நிறையப் பேர் தொடர்பு கொள்ள முடிவதில்லை என்கிறார்கள். அப்படியொன்றும் 24x7 செக்கு மாடாக உழல்கிற அப்பாடக்கர் இல்லைதான் என்றாலும் வேண்டுமென்று தவிர்ப்பதில்லை. முடிந்தவரை மின்னஞ்சல், வாட்ஸப் போன்ற பெரும்பாலான வகைகளில் பதில் அனுப்பிவிடுகிறேன். இருப்பினும் கூட இது போதுமானதாக இல்லை. அறக்கட்டளையைப் பொறுத்த வரைக்கும் இது போதாது. நூறு கோரிக்கைகள் வந்தாலும் அனுமதிக்க வேண்டும். வருகிற கோரிக்கைகளை வடிகட்டுவது இரண்டாம் காரியம். ஆனால் கோரிக்கைகள் வருவதற்கே வழியில்லாமல் கதவை மூடி வைப்பது சரியில்லை.
சில நாட்களாக இது குறித்தான யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அனைத்து அலைபேசி அழைப்புகளை ஏற்பதும் சாத்தியமாவதில்லை. அலுவலகத்தில் தொடர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தால் மேலாளர் கடித்துக் குதறிவிட வாய்ப்பிருக்கிறது. கடந்த வருடம் ‘exceeded expectation' என்று வருட இறுதியில் கொடுத்திருந்தார். இந்த வருடம் கஷ்டம்தான். அதற்காகவே அலைபேசி அழைப்புகளை அலுவலக நேரத்தில் முற்றாகத் தவிர்த்துவிட வேண்டியிருக்கிறது. மின்னஞ்சல்களும் கூட பதில் அனுப்பாமல் விடுபட்டுப் போய்விடுகின்றன. பிறகு எப்படித்தான் தொடர்பில் இருப்பது என வேறு வழிகளையும் தேடிக் கொண்டிருந்த போது போது நிசப்தம்.காம் தளத்துக்கென ஒரு ‘chat session' தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எளிதாக செய்திகளை அனுப்பிவிட முடியும் என்று மண்டையில் ஒரு பல்பு உதித்தது.
அதற்கான சோதனை ஓட்டம்தான் இது. தளத்தைத் திறந்தவுடன் வலது பக்கத்தில் ஒரு pop-up வரும். ஒருவேளை ஆன்லைனில் இருந்தால் அப்பொழுதே பேசிவிடலாம். மேலாளருக்கும் தெரியாது. Alt+Tab காப்பாற்றிக் கொடுத்துவிடும். ஒருவேளை இணையத்தில் இல்லாத போதும் யார் வேண்டுமானாலும் செய்தியை அனுப்பிவிட முடியும். நேரமிருக்கும் போது பதில் அனுப்பிவிடுவேன்.
ஏற்கனவே எழுதிய ஒன்றைத் திரும்பவும் நினைவூட்ட விரும்புகிறேன். அறக்கட்டளையின் செயல்பாட்டில் சரியான பயனாளிகளைக் கண்டறிவது என்பது கடினமான வேலைகளில் ஒன்றாகத் தெரிகிறது. ஒருவேளை நம்மைத் தொடர்பு கொள்ள முடியாமலேயே நிறையப் பயனாளிகள் இருக்கக் கூடும். அவர்களோ அல்லது அவர்களுக்காக பரிந்துரை செய்பவர்களோ எல்லாவிதத்திலும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட வேண்டும்.
அதே சமயம், அறக்கட்டளை பற்றி மட்டும்தான் என்றில்லை. எது குறித்து வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம். நிசப்தம் என்று பெயரை மாற்றுவதற்கு முன்பாக ‘பேசலாம்’ என்பதுதான் தளத்தின் பெயராக இருந்தது. ஆனால் பேசியதே இல்லை. இப்பொழுதுதான் பேச வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நிறையப் பேசுவோம்.
நன்றி.
3 எதிர் சப்தங்கள்:
good idea DO implement it on a regular basis once the testing is done. hope you remember " Niraya pesum vaa manikandan " # jazeela.blogspot
i still love blogging rather than fb, whapp, twitter etc., still following many of the blogs from their early days
anbudan
sundar g chennai
VG IDEA
i got no popup whatsoever... :)
Post a Comment