Oct 24, 2016

தனிவழி

நாற்பது வருடங்களுக்கு முன்பாக கோயமுத்தூரில் வாழ்ந்த மனிதர்களிடம் பேச்சுவாக்கில் ‘அப்பவெல்லாம் கோயமுத்தூரு....’ என்று சாவி கொடுத்துவிட வேண்டும். ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ஊர் அந்த ஊர் என்றில்லை- எந்தவொரு ஊரில் வாழ்ந்தவர்களுக்கும் அப்படிச் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும். கலர் கலரான ப்ளாக் அண்ட் ஒயிட் நினைவுகள். 

மனிதர்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக் காலத்தில் நிலம் எப்படி இருந்தது, மக்கள் எப்படியிருந்தார்கள், அவர்களது வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்பதையெல்லாம் புரிந்து கொள்ள புத்தகங்கள் துல்லியமாகக் காட்சிப்படுத்துகின்றன. புத்தகங்களின் வழியாகத்தான் நமக்கு பல நூறு வரலாறுகளின் கதவுகள் திறக்கக் கூடும். 

அத்தகைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று அவ்வப்போது மனம் விரும்பும். கோபி கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மகுடீஸ்வரனைச் சந்தித்த போது தன்னிடமிருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் தனிவழி என்ற நாவலை எடுத்துக் கொடுத்தார். எழுபது பக்கங்களிலான குறு நாவல் அது.

ஆர்.ஷண்முகசுந்தரம் கொங்கு வட்டார வழக்கை இலக்கியத்தில் கொண்டு வந்த முன்னோடி. அவரது நாகம்மாள் நாவலை சிலாகிக்கிறார்கள். ஆனால் தனிவழி பற்றிய குறிப்பு எதுவும் கண்ணில்படவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில் ஏதாவது இதழ்களில் வெளியாகியிருக்கக் கூடும். அறுபதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் கூட கதையின் காலகட்டம் என்பது இந்தியா சுதந்திரமடைந்து இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்துத் தொடங்குகிறது. 

அந்தக் காலகட்டத்தில் கோயமுத்தூர் ஜில்லாவில் பணப்புழக்கம் தூள் கிளப்புகிறது. நாயக்கமார்கள் மில்களைக் கட்டுகிறார்கள். கவுண்டர்களும் கூட முட்டி மோதிப் பார்க்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நாச்சப்பனும், கிட்டப்பனும், கருப்பணனும், மாரக்காவும், குஞ்சாளும் பாத்திரங்களாக வடிவம் பெறுகிறார்கள்.

நாச்சப்பன் வண்டியோட்டுகிறவர். அவருடைய மகன் கிட்டப்பன். ஒவ்வொரு நாளும் அப்பாவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் பாலகன். அந்த மனிதருக்கு எதிர்பாராமல் நிகழக் கூடிய விபத்தொன்றின் காரணமாக அப்பொழுது - 1950 வாக்கில்- கோவை சிங்காநல்லூருக்கு நகர்வதும் அங்கே மில்லில் சேர்ந்து வளரும் கிட்டப்பன், அவனை வேலைக்குச் சேர்த்துவிடும் கருப்பணன், அவர்களுடன் இணையும் புதுக்குடும்பம் என்று நகர்கிற நாவலின் இறுதியில் அப்பன் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்க மகன் ஒரு முடிவை எடுக்கிறான். அதுதான் தனிவழி.

ஸ்பின்னிங்மில்களும் தொழிற்சாலைகளும் புரட்டிப் போடுவதற்கு முன்பாக அப்பாவியாக தலை நிறைய எண்ணெய் பூசி முகம் முழுக்கவும் பவுடர் அடித்து அப்பாவியாகச் சிரித்துக் கொண்டிருந்த கோவையின் ஒரு ஸ்நாப் ஷாட் இந்த நாவல். இப்பொழுது அச்சில் கிடைக்கிறதா என்றுதான் தெரியவில்லை.

ஐம்பதுகளில் சிங்காநல்லூரிலும் ஒண்டிப்புதூரிலும் விவசாயம் உண்டு. கிணறுகளில் குளித்து ஈர ஆடையோடு நடந்து வரும் மனிதர்கள் உண்டு. சிங்காநல்லூர் பக்கம் தீபாவளி பொங்கலைவிடவும் கூத்தாண்டவருக்கான திருவிழா பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. நாவலின் அரைப்பக்கம்தான் இக்குறிப்பு இருக்கிறது என்றாலும் எதையோ கிளறிவிட்டுவிட்டது. 

இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விழா அல்லது பண்பாட்டு நிகழ்வு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்த காலம் ஒன்று உண்டு. கன்னிமார் சாமிக்கான படையல், கருப்பராயனுக்கான கிடா வெட்டு, அய்யனாருக்கான விழா, சின்னண்ணன் பெரியண்ணன் சாமி பூசை என்று எவ்வளவோ இருந்திருக்கின்றன. நாம்தான் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்துவிட்டு இன்றைக்கு சீனா பட்டாசா, சிவகாசி பட்டாசா என்கிற பட்டிமன்றத்தில் வந்து நிற்கிறோம். தீபாவளியை விட்டால் நமக்கு இன்றைக்கு எந்த நோம்பியும் இல்லை. ஆடி பெருக்கு தூரியாட்டமும் இல்லை ஒவ்வாதி நோம்பிக்கு வேப்பம்பூ விழுங்குவதுமில்லை. இன்னமும் சில ஆண்டுகள் கழித்தால் விநாயகர் சதுர்த்தியும் நவராத்திரியும் தீபாவளியும் மட்டும்தான் எஞ்சி நிற்குமே தவிர பிற எல்லாவற்றையும் ஒழித்திருப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

