Oct 25, 2016

எங்கே லஞ்சம் இல்லை?

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். வாத்தியார் வேலைக்கு பணம் கொடுப்பது பற்றி பேசிவிட்டு ‘கவர்ண்மெண்ட் சிஸ்டமே இப்படித்தான்’ என்றார். அவர் தனியார் துறையில் வேலையில் இருக்கிறார். மிகப்பெரிய இந்திய மென்பொருள் நிறுவனம் அது. பல்லாயிரக்கணக்கானவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். சத்தமேயில்லாமல் ஆட்களை வெளியேற்றவும் செய்கிறார்கள். தமது நிறுவனம் செய்யக் கூடிய தகிடுதத்தங்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

‘உங்க கம்பெனிக்காரங்க கேம்பஸ் இண்டர்வியூவுக்கு எவ்வளவு காசு வாங்கறாங்க?’ என்றேன். அவரைக் கலாய்க்கக் கேட்பதாக நினைத்துக் கொண்டவர் சிரித்தார். கலாய்க்கவெல்லாம் கேட்கவில்லை. அதுதான் நடக்கிறது. தங்கள் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற வேண்டும் என்பதற்காக தனியார் கல்லூரிகள் லட்சக்கணக்கில் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆட்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். அன்பளிப்பு, லஞ்சம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ‘இந்த வருடம் இவ்வளவு பேர்களை நீங்கள் வேலைக்கு எடுக்க வேண்டும். அதற்கு இவ்வளவு தொகை கொடுத்துவிடுகிறோம்’ என்றுதான் டீல்கள் நடைபெறுகின்றன.

பச்சையான அயோக்கியத்தனம்.

ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியின் முதல்வர் ‘ஏதாவதொரு நிறுவனத்தில் பேசி வளாகத் தேர்வுக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா?’ என்றார். அதுவொரு கிராமப்புறக் கல்லூரி. முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தெரிந்த நண்பர்களின் வழியாக ஒரு பெரு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் துணைத் தலைவரின் (வைஸ் பிரஸிடெண்ட்) நேரடி உதவியாளர் மூலமாக காய் நகர்த்திய போது ‘கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கு நம் நிறுவனங்களில் வேலை செய்கிற அளவுக்குத் திறமை இருப்பதில்லை. அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும் சிரமம்’ என்று நாசூக்காகச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல உண்மைதான் என்றுதான் நமக்குத் தோன்றும். நாமும் பேசும் போதும் எழுதும் போதும் அரசு சரியில்லை, கல்லூரி நிர்வாகம் சரியில்லை என்று பொங்கல் வைத்து பொங்கப்பானையை எடுத்துக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அது உண்மையில்லை. 

தனியார் கல்லூரிகளுக்குச் வளாக நேர்முகத் தேர்வுக்குச் செல்கிற நிறுவனங்கள் ஒவ்வோர் கல்லூரியிலும் பல நூறு பேர்களை அள்ளியெடுக்கிறார்கள். ஒரே கல்லூரியில் முந்நூறு, நானூறு பேர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். அதில் பாதிக்கும் மேலான மாணவர்கள் சராசரி அல்லது சராசரிக்கும் குறைவான மாணவர்கள் என்று துண்டைப் போட்டு சத்தியம் செய்ய முடியும். extra ordinary மாணவர்கள்தான் வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லை. சாதாரணமான மாணவர்கள் போதும். இன்றைக்கு ஐடி துறையின் வேலையை சராசரி மாணவர்களாலேயே செய்துவிட முடியும். ஆனால் ஆட்டு மந்தைகள் போல வதவதவென்று ஆட்களுக்கான தேவையிருக்கிறது. இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது எந்தக் கல்லூரி கொட்டிக் கொடுக்கிறதோ அந்தக் கல்லூரிக்கு மனிதவள ஆட்கள் செல்கிறார்கள். பெருநிறுவனங்களின் மனிதவளத்துறையில் தொடர்புடைய பலருக்கும் இது தெரிந்த விவகாரம்தான். இலைமறை காய்மறையாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரிக்காரர்களும் ‘எங்கள் கல்லூரியில் 100% மாணவர்களும் வேலை வாய்ப்பு பெற்றுவிட்டார்கள்’ என்று வெளியில் தட்டி வைக்கிறார்கள். செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறார்கள். அடுத்த வருடத்திற்கான வலையை வாகாக விரித்து வைக்கிறார்கள். இந்த விவகாரம் புரியாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்களும் பேராசிரியர்களும் ‘இந்த வருஷம் ப்ளேஸ்மெண்ட்டே சரியில்ல சார்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வளாக நேர்முகத் தேர்வு என்பது பெரும்பாலும் கறுப்புச் சந்தை. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை லஞ்சமும் அன்பளிப்பும் வாங்கியதை நிறுவனங்கள் கண்டுபிடித்தால்- தனியார் நிறுவனங்களைப் பற்றித்தான் தெரியுமே- சம்பந்தப்பட்ட ஊழியர்களை மட்டும் கமுக்கமாக வேலையை விட்டு அனுப்பி வைத்துவிடுவார்கள். தங்கள் நிறுவனத்தின் பெயர் எந்தவிதத்திலும் கெட்டுவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.

அனைத்துக் கல்லூரிகளிலும் அனைத்து நிறுவனங்களிலும் நடக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படியெல்லாம் நடப்பதில்லை என்று யாராலும் மறுக்க முடியாது.

