Oct 24, 2016

உணவு

நாம் எதிர்பார்க்காத காரியங்களை எல்லாம் சப்தமேயில்லாமல் யாராவது எங்கேயாவது ஒரு மூலையில் செய்து கொண்டுதான் இருப்பார்கள். இருக்கிறார்கள். நேற்று ஊரில் ஒரு நிகழ்ச்சி. தமிழிசை செளந்தர்ராஜன் வந்திருந்தார். ஏன் வந்திருந்தார்? என்ன பேசினார்? அங்கே எனக்கு என்ன வேலை என்பதெல்லாம் தனிக் கட்டுரைக்கான சரக்கு. மாற்று மருத்துவம் பற்றி எழுதும் போது குறிப்பிடுகிற பேராசிரியர் வெற்றிவேல்தான் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சமீபத்தில்தான் ஆசிரியர் தினக் கூட்டமொன்றைக் கைக்காசு போட்டு நடத்தியிருந்தார். ஒரே மாதத்தில் இந்தக் கூட்டம். அவருடைய அப்பா அய்யாமுத்து அந்தக் காலத்தில் வெகு பிரசித்தம். காசு சம்பாதிக்க தெரியாத வாத்தியார். கடைசி காலத்தில் அவருடைய மாணவர்களே இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்தார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட வாத்தியார் என்ற முடிவுக்கு வந்து விடலாம்.

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை இவர். பிழைக்கத் தெரியாத மனுஷன். அரசுக் கல்லூரியில் பேராசிரியர். எப்படி கொழிக்கலாம். ம்ஹூம். சொந்தமாக வீடு கிடையாது. ஒரு கார் கூட கிடையாது. ஐம்பது கிலோமீட்டர் என்றாலும் ஆக்டிவா வண்டியில்தான் சென்று வருகிறார். பல கிலோமீட்டர் தள்ளி ‘மேட்டுப்பாளையத்தில் இருக்கேன்’ என்பார். விசாரித்தால் யாருக்காவது மருந்து கொடுப்பதற்காகச் சென்றிருப்பார். ‘சார்..பெட்ரோல் அடிச்சு மருந்தையும் காசு போட்டு வாங்கிக் கொண்டு போய் கொடுக்கணுமா?’ என்று கேட்டால் பேச்சை மாற்றிவிடுவார். அப்படியான மனிதர். நேற்றைய கூட்டத்துக்கும் எழுபத்தைந்தாயிரம் ரூபாயாவது கழண்டிருக்கும்.

வெற்றிவேல் பற்றி எழுதுவதற்காக இந்தக் கட்டுரை இல்லை. No food waste குழு பற்றிச் சொல்ல வேண்டும்.

நேற்றைய கூட்டம் முடிகிற தருணத்தில் எப்படியும் நூற்றைம்பது பேருக்கான உணவு வீணாகிவிடும் என்று தெரிந்தது. பேராசிரியர் அருகில் வந்து அமர்ந்து ‘என்ன பண்ணலாம்’ என்றார். உடனடியாக எனக்கும் தெரியவில்லை. ஆசிரியர் தாமஸ் யாரையோ அழைத்துப் பேசினார். அவர்கள் ஏற்கனவே தமக்குத் தேவையான உணவைத் தயாரித்துவிட்டார்கள். பத்மநாபன்தான் ஞாபகத்துக்கு வந்தார். பத்மநாபன் கோபாலன். பொறியியல் படித்தவர். இப்பொழுது No food waste என்ற அமைப்பைத் தொடங்கி முழுமையாக இறங்கிவிட்டார். இவரையும் இவரது அமைப்பையும் தேசிய அளவில் அங்கீகரிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். யாராவது உணவு மீதமாகிறது என்ற தகவலைத் தெரிவித்தால் வண்டியை எடுத்து வந்து அள்ளியெடுத்துச் சென்று தேவைப்படுகிற அநாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகளில் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கான உணவு வீணடிக்கப்படுகிறது. உலக அளவில் கணக்கிட்டால் பல பில்லியன் டாலர்கள். இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு இரவும் உணவு இல்லாமல் பசியாமல் உறங்குகிறவர்கள் இருபது கோடி பேர். சராசரியாக வருடத்திற்கு ஒரு கோடி பேராவது பசியால் சாகிறார்கள். பசியால் என்றால் மாதக்கணக்கில் பட்டினி கிடந்து சாகிறவர்கள் என்று அர்த்தமில்லை. அடிக்கடி பசியோடு கிடப்பதால் வரக் கூடிய நோய் முதலானவற்றில் சாகிறவர்களின் எண்ணிக்கை இது. வீடுகளிலும், திருமண மண்டபங்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும், பார்ட்டி அரங்குகளிலும் கொட்டி வீணடிக்கப்படுகிற உணவு ஒரு பக்கம். பசியாலும் அது சார்ந்த நோய்களினாலும் கொத்துக் கொத்தாகச் சாகிறவர்கள் ஒரு பக்கம்.  இந்த இரண்டு எதிர்துருவங்களையும் இணைப்பதற்கான புள்ளியை யாராவது வைக்க வேண்டுமல்லவா? அதை No food waste அமைப்பினர் செய்து கொண்டிருக்கிறார்கள். 

