Oct 7, 2016

ரோல் மாடல்

சரவணன் அண்ணனைப் பார்த்து பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தார். திருமணம் ஆகியிருக்கவில்லை. வெடு வெடுவென்ற ஒடிசலாக இருப்பார். சுமாரான சட்டையை இன் செய்து, சுருக்கம் விழுந்த காலணியை அணிந்து கொண்டு வருவார். எப்பொழுதும் தோளில் கருப்பு நிற பை ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அப்பொழுது அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்ட நிறுவனத்தில் வேலையில் இருந்தார். ஆட்டோமேஷன் நிறுவனம் அது. பல்வேறு தொழிற்சாலைகளில் தானியங்கி இயந்திரங்களை அமைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. சரவண அண்ணனின் ஊர்க்காரரே நடத்தி வந்த நிறுவனம் என்பதால் அவருக்கு வேலை கொடுத்திருந்தார்கள். 

சொற்பமான சம்பளம். 2500 ரூபாய். அப்பொழுது சென்னையில் வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்த எனக்கு சற்றே அதிகமான சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது. சரவண அண்ணனும் நானும் எப்பொழுதாவது மாலை வேளைகளில் சந்தித்துக் கொள்வோம். அவர் மிஸ்டு கால் கொடுப்பார். அலுவலகத்தில் இருக்கும் தொலைபேசியிலிருந்து திருட்டுத்தனமாக அழைத்துப் பேசுவேன்.  பெரும்பாலும் கடற்கரையில்தான் சந்திப்போம். எம்.டெக் படித்துவிட்டு இவ்வளவு குறைவான சம்பளத்தில் வேலையில் இருப்பது மனதுக்குள் உறுத்துவதாகச் சொன்ன போதெல்லாம் ‘அப்படின்னா என்ர சம்பளம்?’ என்பார். நம்மைவிடவும் இந்த உலகில் வலு குறைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் போது மனம் சற்று ஆசுவாசம் அடையுமல்லவா? அந்த வகையிலான ஆறுதல் அது. 

ஊரில் கடும் வறட்சி. வீட்டுக்கு பணம் அனுப்ப முடிவதில்லை என்று அவருக்குள்ளும் நிறைய அழுத்தங்கள் இருந்தன. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். ‘எப்பவாச்சும் வாய்ப்பு வரும்..அப்போ கெட்டியா புடிச்சக்கணும்’ என்று அவருக்கு அவரே சமாதானம் சொல்லிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் அவரை  வெவ்வேறு ஊர்களுக்கு அவரை அனுப்பி வைப்பார்கள். பயணப்படி கிடைக்கும். ஆனால் ஒரு பைசா திருட மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சரவண அண்ணன் மீது பரிதாபம்தான் எந்தக் காலத்திலும்.

ஹைதராபாத்தில் எனக்கு வேலை கிடைத்த போது ‘ஏம்ப்பா இங்கேயே இருந்துக்கலாம்ல?’ என்றார். ‘இங்க இருந்தா எப்படியும் சினிமாவுல பாட்டு எழுதிடுவ..அங்க போனா நடக்காது’என்றார். என்னை அனுப்பிவிடக் கூடாது என்றுதான் உள்ளூர விரும்பினார். எனக்குத்தான் பணத்தாசை. சென்னையைவிடவும் அங்கே கூடுதலாக சம்பளம் தருவதாக ஆசை காட்டியிருந்தார்கள். மூட்டையைக் கட்டிவிட்டேன்.

ஹைதை சென்ற பிறகு சில சமயங்களில் நானாக அழைத்துப் பேசுவதுண்டு. அங்கு எனக்கும் வருமானம் போதவில்லை. வருகிற வருமானத்துக்கு அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்ய மனமே வராது. அதன் பிறகு மெல்ல மெல்ல தொடர்பு துண்டித்துவிட்டது. பேசவே இல்லை. மிகச் சமீபத்தில் எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் பேசும் போது சரவண அண்ணன் குறித்து விசாரித்தேன். அவருக்கும் அதிகமாகத் தொடர்பு இல்லையென்றும் ஆனால் அலைபேசி எண் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தார். சரவண அண்ணனின் எண்ணை வாங்கி கடந்த வாரத்தில் பேசினேன். பொதுவான விசாரணைகள்தான். குடும்பம் குழந்தை என்று பேச்சு அலைந்துவிட்டு வேலையில் நின்றது. 

‘இப்பவும் அதே வேலைதான் மணி..அடிக்கடி பெங்களூரு வர்றேன்...அடுத்த வாரம் வரும் போது ஃபோன் பண்ணுறேன்’என்றார். கிட்டத்தட்ட அதே வருமானத்தோடுதான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் எந்த தைரியத்தில் திருமணம் செய்து கொண்டார் என்று குழப்பமாகவும் இருந்தது. அப்படியான மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். சம்பளம், வேலை என்பதெல்லாம் தனி. அதற்காக திருமணம் குழந்தை என்பதையெல்லாம் தள்ளி வைக்க வேண்டியதில்லை. அது அது அந்தந்த நேரத்தில் நடந்துவிட வேண்டும் என்கிற கொள்கையும் ஒரு வகையில் சரியானதுதான். 

