Oct 7, 2016

தா..லே...லொ

நாதன் என்ற நண்பர் ஃபேஸ்புக்கில் ஒரு இணைப்பைக் கொடுத்திருந்தார். அவருடைய வெளிவராத குறும்படத்தின் டீஸர் அது. எனக்குப் பிடித்திருந்தது. இப்படியானவர்களின் அறிமுகம் கிடைக்கும் போது ‘இதுக்கு முன்னாடி நீங்க என்ன செஞ்சிருக்கீங்கன்னு தெரியல’ என்று ஒத்துக் கொண்டு கவனிக்காமல் விட்டதற்கு மன்னித்துவிடச் சொல்லி அவர்களது பிற வேலைகளையும் தேடிப் பிடித்துவிடுவதுதான் திறமையாளர்களுக்கு செய்யக் கூடிய மரியாதை. அப்படிக் கேட்ட போது முந்தைய குறும்படத்தின் இணைப்பையும் கொடுத்தார்.

‘தா...லே...லொ’ என்பதுதான் குறும்படத்தின் பெயர். காலையில் அவர் இணைப்பைக் கொடுத்ததிலிருந்து கிட்டத்தட்ட ஏழெட்டு முறை பார்த்துவிட்டேன். சலிக்கவேயில்லை. இன்னமும் கூட நூறு முறை பார்க்கலாம். ஒற்றைக் குழந்தையை வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார். மிக மிக எளிமையான விஷயம். அந்தக் குழந்தையை நடிக்க வைத்தார்களா அல்லது இயல்பிலேயே விட்டு படம் எடுத்தார்களா என்று தெரியவில்லை. அந்தக் குழந்தைக்காகவும் அதன் குரலுக்காகவும் உடல் அசைவுகளுக்காகவும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். Cute.

குழந்தை பேசுவது எதுவும் புரிவதில்லை. அது பாட்டுக்கு பேசிக் கொண்டேயிருக்கிறது. மின்விசிறி ஓசைதான் தாலாட்டு. தா...லே.லொ!


நாதன் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். திரைப்படங்களில் பணியாற்றுகிறார் போலிருக்கிறது. அவரிடம் பேசியது இல்லை. அதனால் மேலதிக விவரங்கள் தெரியவில்லை. ஆள் யார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். செய்த வேலைதான் முக்கியம்.


வெளியாகவிருக்கும் மாசிலன் ஆதல் அவருடைய இரண்டாவது குறும்படம். இசையும் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. குறும்படம் வெளியான பிறகு அது குறித்து பேசி எழுதலாம்.

இப்போதைக்கு தா...லே...லொ வைப் பார்த்துவிடுங்கள்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//குழந்தை பேசுவது எதுவும் புரிவதில்லை//
அடுல்ல மமா.