Sep 24, 2016

நீங்க ஏன் அவன் கூட பேசறீங்க?

சமூக வலைத்தளங்களில் இயங்கும் போது ஒரு பிரச்சினை உண்டு. வெளியாட்களிடமிருந்து என்று இல்லை- வீட்டில் இருப்பவர்களும் சொந்தக்காரர்களுமே கூட யாருக்கு லைக், யாருக்கு கமெண்ட் எழுதுகிறோம் என்பதையெல்லாம் கவனிக்கிறார்கள். ஒரு முறை சாதி பற்றிய கருத்து ஒன்றை எழுதிய போது வெகு நாள் கழித்து கல்யாண மண்டபத்தில் வைத்துக் கேள்வி கேட்டார்கள். ஏதாவதொரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஏதாவது கருத்துக்கு லைக், கமெண்ட் என்றால் கூட பரவாயில்லை. ‘நல்ல கருத்து..அதனால் லைக் போட்டேன்’ என்று சொல்லிச் சமாளித்துவிடலாம். நிழற்படத்துக்கு லைக் போட்டதற்கெல்லாம் என்ன காரணம் சொல்ல முடியும்? அந்தப் படத்தை எடுத்த கேமிரா கோணம் அட்டகாசம், ஒரு பக்கமா விழுந்த வெளிச்சத்தை அருமையா காட்டியிருக்காங்க என்றெல்லாம் பீலா விட்டால் மட்டும் நம்பவா போகிறார்கள்? மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிற கதைதான்.  அதனால்தான் ஃபேஸ்புக்கில் அழகான பெண்களின் படங்கள் என்றால் சைட் அடிப்பதோடு நிறுத்திக் கொள்வது. நோ லைக்; நோ கமெண்ட். இன்பாக்ஸிலாவது ‘நீங்க அழகா இருக்கீங்க’ என்று வழியலாம் என்றால் கடவுச்சொல் வேணிக்குத் தெரியும். எதற்கு வம்பு? அமைதியாக இருந்து கொள்கிறேன்.

சாக்‌ஷி மாலிக் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய தருணம் ஃபேஸ்புக்கில் ‘நீங்க கரித்துக் கொட்டுகிற இசுலாமிய சமூகத்தில் இருந்துதான் இந்தப் பெண் மெடல் வாங்கியிருக்கிறாள்’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பெண்மணி எழுதியிருந்தார். பார்த்தவுடனேயே உணர்ச்சிவசப்பட வைக்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. ஆயிரம் பேராவது லைக் இட்டிருந்தார்கள். புதிதாக வாங்கியிருந்த அலைபேசியில் முழுவதுமாகப் படிக்க முயற்சிக்கும் போது தெரியாத்தனமாக எனது லைக்கும் விழுந்துவிட்டது. சத்தியமாகத் தெரியாத்தனமாகத்தான் என்று சொன்னால் நீங்கள் தயவு செய்து நம்ப வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவி தேசியவாதி ஒருவர் ‘பொண்ணு செகப்பா இருந்தா போதும்..நாக்கைத் தொங்கப்போட்டுட்டு வந்துடுவானுக...அதில் மணிகண்டனும் ஒருத்தன்’ என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார். நம் ஊரில் யாராவது நம்மைப் பாராட்டினால் கண்டு கொள்ள மாட்டார்கள். திட்டினால் அதை எப்படியாவது நம் கண்ணுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் அல்லவா? அப்படித்தான் ஸ்க்ரீன்ஷாட்டை அனுப்பி உள்ளம் குளிர வைத்தார்கள். அடங்கொக்கமக்கா என்றாகிவிட்டது.

எப்பொழுதுமே  சில கண்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பது போன்ற அவஸ்தை வேறு எதுவுமில்லை.

சில மாதங்களுக்கு முன்பாக பெங்களூரு நண்பரொருவர் கடுமையான குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். ‘இனிமேல் நீங்கள் கிஷோர் கே ஸ்வாமிக்கு கமெண்ட் எழுதுவதாக இருந்தால் உஙகள் மீதான நம்பகத்தன்மை போய்விடும்’ என்ற செய்தி அது. அவருக்கு கிஷோர் மீது வெறுப்பு. அதற்காக நானும் அவருடன் பழகக் கூடாது என்பதில் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. ‘இந்த உலகில் எனக்கு எல்லோரும்தான் தேவை..யாருடன் நான் பேச வேண்டும் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது’ என்று பதில் அனுப்பியிருந்தேன். அவ்வளவுதான். ஃபேஸ்புக்கில் இருந்து என்னை நட்பு விலக்கம் செய்துவிட்டுச் சென்றுவிட்டார். 

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று அர்த்தம் கெட்டதனமாகவா சொல்லி வைத்துச் சென்றிருக்கிறார்கள்? ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரையைச் சார்ந்த நிசப்தம் வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். அறக்கட்டளைக்காகவும் நிறையக் களப்பணிகளைச் செய்து கொடுத்தவர் அவர். அவரது மனைவி அரசு மருத்துவமனையில் செவிலியர். அவருக்குக் குழந்தை பிறந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியில் இருந்தார். குடும்பம் மதுரையில் இருக்கிறது. 