இந்த வாரத்தில் சரவணன் பற்றிய நினைவுகள் எதுவுமில்லை. மறந்திருந்தேன். நேற்று மாலையில் அழைத்து பொம்மனஹள்ளி ஐபிஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதாக சொன்னார். அது நட்சத்திர விடுதி. விடுதியின் பெயரைக் கேட்டதும்தான் சற்றே உறைத்தது. அலுவலகம் முடித்து அவரைப் பார்க்கச் சென்ற போது அவரே கீழே வந்தார். ஆள் மாறியிருந்தார். குண்டாகியிருந்தார். சற்றே தொப்பை போட்டிருந்தது. அரைக்கால் சட்டை, டீஷர்ட்டுமாக இருந்தார். ‘ரூமுக்கு போகலாம்’ என்றார். சென்றோம். சரவணன்தானா என்று தயக்கமாகவும் இருந்தது. சில நிமிடங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

‘கம்பெனி மாறிட்டீங்களா?’ என்றேன். தவறான கேள்வி. ஒரு நிறுவனத்துக்கே அவர்தான் ஓனர். 

‘வேலைதான் அதே வேலை...ஆட்டோமேஷன்..ஆனா கம்பெனி புதுசு... ஆரம்பிச்சு ஏழெட்டு வருஷம் ஆச்சு’என்றார். அதனால்தான் ‘அதே வேலை’ என்று சொல்லியிருக்கிறார். இப்பொழுது அந்த நிறுவனத்தின் வழியாக பெங்களூரின் மெட்ரோ நிறுவனத்தில் சில ஒப்பந்தங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக சில பெருந்தலைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். என்ன ஏது என்று விலாவாரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை. கமிஷன் விவகாரமாகக் கூட இருக்கும். இந்தக் காலத்தில் கமிஷன் இல்லாமல் என்ன நடக்கிறது? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்தெல்லாம் பெரிய ஆர்வம் வரவில்லை. ஆனால் பாதுகாப்பான வேலை, நல்ல சம்பளம், குடும்பம், குழந்தை என்றுதான் மனம் விரும்புகிறது. இப்படி துணிந்து இறங்குவதற்கு தைரியம் வேண்டும்.

‘எப்படிண்ணா கம்பெனி தொடங்கலாம்ன்னு நினைச்சீங்க?’ என்றேன்.

‘எனக்குத்தான் எந்தக் காலத்திலும் பாதுகாப்பான வேலை இல்லையே?’ என்றார். அதுதான் முக்கியமான காரணம் போலிருக்கிறது. கரையில் நிற்பவனுக்குத்தான் ஆறு பயமூட்டக் கூடியதாக இருக்கும். தூக்கி உள்ளே வீசப்பட்டவனுக்கு வேறு வழியே இல்லை. நீந்தியேதான் ஆக வேண்டும். நீந்திவிட்டார். சென்னையில் சிறு அலுவலகம்தான். பர்ச்சேஸ் ஆர்டர், சேல்ஸ் ஆர்டர் போன்றவற்றைப் பார்த்துக் கொள்கிறார்கள். மற்றபடி வெளியூரில்தான் வேலை. ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களைப் பிடித்து செயல்படுத்திவிடுகிறார். 

நம்மைச் சுத்தி ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. பார்க்க சாதாரணமான தொழிலாகத்தான் தெரியும்- பெரு நகரங்களில் கார்போரேட் நிறுவனங்களுக்கு குடி தண்ணீர் சப்ளை செய்வதில் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? என்றார். இருபது ஆட்கள், ஒரு மேற்பார்வையாளரை வைத்துக் கொண்டு நிறுவனங்களின் ‘ஹவுஸ் கீப்பிங்’ வேலையை ஒப்பந்தமாக எடுத்தால் போதும். கொழிக்கலாமாம். ஊழியர்களுக்கு மதிய உணவு தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தங்களை எடுத்து கோடீஸ்வரனானவர்களை எல்லாம் தனக்குத் தெரியும் என்றார். அவர் சொல்லச் சொல்ல வாயை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எதை நாம் அள்ளியெடுக்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது.

வாய்ப்புகள் குறித்தான தகவல்கள், அந்த வாய்ப்புகளை நெருங்குவதற்கு உதவும் தொடர்புகள், அந்தத் தொடர்புகளின் வழியாக வாய்ப்புகளை சரியாகக் கைப்பற்றுகிற திறமை- இவை மூன்றும் இருந்தாலே பாதி வெற்றிதான். அதைத்தான் தான் செய்ததாகச் சொன்னார். வெற்றி பெற்ற மனிதர்களை பேசவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவர் பேசிக் கொண்டிருந்தார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஊரில் பனிரெண்டு ஏக்கர் தோட்டம் வாங்கியிருக்கிறாராம். ஊருக்கு வரச் சொல்லியிருக்கிறார்.

வறண்ட பூமி; கையைக் கடிக்கும் வருமானம்; கஷ்டப்படும் பெற்றோர்கள் என்றிருந்தவரின் வாழ்க்கை மாற பத்து வருடங்கள் போதுமானதாக இருந்திருக்கிறது. யாரிடமிருந்தும் திருடியதில்லை. யாரையும் மோசம் செய்வதில்லை. சரியான வாப்பைக் கண்டறிந்து அதை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு ஒரே தம்தான். கட்டியவர் மேலே வந்துவிட்டார். இப்படியானவர்கள்தான் எல்லாக் காலத்திலும் ரோல் மாடல்களாக இருக்கிறார். சரவண அண்ணன் அத்தகையதொரு ரோல் மாடல்.