ஆம் ஆத்மி கட்சியில் நீடிக்க முடியவில்லையே. ஏன் என்று அவரைக் கேட்டுப் பாருங்கள்.
"நோய் நாடி நோய் முதல்நாடி" என்கிற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது.
இந்திய தேசியம் நம்மைப் பிடித்த நோயாகவும், தமிழக விடுதலையை அதற்கு நன்மருந்து எனவும் சொல்கிறோம்.
.

Unknown said...


//தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை.//
உலகம் முழுக்க பல நாடுகள் ஏன் உருவாகின என்பதை ஆராய கேட்டுக் கொள்கிறேன். பாலாறும் தேனாறும் ஓடும் என சொல்லவில்லை. ஆனால் தற்போது இருக்கும் நிலையை விட மிகவும் நல்ல முறையில் தமிழ்நாடு அமையும்.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை என பலவற்றை உருவாக்க முடியும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியும்.
மக்களின் நிர்ப்பந்தமே வெற்றி பேரும். சுருங்கச் சொன்னால் மக்களே ஆள்வார்கள். எட்டு கோடி தமிழர்களால் இந்தியப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால் தமிழ்தேசியத் தலைமையை எதிர்த்து நிற்க முடியும். நிர்ப்பந்திக்க முடியும்.

//தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும்.//
தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும்போது பலரும் சாதியச் சிக்கலை முன்னிறுத்துவது இயல்புதான்.
ஆனால் நான் பழகியவரையில் பல தமிழ்த்தேசிய நண்பர்களும் சாதி மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஆகவே தமிழ்த்தேசிய உணர்வோடு சாதிமறுப்பு உணர்வும் சேர்ந்தே வருகிறது.
"நாம் தமிழர்" என்கிற உணர்வு மிகவும் வலுப்பெறும்போது சாதி பின்னுக்குத் தள்ளப்பட்டு. ஒழிக்கப்படும்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்தேசியம் பேசினால் மணிகண்டன் ஏற்றுக் கொள்வாரா?
இந்திய அரசியல் சட்டம் சாதியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறதே! அதனை ஏற்றுக் கொண்டு சாதிஒழிப்பு பற்றி பேசுவது முரண்.

//நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. //
இந்திய தேசியத்தைக் காக்கும் தீவிரம் தவிர வேறு எதுவும் இந்த வார்த்தைகளில் தெரியவில்லை. மக்களைக் குறை சொல்லி தப்பிக்கும் தந்திரமாக உள்ளது.
எட்டு கோடி மக்களின் குரலான தமிழக சட்டசபை தீர்மானங்கள் டெல்லி குப்பைத்தொட்டிக்கு போகிறதே! அதனை நிறுத்துவது எப்படி என்பதை மணிகண்டன் விளக்கினால் நலம்.

//இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். //
இது தவறான அணுகுமுறைதான். சிலர் ஆர்வக்கோளாறில் செய்வதை நான் கவனித்திருக்கிறேன். இது உணர்ச்சிவேகத்தின் வெளிப்பாடுதான்.
தவிர்க்கப்பட வேண்டியது.

//முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். //
எப்படி போராடுவது என்பதை விளக்கினால் இன்னும் நலம்.
தமிழர்களாக ஒன்றுபட்டுத்தான் போராடனும். அப்படி ஒன்றுபடுவதையே இனவாதம், பிரிவினைவாதம் என்கிறீர்களே!
ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் நிருபராதிகளை விடுவிக்க முடியவில்லையே!
காவிரி உரிமையை மீட்க முடியவில்லையே! பாலாற்றில் அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே! மக்கள்விரோத பாராளுமன்ற தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியவில்லையே!
என்ன செய்தால் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியும் என்பதையும் தாங்கள் சொல்லியாக வேண்டும். அப்படி இல்லாமல் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரிகள் மீதான இனப்படுகொலைக்கு என்ன நீதி? ஆக்கிரமிப்பு ராணுவத்தை எப்படி அகற்றுவது? விடுதலை ஒன்றுதான் தீர்வு

Unknown said...

//இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன்.//
சிறுவயதில் இருந்து இந்திய தேசிய உணர்வு ஊட்டப்படுவதால்தான் இப்படி சொல்ல முடிகிறது. நானும் அதனை கடந்து வந்தவன்தான்.
நான் தமிழ்த்தேசியவாதியாக மாறக் காரணம் இந்தியப் பேரினவாதம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள்தான்.
"பிரச்சினைகள் ஓர் ஓரமாக இருக்கட்டும், நாம் தேசிய கீதத்தை ரசிப்போம், தேசியக் கோடிக்கு வணக்கம் செலுத்துவோம்" என்பதே ஒருவகையில் மக்கள் விரோத நிலைப்பாடுதான்.
"தமிழனைக் கொல்லும் சிங்கள ராணுவம் மீது எப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யப் போவீர்கள்?" என இந்தியப் பேரரசை நோக்கி கேள்வி கேட்பதில் தவறு ஏதும் இல்லையே!