ஆட்களை வேலைக்கு எடுப்பதில் மட்டுமில்லை. பிற நிறுவனங்களில் வேலை செய்வதற்காக ஆட்களை வேலைக்கு அனுப்பி வைப்பதிலும் கூட வருமானம் கொழிக்கிறார்கள். உதாரணமாக XYZ என்ற நிறுவனத்துக்கு வேலை செய்வதற்காக ஒப்பந்தப் பணியாளர்கள் பத்துப் பேர் தேவைப்படுகிறார்கள். ஒரு ஆளுக்கு ஒரு மணி நேரத்துக்கு 75 டாலர்கள் தருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னிடம் ஐம்பது பணியாளர்கள் இருக்கிறார்கள். பத்துப் பேர்களை அனுப்பி வைத்தால் ஒரு மணி நேரத்துக்கு 750 டாலர்கள் கிடைக்கும். அதில் சொற்பப் பணத்தை பணியாளர்களுக்கு சம்பளமாகக் கொடுத்துவிட்டு மீதத்தை நான் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளலாம். அதற்காக XYZ நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு ஆளை ‘கவர்’ செய்ய வேண்டியிருக்கும். ஏதாவதொரு வகையில் வளைத்துவிட்டால் பத்து ஆட்களுக்கான ஒப்பந்தத்தை எனக்குக் கொடுத்துவிடுவார்கள். இப்படி பெரிய ஆட்களை வளைத்து ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப் பணியாளர்களை விரட்டியடித்துவிட்டு தமது ஆட்களை நியமிப்பது, புதிதாக உருவாகும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான தேவைகளை தமது ஆட்களை வைத்துப் பூர்த்தி செய்வது போன்ற வேலைகளையெல்லாம் கனகச்சிதமாகச் செய்து முடிக்கும் ஜெகஜ்ஜாலக் கில்லாடி நிறுவனங்கள் இருக்கின்றன. வெளியில் பேசும் போது ‘பிஸினஸ் எதிக்ஸ்’ என்று காது கிழியப் பேசுவார்கள். அறமும் இல்லை; முறமும் இல்லை. இலாபம்- அது மட்டும்தான் நோக்கம்.

மென்பொருள் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டும்தான் அறமின்மையும் லஞ்சமும் இருக்கிறது என்று நினைத்தால் அதுவும் தவறுதான். சொந்தக்காரர் ஒருவர் சுல்சர் தறிகள் வைத்திருக்கிறார். சுல்சர் தறிகளுக்கான முதலீடுகள் அதிகம். அதே சமயம் தறியின் உற்பத்தியும் அதிகம். உற்பத்தி அதிகமானால் அதற்கேற்ப ஆர்டர் கிடைக்க வேண்டுமல்லவா? துணி அதிகமாகத் தேவைப்படும் தலையணை, மெத்தை நிறுவனங்களில் ஆரம்பித்து துணிக்கடைகள் வரை நிறையப் பேர்களிடம் பேசுகிறார். தனது தறியில் உற்பத்தி செய்யப்பட்ட மாதிரித் துணிகளைக் கொடுத்து விலைக்கான கொட்டேஷனையும் கொடுத்து வந்த பிறகு அவர்கள் பரிசீலித்துவிட்டு ஒப்பந்தம் போடுவதற்காக அழைப்பார்கள். ஒரு மீட்டர் துணிக்கு அவர்கள் நாற்பது ரூபாய் தருகிறார்கள் என்றால் அதில் ஒரு ரூபாயை அதே நிறுவனத்தின் ‘பர்ச்சேஸ்’ துறையில் இருக்கும் ஆட்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அது கமிஷன் தொகை. இல்லையென்றால் தரம் சரியில்லை, நேரத்திற்கு வந்து சேர்வதில்லை என்று ஏதாவதொரு வகையில் கழித்துக் கட்டி அடுத்த ஆளைத் தேடத் தொடங்கிவிடுவார்கள். பல்லாயிரக்கணக்கான மீட்டர் துணியை வாங்குகிற நிறுவனத்தில் ஒரு மீட்டருக்கு ஒரு ரூபாய் என்றாலும் கூட கணக்குப் போட்டுக் கொள்ளலாம். சம்பளத்தை விட பன்மடங்கு மிஞ்சும். துணியை மட்டுமா வாங்குகிறார்கள்? ஆணியிலிருந்து தண்ணீர் வரைக்கும் அவர்கள் வழியாகத்தான் உள்ளே வரும். எவ்வளவு சம்பாதிப்பார்கள்?

அரசுத்துறைகளில் மட்டும்தான் லஞ்சம் இருக்கிறது என்று நினைத்தால் அது நம்முடைய அறியாமை. அரசுத் துறையில் நடைபெறுவது மிக எளிதாக வெளியில் தெரிந்துவிடுகிறது. பிற துறைகளில் வெளியில் தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். நமக்குத் தெரியவில்லையென்றால் அனைத்தும் சரியாக இருப்பதாக அர்த்தமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் லஞ்சமிருக்கிறது. எங்கெல்லாம் அடிக்க முடியுமோ அங்கெல்லாம் அடிக்கிறார்கள். அரசுத்துறை, தனியார்துறை, என்.ஜி.ஓ என்றெல்லாம் பாகுபடுத்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்க வேண்டியதில்லை. corruption is not only in our systems; its in our mindset என்று சத்தம் போட்டுச் சொல்லலாம். இதை அது அழிக்க அதை இது அழிக்கிறது. தனிமனிதன் திருந்தாமல் இங்கே எதுவுமே சாத்தியமில்லை. அதைத்தான் நாம் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது.