Oct 26, 2016

வாங்க ஒரு பிஸினஸ் செய்யலாம்

கடந்த வருடம் கோவாவிலிருந்து வரும் போது ஆர்வக் கோளாறு ஒன்றை தொடரூர்தியில் சந்தித்தோம். பெட்டியில் இருந்த ஒவ்வொரு பெங்களூர்வாசியிடமும் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டிருந்தது. ‘இவன் எதுக்கு இத்தனை நெம்பரைச் சேர்த்து வைக்கிறான்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த தூண்டில் எனக்குத்தான். அருகில் வந்து அமர்ந்து ‘அப்புறம்..கோவா எப்படி இருந்துச்சு’என்றார். இதெல்லாம் எண்ணை வாங்குவதற்கான தொடக்கம். அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆர்வமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். 

‘உங்க நெம்பர் தாங்க..பெங்களூர் வந்து பேசறேன்’என்று கேட்டதனால் கொடுத்திருந்தேன். எண்ணை வாங்கிய அடுத்த கணம் இன்னொரு இருக்கைக்குச் சென்றுவிட்டார்.

information is wealth என்கிற வகையறா. சரியாக ஒரு வருடம் கழித்து கடந்த வாரம் அழைத்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு 'கேன் ஐ ஸ்பீக் டூ மணிகண்டன்’ என்று  ஆங்கிலத்திலேயே பேசினார். பேசுகிறவர் தமிழர் என்று தெரிந்தால் ‘சொல்லுங்க’ என்று தமிழுக்கு மாறிவிடுவதுதான் உத்தமம். இந்த ஆளிடமும் ‘சொல்லுங்க’ என்றவுடன் தமிழுக்கு மாறிவிட்டார். தொடரூர்தியில் சந்தித்ததை நினைவூட்டிவிட்டு நண்பர்கள் சிலர் சேர்ந்து பெங்களூரில் ஒரு தொழில் தொடங்குவதாகவும் அதே மாதிரி விருப்பமுள்ள மனிதர் என்பதால் என்னிடம் பேசுவதாகவும் சொன்னார். தொழில் தொடங்குவதாக நிசப்தத்தில் கூட எழுதிய ஞாபகமில்லை. ஏதாவது தில்லாலங்கடி வேலையாக இருக்குமோ என்று யோசித்துவிட்டு ‘என்ன பிஸினஸ்? எவ்வளவு முதலீடு’ என்றெல்லாம் கேட்டவுடன் இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள் என்பதால் நேரில் சந்தித்துச் சொல்வதாகச் சொன்னார். 

ஒருவேளை அம்பானி குழுமத்தை விலை பேசுவார்களாக இருக்கும் எனத் தோன்றியது. வியாழக்கிழமையன்று மகிழ்வுந்தில் வந்து வாசுதேவ் அடிகாஸூக்கு முன்பாக நிறுத்திவிட்டு அழைத்தார். அதிலேயேதான் அமர்ந்து பேசினோம். 

‘எதுக்காக பிஸினஸ் ஆரம்பிக்கணும்ன்னு நினைக்கறீங்க?’ - இதுதான் அவருடைய முதல் கேள்வி.

அப்படியெல்லாம் நானே கூட இதுவரைக்கும் யோசித்ததில்லை. ‘இல்லைங்க...அப்படியெல்லாம் எனக்கு ஒரு ஐடியாவும் இல்ல’

‘பிஸினஸ்ஸூன்னு சொன்னவுடனே டீட்டெயில் கேட்டீங்களே’ - யாராவது வாலண்டியராக வண்டியில் ஏறினால் கேட்கத்தான் செய்வேன். நான்கு பேருக்கு பொதுவான விவகாரம் என்று தெரிந்தால் தோன்றினால் தோண்டித் துருவி எழுதினால்தான் மனசு ஆறும்.

அவருக்கு பதிலாக எதுவும் சொல்லவில்லை. சுதாரித்துக் கொண்டவர் வண்டியின் பின் இருக்கையில் கிடந்த ஒரு அட்டையை எடுத்து நீட்டினார்.

‘நிறையப் பணம் வேண்டும். கார் வேண்டும். வீடு வேண்டும். மெடிக்கல் இன்சூரன்ஸ் வேண்டும்’ என்று பத்து பதினொரு வரிகள் இருந்தன. ஒருவனை ஏமாற்றுவதென்றால் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் என்பார்கள் அல்லவா? அப்படி.

‘இதில் உங்களுக்கு என்னவெல்லாம் தேவை’ என்றார். சொல்லவில்லையென்றால் விடமாட்டார். இரண்டு மூன்றைச் சொன்னேன். அதை தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார்.

‘இப்போ இதையெல்லாம் அடையணும்ன்னா என்ன செய்யலாம்ன்னு நினைக்கறீங்க?’ என்றார்.

அவர் விரும்புகிற பதில் என்னவென்று எனக்கும் தெரிந்துவிட்டது. அதையே சொன்னேன். ‘பிஸினஸ் செய்யணும்’. 

‘வெரிகுட்..ரொம்பச் சரியாச் சொன்னீங்க’ என்றவர் அதோடு விடுவதாகத் தெரியவில்லை.

‘பிஸினஸ்ன்னா என்ன?’

‘பிஸினஸில் வெற்றியடைய என்னவெல்லாம் தேவை?’ என்று இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்டார். என்னடா இது வம்பாகப் போய்விட்டது என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அவருடைய நோக்கமெல்லாம் ‘நாமும் ஒரு பிஸினஸ் தொடங்க வேண்டும்’ என்கிற எண்ணத்தை உருவாக்குவதுதான். அப்படி உருவாகிவிட்டதாக நடித்தால் மட்டும்தான் தப்பிக்க முடியும் எனத் தோன்றியது. நடிக்கத் தொடங்கியிருந்தேன். அதன் பிறகு அவர் புளகாங்கிதம் அடையும் ‘பிஸினஸ்’ பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘உற்பத்தியாளரையும் வாடிக்கையாளரையும் நேரடியாக இணைக்கிற பிஸினஸ் இது’ என்றார். Manufacturer to Consumer மாடல்.

‘எப்படிங்க?’ என்றேன்.

‘நீங்களே கூட வாடிக்கையாளரா மாறலாம்’ என்றார். வந்துவிட்டார். பாய்ண்ட்டுக்கு வந்துவிட்டார். அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு வந்து தலையில் கட்டுவார்கள். அதை நாம் பயன்படுத்த வேண்டும். நமக்குக் கீழாக நான்கைந்து மடையர்களைப் பிடித்துக் கொடுத்தால் லாபம் சம்பாதிக்கலாமாம். 

‘ஆம்வேக்காரங்க இதையேதான பண்ணுறாங்க’ என்று கேட்டால் வெவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒரு கூட்டத்துக்கு வரச் சொன்னார். சாப்பாடு எல்லாம் போடுவார்களாம். நண்பர்களையும் அழைத்து வரச் சொன்னார்.

ஆர்வக் கோளாறு விப்ரோ நிறுவனத்தில் பிரின்ஸிபல் கன்சல்டண்ட்டாக இருக்கிறார். எப்படியும் லட்சத்தில்தான் சம்பளம் வரும். ஆனால் ஆசை. லட்சம் கோடியென சம்பாதித்துவிட முடியும் என்று நம்புகிறார். எம்.எல்.எம் என்று சொன்னால் மக்கள் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதால் பிஸினஸ் என்ற சொல்லை மட்டும் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறார். தாம் செய்கிற பிஸினஸின் நிறுவனர் ஐஐடியில் படித்தவர் என்கிறார். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது மாதிரிதான். ஐஐடியில் படித்தால் அவன் வெற்றி பெற்றுவிடுவான் என்று நாம் நம்ப வேண்டும். ஐஐடியில் பி.டெக் முடித்துவிட்டு ஐஐஎம்மில் எம்.பி.ஏ படித்துவிட்டு எனக்கு பக்கத்திலேயே அமர்ந்து இருக்கையைத் தேய்த்துக் கொண்டிருந்தவனைத் தெரியும்.

படிப்புக்கும் தோற்றத்துக்கும் வெற்றிக்கும் பணத்துக்கும் சம்பந்தமேயில்லை. இவையெல்லாம் போலித்தனமான இணைப்புகள். ஒன்றை அடைய இன்னொன்று உதவலாமே தவிர ஒன்றிருந்தால்தான் இன்னொன்றை அடைய முடியும் என்பதெல்லாம் உட்டாலக்கடி. ஆனால் பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கும் இந்த இணைப்பைப் பயன்படுத்தித்தான் கொக்கியை வீசுகிறார்கள். கொக்கியில் சிக்கிக் கொண்டதாக பாவனை காட்டித்தான் இத்தகைய மனிதர்களிடமிருந்து தப்பிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தன்னால் சக மனிதர்களிடம் தைரியமாகப் பேசவே முடியாது என்றும் இன்று என்னை மாதிரியானவர்களிடம் பேசி பிஸினஸ் ஆர்வத்தை வளர்க்கும் வரை வளர்ந்திருப்பதாகச் சொன்னார். ‘உங்களுக்கு இன்னமும் ட்ரெயினிங் போதாதுங்க’ என்று சொல்வதற்கு வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. எதுவும் சொல்லவில்லை. ஒரு சிடியைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். பார்ப்பது பிரச்சினையில்லை. மேலதிக விவரங்கள் தேவையென்றால் சிடியைக் கொடுத்தவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று பின்பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சடித்திருக்கிறார்கள்.

வேணியிடம் சொன்னேன். ‘எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..ட்ரெயின்ல ஒரு டிஜிட் மாத்தித்தான் நெம்பர் கொடுத்தீங்க’ என்றாள். அப்படியான சேட்டையைச் செய்யக் கூடிய ஆள்தான் நான். ஆனால் சரியான எண்ணை ஆ.கோ எப்படிப் பிடித்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை நிசப்தம் வாசிப்பவராக இருந்தால் இதையும் வாசிக்கட்டும். 

நேற்று இரண்டு மூன்று முறை அழைத்தார். எடுக்கவேயில்லை. மீறி எடுத்தால் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகலாம் என்று அழைப்பார். அது என்னால் முடியாது.