"சரி, தனித் தமிழ்நாடு தவிர வேறு தீர்வு இல்லையா?" என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கண்டிப்பாக உண்டு. அதனையும் விவாதிக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல் என்கிற தீர்வு உண்டு. மத்தியப் பட்டியலில் சில துறைகளை ஒதுக்கிவிட்டு, முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதுதான்.
பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை, வேளாண் கொள்கை என அனைத்தையும் மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய ஒன்றியம் தாக்குப் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மணிகண்டன் போன்றவர்கள் அதனை வழிமொழிவார்களா?

அதெல்லாம் ஒரு போதும் சாத்தியம் ஆகாது, ஆகவே விடுதலை ஒன்றே தீர்வு என்கிற தமிழ்த்தேசிய அரசியல் என்கிற ஒன்றை என்னைப் போன்ற சிலர் முன்வைக்கிறோம்.
அதனை விவாதிக்க வேண்டுமேயொழிய, அரைவேக்காட்டுத்தனம், முரட்டுத்தனம் என ஒதுக்கக் கூடாது.
தொடர்ந்து விவாதிப்போம். நன்றி

பின்குறிப்பு: பாகிஸ்தானிலிருந்து பலோசிஸ்தான் விடுதலை அடைய விரும்புகிறது. இந்திய அரசும் மறைமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

அன்பே சிவம் said...

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் முகம் என்பதை நம்மவர்கள் மறந்தாயிற்று.

Paramasivam said...

அன்பு மணி, இன்றைய பதிவு,இது வரை நான் படித்த உங்கள் பதிவுகளில் முத்து. முத்தான முத்து. நான்கு ஐந்து தடவை படித்தேன். வியந்தேன். இதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும்.
வாழ்க. வளர்க. தமிழ் நாட்டில் பலரையும் சென்றடைய வேண்டும். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும்.

Unknown said...

அன்பே சிவம், பரமசிவம், மணி, குருநாதன் கேள்விகளுக்கு பதிலளிக்கலாமே..............

Pari said...

வா. ம. அண்ணனுக்கு,

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது!! என்று புரட்சிகரமாராக முழங்குவதும், இந்தியா ஒரு தேசமே அல்ல தெரியுமா! என புதிதாக 'கண்டுபிடிப்பதும்' அரசியல்சரியாகவிட்ட இன்றைய சூழலில் இந்திய தேசியத்தை திடமாகவும் தெளிவாகவும் ஆதரித்து எழுதியமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஒரு மாதம் பெங்களூருக்கு மட்டும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்ததிற்கே இரு மாநிலத்தையும் சார்ந்த பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இரு மாநில சாமானியனும் 'இந்த அக்கப்போர் இயல்பான மக்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டது அல்ல, ஏதோ சில அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் நலனுக்காக நடத்தப்படுகிறது' என்றும் தெளிவாகவே உணர்ந்திருந்தனர். காவிரி சார்ந்து எத்தகைய நிலைப்பாடு கொண்டிருந்தாலும் இயல்புநிலை திரும்புவதையே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் என்பதே உண்மை.


இந்நிலையில் முழுமையாக இந்தியாவிலிருந்து பிரிவதென்பது எத்தனை கோடி மக்களின் இருப்பிடத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விஷயம் என்ற கற்பனை தமிழ்தேசியம் பேசுபவர்களிடம் துளியும் இருப்பதாக தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் பிறரே காரணமென்றும் தமிழர்கள் அனைவரும் நேர்மையும், திறமையும், வீரமும் இன்னபிற நற்குணங்கள் அனைத்தும் கொண்ட தெய்வீக பிறவிகள் என்றும் இவர்கள் கட்டமைக்கும் கற்பனை உலகை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

எவ்வளவுதான் வெறுப்பரசியல் கட்டமைக்கப்பட்டாலும் மனித சமூகம் இயல்பாகவே வளர்ச்சியை நோக்கியே செல்லும் விழைவு கொண்டது என உறுதியாக சொல்லலாம். இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் பிரமாநிலத்தவர் இருபது சதமாவது இருப்பார்கள். குறைந்தபட்சம் அவர்களின் வாழ்வும் பொருளாதாரமும் அளிக்கும் கட்டாயம் இந்த உதிரிகுரல்களை பொருளிழக்க செய்யும் என நம்புகிறேன்.