குழந்தை, குடும்பம், வேலை என சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘அண்ணா மனைவிக்கு ட்ரான்ஸ்பர் வாங்கணும்...உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது இருக்காங்களா?’ என்றார். திமுகவில் நண்பர்கள் இருக்கிறார்கள். அதிமுக தொடர்புடைய நண்பர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தான். ‘கிஷோருக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்...பேசிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு கிஷோரை அழைத்தேன். விவரங்களை வாங்கிக் கொண்டவர் நான்கைந்து நாட்களில் பணி மாறுதலுக்கான உத்தரவை வாங்கிக் கொடுத்துவிட்டார். பணம் இல்லாமல் காரியம் ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த நண்பருக்கு வெகு சந்தோஷம். அவரே சென்னைக்கு நேரடியாகச் சென்று மாறுதலை வாங்கி வந்திருந்தார். ஒருவேளை மாறுதல் கிடைக்கவில்லையென்றால் வேலையை ராஜினாமா செய்கிற முடிவில் இருந்தார்கள். ‘ராஜினாமா செய்யறதுல மனைவிக்கு விருப்பமே இல்லண்ணா...ஆனா வேற வழியே இல்லாமத்தான் அந்த முடிவுக்கு வந்திருந்தோம்’ என்றார். இப்பொழுது அவர் மதுரையிலேயே பணியில் இருக்கிறார். இவர் சொன்னார் என்பதற்காக கிஷோரைத் தவிர்த்திருந்தால் என்ன பலன்?

கிஷோரை உயர்த்திப் பிடிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. அவருக்குத் தொடர்புகள் இருக்கின்றன. மேல்மட்ட ஆட்களைத் தெரிகிறது. இணைத்துவிடுவதன் மூலம் யாரோ ஒரு மனிதனுக்கு ஏதாவதொரு வகையில் பயன்படுகிறது. இந்த உலகில் எல்லாமே நெட்வொர்க்கிங்தான். ஒரு சாதாரணக் காரியமாக இருக்கும். ஏதாவதொரு சிபாரிசை எதிர்பார்ப்பார்கள். சுற்றி வளைத்துப் பார்த்தால் நமக்குத் தெரிந்த மனிதரால் அந்த சிபாரிசைச் செய்ய முடியுமாக இருக்கும். 

‘ஜெகாவுக்கு லைக் போட்டீங்க அதனால் அன்-ஃப்ரெண்ட் செய்கிறேன்’ என்று சொன்னவர்கள் உண்டு. ஜெகா மற்றொரு நண்பர். அதீத ஆர்வம். ஃபேஸ்புக்கில் யாராவது சிக்கினால் கண்டபடி திட்டுவார். கலாய்ப்பார். ஆனால் அடிப்படையில் நல்ல மனிதர். நிறைய வாசிக்கிறவர். கடலூர், சென்னை வெள்ளத்தின் போது விடுப்பு எடுத்துக் கொண்டு மாதக்கணக்கில் தங்கியிருந்து நேரடியாகக் களப்பணியாற்றியதைப் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பல லட்ச ரூபாய்களை அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தவர்களிடம் கொடுத்திருக்கிறார். சில லட்சங்களை ஆகாவழிகளிடம் கொடுத்தும் ஏமாந்திருக்கிறார். சொன்னேன் அல்லவா? உணர்ச்சிவசப்படுகிற மனிதர். தான் செய்வதையெல்லாம் வெளியில் சொல்லவே வெட்கப்படுகிறவர் அவர். அவரிடம் பிற மனிதர்களைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ‘நீங்க ஏன் அவரை ஓட்டுறீங்க?’ என்று கேட்பதில்லை. அது எனக்கு அவசியமற்றது. ஆனால் அவரிடம் நல்ல நட்பு இருக்கிறது. என்னிடம் வந்து ‘ ஜெகா என்னைத் திட்டுகிறார் அதனால் நீங்களும் அவருடன் பேசக் கூடாது’ என்று சொன்னால் என்ன செய்ய முடியும்? 

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இங்கே ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு பலம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பேர்களையாவது தெரிந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குமே ஒரு நெட்வொர்க் இருக்கிறது.

நம் கருத்துக்களைக் கொட்டுவதற்குத்தான் சகல வசதிகளையும் இந்த நவீன உலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறதே! ஒவ்வொருவரும் கருத்துச் சொல்கிறோம். பல்லாயிரக்கணக்கான கருத்துக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணம். விதவிதமான சொற்களால் நிரப்பப்படும் முரண்கள் சூழ் உலகு இது. அத்தனை முரண்களையும் சேர்த்து மனிதர்களோடு பழகுவதுதான் வாழ்க்கையின் சுவாரஸியமே. 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். பிழைப்பதற்கான வழிமுறைகள் இருக்கலாம். விமர்சிப்பதிலும் தவறில்லை. கருத்தியல் ரீதியிலான விவாதங்களைச் செய்வதிலும் தவறில்லை. அப்படியும் பிடிக்கவில்லையென்றால் விலகிக் கொள்வதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் யார் மீது வன்மத்தைக் கக்க வேண்டியதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு.

யோசித்துப் பார்த்தால் இங்கே யாருக்கும் பங்காளித் தகராறு இல்லை. வாய்க்கால் வரப்பு பிரச்சினையில்லை. அத்தனையும் கருத்து சார்ந்த மோதல்கள் அதன் விளைவான வன்மங்கள் மற்றும் குரூரங்கள் மட்டும்தான்.

உலகமே ஒரு கண்ணாடிதானே? கடுஞ்சொற்களை நாம் வீசினால் அதுவும் நம் மீது கடுஞ்சொற்களைப் வீசுகிறது. நாம் புன்னகையை வீசினால் அதுவும் புன்னகையை வீசுகிறது. ஒருவேளை அது கற்களை நம் மீது வீச எத்தனிக்கும் போது மெளனித்து நம்மைக் காத்துக் கொள்வது எல்லாவிதத்திலும் சாலச் சிறந்தது.