Sep 8, 2016

தொடுதிரை மதி வகுப்பறை

இரு பள்ளிகளில் மதி வகுப்பறை (Touch screen based smart class) அமைத்துத் தருவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசு பள்ளிகளுக்கு நிதி கிடைப்பதில் பெரிய சிரமம் இருப்பதில்லை. ஸர்வ ஸிக்‌ஷா அபிக்ஞான் திட்டம் வந்த பிறகு நிதி தாராளமாகவே கிடைக்கிறது. தலைமையாசிரியர் மட்டும் சரியாக இருந்தால் போதும். சரியாகப் பயன்படுத்தலாம். பிரச்சினையே அங்கேதான் இருக்கிறது. தலைமையாசிரியர்கள் சரியில்லாத பள்ளிக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அது துணியை விரித்துப் பிடித்து ஆற்றின் போக்கைத் தடுக்கும் கதைதான். பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காது. பள்ளிகளுக்கு உதவ விரும்புகிறவர்கள் இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்வது மிக அவசியம். 

தனியார் பள்ளிகள் குறித்துதான் நமக்குத் தெரியுமே. மகாராஜாக்கள். கவலைப்பட வேண்டியதெல்லாம் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலைமை குறித்துதான். ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. ஆனால் மேலதிக வசதிகளை பள்ளி நிர்வாகமேதான் அமைத்துக் கொள்ள வேண்டும். 

மதி வகுப்பறை அமைத்துத் தருகிற திட்டத்தைச் நிசப்தத்தில் வெளிப்படுத்திய போது நிறைய ஆலோசனைகளும் கருத்துக்களும் வந்து சேர்ந்தன. எல்லாவற்றையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டேன். ஏற்கனவே பள்ளிகளுடனான அனுபவத்தோடு சேர்த்து இந்தக் கருத்துக்களை தொகுத்த போது பின்வரும் பட்டியல் உருவானது.
  • அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு பள்ளி கிராமப்புறத்திலும் இன்னொரு பள்ளி நகர்ப்புறத்திலும் இருப்பதாக தேர்ந்தெடுத்து கற்றல்-கற்பித்தலில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியலாம். 
  • தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியின் தொடர் செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மிக முக்கியமாக, மாதமொரு முறையாவது இரு பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு தோதாக இருப்பது உத்தமம்.
இதனடிப்படையில் புனித திரேசாள் பள்ளி மற்றும் வைரவிழா முதல் நிலைப்பள்ளி இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இரண்டுமே கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் செயல்படுகிற பள்ளிகள். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் பள்ளிகளுக்குச் சென்று பார்த்துவிட முடியும். திரேசாள் பள்ளியில் இருநூறு குழந்தைகள் படிக்கிறார்கள். கிராமப்புற பள்ளி. வைரவிழா பள்ளியில் தொள்ளாயிரத்து சொச்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். நகர்ப்புற பள்ளி. இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் துடிப்பானவர்கள்.

மதி வகுப்பறையை தீபகன் அமைத்துத் தருகிறார். வந்திருந்த விலைப்புள்ளிகளிலிருந்து (Quotation) இவருடையதுதான் பொருத்தமானதாக இருந்தது. நிறைய தனியார் பள்ளிகளில் மதி வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதனால் இரு பள்ளிகளுக்குமான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோம். தமிழகத்திலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடுதிரையுடன் கூடிய மதி வகுப்பறை இங்குதான் முதன் முதலில் அமைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 10) மதி வகுப்பறை திறந்து வைக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், நிசப்தம் வாசகர்கள், நன்கொடையாளர்கள் என வாய்ப்பிருப்பவர்கள் யாவரும் கலந்து கொள்ளவும். நிசப்தம் அறக்கட்டளையின் மூலமாக பரிசோதனை முயற்சியாக அமல்படுத்தவிருக்கிற மதி வகுப்பறைத் திட்டம் உருப்படியானதாகவும் பலனளிக்கக் கூடியதாகவும் இருப்பின் வேறு சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து முன்னெடுப்புகளைச் செய்யலாம். அவசரப்பட வேண்டியதில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகட்டும் என்ற யோசனை இருக்கிறது. 

ஈரோடு மாவட்டத்துக்கு செல்வி. மெர்ஸி ரம்யா உதவி ஆட்சியராக வந்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் வெற்றிபெற்றவர்களில் அகில இந்திய அளவில் முப்பத்து நான்காவது ரேங்க். தமிழகத்தில் இரண்டாமிடம். தலைமையாசிரியர் அரசு.தாமஸ் என்னிடம் விழாவுக்கு யாரை அழைக்கலாம் என்று கேட்ட போது இவர் பெயர்தான் ஞாபகத்துக்கு வந்தது. பாலக்காட்டில் உதவி ஆட்சியராக இருக்கும் உமேஷ் வழியாகத் தொடர்பு கொண்ட பிறகு நிகழ்வில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்.

‘செண்டிமெண்ட், எமோஷனல்ன்னு எதுவுமே இல்லாமல் அஸிஸ்டெண்ட் கலெக்டரை மட்டும் நிகழ்வில் பேசச் சொல்வோம்’ என்று முடிவு செய்திருக்கிறோம். அவர் மட்டுமே பேசுவதுதான் சாலப் பொருத்தம். அந்தக் குழந்தைகளுக்கு உத்வேகம் கிடைக்கும். அக்னிக் குஞ்சொன்றைக் ஆங்கோர் காட்டினில் வைத்தால் போதும். மற்றதெல்லாம் தானாக நடக்கும். இந்திய ஆட்சிப்பணியில் தேர்வு பெற்று சொந்த மாநிலத்திலேயே பணிக்கு வருவது சாதாரணக் காரியமில்லை. ரம்யா சாதித்திருக்கிறார். அந்தச் சாதனையின் வேகம் அடுத்த தலைமுறைக்கும் பரவட்டும். அந்தத் தலைமுறை கிராமத்தில் இருந்து வரட்டும்.

அறக்கட்டளையின் செயல்பாடுகளில் அடுத்த கட்டம் இது. வழமை போலவே அத்தனை பேரின் ஆசிர்வாதங்களையும் கோருகிறேன். ஆலோசனைகளையும் தருக.

தொடர்ந்து செயல்படுவோம். செய்வதையெல்லாம் செய்து கொண்டேயிருப்போம். எங்கேயாவது பலன்கள் அறுவடை ஆகிக் கொண்டேயிருக்கட்டும்!