புலம்புவதற்காகச் சொல்லவில்லை. இத்தகைய சற்றே பழைய நூல்களை வாசிக்கும் போதுதான் நெஞ்சுக்குள் சுருக்கென்று தைக்கிறது. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பாகக் கூட நம்மவர்களின் வாழ்க்கை முறை வேறாக இருந்திருக்கிறது. பண்பாடு வேறாக இருந்திருக்கிறது. கொண்டாட்டங்கள் வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. ஏன் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பெரு மொத்தமாக ஒற்றைச் சாயத்தைப் பூசிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் புரியவில்லை. 

நாவல் சுவாரசியமாக இருக்கிறது. செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் என்று நாவல் முழுக்கவும் தெரிந்த ஊர்கள்தான். அங்கேதான் மாட்டு வண்டி ஓடுகிறது. மாரியம்மன் கோவில் திண்ணைகளில் அமர்ந்து பேசுகிறார்கள். அப்பொழுதுதான் காணாமல் போன அல்லது காணாமல் ஆகிக் கொண்டிருக்கிற பல சொற்கள் எட்டிப் பார்க்கின்றன. அதற்காகவே இரண்டு மூன்று முறை வாசித்தாலும் தகும். 

நாவலின் வடிவம், சில வாக்கியப் அமைவுகள், வர்ணிப்புகள் போன்றவற்றையெல்லாம் முன் வைத்து கறாராக விவாதித்தால் நவீன நாவல் வடிவத்திலிருந்து சற்று அந்நியப்பட்டுத்தான் நிற்கும். ஆயினும், வாசிக்க வேண்டிய நாவல் என்ற பட்டியல் இருந்தால் நிச்சயமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பில் ஜெயகாந்தனோடு ஒப்பிட்டால் ஆர்.ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் வெளியுலகப் பார்வையற்றவர்கள் என்று யாரோ எழுதியிருந்தார்கள். அந்த வாக்கியம் மனதுக்குள் வெகுநாளாக பதிந்து கிடந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவரது எழுத்துக்களை வாசிக்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடியும். ஜெயகாந்தனின் உலகம் வேறு; ஆர்.ஷண்முகசுந்தரத்தின் உலகம் வேறு. அவரையும் இவரையும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஆர்.ஷண்முகசுந்தரம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசிய போதெல்லாம் அவ்வளவாக கவனித்ததில்லை. மிக எளிதாகக் கடந்திருக்கிறேன். இப்பொழுதுதான் ஆர்.எஸ்ஸின் அவரது எழுத்துக்களை வாசிக்க மனம் விரும்புகிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எத்தனிக்கிறது. மெல்ல மெல்ல வறுமை வாட்டி கடைசியில் சிரமப்பட்டு இறந்து போன எழுத்தாளர்களின் வரலாற்றில் ஆர்.ஷண்முகசுந்தரத்துக்கும் இடமுண்டு. கோபியில் கூட சில காலம் பள்ளிப்படிப்பைப் படித்திருக்கிறார். எந்தப் பள்ளி என்றுதான் தெரியவில்லை.

இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்து பிறகு ராஜினாமா செய்துவிட்ட ஆர்.கே.சண்முகத்தின் கோவை ரேஸ்கோர் சாலை வீட்டில் இருந்த நூலகம் மிகப்பெரியது என்பார்கள். பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த நூலகத்தில் ஆர்.எஸ் நிறைய வாசித்திருக்கிறார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் பற்றியே அறிந்து கொள்வதற்கே நிறைய இருக்கின்றன. தனது முதல் அமைச்சரவையில் அறிவார்ந்த பெருமக்கள் வீற்றிருக்க வேண்டும் என நேரு விரும்பிய போது நிதி இலாகாவுக்கு சண்முகம் செட்டியாரின் பெயரை காந்தியடிகள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறார். ஆர்.கே.எஸ் காங்கிரஸ் கட்சியில் இல்லையென்றாலும் கூட அமைச்சரவையில் இடம்பெறுகிறார். ஆனால் தமது இலாகாவில் ஓர் அதிகாரி செய்த பிழைக்காக- என்ன பிழையென்று தெரியவில்லை- ராஜினாமா செய்துவிட்டார். நேர்மையான மனிதர்கள் வாழ்ந்த காலம் அது.

அத்தகைய ஆர்.கே.எஸ்ஸூம், ஷண்முகசுந்தரமும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். நிறைய விவாதித்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரின் வரலாற்றைக் கொஞ்சமாவது அசைத்துப் பார்க்க வேண்டும் என மனம் விரும்புகிறது. 

எவ்வளவு சீக்கிரமாக இந்த உலகம் மனிதர்களை மறந்துவிடுகிறது என்பதை யோசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பழைய மனிதர்கள் மீது காலம் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. அடியில் கிடப்பவர்களை மறந்துவிட்ட இந்தத் தலைமுறையினர் தன்னை எந்தக் காலத்திலும் மறைக்க முடியாத சூரியனாகக் கருதிக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது அள்ளி வீசவும் காலத்திடம் ஒரு சட்டி மண் இருக்கிறதுதானே?