நாம் வீணடிக்கிற ஒவ்வொரு பருக்கையும் வேறு யாருக்கோ உரியது. ஆனால் எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லாமல் உணவை வீணடிக்கிற மனிதர்களாகத்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் நம் ஒவ்வொருவரின் தட்டுகளிலிருந்து வீணடிக்கிற உணவு மட்டுமே ஏதோவொரு குழந்தையின் ஐந்து வருட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்று ஒரு நண்பர் சொன்ன போது குப்பென்று வியர்த்தது.

பத்மநாபன் மற்றும் அவரது நண்பர்களால் கோவையில் தொடங்கப்பட்ட No food waste அமைப்பு இப்பொழுது வெவ்வேறு ஊர்களில் துளிர்விடுகிறது. ஈரோடு சேப்டரையும் தொடங்கியிருக்கிறார்கள். குழுவில் வேலை செய்கிறவர்கள் அத்தனை பேரும் தன்னார்வலர்கள்தான். மாணவர்கள், ஏதாவதொரு நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள், சொந்தத் தொழில் தொடங்குகிறவர்கள் என்று பல தரப்பினரும் இணைந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இளைஞர்கள். மொபைல் ஆப், இண்டர்நெட் என்று பக்காவாகச் செய்கிறார்கள். இணையத்தில் தேடிய போது அவர்களின் எண் இருந்தது. 

அழைத்த போது ‘கோபி எங்க இருக்குங்க?’ என்றார். 

‘என்னடா இது கோபிக்கு வந்த சோதனை’ என்று நினைத்துக் கொண்டு ‘கோபிக்கு பக்கத்துலதாங்க ஈரோடு இருக்கு’ என்றேன். அவர் கடுப்பாகியிருக்கக் கூடும். ஈரோட்டுக்காரர்களின் எண்ணைக் கொடுத்தார். 

‘நாப்பது நிமிஷத்துல வந்துடுறோம்’ என்றார்கள். 

அவர்களிடம் சொந்தமாக வண்டியில்லை. ஓசி வண்டிதான். தன்னார்வலர்களில் ஒருவர் கேட்டரிங் தொழிலைச் செய்கிறாராம். அவரிடம் வண்டியை இரவல் வாங்கிக் கொண்டு பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு முக்கால் மணி நேரத்துக்கெல்லாம் மூன்று இளைஞர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். உணவு சூடாக இருந்தது. வாங்கி வண்டியில் ஏற்றியவர்கள் ‘எங்க தேவைன்னு டேட்டாபேஸ்ல இருக்கு..கொடுத்துடுவோம்’ என்றார்கள். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் உணவை தேவையான இடத்தில் இறக்கி விநியோகம் செய்திருக்கிறார்கள்.


ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலே திருப்தியாக உண்டுவிட்டு படுத்துத் தூங்காமல் மெனக்கெட்டு நாற்பது கிலோமீட்டர் தாண்டி வந்து உணவை எடுத்துச் சென்று முகம் தெரியாத விளிம்பு நிலை மனிதர்களுக்கு விநியோகிக்கும் இத்தகைய இளைஞர்கள் இருப்பதால்தான் இன்னமும் கொஞ்சமாவது மனிதாபிமானம் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். கொஞ்சமும் கூச்சப்படாமல் கையெடுத்துக் கும்பிட வேண்டும் எனத் தோன்றியது.

இவர்களைப் பாராட்டுவதெல்லாம் இரண்டாம்பட்சம். இப்படியொரு அமைப்பு இருப்பதும் நமக்குத் தெரிந்த நிகழ்வுகளில் வீணடிக்கப்படும் உணவை நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் உரக்கச் சொல்வதற்காகவது இவர்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. 

இந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடலாம். எந்த ஊரிலாவது உணவு மீதமாகிறது என்று தெரிந்தால் No food waste அமைப்பினரிடம் செய்தியைச் சொல்லிவிட்டால் போதும். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதிகபட்சமான உழைப்பைக் கொடுத்து அந்த உணவை தேவையான மனிதர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறார்கள். 

No food waste : 90877 90877