நன்றி.

G Saravanan said...

I am with Gurunathan. I am eager to view your comments for Gurunathan. Also would like to hear solutions for your so called Indian fishermen (in Tamilnadu) who has lost more than 540 lives from your friendly country Srilanka. May be this Thani Tamilnadu is not the solutions you and I like, but the Hindians are pushing to it

Vaa.Manikandan said...

தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறுவதாகச் சொல்கிறீர்கள். தமிழகத்தில் அயோக்கியத்தனமே நடைபெறுவதில்லையா? எந்த ஊடகம் எழுதுகிறது? யார் விரிவாகப் பேசுகிறார்கள்? சாதியப் பிரச்சினைகளை விடுவோம். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி என்பனவற்றில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை தமிழகத்தை தனி நாடாக ஆக்கினாலும் இதே அரசியல்வாதிகளும், தலைவர்களும்தான் பிரதமர் என்ற பெயரிலும் தேசியக் கட்சி என்ற பெயரிலும் திரிவார்கள். இதே அடக்குமுறை நீடிக்கும். இதே ஊழல் தொடரும். இன்னமும் கூட அதிகமாக இருக்கலாம். நாட்டைப் பிரித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் மணியரசனும், தியாகுவும், உதயகுமாரும் நாளைக்கு தமிழகத்தை தனிநாடாக மாற்றினாலும் இப்படியேதான் இருப்பார்கள். அதிகாரத்தையும் ஆட்சியையும் மக்கள் மாற்றித் தரப் போவதில்லை. எந்தவொரு பிரச்சினையையும் மேலிருந்து அணுகுவதில் தீர்வு கிடைக்காது. தேசியம் அயோக்கியத்தனம் செய்கிறது என்பது மேலிருந்து பார்ப்பது. அந்த தேசியம் அயோக்கியத்தனம் செய்யக் காரணம் என்ன? கடைசியாக கட்சி வேறுபாடுகளைக் களைந்து மாநிலத்தின் நலனுக்கு குரல் கொடுப்பவர்களை எப்பொழுது டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்? சுயமாக மாநிலத்தின் தேவைகளைப் பேசக் கூடிய எம்.பிக்களை எந்தத் தலைமுறை பார்த்தது?

கட்சித் தலைமையின் வணிக நோக்கங்களுக்காக, வியாபார லாபங்களுக்காக, அரசியல் பலன்களுக்காக கூட்டமாக கோஷமிடுகிறவர்களைத்தானே எம்.பிக்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறோம்? வடக்கத்திய ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்த எந்தத் தமிழக அரசியல்வாதிக்கு வாய்ப்பு வழங்கினோம்? பிரச்சினைகள் மொத்தமும் இங்கே இருக்கின்றன. நம்மிடம் இருக்கின்றன. அதைக் களைய வழிகளைத் தேடுவோம். உரக்க குரல் எழுப்பிப் பார்ப்போம். அதையெல்லாம் செய்யாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிவிட்டு பிரித்துக் கொடு என்று கேட்டால் என்ன நியாயமிருக்கிறது?

த முத்துகிருஷ்ணன் said...

நீதிக்கட்சி காலத்திலிருந்தே திராவிட நாடு என்றும் பிறகும் தனித்தமிழ்நாடு என்றும் இந்தியாவில் இருந்து தனித்து நிற்கும் குரல்கள் இங்கே ஒலித்து வருகின்றன. திராவிட இயக்கத்தின் தாக்கம் இந்தியர்களோடு ஒன்றிணையவிடாமல் தடுத்தே வந்திருக்கின்றன. இதே காரணம் தான் தமிழ்நாட்டு மக்களை மற்ற மாநிலங்கள் விலகல் மனப்பான்மையோடு பார்க்க காரணமாக இருக்கிறது.

இந்தியாவை எதிரியாக காட்டி அரசியல் செய்துவருகிறார்களே தவிர இங்குள்ள பிரச்சனையை இந்திய அளவுக்கு கொண்டு செல்ல தலைவர்கள் யாரும் இல்லை. இதில் நாம் மலையாளிகளை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.

Narayanasami Vijayaraghavan said...

Nice article Manikandan. There may be few benefits in separate nation. But, the draw backs will out weigh the benefits.

Sheae said...

I'm not sure how many people are aware of the struggle for the language rights in India. It's well documented here in Tamil http://puthur-vns.blogspot.com/2015/08/1.html

On the surface it may seems the language issue has been settled but it is not.

covaikaran said...

Kovai vanjikka padukirathu(chennai gets everything), so Separate coimbatore or separate Kongunadu

Vadkku vazkirathu (chennai), therkku theikirathu (Madurai). so separate South Tamilnadu